சிறப்புப் பதிவர்: நட்பாஸ்
"கை அம்பு அற்று உடைவாளினும் கை வைத்தான்," என்பான் கம்பன். நமது நண்பர் கிரியின் "கறை (ரொம்ப) நல்லது" பதிவைப் படித்ததும் எனக்கும் புத்தகங்களை அள்ளும் ஆசை வந்தது என்கோ! - சத்தமில்லாமல் அவசர செலவுக்குப் பதுக்கி வைத்திருந்த ஐநூறை ஆட்டைய போட்டுக் கிளம்பினேன், கிழக்கு நோக்கி.
போகும் வழியில் கிரிக்கு ஒரு போன், "சார், நீங்க நேத்துப் போனீங்களே, அந்தக் கடைக்கு எப்போ லஞ்ச்?"
"ஜி, உங்களால ஒரு உதவி வேணுமே..." என்று தயங்கினார் கிரி, "நீங்க உதவி செய்ய முடியுமா சொல்லுங்க, உங்க கேள்விக்கு பதில் சொல்றேன்"
எப்படியெல்லாம் மிரட்டுறாங்க!- "உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கேன் சார்."
"இல்லை, நம்ம நண்பர் ஒருத்தர் பெங்களூரில இருக்கார். அவருக்கு சில புத்தகங்கள் வேணுமாம், நீங்க இப்ப போனா சரியா இருக்கும். அவரோட போன் நம்பர் தரேன், நீங்க கிழக்குல இருந்து அவரைக் கூப்பிட்டு பேசுங்க, லிஸ்ட் தருவார்"
"என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை!"- சொல்லவில்லை, நினைத்துக் கொண்டேன்.
கிரியின் வேண்டுகோள் என் செல்போன் பாலன்சைப் பதம் பார்ப்பதாக இருந்தது. பத்து ரூபாயை வைத்து இந்த வார இறுதியை ஓட்டி விடுவதாக கணக்கு போட்டு வைத்திருந்தேன்- மளிகை கடை லிஸ்ட் போல் பெங்களூர்காரர் பட்டியல் போடப் போகிறார் என்ற நினைப்பில் ஒரு லெவன் ஏவை போக விட்டேன். இந்த மாதிரி சமயங்களில் ஆற அமர ஆத்திரம் தீர யோசிக்க வேண்டும், இல்லையா?
"அற்றவன் தலை மீதோங்கி...
மின்னோடும் இடியினோடும்
சுற்றிய புயல் வீழ்ந்தென்ன..." என்று கம்பன் இவ்வகையான நிலைமையை உத்தேசித்தே பாடியிருப்பான் என்பதில் சந்தேகமில்லை.
---
ஆனால் சும்மா சொல்லக்கூடாது-கிழக்கு பதிப்பகத்துக்கு ஏதோ வேண்டுதல் போலிருக்கிறது. எந்தக் குறையும் சொல்ல முடியாத தரத்தில் உள்ள புத்தகங்களை ஐந்துக்கும் பத்துக்கும் அள்ளித் தருகின்றனர். நான் பெங்களூர்காரருக்குப் போன் பண்ணி அவருக்குத் தேவையான புத்தகங்களை எடுத்துக் கொண்டு பில் போடப் போனால், அங்கே மூன்று பேர் புத்தக மலைகளை கையில் வைத்துக் கொண்டு நின்றனர்.
இங்கே சஞ்சீவி மலையைத் தூக்கிய கோலத்தில் ஹனுமனை வர்ணித்தால் நன்றாக இருக்கும்- ஆனால் நாஞ்சில் நாடனோ ஜெயமோகனோ எந்த ஒரு கதையிலோ கட்டுரையிலோ ஓரிரு முறைகளுக்கு மேல் கம்ப ராமாயணத்தை எடுத்து விடுவதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொண்டு சும்மா இருக்கிறேன், சாரி, வாளாவிருக்கிறேன்.
எனக்கு முன் நின்றிருந்தவரைப் பார்த்து நட்பாக சிரிக்கிறேன், "லைப்ரரிக்கா சார்?"
"இல்லீங்க, வாங்கிப் போட்டா அது கெடக்கும் வீட்ல. வேணுங்கறப்ப படிச்சுக்கலாம்"
எனக்கு இது தோன்றவே இல்லையே- என் கையில் உள்ள பத்தே பத்து புத்தகங்களை மெல்ல மறைக்கிறேன்.
"நீங்க புக்கு வாங்கலையா?"
என் கையில் உள்ளவை புத்தகங்களாகத் தெரியவில்லை போல- இருபதுக்கு மேல்தான் ஒன்று இரண்டு என்று எண்ணுவாராயிருககும்.
"இல்லை சார். புக்கை உள்ள கொண்டு போனாலே வீட்ல வையறாங்க"
நண்பர் சிரிக்கிறார்- "அதுக்காக நாம புக்கு வாங்காம இருக்கலாமா சார்? என் வீட்ல பாருங்க, நாம இல்லாதப்ப சத்தமில்லாம அவ்வஞ்சு புக்கா எடைக்குப் போட்டுடறாங்க!"
"அடப்பாவி!" என்று நினைத்துக் கொண்டேன், "நீ தராசோடு அல்லவா வந்திருக்க வேண்டும்!"
"இப்ப பாருங்க, இந்த புக்கு எல்லாத்தையும் ஒரு பெரிய அட்டைப் பெட்டில போட்டு சீல் வெச்ச மாதிரி டேப் ஒட்டி மேல போட்டிருவன்ல- என்ன செய்யறா பாக்கறேன்!"
கிழக்கு மக்களை ஒரு மார்க்கமாத்தான் செலுத்திக் கொண்டிருக்கிறது என்று அவதானித்துக் கொண்டிருக்கும்போது ஒரு இனிய பெண் குரல்- "சார், இங்க ஜெயமோகனோட உலோகம் கிடைக்குமா?"
