சமஸ் எழுதிய சாப்பாட்டுப் புராணம் புத்தகத்திற்கு நேற்று ஆம்னிபஸ்’சில் ஒரு அறிமுகம் எழுதி ட்ராஃப்டில் சேர்த்துவிட்டு குடும்பத்துடன் சென்னை சேத்பட் வரை ஒரு வேலையாய்ப் போயிருந்தேன். திரும்புகையில் பல்லாவரம் ரயில் பிடிக்க எக்மோர் வந்தோம். மாலை ஆறரை மணி. அகில் மதியம் ஏதும் சாப்பிடவில்லை. காலை பத்தரை மணிக்குத் தின்ற பருப்பு சாதம்தான். இடையில் இரண்டொரு பிஸ்கோத்துகள், டீக்கடையில் வாங்கிய ப்ளெயின் கேக்குகள் இரண்டுதான் உள்ளே இறங்கியிருந்தன.
ராமகிருஷ்ணா மிஷனின் ஊதுபத்தி மணம்கமழும் பக்திப் பொருள்கள் விற்பனை மையம் கடந்து ரயில்நிலையம் உள்ளே நுழைந்தோம். அன்ரிசர்வ்ட் பெட்டியில் ஏறி அனந்தபுரியில் இடம் பிடிக்க மகாஜனங்கள் முண்டியடித்து நின்று கொண்டிருந்தன. வலது பக்கம் திரும்பிப் படியேறினால் உள்ளூர் ரயிலுக்கான நடைமேடைக்குப் போய்விடலாம்.
“கொழந்தைக்கு எதான சாப்பிடக் கிடைக்குதா பாருங்க. இப்படியே வாங்கி ஊட்டிவிட்டுட்டுப் போயிடலாம்”, மனைவியார் நினைவூட்டினார்.
உள்ளூர் ரயில் பிடிக்க வேண்டும் என்பதால் ஆட்டோக்காரரை அந்தண்டை அந்தமுனையில் இறக்கிவிடப்பா என்றது தப்பாய்ப் போனது. மறுமுனையில் இருக்கும் அடையார் ஆனந்தபவன் போக ஒண்ணரை கிலோமீட்டர் நடைமேடையில் வடம் பிடிக்கவேணும்.
நாலு அடி நடந்ததும் எக்மோர் ஸ்டேஷன் கனவான்கள் சிலர் பொட்டலம் பொட்டலமாகக் கடை விரித்திருந்தார்கள். பொட்டலத்தின் மேல் பண்டத்தின் பெயர், தயாரித்த தேதி ஆகியவை நீல நிற சாப்பா குத்தியிருந்தன.
“பொங்கல் இருக்கா சார்?”
“பூரி இருக்கு சார்”
“பொங்கல்?”
“சப்பாத்தி இருக்கே”
“பொங்கல் இல்லையா?”
“சாயங்காலம் யார் சார் பொங்கல் சாப்புடுவா?”
இல்லை என்ற அபசகுண வார்த்தையைச் சொல்ல மாட்டாராமாம். “ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்”, என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.
சாப்பாட்டுப் புராணத்தில் சமஸ் குறிப்பிட்ட “ரயில் பயணமும், ஸ்ரீரங்கம் இட்லிப் பொட்டலமும்” அத்தியாயம் அங்கே நினைவுக்கு வந்தது. ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் கிடைக்கும் பிரசித்தி பெற்ற இட்லிப் பொட்டலம் பற்றின பதிவு அது. அத்தனை மிருதுவாய் இல்லாவிட்டாலும் அகில் வயிற்றில் இறங்குவதாய் இட்லி இருந்தால் போதும்.
, “இட்லி இருக்குமா?”
”இருக்கு சார்”
“ரெண்டு குடுங்க”
“நாப்பது ரூவா”
“என்னது? ரெண்டு இட்லி நாப்பது ரூபாவா?”
“ரெண்டு பாக்கெட்டுங்க. ஒரு பாக்கெட்ல நாலு இருக்கும்”
“ரெண்டு வராதா?”
“வராது”
“சரி, ஒரு பாக்கெட் குடுங்க”
வாங்கிக் கொண்டு பக்கத்தில் இருந்த காத்திருப்பு அறைக்குள் நுழைந்தோம். பிரித்துப் பிய்த்தால் ரப்பர் போல் இருக்கிறது இட்லி. தட்டையாய் பிய்க்கவியலாமல் கெட்டியாய் நான்கையும் சேர்த்து வளைத்துப் பிடித்தால் “ரிங் பால்” செய்துவிடலாம் போல கனமான ரப்பர்.
இதை மட்டும் அகில் வாய்க்குக் கொண்டு சென்றால் தெனாலிராமனின் பூனையாய் ஆயுளுக்கும் இட்லியைத் தொடமாட்டான் அவன்.
மேலே படத்தில் பொங்கும் சூர்யா கணக்காய் ”ஓங்கியடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா”, என்று விற்றவன் முகத்திலேயே அந்த இட்லிகளை எறியச் சென்றவனிடம், “பேக் பண்ணி வருது. நாங்க வாங்கி விக்கறோம். இதுல உங்களுக்கு கம்ப்ளெயிண்ட்டுன்னா புகார் மனு இருக்கு, எழுதித் தந்துட்டுப் போங்க. நாங்க ஆபீஸருக்கு அனுப்பிருவோம். அவங்க நடவடிக்கை எடுப்பாங்க”, என்றது எந்திரம்.
அந்த புகார் மனு எங்கே போகும் என்று தெரியாதா நமக்கு? இந்த மனசாட்சி இல்லாத ராட்சஷனுங்க பவுசு காலங்காலமாத் தெரிஞ்சும் இவனுங்க கிட்ட வாங்கினது நம்ம தப்பு என நொந்துகொண்டு திரும்பினேன்.
ஆமாம், இப்படியெல்லாம் வயிற்றில் அடிப்பவர்களுக்கு கருடபுராணத்தில் என்ன தண்டனை?
ஆமாம், இப்படியெல்லாம் வயிற்றில் அடிப்பவர்களுக்கு கருடபுராணத்தில் என்ன தண்டனை?
3 comments:
எல்லோருக்கும் இதே 'அனுபவம்' தான்...
இதொண்ணும் செய்யமுடியாது கிரி..சிரமம் பார்க்காம A2B போயிருக்கனும் நீங்க..
நன்றி தனபாலன் சார்....
நன்றி நட்டு.
யெஸ், நீங்க சொல்றது சரிதான்
Post a Comment