Showing posts with label வா.மணிகண்டன். Show all posts
Showing posts with label வா.மணிகண்டன். Show all posts

Nov 24, 2010

கவிதை எழுதுவது எப்படி


சிறப்புப் பதிவர்: நட்பாஸ்




சென்ற பதிவில் சொன்னதை சுருக்கமாக சொல்லி விடுகிறேன்- நண்பர் ஒருவர் இப்போது எழுதப்படுகிற கவிதைகளில் சில வகை கவிதைகளை எப்படி புரிந்து கொள்வது என்ற கவலையைத் தெரிவித்திருந்தார். அதற்காக சொல்வனத்தில் வந்த ஒரு கவிதையை விவாதித்து, நீங்கள் இந்த மாதிரியான கவிதைகளை எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளுங்கள், அந்த வசதி உங்களுக்கு இருக்கிறது என்று ஒருவாறு முடிக்க நேர்ந்தது. அப்போது போகிற போக்கில் புலவர்கள் இப்போது கவியரசர்கள் ஆகி விட்டார்கள், நீங்கள் புரிந்து கொள்வது கொள்ளாதது குறித்து அவர்களுக்குக் கவலை இல்லை என்று சொல்லி விட்டு அவர்கள் ஏன் அரசர்கள் ஆனார்கள், எந்த ராஜ்யத்தை ஆள்கிறார்கள் என்பதை அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லி இருந்தேன், இன்று அப்படி பார்க்க முடிகிறதா என்பதைப் பார்க்கலாம்.


இந்தத் திருக்குறளைப் படித்துப் பாருங்கள்-
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்."
இதில் ஒரு தகவல் இருக்கிறது.

இது கம்ப ராமாயணம்-
"பூ ஒடுங்கின; விரவு புள் ஒடுங்கின, பொழில்கள்;
மா ஒடுங்கின; மரனும் இலை ஒடுங்கின; கிளிகள்
நா ஒடுங்கின; மயில்கள் நடம் ஒடுங்கின; குயில்கள்
கூ ஒடுங்கின; பிளிறு குரல் ஒடுங்கின, களிறு. "
இதிலும் தகவல் இருக்கிறது.

எல்லாம் எங்களுக்குத் தெரியுமப்பா என்கிறீர்களா? ஒரு பில்டப்புதான். இங்கே நீங்கள் ஒரு ஸ்மைலியைப் படிக்க வேண்டும்.

இப்போது பற்பல நூற்றாண்டுகளை ஒரே பத்தியில் பாய்ந்து கடந்து தற்கால கவிதைகளில் ஒன்றைப் பார்ப்போம்-

பூக்களைப் பிரித்துப் பிரித்து
தேடிக்கொண்டிருந்தேன் புதையலை
விடியலின் பின்பொழுதில்
பூக்களின் உதிர்ந்த மலைக்குள்
கண்டுபிடித்தேன்
என்னைக் காணவில்லை
என்று அழுதுகொண்டிருக்கும்
என்னை.
- "புதையல் தேடி"- இலா, சொல்வனம், இதழ் 26

கவிஞர் தன்னைக் கண்டு பிடித்துக் கொண்டு விட்டார் என்பதைத் தவிர வேறு ஏதாவது தகவல் கிடைக்கிறது? அந்தத் தகவலும் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து வருவதாகத் தெரியவில்லை- தன்னால் கண்டு பிடிக்கப்பட்டபோது தேடப்பட்டவர் தன்னைக் காணவில்லை என்று அழுதுக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. கவிதை என்று ஒன்று இருக்கிறது என்பதைத் தவிர என்ன நடக்கிறது இங்கே? பூக்களைப் பிரித்துப் பார்த்ததற்கு பதிலாக வெங்காயத்தைப் பிரித்துப் பார்த்திருந்தாலாவது இந்தக் கவிதைக்கு ஒரு பொருள் காண்பது நமக்கு எளிதாக இருந்திருக்கும்.

கவிதையில் ஒன்றும் நடக்கவில்லை. அது இருக்கிறது. நம் மனதில்தான் எதுவும் நிகழ்கிறது. அங்கே என்ன நிகழ்கிறது என்பதை நம் வாசிப்பு அனுபவமே தீர்மானிக்கிறது.

