Jul 19, 2015

கமல் டச்

 
நன்றி: Filmbeat
 
 முத்தையாவுக்கு பிள்ளையார்பட்டி பக்கத்தில் ஊர். மனிதர் செட்டிலானது தஞ்சாவூரில். இப்போது வசிப்பது நாம் வசிக்கும் பகுதியில். ஊருக்குப் போகும்போதெல்லாம் பக்கத்தில் யாருக்காவது தஞ்சாவூர் ஸ்பெஷல் சந்திரகலாவும், சூர்யகலாவும் வாங்கித் தருவார், நினைவாக ரசீது தந்து பணம் வாங்கிக் கொள்வார்.
 
“பாம்பே ஸ்வீட்ஸ்காரங்கதான் சந்திரகலா, சூர்யகலா ரெண்டையும் கண்டு புடிச்சாங்க, தெரியுமுல்ல?”, என்று ஒவ்வொரு முறையும் புதிதாய் ஒரு வாடிக்கையாளரைப் பிடித்துவிடுவார். ஊர் சென்று வந்தால் ஐந்து கிலோவுக்குக் குறையாமல் பாம்பே ஸ்வீட்சுக்கு இவர் பயனில் கல்லா கட்டும்.
 
“அந்த ஸ்டேஷன் எதுர்ல இருக்கு பாருங்க, அதுதான் ஒரிஜினல். மொதல்ல வந்தது. அதுக்கு அப்புறந்தான் ஊர் ஃபுல்லா ப்ராஞ்ச்சுன்னு ஆச்சுது. வாங்கினா அங்க வாங்கணும். பளைய பஸ்டேண்டு பக்கமும் வாங்கலாம்”, என்பார்.
 
அடையார் ஆனந்த பவனில் சந்திரகலா, சூர்யகலா போடுவதற்கென்றே பாம்பே ஸ்வீட்சில் இருந்து ஒரு ஆளைப் பிடித்து வைத்திருப்பதாகச் சொல்வார். நிஜமா என்று நாம் அறியோம்.
 
“என்னருந்தாலும் அதே ஆளு போட்டாலும் நம்ம ஊரு தண்ணி விட்டுப் பண்ணினா வர்ற டேஸ்ட்டு தனி பாருங்க”, அந்த சுவை எங்கும் வாராது என்று அடித்துக் கூறுவார்.
 
பழைய பஸ்டேண்ட் சமீபத்தில் உள்ள கிளையில் அவர் மாமா ஒருத்தர் மாமாங்கமாய் மானேஜர் வேலை பார்க்கிறார் என்று என் இல்லத்தாள் எப்படியோ கண்டுபிடித்து எனக்குச் சொல்லிய பிறகுதான் விஷய சூட்சுமங்கள் எனக்கு விளங்கியது. 
 
சந்திர, சூரிய கலாக்களைத் தாண்டி அவ்வப்போது முந்திரிப் பருப்பும் சப்ளை செய்வார் மனிதர். பண்ருட்டி மட்டுமில்ல சார், தஞ்சாவூரும் முந்திரிக்கு ஃபேமஸ் என்பார். நாம் எங்கும் படித்தும், கேட்டும் அறிந்திறாத சேதி என்றாலும் அவர் வாங்கித் தரும் விலைக்கும், அதற்குக் கிடைக்கும் தரத்திற்கும் அவர் சொல்வதை நம்புவதாய்த்தான் இருக்கும்.
 
“இங்க மார்க்கெட்ல நானூறு. நம்மூர் வெல முன்னூறு. எத்தன கிலோ வேணும் சொல்லுங்க”, நம்மைக் கேட்பார்.
 
அடுத்த முறை, “பாத்தீங்கல்ல? மார்க்கெட்ல ஐநூறு ஆகிப்போச்சுது. நம்மூர்ல நானூறுதான் வெல. சொல்லுங்க, ஒரு ரெண்டு கிலோ புடிச்சிட்டு வந்துடறேன்”, ஒவ்வொரு தடவை ஊர் போகும்போதும் நம்மைக் கேட்க மறக்க மாட்டார்.
 
“அட நமக்கு எதுக்கு சார் கிலோ கணக்குல. எப்பமாச்சும் முந்திரி அல்வா பண்ணறாப் போல இருந்தா சொல்றேன். அப்போ புடிச்சிட்டு வாங்க”, என்றுவிடுவேன்.
 
அலுவலகத்தில் பேச்சுவாக்கில் இப்படி ஒரு மனிதர் இருக்கிறார் என்றும் நானூறுக்கு ஒரு கிலோ முந்திரி என்றும் நான் சொல்லப் போக, “கொழந்தைகளுக்கு டெய்லி குடுக்கறேன், நமக்கு ஒரு ரெண்டு கிலோ வாங்கித் தாங்க”, என்று கேட்டார் அலுவலக நண்பர்.
 
ரெண்டு கிலோ வாங்கி வரச் சொன்னதோடு நின்றிருக்கலாம். ரொம்பவும் விலை வித்தியாசம் இல்லை என்றால் எதற்கு வாங்க வேண்டும் என்ற நினைப்பில்... அவர் ஊருக்குப் போன கையோடு, ”விலை ஏறி இருந்தா நமக்கு ஒரு வார்த்தை சொல்லிட்டு வாங்குங்க சார்”, என்று ஒரு தகவலை அவர் மொபைலுக்கு அனுப்பினேன்.
 
“விலை கூடியிருந்தா எவ்ளோ தூரம் வரைக்கும் போகலாம்?”, என்று பதிலுக்கு ஒரு கேள்வி வந்தது மொபைலில்.
 
