Aug 12, 2011

இது பயணக்கட்டுரை அல்ல - 1

மதியம் பன்னிரண்டு முப்பது. சுடச்சுட பருப்பு ரசம், பீட்ரூட் பொரியல் சகிதம் தட்டில் உட்கார்ந்திருந்தது. இருந்த கொலைப் பசிக்கு அந்த காம்பினேஷன் அமிர்தமாய் இருந்தது. அவதி அவதியாக அள்ளிக் கொட்டிக் கொண்டேன். கால் வயிறு நிறைந்ததா எனத் தெரியவில்லை. "இன்னும் கொஞ்சம் சாதம் வைக்கவா", என்றவளிடம், "இல்லை, ஃப்ளைட்'ல எப்படியும் ஏதும் தருவான், அங்க பாத்துக்கறேன்", என எழுந்தேன். 

"தயிர் சாதம் கொஞ்சம் சாப்பிடலாமே? உங்களுக்குப் புடிச்சாப்ல இன்னைக்கு நல்லா உறைஞ்சிருக்கு"

"வேண்டாம்னு சொன்னனே", கால் டாக்சி வாசலில் காத்துக் கொண்டிருக்கிறது. இரண்டு இருபதுக்கு டெல்லி விமானம் ஏற வேண்டும்.

"காபி ஒரு அரை கப் தரவா?", கேட்ட அம்மாவிடமும் வேண்டாம் என்றாயிற்று.

வழக்கமாக பையைத் தோளில் மாட்டினால் அழுது ஆர்ப்பரிக்கும் அகில் என் அம்மா இடுப்பில் அமர்ந்து கொண்டு என்னை வெறித்த பார்வை பார்த்து டாட்டா சொல்லியும் சொல்லாமலும் வழியனுப்பினான். அவன் அழுதிருந்தால் தேவலாம் என்றிருந்தது. வீடு திரும்ப இரண்டு வாரங்கள் பிடிக்கும்.

டாக்சி புறப்பட்டதும் ஏதோ தொண்டையை இடைஞ்சல் செய்தது. அந்த அரை கப் காபியை குடித்திருக்கலாம் எனத் தோன்றியது.

சொல்லி வைத்தாற்போல் நூற்றியறுபதை வாங்கிக்கொள்ள கால்டாக்சி டிரைவரிடம் இருநூறுக்கு சில்லறை இல்லை. 

"சரி, இருநூறுக்கு பில்லைக் கொடப்பா. ஆபீஸ்'ல க்ளைம் பண்ணிக்கறேன்", அறுபத்திநாலு பற்களும் சிரித்துத் தெறித்தது. என் அலுவலக செலவில் அவர் வீட்டம்மா சூடப்போகும் மல்லிகையின் அந்த எக்ஸ்ட்ரா முழத்தையும் அதை விற்றவள் சேமித்த முன்னிரவின் மூன்று நிமிடங்களையும் ஓரிரு நிமிடங்கள் நினைத்துக் கொண்டேன். 

சென்னை விமான நிலையத்திற்கு இது என் இரண்டாவது நுழைவு. இதற்கு முன் நுழைந்து கடந்த இடங்கள் எல்லாம் மாறிவிட்டாற்போல் தோன்ற, பட்டிக்காட்டு மிட்டாய்க்கடையை பட்டணத்தான் பார்ப்பதுபோல் சுற்றியொரு நோட்டம் விட்டேன்.

"என்ன புதுசா உள்ள நுழையறாப் போல லுக்கு வுடறீங்க", உடன் பயணித்த அலுவலகத் தோழன் ஒருத்தன் என்னிடம் எதையோ சோதித்துப் பார்த்தான். சுஜாதா பாஷையில் சொல்லவேண்டும் என்றால், "மையமாக சிரித்தேன்".