மறுபடியும் சென்ற பதிவில் நான் குறிப்பிட்ட வா மணிகண்டனின் "நின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா" என்ற கட்டுரைக்கே வருகிறேன். கொஞ்சம் அளவுக்கதிகமாகவே அங்கிருந்து ஒரு மேற்கோளை உருவி இருக்கிறேன், படித்துப் பாருங்கள்-

"ரசனையுடன் கவிதையை அவதானிக்கும் போது ‘பக்குவப்பட்ட, உண்மைத்தன்மையுடையன’ அல்லது ‘அலங்காரம் செய்யப்பட்ட சொற்க் கூட்டங்கள்’ என்று இரண்டு வகைகளுக்குள்ளாகவே கிட்டத்தட்ட அனைத்துக் கவிதைகளையும் மற்றும் கவிதை என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டவைகளையும் உள்ளடக்கிவிடலாம். பக்குவப்பட்ட உண்மைத் தன்மையுடன் உள்ளனவற்றை கவிதை என்று தயக்கமில்லாமல் சொல்லிவிடலாம். மற்றவற்றை ‘கழிசடை’ என்று நிராகரித்துவிடலாம்.

இந்தத் தரம்பிரித்தல் பரிந்துரைகளின் மூலமாகவோ அல்லது மேதாவித்தனத்தாலோ செய்யக் கூடியதில்லை. தொடர்ந்து கவிதைகளை அணுகுவதாலேயே நிகழ முடியும். கவிதைகளை அணுகுதல் தொடர்ச்சியான வாசிப்பின் மூலமாக நிகழ வேண்டும். வாசிப்பின் மூலமாகவே வாசகன் உண்மையான கவிதைகளை நெருங்க முடியும். ஒரு கவிதை வாசகனுக்கு உண்மையான கவிதைகளை நெருங்குதல் எத்தனை முக்கியமானதோ அதே அளவுக்கு முக்கியமானது, போலிகளை விட்டு விலகுதலும்."





இது சற்றே தீவிரமான நிலைப்பாடு என்றுத் தோன்றுகிறது- வா மணிகண்டன் எழுதியுள்ளதில் என்ன பிரச்சினை என்றால் இவர் சொல்கிற மாதிரியான நல்ல கவிதைகளை முதன் முதலாக படிக்கிற நம்மைப் போன்ற பெரும்பாலோர், அவற்றை "அலங்காரம் செய்யப்பட்ட சொற் கூட்டங்கள்" என்றுதான் எதிர்ப்பார்கள், இல்லையா? "பக்குவப்பட்ட, உண்மைத்தன்மையுடைய" கவிதைகளை நம்மால் கண்டு பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் நிறைய கவிதைகளைப் படித்தால்தான் உண்டு. அப்போது கூட எதை வைத்து ஒரு கவிதையின் உண்மைத்தன்மையை அந்தக் கவிதையைக் கொண்டே உறுதி செய்துகொள்ள முடியும்? இதற்கெல்லாம் எனக்குத் தெளிவான பதில் தெரியவில்லை. அதே போல் போலிகளை விட்டு விலக வேண்டும் என்பதில்கூட ஒரு ஸ்டாலினியக் கண்டிப்பு தெரிகிறது. இது கவிதையைக் கொலைகாரச் சித்தாந்தத்துக்கு இட்டுச் செல்லும் பாதை என்பதை வா மணிகண்டன் உணர்ந்திருக்கிறாரா இல்லையா என்றுத் தெரியவில்லை.

சரி விடுவோம். நாம் புரிந்து கொண்ட அளவில், இங்கு, நீ நிறைய படித்தால்தான் எங்களைப் புரிந்து கொள்ள முடியும் என்ற வாதத்தில், கவிஞர்கள் எதை ஆள்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் போலொன்று கிடைக்கிறது-

இந்த மாதிரி கவிதைகளைப் படிக்கும்போது கவிதை, கவிஞனின் பக்குவப்பட்ட உண்மைத்தன்மையுடைய குரலாய் வெளிவந்து ஒரு பக்கம் கிடக்கிறது, வாசகன் மறு பக்கம் கிடக்கிறான். இருவருக்குமிடையே முழுமையான பாலமாய்த் தகவலேதும் பரிமாறிக் கொள்ளப்படுவதில்லை.....

....என்றுதானே நினைக்கிறோம்? அதுதான் இல்லை. எனக்கும் உங்களுக்கும்தான் தகவல்கள் தெரிய வருகிறதில்லை. நிறைய கவிதைகளைப் படிக்கிறார்கள் இல்லையா, அவர்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைத்து விடுகின்றன. எவ்வகையான தகவல்கள்?

