Showing posts with label சொல்வனம். Show all posts
Showing posts with label சொல்வனம். Show all posts

Nov 18, 2012

தேவனின் கோயில் ஆலயமணியின் ஓசை

இந்தக் கல்யாணங்களில் ரிசப்ஷனுக்குக் இசைக் கச்சேரி நடத்தும் பார்ட்டிகளின் ஸ்ட்ராட்டெஜி எல்லாம் விசித்திரமானவை.  கல்யாண நிகழ்ச்சிக்கும் தாங்கள் பாடுவதற்கும் ஏதும் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை என்று முழுமையாக நம்பிக் களமிறங்குபவர்கள் அவர்கள்.

கல்யாண வீட்டில் வந்து “கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா” பாடுவார்கள். தங்களுக்குப் பாடவரும் ஒரு சிக்கலான பாடல் என்பதால் கல்யாண வீட்டிலேயே “சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை” என்பார்கள். 

தங்கள் ஆர்கெஸ்ட்ராவின் ட்ரம்மர் கற்ற சகல வித்தைகளையும் காட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக,  ”சுடரோடு எரியாது திரி போன தீபம்; உயிர் போன பின்னாலும் உடல் இங்கு வாழும்.... பாடவா உன் பாடலை...................”, பாடுவார்கள். 

“சின்னவீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா” என்று அந்தந்த சீசனில் களைகட்டும் வெவஸ்தை கெட்ட அசிங்கங்களும் ஆர்கெஸ்ட்ராகளின் லிஸ்டில் கண்டிப்பாக உண்டு.

இந்த லிஸ்டைப் போட்டால் போட்டுக் கொண்டே போகலாம். அதை விட்டுவிட்டு நாம் இவர்களின் துவக்கப் பாடலுக்கு வரலாம்.

துவக்கப்பாடல் எப்போதும் பக்திப் பாடலாக இருந்தாக வேண்டும் என்பது நியதி. அந்த நியதியை எப்படிக் கடைபிடிக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது விஷயம்.

பொதுவாக நிறையபேர் பாடும் பாடல்கள் இரண்டு - பக்திப் பாடல் ஆல்பத்தில் வந்த எண்பதுகளின் பாடலான ஆயர்பாடி மாளிகையில் அல்லது அதே எண்பதுகளில் இளையராஜா இசையில் ”தாய் மூகாம்பிகை” படத்தில் வந்த பக்திப் பாடலான ஜனனி ஜனனி.

ஆயர்பாடி மாளிகையில் அப்படியே சாஃப்டாக முடிந்துவிடும். பெரிய படுத்தல்கள் எல்லாம் இல்லாத பாடுபவர் ரிஸ்க் எடுக்கத் தேவையில்லாத சௌகர்யமான பாடல். ஜனனி ஜனனி பாட தேர்ந்த ஆரம்பகர்த்தா தேவை. “சிவசக்த்யா யுக்தோ யதிபவதி” என்று தொடங்கும் அந்த ஆரம்ப ஸ்லோகத்தை (!!)  ராஜாவுக்குப் பிறகு யாரும் இதுவரை சரியாகப் பாடிக் கேட்டதில்லை நான். 

அந்த ஸ்லோகம் யாருக்குச் சுமாரே சுமாராக வருகிறதோ அவர் தொடக்கத்தில் முன்னிருத்தப்படுவார். அதைத் தொடர்ந்து பல்லவி தொடங்கும் வேளையில் மூக்கால் குரலை வெளி அனுப்பினால் அது இளையராஜா என்று நம்பும் மற்றொருத்தர் பாடலைத் தொடங்க கச்சேரி இனிதே துவங்கும். இந்த மூக்கும் திறன் கொண்ட எவருக்கும் “அடடா, அச்சு அசல் இளையராஜா கொரல் இல்ல”, என்று எதிரில் அமர்ந்திருக்கும் ஒன்றிரண்டு ரசிகமகாஜனங்கள் புளகாங்கிதமடைந்து ஓப்பன் டு தி ஃபேஸ் பாஸிடிவ் கமெண்ட் கொடுக்கும். அதைக் கண்டு, கேட்டு அந்த மூக்கரும் புளகாங்கிதம் அடைந்து கொள்ளலாம்.

கொஞ்சம் பிரபலமான ப்ரொஃபஷனல் ட்ரூப்புகள் தேர்ந்த பாடகர்கள் கைவசம் இருந்தால் “தேவன் கோவில் மணியோசை” பாடுவார்கள். சீர்காழி பாடிய ரொம்பவும் ரிஸ்கான பாடல். கல்யாணங்களில் ரொம்பவே அரிதாகக் கேட்கக் கிடைக்கும்.

பலராலும் பாடப்படும் இன்னொரு பாடல் உண்டு. அது “பாலும் பழமும்” படத்தில் வரும் “ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்”. பக்திப் பாடல் என்ற தகுதியைப் பெறுவதற்கு “ஆலயம், மணி”  இந்த இரண்டு வார்த்தைகள் நம்ம ட்ரூப்புகளுக்குப் போதுமானதாக இருப்பது வினோதம்தான்.

எல்லாப் பாட்டும் போரடித்துப் போனால் என்று எடுத்துக் கொள்ள ஒரு பாடல் உண்டு. அது, “தேவனின் கோயில் மூடிய நேரம்”, என்ற பாடல். உங்களில் பெரும்பாலானவர்கள் நிச்சயம் கேட்டிருப்பீர்கள். அறுவடைநாள் படத்தில் ராஜா இசையில் சித்ரா பாடிய பாடல். இந்தப் பாடலை பள்ளிப் பருவத்தில் எப்போதோ கேட்டிருந்தாலும் 2003’ஆம் வருடத்திற்குப் பின்னர் ட்ரூப்புகளில் நானும் பாடுகிறேன் என்று களமிறங்கிய பின்னரே நிறைய கேட்டேன்.

ட்ரூப்பில் பாடும் பெண்டிர் எப்போதும் தனியாவர்த்தனகர்த்தாக்கள். ஆண் பாடகர்கள் நான்கு பேர் இருந்தால் பெண் பாடகிகளின் அவைலபிலிடி ஒன்றுக்கு மேல் இருக்காது. கச்சேரி வழக்கமாக முடிய இரவு பத்துமணி ஆவதும், அதன் பின் அவர்கள் வீடு புறப்படுவதும் ”ஓகே” என்று ஒப்புக்கொண்டு நம்பி அனுப்பும் பக்குவம் கொண்ட அரிதான வீடுகளிலிருந்து வருபவர்கள் அவர்கள்.

இவர்களில் பெரும்பாலானவர்களின் திறமை இரண்டே விஷயங்கள்தான். ஒன்று தாளத்தோடு பாடுவது; இரண்டு பாடலின் ஆரம்பம், இடையே, முடிவில் என்று எந்த இடத்தில் எடுக்க/நிறுத்த வேண்டுமோ அதை சரியாக அறிந்து வைத்திருப்பது. மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி, உச்சஸ்தாயி, ஸ்ருதி பிசகல்கள், சங்கதிகள் என்ற விஷயங்களுக்குள் எல்லாம் இவர்களில் பெரும்பாலானோர் நுழைய மாட்டார்கள். எனவே இவர்கள் பாடும்போது இந்த தேவனின் கோயில் போன்ற பாடல்களின் முதல் இரண்டு வார்த்தை உங்களுக்குப் புரிந்துவிட்டால் நீங்கள் பெரிய ஜீனியஸ். (சக ஆர்கெஸ்ட்ரா பாடகியர் இந்தப் பதிவை தப்பித் தவறியும் படிக்காமல் இருக்கக் கடவது)

ரொம்ப நாட்களுக்கு இது ஏதோ பக்திப் பாடல்தான் போல என்று நினைத்திருந்தேன். ஒருமுறை டிவியில் அறுவடைநாள் படம் தொடங்கும்போது இந்தப் பாடலுடன் தொடங்க, கொஞ்சம் சித்ரா குரலில் அந்தப் பாட்டை  முதல்முறை முழுசாய்க் கேட்டேன். இதென்ன கோயில் மூடினாற்போலெல்லாம் பாட்டில் வருகிறது. கோயில் திறந்தால்தானே பக்தி என்று வரிகளை உன்னிப்பாய்க் கவனித்தேன். கொடுமையே கொடுமையே என்னும் அளவிற்கு இந்தப் பாடலிலும் தேவனையும் கோயிலையும் விட்டால் பக்தியுடன் எந்த ஸ்னானப்ராப்தியும் இல்லாத பாடல் இது. சுமைதாங்கி, இடிதாங்கி என்றெல்லாம் பாடல் நடுவில் வருகிறது.

என் ட்ரூப் ஓனர் சரவணகுமாரிடம் கேட்டேவிட்டேன், “என்ன மச்சி, தேவன், கோயில், ஆலயம், மணி இப்படி எல்லாம் வார்த்தை வந்தா அது பக்திப் பாட்டு ஆகிடுமா? என்னடா உங்க லாஜிக்கு?”

“சிம்பிள் லாஜிக் மச்சி. மங்களகரமான வார்த்தைகளை வெச்சு கச்சேரி தொடங்கறோம். அவ்வளவுதான். அதுக்கு மேலே என்ன லைன் வருதுன்னு ரெண்டு வருஷம் கச்சேரில பாடின பிறகுதானே உனக்கே விளங்கிச்சு. இங்க ஒருநாள் கேக்கறவனுக்கு என்ன விளங்கப் போவுது?”

என்னத்த சொல்ல? என்னமோ பண்ணுங்கடா என்று அதன்பின் இந்த விஷயத்தில் நான் கேள்வியே கேட்பதில்லை.

லேட்டஸ்ட் சொல்வனம் இதழில் சுகா எழுதிய தேவனின் கோயில் பதிவைப் படித்த பின்னர்தான் இந்தப் பாடலுக்கு கச்சேரியைத் துவங்குவதற்கு எத்தனை பெரிய தகுதி இருக்கிறது எனப் புரிகிறது. சில விஷயங்களில் உங்களுக்குள் ரசனையை விதைக்கவும் யாரேனும் தேவைப்படுகிறார்கள்.  இரண்டு நாட்களாக இந்தப் பாடலுடனேயே உழன்று கொண்டிருக்கிறேன்.

என்ன எழுதினாலும் எத்தனை எழுதினாலும் சுகா கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தேக்கி வைத்த ரசனையைக் கொண்டு எழுதியதைப் போல் என்னால் எழுதிவிட முடியாது. எனவே அவர் வரிகளிலேயே இந்தப் பாடலைப் பற்றி படித்து விடுங்கள்.

அடுத்ததாக “ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்” பாடலானது பக்திப் பாடலுக்கான அந்தஸ்து உடையது என்று என் மனசு ஒப்புக்கொள்ள யார் பதிவு எழுதுவார்களோ தெரியவில்லை

