வடசென்னை என்னை வளர்த்தது எனக் கூறிக் கொள்வதில் எனக்கு எப்போதும் ஒரு பெருமை, கர்வம் உண்டு. உலகின் உண்மையான மக்கள் வாழும் ஒருசில இடங்களில் வடசென்னைக்கு முதலிடம் உண்டு எனத் தீவிரமாக நம்புபவன் நான். வட சென்னையின் நினைவுகளை அசைபோட்டு சொல்வனம் இணைய இதழில் எழுதிய ஒரு பதிவு! சொல்வனத்திற்கு நன்றிகள்.
______________________________
“கவுறு அந்துக்கும் சார், தூக்காத தூக்காத! அதான் ஸ்டைக்கு இன்னும் முடிலல்ல, இன்னாத்துக்கு வண்டி எட்த்துன்னு வர?”, சில்லி மிட்-ஆனில் நின்றவன் திரும்பியும் திரும்பாமலும் சொல்லிய நேரத்தில் தன் கைக்கு எட்டிய கேட்சை அவன் தவறவிட்டான்.
ஏன், எதற்கு என்று என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் பெட்ரோலிய நிறுவனங்கள் பண்ணிய திட்டமிட்ட திடீர் ஸ்ட்ரைக்கினால் மூன்று நாளாய் எல்லா பெட்ரோல் பங்குகளும் மூடிக்கிடக்கின்றன. ”ஸ்ட்ரைக் முடிஞ்சிடுச்சி”, என்று யாரோ எங்கேயோ சொன்னாற்போல் காதுகளுக்கு இருக்கவே அந்த சனிக்கிழமை மதியத்தில் பெட்ரோல் டாங்கில் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்சநஞ்ச எண்ணெயை நம்பி வண்டியை எடுத்துவிட்டேன். மூலக்கடை வரை போனால் பெட்ரோலிட்டு வரலாம்.
மூலக்கடை?
மாதவரத்திற்கும் பெரம்பூருக்கும் இடையே மூலக்கடையை நீங்கள் கண்டறியலாம். சென்னை கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையின் முதல் கேட்-வே ரெட்ஹில்ஸ் என்றழைக்கப்படும் செங்குன்றம். அங்கே நுழைந்து நீங்கள் சென்னையினுள்ளே நுழைந்தால் டேங்கர் லாரிகள், சிமெண்ட் லாரிகள், அரிசி மூட்டைகள் சுமக்கும் லாரிகள் என்று விதவித சரக்கு லாரிகள் நீண்டு வடம் பிடிக்கும் சாலைகள் கொண்ட வடசென்னையின் நெருக்கடியான போக்குவரத்து நெரிசலின் ஒரு சாம்பிளை உங்களுக்குக் காட்டிவிட்டு பெரம்பூருக்கோ, மாதவரத்திற்கோ, வியாசர்பாடிக்கோ உங்களை வழியனுப்பி வைப்பது இந்த மூலக்கடை என்னும் இரண்டாவது கேட்-வே.
சென்னையை ஒரு ஸ்கேல் வைத்து ரெண்டாய்ப் பிரிக்கும் ஒரு கோடு உண்டென்றால் அது பூந்தமல்லி நெடுஞ்சாலைதான். அந்தப்பக்கம் உன்னுது இந்தப்பக்கம் என்னுது என்று இங்கேதான் வடசென்னையும் தென்சென்னையும் கொஞ்சமாய் மத்தியச் சென்னையை அங்கங்கே சிதற விட்டுவிட்டு பிரிந்து கிடக்கின்றன. இதில் வடசென்னை எப்போதும் தீண்டத்தகாத ஒரு பிரதேசம். மூலக்கடை, கொடுங்கையூர், மாதவரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, புளியந்தோப்பு, வியாசர்பாடி, சர்மாநகர், முல்லைநகர், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, எண்ணூர் மற்றும் இன்னபிற பகுதிகள்.
