தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னமும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், வழக்கமான தேர்தல் காமெடிகளுக்கு எந்தவிதக் குறைவும் வைக்காமல் இம்முறையும் இயன்ற அளவில் படேபடா பல்டிகளை அடித்து மக்களை மகிழ்வித்து வருகின்றன திராவிடக் கட்சிகள்.
ஒரு ஆட்சியின் ஐந்து வருடச் சாதனைகளைக் கருத்தில் கொண்டு ஓட்டுப் போடும் மனநிலை நான் அறிந்தவரையில் என்றுமே தமிழக வாக்காளர்களுக்கு இருந்ததில்லை. கடந்த ஐந்து வருடங்களில் ஒரு ஆட்சி செய்த சாதனைகள் என்ன என்பதைக் கருத்தில் கொண்டு ஓட்டளிக்கும் நிலை தமிழகத்தில் இருந்திருந்தால் 2001'லும் 2006'லும் ஆட்சி மாற்றங்களை தமிழகம் சந்தித்திருக்காது.
ஆதரவு அலை அல்லது எதிர்ப்பு அலை என்ற இரண்டு காரணிகள் மட்டுமே இங்கே செயற்படும். ஒவ்வொரு தேர்தலிலும் முடிவுகளை நிர்ணயிக்க இப்படி ஏதேனும் ஒரு காரணி அமைந்துவிடுகிறது. ஏதேனும் ஒரு விஷயத்தை கதாநாயகனாகவோ அல்லது வேறு ஏதேனும் விஷயத்தை வில்லனாகக் கொண்டு அளிக்கப்படும் ஓட்டுக்களைக் கொண்டு ஆட்சியில் அமர்பவரை எப்போதும் தீர்மானித்து வருகிறது தமிழகம்.
1977, 1980, 1985 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். மற்றும் இரட்டையிலை என்னும் எளிய கேக்வாக் காரணிகள் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க உதவின. எம்.ஜி.ஆரின் விஸ்வரூப சினிமா பிம்பத்திற்கு முன்னால் கருணாநிதி செய்த ஜாலங்கள் எதுவும் பலன் அளிக்கவில்லை என்பது வரலாறு அறிந்தது. பதிமூன்று ஆண்டுகால வனவாசத்திற்குப் பின் எம்.ஜி.ஆர். மறைந்தபின் மட்டுமே அவர் மீண்டு எழ இயன்றது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நல்ல திட்டங்களைச் செயல்படுத்தினாரோ இல்லையோ ஊழல் என்னும் வார்த்தையை எதிர்க்கட்சியினர் தவிர்த்து பொதுமக்கள் யாரும் பயன்படுத்தும் வாய்ப்பை அளிக்காமல் ஆட்சி செய்தார்.
1989'ல் எம்.ஜி.ஆரை இழந்த காரணம், ஜானகி எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அவர்களின் குடுமிப்பிடி மற்றும் இரட்டையிலை சின்ன இழப்பு ஆகியவற்றால் கருணாநிதி மீண்டும் அரியணை ஏறினார். எனினும் ஜெயலலிதா அம்மையார் அப்போதைய மத்திய அரசிடம் கொண்டிருந்த செல்வாக்கு இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக கருணாநிதியை வீட்டிற்கு அனுப்பியது. இரண்டே ஆண்டுகால ஆட்சி என்பதால் சாதனை வேதனைகளைப் பற்றி விவாதிக்க வாய்ப்பளிக்காமல் வீடு திரும்பினார் மு.க.
1991'ஆம் ஆண்டு ராஜீவ் மரணம் என்னும் ஒரு பேரலை ஜெயலலிதாவை ஆட்சிக் கட்டிலில் ஏற்றியது. அதன் பின் நடந்த வரலாறு காணாத ஊழல்கள் எல்லாமுமே அதுவரை தமிழகம் காணாதவை. ஊழல் நடக்காத துறைகள் என எதுவும் இருந்ததாக நினைவில்லை. உடன்பிறவா சகோதரி & கோவின் தமிழகம் முழுவதுமான சுரண்டல்கள், மகாமகக் குள சோகங்கள், வளர்ப்புமகன் ஆடம்பரத் திருமணம், போயஸ் தோட்டத்தில் புறப்படும் ஜெயலலிதாவுக்காக போடிநாயக்கனூரில் ட்ராஃபிக்கை நிறுத்துவது என தன் எல்லைக்குள் மட்டுமே வாழ்க்கை என ஜெயலலிதா வாழ்ந்தார். இதுவே அவரது அராஜக முகத்தை மக்கள் மனதில் வலுவாகப் பதிவு செய்து, பத்திரிக்கைகளின் எதிர்ப்பையும் சம்பாதித்துத் தந்து அடுத்து வந்த தேர்தலில் அவரை மண்கவ்வ வைத்தது.
