Mar 9, 2011

ஸ்வாமி (சிறுகதை)


சச்சினை விழுங்கிவிடுவது போல அந்தப்பெண் பார்த்துக் கொண்டிருந்தாள். வரைந்தவன் ஒரு தேர்ந்த கலைஞன் என எண்ணிக்கொண்டேன். அச்சுஅசல் ஒரு புகைப்படம் போலவே வண்ணங்களைக் குழைத்து சச்சினைத் தீட்டியிருந்தான்.

"ஹவ் மச்?", கேட்டவளிடம் பான்பராக் வாயைத்திறந்தால் அவள் முகத்தில் உமிழ்ந்துவிடும் அபாயம் கருதி ஒரு நிமிடம் என ஒற்றைவிரலைக் காட்டிவிட்டு வாயிலிருந்ததை உமிழத் திரும்பினான் அவன்.  அருகில் "போட்டோ வித் சச்சின் - Rs.50/-" என எழுதியிருந்தது.

"சித்தப்பா, ஒரு போட்டோ?", ஆதித்யா கையைப் பிடித்து இழுத்தான்.

"மேட்ச் ஆரம்பிச்சிடும். மொதல்ல கையில டிக்கெட் வாங்கிடலாம் வா"

கனஜோராய் இருந்தது கூட்டம். பட்டொளிவீசிப் பறந்த மூவர்ணக் கொடிகள், பீப்பீ ஓசைகள், வண்ணக் கலவைகள் தெளித்த முகங்கள், ஏதேதோ கோஷங்கள். எல்லாவற்றிலும் நீந்திக்கொண்டு அந்த சின்னவாசலில் என் பெயர் சொல்லி அலுவலகஅறை செல்லும் வழி கேட்டேன். "ரத்ன வெங்கடேஷ்'னு ஸ்டேடியத்துல இருப்பாரு அவரைப் பாரு, சீட் அரேன்ஜ் பண்ணித் தருவாரு" என பாலு சொல்லியிருந்தான்.

அத்தனை பிரசித்தி பெற்ற அந்த மைதானத்தின் அலுவலகஅறை சொல்லி வைத்தாற்போல் கலைந்து கிடந்த காகிதக் குப்பைகளுக்கு இடையே இருந்தது. அங்கு அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் அத்தனை கூச்சல்களுக்கும் இடையே கருமமே கண்ணாக ஏதோ குறுக்கெழுத்துப் போட்டிக் காகிதத்தை நிரப்பிக் கொண்டிருந்தார்.

"ரத்ன வெங்கடேஷ்?"

"ஹரியா?", எனக் கேட்டுவிட்டு என் தலையசைப்புக்கு "கம் கம். அவரு பருதாரே. யு ஸிட்!", என நாற்காலியைக் காட்டிவிட்டு மீண்டும் குறுக்கெழுத்தில் மூழ்கினார். இருவரும் உள்சென்று அவர் முன் அமர்ந்தோம். அந்த அறையை நோட்டம் விடலாம் என்று திரும்பிய முதல் பார்வையிலேயே அவர் இடறினார். கருப்பு வெள்ளைப் படம் கலரில் மாற்றப்பட்டு சட்டத்திற்குள் சிரித்தவாறு ஒளிந்திருந்தார்.

"இவரு...." என நான் இழுக்க, அசுவாரசியமாகத் தலையைத் திருப்பிப் பார்த்து, "ஸ்வாமி", என்றார்.

நான் அவரை நேரில் பார்த்தபோது இன்னும் வயதான ஸ்வாமியாக இருந்தார் அவர். எத்தனை யோசித்தும் நான் நேரில் பார்த்த ஸ்வாமியின் முகம் என் நினைவுக்கு கச்சிதமாக வர மறுத்தது.

ணிந்தர்சிங் பந்தை மார்ட்டின் க்ரோ எதிர்கொண்டிருப்பதாக வர்ணனையாளர் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் அந்த கேண்டீனுக்குள் நுழைந்து அமர்ந்தோம். கல்லூரிக்கு அது லஞ்ச் நேரம்.  

