காசி தமிழ்ச் சங்கமம் - நாள் 6
பிரயாக் பயணம் மற்றும் ஊர் திரும்பும் நாள்:
அயோத்தி மாநகரில் ஆறாம் நாளும் அதி சீக்கிரமாய் விடிந்தது. நாலு மணித் துயிலெழல். ஐந்தரைப் புறப்பாடு. ஆறு மணிக்குள் காலைச் சிற்றுண்டி என. ஏழு மணிக்குள் நாங்கள் நகர எல்லையைக் கடக்க வேண்டும். நகர் முழுக்க அதன் பின்னர் சீல் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக என்று கூறப்பட்டது.
அத்தனைக் காலையில் நாஸ்தா தின்பதெல்லாம் என் அகராதியிலும் கிடையாது என்னும் மனம் படைத்தோரும் கூட நான்கு மணித் துயிலெழல் பயனாய், தட்டில் சுடச்சுட வந்து விழுந்த இட்லி, பொங்கல், வடை, சாம்பார், சட்னியை துவம்சம் பண்ண முதல் ஆளாய் வரிசையில் நின்றோம்.
குறித்த நேரத்தில் புறப்பட்டோம். குறித்த நேரத்தில் அயோத்தி எல்லையும் கடந்தோம். மதியம் பன்னிரண்டு மணி பிடித்தது பிரயாக்ராஜை அடைவதற்கு.
எங்கள் பயணத்தில் மீண்டும் ஒரு புது நகரப் புகுதல். மீண்டும் ஒரு ஆரவார வரவேற்பு. பாரம்பரியக் கலைஞர்கள் மேள-தாள வரவேற்பு நல்கினர். ஜில்லா துணை மாஜிஸ்திரேட் எங்களுக்காக காத்திருந்து எங்களை கங்கைக் கரையில் அமைக்கப்பட்டிருந்த கலை அரங்கினுள் அழைத்துச் சென்றார். பள்ளிக் குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடத்த வந்திருந்தனர்.
உள்ளூர்ப் பாரம்பரிய நடனம் ஆடி வரவேற்றனர் முதலில் மேடை ஏறிய பள்ளிச் சிறுமியர். பரதநாட்டிய வழி தங்கள் ஊருக்கு வருகை புரிந்த எங்களுக்கு வரவேற்பு தந்தனர் அடுத்து ஆடிய மாணவியர்.
அனைவரது நேரத்தையும் கருத்தில் கொண்டு, சுருக்கமாக கலை நிகழ்ச்சிகள் நிறைந்தன, அவற்றின் இடையே நினைவுப் பரிசு வழங்கல்கள் நடந்தேறின. பிரயாக் ரயில்வேயில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் நிகழ்ச்சியை தமிழ், ஹிந்தி இரண்டிலும் தொகுத்து வழங்கினார்.
நதிக்கரையில் வரிசையாக படகுகள் காத்திருந்தன. ஒவ்வொரு பேருந்துக் குழுவாக திரிவேணி சங்கமத் துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.
நீரோடும் சிற்றோடையைப் பார்ப்பதே கடினம் என்னும் நிலப்பரப்பில் இருந்து சென்ற ஒருவனுக்கு இரண்டு வற்றா நதிகள் பிரவாகம் எடுத்து வந்து சங்கமிக்கும் இடத்தினை தரிசித்ததுவும், அங்கே நின்று பேச்சின்றி சில நிமிடங்கள் மோனத்தவத்திற்குச் சென்றதுவும் அலாதி அனுபவம்.
தனிக்குழுவாக வரும் மக்கள் கங்கையும், யமுனையும் கூடுமிடத்தில் ஆங்காங்கு படகுகளை நிற்கவைத்து புனித நீராடுகிறார்கள். நின்று நீராடும் அளவு நீர் குறைவாக சில இடங்களில் உள்ளது. சில படகுக்காரர்கள் படகுகளுக்கிடையில் கயிற்றினைக் கட்டி அதனைப் பிடித்துக்கொண்டு பக்தர்களை சங்கமிக்கும் இடம் எனப்படும இடத்தில் இறங்கச்சொல்லி நீராட வைக்கிறார்கள்.
