Apr 5, 2011

இந்தத் தேர்தலின் ஹீரோ


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னமும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், வழக்கமான தேர்தல் காமெடிகளுக்கு எந்தவிதக் குறைவும் வைக்காமல் இம்முறையும் இயன்ற அளவில் படேபடா பல்டிகளை அடித்து மக்களை மகிழ்வித்து வருகின்றன திராவிடக் கட்சிகள்.

ஒரு ஆட்சியின் ஐந்து வருடச் சாதனைகளைக் கருத்தில் கொண்டு ஓட்டுப் போடும் மனநிலை நான் அறிந்தவரையில் என்றுமே தமிழக வாக்காளர்களுக்கு இருந்ததில்லை.  கடந்த ஐந்து வருடங்களில் ஒரு ஆட்சி செய்த சாதனைகள் என்ன என்பதைக் கருத்தில் கொண்டு ஓட்டளிக்கும் நிலை தமிழகத்தில் இருந்திருந்தால் 2001'லும் 2006'லும் ஆட்சி மாற்றங்களை தமிழகம் சந்தித்திருக்காது. 

ஆதரவு அலை அல்லது எதிர்ப்பு அலை என்ற இரண்டு காரணிகள் மட்டுமே இங்கே செயற்படும். ஒவ்வொரு தேர்தலிலும் முடிவுகளை நிர்ணயிக்க இப்படி ஏதேனும் ஒரு காரணி அமைந்துவிடுகிறது.  ஏதேனும் ஒரு விஷயத்தை கதாநாயகனாகவோ அல்லது வேறு ஏதேனும் விஷயத்தை வில்லனாகக் கொண்டு அளிக்கப்படும் ஓட்டுக்களைக் கொண்டு ஆட்சியில் அமர்பவரை எப்போதும் தீர்மானித்து வருகிறது தமிழகம்.

1977, 1980, 1985 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். மற்றும் இரட்டையிலை என்னும் எளிய கேக்வாக் காரணிகள் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க உதவின. எம்.ஜி.ஆரின் விஸ்வரூப சினிமா பிம்பத்திற்கு முன்னால் கருணாநிதி செய்த ஜாலங்கள் எதுவும் பலன் அளிக்கவில்லை என்பது வரலாறு அறிந்தது. பதிமூன்று ஆண்டுகால வனவாசத்திற்குப் பின் எம்.ஜி.ஆர். மறைந்தபின் மட்டுமே அவர் மீண்டு எழ இயன்றது. 

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நல்ல திட்டங்களைச் செயல்படுத்தினாரோ இல்லையோ ஊழல் என்னும் வார்த்தையை எதிர்க்கட்சியினர் தவிர்த்து பொதுமக்கள் யாரும் பயன்படுத்தும் வாய்ப்பை அளிக்காமல் ஆட்சி செய்தார். 

1989'ல் எம்.ஜி.ஆரை இழந்த காரணம், ஜானகி எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அவர்களின் குடுமிப்பிடி மற்றும் இரட்டையிலை சின்ன இழப்பு ஆகியவற்றால் கருணாநிதி மீண்டும் அரியணை ஏறினார். எனினும் ஜெயலலிதா அம்மையார் அப்போதைய மத்திய அரசிடம் கொண்டிருந்த செல்வாக்கு இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக கருணாநிதியை வீட்டிற்கு அனுப்பியது. இரண்டே ஆண்டுகால ஆட்சி என்பதால் சாதனை வேதனைகளைப் பற்றி விவாதிக்க வாய்ப்பளிக்காமல் வீடு திரும்பினார் மு.க.

1991'ஆம் ஆண்டு ராஜீவ் மரணம் என்னும் ஒரு பேரலை ஜெயலலிதாவை ஆட்சிக் கட்டிலில் ஏற்றியது. அதன் பின் நடந்த வரலாறு காணாத ஊழல்கள் எல்லாமுமே அதுவரை தமிழகம் காணாதவை. ஊழல் நடக்காத துறைகள் என எதுவும் இருந்ததாக நினைவில்லை. உடன்பிறவா சகோதரி & கோவின்  தமிழகம் முழுவதுமான சுரண்டல்கள், மகாமகக் குள சோகங்கள், வளர்ப்புமகன் ஆடம்பரத் திருமணம், போயஸ் தோட்டத்தில் புறப்படும் ஜெயலலிதாவுக்காக போடிநாயக்கனூரில் ட்ராஃபிக்கை நிறுத்துவது  என தன் எல்லைக்குள் மட்டுமே வாழ்க்கை என ஜெயலலிதா வாழ்ந்தார். இதுவே அவரது அராஜக முகத்தை மக்கள் மனதில் வலுவாகப் பதிவு செய்து, பத்திரிக்கைகளின் எதிர்ப்பையும் சம்பாதித்துத் தந்து அடுத்து வந்த தேர்தலில் அவரை மண்கவ்வ வைத்தது.

