Apr 13, 2011

இன்னா செய்தாரை ஒறுத்தல்...




துறவறவியலில் திருவள்ளுவர் ஒரு அற்புதமான திருக்குறளை நமக்கெல்லாம் தந்திருக்கிறார்-

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

நாமெல்லாம் சாமியார் அல்ல. சாமியார்களே ஒன்றையும் விடுவதில்லை என்பதைத் தற்போதைக்கு மறந்து விடுவோம்.

இந்தக் குறளுக்கு பரிமேலழகர் அழகான உரை தந்திருக்கிறார்- 

இன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது:  
அவர் நாண நல் நயம் செய்துவிடல் - அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல். 
 (மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு . இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.)

இதன் பொருள் சமகால தமிழில் இப்படி புரிந்து கொள்ளப்படலாம் (சொற்குற்றம் பொருள் குற்றம் காணும் பெரியவர்கள் பண்பான மொழியில் என்னை இடித்துரைத்துத் திருத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்)

இன்னா செய்தாரை ஒறுத்தல் - தான் விரும்பத்தகாத விஷயங்களை செய்தவர்களை சாமியார்கள் தண்டிப்பது எப்படி என்றால் அவர் நாண நல் நயம் செய்து விடல் - அப்படி செய்தவர்களே வெட்கப்படுமாறு அவர்கள் மகிழ்ச்சியடைந்து சிரிக்கும்படியான செயல்களைச் செய்து நல்லது கெட்டது இரண்டையும் மறந்து விட வேண்டும் 

(இந்த நல்லது கெட்டது இரண்டையும் மறக்காமல் இருந்தால் திரும்பத் திரும்ப வம்பு வழக்கு தொடரும் என்பதால் இவ்விரண்டும் மறக்கத் தக்கதாயின. அதனால்தான் இந்த ஐடியா தரப்படுகிறது. தண்டிப்பது, நல்லது செய்வது, அப்புறம் எல்லாவற்றையும் மறப்பது இதிலெல்லாம் கோபத்துக்கு இடம் தரக்கூடாது).

பரிமேலழகர் எவ்வளவு அழகா சொல்லி இருக்கிறார் பார்த்தீர்களா? ஏன் தேவை இல்லாமல் நாம் வன்மம் வைத்து பகை செய்ய வேண்டும்?

இந்தக் குறளுக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஒற்றை வாக்கியத்தில் நச்சுன்னு சொல்லிட்டாரே- 

"நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலை குனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்."

கோபத்தை விட்டோம்னா நாம அவங்க வெட்கப்படணும்னு நினைத்து நல்லது செய்ய மாட்டோம், அவங்க சந்தோஷமா இருக்கணும்னு நெனச்சு நல்லது செஞ்சுட்டு, அதையும் மறப்போம்.

அதுதான் குறள் வழி.

நட்பு வழி.

பகை அழிப்போம். நட்பு வளர்ப்போம்.
.
.
.

3 comments:

Rathnavel Natarajan said...

எனது வேண்டுகோள் - தயவு செய்து அரசியல் பக்கம் போகாதீர்கள்.
நன்றி கிரி.

Giri Ramasubramanian said...

அருமையான அறிவுரை. நன்றிகள்!


ஆனா அறிவுரையை ஃபாலோ பண்றது ரொம்ப கஷ்டம். நம்ம நாட்டுல அரசியல் பேசறது ஒரு போதை போல. என்னத்த பண்ண சார்!

இருந்தாலும் முயற்சி பண்றேன்.

natbas said...

ஐயா ரத்தினவேல் அவர்களின் அறிவுரையை நானும் வழி மொழிகிறேன்.

அப்படியே அரசியல் பேசுவதானால் அது இந்த மாதிரி வள்ளுவர் என்ன சொன்னார், பிளாட்டோ என்ன சொன்னார், ஜெபர்சன் என்ன சொன்னார், ஐரோப்பாவின் இரும்பு மனிதன் பிஸ்மார்க் என்ன சொன்னார், மக்கியவெல்லி (இத்தாலிய மாமேதை) என்ன சொன்னார் என்பது போன்ற ஆழமான பயனுள்ள சிந்தனையைத் தூண்டும் விஷயங்களாக இருக்கட்டும்.

நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...