Sep 14, 2010

போனாளே பொன்னுத்தாயி....!!

பதின்மூன்று வயதில் தமிழ்த்திரையில் முதற்பாடல். இசைஞானியின் இசையில், கே.ஜே.யேசுதாசுடன் டூயட் பாடும் வாய்ப்பு. படம் "நீதிக்குத் தண்டனை". படத்திற்கு வசனகர்த்தா கலைஞர் அவர்கள். மீசைக்கவிஞனின் பாடல் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா". எத்தனை பேருக்கு இப்படியொரு பாக்கியம் வாழ்க்கையில் இத்தனை சீக்கிரம் அமையும்?


இருபத்தைந்து வயதிற்குள் தேசிய விருது பெரும் வாய்ப்பு. பாரதிராஜா படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து அவர்கள் எழுதிய பாடல். இந்தியப் பாடகிகளில் எத்தனைப்பேர் இளம் வயதில் இச்சாதனை புரிந்துள்ளனர்?


எல்லாமே சீக்கிரம்தான் ஸ்வர்ணலதாவுக்கு! மரணமும் கூட அவரை நீண்ட நாள் காத்திருக்க விட்டு வைக்கவில்லை.


பி.சுசிலா அவர்களுக்கு ஒரு எஸ்.ஜானகி போல, அடுத்த தலைமுறையில் கே.எஸ்.சித்ரா அவர்களுக்கு ஸ்வர்ணலதா. ஒரு அற்புதமான வெர்சடைல் பாடகி. தமிழில் ஒரு பாடகிக்கான அத்தனை இலக்கணங்களும் பெற்று நுழைந்த கடைசிப் பாடகி. குரல், உச்சரிப்பு, பாவம் (bhavam) என அத்தனையையும் தமிழில் ஒரேயோருவரிடம் பார்ப்பது மிக அரிது. ஸ்வர்ணலதா Queen of all sorts of music.

"மாலையில் யாரோ" போன்ற மெலடிகளாகட்டும், "முக்காலா முக்காப்லா" போன்ற மேற்கத்திய பாணிப் பாடல்களாகட்டும், ஆர்ப்பாட்டமான "ஆட்டமா தேரோட்டமா" போன்ற பாடல்களாகட்டும் அல்லது உசிலம்பட்டி பெண்குட்டி போன்ற ஐட்டம் நம்பர் பாடல்களாகட்டும் தன் தனி முத்திரையை அவற்றில் பதித்தவர் ஸ்வர்ணலதா.



தேசிய விருது பெற்ற போறாளே பொன்னுத்தாயி பாடலை ஒலிப்பதிவில் ஸ்வர்ணலதா அவர்கள் பாடி முடித்ததும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கதறி அழுதாராம். அத்தனை உருக்கமும் உணர்ச்சிப் பூர்வமும் நிறைந்த பாடல். நம்மிடையே அவர் இப்போது இல்லை என்பதை நம்பக் கடினமாகத்தான் இருக்கிறது.

இவர் பாடினதில் என் பட்டியலில் டாப் 3 - "என்னுள்ளே என்னுள்ளே, எவனோ ஒருவன், என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட" ஆகியவை. இப்படிப்பட்ட பாடல்கள் இனி ஒலிப்பேழைகளில் மாத்திரமே கேட்க சாத்தியம் என்பது தமிழ்த் திரையிசை உலகின் துரதிருஷ்டம்.

ஸ்வர்ணலதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
.
.
.

2 comments:

virutcham said...

இவரது மரணமும் முரளியின் மரணமும் ஜீரணிக்க முடியாமல் தொண்டையில் சிக்குகிறது. சில நாட்கள் முன் தான் எங்கே முரளி என்று ஒருவர் இருந்தாரே இப்போ அட்ரசே இல்லையே என்று நினைத்தால் ஓரிரு நாளில் கதை அல்ல நிஜத்தில் ஒரு குழந்தை சிரிப்புடன் வந்தார். அடுத்த சில நாளில் இல்லை.
அதே போல் இப்போ தொ.கா தினம் தினம் எத்தனையோ பாடகர்கள் வருகிறார்கள். எங்கே இந்த சொர்ணலதா என்று நினைத்தால் சில நாட்களிலேயே ஆளே இல்லை.
எனக்கு இது பெரும் உறுத்தல்.

Hari Hara Sundar said...

I liked her voice in the songs “Naan Erikarai Mela Ninu” from Chinnathai and “Andhiyela Vaanam” from Chinnavar. Truly fresh voice in Maestro’s music….Everlasting voice and tune!

Related Posts Plugin for WordPress, Blogger...