May 7, 2012

கருப்பு நகரம்


வடசென்னை என்னை வளர்த்தது எனக் கூறிக் கொள்வதில் எனக்கு எப்போதும் ஒரு பெருமை, கர்வம் உண்டு. உலகின் உண்மையான மக்கள் வாழும் ஒருசில இடங்களில் வடசென்னைக்கு முதலிடம் உண்டு எனத் தீவிரமாக நம்புபவன் நான். வட சென்னையின் நினைவுகளை அசைபோட்டு சொல்வனம் இணைய இதழில் எழுதிய ஒரு பதிவு! சொல்வனத்திற்கு நன்றிகள்.
______________________________
“கவுறு அந்துக்கும் சார், தூக்காத தூக்காத! அதான் ஸ்டைக்கு இன்னும் முடிலல்ல, இன்னாத்துக்கு வண்டி எட்த்துன்னு வர?”, சில்லி மிட்-ஆனில் நின்றவன் திரும்பியும் திரும்பாமலும் சொல்லிய நேரத்தில் தன் கைக்கு எட்டிய கேட்சை அவன் தவறவிட்டான்.
ஏன், எதற்கு என்று என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் பெட்ரோலிய நிறுவனங்கள் பண்ணிய திட்டமிட்ட திடீர் ஸ்ட்ரைக்கினால் மூன்று நாளாய் எல்லா பெட்ரோல் பங்குகளும் மூடிக்கிடக்கின்றன. ”ஸ்ட்ரைக் முடிஞ்சிடுச்சி”, என்று யாரோ எங்கேயோ சொன்னாற்போல் காதுகளுக்கு இருக்கவே அந்த சனிக்கிழமை மதியத்தில் பெட்ரோல் டாங்கில் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்சநஞ்ச எண்ணெயை நம்பி வண்டியை எடுத்துவிட்டேன். மூலக்கடை வரை போனால் பெட்ரோலிட்டு வரலாம்.
மூலக்கடை?
மாதவரத்திற்கும் பெரம்பூருக்கும் இடையே மூலக்கடையை நீங்கள் கண்டறியலாம். சென்னை கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையின் முதல் கேட்-வே ரெட்ஹில்ஸ் என்றழைக்கப்படும் செங்குன்றம். அங்கே நுழைந்து நீங்கள் சென்னையினுள்ளே நுழைந்தால் டேங்கர் லாரிகள், சிமெண்ட் லாரிகள், அரிசி மூட்டைகள் சுமக்கும் லாரிகள் என்று விதவித சரக்கு லாரிகள் நீண்டு வடம் பிடிக்கும் சாலைகள் கொண்ட வடசென்னையின் நெருக்கடியான போக்குவரத்து நெரிசலின் ஒரு சாம்பிளை உங்களுக்குக் காட்டிவிட்டு பெரம்பூருக்கோ, மாதவரத்திற்கோ, வியாசர்பாடிக்கோ உங்களை வழியனுப்பி வைப்பது இந்த மூலக்கடை என்னும் இரண்டாவது கேட்-வே.
சென்னையை ஒரு ஸ்கேல் வைத்து ரெண்டாய்ப் பிரிக்கும் ஒரு கோடு உண்டென்றால் அது பூந்தமல்லி நெடுஞ்சாலைதான். அந்தப்பக்கம் உன்னுது இந்தப்பக்கம் என்னுது என்று இங்கேதான் வடசென்னையும் தென்சென்னையும் கொஞ்சமாய் மத்தியச் சென்னையை அங்கங்கே சிதற விட்டுவிட்டு பிரிந்து கிடக்கின்றன. இதில் வடசென்னை எப்போதும் தீண்டத்தகாத ஒரு பிரதேசம். மூலக்கடை, கொடுங்கையூர், மாதவரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, புளியந்தோப்பு, வியாசர்பாடி, சர்மாநகர், முல்லைநகர், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, எண்ணூர் மற்றும் இன்னபிற பகுதிகள்.
ஆப்பிரிக்கா முழுக்கவும் இருண்ட கண்டமாக இருப்பதாகவும், இந்தியாவின் சாலைகளில் புலிகள் ஓடுவதாகவும் உலக மக்களால் எப்படி நம்பப்படுகிறதோ, அதேபோல வடசென்னையில் வியர்வையில் நனைந்த எண்ணெய்த் தேகங்கொண்ட கரிய மனிதர்கள் மட்டுமே வசிப்பதாகவும், மடிப்பாக்கத்திலும் மந்தைவெளியிலும் இல்லாத குப்பைமேடுகள் எல்லாம் இங்கே மட்டுந்தான் இருப்பதாகவும் ஒட்டுமொத்த தென்சென்னையும் நம்பிக்கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கை சற்றும் வீணாகிவிடுதல் கூடாது என்னும் முனைப்பில் ஒவ்வொரு அரசாங்கமும் தன்னால் இயன்றவரை இந்த ஊரை உதாசீனம் செய்கிறது. அண்ணாநகர், புரசைவாக்கம், கீழ்பாக்கம் முதலான மத்தியப் பகுதிகளை தென்சென்னைக் கால்கள் தாண்டினதாய் சரித்திரம் இல்லை.
14thwashermanpet_476399eமாதவரம், மாதவரம் பால்பண்ணை, கொடுங்கையூர், தபால்பெட்டி, பொன்னியம்மன்மேடு, எருக்கஞ்சேரி வாழ் மக்கள் துணியெடுக்க, சினிமா பார்க்க, எக்ஸ்ரே எடுக்க, சாப்பாடு பார்சல் வாங்க மூலக்கடைக்குத்தான் வரவேண்டும்.உயர்தர சைவ உணவகம் என்ற பலகை தாங்கிய இரண்டு ஹோட்டல்களும், அரை டஜன் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளும், ஒரு டஜன் பழ வண்டிக்கடைகளும், இன்னமும் ஏழெட்டு டஜன் இதர கடைகளும், மூன்று தியேட்டர்களும் இங்கே உண்டு. இப்படிப்பட்ட புண்ணிய க்ஷேத்திரத்திற்குத்தான் பெட்ரோல் பங்க் தேடியொரு நீண்ட பயணம் புறப்பட்டிருந்தேன்.
ஒண்ணரை கிலோமீட்டர்தான் ஓடியிருந்த வண்டி அந்தோணி ஆஸ்பத்திரி வந்ததுமே விக்க ஆரம்பித்தது. சோக்கைப் போட்டு விடாமல் ஆக்ஸலேட்டரை முடிந்தமட்டும் முடுக்கியதில் ஷூ கம்பெனிவரை விரட்ட முடிந்தது. வேறு வழியில்லை முக்கால் தொலைவு வந்தாயிற்று இன்னும் கொஞ்சம் போனால் பெட்ரோல் கிடைத்துவிடும், உருட்டத் துவங்கினேன்.
மூலக்கடை ஜங்ஷனில் வழக்கமாக நடுரோட்டில் நிற்கும் பழக்கடைகளும், பூக்கடைகளும் ஓடாத வண்டிகள் தந்த இடத்தையும் சேர்த்து முழுரோட்டையும் ஆக்ரமித்துக் கிடந்தன. ”எங்கள் ஆண்டவனைக் கேள்வி கேட்ட மால்கம் ஸ்பீடே! மன்னிப்பு கேள்” என்ற அந்த பச்சைநிறத் தமிழ் பேனரை சச்சின் படிப்பாரா இல்லை மால்கம் ஸ்பீட் படிப்பாரா என்றெல்லாம் யோசிக்க விழையவில்லை ”பெட்ரோல் பெட்ரோல்” என்று மனனம் செய்து கொண்டிருந்த என் மனம். கிட்டத்தட்ட ஒண்ணரை கிலோமீட்டர் உருட்டலுக்குப் பின் மூலக்கடை பஸ் டிப்போ வரை சென்று சேர்ந்ததில் கயிறு பிடித்து இழுத்து மூடிக் கிடந்த பெட்ரோல் பங்கை தரிசனம் செய்ய நேர்ந்தது.
ஒரு தற்காலிக கிரிக்கெட் மைதானமாகிப் போயிருந்தது அந்த பங்க். ஏழெட்டு பயல்கள் செங்கல் வைத்து வேலிக்காத்தான் குச்சிகளை ஸ்டம்ப்களாக நிற்கவைத்து விளையாடிக் கொண்டிருந்தான்கள். முப்பதுக்கு அறுபது ஏரியாவையும் கிரிக்கெட் மைதானம் ஆக்கும் சாதுர்யம் நம்மை விட்டால் வேறு யாருக்குக் கைவரும்? வாங்க வந்த பொருளின் நினைவகன்று அவர்கள் ஆட்டத்தில் சற்றே திளைத்தேன். இருபதின் ஆரம்ப வயதுகளில் இருந்தனர் அங்கே அத்தனை பேரும். அத்தனையும் வடசென்னையின் டை’யில் வார்த்தெடுத்த அக்மார்க் முகங்கள். அவர்கள் பேச்சினூடே நான்கு வார்த்தைக்கு ஒரு வார்த்தை மற்றவனின் ஆத்தாளையோ அல்லது அம்மாளையோ அழைப்பது அவர்களின் வொகாப்லரிக்கு அங்கே அவசியமாயிருந்தது. பந்தை வீசுபவனும் மட்டையை வீசுபவனும் கூட முடிந்த இடைவெளிகளில் ஆ’வையும் அ’வையும் இங்கே அழைத்தார்கள். வீச்சு கனஜோராய் இருக்குமோ என்னவோ!
பத்து நிமிட ஆட்டத்தில் அங்கே என் காத்திருத்தல் யாருக்கும் ஒரு பொருட்டாய் தெரியவில்லை. கயிற்றை அகற்றி உள்நுழைய முற்பட்டேன்.
“கவுறு அந்துக்கும் சார், தூக்காத தூக்காத! அதான் ஸ்டைக்கு இன்னும் முடிலல்ல, இன்னாத்துக்கு வண்டி எட்த்துன்னு வர?”, சில்லி மிட்-ஆனில் நின்றவன் திரும்பியும் திரும்பாமலும் சொல்லிய நேரத்தில் தன் கைக்கு எட்டிய கேட்சை அவன் தவறவிட்டான்.
“பொறம்போக்கு! அத்தப் புடிக்கத் தெர்ல்லியா உனுக்கு”, அத்தனை பேரிலும் அவன் ஒருவன் மட்டும்தான் பெட்ரோல் பங்க் சீருடை துறந்தவனாக இருந்தான். கேப்டனாயிருக்க வேண்டும், யாரைத் திட்டினான் எனத் தெரியவில்லை.
”ஸ்ட்ரைக் முடிஞ்சிடுச்சின்னு சொன்னாங்களே?”
”யாரு சொன்னா உன்னாண்ட முட்ஞ்சிர்ச்சின்னு? எவனா சும்மாங்காட்டியும் சொல்லிருப்பான்”, என்னைப் பார்த்துக் கொண்டே தன் ஏரியாவிற்குள் நுழைந்த பந்தை பிடித்து பவுலர் ஸ்டம்புக்கு விட்டெறிந்தான், “இப்டி புடிக்கணும் தெரிஞ்சிக்கோ”, சில்லி மிடானுக்கு இன்ஸ்டண்ட் பாடம் எடுத்தான்.
”சார், ஸ்டைக் முடியல. முட்ஞ்சதும் வாங்க சார். இன்னிக்காவது கொஞ்சம் வெளாடவுடுங்க”, கறாரான ஒரு குரல் டால்பி எஃபெக்டில் வலது மூலையிலிருந்து கேட்டது.
“யாரோ சொன்னாங்கண்ணா, அதுவா விஷயம்? ஒரு அரை லிட்டர் பெட்ரோல் போடு, வீடு வரியும் போயிருவேன்”.
“உனுக்கு தந்துடுவம்ப்பா. உன்னப்பாத்து வரிசகட்டி நிப்பானே லைனா. அல்லாருக்கும் எப்டி தரசொல்ற?”, மேலே பேசாமல் மறு உருட்டலைத் துவங்கினேன்.
“அன்னாண்ட எங்க போற? ரெட்டீல்ஸ் வரியும் எங்கயும் பெட்ரோல் கெடிக்காது”
“நான் வேணா பின்னாடி காம்பவுண்ட் பக்கம் வர்றேன். கொஞ்சம் பார்த்து குடேன் நைனா?”, அவன் பாஷையில் இறங்கிப் பார்த்தேன்.
“போ சார் போ சார்”, அதற்கு மேல் மரியாதை இல்லை. புறப்பட்டுவிட்டேன்.
கள்ளச்சந்தையில் பொருள் விற்பவர்களைக் கண்டாலே வெகுண்டு எழும் புரட்சிகர மனம் இப்போது சாலையில் யாரும் ப்ளாக்கில் பெட்ரோல் விற்கமாட்டார்களா என்று தேடியது. மறுபடி நாலரை கிலோமீட்டர் வண்டியை உருட்டிக் கொண்டே எப்படிப் போவதாம்? தெரிந்தவன் அறிந்தவன் எவனும் எதிரில் வரவில்லை, வந்தாலும் ஒரு இருநூறு மில்லி கடன் கேட்கலாம். நினைத்து அரை வினாடி கடக்கவில்லை பூமி என்கிற பூமிநாதன் எதிரில் திடீர்ப் பிரசன்னம் ஆனான்.
“ஹாய்! ஹவ் ஆர் யூ?”
“நீ எப்போடா இங்க்ளீஷ் தொரை ஆன?”
“போச்சு! அதைவிடு, பெட்ரோல் இருக்கா?”
“அதையேதான் நானும் கேக்கறேன். பெட்ரோல் இருக்கா?”
“சரி விடு! போயிட்டு வர்றேன்”
“வராதே போ”
பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒட்டி உறவாடி நட்பு வளர்த்துப் பழகிய இருவருக்கும் அங்கே பெட்ரோல் லேது என்றது பேச மறுபேச்சு இல்லை. இப்போதைக்குத் தேடல்தான் அவசியம்.
“பெட்ரோல் கெட்ச்சா ஃபோன் பண்றா”, என்றுவிட்டுப் போயேவிட்டான்.
giri
ரோட்டில் எல்லோரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். நானும் பார்த்தவர்களையெல்லாம் மதித்து மறுபார்வை பார்த்துக் கொண்டே வந்தேன். மீண்டும் பழக்கடைகளையும், சச்சின், மால்கம் ஸ்பீடுகளையும் கடந்து மூலக்கடை பேருந்து நிறுத்தத்தையும் தாண்டி ஆளரவமற்ற அந்த கேட்பாரற்ற சாலையில் நடந்து கொண்டிருந்தேன்.
“என்னண்ணா! பெட்ரோல் இல்லியா?”, என்றவனை நான் எல்லா சினிமாக்களிலும் பார்த்திருக்கிறேன். நீங்கள் கூட பார்த்திருப்பீர்கள். வாராமல் விட்ட கலைந்த ஹிப்பித்தலை, எண்ணெய் வடிந்த கரியமுகம், பான்பராக் பல், உருண்டு திரண்ட உருவம், எமதர்மனின் எருமை போல ஒரு மோட்டார்பைக். எல்லா விஜய் சினிமாக்களிலும் இவன் வில்லன் பக்கம் இருந்து கொண்டு தவறாமல் விஜய் கையால் அடிவாங்கிக் காற்றில் நாலெட்டு பல்டி அடித்துப் பறந்து விழுவான்.
“ஆமா சார்”
“என்னண்ணா சார்’ன்னுல்லாம் கூப்புடற? ரமேஷ் மச்சான்தான நீ?”
“இல்லைங்க. நீங்க வேற யாரையோ சொல்றீங்க”
”அப்டியா? அப்போ சாரிண்ணா”, அவசர அவசரமாக அவன் பேசியது மகாநதி படத்தில் துலுக்காணம் பேசுவதை நினைவுப்படுத்தியது.
“தட்ஸ் ஓகே. பரவால்லைங்க”
”பெட்ரோல் வேணுமா?”
எருமையைப் பார்த்தேன். அட பெரிய திமில் கொண்ட எருமை. “ட்ட்ட்டிங்” என உள்ளே மணியடித்தது எனக்கு. அடடா! இதுதான் நான் தேடிய பெட்ரோல் பங்க் போல.
”இருக்கா?”
“ஃபுல்லா இருக்குண்ணே! கொருக்குபேட்டைல நம்மாளுதான்! ஃபுல் டேங்க் ரொப்பினு வன்ட்டேன்”, நான் நம்பமாட்டேனோ என்று பொறுப்பாய் சாவிபோட்டு டேங்கைத் திறந்து காட்டினான். பெட்ரோல்! பெட்ரோல்! ஆ….. தகதகத்து த் தளும்பிக் கொண்டிருந்தது தங்கம் தங்கம்!
”ரைட்டு, நீ ரவி சாரோட மச்சான்தானே?”
“எந்த ரவியை சொல்றீங்க? நான் ரவியோட அக்கா பையன்”
“இல்ல, உங்கக்காவதான அம்பேத்கார் தெருல ரவிக்கு குட்த்துகுது?”
அவன் எதற்காக என்னை இத்தனை தூரம் தெரிந்தவன் போலக் காட்டிக் கொள்கிறான் என்று யோசித்ததில் அவன் கொடுக்கும் பெட்ரோலுக்குக் கேட்கப் போகும் தொகையுடன் அது தொடர்புடையதாக இருக்குமா என என்னை யோசிக்க வைத்தது.
“இல்லீங்க. அக்கா இந்த ஊர்ல இல்லை”
“சரி வுடு. பாட்டில் இருக்குதா?”
“எதுக்கு?”
“பெட்ரோல் புடிக்கணும்ல”
“ஆ ஆ… !”, வெய்யிலுக்கு வழித்துணையாய் வாங்கிய கோக்கக்கோலா பாட்டிலை உதறி உதறித் தந்தேன். அவன் வண்டியைச் சாய்த்து நிறுத்தி பக்கவாட்டு ட்யூபை பிடுங்கியெடுத்து பாட்டிலில் பெட்ரோல் பிடிக்கத் துவங்கினான். பெட்ரோல் பெட்ரோல் பெட்ரோல் பெட்ரோல்…. மனசு அடித்துக் கொண்டது. ஏதோ இன்ஸ்டண்ட் கவிதையெல்லாம் யோசித்தது மனது. தயாரான கவிதையை எடுத்து வெளியே வீச வார்த்தைகள் வந்து விழவில்லை.
பாதி பாட்டில் வந்தவுடன், “போதும் போதும்”, என நிறுத்தினேன். ஒரு லிட்டர் வெளிமார்கெட்டில் அப்போது நாற்பத்தி சொச்ச ரூபாய். இவன் லிட்டருக்கு இருநூறு சொன்னாலும் பாட்டிலில் பிடித்த கால் லிட்டருக்கு ஐம்பதைத் தந்துவிடலாம்.
“வாய்ங்க்கண்ணா பரவால்ல”
“இல்ல, போதும் போதும்”
பாட்டிலைக் கொடுத்துவிட்டு வண்டியில் ஏறியமர்ந்தான். என் வண்டியை சாய்த்துவிட்டு பர்ஸை வெளியே எடுத்தேன்.
“எவ்ளோ?”
“என்னது எவ்ளோ?”
“எவ்ளோ தரணும்”
“ன்னாத்துக்கு?”
“பெட்ரோல்?”
“ண்ணா… இன்னாண்ணா? உள்ள வைண்ணா துட்ட”
என்ன இவன் கிறுக்கனாக இருக்கிறான்?
“இல்லல்ல ப்ளீஸ் வாங்கிக்கோங்க ப்ரதர். இருக்கற பெட்ரோல் கிராக்கிக்கு.. ப்ளீஸ் வாங்கிக்கணும்”
“ண்ணோவ்… துட்டுக்கா குட்த்தாங்க?”
“ப்ளீஸ் ஓசிலல்லாம் வேணாம். காசு வாங்கிக்கோங்க, இந்தாங்க”
“நீ எதுனா குடுக்குணுன்னு நெனச்சியன்னா யார்னா இப்டி பெட்ரோல் இல்லாம வண்டிய உர்ட்டினு போசொல்லோ பெட்ரோல் ஃப்ரீயா குடு. துட்ட உள்ள வைண்ணா”, வண்டியை உதைத்துக் கிளப்பிக் கொண்டு போயேவிட்டான்.

