Mar 19, 2012

தமிழனின் முழக்கங்கள்!


இலங்கையின் போர்க் குற்றங்கள் கண்டிக்கத்தக்கவை. அதில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனைக்கு உரியவர்கள். ஐ.நா.தீர்மானத்தில் இலங்கையை எதிர்த்து இந்தியா ஓட்டு அளிக்கவேண்டும். இந்தியா மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகமும் இலங்கைக்கு எதிராக இவ்விஷயத்தில் செயற்படவேண்டும். இதைத்தான் நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். ஒவ்வொரு இந்தியனிடமும் இதை எடுத்துச்செல்லவும், உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் இதைத் தெரியப் பண்ணுவதற்கும் நினைக்கிறோம். ஆனால் அதற்காக எந்த வழியைக் கடைப் பிடிக்கிறோம் நாம்?

தமிழ் இணையத்தில் #KillerFields என்ற குடையின் தமிழர்களின் வீரத்தைக் காண்கையில் எனக்குப் புல்லரிக்கிறது. இவர்களுக்கு இருக்கும் வீரமும் ஆவேசமும் இலங்கை அரசின் போர்க் குற்ற வீடியோவைப் பார்த்ததும் இவர்களை வந்து சேர்ந்தது, சரிதான். ஆனால் அந்த வீராவேசத்தின் வெளிப்பாடு இருக்கிறதே!

இவர்கள் இணையத்தில் முழங்கும் முழக்கம் உண்மையானால் அந்த முழக்க ஒலிக்கு, வீரமுழக்கத்திற்கு, அந்த முழக்கத்தின் அனலுக்கு இந்நேரம் ஒட்டுமொத்த இலங்கையும் சுட்டு எரிந்திருக்கவேண்டும். கண் மண் தெரியாமல் சிலர் முழங்குகிறார்கள். தொடர்ந்துமுழங்குகிறார்கள். இருபத்து நாலு மணி நேரமும்அலறுகிறார்கள். ஆனால் இவர்களில் எத்தனை பேர் உருப்படியான அடுத் கட்டத்திற்கு இந்தப் போராட்டத்தை எடுத்துச் செல்வார்கள் என்றுதெரியவில்லை.

தேசிய உணர்வைவிட இன உணர்வு என்றும் பெரிதுதான், யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அந்த இனவுணர்வின் வேகம் உங்கள் தேசிய உணர்வை துச்சப்படுத்தும், "தேசியக் கொடியின் மேல் ஒண்ணுக்கு இருப்பேன்", என்று பேசும் வரையில் உங்களைக் கொண்டு வரும் என்றால்.... நீங்கள் கொஞ்சம் உங்களை ஆசுவாசப் படுத்திக் கொண் பின் இணையம் திரும்புதல் நலம். ஒரு தலைவனின் கண்மண் தெரியாத முட்டாள்தனக் கோபத்தில் ஒரு இனமே அழிந்தொழிந்தது போதாதா? உங்கள் கோப வெளிப்பாடுகளில் தேச அவமதிப்புக் குற்றத்தில் நீங்கள் உள்ளே போய் உங்கள் குடும்பத்தை நிர்க்கதியில் விட்டுவிடாதீர்கள். நான் இதை விளையாட்டாகச் சொல்லவில்லை, சீரியசாகவே சொல்கிறேன்.

தகவல் பரப்புங்கள், எதிர்ப்பைத் தெரிவியுங்கள், ஒன்று திரளுங்கள், போராடுங்கள்.... அது உங்களுக்கானது. ஆனால் அதை கண்ணியமாகச் செய்யுங்கள். உங்கள் objective என்னவோ அதை நிறைவேற்றச் செய்ய வேண்டியதைச் செய்யாமல், போகும் வழியில் இருப்பவைகளை எல்லாம் உதைத்துத் தள்ளியவாறு செல்லும் மனப்பான்மை உங்களுக்கு இருந்தால் அது நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உங்களைக் கொண்டு செல்லாது என்பது உங்களுக்குப் புரியுமா?

"பச்சைத் தமிழர்கள், எச்சைஇந்தியர்கள்" என்று ஒரு கருத்துப் பதிவைப் பார்க்கநேர்ந்தது. இது நான் பார்த்த நூற்றுக்கணக்கான கண்மண் தெரியாத கோப வெளிப்பாடுகளுள் ஒன்றே ஒன்று. இதுபோல ஏகப்பட்ட முட்டாள்தனமான கோப வெளிப்பாடுகள் இறைந்து கிடக்கின்றன. உங்கள் கோபம் இத்தனை தூரமா உங்கள் கண்ணைமறைக்கும்?

இவர்களை என்ன சொல்ல?

1 comment:

Rathnavel Natarajan said...

பொறுப்புள்ள, அருமையான பதிவு.
நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...