ஆப்பிரிக்கா முழுக்கவும் இருண்ட கண்டமாக இருப்பதாகவும், இந்தியாவின் சாலைகளில் புலிகள் ஓடுவதாகவும் உலக மக்களால் எப்படி நம்பப்படுகிறதோ, அதேபோல வடசென்னையில் வியர்வையில் நனைந்த எண்ணெய்த் தேகங்கொண்ட கரிய மனிதர்கள் மட்டுமே வசிப்பதாகவும், மடிப்பாக்கத்திலும் மந்தைவெளியிலும் இல்லாத குப்பைமேடுகள் எல்லாம் இங்கே மட்டுந்தான் இருப்பதாகவும் ஒட்டுமொத்த தென்சென்னையும் நம்பிக்கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கை சற்றும் வீணாகிவிடுதல் கூடாது என்னும் முனைப்பில் ஒவ்வொரு அரசாங்கமும் தன்னால் இயன்றவரை இந்த ஊரை உதாசீனம் செய்கிறது. அண்ணாநகர், புரசைவாக்கம், கீழ்பாக்கம் முதலான மத்தியப் பகுதிகளை தென்சென்னைக் கால்கள் தாண்டினதாய் சரித்திரம் இல்லை.
மாதவரம், மாதவரம் பால்பண்ணை, கொடுங்கையூர், தபால்பெட்டி, பொன்னியம்மன்மேடு, எருக்கஞ்சேரி வாழ் மக்கள் துணியெடுக்க, சினிமா பார்க்க, எக்ஸ்ரே எடுக்க, சாப்பாடு பார்சல் வாங்க மூலக்கடைக்குத்தான் வரவேண்டும்.உயர்தர சைவ உணவகம் என்ற பலகை தாங்கிய இரண்டு ஹோட்டல்களும், அரை டஜன் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளும், ஒரு டஜன் பழ வண்டிக்கடைகளும், இன்னமும் ஏழெட்டு டஜன் இதர கடைகளும், மூன்று தியேட்டர்களும் இங்கே உண்டு. இப்படிப்பட்ட புண்ணிய க்ஷேத்திரத்திற்குத்தான் பெட்ரோல் பங்க் தேடியொரு நீண்ட பயணம் புறப்பட்டிருந்தேன்.
ஒண்ணரை கிலோமீட்டர்தான் ஓடியிருந்த வண்டி அந்தோணி ஆஸ்பத்திரி வந்ததுமே விக்க ஆரம்பித்தது. சோக்கைப் போட்டு விடாமல் ஆக்ஸலேட்டரை முடிந்தமட்டும் முடுக்கியதில் ஷூ கம்பெனிவரை விரட்ட முடிந்தது. வேறு வழியில்லை முக்கால் தொலைவு வந்தாயிற்று இன்னும் கொஞ்சம் போனால் பெட்ரோல் கிடைத்துவிடும், உருட்டத் துவங்கினேன்.
மூலக்கடை ஜங்ஷனில் வழக்கமாக நடுரோட்டில் நிற்கும் பழக்கடைகளும், பூக்கடைகளும் ஓடாத வண்டிகள் தந்த இடத்தையும் சேர்த்து முழுரோட்டையும் ஆக்ரமித்துக் கிடந்தன. ”எங்கள் ஆண்டவனைக் கேள்வி கேட்ட மால்கம் ஸ்பீடே! மன்னிப்பு கேள்” என்ற அந்த பச்சைநிறத் தமிழ் பேனரை சச்சின் படிப்பாரா இல்லை மால்கம் ஸ்பீட் படிப்பாரா என்றெல்லாம் யோசிக்க விழையவில்லை ”பெட்ரோல் பெட்ரோல்” என்று மனனம் செய்து கொண்டிருந்த என் மனம். கிட்டத்தட்ட ஒண்ணரை கிலோமீட்டர் உருட்டலுக்குப் பின் மூலக்கடை பஸ் டிப்போ வரை சென்று சேர்ந்ததில் கயிறு பிடித்து இழுத்து மூடிக் கிடந்த பெட்ரோல் பங்கை தரிசனம் செய்ய நேர்ந்தது.