Dec 9, 2011

லலிதாராமின் துருவ நட்சத்திரம்



“துருவ நட்சத்திரம்”  புகழ்பெற்ற மிருதங்க மாமேதை பழனி சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள் குறித்து நண்பர் லலிதாராம் எழுதியுள்ள நூல். சொல்வனம் வெளியீடாக வெளிவரும் இந்நூலின் வெளியீட்டுவிழா வரும் ஞாயிறன்று சென்னை மயிலை ராகசுதா ஹாலில் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு நண்பர்கள் அனைவரையும் ராம் சார்பில் வரவேற்கிறேன்.




இந்தப் புத்தகம் குறித்த லலிதாராமின் பதிவு: துருவ நட்சத்திரம்

புத்தகம் ஆன்லைனில் பெற: உடுமலை.காம்


Nov 25, 2010

ஏன் கவிதை எழுத வேண்டும்?

ஏன் கவிதை எழுத வேண்டும்? (அல்லது) ஏன் கிவிதை எழுதக் கூடாது?- ஹரன் பிரசன்னாவின் "மூன்று கவிதைகளை" முன்வைத்து.
சிறப்புப் பதிவர்: நட்பாஸ்




முந்தைய இரு பதிவுகள்: 





மொழிபு மூலம் அறிதல் முறை:

....தகவல்களை ஓர் உண்மை நிலை போலவே கற்பனை செய்தும் பார்க்கலாம். இது மேலே சொன்னதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அறிதல்முறை. இதுவே இலக்கியத்தின் வழிமுறை. இவ்வாறு சொல்லிப் பார்த்தலை மொழிபு [Narration] என்கிறார்கள்.

ஆழ்தள அறிதலை நிகழ்த்த கலைகளே உள்ளன. கலைகள் நம்மில் நிகழ்த்துவது ஒரு வகை கனவின் வெளிப்பாட்டைத்தான்...

...இலக்கியம் ஓர் அறிவுத்துறை என்பதுடன் ஒரு கலையும் ஆகும் என்பதே அதன் முக்கியமான சிறப்பம்சம். ஓர் அறிவுத்துறையாக அது உண்மையை அறிய எத்தனிக்கிறது. ஓர் கலையாக அந்த உண்மையை மிக மிக ஆழத்துக்கு கலாச்சாரத்தின் தொடக்கத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கிறது. இப்படி சொல்லலாம். ஒரு பெரும் சிக்கலை நாம் சந்திக்கும்போது அதை அந்த தருணத்தை மட்டும் வைத்தல்ல, நம் இறந்த காலத்தின் கடைசி எல்லை வரை, பால்யம் வரை, கொண்டு சென்று பரிசீலிப்பது போல.

ஆக இலக்கியத்தின் ஒட்டுமொத்த பயன் என்ன ? அது ஓர் அறிதல் முறை. அறிந்தவற்றை மனிதனின் உணர்ச்சி சார்ந்த ஆழத்தால் பரிசீலனை செய்யும் கலை. இரு தளங்களையும் இணைத்து அது செயல்படும்போது எல்லா பிற அறிவுத் துறைகள் எதுவும் சென்று தொட முடியாத இடங்களை தொடுவதாக உள்ளது..."

- ஜெயமோகன்.



எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். தனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லையென்றால் அதைப் பேசியவரைப் பாரபட்சம் பார்க்காமல் நாவால் சுட்டு விடுவார். ரொம்ப கறாரானவர். ஒரு தடவை நான் ஒரு நண்பனின் திருமணத்துக்காக வெளியூர் சென்றிந்தபோது அவரை ஒரு விபத்தாக சந்திக்க நேர்ந்தது- ஆமாம், விபத்துதான்.

பார்த்தவுடனேயே நாலு எட்டில் நெருங்கி வந்து என் கையைப் பிடித்துக் கொண்டார், "என்னப்பா, நீ எங்க இங்கே? பெண் வீடா, மாப்பிள்ளை வீடா?"

எனக்கு சந்தோஷத்தில் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை, நாக்கு மட்டும் நீள ஓடியது- "ஹி ஹி, நமக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர். நாமல்லாம் கணியன் பூங்குன்றனார் கட்சி!-" என்று சொன்னேன்.

அவ்வளவுதான். உடனே அவர் முகம் மாறி விட்டது. கோபத்தில் என் கையை உதறி விட்டார், "யாதும் ஊரே யாவரும் கேளிர். சரி. அதுக்கு அடுத்த வரி என்ன?"

எவனுக்குத் தெரியும்! "அன்பே எங்கள் உலகத் தத்துவம்," என்று சொன்னால் நெற்றிக்கண் இல்லாமலேயே எரித்து விடுவார் மனுஷன். எதுவும் சொல்லாமல் எங்கோ பார்த்துக் கொண்டு நின்றேன்.

"இதோ பாரு பாசு, நான் உன் கிட்ட எவ்வளவோ தடவை சொல்லிட்டேன்- தெரியாத விஷயத்தை எல்லாம் இடம் பொருள் ஏவல் தெரியாம சொல்லிக்கிட்டுத் திரியாதே. வீணா எதுக்கு உனக்கு இந்தப் பாசாங்கு? தொறந்த வீட்டுல நாய் நுழையற மாதிரி எங்க வேணா வருவேன் போவேன்னு வெளிப்படையா சொல்லேன். தேவை இல்லாம கணியன் பூங்குன்றனார் பேரை எல்லாம் இழுத்துக்கிட்டு உனக்கு ஏன் ஒரு புனித பிம்பத்தைத் தயார் பண்ணிக்கறே?" கேட்டு விட்டார்.

நாக்கைப் பிடிங்கிக் கொள்கிற மாதிரி கேட்டு விட்டார். ரோஷப்பட்டால் முகத்தை எங்கே வைத்துக் கொள்வது? மையமாய் சிரித்துக் கொண்டு நின்றேன்.

"இதுக்குப் பேர்தான் credentialism. சொந்த சரக்கு விலை போகும்னு நம்பிக்கை இல்லாதவன்தான் பேரையும் பட்டத்தையும் வெச்சுக்கிட்டு பிழைப்பு நடத்துவான். உனக்கு இது தேவையா?"