எங்கள் கல்லூரி காண்டீன் மிகச் சிறியது. காண்டீன் என்று பெயருக்கு ஒன்று இருக்க வேண்டும் என்ற ஏற்பாட்டில் அமைந்த ஒன்று. டிபன், சாப்பாட்டிற்கு என ஒரு மூலை, காபி பிஸ்கட்டுகளை விற்க ஒன்று, கொஞ்சம் கேக் வகைகள், நொறுக்குப் பண்டங்கள் என ஒரு மூலை. ஆயிரத்து சொச்ச பேர் படிக்கும் அங்கே இருபதுக்கு இருபதில் சின்னதாய் பத்து பன்னிரண்டு பேர் மட்டும் அமர ஸ்டூல்கள் போட்டு மற்றவர்கள் இடுக்கி நின்றுகொண்டோ அல்லது வெளியில் நின்றோ பசியாற என அமைந்திருந்தது.

அந்த சல்வார் பெண்ணின் முகத்தில் கிட்டத்தட்ட தன் முகம் புதைத்துப் பேசிக்கொண்டிருந்த அந்த ஜீன்ஸ் பையன் அங்கிருந்த மற்ற யாருக்கும் கேட்காது என்ற நினைப்பில் கிசுகிசுத்துக் கொண்டிருந்தது அங்கிருந்த இரைச்சல்களையும் தாண்டி எல்லோருக்கும் கேட்டது.

எனக்கும் ஸ்ரீவத்சனுக்கும் அரிதாகவே கல்லூரி கேண்டீனைப் பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. கல்லூரியை விட்டு வெளியே வந்தால் அந்த மல்லேஸ்வரத்தில் நல்ல சைவ சாப்பாட்டைத் தேடி அலையும் அவசியம் இல்லாமல் தடுக்கி விழுந்தால் ஒரு அய்யர் மெஸ் கிடைக்கும். மாம்பலம் அய்யர் ஒருவர் நடத்தி வந்த ஹோட்டல்தான் எப்போதும் எங்கள் அன்னசாந்தி நிலையம்.  அந்த ஹோட்டலை ஒட்டிய சந்து ஒன்றிலேயே ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து நாங்கள் இருவரும் தங்கியிருந்தோம். 


"ஏனு பேக்கு?",  கேட்ட ஸ்ரீவத்சனை இரண்டு நிமிடங்கள் வெறுமையாக ஒரு இதழ் விரித்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அந்தப் புன்னகைக்குப் பின்னால் என்ன அர்த்தம் என யூகிக்க இயலவில்லை. அங்கே அந்தக் கல்லூரியின் எல்லாப் பகுதிகளிலும் அவரைப் பார்க்கலாம். எப்போதும் ஏதோ நடை நடப்பதையே தவம் போலச் செய்து கொண்டிருப்பார். விடுவிடுவென ஒரு குழந்தையை ஒத்த நடை. நடப்பதைத் தவிர வேறெந்த செயல்களிலும் அவர் தீவிரம் காட்டி யாரும் பார்த்ததில்லை.

வயது சுமார் எண்பதை நெருங்கியிருக்கலாம் போலத் தோற்றம். நெடுநெடு உயரம், மாநிறம், நாயகன் படத்தில் வரும் வயதான கமல்ஹாசன் போல வெளுத்தும் கறுத்தும் தூக்கி வாரப்பட்ட தலைமுடி, எப்போதும் ஏதோ பரபரப்பாக இருப்பதுபோல் எங்கும் ஒரு பார்வை, கால்சட்டை எந்த நிறத்தில் அணிந்தாலும் அதற்கு எப்போதும் வெள்ளை மேல்சட்டை, கையில் ஏதோ ஒரு ஒற்றைப் புத்தகம், பாக்கெட்டில் ஒரு ஹீரோ பேனா. இதுதான் அவர்.