ஒரு தற்காலிக கிரிக்கெட் மைதானமாகிப் போயிருந்தது அந்த பங்க். ஏழெட்டு பயல்கள் செங்கல் வைத்து வேலிக்காத்தான் குச்சிகளை ஸ்டம்ப்களாக நிற்கவைத்து விளையாடிக் கொண்டிருந்தான்கள். முப்பதுக்கு அறுபது ஏரியாவையும் கிரிக்கெட் மைதானம் ஆக்கும் சாதுர்யம் நம்மை விட்டால் வேறு யாருக்குக் கைவரும்? வாங்க வந்த பொருளின் நினைவகன்று அவர்கள் ஆட்டத்தில் சற்றே திளைத்தேன். இருபதின் ஆரம்ப வயதுகளில் இருந்தனர் அங்கே அத்தனை பேரும். அத்தனையும் வடசென்னையின் டை’யில் வார்த்தெடுத்த அக்மார்க் முகங்கள். அவர்கள் பேச்சினூடே நான்கு வார்த்தைக்கு ஒரு வார்த்தை மற்றவனின் ஆத்தாளையோ அல்லது அம்மாளையோ அழைப்பது அவர்களின் வொகாப்லரிக்கு அங்கே அவசியமாயிருந்தது. பந்தை வீசுபவனும் மட்டையை வீசுபவனும் கூட முடிந்த இடைவெளிகளில் ஆ’வையும் அ’வையும் இங்கே அழைத்தார்கள். வீச்சு கனஜோராய் இருக்குமோ என்னவோ!
பத்து நிமிட ஆட்டத்தில் அங்கே என் காத்திருத்தல் யாருக்கும் ஒரு பொருட்டாய் தெரியவில்லை. கயிற்றை அகற்றி உள்நுழைய முற்பட்டேன்.
“கவுறு அந்துக்கும் சார், தூக்காத தூக்காத! அதான் ஸ்டைக்கு இன்னும் முடிலல்ல, இன்னாத்துக்கு வண்டி எட்த்துன்னு வர?”, சில்லி மிட்-ஆனில் நின்றவன் திரும்பியும் திரும்பாமலும் சொல்லிய நேரத்தில் தன் கைக்கு எட்டிய கேட்சை அவன் தவறவிட்டான்.
“பொறம்போக்கு! அத்தப் புடிக்கத் தெர்ல்லியா உனுக்கு”, அத்தனை பேரிலும் அவன் ஒருவன் மட்டும்தான் பெட்ரோல் பங்க் சீருடை துறந்தவனாக இருந்தான். கேப்டனாயிருக்க வேண்டும், யாரைத் திட்டினான் எனத் தெரியவில்லை.
”ஸ்ட்ரைக் முடிஞ்சிடுச்சின்னு சொன்னாங்களே?”
”யாரு சொன்னா உன்னாண்ட முட்ஞ்சிர்ச்சின்னு? எவனா சும்மாங்காட்டியும் சொல்லிருப்பான்”, என்னைப் பார்த்துக் கொண்டே தன் ஏரியாவிற்குள் நுழைந்த பந்தை பிடித்து பவுலர் ஸ்டம்புக்கு விட்டெறிந்தான், “இப்டி புடிக்கணும் தெரிஞ்சிக்கோ”, சில்லி மிடானுக்கு இன்ஸ்டண்ட் பாடம் எடுத்தான்.
”சார், ஸ்டைக் முடியல. முட்ஞ்சதும் வாங்க சார். இன்னிக்காவது கொஞ்சம் வெளாடவுடுங்க”, கறாரான ஒரு குரல் டால்பி எஃபெக்டில் வலது மூலையிலிருந்து கேட்டது.
“யாரோ சொன்னாங்கண்ணா, அதுவா விஷயம்? ஒரு அரை லிட்டர் பெட்ரோல் போடு, வீடு வரியும் போயிருவேன்”.
“உனுக்கு தந்துடுவம்ப்பா. உன்னப்பாத்து வரிசகட்டி நிப்பானே லைனா. அல்லாருக்கும் எப்டி தரசொல்ற?”, மேலே பேசாமல் மறு உருட்டலைத் துவங்கினேன்.
“அன்னாண்ட எங்க போற? ரெட்டீல்ஸ் வரியும் எங்கயும் பெட்ரோல் கெடிக்காது”
“நான் வேணா பின்னாடி காம்பவுண்ட் பக்கம் வர்றேன். கொஞ்சம் பார்த்து குடேன் நைனா?”, அவன் பாஷையில் இறங்கிப் பார்த்தேன்.