தேவையில்லைதான். ஆனால் தேவைதான். சொந்த சரக்கு தயார் ஆகும்வரை அதைவிட நன்றாக இருக்கும் சரக்கைப் பயன்படுத்திக் கொள்கிறேனே, தப்பா? கேட்கவில்லை.

எனக்கு இங்கே ஜெயமோகன் அவர்களின் பெயரும் அவர் சொல்லியிருக்கிற மேற்கண்ட விஷயமும் தேவைப்படுகிறது- நான் எவ்வளவு சொல்லியும் விளங்க வைக்க முடியாத ஒரு விஷயத்தை மேலே இருக்கிற மேற்கோள் சுருக்கமாக, அழகாகச் சொல்கிறது. சில பேர் கம்யூனிஸ்டாக இருக்கிறார்கள், நான் இப்போதைக்கு, சொந்த சரக்கு தயாராகும் வரை க்ரடென்ஷியலிஸ்டாக இருந்துவிட்டுப் போகிறேனே, வேறு வழியில்லை என்கிறபோது என்ன தப்பு?

நான் ஜெயமோகன் அவர்கள் கலை குறித்து எழுதியிருக்கிற விவரணையைதான் பயன்படுத்திக் கொள்ளப் போகிறேன். அவர் அது குறித்து எழுதியிருக்கிற காரணிகளை, அடிப்படைகளை எடுத்துக் கொள்ளப் போவதில்லை. அதை அறிந்து கொள்ள ஆர்வமிருப்பவர்கள் நம் பதிவைப் படித்தவுடன், திண்ணைக்குச் செல்லுங்கள்.

ஆடிசம் (autism) என்று ஒன்று இருக்கிறது. அது ஒரு மாதிரியான எந்திரன் சிட்டி நிலை- "அந்த டிவியைப் போடு," என்றால் போட்டு விடுவார்கள். அவர்கள் அறிந்த மொழியின் ஆழம் அவ்வளவுதான்- அதன் பரப்பில் இருப்பதை மட்டுமே அவர்கள் பொருட்படுத்திக் கொள்வார்கள். உவமை, முரணி, இரட்டுற மொழிதல், உயர்வு நவிற்சி அணி இத்யாதி விவகாரமெல்லாம் அவர்களுக்குக் கை வராதது- வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புபவர்கள் என்றால் அது அவர்கள்தான்.

மொழி என்று இல்லை. நாம் முகத்தை வைத்துக் கொண்டு செய்கிற சேட்டைகள் அவர்களுக்குப் பிடிபடாத ஒன்று. சிரிப்புக்குப் பொருளே சொல்லித் தந்தால்தான் தெரியும். அதிலும் ஏளனச் சிரிப்பு, வெற்றிச் சிரிப்பு, நமுட்டுச் சிரிப்பு, திமிர் சிரிப்பு, வெட்கச் சிரிப்பு, வேதனைச் சிரிப்பு என்று எத்தனை வகைகள்!- அதுவெல்லாம் இவர்களால் புரிந்து கொள்ள முடியாதது. சுருக்கமாக சொன்னால், அடுத்தவர்கள் மனதில் இருப்பதை மட்டுமல்ல, மற்றவர்களுக்கு மனம் என்று ஒன்று இருப்பதையே 'உணர' இயலாதவர்கள் அவர்கள்- தனக்கு உணர்வுகள் இருந்தாலும், அடுத்தவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தடுமாருகிரவர்கள் அவர்கள். தர்க்க நியாயம் மட்டுமே அவர்களால் எளிதில் புரிந்துக் கொள்ளக் கூடிய ஒன்று.


டெம்பிள் க்ராண்டின் என்று ஒருவர். மிகவும் பேசப்படுகிறவர்- அவரும் ஆடிஸ்டிக்தான். அவர் தனது சிந்தனையின் போக்கைக் குறித்து சொல்கிறார், படித்துப் பாருங்கள்- "படங்களால் சிந்தித்தல் - ஆடிசமும் கண்வழிச் சிந்தனையும்", விலங்குகளைப் போல் சிந்தித்தல்"- படித்துப் பாருங்கள். நிறைய சொல்லியிருக்கிறார், அதில் நான் முக்கியமாக சுட்ட விரும்புவது அவர் தன்னால் சொற்களைக் கொண்டு சிந்திக்க முடிவதில்லை என்று சொல்வதைத்தான். அது மட்டுமல்ல- நம்மைப் போன்றவர்கள் வார்த்தைக் கோர்வையாக நினைப்பதை அவரால் புரிந்து கொள்ளவே முடியவில்லையாம்: கல்லூரிக்கு வரும்போதுதான் அப்படி ஒரு விஷயம் இருப்பதே பிடிபட்டது அவருக்கு!

ஹரன் பிரசன்னாவின் கவிதைகளைப் பற்றி சொல்ல வந்தவன் இதை ஏன் பேசிக் கொண்டிருக்கிறேன்? மொழி என்பது நாம் நம் உணர்வுகளை இதயம் விட்டு இதயம் பகிர உதவும் பாலம் என்று சொல்லப் போகிறேன். வாய்மொழி வார்த்தைகள் சீராக, கோர்வையாகப் பயணிக்கிறதே, இந்த மொழிபு (narration) தகவலையும் அதன் உட்கிடக்கையான உணர்வையும் கடத்திச் செல்கிற வாகனம் என்று சொல்லப் போகிறேன். ஆடிசம் இருக்கிறவர்கள் மொழியை சுலபமாகப் பழகிக் கொள்வதில்லை என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். அவர்களின் மொழிபு, உதாரணமாக ஒரு ஆடிஸ்டிக் சிறுவன் சொல்கிற கதை, அவனது கதையாடல், தகவல்கள் நிறைந்த ஒன்றாக இருக்கிறதே தவிர அவனது மொழி உணர்வுகள் செறிந்த ஒன்றாய் இருப்பதில்லை. சொல்லப்போனால் அதை தர்க்கமும் தகவல்களும் மட்டுமே எஞ்சிய, உணர்வுகள் வரண்ட, மொழியின் சாத்தியங்கள் உலர்ந்த, ஒற்றைப் பரிமாண வெற்று மொழிபு என்று சொல்லலாம்- வெறும் பேச்சு என்று சொல்கிறோமே, ஆழமில்லாத, மேலோட்டமான தகவல் பரிமாற்றம்.

கதைகளை விடக் கவிதை மொழியின் உச்ச சாத்தியங்களை விரித்துத் தருகிறது, இல்லையா? மொழியின் நுட்பங்கள் கைவராதவனது கற்பனை கவிதைக்கு உதவாத ஒன்று. கலைகளில் கவிதை, மொழியின் உயிர். மொழி நம் பகிரப்பட்ட, நமக்குப் பொதுமையாய் இருக்கிற உணர்வுகளின் கருவூலம். ஒரு நல்ல கவிஞன், தன் அறிவின் பிரகாசத்தை மட்டும் வெளிப்படுத்துபவனல்ல, தன் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கும் நாடகக்காரன் மட்டுமல்ல- அவன் நாம் அறிந்ததில் ஒரு காலும் அறியாததில் மறு காலும் ஊன்றி நிற்கும் ராட்சதன்: சொல்லப்பட்ட சொல்லில் சொல்லப்படாத பொருளைப் புகுத்தக்கூடிய மந்திரவாதி, புற உலக 'மெய்ம்மையை' சொற்களால் வார்த்தெடுத்து அகவுணர்வில் கரைக்கக்கூடியவன், சொல்லின்றி அகவுணர்வாய் ஊறும் உண்மையை அறியப்படக்கூடிய வகையில் வடிவமைத்து வெளிப்படையாய் மொழியக்கூடியவன்.

எனக்கே மூச்சு வாங்குகிறது! நீங்கள் எதற்கும் திரும்பவும் ஒரு தடவை ஜெயமோகன் அவர்கள் எழுதிய விவரணையைப் படித்து விட்டுத் தொடருங்கள்- நான் இது வரை சொன்னதை விட, அவர் எழுதியிருப்பது ஹரன் பிரசன்னாவின் கவிதைகளுக்குப் பொருத்தமாக இருக்கக் கூடும்!

-------

இந்தப் பதிவை எப்போதோ எழுதி முடித்திருக்க வேண்டும் நான்- ஹரன் பிரசன்னாவின் கவிதைகள் என்னைத் தோற்கடித்து விட்டன. விபரமாக சொல்கிறேன். ஏதோ விளக்கம் தருகிறேன் என்று கிளம்பி விட்டேனே தவிர எனக்கும் அவரது கவிதைகளை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரிவதாயில்லை. முதலில் ஒரு மாதிரியாக பிடிபடுவது போல் இருந்தது- நாம் சொல்வது முட்டாள்தனமாக இருந்து தொலைக்கப் போகிறது, எதற்கும் அவரது கவிதைகளைப் பற்றி யார் என்ன சொல்லியிருக்கிறார்கள், அவரேதான் என்ன சொல்லியிருக்கிறார் பார்ப்போம் என்று தேடினேன்- குழப்பம் அதிகமானதுதான் மிச்சம். வேறு வழியில்லை, என் மனதுக்குத் தோன்றியதை சொல்லிக் கொண்டு போக வேண்டியதுதான், வேறு வழியில்லை.

முதலில் என் குழப்பம் ஏன் அதிகமானது என்பதை சொல்லி விடுகிறேன். ஹரன் பிரசன்னா கிழக்கு பதிப்பகத்தில் பணி புரிகிறார் என்பது டிவிட்டரில் அவரைப் பின் தொடர்பவர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. தமிழ் பேப்பர் கிழக்குப் பிரசுரம் என்பதும் ரகசியமில்லை. அங்கு தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் என்பவர் கவிதைகிவிதை எழுதிக் கொண்டிருக்கிறார். சொல்வனத்தில் தன் கவிதைகள் வந்திருக்கின்றன என்ற செய்தியை சொல்கிற ஹரன் பிரசன்னா தன் தளத்தில், கிவிஞர்களை விரட்டுவோம்-1 என்று அதற்குத் தலைப்பிடுகிறார். இதுவே அவர்தான் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனோ என்ற ஐயத்தை வரவைக்கிறது. போதாக்குறைக்கு அவர் வா மணிகண்டனின் தளத்தில் ரொம்ப நாள் முன்னமேயே எப்படி கவிதை எழுதுவது என்று வழி காட்டுவது மாதிரி கவிதைகிவிதை எழுதி இருக்கிறார்- இங்கே.. அது என் கண்ணில் பட்டுத் தொலைத்து விட்டபின் என்னால் ஹரன் பிரசன்னாவை சீரியசான கவிஞராகக் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவர் கவிஞனின் அடையாளத்தோடேயே விளையாடுவது போல் தெரிகிறது, ஆபத்தான விளையாட்டு.

இருந்தாலும் அவர் இந்தக் கவிதைகளை சீரியஸாக எழுதியிருக்கிறார் என்று வைத்துக் கொண்டு படிக்கிறேன்- இதோ அவர் எழுதியுள்ள மூன்று கவிதைகளில் மூன்றாவது-

மகுடி


வாயின் வழியாக
பாம்புக் குட்டிகள்
வந்த வண்ணம்
எவனோ ஊதும்
மகுடிக்கு என் ஆட்டம்
ஊரெங்கும்
வழியெங்கும்
சிதறி ஓடும்
என் வயிற்றுப் பாம்புகள்
மகுடிக்காரனை விட்டுவிட்டு
எதிர்ப்படுவோரையெல்லாம்
கொத்திச் செல்கின்றன
கண்ணாடியில் என் முகமேகூட
வரைகலையில் மாற்றிவிட்ட மனிதன்போல
பத்தியாகவும் வாலாகவும்
மொழு மொழு உடலாகவும் தெரிகிறது
பாம்பிலிருந்து பாம்புக்குட்டிகள்
தோன்றுவது இயற்கையே
என்கிறது ஓர் அசரிரீ
மகுடிக்காரன் நிறுத்தினால்
என் பத்தி சுருங்கலாம்
பாம்புக்குட்டிகள் வீடடையலாம்
ஆனால்
நிற்பதே இல்லை மகுடிக்காரனின் இசை


நான் புரிந்து கொண்ட வரை ஹரன் பிரசன்னாவை உடைத்தெறிய முனைகிற கவிஞர் என்று சொல்லலாம். உணர்வுகள் உடைத்துக் கொண்டு வெளிவர முனைகின்றன, அல்லது வெளிவர வழியில்லாமல் அடங்குகின்றன. கண்ணாடிகள் உடைகின்றன, அல்லது ஏதேனும் சொல்கின்றன. அசாதாரணத்தின் நிழல் ஏறத்தாழ எப்போதும் அவர் கவிதைகளில் தலை காட்டுகிறது. மனிதனுக்கும் மிருகத்துக்கும் பெரிய அளவில் வேறுபாடு தெரிவதில்லை. இயற்கை நிறைய இடங்களில் வருகிறது, ஆனால் அதற்கும் மானுட சாயம் பூசப்பட்டிருக்கிறது- மிருகமாயிருக்கிறது மானுடம். இவரது இந்த மூன்று கவிதைகளோடு நிறுத்திக் கொள்ளாமல் முழுமையான ஒரு தொகுதியைப் பற்றிப் பேசுவது இது போல் எழுதுவதற்கு இன்னும் சிறப்பாக உதவக்கூடும்- ஆனால் அதற்குமுன் இவரது கவிதைகள் எவ்வளவு சீரியஸாக எழுதப்பட்டன என்பது குறித்து ஒரு தெளிவு வேண்டும். அது இல்லாதபோது நாம் சொல்வது அபத்தமாக இருந்துவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.

