Feb 17, 2012

அருகர்களின் பாதையின் காலக் கணவாய்கள்


சிறப்புப் பதிவர்: நட்பாஸ்



முதலிலேயே ஒன்று சொல்லி விடுகிறேன்: ஜெயமோகன் அவர்கள் அண்மையில் எழுதி முடித்த "அருகர்களின் பாதை" என்ற தொடர் பயணக் குறிப்புகளைப் பற்றிய எண்ணங்களை மட்டுமே இங்கு பகிர்கிறேன். இதைப் படிக்கும் நண்பர்கள், "என்னடா இவன், ஜெயமோகனுக்கே எப்படி எழுதுவதென்று பாடம் எடுக்கிறான்," என்று கோபப்பட வேண்டாம். அவர் இதுவரை எழுதியுள்ள பகுதிகளில் மேற்கோள் காட்டக்கூடிய பத்திகள் பல இருக்கின்றன. சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கும் குறைவில்லை. பிரமாதமான புகைப்படங்கள் ஒவ்வொரு பதிவிலும் உண்டு. அவற்றையெல்லாம் குறிப்பிட்டுப் பாராட்டுவதானால் நிறைய எழுதலாம். ஆனால் அதுவல்ல முக்கியம்.

ஜெயமோகன் இலக்கியவாதி என்ற அடையாளத்தைத் தாண்டி ஒரு ஆளுமையாக இருக்கும் நாட்கள் இவை. வழக்கம் போலவே இங்கே ஒரு டிஸ்கி-  பரவலாக  அறியப்படாதவராக, பெரும்பான்மை மக்கள் மத்தியில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த இயலாதவராக அவர் இருக்கலாம். ஆனால், இன்றைக்கு இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட, சமூக அக்கறையுள்ள பல இளைஞர்களுக்கு ஜெயமோகன் ஆதர்சமாக இருக்கிறார். அவர்களை நினைவில் கொண்டும் ஒரு வாசகனாகவும் மட்டுமே இந்தப் பதிவை எழுதுகிறேன்- தமிழில் பொருட்படுத்தத்தக்க கருத்துகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் எழுத்தாளர் என்ற வகையில் ஜெயமோகனிடம் நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்பதைச் சொல்வதுதான் இந்தப் பதிவின் நோக்கம் :)

பயணக் கட்டுரைகளை எழுதுபவர்கள் இரு வகை.  ஒரு வகையினர் தில்லியையே ஜெயிக்கப் போவதுபோல் படுபயங்கரமாக சத்தம் போட்டுக் கொண்டு கிளம்புவார்கள்.  நாமும் ஏதோ பெரிய பெரிய விஷயங்கள் வரப் போகிறதென்று படிக்க ஆரம்பிப்போம்.  கடைசியில் பார்க்கும்போதுதான், மன்னிக்கவும், நடுவிலேயே எங்கோ நாம் நம் நினைவைத் தொலைத்த இடத்தைப் பார்த்தால்தான், நம் அபிமான யாத்திரிகர் தில்லி விமான நிலையத்திலேயே ஆறு மாதங்களாக உட்கார்ந்திருந்திருக்கிறார் என்பது தெரியும்.  அப்புறம் ஒரு நாள் ஏதோ நினைவு வந்து, "என்ன ஆச்சு?" என்று தேடும்போது ஒரு பேரிடி இறங்கும்- அவர் தன் தொடருக்கு,  "இது பயணக் கட்டுரை அல்ல" என்று கிரிமினலாஜிக்காக தலைப்பு வைத்திருப்பார்.

ஆனால் யாத்திரிகர் ஜெயமோகன் அப்படிப்பட்டவரல்ல -  முடிவெடுத்தால் எடுத்ததுதான். ஜனவரி பதினான்காம் தேதியன்று பொங்கல், முறுக்கு இத்தியாதி வகையறாக்களுடன் கிளம்பினார் அவர். அப்போது துவங்கிய "அருகர்களின் பயணம்",  பிப்ரவரி பதின்மூன்றாம் தேதி சூடான உப்புமாவும் கருப்பு டீயுமாக முற்று பெற்றது (இது புறவயப்பட்ட காலவோட்டத்தைக் கருத்தில் கொண்டு மட்டுமே நாம் அறியக்கூடிய தரிசனம்- ஆனால், அகவயப்பட்ட அனுபவத்தின் எல்லைகள் பெல்காம் உப்புமாவின் படுபாதாள வீழ்ச்சியிலிருந்து காட்கர் கிராமத்து உளுந்துகூட்டிய சோற்றின் ஆகச்சிறந்த எழுச்சி வரை விரிகின்றன : இந்த அகப்பயண வரைபடம் பிறிதொரு சமயம் இங்கு பதிவு செய்யப்படலாம்). இந்தப் பயணத்தின் துவக்கத்துக்கும் முடிவுக்கும் இடைபட்ட ஏறத்தாழ முப்பது நாட்களில் தொடர்ந்து முப்பத்து ஒரு பயணக் குறிப்புகள் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். 