"அப்புறம் சொல்லிடறேன், ஜெட் ஏர்வேஸ்'ல இந்த மத்தியான ப்ளைட்'ல குடிக்கத் தண்ணி கூட யோசிச்சுத்தான் தருவான். லஞ்ச்  வீட்லயே முடிச்சிட்டீங்க இல்ல? அப்டி இல்லேன்னா பாத்து இங்கயே ஏதான சாப்டுக்கோங்க", இரண்டு வாரங்கள் முன் இதே நேரம் இதே விமானத்தில் பயணப்பட்ட அதே தோழன் எச்சரிக்கை விடுத்தான். அடக் கொடுமையே! "இத்த நம்பியா வீட்ல சுடுசோறு வேணாம்னேன்?", என கேட்டுக்கொண்டேன். இருந்தும் உள்ளேயொரு குரல், "இவன் பொய் சொல்கிறான். விமானத்தில் ஒரு வெல்கம் ட்ரிங்'காவது தராமலா இருப்பான், ஐந்தாயிரத்து சொச்சம் வாங்கியிருக்கிறானே?", என ஒலித்தது.

பசியின் முதல் அமிலத்துளி இரைப்பையின் மேல்வட்டத்தை மெதுவாய்த் தொட்ட உணர்வு. அப்படியேதும் இவன் சொன்னாற்போல் அவன் தராவிடில்? ஐந்தரை வரை தாங்குமா?

"காபி எவ்ளோ?"

"சிக்ஸ்டி",

ஓ! நாம் விமான நிலையத்தினுள் இருக்கிறோம்.

"ஓகே"

"நீயெல்லாம் வாங்கமாட்ட தெரியும்டா", குரல் ஒலிக்காமல் ஒலித்தது.

"புது தில்லி செல்லும் விமானம் இரண்டு இருபதுக்குப் பதிலாக இரண்டு ஐம்பதுக்குப் புறப்படும். தில்லியில் இருந்து வந்து சேரும் விமானத்தின் தாமதமே இதற்குக் காரணம். சிரமத்திற்கு வருந்துகிறோம்", இயந்திரம் அரற்றியது.

வேறு வழியேயில்லை. "காபி ஒரு கப் குடுங்க", வாங்கிக்கொண்டு காத்திருப்பு நாற்காலிக்கு வந்தேன்.

அறுபதை அழுததற்கு அது ஒரு கேப்புச்சினோ’வாக இருந்து தொலைத்திருக்கலாம். உள்ளூர் சினிமாக் கொட்டகைகள் தரும் ப்ரூ காபியைத் தோற்கடிக்கும் சுவை. பாதிக்குமேல் குப்பைத்தொட்டியின் பசிக்கு இரையாயிற்று.

எதிர் நாற்காலிகள் வெள்ளை, கருப்புத் தோல்கள், பஞ்சாபி டர்பன், ராஜஸ்தானி உருமால், என விதவிதமாய் உலகின் எல்லா சாதி மத சனங்களையும் அடக்கியிருந்தது. எல்லாம் வழக்கம்போல் தனித்தனித் தீவாய் அமர்ந்து வெறித்த பார்வையுடன் ஓங்கியுயர்த்தி சுணக்கம் காட்டிய உதடுகளுடன் படித்துக் கொண்டு, இயர் ஃபோனை மாட்டிக் கொண்டு என ஏதேதோ செய்து கொண்டிருந்தன.

”விமானம் வந்தாச்சு, ஏறிக்கொள்ள வாங்கப்பு”, என்ற அழைப்புக் குரலுக்கு எல்லோரும் விமானத்தைத் தவற விட்டிடும் பதட்டத்தில் ஓடிச் சென்று க்யூவில் நின்றோம்


தொடர்ச்சி : 




3 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் பயணி

natbas said...

இரண்டாம் பயணி.

Giri Ramasubramanian said...

முதல் மூவருக்கும் நன்றி :)

Related Posts Plugin for WordPress, Blogger...