இங்கே ஒரு நொடி நிற்போம். இலா எழுதியிருக்கிற மாதிரியான கவிதைகளை உங்களாலும் என்னாலும் எழுதி விட முடியாதா என்ன? அது ஒன்றும் அப்படி ஆகாத காரியமாகத் தெரியவில்லை. இல்லையா?

ஆனால் இந்தக் கவிதையில் உள்ள ஒரு வகையான நேர்த்தியைப் பாருங்கள். இதை நாம் எழுதும் எல்லா கவிதைகளிலும் தொடர வேண்டும், முடியுமா? நாமானால் என்ன செய்வோம், இன்று இந்த மாதிரி ஒரு கவிதையை எழுதுவோம், நாளை நன்றாக இருக்கிறது என்பதற்காக

ஒரு வெண்பந்தாய்
இட்லி மாவில் விழுந்த எலி
தத்தித் தத்திப் போகிறது

கிருஷ்ண ஜெயந்தி



என்று எழுதிவிட்டு, ஆஹா என்று நாம் அதிசயிப்பதை உணர்த்துவதற்காக ஆச்சரியக் குறியைப் போட்டு அதை அழகும் செய்வோம், இல்லையா?- கிருஷ்ண ஜெயந்தி!

இதைப் படித்தபின் நீங்கள் எழுதும் எதையாவது கவிதை என்று புலவர் பெருமக்கள் ஒப்புக் கொள்வார்கள் என்கிறீர்கள்?

இந்த காலத்தில் கவிதை எழுதுகிறவர்கள் ஆள்வது மொழியை. அதன் எல்லைகளை எவ்வளவுக்கு விரிக்க முடியும் என்று சோதித்துப் பார்க்கிறார்கள். உங்கள் மொழி ஆளுமை எந்த அளவுக்கு நன்றாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நீங்களும் நல்ல கவிஞராக அங்கீகரிக்கப்படுவீர்கள். உங்கள் கவிதையும் நல்ல கவிதையாய் அறியப்படும். அதுதான் உண்மை.

நாம் தகவல் பெட்டகமாய் கவிதைகளை அணுகுவது அவர்களுடைய நோக்கத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறது. ஏன்? வாசகனின் கவனம் மொழியை விட்டு தகவலுக்குத் தாவி விடுகிறது. அது நல்ல கவிதைக்கு அழகில்லை, சரிதானே? கவிதை என்றால் அதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறபடி இருக்க வேண்டும், அதுதானே அழகு?

அபத்தமாக ஒன்று சொல்கிறேன், சரி வருகிறதா பாருங்கள்- இது பொருத்தமாக இருந்தாலும் இருக்கக் கூடும்: நீங்கள் ஒருவரைத் தேடிப் போகிறீர்கள். வழி தேடிக் கொண்டிருக்கையில் ஒரு அழகான பெண் எதிர்ப்படுகிறாள். அவர், "லெப்ட்ல போய் செகண்ட் ரைட் திரும்பி கொஞ்ச தூரம் போனா பச்சை பெயிண்ட் அடித்த வீடு வரும். அதற்கு எதிர் வீட்டில்தான் இவர் இருக்கிறார்," என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். "சரி," என்று தலையாட்டி விட்டு நீங்கள் அவளைக் கடந்து போக முடிகிறதென்றால் அது அழகுக்கு மரியாதையா? அவள் நினைவாகவே இருந்து திரும்பத் திரும்ப அவளைத் தேடி வந்து எதிர்ப்பட்டால் அவளைப் பின்தொடர்ந்து அவள் வீட்டைக் கண்டு பிடிக்க வைக்க வேண்டும், அதுதானே அழகுக்கு அழகு? என்ன சொல்கிறீர்கள்?

அழகென்றால் அதன் தாக்கம் நம்மைக் கடத்திக் கொண்டு போய் தன்னில் இருத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதைதான் இப்போது எழுதும் கவிஞர்கள் முயற்சி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். நம் கவனம் கவிதையில் இருக்க வேண்டும், அதன் தகவல்களில் அல்ல. இதன் காரணமாகவே தகவல்களின் ஒழுங்கை, முழுமையை கலைத்து மொழியில், கவிதையின் கவித்துவத்தில் உள்ள ஒழுங்கை முன்னிறுத்துகிறார்கள் இவர்கள் என்று நினைக்கிறேன்.



