Mar 9, 2010

சிறப்பு ரயில்களின் சிறப்பு


நீங்கள் வழக்கமான பாண்டியன், நீலகிரி என பயணிக்காமல் கடைசி நேர அவசரத்தில் டிக்கெட் கிடைத்தது என சிறப்பு ரயில்களில் பயணம் செய்பவர் என்றால் இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.

வார இறுதிப் பயணமாக எங்கள் அலுவலகக் குழுவை சேர்ந்த இருபது பேர் கோடைக்கானலை சுற்றிவிட்டு நேற்று மாலை சென்னை ரயிலைப் பிடிக்க கொடை ரோடு ரயில் நிலையம் வந்தோம். நான் எதிர்பார்த்ததற்கு மாறாக ரயில் நிலையம் வெறிச்சோடி இருந்தது. மருந்திற்கும் ரயில்வே ஊழியர் ஒருவரும் தென்படவில்லை. தண்ணீர் வாங்க வேண்டுமென்றாலும் மெயின் ரோடுக்குச் செல்லவேண்டும், கடைகள் ஒன்றும் உள்ளே இல்லை. ஆறு முப்பது மணிக்கு எங்களுக்காக நாகர்கோவில் சிறப்பு ரயில் வரவேண்டும்.மணி ஆறாகி இருந்தது, 

ஒரு சர்வதேச சுற்றுலாத் தலத்தை, மாநிலத்தின் தலைநகர் மற்றும் நாட்டின் தென்கோடியோடு இணைக்கும் அந்த ரயில் நிலையத்தில் எந்த அறிவிப்புப் பலகையும் இல்லை. எந்த பிளாட்பாரத்தில் வண்டி வரும், சரியான நேரத்திற்கு வருமா, எங்கள் S9, S10 பெட்டிகள் எந்த இடத்தில் வந்து நிற்கும் என்ற கேள்விகளுக்கு எழுத்துப் பூர்வ அறிவிப்பு ஏதுமில்லை. கேட்ட கேள்விக்கு டிக்கெட் விற்றுக்கொண்டிருந்த அன்பர், ஸ்டேஷன் மாஸ்டரை பார்க்கச் சொல்லி உள்ளே அனுப்பினார். 

ஸ்டேஷன் மாஸ்டர் அறையை அடையாளம் காண ஒரு பெயர்ப்பலகை இல்லை. திடீரென அங்கு  பிரசன்னமான கொடியசைக்கும் ஊழியர் அங்கு இருந்த அறை ஒன்றின் உள்ளே சென்று வந்து, "டிரெயின் இருபது நிமிஷம் லேட், இப்போதான் மதுரை வரப்போவுது டிரெயின்,  ஸ்பெஷல் டிரெயினுக்கு எல்லாம் எங்களால சரியா சொல்ல முடியாது,  பெட்டி பொசிஷன் மதுரைய தாண்டினாதான் எங்களுக்கு தெரியும்", என்றார்.  
கொஞ்சம் கழித்து அவரிடமே விசாரித்ததில், மதுரையைத் தொடர்பு கொண்டுவிட்டு, "கடைசில நில்லுங்க, அங்கதான் S9, S10 எல்லாம் வரும் என்று உத்தேசமாகச் சொன்னார். எட்டு இளம் பெண்கள், ஐந்து வயதான அம்மாக்கள், ஆறு ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை  என சென்றிருந்த எங்களுக்கு ரயில் நிற்கப் போகும் அந்த இரண்டு நிமிடங்களில் எல்லோரும் ஏறிவிடுவோமா  என பதட்டமாக இருந்தது.வண்டி அரைமணித் தாமதத்திகுப் பின் வந்து ஏறக்குறைய அவர் சொன்ன இடத்தினருகே பெட்டிகள் நின்று ஒருவழியாக எல்லோரும் வண்டியேறிப் பெருமூச்சு விட்டோம்.

உங்கள் நன்மைக்கு சில டிப்ஸ்!

1) நீங்கள் ரயிலில் வழக்கமாகப் பயணிப்பவர் இல்லை ரயில் பெட்டிகளைக் கண்டுபிடிப்பது எனக்கு சுலபம் இல்லை என்பவர் எனில், இது போல் சிறப்பு ரயில்களில் பதிவு செய்யாதீர்கள். முக்கிய ரயில்களில் பயணம் செய்ய முயற்சி செய்யுங்கள். 

2) கடைசி நேரத்தில் உங்களுக்கு சிறப்பு ரயிலில்தான் டிக்கெட் கிடைத்தது எனில், இது போன்ற வனாந்திர ரயில் நிலையங்களைத் தவிர்த்து அருகில் இருக்கும் சந்திப்புகளில் (Junction) இருந்து பயணம் செய்யுங்கள்.

எங்கள் குழுவில் ஓரளவு விவரப் புலிகள் இருந்ததனால் மற்றவர்களை வழி நடத்த இயன்றது. ரயில்களில் புதியதாய் பயனிப்பவர்களாக இருந்தால்? . 


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...