பதின்ம வயதினில் உள்வாங்கின பாடல் என்பதாலோ என்னவோ அழகன் படத்தின் இந்தப் பாடல் என் ‘all time favorite" லிஸ்டில் இருக்கும்.
எஸ்பிபியின் தேமதுரக் குரல் (இந்த வர்ணனை அவர் குரலைப் பற்றி பத்தாயிரம் முறை நாம் குறிப்பிட்டுவிட்டது என்றாலும்), பாடலின் நெளிவு சுளிவுகளில் அவர் காட்டும் மந்திர ஜாலம்.... இதற்கு எப்போதும் ஒரு ஸ்பெஷல் மென்ஷன் உண்டு.
ஒரு தேர்ந்த பாடகனிடம் மட்டுமே சாத்தியப்படுகிற பாடல் மொத்தத்தையும் அடக்கியாளும் தன்மை இந்தப் பாடலில் வெளிப்படும். எத்தனைப் பாடகர்கள் வந்தாலும், அவர்கள் என்னதான் நன்றாய்ப் பாடினாலும் எஸ்பிபி, யேசுதாஸ், ஹரிஹரன் போன்றவர்களுக்கு இது ஒரு சிறப்புத் தன்மை.
பாட்டு நல்லா பாடியிருக்காரு, சங்கதியெல்லாம் அருமையா இருக்கு, உச்சரிப்பு நச்சுன்னு இருக்கு, பாட்டுக்குப் பொருத்தமான குரல், பாவம் (bhaavam) எல்லாம் ஓஹோ, ஸ்ருதி பெசகாம, தாளத்து மேல சவாரி செஞ்சுக்கிட்டு என்னமா பாடியிருக்கான் மனுஷன் - இவ்வளவுதான் ஒரு பாடலுக்கு நாம் ஒரு பாடகருக்குத் தரவியலும் உச்சபட்ச பாராட்டு. இவை தாண்டி ஒரு பாடல் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் திறமை கொண்டவன் ஃப்ரண்ட்லைன் பாடகன் ஆகிறான் என கணிக்கிறேன். அந்த ஆளுமைத் திறன் தான் இந்தப் பாடலின் முக்கியக்கூறு.
அது பாடும் பாடகரிடமிருந்து மட்டும் வெளிப்படும் கூறு இல்லை. பாடலினூடே கேட்கும் தபேலாவைக் கேளுங்கள். யார் அதை வாசித்த கலைஞன் என்று தெரியவில்லை. பாடலைக் கட்டி ஆக்ரமிக்கும் இன்னொரு ஆளுமை அந்த தபேலா இசை.
தமிழில் மரகதமணி ஒரு சூப்பர் ஹிட் இசையமைப்பாளராக ஆகாதது நிச்சயம் தமிழ் இசை ரசிகர்களுக்கு நஷ்டம்தான். மனுஷர் பின்னிப்பெடலெடுத்த பாடல்களில் இந்தப் பாடலுக்கு முக்கிய இடம் உண்டு. பாடலை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மரகதமணி எஸ்பிபி’யை சங்கதிகள் விஷயத்தில் எப்படி வேலை வாங்கியிருப்பார் என்று அறிய ஆவல் மிகுகிறது.
இந்தப் பாடலின் அடுத்த முக்கியஸ்தர் புலமைப்பித்தன்
”ஏகாந்தம் இந்த ஆனந்தம் அதன் எல்லை யாரறிவார்?” - இப்படியெல்லாம் வேறு யாருடைய பேனா எழுதியிருக்கிறது? பாடலுக்கு இசையா, இசைக்குப் பாடலா என்று வியக்கும் வண்ணம் அந்த இசையும் இந்த வரிகளும் நச்சென்று பொருந்திப் பயணிக்கும் வரிகள்..... அதற்கு எஸ்பிபி தரும் பாவ (bhava) நேர்த்தி பாடலின் அதியுன்னதச் சிறப்பு.
இவர்கள் அனைவரையும் தாண்டி இந்தப் பாடல் வெளிவர முக்கியக் காரணகர்த்தா ஒருவர்..... பாடல்களைக் கேட்டு வாங்குவதில் எமகாதகரான பாலசந்தர். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் பாடும் என்றால்.... பாலசந்தருக்காக மரகதமணியும், புலமைப்பித்தனும், எஸ்பிபியும் என சக எமகாதகர்கள் பிய்த்து உதறியதில் ஆச்சர்யந்தான் என்ன?
No comments:
Post a Comment