எது எப்படி இருந்தாலும், கவிதைகள் தனித்து நிற்பதில்லை. நான் முன் சொன்ன மாதிரி இந்த வகையான கவிதைகளை யாரும் அவ்வப்போது வாய்க்கிற தருணங்களில் எப்போதாவது ஓரிரு முறை எழுதி விடலாம். ஆனால் அதைத் தொடர்ந்து செய்கிற ஜட்ஜ்மன்ட் இருக்கிறதில்லையா, அதுதான் நீங்கள் எழுதுகிற கவிதையை கவனிக்கப்பட தக்கதாய் நிலை நிறுத்துகிறது.

இது அநியாயம் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது அப்படிதான் சார். இது மொழியின் எல்லைகளை விரிக்கிற வித்தை, இங்கு கத்துக்குட்டிகளுக்கு இடமில்லை. மொழி ஆளுமை உள்ளவர்கள் என்று அறியப்பட்டவர்களே இங்கு ஆட்சி செய்ய முடியும். நீங்கள் நவீன கவிதை எழுத நினைப்பவராக இருந்தால் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்- கவிஞர்கள் தங்கள் கவிதைகள் மூலம் ஒருவரோடொருவர் உரையாடிக் கொள்கிறார்கள். அவர்களது உரையாடல் கவிதையின் பொருள் குறித்தல்ல- அதன் மொழி குறித்து, வடிவம் குறித்து, இயல்பு குறித்து. இதைப் பற்றி எழுதுகிறேன் அதைப் பற்றி எழுதுகிறேன் என்பதெல்லாம் ஒரு சாக்குதான்- கவிதைதான் அவர்களது பாடுபொருள். நாம் நிறைய கவிதைகளைப் படித்து, இவர்கள் பேசிக் கொள்வதைத் தொடர்ந்து ஒட்டுக் கேட்டால்தான் இவர்கள் பேசிக் கொள்வதை பாலோ பண்ண முடியுமென்று நினைக்கிறேன். இந்த மாதிரி கவிதைகளைப் படிப்பதற்காக நாம் இவ்வளவு மெனக்கெட வேண்டுமா என்பது வேறு விஷயம்.

நிறைய எழுதி விட்டேன்- இதில் தெளிவை விட கேள்விகள்தான் அதிகம் எழுந்திருக்கும். அதனால் இன்னொன்றையும் சொல்லி விடுகிறேன். கவிஞர்களை அரசர்கள் என்று சொன்னேனில்லையா, நம் கையேந்தி நிலையை மனதில் வைத்து, அது தவறு.

கவிஞர்கள் கடவுள் மாதிரி. படைப்பாளிகள் என்ற அளவில் மட்டுமல்ல, அவர்களின் இருப்பு உபாசகர்களின் கவனிப்பை நம்பி இருக்கிறது என்பதாலும்தான். என்னதான் நாங்கள் படைக்கிறோம், நீ எங்களை உபாசித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் எட்டி நின்றாலும், பக்தன் கண்டு கொள்ளாமல் இவர்களைக் கைவிட்டால் கதி என்னாகும்? யோசித்துப் பாருங்கள், சிதிலமடைந்த கோயில்கள் நினைவுக்கு வருகிறதா இல்லையா?

கவிதைக்கு கவிஞன் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் வாசகனும், சரிதானே? தகவல்களைத் தவிர்த்து மொழியின் எல்லைகளை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் விரித்து செல்லுங்கள், ஆனால் ஓரளவுக்கு மேல் ஓவராகப் போனால் வாசகர்கள் அந்நியப்பட்டுப் போய் விடுவார்கள், இல்லையா? அந்த ஆபத்தும் இருக்கிறது. ஆங்கிலக் கவிதைகளில் ஒரு தேக்க நிலை இருப்பதாக கேள்விப்படுகிறேன், ஒரு சமயம் இப்பாலும் அப்பாலும் இருக்க வேண்டிய கவிஞர்கள், ஒரேயடியாக அப்பால் போய் விட்டதால் இது நேர்ந்திருக்கிறதோ என்பது என் ஐயம்.

ஹரன் பிரசன்னாவின் மூன்று கவிதைகளை முன்வைத்து என்று சொல்லி விட்டு அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசாமல் இன்னும் என்னடா இவன் கதை விட்டுக் கொண்டிருக்கிறான் என்று நீங்கள் கடுப்பாவது தெரிகிறது. ஒரு நாள் பொறுத்திருங்கள், அதையும் சொல்லி முடித்து விடுகிறேன்.

நாளைக்குமா, என்று பதறாதீர்கள் நண்பர்களே, இவ்வளவையும் தெரிந்து கொண்டால்தான் அவர் கவிதைகளை சரியான முறையில் அணுக முடியும்.