பாற்கடல் என்ற கவிதையைப் பாருங்கள்-

அலைகளுக்கு இடையே
ஆயிரம் ஆயிரமாய்
மிதந்து வருகின்றன
அந்த இரவில்
அப்போது மலர்ந்த
தாமரை மலர்கள்


இந்தக் கவிதையில் குதிரைகள் பாய்ந்தோடுகின்றன; அலையடிக்கிறது, அதில் ஆயிரம் மலர்கள் மட்டுமல்ல கட்டிலும் மிதக்கிறது- ஏதோ வெள்ளம் வந்துவிட்டது போலில்லை? அம்மா கூட என்ன நீர்ச்சத்தம் என்று கேட்கிறாள். ஆனால் இந்த காட்சியிலும் ஒரு அமைதி தெரிகிறது- கனவின் நிறத்தில் மலர்ந்த மனைவி, புரண்டு படுக்கிற மகனின் முகத்தில் புன்னகை. (வாயிடுக்கில் ஒழுகும் நீர் அவனது ஆழ்ந்த அமைதியான உறக்கத்தை மிக சுலபமாக காட்சிப்படுத்துகிறது- விஷ்ணுவின் புன்னகை என்பது போனஸ். ஒரு சமயம் கவிதையின் முடிவில் மலர் ஒன்று விஷ்ணுவுக்கு வைக்கப்படுவதற்கு அச்சாரமாக வருகிறதோ என்னவோ!) புற அமைதியும் அதன் ஆழத்தில் அது உடைபட்டுக் கொண்டிருக்கிற நிகழ்வும். வேறு சில சமயங்களில் இந்த உடைபட்ட நிஜம் அசாதாரணமான வகையில் வெளிப்படுகிறது. அதற்காக வெளிக்காட்சிக்குத் தெரியும் அமைதி பொய்யாவதில்லை. அதுவும் நிஜம்தான். இரண்டு வெவ்வேறு உலகங்களை இவரது கவிதைகள் சமதளத்தில் வைத்துப் பேசுகின்றன.

இந்தக் கவிதையைப் பொருத்தவரை, "கனவின் நிறத்தில்/ மலர்ந்த மனைவி/.." என்பதையும் "அந்த இரவில்/ அப்போது மலர்ந்த/ தாமரை மலர்கள்/..." என்பதையும் "புரண்டு படுக்கிறான் மகன்/ விஷ்ணுவின் புன்னகையை ஏந்தி/..." என்பதையும் "ஒரு மலரை எடுத்து/ விஷ்ணுவுக்கு வைத்தேன்/..." என்பதையும் தொடர்பு பண்ணிப் பேசக் கூடாது. அது எவ்வளவு அழகான, நெகிழ்வைத் தருகிற அன்பு கூடிய ஒரு இன்டிமேட்டான காட்சியை சுட்டுகிறது என்றாலும் இதையெல்லாம் ஒரு கவிஞனின் மனநிலையை உணர்த்துவதாக வைத்துப் பேசுவது நம் பண்பாடல்ல.

ஒளி என்ற கவிதையிலும் அசாதாரணமும் சாதாரணமும் இணைந்தியங்குகின்றன- காசைக் கடன் வாங்குகிற மாதிரி சூரியனின் ஒளியைக் கவிஞர் பைக்குள் போட்டுக் கொண்டு நடக்கிறார்- அவர் போகிற இடமெல்லாம் ஒளி அவரைச் சூழ்கிறது, "மனமெங்கும் சூழ்ந்திருந்த/ திசையறியா வேதனை/ எங்கோ ஓட/": மனமெங்கும் சூழ்ந்திருந்த/ திசையறியா வேதனை/ என்பது எவ்வளவு அழகான பிரயோகம்- வேதனையின் இயல்பை, அதன் உக்கிரத்தை மிக எளிமையான சொற்களில் சுட்டிக் காட்டி விடுகிறார் ஹரன் பிரசன்னா. அப்புறம் அடுத்த நாள் காலை சூரியன் வந்து இந்த வெளிச்சத்தைத் தூக்கிக் கொண்டு போய் விடுகிறான்- "நான் குளிரத் தொடங்கினேன்/ என் வெளிச்சத்தில்/ இன்னும் பிரகாசமாக சூரியன்" என்று முடிகிற கவிதையில் யாருடைய வெளிச்சத்தில் இப்போது யார் இருக்கிறார்கள் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது, இல்லையா? இந்த வெளிச்சம் பார்க்கப் போனால் யாருக்கும் சொந்தமில்லை என்று தோன்றுகிறது- யாரைத் தொடுகிறதோ, அவர்களுக்கு அது சொந்தமாகி விடுகிறது, இருந்தாலும் போனாலும்.

இது எல்லாம் நடக்கிற காரியமல்ல. ஆனால் ஒரு அசாதாரண நிகழ்வை எவ்வளவு சுலபமாக சாதாரண நிகழ்வுகளாகக் காட்டி விடுகிறார் பாருங்கள். அதுவும் எந்தவிதமான அதீத வார்த்தைப் பிரயோகமுமில்லாமல் சாதாரண நிகழ்வுகள் அசாதாரணத்தைத் தொடுகின்றன. இது சுலபமான விஷயமில்லை. சாதாரண நிகழ்வுகள், அசாதாரண நிகழ்வுகள், இரண்டும் ஒரே தளத்தில் இயங்குகின்றன, ஒன்றோடோன்று ஊடாடுகின்றன- இவை விவரிக்கப்படுவது எளிய சொற்களால், ஏறத்தாழ அன்றாட நிகழ்வுகளால். அதி அற்புதமான, பிரமிப்பைக் கூட்டக்கூடிய சொற்களாலும் காட்சிகளாலும் இதை இவர் செய்திருக்கலாம், அதுதான் இம்மாதிரியான கவிதைகளுக்கு இயல்பான, உஷாரான குரல். ஆனால் துணிந்து ஹரன் பிரசன்னா அதைத் தவிர்க்கிறார். ஜெயித்தால் ஜாக்பாட், தோற்றால் சட்டை கூட மிஞ்சாது.

மகுடியிலும் இந்த மாதிரி அசாதாரண விஷயங்கள் சாதாரணமாகப் பெசப்படுவதையும், சாதாரண விஷயங்கள் அசாதாரணத்தின் தளத்தைத் தொடுவதையும் பார்க்கலாம்- ஆனால் இன்னும் வேறு ஓரிரு விஷயங்களைப் பேசவிருப்பதால் இந்தக் கவிதையின் வாசிப்பை உங்களுக்கேவிட்டு விடுகிறேன். என்னைக் கேட்டால் நான் மேற்சொன்ன விஷயங்கள் ஹரன் பிரசன்னாவின் கவிதைகளின் பொதுத் தன்மையாக இருக்கிறது என்று சொல்வேன்-  இந்த மாதிரி எழுதுகிற எல்லாரது கவிதைகளிலும் இது இப்படித்தான் இருக்கிறது என்று நீங்கள் சொல்லக்கூடும், எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது.

----

நீங்களெல்லாம் எப்படியோ தெரியாது, நான் நாமனைவரும் நம் அக மற்றும் புறவுலகங்களின் இயல்பைக் கதைகள் வழியாக பாவித்துக் கொள்கிறோம் என்று நினைக்கிறேன். அதற்கு நம் தலைக்குள் ஓயாது பேசிக்கொண்டிருக்கும் குரலே சாட்சி. நாம் அனைவரும் நம் சுயசரிதையை நினைவில் உருவாக்கி வைத்திருக்கிறோம். அதை சரியாக எழுத முடியாதபோது, அல்லது நம் வாழ்வின் நிகழ்வுகளை அந்தக் கதையில் பொறுத்த முடியாதபோது உளச்சிக்கல்கள் வருகின்றன என்றும்கூட சில உளவியல் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.


கதையை விட கவிதை கூடுதல் செறிவுடன் உணர்வையும் நிகழ்வையும் ஒரே தளத்தில் வைத்துப் பேசுகிறது. தீவிர உளக் குமுறலில் இருப்பவர்களுக்கெல்லாம் அதனின்று விடுபட்டதன் பின்னணியில் ஏதோ ஒரு நிகழ்வு அவர்கள் வாழ்க்கைக் கதையில் திருப்பு முனையாக உட்கார்ந்திருக்கும். ரொம்ப அதிகமாக எழுதி விட்டதால் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்றுத் தோன்றுகிறது- வேறோரு சமயம் இது குறித்தெல்லாம் எழுதுகிறேன்!

நான் சொல்ல வருவது என்னவென்றால் நம்மைச் சுற்றியிருக்கிற காற்று மாதிரி கதைகள் நம்மை உருவாக்கிக் காப்பாற்றி வைக்கின்றன. கதையை விட கவிதைகள் அதன் அழகாலும் அடர்த்தியான வடிவாலும் மறக்க முடியாத சொற்களாகவும் காட்சிகளாகவும் மனதில் நிலைத்து நின்று விடுகின்றன. பிரமிளின் எழுதிச் செல்கிற இறகு பல பேருக்கு வாழ்க்கையின் இயல்பின் குறியீடாகக்கூட இருக்கும், இல்லையா? கவிதையின் சாத்தியங்கள் எண்ணற்றவை. மொழியின் வேரில் கிளைத்து, அதற்கு வளம் சேர்ப்பது கவிதை.

சமகால கவிதையின் கணிசமான அளவில் உரத்து ஒலிக்கும் குரல்களின் ஒரு போக்கு குறித்து ஒரு வார்த்தை, சண்டைக்கு வராதீர்கள்- தூசுகூடப் பட்டுவிடக் கூடாதென்று தன் சட்டையின் பளபளப்பைப் பாதுகாத்து எப்போதும் தன்னைப் புதுசாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கவலைப்பட்டுக் கொண்டே வேலைக்குப் போகிற புது மாப்பிள்ளை தன் நண்பர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் அலுப்பு தட்டிப் போய் விடுவானோ, அது போலவே தன்னைக் கவிதையாகக் காட்டிக் கொண்டு கவிதை பற்றியே பேசிக் கொண்டிருக்கிற கவிதைகளும் ரொம்ப சீக்கிரம் அலுப்பு தட்டி விடும், இல்லையா?