மிகவும் அபூர்வமாகவே அவர் கையிலிருந்து பணம் தந்து சாப்பிடுவார். பெரும்பாலான நேரங்களில் அருகில் வந்து அமர்ந்தால் அவருக்கும் சேர்த்து ஆர்டர் செய்வதை மாணவர்கள் ஒரு வழக்கமாகவே வைத்திருந்தார்கள்.

"பாப்கார்ன்", என்று ஸ்ரீவத்சன் கைகளில் இருந்த பொட்டலத்தைச் சுட்டிக் காட்டினார்.  பற்கள் இருக்கின்றனவா என சோதிப்பது போல அவர் வாயை உற்று நோக்கினான் ஸ்ரீ. அதைப் புரிந்து கொண்டவர் போல, "ஐ ஹாவ் ஆல் மை டீத். ஆல் மை தர்ட்டி-டூ. பட் ஆல் டூப்ளிகேட்", என கெக்கலித்துச் சிரித்தார்.

"கொடுதியா?"

ஒரு பேப்பர் தட்டை அவர் பக்கம் நகர்த்தி அதில் மீதம் வைத்திருந்த பாப்கார்னை கொட்டிவிட்டு டீ வாங்க எழுந்து சென்றான் ஸ்ரீ. குழந்தையின் ஆர்வத்தோடு பாப்கார்னை நிதானமாக ரசித்துத் தின்றார் அவர். தின்று கொண்டே ரேடியோ வர்ணனையை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். பக்கவாட்டில் அமர்ந்திருந்த ஒருவனிடம், "மேட்ச் எங்க நடக்குது தெரியுமா?", என்றார் கன்னடத்தில்.

"நம்ம ஊர்லதான்", நான் சொன்னேன்.

"ஹெசரு ஹேளு"

"ஹரி.... ஹரிராம் "

"நோ..நோ... நின்ன ஹெசரில்லா, ஸ்டேடியம் ஹெசரு ஹேளு", டீ வடையுடன் ஸ்ரீ வந்து அமர்ந்தான். கொஞ்சம் யோசித்துவிட்டு "ஐ டோன்ட்  ரிமெம்பர்", என்றேன்.

"ஓகே", என்றுவிட்டு மீண்டும் வர்ணனையில் மூழ்கினார். ஸ்ரீயை நோக்கி "டூ யு ஹாவ் மனி?", என்றார்.  என்னையும் நோக்கி ஒரு ஆர்வமான கேள்வியுடனான ஒரு பார்வை. ஒருவர் முகத்தை ஒருவர் மாற்றிமாற்றிப் பார்த்துக் கொண்ட எங்கள் அமைதியைப் பார்த்து, "தமிழா?", என்றார்.

"ம்ம்"

"பணம் கேக்க மாட்டேன். கையில இருக்கா சொல்லு"

"இருக்கு. நூறு ரூபாய்"

"நீ பைசாக்காரன். சேர்த்து வெச்சுக்கோ. வயசானா ஹெல்ப் பண்ணும்", என்னைப் பார்த்து, "என்ன படிக்கறீங்க?" எனக் கேட்டார்.

"காமர்ஸ்"

"அது மட்டும் போதாது இப்போ. மேலே மாஸ்டர்ஸ் பண்ணனும்"

"நான் சி.ஏ. சேர்த்து படிச்சிக்கிட்டு இருக்கேன்"

"வெரிகுட்! மெட்ராஸா?"

"இவரு மெட்ராஸ், நான் விழுப்புரம்", என்றேன். "இவரு" என நான் சொன்னபோது என்னையறியாமல் அதில் கன்னட பதம் புகுந்தது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. விழுப்புரம் என்று சொன்னேனே தவிர உளுந்தூர்பேட்டை தாண்டி உள்ளே கிராமம் எனக்கு. கார்ப்பரேட் கம்பெனிகள் நுழைந்திராத தூய மனித விவசாயம், சுமாரான போகம் என கிராமத்து வாழ்க்கை. எங்கள் குடும்பத்தில் பட்டம் படிக்கவென ஊரைவிட்டு வெளியே வந்த முதல்ஆள் நான். உளுந்தூர்பேட்டையை அவர் அறிவாரா என நான் அறியேன். விழுப்புரமே அவருக்குத் தெரியுமா என்று எனக்கு சந்தேகம். பாப்கார்னைத்  தின்று முடித்து எழுந்து கையுயர்த்தி ஒரு சலாம் வைத்துவிட்டு போய்விட்டார்.