நண்பர்கள் சிலருக்கு அவரைப் பிடித்திருக்கலாம், சிலருக்குப் பிடிக்காமலிருக்கலாம். நம்மில் சிலர் அவரது எழுத்தின் ரசிகர்கள், சிலர் அரசிகர்கள். ஆனால் யாத்திரிகர் ஜெயமோகனின் தொழில் தர்மம் - அர்ப்பணிப்பு - நம் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பயணங்கள் களைப்பானவை.  உடல்நலனுக்குக் கேடானவை. எந்த ஒரு நீண்ட பயணத்திலும் ஆயிரம் பிரச்சினைகள், கவலைகள் நம்மை நிழலாய்த் தொடரும். இவை போதாதென்று ஆயிரம் திசைகளிலிருந்து ஆயிரம் கவன கலைப்புகள் நேரிடும். அத்தனையையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்து,  ஒவ்வொரு இரவும் தூங்கப் போகுமுன் கர்மசிரத்தையாக எழுத உட்காருவதென்றால் அது சாதாரண காரியமா என்ன?

(இதை எழுதும்போதுதான் நினைவுக்கு வந்தவனாக, தில்லி விமானத்தில் ஆழ்ந்த நிஷ்டை கைகூடிய நிலையில் ஆறு மாதங்களாக அமர்ந்திருக்கும் நண்பரைப் பற்றி விசாரித்தேன்- அவர் அடுத்து அமெரிக்கா கிளம்பத் திட்டமிருக்கிறாராம். போச்சுடா!)

சீரியஸாகப் பேசினால்,  ஜெயமோகன் அருகர்களின் பாதையில் செய்த பயணம் முக்கியமான ஒன்று.  சமண வரலாறு, சமண ஆலயங்கள், இந்தியப் பண்பாடு மற்றும் இந்திய மரபு ஆகியவற்றினுள் காலம் மற்றும் வெளியில் செய்யப்பட்ட ஒரு நீண்ட பயணம் இது. தற்போது பயணக் குறிப்புகளாக உள்ள இந்தக் கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டு நூல் வடிவம் பெறும்போது சமணம் குறித்த விரிவான அறிதலை நிகழ்த்துவதாக இருக்கும். அது மட்டும் போதுமா?

நான் வாசித்தவரை இந்தப் பயணம் சமணத்தை ஆலயங்களாகவும் சிற்பங்களாகவும் அதன் உறைந்த வடிவில் பேசுவதாக இருக்கிறது.  சமண வரலாறு மற்றும் தத்துவங்கள் புதிய புரிதல்களாக, புதிய திசைகளில் விரிவதாக இருந்தாலும் சமகால சமணம் குறித்து அதிகம் பேசப்பட்டிருப்பதாக நினைவில்லை.  ஆனால், இன்றைய சமண சமூக அமைப்பு பரவலான கவனத்தைப் பெற வேண்டியது அவசியமாக இருக்கிறது. 