1996 'ஆம் ஆண்டு ஊழல் எதிர்ப்பு அலையின் பலனாக கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தார். இப்போதைய 2006 -2011 ஆட்சிகளோடு ஒப்பிட்டால் அந்த காலகட்டத்தின் திமுக ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் எனலாம். போக்குவரத்து மற்றும் மாவட்டப் பெயர்களில் இருந்த ஜாதி மற்றும் தலைவர் பெயர்கள் நீக்கப்பட்டன, உழவர் சந்தை உருவாக்கப் பட்டது, சமத்துவபுரம் திட்டம் கொண்டு வந்தார், கார் கம்பெனிகள் தமிழகத்தில் உற்பத்தியைத் துவக்கின, ஸ்டாலின் மேயர் ஆனார், சென்னை நகரம் சிங்காரச் சென்னை ஆக திட்டங்கள் தீட்டப்பட்டன. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 

2001 'ஆம் ஆண்டின் தேர்தல் முடிவு தமிழக வரலாற்றில் மிகவும் விநோதமானது. மீண்டும் அரியணை ஏற வாய்ப்பே இல்லை என்று ஓரம்கட்டப்பட்ட ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சியில்"பணப் புழக்கம்" சரிவர  இல்லை என்ற மொக்கைக் காரணத்தைக் காரணம் காட்டி அடுத்த முறை அரியணை ஏறினார். தமிழர்கள் ஒரே முதல்வரை மீண்டும் பார்க்க விரும்புவதில்லை என ஊடங்கங்கள் கருத்துரைத்தன. முந்தைய ஆட்சியின் தவறுகளில் இருந்து தன்னை முழுவதும் விடுவித்துக் கொண்டது இந்த முறை ஜெயலலிதாவின் சாதனை. நிர்வாகத் திறனில் கருணாநிதி அரசுடன் ஒப்பிடும் அளவு சாதனைகள் இல்லாவிடினும் ஊழல் இல்லாத அரசாங்கம் என்பதே அரசின் ஆகச் சிறந்த சாதனை.

1996 மற்றும் 2001 ஆண்டுகளின் தேர்தல்களைத் தொடர்ந்து தமிழகத்தில் நடந்த சிறைபுகு நாடகங்கள் மிகக் காமெடியானவை. திமுக ஆட்சியில் ஊழல்களைப் பட்டியலிட்டு ஜெயலலிதாவை கருணாநிதி அரசு சிறை அனுப்பியதும், பின் வந்த அதிமுக ஆட்சியில் பழிவாங்கும் போக்கில் தான் அடைந்த அதே சிறையில் கருணாநிதியை ஜெயலலிதா அடித்ததும் மறக்க இயலாத சம்பவங்கள். அதிலும் சன் டி.வி. துணையில் கருணாநிதியின் "கொலைப் பண்றாங்கப்பா" டயலாகுகள் இன்னமும் நமக்கு கிச்சு கிச்சு மூட்டுபவை.

2006'ஆம் ஆண்டு சன் டி.வி. மற்றும் தினகரன் குழுமத்தின் பலத்தில் ஆட்சியைப் பிடித்தார் கருணாநிதி. இந்த முறை தேர்தல் கூட்டங்கள் நேரிடையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. ஒரு ரூபாய்க்கு அரிசி, கண்ணகி சிலை, விவசாயக் கடன் ரத்து ஆகிய தேர்தல் அறிக்கைகளைக் கையில் வைத்துக் கொண்டு ப.சிதம்பரம் முதலானோர் பேசிய எனர்ஜடிக் பேச்சுக்கள் திமுக பக்கமாக ஆதரவு அலையை வரவழைத்தன.

இந்த ஆட்சியின் சாதனைகள் என்றால் அவை தொடரும் செம்மையான நிர்வாகத்திறன். உதாரணம்: குஜராத் தவிர்த்து வேறு மாநிலங்கள் எவற்றுடனும் ஒப்பிட முடியாத வகையில் உள்கட்டமைப்பு வசதிகள், பாலங்கள், தரமான பேருந்துகள், வெளிநாட்டு நிறுவனங்களின் வரவு ஆகியவை. 