நல்ல வேளை, ஒரு ஈர்ப்பிருந்தாலும் ஆன மட்டும் அதை எதிர்த்துப் போராடுகிறார் ஹரன் பிரசன்னா. ஆனால் இந்த மொழிப் போரில் கவிதைகிவிதை எழுதி பேரைக் கெடுத்துக் கொண்டு கவிஞனாக தன் நம்பகத்தன்மையை இழந்து அவர் தியாகி ஆகி விடும் ஆபத்து இருக்கிறது என்று தோன்றுகிறது.  அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

======================

டிஸ்கிஇந்தப் பதிவை எழுதிய பிறகு இன்றுதான் தலையாலங்கானத்து நெடுஞ்செழியன் திரு ஹரன் பிரசன்னா அவர்கள் இல்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்தது. இதை அடிப்படையாக வைத்தே இந்தப் பதிவு எழுதப்பட்டிருப்பதால் இப்போது இதில் நிறைய உளரல் என்று தெரிய வருகிறது. எனவே வாசக அன்பர்கள் உயர்த்திய புருவமும் ஏளனச் சிரிப்புமாய் இந்தப் பதிவைத் தாண்டிப் போய் விடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Nov 24, 2010

கவிதை எழுதுவது எப்படி


சிறப்புப் பதிவர்: நட்பாஸ்




சென்ற பதிவில் சொன்னதை சுருக்கமாக சொல்லி விடுகிறேன்- நண்பர் ஒருவர் இப்போது எழுதப்படுகிற கவிதைகளில் சில வகை கவிதைகளை எப்படி புரிந்து கொள்வது என்ற கவலையைத் தெரிவித்திருந்தார். அதற்காக சொல்வனத்தில் வந்த ஒரு கவிதையை விவாதித்து, நீங்கள் இந்த மாதிரியான கவிதைகளை எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளுங்கள், அந்த வசதி உங்களுக்கு இருக்கிறது என்று ஒருவாறு முடிக்க நேர்ந்தது. அப்போது போகிற போக்கில் புலவர்கள் இப்போது கவியரசர்கள் ஆகி விட்டார்கள், நீங்கள் புரிந்து கொள்வது கொள்ளாதது குறித்து அவர்களுக்குக் கவலை இல்லை என்று சொல்லி விட்டு அவர்கள் ஏன் அரசர்கள் ஆனார்கள், எந்த ராஜ்யத்தை ஆள்கிறார்கள் என்பதை அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லி இருந்தேன், இன்று அப்படி பார்க்க முடிகிறதா என்பதைப் பார்க்கலாம்.


இந்தத் திருக்குறளைப் படித்துப் பாருங்கள்-
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்."
இதில் ஒரு தகவல் இருக்கிறது.

இது கம்ப ராமாயணம்-
"பூ ஒடுங்கின; விரவு புள் ஒடுங்கின, பொழில்கள்;
மா ஒடுங்கின; மரனும் இலை ஒடுங்கின; கிளிகள்
நா ஒடுங்கின; மயில்கள் நடம் ஒடுங்கின; குயில்கள்
கூ ஒடுங்கின; பிளிறு குரல் ஒடுங்கின, களிறு. "
இதிலும் தகவல் இருக்கிறது.

எல்லாம் எங்களுக்குத் தெரியுமப்பா என்கிறீர்களா? ஒரு பில்டப்புதான். இங்கே நீங்கள் ஒரு ஸ்மைலியைப் படிக்க வேண்டும்.

இப்போது பற்பல நூற்றாண்டுகளை ஒரே பத்தியில் பாய்ந்து கடந்து தற்கால கவிதைகளில் ஒன்றைப் பார்ப்போம்-

பூக்களைப் பிரித்துப் பிரித்து
தேடிக்கொண்டிருந்தேன் புதையலை
விடியலின் பின்பொழுதில்
பூக்களின் உதிர்ந்த மலைக்குள்
கண்டுபிடித்தேன்
என்னைக் காணவில்லை
என்று அழுதுகொண்டிருக்கும்
என்னை.
- "புதையல் தேடி"- இலா, சொல்வனம், இதழ் 26

கவிஞர் தன்னைக் கண்டு பிடித்துக் கொண்டு விட்டார் என்பதைத் தவிர வேறு ஏதாவது தகவல் கிடைக்கிறது? அந்தத் தகவலும் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து வருவதாகத் தெரியவில்லை- தன்னால் கண்டு பிடிக்கப்பட்டபோது தேடப்பட்டவர் தன்னைக் காணவில்லை என்று அழுதுக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. கவிதை என்று ஒன்று இருக்கிறது என்பதைத் தவிர என்ன நடக்கிறது இங்கே? பூக்களைப் பிரித்துப் பார்த்ததற்கு பதிலாக வெங்காயத்தைப் பிரித்துப் பார்த்திருந்தாலாவது இந்தக் கவிதைக்கு ஒரு பொருள் காண்பது நமக்கு எளிதாக இருந்திருக்கும்.

கவிதையில் ஒன்றும் நடக்கவில்லை. அது இருக்கிறது. நம் மனதில்தான் எதுவும் நிகழ்கிறது. அங்கே என்ன நிகழ்கிறது என்பதை நம் வாசிப்பு அனுபவமே தீர்மானிக்கிறது.

மறுபடியும் சென்ற பதிவில் நான் குறிப்பிட்ட வா மணிகண்டனின் "நின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா" என்ற கட்டுரைக்கே வருகிறேன். கொஞ்சம் அளவுக்கதிகமாகவே அங்கிருந்து ஒரு மேற்கோளை உருவி இருக்கிறேன், படித்துப் பாருங்கள்-

"ரசனையுடன் கவிதையை அவதானிக்கும் போது ‘பக்குவப்பட்ட, உண்மைத்தன்மையுடையன’ அல்லது ‘அலங்காரம் செய்யப்பட்ட சொற்க் கூட்டங்கள்’ என்று இரண்டு வகைகளுக்குள்ளாகவே கிட்டத்தட்ட அனைத்துக் கவிதைகளையும் மற்றும் கவிதை என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டவைகளையும் உள்ளடக்கிவிடலாம். பக்குவப்பட்ட உண்மைத் தன்மையுடன் உள்ளனவற்றை கவிதை என்று தயக்கமில்லாமல் சொல்லிவிடலாம். மற்றவற்றை ‘கழிசடை’ என்று நிராகரித்துவிடலாம்.

இந்தத் தரம்பிரித்தல் பரிந்துரைகளின் மூலமாகவோ அல்லது மேதாவித்தனத்தாலோ செய்யக் கூடியதில்லை. தொடர்ந்து கவிதைகளை அணுகுவதாலேயே நிகழ முடியும். கவிதைகளை அணுகுதல் தொடர்ச்சியான வாசிப்பின் மூலமாக நிகழ வேண்டும். வாசிப்பின் மூலமாகவே வாசகன் உண்மையான கவிதைகளை நெருங்க முடியும். ஒரு கவிதை வாசகனுக்கு உண்மையான கவிதைகளை நெருங்குதல் எத்தனை முக்கியமானதோ அதே அளவுக்கு முக்கியமானது, போலிகளை விட்டு விலகுதலும்."





இது சற்றே தீவிரமான நிலைப்பாடு என்றுத் தோன்றுகிறது- வா மணிகண்டன் எழுதியுள்ளதில் என்ன பிரச்சினை என்றால் இவர் சொல்கிற மாதிரியான நல்ல கவிதைகளை முதன் முதலாக படிக்கிற நம்மைப் போன்ற பெரும்பாலோர், அவற்றை "அலங்காரம் செய்யப்பட்ட சொற் கூட்டங்கள்" என்றுதான் எதிர்ப்பார்கள், இல்லையா? "பக்குவப்பட்ட, உண்மைத்தன்மையுடைய" கவிதைகளை நம்மால் கண்டு பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் நிறைய கவிதைகளைப் படித்தால்தான் உண்டு. அப்போது கூட எதை வைத்து ஒரு கவிதையின் உண்மைத்தன்மையை அந்தக் கவிதையைக் கொண்டே உறுதி செய்துகொள்ள முடியும்? இதற்கெல்லாம் எனக்குத் தெளிவான பதில் தெரியவில்லை. அதே போல் போலிகளை விட்டு விலக வேண்டும் என்பதில்கூட ஒரு ஸ்டாலினியக் கண்டிப்பு தெரிகிறது. இது கவிதையைக் கொலைகாரச் சித்தாந்தத்துக்கு இட்டுச் செல்லும் பாதை என்பதை வா மணிகண்டன் உணர்ந்திருக்கிறாரா இல்லையா என்றுத் தெரியவில்லை.

சரி விடுவோம். நாம் புரிந்து கொண்ட அளவில், இங்கு, நீ நிறைய படித்தால்தான் எங்களைப் புரிந்து கொள்ள முடியும் என்ற வாதத்தில், கவிஞர்கள் எதை ஆள்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் போலொன்று கிடைக்கிறது-

இந்த மாதிரி கவிதைகளைப் படிக்கும்போது கவிதை, கவிஞனின் பக்குவப்பட்ட உண்மைத்தன்மையுடைய குரலாய் வெளிவந்து ஒரு பக்கம் கிடக்கிறது, வாசகன் மறு பக்கம் கிடக்கிறான். இருவருக்குமிடையே முழுமையான பாலமாய்த் தகவலேதும் பரிமாறிக் கொள்ளப்படுவதில்லை.....

....என்றுதானே நினைக்கிறோம்? அதுதான் இல்லை. எனக்கும் உங்களுக்கும்தான் தகவல்கள் தெரிய வருகிறதில்லை. நிறைய கவிதைகளைப் படிக்கிறார்கள் இல்லையா, அவர்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைத்து விடுகின்றன. எவ்வகையான தகவல்கள்?

இங்கே ஒரு நொடி நிற்போம். இலா எழுதியிருக்கிற மாதிரியான கவிதைகளை உங்களாலும் என்னாலும் எழுதி விட முடியாதா என்ன? அது ஒன்றும் அப்படி ஆகாத காரியமாகத் தெரியவில்லை. இல்லையா?

ஆனால் இந்தக் கவிதையில் உள்ள ஒரு வகையான நேர்த்தியைப் பாருங்கள். இதை நாம் எழுதும் எல்லா கவிதைகளிலும் தொடர வேண்டும், முடியுமா? நாமானால் என்ன செய்வோம், இன்று இந்த மாதிரி ஒரு கவிதையை எழுதுவோம், நாளை நன்றாக இருக்கிறது என்பதற்காக

ஒரு வெண்பந்தாய்
இட்லி மாவில் விழுந்த எலி
தத்தித் தத்திப் போகிறது

கிருஷ்ண ஜெயந்தி



என்று எழுதிவிட்டு, ஆஹா என்று நாம் அதிசயிப்பதை உணர்த்துவதற்காக ஆச்சரியக் குறியைப் போட்டு அதை அழகும் செய்வோம், இல்லையா?- கிருஷ்ண ஜெயந்தி!

இதைப் படித்தபின் நீங்கள் எழுதும் எதையாவது கவிதை என்று புலவர் பெருமக்கள் ஒப்புக் கொள்வார்கள் என்கிறீர்கள்?

இந்த காலத்தில் கவிதை எழுதுகிறவர்கள் ஆள்வது மொழியை. அதன் எல்லைகளை எவ்வளவுக்கு விரிக்க முடியும் என்று சோதித்துப் பார்க்கிறார்கள். உங்கள் மொழி ஆளுமை எந்த அளவுக்கு நன்றாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நீங்களும் நல்ல கவிஞராக அங்கீகரிக்கப்படுவீர்கள். உங்கள் கவிதையும் நல்ல கவிதையாய் அறியப்படும். அதுதான் உண்மை.

நாம் தகவல் பெட்டகமாய் கவிதைகளை அணுகுவது அவர்களுடைய நோக்கத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறது. ஏன்? வாசகனின் கவனம் மொழியை விட்டு தகவலுக்குத் தாவி விடுகிறது. அது நல்ல கவிதைக்கு அழகில்லை, சரிதானே? கவிதை என்றால் அதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறபடி இருக்க வேண்டும், அதுதானே அழகு?

அபத்தமாக ஒன்று சொல்கிறேன், சரி வருகிறதா பாருங்கள்- இது பொருத்தமாக இருந்தாலும் இருக்கக் கூடும்: நீங்கள் ஒருவரைத் தேடிப் போகிறீர்கள். வழி தேடிக் கொண்டிருக்கையில் ஒரு அழகான பெண் எதிர்ப்படுகிறாள். அவர், "லெப்ட்ல போய் செகண்ட் ரைட் திரும்பி கொஞ்ச தூரம் போனா பச்சை பெயிண்ட் அடித்த வீடு வரும். அதற்கு எதிர் வீட்டில்தான் இவர் இருக்கிறார்," என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். "சரி," என்று தலையாட்டி விட்டு நீங்கள் அவளைக் கடந்து போக முடிகிறதென்றால் அது அழகுக்கு மரியாதையா? அவள் நினைவாகவே இருந்து திரும்பத் திரும்ப அவளைத் தேடி வந்து எதிர்ப்பட்டால் அவளைப் பின்தொடர்ந்து அவள் வீட்டைக் கண்டு பிடிக்க வைக்க வேண்டும், அதுதானே அழகுக்கு அழகு? என்ன சொல்கிறீர்கள்?