உதாரணத்துக்கு,  1991ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சமண மக்கள்தொகையில் 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் என்ற அளவில் பால்விகிதம் அதன் சமன்குலைந்த நிலையில் உள்ளது. ஆண் குழந்தைகள் வேண்டும் என்ற விருப்பத்தால் சமணர்கள் பெருமளவில் கருச்சிதைவு செய்து கொள்வதை இந்த நிலைக்குக் காரணம் சொல்கிறார்கள். இதை விவாதிக்கும் கட்டுரை இங்கே

ஒரு புழு பூச்சிக்குக்கூட தன்னால் எந்தக் கெடுதலும் வந்துவிடக் கூடாது என்று கவனமாக இருக்கும் ஒரு சமூகத்தில்தான் பெண் சிசுக்கொலை இந்தியாவிலேயே அதிக அளவில் நடைபெறுகிறது. மேற்சொன்ன சுட்டியில் சில மாநிலங்களில் 1000 ஆண்களுக்கு 850 பெண்கள் என்ற நிலை இருப்பதையும், பீகார் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் 1000 ஆண்களுக்கு 600 பெண்கள் என்ற நிலை இருப்பதையும் குறிப்பிடுகிறார்கள. கண்ணுக்குத் தெரியாமல்- சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்க வேண்டும்- நம் மண்ணில் ஒரு ஹோலோகாஸ்ட்டே நடந்து கொண்டிருக்கிறது.  இது வேதனையான விஷயம்.

அப்படி தப்பிப் பிறக்கும் பெண்களுக்கும் நிம்மதியான வாழ்க்கை அமைவதில்லை என்று எண்ண இடமிருக்கிறது.  சமண சமய துறவிகளில் ஆண்களைவிட பெண்கள் நான்கு மடங்கு அதிக அளவில் இருக்கின்றனர்.  உயிரைக் கொள்ளை கொள்ளும் அழகிகளாக உள்ள  பதின்ம வயது பெண்கள் துறவு பூணும் புகைப்படங்களை செய்தித்தாள்களில் பார்த்து நொந்து போன அனுபவம் உங்களுக்கும் நேர்ந்திருக்கும்.

இத்தனைக்கும், அருகர்களின் பாதை, அதன் துவக்கங்களைத் தொலைத்து ஓய்ந்துவிட்ட பாதையல்ல. ஜெயமோகனின் கட்டுரைகளைப் படிக்கும்போது இந்தியாவெங்கும் புதிய ஆலயங்கள் கட்டப்பட்டு வருவதை அறிகிறோம். பழைய ஆலயங்கள் சீரமைக்கப்படுகின்றன.  உயிர்த்துடிப்புள்ள ஒரு சமூகத்தை அவரது பயணத்தில் நாம் சந்திக்கிறோம். ஆனால் அதன் மறைவான மையத்தில் பெண்களின் கண்ணீர். அருகர்களின் பாதை இன்றும் தொடர்கிறது - தவறான திசையில்.

இந்தப் பதிவை இங்கு நான் எழுத முதற்காரணம் இதுதான்.  ஜெயமோகன் அருகர்களின் பாதையை நூல் வடிவில் எழுதும்போது, அது இன்றைய சமணர்களின் வாழ்க்கை முறையை, அவர்களுடைய விழுமியங்களைத் தீவிரமான கேள்விகளுக்குட்படுத்துவதாக இருக்க வேண்டும்.  நிகழ்கால நிஜங்கள் மறக்கப்படும்போது போலி உணர்வுகள் அந்த சமூகத்தின் மையத்தில் நிலைபெற்றுவிடும். அதன் கடந்த காலத்தில் எத்தனை உயர்ந்த மகோன்னதங்கள் இருப்பினும், சமகாலத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத புளகாங்கிதங்கள் அந்த சமூகத்தை அழிக்கும். இது சமணர்களுக்கு மட்டுமல்ல, இந்தியர்கள் அனைவருக்கும் பொருந்தும். 

சமணர்களின் பாதை இறந்தவர்களின் பாதையல்ல. இன்று இருப்பவர்களின் பாதை. இங்கு செய்யப்படும் பயணம் பழைய ஏடுகளைப் புரட்டிப் பார்ப்பதல்ல. இடுபாடுகளில் மறைத்து கிடக்கும் மாபெரும் சாதனைகளை நம் கற்பனைக் கண்கொண்டு கண்டு பிரமிப்பதல்ல. இந்தப் பயணம் நாஸ்டால்ஜியாவில் ஆழ்த்துவதாக இருந்துவிடக் கூடாது  சமணத்தின் மகத்தான தத்துவங்களையும் தரிசனங்களையும் எண்ணி வியப்பதோ, அதன் வானளாவிய சிற்பங்களின்முன் நம் ஆன்மிகச் சிறுமையை உணர்ந்து வணங்குவதுமோகூட அருகர்களின் பாதையாக இருக்க முடியாது. ஜெயமோகனின் பயணம் எப்போது படித்தாலும் அது வாசகனின் எதிர்காலத்தினுள்ளும் நீண்டு செல்லக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதாக இருக்க வேண்டும். 