எங்கள் இருநூறு பேர் கொண்ட குழுவிற்கு ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கி இருந்தார்கள். நீராடி முடித்து, கொண்டு சென்றிருந்த பிளாஸ்டிக் புட்டிகளில் புனித நீர் சேகரித்து, மறுவழியில் படகேறி கலை அரங்கம் இருந்த இடம் வந்தோம்.
அதிருஷ்ட வசமாக என் பேருந்து எண் வாரணாசியிலும், அயோத்தி-பிரயாக் பயணத்திலும் ஒன்றாம் எண்ணாக இருந்ததால், நம்மால் முன்னாதாகவே காத்திருக்கும் இடங்களுக்கு வந்து சேரும் வாய்ப்பு இருந்ததால், பயணத்தின் சில நேரங்களில் ஆங்காங்கே ஆசுவாசம் செய்து கொள்ள அவகாசம் கிடைத்தது. கலை அரங்கின் பின் பகுதியில் அமைந்திருந்த சிறிய கடைவீதிப் பகுதியில் சென்று மேய்ந்து இல்லத்தரசிக்கு சில வளையல் செட்டுகள் வாங்க அப்படி நேரமும் அமைந்தது.
அங்கிருந்து பேருந்துகளில் புறப்பட்டு சுவாமி நாராயண் மந்திர் சென்றோம். அங்கே மதிய உணவு. பின் அங்கிருந்து புறப்பட்டு ஆசாத் பூங்கா சென்றோம். அங்கே ஒரு குழுப்புகைப்படம். அது நிறைந்ததும் அங்கிருந்து நேரே எங்கள் வாரணாசி பயணம் துவங்கியது.
பிரயாக் நகரில் இரண்டு சந்திப்புகள் சுவாரசியம் தந்தவை.
ஒன்று கங்கைக்கரைக் கடை வீதியில் ராஜேஷ் என்னும் நபரை சந்தித்தேன். கிட்டத்தட்ட என்னை ஒத்த தோற்றம். நுனி நாக்கு பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் தனியாகப் பேசிக்கொண்டு உலாத்திக் கொண்டிருந்தான் மனிதன். என்னைப் பார்த்ததும் இடை மறித்து, "ஹேய், நீ சவுத் இண்டியன் தானே? டமில்?", இவனிடம் பேசலாமா என்ற என் தயக்கத்தைப் பார்த்து, "பயப்படாத, நான் நம்மூர் ஆளுங்க கிட்ட எல்லாம் லூட் அடிக்க மாட்டேன். வெள்ளைக்காரன் எவனாவது வந்து மாட்டினான்னா அவன் கிட்ட பேசி ஏதாவது கறக்க முடியுதான்னு பாப்பேன்", என்றவனைப் பார்த்து சிரித்து விட்டேன். "பின்ன, அவன் நம்ம ஊர்ல இருநூறு வருஷம் லூட் அடிச்சான் இல்ல. திரும்ப கறக்கணும் இல்ல?" என்றான். நான் அமைதியாக புன்னகைத்து நிற்க "நீ கால்ல செருப்பு போடாம போற பாரு. இந்த பக்தி எல்லாம் நான் தமிழ் மக்கள் கிட்ட தான் பாத்து இருக்கேன். புனிதத் தலத்துல உலாத்தும்போது செருப்பு போடக் கூடாதுங்கற சிரத்தை எல்லாம் சர்.சி.வி.ராமனையும், சர்வேப்பள்ளி ராதாகிருஷ்ணனையும் இந்தியாவுக்குத் தந்த பூமிக்குத்தான் தெரியும்", என்றான். யாரப்பா நீ என்று நான் இன்னும் தயக்கத்தில் இருக்க, "சரி, நீ என்னை நம்பலைன்னு தெரியுது. என் பேரு ராஜேஷ். ஞாபகம் வெச்சிக்க இங்கதான் சுத்திட்டு இருப்பேன்", என்று கை கொடுத்து விடை பெற்றான்.