அழகென்றால் அதன் தாக்கம் நம்மைக் கடத்திக் கொண்டு போய் தன்னில் இருத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதைதான் இப்போது எழுதும் கவிஞர்கள் முயற்சி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். நம் கவனம் கவிதையில் இருக்க வேண்டும், அதன் தகவல்களில் அல்ல. இதன் காரணமாகவே தகவல்களின் ஒழுங்கை, முழுமையை கலைத்து மொழியில், கவிதையின் கவித்துவத்தில் உள்ள ஒழுங்கை முன்னிறுத்துகிறார்கள் இவர்கள் என்று நினைக்கிறேன்.



எது எப்படி இருந்தாலும், கவிதைகள் தனித்து நிற்பதில்லை. நான் முன் சொன்ன மாதிரி இந்த வகையான கவிதைகளை யாரும் அவ்வப்போது வாய்க்கிற தருணங்களில் எப்போதாவது ஓரிரு முறை எழுதி விடலாம். ஆனால் அதைத் தொடர்ந்து செய்கிற ஜட்ஜ்மன்ட் இருக்கிறதில்லையா, அதுதான் நீங்கள் எழுதுகிற கவிதையை கவனிக்கப்பட தக்கதாய் நிலை நிறுத்துகிறது.

இது அநியாயம் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது அப்படிதான் சார். இது மொழியின் எல்லைகளை விரிக்கிற வித்தை, இங்கு கத்துக்குட்டிகளுக்கு இடமில்லை. மொழி ஆளுமை உள்ளவர்கள் என்று அறியப்பட்டவர்களே இங்கு ஆட்சி செய்ய முடியும். நீங்கள் நவீன கவிதை எழுத நினைப்பவராக இருந்தால் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்- கவிஞர்கள் தங்கள் கவிதைகள் மூலம் ஒருவரோடொருவர் உரையாடிக் கொள்கிறார்கள். அவர்களது உரையாடல் கவிதையின் பொருள் குறித்தல்ல- அதன் மொழி குறித்து, வடிவம் குறித்து, இயல்பு குறித்து. இதைப் பற்றி எழுதுகிறேன் அதைப் பற்றி எழுதுகிறேன் என்பதெல்லாம் ஒரு சாக்குதான்- கவிதைதான் அவர்களது பாடுபொருள். நாம் நிறைய கவிதைகளைப் படித்து, இவர்கள் பேசிக் கொள்வதைத் தொடர்ந்து ஒட்டுக் கேட்டால்தான் இவர்கள் பேசிக் கொள்வதை பாலோ பண்ண முடியுமென்று நினைக்கிறேன். இந்த மாதிரி கவிதைகளைப் படிப்பதற்காக நாம் இவ்வளவு மெனக்கெட வேண்டுமா என்பது வேறு விஷயம்.

நிறைய எழுதி விட்டேன்- இதில் தெளிவை விட கேள்விகள்தான் அதிகம் எழுந்திருக்கும். அதனால் இன்னொன்றையும் சொல்லி விடுகிறேன். கவிஞர்களை அரசர்கள் என்று சொன்னேனில்லையா, நம் கையேந்தி நிலையை மனதில் வைத்து, அது தவறு.

கவிஞர்கள் கடவுள் மாதிரி. படைப்பாளிகள் என்ற அளவில் மட்டுமல்ல, அவர்களின் இருப்பு உபாசகர்களின் கவனிப்பை நம்பி இருக்கிறது என்பதாலும்தான். என்னதான் நாங்கள் படைக்கிறோம், நீ எங்களை உபாசித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் எட்டி நின்றாலும், பக்தன் கண்டு கொள்ளாமல் இவர்களைக் கைவிட்டால் கதி என்னாகும்? யோசித்துப் பாருங்கள், சிதிலமடைந்த கோயில்கள் நினைவுக்கு வருகிறதா இல்லையா?

கவிதைக்கு கவிஞன் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் வாசகனும், சரிதானே? தகவல்களைத் தவிர்த்து மொழியின் எல்லைகளை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் விரித்து செல்லுங்கள், ஆனால் ஓரளவுக்கு மேல் ஓவராகப் போனால் வாசகர்கள் அந்நியப்பட்டுப் போய் விடுவார்கள், இல்லையா? அந்த ஆபத்தும் இருக்கிறது. ஆங்கிலக் கவிதைகளில் ஒரு தேக்க நிலை இருப்பதாக கேள்விப்படுகிறேன், ஒரு சமயம் இப்பாலும் அப்பாலும் இருக்க வேண்டிய கவிஞர்கள், ஒரேயடியாக அப்பால் போய் விட்டதால் இது நேர்ந்திருக்கிறதோ என்பது என் ஐயம்.

ஹரன் பிரசன்னாவின் மூன்று கவிதைகளை முன்வைத்து என்று சொல்லி விட்டு அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசாமல் இன்னும் என்னடா இவன் கதை விட்டுக் கொண்டிருக்கிறான் என்று நீங்கள் கடுப்பாவது தெரிகிறது. ஒரு நாள் பொறுத்திருங்கள், அதையும் சொல்லி முடித்து விடுகிறேன்.

நாளைக்குமா, என்று பதறாதீர்கள் நண்பர்களே, இவ்வளவையும் தெரிந்து கொண்டால்தான் அவர் கவிதைகளை சரியான முறையில் அணுக முடியும்.

இதோ ஹரன் பிரசன்னாவின் மூன்று கவிதைகளில் இன்னொன்று- அவர் அப்பாலிருக்கிறாரா இப்பாலிருக்கிறாரா எப்பாலிருகிறார் என்று சொல்லுங்கள்-

பாற்கடல்

வெண்ணிறக் குதிரைகள்
மிடறு நிமிர்த்தி பாய்ந்தோடுகின்றன
புரண்டு படுக்கிறான் மகன்
விஷ்ணுவின் புன்னகையை ஏந்தி
தொப்புள்கொடியில் லக்ஷ்மியைத் தாங்கி
வாயிடுக்கில் ஒழுகும் நீரில்
மிதக்கிறது என் கட்டில்
கட்டிப் பிடித்துக்கொள்கிறாள்
கனவின் நிறத்தில்
மலர்ந்த மனைவி
என்ன நீர்ச்சத்தம் என்கிறாள் அம்மா
அலைகளுக்கு இடையே
ஆயிரம் ஆயிரமாய்
மிதந்து வருகின்றன
அந்த இரவில்
அப்போது மலர்ந்த
தாமரை மலர்கள்
ஒரு மலரை எடுத்து
விஷ்ணுவுக்கு வைத்தேன்
எங்கேயோ ஒலிக்கிறது மணிச்சத்தம்

.
.
.

Nov 23, 2010

"கவிதையை எப்படிப் படிக்க வேண்டும்?"

ஹரன் பிரசன்னாவின் "மூன்று கவிதை"களை முன்வைத்து
சிறப்புப் பதிவர்: நட்பாஸ்




ஒரு கவிதையை எப்படி வாசிப்பது? இந்த நாட்களில் எழுதப்படுகிற கவிதைகளைப் படிக்கிறவர்களில் நிறைய பேருக்கு இந்த சந்தேகம் வருகிறது. எனக்கும்கூடத்தான், ஆகப் பாருங்கள், நேற்று மாலை என் நண்பரொருவரிடமிருந்து அஞ்சல் ஒன்று வந்தது- சொல்வனம் இதழில் ஹரன் பிரசன்னாவின் மூன்று கவிதைகளைச் சுட்டி, "பாஸ், இதெல்லாம் என்ன? மூணுல ஒண்ணு கூட விளங்கல :(" என்று. அஞ்சலில் அவர் வெளிப்படுத்தியிருந்த முகம் திரும்பிய ஸ்மைலி அதிர்ச்சியில் உறைந்த ரத்தத்தை நினைவுபடுத்தியது எனக்கு. இந்த மாதிரி ஒருத்தர் நம்மை நம்பி கேட்கும்போது, "தெரியலையேப்பா!" என்று கையை விரிக்க என்னால் முடிவதில்லை. இருக்கிற குழப்பம் போதாதென்று ஏதோ என்னாலான கைங்கர்யம்- இதோ.


எது கவிதை, ஏன் கவிதை என்பதை விளங்கிக் கொள்ள அதே இதழில், வா மணிகண்டன் நவீன கவிதைகள் குறித்து எழுதியுள்ள, "நின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா" என்ற கட்டுரையையும் பதிப்பித்திருக்கிறார்கள், அதை முதலில் படிப்பது பயனுள்ளதாக இருக்கும். அதை வாசித்துப் பார்த்தால் வா மணிகண்டன், கவிதை வாசகனுடன் கண்ணாமூச்சி ஆடுவதாக சொல்கிறார் என்பது புரிகிறது. 


இது எல்லா கவிதைகளுக்கும் பொருந்துமா இல்லை நவீன கவிதைகளுக்கு மட்டும்தான் பொருந்துமா என்று தெரியவில்லை. ஒரே கவிதையை வெவ்வேறு வாசகர்கள் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொள்வதை அவர் அங்கீகரிப்பது போலவும் தெரிகிறது. ஏனென்றால் பிரான்சிஸ் கிருபாவின் ஒரே ஒரு கவிதையைப் பற்றி அவ்வளவு பெரிய கட்டுரையை எழுதி விட்டு, "அல்லது முற்றும் வேறுமாதிரியாக இன்னொரு வாசகன் யோசிக்கலாம்," என்று பேனாவைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விடுகிறார்.



எனக்கு இந்த பிரான்சிஸ் கிருபாவின் கவிதையை வேறு மாதிரியாக வாசிக்கத் தோன்றுகிறது. அதை கவனித்துவிட்டு ஹரன் பிரசன்னாவின் மூன்று கவிதைகளுக்கு வந்தால் நம் வேலை சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


இது கவிதை:

விரித்த என் பாயில்
மீதமிருந்த இடத்தில்
படுத்து ஒடுங்குகிறது குளிர்காலம்.
பூக்கள்
ஒரு புன்னகையின்
தொடக்கமா முடிவா
என்றுதான் நான் கேட்டேன்.
அது என்னைக் கட்டியிறுக்கி
காலோடு கால் பின்னிக் கொண்டது.
அடுப்பில் விறகு அணைந்திருக்கிறது
எழுப்பிவிடட்டுமா என்று கேட்டேன்.
கைகளையும் பின்னிக்கொண்டது.
இரவு தீர என்னோடு
உறங்கிக் கிடந்தது.
சூரியசாட்டையிலிருந்து
மஞ்சள் ரத்தம் பரவியபோது
ஒரு முத்தத்தை உடைக்கமுடியாமல்
இரண்டு உதடுகள் திணறின
காட்டுக்கு வெளியே

(உரிமை- ஆசிரியருக்கே!)


கவிதையை அவரவர் திறமைக்கேற்றார்போல வாசித்துக் கொள்ளலாம் என்று வா மணிகண்டன் சொல்லி விட்டார். இதை நாம் எப்படி வாசிப்பது என்று பார்ப்போம்.


குளிர்காலம் என்பது பெண்ணாக இருக்கலாம், ஆணாக இருக்கலாம், இல்லை ஆளுயரத்துக்கு வளர்ந்த ஒரு பூனைக்குட்டியாகக் கூட இருக்கலாம். அது பாயில் மிச்சமிருக்கிற இடத்தில் ஒடுங்கிப் படுத்துக் கொண்டிருக்கிறது, பாவம்.



நம் கவிஞர் சும்மா இருக்காமல் அதனிடம், "பூக்கள் ஒரு புன்னகையின் துவக்கமா முடிவா?" என்று வாயைக் கொடுக்கிறார். நியாயமான கேள்விதானே? காலையில் கொஞ்சம் அப்படி இப்படி வெளியே போனீர்களானால் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நம் நகரத்து சாலையோரங்களில் அங்கங்கே செடிகளில் பூக்களைப் பார்க்கலாம். "ஆஹா, பொழுது நன்றாக விடிந்தது. பூக்கள் மலர்ந்த முகத்தோடு அதை வரவேற்கின்றன, இது நல்ல நாள்தான்" என்று நீங்களும் பூக்களுக்கு குட் மார்னிங் சொல்லக் கூடும், உங்களுக்குக் காதலியோ மணம் மாறாத மனைவியோ இருந்தால் அந்தப் பூவை யாருக்கும் தெரியாமல் நீங்கள் உஷார் பண்ணவும் கூடும். ஆனால் அதே அந்தப் பூக்களின் மலர்ச்சி வெகு விரைவிலேயே வாடிப் போய் விடுமென்பதும் சிலபேருக்கு மட்டும் அந்த அதிகாலை வேளையிலும் நினைவுக்கு வரும்- "அச்சச்சோ!" என்று அதைப் பார்வையாலேயே வருடிக் கொடுத்து விட்டு தங்கள் வழியில் செல்கிற இவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது.