இங்கே கொஞ்சம் சென்டிமெண்ட் பேச வேண்டியிருக்கிறது.  வாழ்க்கையை ஒரு பயணமாகவும் சாகரமாகவும் பேசுவது நம் வழக்கம். தீர்த்தங்கரர்கள் என்றால் ford makers என்று விக்கிப்பீடியா சொல்கிறது. திசையற்ற சாகரத்தில் நம்மைப் போன்றவர்கள் சரியான திசையில் பயணிக்க வசதியான வாய்க்காலோ, வரப்போ, கால்வாயோ கட்டித் தருபவர்களே தீர்த்தங்கரர்கள்.

சமய நம்பிக்கை சீரழிந்த சமகால தமிழ் அறிவுச் சூழலில் இலக்கியவாதிகளே இதைச் செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.  ஜெயமோகன் என்றில்லை, யாராகவும் இருக்கட்டும். எழுத்தாளர்களுக்கு வரும் கடிதங்களில் பலவும் வாசகர்களின் இருப்பு மற்றும் ஆன்மிகச் சிக்கல்களுக்கு விடை தேடுபனவாக இருக்கின்றன. இது ஒன்றிரண்டு நல்ல கதை கட்டுரை கவிதை எழுதிய எந்த ஒரு எழுத்தாளனுக்கும் பழக்கப்பட்ட அனுபவமாக இருக்கும். தன்னை மிதவையாகவே உணரும் எழுத்தாளனும் தன் வாசகர்களுக்கு தோணியாக இருக்கிறான் என்பதுதான் இன்றைய மெய்ப்பாடு.

எனவே, அருகர்களின் பாதை ஏதோ ஏழெட்டு பேர் சென்று திரும்பிய இன்பச் சுற்றுலாவாக முடிந்து விடக் கூடாது, வரலாற்றை நினைவூட்டுவதும்கூட முக்கியமல்ல.  தனி மனிதனின் ஆன்மிக மீட்சியை உணர்த்துவதும்கூட குறைபட்ட வெற்றியாகவே இருக்கும்.  எழுத்தாளன் இன்றைய தமிழ்ச் சூழலில் டால்ஸ்டாயாகவும் தாஸ்தெவெஸ்கியாகவும் மதிக்கப்படக்கூடிய நிலையில் நிற்கிறான்.  இந்தப் பொறுப்பை உணர்ந்து அவன் எப்படிப்பட்ட பயணத்தை நிகழ்த்துகிறான் என்பது முக்கியம்.

இந்தப் பதிவு, எழுதப்பட்ட கட்டுரைகளின் விமரிசனமாக இல்லை : ஆனால், எழுதப்படப் போகும் புத்தகத்தின் முன்னோட்டமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் :)

முடிவாக, அருகர்களின் பாதையில் ஒரு முக்கியமான புகைப்படமும் மேற்கோளும்:



"இரண்டாயிரம் வருடத்துக்கு மேல் பழைமை கொண்ட கணவாய்ப்பாதை இது. சாதவாகனர் காலகட்டத்தில் இந்தப் பாதை கல்யாணுக்குச் செல்லும் முக்கியமான பாதையாக இருந்தது எனக் கல்வெட்டுகள் சொல்கின்றன. நான் என்றால் நாணயம், கட் என்றால் வழி. இது ஒரு சுங்கமுனையாக இருந்திருக்கிறது. இங்குள்ள குகைகளில் கிடைக்கும் கல்வெட்டுகள் மௌரியர் காலத்திலேயே இந்தப் பாதை பயன்பாட்டில் இருந்ததாகச் சுட்டுகின்றன. வட இந்தியாவில் இருந்து தென்னகத்துக்கு வரும் வழிகளில் இது முக்கியமானதாக இருந்திருக்கலாம். ஏனென்றால் இதற்குக் கீழே உள்ள பகுதிகள் எல்லாமே வளமானவை. நீர் வசதி கொண்டவை."

யாத்திரிகர் ஜெயமோகனுக்கு நன்றி கலந்த வணக்கத்துடன் கூடிய வாழ்த்துகள்!


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் !

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...