இரண்டாவது சந்திப்பு சந்திர சேகர் ஆசாத் பூங்கா வாசலில் சந்தித்த பள்ளிச் சிறுமியர் சிலர். அங்கே ஐஸ்கிரீம் வாங்கித் தின்ன நின்றிருந்த சிறுமியரை எங்களுடன் வந்திருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் கேண்டிட் க்ளிக் அடித்துக் கொண்டிருந்தார். நான் அவர்கள் அருகில் சென்று நின்று, என்னையும் சேர்த்து எடுங்க பாஸ் என்றேன். "ஹல்லோ! ஹல்லோ! யார் நீங்க? இப்டி தெரியாதவங்க பக்கம் எல்லாம் நிக்கக் கூடாதுன்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க", என்றாள் அவர்களுள் ஒரு குட்டிப் பெண் கறாராக. "மன்னிச்சிக்க தாயி" என்று நான் நகர்ந்து விட்டேன். ஒரு நிமிட இடைவெளியில் எங்கள் ஒட்டு மொத்த கூட்டத்தையும் சுற்றி முற்றி பார்த்துவிட்டு, "நீங்க தான் மோதி ஜி எங்க ஊருக்கு அழைச்சிட்டு வந்த கெஸ்ட்டா?", என்று மெதுவாக வந்தார்கள். "உங்க பேரு என்ன அங்கிள்?", "சென்னைலருந்து வந்திருக்கீங்களா", "அந்த ஃபோட்டோகிராபர் அங்கிள் எங்க அங்கிள்?", "சரி, வாங்க அங்கிள் செல்ஃபி எடுக்கலாம்", என்று நிறைந்தது எங்கள் ஐந்து நிமிட ஸ்நேஹம்.
பிரயாகில் இருந்து புறப்பட்டதும் வழியில் கைவினை அருங்காட்சியகமும் வர்த்தக மையமும் ஒருங்கே அமைந்திருந்த TFC செல்லும் திட்டம் இருந்தது. ஆனால், வழியில் நிகழ்ந்த ஒரு போக்குவரத்து நெரிசல் காரணமாக TFC திட்டம் ரத்தானது.
பதினோரு மணிக்கு எங்கள் ரயில் பனாரஸ் நிலையத்தில் புறப்பட வேண்டும். நாங்கள் பத்து பதினைந்துக்கு பனாரஸ் அடைந்தோம். ரயில் நின்றிருந்த நடை மேடையில் எங்கள் பெட்டிகளுக்கு அருகிலேயே எங்களுக்காக இரவு உணவு காத்திருந்தது. இந்தப் பயணத்தின் ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் நாங்கள் எந்த மனத்தடங்கல்களும், குறைகளும் மனதில் கொள்ளாமல் முழுதாய் உள்வாங்க இந்த உணவு உபசரிப்பு ஒரு பெரும் பங்கு வகித்தது என்றால் அது மிகையில்லை.
உணவை முடித்து, ரயிலில் ஏறி அமர்ந்தோம். சற்று நேரத்தில் ரயில் புறப்பட்டது. ஆறு நாட்கள் எப்படிக் கடந்தன என்று நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். பல நண்பர்களின் அறிமுகங்கள், புதிய எழுத்தாள முகங்களின் பரிச்சயம், ஆன்மிக உலாத்தல்கள், கலை நிகழ்வுகள், கலாச்சாரக் கூடல்கள், சில மரியாதைக்கு உரிய அதிகாரிகளுடனான தனிப்பட்ட சந்திப்புகள் என அத்தனையும் சாத்தியப்படுத்திய சங்கமம் நிறைவை எட்டுகிறது என்பதை ஏற்க சற்றே கடினமாகத்தான் இருந்தது. பனாரஸ், வாரணாசி, காசி என்று ஒவ்வொரு ரயில் நிலையங்களாக பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தன. என் நினைவுகளும் கூட.