"என்னவோ போ", என்றான் ஸ்ரீவத்சன்.

"யாருடா அவரு? இங்க எதுவும் வேலை செய்யறா மாதிரி தெரியலை. கரெஸ்பாண்டன்ட்டுக்கு தெரிஞ்சவரோ?"

"ரொம்பவே தெரிஞ்சவரு"

ஸ்ரீ வாயைத் திறக்க எத்தனித்தபோது கேண்டீனை ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் எங்கள் அருகிலேயே வந்து அமர்ந்து கொண்டார் அவர். எங்கள் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. ரேடியோவில் கதறிக் கொண்டிருந்த கிரிக்கெட் வர்ணனையை மீண்டும் கவனமாகக் கேட்க முயன்று கொண்டிருந்தார்.

என் பக்கம் திடீரென திரும்பி  "மை நேம் இஸ் ஸ்வாமி, அது தெரியுமா?", நான் உதடு பிதுக்கி இல்லை என்றேன். அவர் ஆச்சர்யம் அடைந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. "இந்த காலேஜ் முழுக்க எல்லாரும் பேசிக்கற என் கஷ்டம் பத்தின கற்பனைக் கதை பத்தி தெரியுமா உனக்கு?"

"இல்லை. நான் கொஞ்சம் புதுசு இந்த காலேஜுக்கு. நடுவுலதான் வந்து சேர்ந்தேன்"

"யு வேர் ஆஸ்கிங் அபவுட் மி டு யுவர் ஃபிரெண்ட். எல்லோரும் என் குடும்பம் பத்தி தப்பா சொல்லுவாங்க. என் மகன், மனைவி உட்பட எல்லோரும் என் அசெட் எல்லாத்தையும் என்கிட்ட இருந்து எழுதி வாங்கிட்டு என்னை கண்டுக்கறது இல்லைன்னு சொல்லுவாங்க. டு யு தின்க் அயம் மேட் டு டூ ஆல் தட்? டோன்ட் பிலீவ் இட்", தெள்ளத் தெளிவாகப் பேசினார். அவர் ஒரு மனநிலை தவறிய ஆசாமி என இதுவரை நினைத்திருந்தேன்.

"நீங்க பேசிக்கறதை விட அதிக கஷ்டம் என் வாழ்க்கைல இருக்கு. ஆனா நீங்க பேசிக்கற கஷ்டம் எதுவும் என் வாழ்க்கைல இல்லை. நான் உங்களோட எல்லாம் ஜோவியலா இருக்க உங்களோட சாப்பிடறேன். அவ்வளவுதான். ஓகே யங் மென்? உங்க நேரத்தை நான் வீணடிக்க விரும்பலை. பாக்கலாம்.", எழுந்துவிட்டார்.

அவர் நகர்ந்துவிட்டதை உறுதி செய்து கொண்டு, "யார்றா அவரு?", மீண்டும் நான்.

"இந்த காலேஜோட ஸ்தாபகர்கள்ல ஒருத்தர்"

"ஸ்தாபகர்?"

"ஃபவுண்டர்"

"அடக்கடவுளே! அப்புறம் எதுக்கு இப்படி திரியறாரு?"

"விதி! அதான் சொன்னாரே. தான் படாத கஷ்டம், படற கஷ்டம்னு எல்லாம். உண்மைய ஒத்துக்க அவருக்கு வெக்கம். அதனால ஏதோ சொல்லிட்டுப் போறாரு. நிஜமாவே அவர் வீட்டுல எல்லோரும், அவர் ப்ரெண்ட்ஸ், அவரை உபயோகப்படுத்திக்கிட்ட இந்த மானம்கெட்ட சொசைட்டி எல்லாமே இப்போ அவரை கைவிட்டுடுச்சி அப்படிங்கறதுதான் நிஜம். அவர்கிட்ட இப்போ ஒண்ணுமில்லை. அவர் சாப்பாட்டுக்குக் கூட கஷ்டப்படறாருன்னு சொல்றாங்க. இங்க காலேஜ்ல அவர் நடந்துக்கற முறையை பார்த்தா அதை நம்பாம இருக்க முடியலை. இருந்தாலும் எவ்வளவு தூரம் உண்மைனும்  தெரியலை."

