Jul 10, 2015

தீராவலி

இதை என் அம்மா சொல்வார்:

முனிவர் ஒருவர் முன் ஒரு மனிதர் போய் நின்றார்.

"சாமி, என்னை ஆசிர்வாதம் பண்ணனும் நீங்க", என்றிருக்கிறார்.

"பண்ணிட்டாப் போச்சு. கிட்டக்க வா"

"வந்தேன் சாமி"

"மொதல்ல உங்க தாத்தா சாகட்டும், அப்புறம் உன் அப்பா சாகட்டும். அதன் பிறகு நீ சாவு, அப்புறம் உன் பிள்ளை சாகட்டும். போயிட்டு வா", என்றாராம் முனி.

"என்ன சாமி? வாழ்த்து கேக்க வந்தா சாபம் தர்றீங்க?, சுர்றெனக் கோபம் ஏறியது நம்மவருக்கு.

"ஏன் கோபப்படறே? இப்போ நான் சொன்ன வரிசை அப்படியே தலைகீழா நடந்தா அதுதாண்டா மகனே சாபம்.  அப்பன் சாவை மகன் பாக்கறது சாபம் இல்லைடா, மகன் சாவை அப்பன் பாக்கறதுதான்டா சாபம். யோசிச்சு பாரு, புரியும். இப்போ எடத்தை காலி பண்ணு", என்று முடித்துக் கொள்கிறார் முனிவர்.

எவ்வளவு உண்மை!

நேற்று நான் கேள்வியுற்ற ஒரு துர்மரணச் சேதி இன்னமும் என்னை உலுக்கிக் கொண்டிருக்கிறது. பிள்ளையை இழந்து தவிக்கும் அந்த நல்ல மனிதரை நினைக்க நினைக்க கண்ணீர் பெருகி விக்கித்து நிற்கிறேன்.

பூ வாங்கி வா என மனைவி கேட்டார். வண்டியை எடுத்துக் கொண்டு மூன்றுமுறை கடைவீதிக்குப் போகிறேன் திரும்புகிறேன், போகிறேன் திரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் எதற்கு கடைக்குப் போகிறோம் என்றே மறக்கிறேன். துக்கம் கரைந்து ஜீரணிக்க மறுக்கிறது. இழப்பில் இருப்பவர்களின் நிலையை நினைக்கவே நடுங்குகிறது.

எல்லாம் வல்ல இறைவனின் இப்படிப்பட்ட கிறுக்குத்தனமான விளையாடல்களைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தை எனக்கு வேண்டுகிறேன்.

இழப்பில் தவிக்கும் குடும்பத்தாருக்கு என்னத்த ஆறுதல்  சொல்ல எனப் புரியவில்லை. ஃபோனை எடுத்து அந்த நண்பரை அழைக்கவும் மனதில் உறுதி இல்லை.

இதையும் என் அம்மாதான் சொல்லுவார். படித்தால் உங்களுக்கு அபத்தமாகவும் தோன்றலாம்.....

இருந்தாலும்....

பிள்ளைகளுக்கு தயவுசெய்து மீரா என்று பெயரிடாதீர்கள். இதில் பெயரியல் சார்ந்த உதாரணங்களை நான் அறியேன், எனினும் நிதர்சன உதாரணங்களாக அரை டஜன் மீராக்களை நான் அறிவேன்.

#RIP மீரா

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...