வேதனைகளை லிஸ்ட் போட்டால் நான் இங்கே இந்தக் கட்டுரையை எழுதி முடிக்க இயலாது. ரியல் எஸ்டேட் துறையை முழுக்க தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தாங்கள் விரும்பிய விலைக்கு நிலம், கட்டிடம், கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றின் விலையை உயர்த்தியது, எல்லாத் துறைகளிலும் வாரிசுகளின் கை, தரையில் இருந்த விலைவாசியை ஆகாயத்தையும் தாண்டிப் பயணிக்கும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அட, 2ஜி'யை மறந்தால் எப்படி?

இவைதான் தமிழகத்தின் கடந்த முப்பத்து ஐந்து வருட தேர்தல்களின் ஆட்சிகளின் சுருக்க வரலாறு. 

இந்த முறை தேர்தலின் கதாநாயகன் யார்?  ஆட்சியை நிர்ணயிக்கப் போகும் காரணி என்ன?  ஆதரவு விஷயங்கள், எதிர்ப்பு விஷயங்கள் இரண்டு திராவிட கட்சிகளுக்குமே என்னென்ன?  அவற்றை நீங்கள்தான் பின்னூட்டங்களில் சொல்லுங்களேன், ப்ளீஸ்!
.
.
.

7 comments:

Rajan said...

ME THE FIRST

Jayadev Das said...

\\தேர்தல் அறிக்கைகளைக் கையில் வைத்துக் கொண்டு ப.சிதம்பரம் முதலானோர் பேசிய எனர்ஜடிக் பேச்சுக்கள் திமுக பக்கமாக ஆதரவு அலையை வரவழைத்தன.
\\இந்த ஆளை என்ன கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுவது என்றே தெரியவில்லை. என்னமாய் புளுகோ புளுகு என்று மேடைகளில் புளுகித் தள்ளினான் இந்த வெட்கங் கெட்ட மனிதன்? அறுபது லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது, அதை ஆளுக்கு இரண்டு எக்கராகப் பிரித்து தருகிறோம் என்ற கருணாநிதியின் அண்டப் புளுகை இந்த ஆகாசப் புளுகன் எல்லா மேடைகளிலும் புளுகினான். அதை இப்போது பூனை தனது மலத்தை மூடி மறைப்பது போல மறைக்கிறான். அரிசி கொடுத்தார், டி.வீ குடுத்தார் என்றுதான் சொல்கிறானே தவிர நிலம் என்ன ஆனது என்பது பற்றி இவன் ஏன் தனது திருவாயை திறக்கவே மாட்டேங்கிறான்? எல்லாம் அயோக்கியப் பயல்கள்.

Jayadev Das said...

எம்ஜியார் போனதுக்கப்புறம், கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தார்கள், அவரு போட்டு நல்ல கும்முனாரு...ஐயோ சாமி தாங்க முடியலையே என்று ஜெ கிட்ட ஓடினாங்க, அது அதை விட பெரிய கும்மங்குத்து குத்துச்சு, மீண்டும் மஞ்சள் துண்டு... குனிய வச்சு நொங்கு நொங்கு என்று நொங்கு எடுத்தது... இப்படியே மாத்தி மாத்தி அடி வாங்கும் தமிழன்...ரொம்ப நல்லவன்டா... எல்லாவற்றுக்கும் காரணம் தமிழனின் முட்டாள்த் தனம், சுயநலம், சோம்பேறித் தனம், உழைக்காமல் வாழ வேண்டும் என்று நினைக்கும் அயோக்கியத் தனம். இவன் செய்த முதல் தப்பு தி.மு.க. மாதிரி ஒரு கட்சியை நம்பி ஓட்டு போட்டு, அதன் கொள்கைகளை இன்னும் ஆதரித்து வருவது. அதிலிருந்து மீளும் வரை இவனை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

Jayadev Das said...

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதில் மஞ்சள் துண்டை அடித்துக் கொள்ள முடியாது, காங்கிரஸ் கூட கூட்டணி வேற. மானங்கெட்ட தமிழன் வாங்கின காசுக்கு ஓட்டுப் போட்டு விடுவான். அடுத்த ஐந்து வருஷத்துக்கு வெந்து சாவான்.

ராஜ நடராஜன் said...

விடுகதையை விடையை சொல்லி விட்டு கேள்வியை எங்க கிட்ட கேட்கிறீங்களே:)

Rathnavel Natarajan said...

இருவரும் ஒரே அளவு மோசம் தான். அதில் வேறுபாடு கிடையாது.
தற்போதைய நிலையில் ஆடம்பரம், ஆர்ப்பாட்டத்தை குறித்த 'தேர்தல் ஆணையம்' தான் 'இன்றைய கதாநாயகன்'
வாழ்த்துக்கள் கிரி.