நண்பரிடம் கேட்டுவிட்டு “நானூத்தம்பது வரைக்கும் போகலாம்”, என்று பதில் அனுப்பினேன்.
 
அன்று மாலை மொபைலில் எனக்கு மெசேஜ் வந்தது. “ இரண்டு கிலோ வாங்கி விட்டேன். மொத்தம் தொள்ளாயிரம் ரூபாய்”.
 
வாய்விட்டுச் சிரித்தேன் என்றால் அப்படிச் சிரித்தேன் நான்.
 
து கமலின் பங்களிப்போ அல்லது ஜெயமோகன் பங்களிப்போ இல்லை ஜித்து ஜோசப் கொடுத்த கூடுதல் பங்களிப்போ; பாபநாசம் குறித்த விவாதம் ஒன்றில் சுகா இப்படிக் குறிப்பிடுகிறார் - “ இது வேற படம்ங்க”.
 
சென்ற வாரம் ராஜா-ஜாம்மின் நிகழ்வில் சந்தித்தபோது நண்பர் விஜய் (@tekvijay), “அது எப்படி சார் கமலோட கூடுதல் பங்களிப்பு இல்லாம? அது நிச்சயம் உண்டு, இருந்திருக்கும்”, அடித்துக் கூறுகிறார்.
 
த்ரிஷ்யத்தையும் பாபநாசத்தையும் ஒப்பிடுவதை பலர் விரும்புவதில்லை என்று அறிகிறேன். இளையராஜாவின் சில பாடல்களை ஒரே படத்தில் இரண்டு/மூன்று பாடகர்கள் வெவ்வேறு வகையாகப் பாடியிருப்பார்கள்.  ஒரே பாடலை இரண்டு பாடகர்கள் பாடும்போது அவரவர் காட்டும் குறிப்பிட்ட சங்கதிகள் அவரவரது திறமையின் வெளிப்பாடு. அதைத்தான் சுகா, “இது வேற”, என்கிறார்.
 
அது நல்லாருக்கு இது நல்லால்லை என்னும் ஒப்பீடு இல்லை அது. அங்கே என்ன சிறப்பு, இங்கே என்ன சிறப்பு என்னும் ஒப்பீடு. லாலேட்டன் யேசுதாஸ் என்றால்; கமல்ஹாசன் எஸ்பிபி - ச்சொயம்புலிங்கம்ல!
 
ஜித்து ஜோசப் இரண்டு படங்களுக்கும் பொதுவானவர் ஆனாலும், லாலேட்டனுக்கும்-கமலுக்கும் இடையேயான ‘சங்கதி’ வித்யாசங்களை யாரேனும் மிக விரிவாக நிச்சயம் எழுதுவார்கள். விரிவாக எழுதும் ஆள் நான் இல்லை என்பதால், நான் கவனித்த ஒரேவொரு கூற்றை மட்டும் இங்கே எழுதுகிறேன். அதை எழுதுமுன் நினைவுக்கு வந்த முன்னுரைதான் முத்தையாவின் கதை.
 
ச்சொயம்புலிங்கத்திற்குள் இருக்கும் அந்தச் சிக்கனவாதி, வியாபாரி தெறித்துத் தாண்டவமாடும் ஒரு நிகழ்வை விரிவான, விளக்கமான காட்சியெல்லாம் வைத்து விளக்காமல் கமல் காட்டும் ஒரேயொரு புருவ உயர்த்துதலில் பாபநாசம் சொல்கிறது.
 
அந்தக் காட்சியில் கதாநாயகனின் புருவ உயர்த்தல் நிச்சயம் மலையாள வெர்ஷனில் இருக்காது என்று எனக்குத் தோன்றியது.
  
தென்காசி வந்து செகண்ட் ஹாண்ட் மொபைல் வாங்குவார் கமல். அது ஒரிஜினல் வெர்ஷனிலும் நிச்சயம் இருந்தாக வேண்டும். மறுப்பதற்கில்லை.
 
கமல் செல்ஃபோன் கடைக்குள் நுழைகிறார்....
”என்ன வேணும் சார்?”
“ஒரு செல்ஃபோன்..... செகண்ட் ஹேண்ட்..... ஆயிர ரூவாக்குள்ள....”
“இதைப் பாருங்க...”
“எவ்ளோ ரூவா?”
“தொள்ளாயிர ரூவா...”
ஒரு அர்த்த புஷ்டியோடு கமல் அந்தக் கடைக்காரரை ஒரு பார்வை பார்ப்பார்.... எனினும் அந்த இடத்தில் பேரம் பேசும் மனநிலையில் அவர் இல்லை என்பதால் காசை எண்ணிக் கொடுத்துவிட்டு நகர்ந்து கொண்டே இருப்பார். இந்த வியாபாரி கமல் காட்டும் அந்த ஒரு புருவ உயர்த்தல் கமலுக்கே கமலுக்கான டீட்டெய்லிங் விஷயத்தின் பலனாய்ப் பிறந்தது என்றே நான் முழுசாய் நம்பினேன்.
 
த்ரிஷ்யத்தை நானூறு முறை பார்த்த பெருமை வாய்ந்த நண்பருக்கு ஃபோனைச் சுற்றினேன். “ஏய்யா.... அந்த செல்ஃபோன் சீன் மலையாளத்துல எப்படி வரும் சொல்லு”, என்றேன்.
 
காட்சி அதுவேதான். ஆனால், ஆயிர ரூவாக்குள்ள என்பதும் புருவ உயர்த்தலும் மலையாளத்தில் இல்லை என்றார் நண்பர்.
 
நான் ஒரு அதிதீவிர கமல் ரசிகன்தான். சந்தேகமேயில்லை.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...