1996 'ஆம் ஆண்டு ஊழல் எதிர்ப்பு அலையின் பலனாக கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தார். இப்போதைய 2006 -2011 ஆட்சிகளோடு ஒப்பிட்டால் அந்த காலகட்டத்தின் திமுக ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் எனலாம். போக்குவரத்து மற்றும் மாவட்டப் பெயர்களில் இருந்த ஜாதி மற்றும் தலைவர் பெயர்கள் நீக்கப்பட்டன, உழவர் சந்தை உருவாக்கப் பட்டது, சமத்துவபுரம் திட்டம் கொண்டு வந்தார், கார் கம்பெனிகள் தமிழகத்தில் உற்பத்தியைத் துவக்கின, ஸ்டாலின் மேயர் ஆனார், சென்னை நகரம் சிங்காரச் சென்னை ஆக திட்டங்கள் தீட்டப்பட்டன. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
2001 'ஆம் ஆண்டின் தேர்தல் முடிவு தமிழக வரலாற்றில் மிகவும் விநோதமானது. மீண்டும் அரியணை ஏற வாய்ப்பே இல்லை என்று ஓரம்கட்டப்பட்ட ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சியில்"பணப் புழக்கம்" சரிவர இல்லை என்ற மொக்கைக் காரணத்தைக் காரணம் காட்டி அடுத்த முறை அரியணை ஏறினார். தமிழர்கள் ஒரே முதல்வரை மீண்டும் பார்க்க விரும்புவதில்லை என ஊடங்கங்கள் கருத்துரைத்தன. முந்தைய ஆட்சியின் தவறுகளில் இருந்து தன்னை முழுவதும் விடுவித்துக் கொண்டது இந்த முறை ஜெயலலிதாவின் சாதனை. நிர்வாகத் திறனில் கருணாநிதி அரசுடன் ஒப்பிடும் அளவு சாதனைகள் இல்லாவிடினும் ஊழல் இல்லாத அரசாங்கம் என்பதே அரசின் ஆகச் சிறந்த சாதனை.
1996 மற்றும் 2001 ஆண்டுகளின் தேர்தல்களைத் தொடர்ந்து தமிழகத்தில் நடந்த சிறைபுகு நாடகங்கள் மிகக் காமெடியானவை. திமுக ஆட்சியில் ஊழல்களைப் பட்டியலிட்டு ஜெயலலிதாவை கருணாநிதி அரசு சிறை அனுப்பியதும், பின் வந்த அதிமுக ஆட்சியில் பழிவாங்கும் போக்கில் தான் அடைந்த அதே சிறையில் கருணாநிதியை ஜெயலலிதா அடித்ததும் மறக்க இயலாத சம்பவங்கள். அதிலும் சன் டி.வி. துணையில் கருணாநிதியின் "கொலைப் பண்றாங்கப்பா" டயலாகுகள் இன்னமும் நமக்கு கிச்சு கிச்சு மூட்டுபவை.
2006'ஆம் ஆண்டு சன் டி.வி. மற்றும் தினகரன் குழுமத்தின் பலத்தில் ஆட்சியைப் பிடித்தார் கருணாநிதி. இந்த முறை தேர்தல் கூட்டங்கள் நேரிடையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. ஒரு ரூபாய்க்கு அரிசி, கண்ணகி சிலை, விவசாயக் கடன் ரத்து ஆகிய தேர்தல் அறிக்கைகளைக் கையில் வைத்துக் கொண்டு ப.சிதம்பரம் முதலானோர் பேசிய எனர்ஜடிக் பேச்சுக்கள் திமுக பக்கமாக ஆதரவு அலையை வரவழைத்தன.
இந்த ஆட்சியின் சாதனைகள் என்றால் அவை தொடரும் செம்மையான நிர்வாகத்திறன். உதாரணம்: குஜராத் தவிர்த்து வேறு மாநிலங்கள் எவற்றுடனும் ஒப்பிட முடியாத வகையில் உள்கட்டமைப்பு வசதிகள், பாலங்கள், தரமான பேருந்துகள், வெளிநாட்டு நிறுவனங்களின் வரவு ஆகியவை.
வேதனைகளை லிஸ்ட் போட்டால் நான் இங்கே இந்தக் கட்டுரையை எழுதி முடிக்க இயலாது. ரியல் எஸ்டேட் துறையை முழுக்க தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தாங்கள் விரும்பிய விலைக்கு நிலம், கட்டிடம், கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றின் விலையை உயர்த்தியது, எல்லாத் துறைகளிலும் வாரிசுகளின் கை, தரையில் இருந்த விலைவாசியை ஆகாயத்தையும் தாண்டிப் பயணிக்கும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அட, 2ஜி'யை மறந்தால் எப்படி?
இவைதான் தமிழகத்தின் கடந்த முப்பத்து ஐந்து வருட தேர்தல்களின் ஆட்சிகளின் சுருக்க வரலாறு.
இந்த முறை தேர்தலின் கதாநாயகன் யார்? ஆட்சியை நிர்ணயிக்கப் போகும் காரணி என்ன? ஆதரவு விஷயங்கள், எதிர்ப்பு விஷயங்கள் இரண்டு திராவிட கட்சிகளுக்குமே என்னென்ன? அவற்றை நீங்கள்தான் பின்னூட்டங்களில் சொல்லுங்களேன், ப்ளீஸ்!
.
.
.