"கொடுமைடா"

"டைம் கிடைச்சா நம்ம காலேஜ் லைப்ரரில சில்வர் ஜுபிலி சோவனிர், பழைய ஜர்னல் எல்லாம் படிச்சிப்பாரு. இவர் எழுதின ஆர்ட்டிகிள்ஸ், இவரைப் பத்தி மத்தவங்க எழுதின ஆர்ட்டிகிள்ஸ் நிறைய இருக்கு", ஸ்ரீ ஒரு புத்தகப்பித்து குடும்பத்தைச் சேர்ந்தவன். சென்னையில் அவன் வீட்டிற்குச் சென்றால் ஏதேனும் புத்தகத்தைக் கையில் திணிப்பார்கள் அல்லது நம் கையில் ஏதும் புத்தகம் இருந்தால் பிடுங்கிக் கொள்வார்கள்.

"இந்த ஸ்டேட்டுக்கு ஒரு கிரிக்கெட் அசோசியேஷன் அமைஞ்சதுல முக்கிய பங்கு வகிச்ச அவருக்கு இப்படி ஒரு கஷ்டம்", என்றான் ஸ்ரீ.

"ம்ம்... விட்டா இந்திய கிரிக்கெட் அசோசியேஷன் அமைஞ்சதே அவராலதான்னு சொல்லுவே போலிருக்கு??"

"அவ்ளோ தூரம் சொல்ல மாட்டேன். இன்னும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கு"

"என்ன?"

"இந்த ஊரு கிரிக்கெட் ஸ்டேடியமே அதை கட்டிமுடிக்க உறுதுணையா இருந்த அவர் பேர்லதான் இருக்கு"

"அட பகவானே, அந்த ஸ்வாமி இவர்தானா?"

"சாட்சாத்"


"ப்புறம் அவர் என்ன ஆனார் சித்தப்பா?"

மைதானத்தில் தோனி - யுவராஜ் ஜோடி அந்த ஒருநாள் ஆட்டத்தை டெஸ்ட் கணக்காக சர்வ நிதானமாக ஆடிக் கொண்டிருந்தது.

"என்ன ஆனாரு. அப்புறம் கொஞ்ச நாள் நான் அவரை அதே மாதிரி எங்க காலேஜ்ல பாத்தேன். அப்புறம் ஒரு ரெண்டு மூணு வருஷம் அவர் காலேஜ் பக்கமே வரலை. அப்புறம் ஒரு நாள் அவர் இறந்த சேதி வந்தது. ஒரு சவுத் ஆப்ரிக்கா - இந்தியா கிரிக்கெட் மேட்சுக்கு முன்னால ஒரு ரெண்டு நிமிஷம் இந்திய கிரிக்கெட் அணியினர் அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தினாங்க. தட்ஸ் இட்"

"அவ்வளவு பெரிய மனுஷனுக்கு அவ்ளோதான் மரியாதையா?"

"சொல்ல விட்டுட்டேனே, எங்க காலேஜ் ரெண்டு நாள் லீவ் விட்டாங்க"

13 comments:

'பரிவை' சே.குமார் said...

கதை ரொம்ப நல்லாயிருக்குங்க...

Giri Ramasubramanian said...

@ குமார்
உங்கள் ஊக்கத்திற்கு ரொம்ப நன்றி!

natbas said...

ப்ரில்லியன்ட்!

Giri Ramasubramanian said...

@நட்பாஸ்
நன்றி!

வீரராகவன் said...