Shanmuganathan said...

ஹலோ சார்,

முதலில் ஒரு சிறு திருத்தம் "ஜெயலலிதா அதே சிறையில் அடித்து என்று எழுதியிருகிரீர்ர்கள்... அதை அடைத்து என்று திருத்தவும்... அதுதான் சரி என்றல் விட்டு விடலாம்...
1 . முதலில் அரசியல் கட்சிகளை மட்டும் குறை கூறுவதை விடுங்கள்.. இந்த மக்களையும் கொஞ்சம் திட்டியிருக்கலாம்... அவர்களை யோசிக்க வைக்க என்னவெல்லாம் செய்ய முடியும் என்றும் எழுதியிருக்கலாம்... ஏன் திரும்பத்திரும்ப ஒரே மாதிரியான முடிவையே (மாற்றி மாற்றி ஒட்டுப்போடுதல்) எடுக்கிறார்கள் (றோம்) என்று யோசிக்கவேண்டும்.
2 . மக்களுக்கு இந்த அரசாங்கத்தில் எந்தெந்த துறையில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை... (நான் உட்பட) அதை ஒவ்வொரு துறையில் உள்ள உயர் அதிகாரிகள் அதை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்... அதற்கான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும்...
௬. அரசாங்க தொலைக்காட்சி இருப்பது போல் ஏன் அரசாங்க செய்தித்தாள் இருக்ககூடாது.. அதில் ஒவ்வொரு மாதத்திற்கும் எந்தெந்த நகரங்களில் எவ்வளவு வருவாய்கள் எந்தந்த துறைகளில் வந்திருக்கிறது எவ்வளவு செலவுகள் எந்தெந்த துறைகளில் செய்திருக்கிறார்கள் என்று முழு விவரங்களை அறிவிக்க வேண்டும். (இது எல்லாம் நடைமுறையில் இருக்கிறது என்று கூட சொல்வார்கள், ஆனால் அதுவும் என்னை போல் ஆட்களுக்கு தெரியாது)
மக்களிடம் நிரோத் விளம்பரம் கொண்டு செல்வது போல, இதையும் மக்கள் ஒரு பாதுகாப்பான் உறவு அரசாங்கத்துடன் ஏற்ப்படுவதற்காக.
௮. வீட்டு பட்ஜெட் மற்றும் நாட்டு பட்ஜெட் பார்ப்பது போல் ஒவ்வொருவொரும் தனது நகரத்தின் பட்ஜெட்டையும் பார்க்க வேண்டும்

தேர்தலில்
௩. ஒவ்வொரு கட்சியினரிடத்தும் முதல் பத்து அல்லது அதற்க்கு மேற்பட்ட முக்கிய வாக்குறுதிகளை பெற்றுக்கொண்டு அதற்கான தேவை மற்றும் இருப்புகளை ஆராய்ந்து ஒரு அறிக்கையை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அந்த அறிக்கையில் அதற்கு தேவை இருப்பது போல் மக்கள் ஒட்டு போடலாம்...
௪. இதனை ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற பெறப்போகின்ற நீதிபதிகளை அல்லது பெறவைத்து கூட நியமிக்கலாம்.
௫. காசுவங்குபவன் இருக்கும் வரைதான் காசு கொடுப்பவனும் இருப்பான்.. அந்த காசு அவருக்கு (வேட்பாளர்) எப்படி வருகிறது என்று தெளிவாக்கினால் அந்த காசை மக்கள் கட்டாயமாக வாங்கமட்டர்கள், இல்லையென்றால் கிடைக்கும் வரை லாபம் என்ற மனப்பான்மைதான் தொடரும்.. இது மக்களின் எல்லாசெயல்களிலும் தொடர்ந்துவிடும் (மிகபெரிய ஆபத்தே இதுதான்) .
௭. நம்மூரில் எத்தனயோ அறிவு ஜீவிகள் வண்டி வண்டியாக இருக்கிறார்கள்.. அவர்களிடம் இக்கருத்துகளை விவாதிக்கலாம் (கால அவகாசத்துடன்) செயல் படுத்த எத்தனயோ இளைஞர்கள் இருக்கிறார்கள் (றோம்).

மக்கள் தான் என்றுமே ஹீரோவாக இருக்க வேண்டும்.

இது எனது ஆவல்... கருத்திலோ அல்லது எழுத்திலோ பிழையிருந்தால் மன்னிக்கவும்.. விருப்பமிருந்தால் வெளியிடலாம்.. ...

Related Posts Plugin for WordPress, Blogger...