“போ சார் போ சார்”, அதற்கு மேல் மரியாதை இல்லை. புறப்பட்டுவிட்டேன்.
கள்ளச்சந்தையில் பொருள் விற்பவர்களைக் கண்டாலே வெகுண்டு எழும் புரட்சிகர மனம் இப்போது சாலையில் யாரும் ப்ளாக்கில் பெட்ரோல் விற்கமாட்டார்களா என்று தேடியது. மறுபடி நாலரை கிலோமீட்டர் வண்டியை உருட்டிக் கொண்டே எப்படிப் போவதாம்? தெரிந்தவன் அறிந்தவன் எவனும் எதிரில் வரவில்லை, வந்தாலும் ஒரு இருநூறு மில்லி கடன் கேட்கலாம். நினைத்து அரை வினாடி கடக்கவில்லை பூமி என்கிற பூமிநாதன் எதிரில் திடீர்ப் பிரசன்னம் ஆனான்.
“ஹாய்! ஹவ் ஆர் யூ?”
“நீ எப்போடா இங்க்ளீஷ் தொரை ஆன?”
“போச்சு! அதைவிடு, பெட்ரோல் இருக்கா?”
“அதையேதான் நானும் கேக்கறேன். பெட்ரோல் இருக்கா?”
“சரி விடு! போயிட்டு வர்றேன்”
“வராதே போ”
பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒட்டி உறவாடி நட்பு வளர்த்துப் பழகிய இருவருக்கும் அங்கே பெட்ரோல் லேது என்றது பேச மறுபேச்சு இல்லை. இப்போதைக்குத் தேடல்தான் அவசியம்.
“பெட்ரோல் கெட்ச்சா ஃபோன் பண்றா”, என்றுவிட்டுப் போயேவிட்டான்.
ரோட்டில் எல்லோரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். நானும் பார்த்தவர்களையெல்லாம் மதித்து மறுபார்வை பார்த்துக் கொண்டே வந்தேன். மீண்டும் பழக்கடைகளையும், சச்சின், மால்கம் ஸ்பீடுகளையும் கடந்து மூலக்கடை பேருந்து நிறுத்தத்தையும் தாண்டி ஆளரவமற்ற அந்த கேட்பாரற்ற சாலையில் நடந்து கொண்டிருந்தேன்.
“என்னண்ணா! பெட்ரோல் இல்லியா?”, என்றவனை நான் எல்லா சினிமாக்களிலும் பார்த்திருக்கிறேன். நீங்கள் கூட பார்த்திருப்பீர்கள். வாராமல் விட்ட கலைந்த ஹிப்பித்தலை, எண்ணெய் வடிந்த கரியமுகம், பான்பராக் பல், உருண்டு திரண்ட உருவம், எமதர்மனின் எருமை போல ஒரு மோட்டார்பைக். எல்லா விஜய் சினிமாக்களிலும் இவன் வில்லன் பக்கம் இருந்து கொண்டு தவறாமல் விஜய் கையால் அடிவாங்கிக் காற்றில் நாலெட்டு பல்டி அடித்துப் பறந்து விழுவான்.
“ஆமா சார்”
“என்னண்ணா சார்’ன்னுல்லாம் கூப்புடற? ரமேஷ் மச்சான்தான நீ?”
“இல்லைங்க. நீங்க வேற யாரையோ சொல்றீங்க”
”அப்டியா? அப்போ சாரிண்ணா”, அவசர அவசரமாக அவன் பேசியது மகாநதி படத்தில் துலுக்காணம் பேசுவதை நினைவுப்படுத்தியது.
“தட்ஸ் ஓகே. பரவால்லைங்க”
”பெட்ரோல் வேணுமா?”
எருமையைப் பார்த்தேன். அட பெரிய திமில் கொண்ட எருமை. “ட்ட்ட்டிங்” என உள்ளே மணியடித்தது எனக்கு. அடடா! இதுதான் நான் தேடிய பெட்ரோல் பங்க் போல.
”இருக்கா?”