அதுக்குள்ளே உலோகம் ஸ்க்ராப் ஆயிடுச்சா என்று திடுக்கிட்டேன். நல்ல வேளை, எத்தனை கைகள் தொட்டாலும், எவ்வளவு புழுதி பட்டாலும், கறைபடாத அட்டைகள் நம்ம வாத்தியாருக்கும் ஆசானுக்கும்- அவர்களின் எந்த ஒரு புத்தகத்தையும் அங்கே காணோம்.
ஆனாலும் கண் சிவந்த அந்த அம்மணிக்கு ஆசை விடவில்லை- "அவரோட அங்காடித் தெரு இருக்குங்களா?"
"இன்னும் வரலைம்மா. சொல்லுங்க, ஆடர் பண்றோம்- ஒன் அவர்ல எழுதித் தந்திடுவார், எங்களுக்கு அச்சடிக்கதான் கொஞ்ச நாள் ஆவும்!"
"இணையத்துல ஏத்திட்டாருங்களா?" கண் சிவந்த அந்த அம்மணி கறை படிந்த காகிதங்களை விசிறி போல் விரித்தார்- "என் மவன் பிரிண்ட் எடுத்துக் குடுத்திருவான்!"
"அப்படி எடுத்த பிரிண்ட் அவுட்டுங்க தானுங்கலாம்மா நீங்க வெச்சிருக்கிற பேப்பரு?"
கண் சிவந்த அம்மணி, தன் கையில் இருந்த கறை படிந்த காகிதங்களைக் கண்ணில் ஒற்றிக் கொண்டார்- அவை இன்னும் கறையாயின.
"இந்த வாரம் முழுக்க ஒரே அழுவாச்சிங்க," கண் சிவந்த அம்மணியின் கண் இன்னும் சிவந்து கன்னங்களைக் கண்ணீரால் உழுதது. குழறும் குரலில் தொடர்ந்தார், "பீம் சிங் படம் மாதிரி இருக்குங்க அவரோட ஒவ்வொரு கதையும்- அறம்ல ஆரம்பிச்சது, எவ்வளவு அழுதாலும் ஆறல. அதான் வேற ஏதானும் பெருசா புக்கு இருக்கான்னு பாக்க வந்தேன்."
"விஷ்ணுபுரம்னு ஒரு பெரிய புக்கு இருக்குங்க. திருவிளையாடல் மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன், நீங்க வேணா அதைப் படிச்சுப் பாருங்களேன்!"
கண் சிவந்த பெண்மணி மூக்கு சிந்திக்கொண்டே அகன்றார்.
அதற்குள் என் முறை வந்திருந்தது.
சந்தேகமாக ஒரு குரல், "சார், இது அந்த தேகம்தானா?"
மீசைகூட முளைக்காத ஒரு விடலைப் பையன்- ஒரு தடிமனான புத்தகத்தை முடிந்த அளவுக்கு ரகசியமாக மறைத்திருந்தான்.
"எந்த தேகம்?"
"அதுதான் சார் அந்த தேகம்!"
"ஓ! அந்த தேகமா! இல்லப்பா, இது தேகம் யாவும். இது வேற அது வேற"
"தேகம் யாவுமா?" கண்கள் விரிய புத்தகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான்.
சொல்லுங்கள் நண்பர்களே, தேகம் பெரிசா, தேகம் யாவும் பெரிசா?
பெங்களூர்க்காரர் அதிகம் செலவு வைத்திருக்கவில்லை. யுவன் சந்திரசேகரின் முன்னூறு ரூபாய் சிறுகதைத் தொகுப்பையும் சேர்த்து ஏழு புத்தகங்கள் மொத்தமும் நூற்று ஐம்பத்து ஐந்து ரூபாய்தான். திருப்தியாக பஸ் பிடித்து ஆபிஸ் திரும்பினேன்.
நேரம் கிடைத்தால் நீங்களும் இந்த வாரம் கிழக்கு கிளியரன்ஸ் சேல் போய்ப் பாருங்கள்- காசா பணமா!
5 comments:
கிரி , யார் நட்பாஸ் , அட்டகாசம் :)
@ அரங்கசாமி
இதென்ன வம்பா இருக்கு. அரங்கசாமி சார்கிட்ட ஜெயமோகன் யாருன்னு கேட்டாப்போல இப்படி கேட்டுப் போட்டீங்க.. என்னைப் பாத்து என் குருநாதர், என் இஷ்டதெய்வம், என் குலதெய்வம், என் காட்பாதர்.....இப்படி எல்லாமுமான நட்பாஸ் யாருன்னு கேட்டுட்டீங்க. ரெம்ப தப்பு சார். இதுலயும் அவர் உங்க ஊர்க்காரரு. கோணியம்மன் உங்கள சும்மா விடமாட்டா.
@giri சார், நான் நல்லா இருக்கறது பிடிக்கலையா!
@ Arangasamy K.V நான்தான் சார் நட்பாஸ் :) நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு நன்றி!
- பாஸ்கர்
அவர் பிளாகை பாத்துட்டேன் , தொடர்ந்து படிப்பவர்தான் (சுஜாதா போஸ்ட்டிலிருந்து :) )
பாஸ்கர் மெய்ல் பண்ணுங்க , arangasamy at gmail
ஐயோ அதை இன்னுமா நினைவு வெச்சிருக்கீங்க?
நானே மன்னிப்பு கேட்டு டெலிட் பண்ணி மறந்துட்டேனே!
நீங்களும் மறந்துடுங்க, ப்ளீஸ். இன்னும் எனக்கு அது உறுத்தலா இருக்கு :(
Post a Comment