courtesy: http://popartmachine.com
நீட்சி:
வடித்து வைத்த சோறில்
மீதமிருந்த பருக்கைகளில்
நுழைந்து சுருங்குகிறது முதுவேனில்.
வெந்நீரின் சேரல் ஒரு
ஆரம்பமா முடிவா
என்ற என் கேள்விக்கு
என் கைகளையும்
இறுகச் சேர்த்துப்
பற்றிக் கொண்டன
பருக்கைகள்.
அடுப்பில் தணல் தணிந்திருந்தது,
நீரூற்றவா என்ற என் கேள்விக்கு
எதிர்வினையாய் இன்னமும்
கைகள் இறுகிக் கொண்டன.
பகல் முடிய மாலை
என் பருக்கைசேர்
கைகளில் தன் செங்கதிரைப்
பாய்ச்சியது,
நீரற்ற ஈரத்தின் பரவலில்
மிச்சமிருந்த ஒற்றைப்
பருக்கையை உன்
உதட்டில் வைக்கிறேன்,
காணாமல் போனதென்னவோ
என் கைகள்தான்
வீழ்ச்சி இனிது:
இல்குவாய்த்தான் இருக்கிறது
சிறுதுண்டெனப் பெருக்கெடுத்த
அந்த ஜீவநதியின் பால்
சுழித்தோடிய நுரையினூடே
ஓடியொளிந்து பழகிக் களித்து
சேரிடஞ்சேரும் கலை பழகுதல்.
இலைக்கு என்ன ஆயிற்று
தவமிருந்தா பெற்றாள்
அன்னை அவளை?
இலையுதிர்க் காற்றின்
ஒற்றைச் சீண்டலில்
உதிர்த்தே விட்டாள்
இவளும் உதிர்ந்தே வீழ்ந்தாள்
விடையற்ற கேள்வி!
கந்தகம் கலந்த
மழையில் சிக்கிக் கொண்டோம்
ஆறாத ரணங்கள் குறித்து
அரற்றினீர்கள்.
அகற்ற முடியாத அடர்பனி
குறித்தும் அளவளாவினீர்கள்.
பதிலற்ற புன்னகைகள் பலவும்
பரிசாய்க் கிடைத்தன.
பகர முனைந்தபோது,
வலக்கையின் சத்ரு கொண்டு
பக்கம் வராவண்ணம் செய்தீர்கள்
கருவண்டு நடனமாடும்
ஒற்றைப் பூவா நான்?
2 comments:
தனிமையில் வெறுமை வருவது இயல்பு :)
நன்றா உள்ளது
ஒண்ணுமே புரியலை... அதனால நல்ல கவிதைன்னுதான் நினைக்கிறேன்...
எதுக்கும் நல்ல கவிதை நன்றி கிரின்னு சொல்லி வெச்சுக்கறேன் :)
Post a Comment