“ஃபுல்லா இருக்குண்ணே! கொருக்குபேட்டைல நம்மாளுதான்! ஃபுல் டேங்க் ரொப்பினு வன்ட்டேன்”, நான் நம்பமாட்டேனோ என்று பொறுப்பாய் சாவிபோட்டு டேங்கைத் திறந்து காட்டினான். பெட்ரோல்! பெட்ரோல்! ஆ….. தகதகத்து த் தளும்பிக் கொண்டிருந்தது தங்கம் தங்கம்!
”ரைட்டு, நீ ரவி சாரோட மச்சான்தானே?”
“எந்த ரவியை சொல்றீங்க? நான் ரவியோட அக்கா பையன்”
“இல்ல, உங்கக்காவதான அம்பேத்கார் தெருல ரவிக்கு குட்த்துகுது?”
அவன் எதற்காக என்னை இத்தனை தூரம் தெரிந்தவன் போலக் காட்டிக் கொள்கிறான் என்று யோசித்ததில் அவன் கொடுக்கும் பெட்ரோலுக்குக் கேட்கப் போகும் தொகையுடன் அது தொடர்புடையதாக இருக்குமா என என்னை யோசிக்க வைத்தது.
“இல்லீங்க. அக்கா இந்த ஊர்ல இல்லை”
“சரி வுடு. பாட்டில் இருக்குதா?”
“எதுக்கு?”
“பெட்ரோல் புடிக்கணும்ல”
“ஆ ஆ… !”, வெய்யிலுக்கு வழித்துணையாய் வாங்கிய கோக்கக்கோலா பாட்டிலை உதறி உதறித் தந்தேன். அவன் வண்டியைச் சாய்த்து நிறுத்தி பக்கவாட்டு ட்யூபை பிடுங்கியெடுத்து பாட்டிலில் பெட்ரோல் பிடிக்கத் துவங்கினான். பெட்ரோல் பெட்ரோல் பெட்ரோல் பெட்ரோல்…. மனசு அடித்துக் கொண்டது. ஏதோ இன்ஸ்டண்ட் கவிதையெல்லாம் யோசித்தது மனது. தயாரான கவிதையை எடுத்து வெளியே வீச வார்த்தைகள் வந்து விழவில்லை.
பாதி பாட்டில் வந்தவுடன், “போதும் போதும்”, என நிறுத்தினேன். ஒரு லிட்டர் வெளிமார்கெட்டில் அப்போது நாற்பத்தி சொச்ச ரூபாய். இவன் லிட்டருக்கு இருநூறு சொன்னாலும் பாட்டிலில் பிடித்த கால் லிட்டருக்கு ஐம்பதைத் தந்துவிடலாம்.
“வாய்ங்க்கண்ணா பரவால்ல”
“இல்ல, போதும் போதும்”
பாட்டிலைக் கொடுத்துவிட்டு வண்டியில் ஏறியமர்ந்தான். என் வண்டியை சாய்த்துவிட்டு பர்ஸை வெளியே எடுத்தேன்.
“எவ்ளோ?”
“என்னது எவ்ளோ?”
“எவ்ளோ தரணும்”
“ன்னாத்துக்கு?”
“பெட்ரோல்?”
“ண்ணா… இன்னாண்ணா? உள்ள வைண்ணா துட்ட”
என்ன இவன் கிறுக்கனாக இருக்கிறான்?
“இல்லல்ல ப்ளீஸ் வாங்கிக்கோங்க ப்ரதர். இருக்கற பெட்ரோல் கிராக்கிக்கு.. ப்ளீஸ் வாங்கிக்கணும்”
“ண்ணோவ்… துட்டுக்கா குட்த்தாங்க?”
“ப்ளீஸ் ஓசிலல்லாம் வேணாம். காசு வாங்கிக்கோங்க, இந்தாங்க”
“நீ எதுனா குடுக்குணுன்னு நெனச்சியன்னா யார்னா இப்டி பெட்ரோல் இல்லாம வண்டிய உர்ட்டினு போசொல்லோ பெட்ரோல் ஃப்ரீயா குடு. துட்ட உள்ள வைண்ணா”, வண்டியை உதைத்துக் கிளப்பிக் கொண்டு போயேவிட்டான்.
1 comment:
பதிவு பேசுகிறது. அருமை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள் திரு கிரி.
Post a Comment