Showing posts with label 100th post. Show all posts
Showing posts with label 100th post. Show all posts

Mar 25, 2010

இது என் நூறாவது பதிவு!

கடந்த நான்கு மாதங்களில் எழுத்திற்கு இத்தனை இடைவெளி விட்டதில்லை நான்.

அலுவலகத்தில் என்னைத் தொடர்ந்து வாசிப்பவர்கள், "என்ன சார், கவுண்டமணி ஆர்டிகிளுக்குப் பிறகு ஒண்ணும் எழுதலையா?" எனக் கேட்கிறார்கள்.

"ஏதோ ஸ்பெஷலா உங்க நூறாவது போஸ்ட் இருக்கப் போகுது", நண்பர் எஸ்.எம்.எஸ்ஸில் உசுப்பேத்துகிறார்.

தொண்ணூற்றி ஒன்பது இடுகைகள் எழுதிய பின், நான் எழுதப் போகும் நூறாவது இடுகை பற்றி நினைத்தபோதே எனக்கு லேசாய் ஏதோ சாதித்த கர்வம். சரி, ஏதேனும் ரொம்ப ஸ்பெஷலாக எழுதுவோம் என கடந்த ஒரு வார காலமாய் தலையைச் சொறிந்தவாரே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

முதல்முறையாக ஒரு "சிறுகதை"?
கலக்கலாக ஒரு "கவிதை"?
சொந்தக்குரலில் ஒரு "பாடல்"?
புது முயற்சியாக ஒரு "தொடர்கதை"?
ஏதேதோ எழுதுகிறேன், கிழித்துப் போடும் அவசியமின்றி அவை கணினியின் recycle-bin-ற்கு செல்கின்றன.

இடையில் சென்னை வலைப்பதிவர்கள் பங்கேற்ற Indiblogger கூட்டத்தில் "நான் அடுத்து எழுதப் போவது என் செஞ்சுரி போஸ்ட்", என்கிறேன். கூடியிருந்த இருநூறு பேரும் பலத்த கரகோஷம் எழுப்பி என்னை மேலும் முடுக்கி விடுகிறார்கள்.

எல்லாவற்றுக்கும் சேர்த்துவைத்து இன்று காலையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் தன் கிடாரைக் கொண்டு என்னை ஓங்கி ஒரு அடி அடித்தார், ஆனந்த விகடனில் "நான் விஜய் ஆண்டனி ஆனது எப்படி" எனும் பேட்டியில்.

நான்காம் வகுப்பு படிக்கையில் அப்பா இறந்தது, படிப்பிற்காக இரண்டரை வருடங்கள் உறவினர்கள் வீடுதோறும் ஊர் ஊராக அலைந்து படித்தது, பின்னர் திருநெல்வேலியில் ஆறு வருடங்கள் பள்ளிப்படிப்பு, நெல்லை சேவியர் கல்லூரிப் படிப்பு, சென்னை லயோலாவில் விஸ்காம், பகுதி நேர ரெக்கார்டிங் ஸ்டுடியோ வேலை, பியானோ படிப்பு, சொந்தமாக ஸ்டுடியோ நிறுவியது, "சின்ன பாப்பா பெரிய பாப்பா" தொடருக்கு இசை, சுக்ரன் / டிஷ்யூம் படங்கள் மூலம் திரையில் அறிமுகம் என பன்னிரண்டு பாராக்களில் அவர் பயணம் குறித்து சொல்லியிருக்கிறார்.

விஷயம் அந்த பன்னிரண்டு பாராக்களில் இல்லை, பதிமூன்றாவது பாராவை உங்களுக்காக இங்கே தந்திருக்கிறேன், படித்துப் பாருங்கள்!


"நான் விஜய் ஆண்டனி ஆனது எப்படி?" என்று கேட்டதால், "இப்படித்தான் ஆனேன்" என்று சொல்லவே இவற்றை எல்லாம் ரீ-வைண்ட் செய்தேன். மற்றபடி எதையும் சாதித்துவிட்டதான பெருமிதம் ஒரு சதவிகிதம்கூட என்னிடம் இல்லை. ஒரு 'நாக்க முக்க'வும், ஒரு 'ஆத்திசூடி'யும், ஒரு 'அழகாய் பூக்குதே'வும் போட்டுவிட்டு நான் ஏதோ பெரிய ஆள் என நினைக்கவில்லை. உள்ளத்துக்கும் உலகத்துக்கும் உண்மையாக வாழ்ந்தால் அதுதான் வெற்றி!




அவ்வளவே.....! இங்கு முத்தாய்ப்பாய் எழுத எனக்கு ஒன்றுமில்லை. அவரே நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டார்.
Related Posts Plugin for WordPress, Blogger...