கவிதைக்கு வருவோம்- " "பூக்கள் ஒரு புன்னகையின் துவக்கமா முடிவா?"" என்று நம்மிடம் கேட்கப்பட்டிருந்தால், "நல்ல கேள்வி நன்றி கிருபா!," என்று சொல்லி விட்டு திரும்பிப் படுத்துக் கொண்டிருப்போம், அதைப் பேசி என்ன ஆகப் போகிறது?-. குளிர்காலம் அந்த மாதிரியான ஆள் இல்லை.



என்ன செய்கிறது அது? பாய்ந்து வந்துக் கட்டியிறுக்கி கவிஞனின் காலோடு கால் பின்னிக் கொள்கிறது. ஏன் இப்படி செய்தது என்று கவிஞர் சொல்லவில்லை. பாவம், அவருக்கு மட்டும் குளிர்காலத்தின் மனசுக்குள் நுழைந்து அது என்ன நினைக்கிறது ஏது என்று அறிந்து கொள்ளக் கூடிய சக்தி இருக்கிறதா என்ன?



சும்மாக் கிடந்த குளிர் காலத்திடம் வாய் கொடுத்து மாட்டிக் கொண்டாரா, அதுவும் கிட்டே வந்து கட்டிப் பிடித்துக் கொண்டதா, கவிஞருக்கு இப்போதுதான் குளிர் தெரிகிறது போலிருக்கிறது, "அடுப்பில் விறகு அணைந்திருக்கிறது, எழுப்பி விடட்டுமா?" என்று கேட்கிறார்.



"என்னடா இவன், உயிருக்கே உலை வைத்து விடுவான் போலிருக்கிறதே!" என்று குளிர்காலம் பயந்து விட்டதோ என்னவோ, கவிஞரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது.



அப்புறம் என்ன, கவிஞரை இறுக அணைத்துக் கொண்டு அவரது உடலின் கணப்பில் குளிர்காலம் நன்றாகத் தூங்கிப் போய் விடுகிறது. கவிஞர் இரவெல்லாம் குளிர் தாங்காமல் விறைத்துப் போய் கிடந்த கோலம் கவிதையின் வாயிலாகக் காணக் கிடைக்கிறது- "இரவு தீர என்னோடு உறங்கிக் கிடந்தது" என்கிறார். இதைத் தொடர்ந்து, இரவு தீர யார் விழித்துக் கிடந்தது என்ற கேள்வி எழுவது நியாயம்தானே?



அப்புறம் பார்த்தால் ஒரு வழியாக சூரியன் சாட்டையாலடித்து இரவைத் தீர்த்துக் கட்டி விடுகிறான்- மஞ்சள் ரத்தம் வானெங்கும் பரவுகிறது. பார்க்கிறார் கவிஞர், எதையும் வாய் திறந்து பேச இயலாத ஊமையாக- "ஒரு முத்தத்தை உடைக்க முடியாமல் இரண்டு உதடுகள் திணறின" என்ற வரிகள், குளிர்காலம் இவரை வாயடைத்துப் போக வைத்து விட்டதை உணர்த்துகின்றன. முத்தமிடுவதைப் போல குவிந்து உறைந்து விட்ட உதடுகளில், குளிர்காலம் தன் முத்தத்தை இட்டு வைத்திருக்கிறது- சரிதானே சார் நான் இந்தக் கவிதையைப் படித்திருப்பது?



இந்த மாதிரி அர்த்தம் செய்துகொள்ளும் வாசகர்களாகிய நம்மையெல்லாம் பிரான்சிஸ் கிருபா அத்தனை கவிஞர்களின் சார்பாகவும், "போடாங்க!" என்று வழியனுப்பி வைக்கிறார்- "காட்டுக்கு வெளியே!" என்ற கடைசி வரியில்.



இதை எப்படி ஐயா அர்த்தம் பண்ணிக் கொள்வது?



இதற்கான ஒரு க்ளூ வா மணிகண்டனின் வேறொரு கவிதையில் கிடைக்கிறது-


பந்த‌ல் சலித்த‌‌
வெய்யிலில் பேசிக் கொண்டிருந்தோம்.
தீராத இரவுகள் பற்றி பேசினீர்க‌ள்
நெருங்க முடியாத வனம் குறித்துச் சொன்னீர்கள்
விடையில்லாத‌ புதிர்க‌ளை சிலாகித்தீர்க‌ள்.

பேச‌ எத்த‌னித்தேன்.

நொறுக்கினீர்கள்.

மீன்க‌ளால் நிறைந்த‌
க‌ண்ணாடி தொட்டியொன்றை

- அந்திமழை, வா.மணிகண்டன் - கவிதைத் திருவிழா 58, மீன்களோடு நொறுங்கும் தொட்டி
(உரிமை- ஆசிரியருக்கே!)


இரவு, பகல். குளிர், வெயில். உறக்கம், விழிப்பு- உண்டோ இல்லையோ, வா மணிகண்டனின் இந்தக் கவிதையை பிரான்சிஸ் கிருபாவின் கவிதைக்கு எதிர்வினையாக வாசிக்கலாம், யார் கேட்க முடியும்? வாசகனுக்குதான் அந்த உரிமை இருக்கிறதே!


கவிஞன், என் கவிதை பூக்களைப் போல தன் பாட்டுக்குக் கிடக்கும், அதன் புன்னகையின் அடி முடி காண நினைக்கிற உன்னைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்று வாசகனிடம் சொல்லி தன் சுதந்திரத்தை நிலை நிறுத்திக் கொள்கிறான். வாசகனுக்கு வேறு வழி இல்லை- தனக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, ஏன் கவிஞனுக்கே பிடித்திருக்கிறதோ இல்லையோ, வாசகனும் தன் விருப்பப்படி கவிதையைப் பொருட்படுத்தும் சுதந்திரத்தைக் கை கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். கவிஞனுக்கு எது முழு சுதந்திரத்தைத் தருகிறதோ அதுவே கவிதை மீதான உரிமைகள் அனைத்தையும் பறித்து விடுகிறது என்பது வியப்பாக இருக்கிறது. அதே போல் வாசகனுக்கு தன் இஷ்டத்துக்கு கவிதையைப் படித்துக் கொள்ளும் முழு உரிமை இருந்தாலும் அந்த சுதந்திரம் அவனுக்கு அவ்வளவு திருப்தியானதாக இல்லை என்று நினைக்கிறேன்- கூடுமானவரை அவன் கவிஞன் என்ன சொல்ல வருகிறான் என்று தெரிந்து கொள்ளவே ஆசைப்படுகிறான்: இந்த சுதந்திரம் அவன் மேல் வலியத் திணிக்கப்பட்ட ஒன்று- நாடு கடத்தப்பட்டவனின் சுதந்திரத்தைப் போன்றது இது.



இந்த நவீன கவிதையில் என்ன ஒரு சங்கடம் என்றால், கவிதைகளிடமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு வாசகன் தான் என்ன அர்த்தம் செய்து கொண்டானோ, அதை அவன் தன்னோடே வைத்துக் கொள்ள வேண்டும். கவிஞனிடம் போய் அதை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி செய்தால் வா மணிகண்டன் சொல்கிற மாதிரிதான் நாமும் சொல்லிக் கொண்டு திரும்பி வர வேண்டும், "பேச‌ எத்த‌னித்தேன். நொறுக்கினீர்கள். மீன்க‌ளால் நிறைந்த‌ க‌ண்ணாடி தொட்டியொன்றை" என்று. நவீன கவிஞர்கள் தங்கள் கவிதைகள் நன்றாக இருக்கின்றன என்று பாராட்டப்படுவதை விரும்புகிற அளவுக்கு அதன் பொருள் சட்டகப்படுத்தப்படுவதை வரவேற்கிற மாதிரி தெரியவில்லை.



மொத்தத்தில் கவிதை தன் பாட்டுக்குக் கிடக்கிறது. அதன் பொருள் நம் உள்ளத்தில், "மீன்க‌ளால் நிறைந்த‌ க‌ண்ணாடி தொட்டி" போல் இருக்கிறது. இதை கொண்டு போய் அங்கே குத்திக் குடைந்து பொருத்திப் பார்க்க முனையாதீர்கள்- கவிதை உங்கள் நினைப்பை நொறுக்கி விடும். இந்த மாதிரியான கவிதைகள் எந்த அளவுக்கு கவிஞனாய் இல்லாத வாசகர்களுடன் நட்பு பாராட்டுகிறது என்பது கேள்விக்குரிய ஒன்றே. எது எப்படியிருந்தாலும் வாசகர்களுக்கு வேறு வழியில்லை, அவர்களாகவே முனைந்து அதை தங்களுக்கேற்ற வகையில் புரிந்து கொண்டு நிறைவடைய வேண்டியதுதான்.



அந்த காலத்தில் புலவர்கள் அரசவைக்குப் போய் பாடுவார்கள் என்று கேள்வி. அரசன் அதற்குத் தக்க சன்மானம் தருவானாம். பொற்கிழி கிடைத்தால் புண்ணியம், புண்ணாக்கு கிடைத்தால்? "ஏன் ராஜா எனக்கு புண்ணாக்கைப் பரிசாகத் தந்தீர்கள்?" என்று அரசனைப் பார்த்து புலவன் கேட்க முடியுமா? "இதை வறுத்து சாப்பிட்டால் நன்றாக இருக்குமா இல்லை அவித்து சாப்பிட்டால் நன்றாக இருக்குமா?" என்ற கேள்விகளுடன் வீடு திரும்ப வேண்டியதுதான், இல்லையா?



இந்த காலத்தில் கவிஞர்கள்தான் அரசர்கள். நாம் அவர்களுடைய குடிகள்- கிடைத்ததை வைத்துக் கொண்டு வயிற்றுப்பாட்டைத் தேற்ற வேண்டிய நிலையில் சமகாலப் புலவர்களின் புரவலர்களாகிய வாசகர்கள் நாம் இருக்கிறோம்.



ஒருவாராக கவிதையில் எதை எதிர்பார்க்க வேண்டும், அதை எப்படி வாசிக்க வேண்டும் என்பதைத் தொட்டாகி விட்டது. கவிஞர்களை எப்படி அரசர்கள் என்று சொல்ல முடியும்? அவர்கள் எதை அரசாள்கிறார்கள்? நாம் அடுத்து இதைப் பார்க்க வேண்டும். அப்புறம், என் நண்பர் கேட்டாரே, சொல்வனத்தில் வெளியாகி இருக்கிற ஹரன் பிரசன்னாவின் "மூன்று கவிதைகள்" என்ற கவிதை குறித்து, அதையும் மறக்காமல் பார்க்க வேண்டும்.



இது ஹரன் பிரசன்னாவின் மூன்று கவிதைகளில் ஒன்று- நான் மேலே சொன்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு படித்துப் பாருங்கள், அப்படியொன்றும் சிக்கலான கவிதையாகத் தெரியவில்லை எனக்கு-


ஒளி

நீண்ட நேரம்
சூரியனை நோக்கி இருந்துவிட்டு
கொஞ்சம் ஒளியை
பைக்குள் போட்டுக்கொண்டு
உடல் அதிர நடந்தேன்
அந்தியில்
பச்சை இலைகள்
சூழ்ந்திருந்த தோட்டத்துள்
எனக்கு முன் சென்று
என்னை வரவேற்றது ஒளி
நீரில் மூழ்கினால்
என்னைச் சுற்றி
தங்க வெளிச்சம் பரப்பியது
என் பையிலிருந்த சூரியன்
இரவில் உறங்கும்போது
என் உடல் ஒளிர்ந்ததைக் கண்டேன்
மனமெங்கும் சூழ்ந்திருந்த
திசையறியா வேதனை
எங்கோ ஓட
உலகெங்கும்
வெளியெங்கும்
மனமெங்கும்
மின்னின
மறுநாள் காலை
ஒளியைத் திருப்பிக் கேட்க
வீட்டுக்குள் நுழைந்தது சூரியன்
நான் குளிரத் தொடங்கினேன்
என் வெளிச்சத்தில்
இன்னும் பிரகாசமாக சூரியன்

(உரிமை- ஆசிரியருக்கே!)





இதன் தொடர்ச்சியை வாசிக்க - இங்கே
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...