Aug 24, 2012

வணக்கம் வாழவைக்கும் சென்னை




உலகின் எல்லாப் பெருநகரங்களும் கொண்ட அத்தனைப் பெருமைகளும் ‘நம்ம’ சென்னைக்கு உண்டு. 

”எழுபதுகளின் மத்தியில் பிறந்த” நம்ம ஹரிராமுக்கு சென்னை என்றால் பெரியாரோ திருவள்ளுவரோ பிடித்துப் பிரயாணித்து தாம்பரமும் மாம்பலமும் தாண்டினால் பஸ்சின் வலப்புற ஜன்னல் வழியே அண்ணாந்து பார்க்கையில் “ஒன்று, இரண்டு, மூன்று...” என எண்ணக் கிடைக்கும் எல்.ஐ.சி. கட்டிடமும் (ஒருமுறை கூட அந்த எண்ணிக்கை பதினாலில் முடிந்ததில்லை), சென்னைக்கான வாசமாய்த் தன் மனதில் பதிந்துபோன க்ளோரின் வாசம் தரும் தண்ணீரும், தன் மாமா வீடு அமைந்திருந்த ஐ.சி.எஃப். காலனியின் காவிநிற கட்டம் கட்டிய ஜாலிகள் கொண்ட வரிசையான வீடுகளும், அண்ணா டவரும், பட்டையாக பச்சை நிற பெயிண்ட் அடித்த பல்லவன் பஸ்களும்தான் தெரியும். அவைதான் அவனைப் பொறுத்தவரையில் சென்னையின் அடையாளங்கள்.

“கெட்டும் பட்டணம் போய்ச் சேர்” என்று நாம் கேட்டிருக்கிறோம். இதே போன்றதொரு ஆகஸ்டு மாதத்தின் மூன்றாவது வாரத்தில் நம்ம ஹீரோ ஹரி’யின் வாழ்க்கையின் பதின்ம வயதின் தொடக்கத்தில்  அப்படி ஒரு சூழலில்தான்  நுழைகிறது சென்னை அல்லது சென்னையில் நுழைகிறான் ஹரி.

பத்தாங்கிளாஸ் படிக்கும்போது ஒருநாள் எழுந்து பார்த்தால் வீடு தலைகீழாய்க் கிடக்கிறது, கிட்டத்தட்ட வீட்டின் மேல்சுவர் தரையாகவும், தரை மேல்சுவராகவும் மாறின லட்சணத்தில். வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தால் ஊர்மொத்தம் வழக்கம்போல்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது, பிரச்னை தன் வீட்டில் மட்டும் எனத் தெரிகிறது.

வீட்டின் ஆதார சுருதி பார்ட்டி ஒருத்தர் வீட்டில் மிஸ்சிங். அடித்து விரட்டாத குறையாக வாழ்ந்த ஊரைவிட்டு பின்னங்கால் பிடறியில் விழ திக்குத் திசை தெரியாமல் ஓடத் துவங்குகிறார்கள் ஹரி குடும்பத்தினர். “யூ ஆர் மோஸ்ட் வெல்கம்”, என்று வரவேற்க நூற்று ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் சென்னை இருந்தது அவர்கள் ஏதோ பிறவியில் தெரிந்தோ தெரியாமலோ செய்த புண்ணியம்.

வாழ்க்கை பூஜ்ஜியத்தில் புத்தம் புதிதாய்த் துவங்குகிறது. கைகொடுக்க நல்ல உறவினர் சிலரும், வந்த இடத்தில் கிடைத்த நல்ல நண்பர்கள் பலரும் படகு மூழ்கி விடாமல் காக்க, தட்டுத் தடுமாறி  நிகழ்கிறது பயணம்.

நம்ம கதையின் ஹீரோ இப்போது தன் வாழ்க்கையில் ஹீரோ ஆகிவிட்டான் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் ஜீரோவில் தொடங்கிய வாழ்க்கை இன்று மதிக்கத்தக்க ஒரு உயரத்தில் இருக்கிறது.

”ஸ்டாப் ஸ்டாப்! உன்னோட செல்ஃப் ஹிஸ்டரியும், லைஃப் க்ராஃபும் கேட்க இங்க யாருக்கும் நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை மேன்”

“நோ நோ! இது என் கதை இல்லை. என்னைப் பத்தி நான் எதுவும் பேசமாட்டேன் நான் இருவது வருஷம பாத்த சென்னையை பத்தி மட்டும்தான் பேசுவேன்”

சென்னை புகுந்து இருபத்து இரண்டு வருடங்கள் நிறைந்த நிலையில் சென்னை தினம் கொண்டாடப்படும் இந்த ஆகஸ்டு மாதத்தின் அதே மூன்றாவது வாரத்தில் சென்னையின் பெருமைகளைச் சொல்லத் துவங்கினான் ஹரி.


2 comments:

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல தகவல்கள்


நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

திண்டுக்கல் தனபாலன் said...

பல தகவல்களை அறிய முடிந்தது... நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...