எல்லாத்தையும் என்கிட்ட இருந்து எழுதி வாங்கிட்டு என்னை கண்டுக்கறது இல்லைன்னு சொல்லுவாங்க. டு யு தின்க் அயம் மேட் டு டூ ஆல் தட்? டோன்ட் பிலீவ் இட்",
ஒரு வேளை அதனால்தான் இரண்டு நாள் லீவு, இரண்டு நிமிஷ மவுன அஞ்சலியோடு நிறுத்திக் கொண்டார்களோ?
தூங்கும்போது கூட காலாட்டிக் கொண்டிருக்கணுமாம். இல்லாவிட்டால் கொண்டு போய் புதைச்சுடுவாங்க.
ரசித்தேன்.

Giri Ramasubramanian said...

மிக்க நன்றி வீரராகவ ராமானுஜம் சார்!

natbas said...

@வீரராகவன் நூல் புடிச்சு இங்க வந்து விலாவரியா ரசிச்சு பாராட்டறீங்க... ரொம்ப நன்றி, எதுக்கும் ஒரு கொடுப்பினை வேணும் :(

R. Gopi said...

\\அச்சுஅசல் ஒரு புகைப்படம் போலவே\\

புகைப்படத்தைவிட ஓவியமே எனக்கு மிகவும் பிடிக்கும். ஓவியத்தில் கொண்டுவரக் கூடிய சில ஜாலங்கள் புகைப்படத்தில் வராது.

\\ஒரு நிமிடம் என ஒற்றைவிரலைக் காட்டிவிட்டு வாயிலிருந்ததை உமிழத் திரும்பினான் அவன்\\

ப்ரில்லியன்ட்

\\பிரசித்தி பெற்ற அந்த மைதானத்தின் அலுவலகஅறை சொல்லி வைத்தாற்போல் கலைந்து கிடந்த காகிதக் குப்பைகளுக்கு\\

வெகு அழகான முரண்

\\நான் அவரை நேரில் பார்த்தபோது இன்னும் வயதான ஸ்வாமியாக இருந்தார் அவர்.\\

ஏற்கனவே அறிமுகாகி இருப்பவரின் சிறுவயது புகைப்படம் தரும் உணர்வை என்னவென்று விவரிப்பது!

\\மணிந்தர்சிங் பந்தை மார்ட்டின் க்ரோ எதிர்கொண்டிருப்பதாக வர்ணனையாளர் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில்\\

திரும்பவும் கடந்த காலம். அதைக் கிரிக்கெட்டைக் கொண்டே விளங்க வைப்பது சூப்பர்.

\\யு வேர் ஆஸ்கிங் அபவுட் மி டு யுவர் ஃபிரெண்ட்\\

யூ வேர் ஆஸ்கிங் யுவர் பிரெண்ட் அபௌட் மீ” என்று வரவேண்டும் என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை.

\\அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தினாங்க. தட்ஸ் இட்"\\

தட் வாஸ் இட் என்று வரவேண்டும் என்று வரவேண்டும் என்று நினைக்கிறேன்.

கலக்குங்க கிரி!

Giri Ramasubramanian said...

@ கோபி
இதைத்தான்.... இதுபோன்றதொரு விமர்சனத்தைத்தான் நான் எதிர்பார்த்தேன். மிக்க நன்றி! இதற்கு முன்னமே நான் இரண்டொரு சிறுகதைகள் இங்கே எழுதியிருந்தாலும் இதுதான் எனக்கு முதல் என்று கணக்கு.

திருத்தங்களைச் செய்கிறேன். உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து அவற்றைச் சொன்னமைக்காக மீண்டும் நன்றிகள்.

R. Gopi said...

தங்கள் பதிவுகள் குறித்து வலைச்சரத்தில் இன்று குறிப்பிட்டுள்ளேன்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை நண்பரே... இது முதல் வருகை... மற்ற பதிவுகளையும் படிக்கிறேன்...

Giri Ramasubramanian said...

@கோபி

அன்பிற்கு நன்றி :)

Giri Ramasubramanian said...

@ வெங்கட் நாகராஜ்

மிக்க நன்றி அன்பரே

Related Posts Plugin for WordPress, Blogger...