இதோ ஹரன் பிரசன்னாவின் மூன்று கவிதைகளில் இன்னொன்று- அவர் அப்பாலிருக்கிறாரா இப்பாலிருக்கிறாரா எப்பாலிருகிறார் என்று சொல்லுங்கள்-

பாற்கடல்

வெண்ணிறக் குதிரைகள்
மிடறு நிமிர்த்தி பாய்ந்தோடுகின்றன
புரண்டு படுக்கிறான் மகன்
விஷ்ணுவின் புன்னகையை ஏந்தி
தொப்புள்கொடியில் லக்ஷ்மியைத் தாங்கி
வாயிடுக்கில் ஒழுகும் நீரில்
மிதக்கிறது என் கட்டில்
கட்டிப் பிடித்துக்கொள்கிறாள்
கனவின் நிறத்தில்
மலர்ந்த மனைவி
என்ன நீர்ச்சத்தம் என்கிறாள் அம்மா
அலைகளுக்கு இடையே
ஆயிரம் ஆயிரமாய்
மிதந்து வருகின்றன
அந்த இரவில்
அப்போது மலர்ந்த
தாமரை மலர்கள்
ஒரு மலரை எடுத்து
விஷ்ணுவுக்கு வைத்தேன்
எங்கேயோ ஒலிக்கிறது மணிச்சத்தம்

.
.
.

Nov 23, 2010

"கவிதையை எப்படிப் படிக்க வேண்டும்?"

ஹரன் பிரசன்னாவின் "மூன்று கவிதை"களை முன்வைத்து
சிறப்புப் பதிவர்: நட்பாஸ்




ஒரு கவிதையை எப்படி வாசிப்பது? இந்த நாட்களில் எழுதப்படுகிற கவிதைகளைப் படிக்கிறவர்களில் நிறைய பேருக்கு இந்த சந்தேகம் வருகிறது. எனக்கும்கூடத்தான், ஆகப் பாருங்கள், நேற்று மாலை என் நண்பரொருவரிடமிருந்து அஞ்சல் ஒன்று வந்தது- சொல்வனம் இதழில் ஹரன் பிரசன்னாவின் மூன்று கவிதைகளைச் சுட்டி, "பாஸ், இதெல்லாம் என்ன? மூணுல ஒண்ணு கூட விளங்கல :(" என்று. அஞ்சலில் அவர் வெளிப்படுத்தியிருந்த முகம் திரும்பிய ஸ்மைலி அதிர்ச்சியில் உறைந்த ரத்தத்தை நினைவுபடுத்தியது எனக்கு. இந்த மாதிரி ஒருத்தர் நம்மை நம்பி கேட்கும்போது, "தெரியலையேப்பா!" என்று கையை விரிக்க என்னால் முடிவதில்லை. இருக்கிற குழப்பம் போதாதென்று ஏதோ என்னாலான கைங்கர்யம்- இதோ.


எது கவிதை, ஏன் கவிதை என்பதை விளங்கிக் கொள்ள அதே இதழில், வா மணிகண்டன் நவீன கவிதைகள் குறித்து எழுதியுள்ள, "நின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா" என்ற கட்டுரையையும் பதிப்பித்திருக்கிறார்கள், அதை முதலில் படிப்பது பயனுள்ளதாக இருக்கும். அதை வாசித்துப் பார்த்தால் வா மணிகண்டன், கவிதை வாசகனுடன் கண்ணாமூச்சி ஆடுவதாக சொல்கிறார் என்பது புரிகிறது. 


இது எல்லா கவிதைகளுக்கும் பொருந்துமா இல்லை நவீன கவிதைகளுக்கு மட்டும்தான் பொருந்துமா என்று தெரியவில்லை. ஒரே கவிதையை வெவ்வேறு வாசகர்கள் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொள்வதை அவர் அங்கீகரிப்பது போலவும் தெரிகிறது. ஏனென்றால் பிரான்சிஸ் கிருபாவின் ஒரே ஒரு கவிதையைப் பற்றி அவ்வளவு பெரிய கட்டுரையை எழுதி விட்டு, "அல்லது முற்றும் வேறுமாதிரியாக இன்னொரு வாசகன் யோசிக்கலாம்," என்று பேனாவைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விடுகிறார்.



எனக்கு இந்த பிரான்சிஸ் கிருபாவின் கவிதையை வேறு மாதிரியாக வாசிக்கத் தோன்றுகிறது. அதை கவனித்துவிட்டு ஹரன் பிரசன்னாவின் மூன்று கவிதைகளுக்கு வந்தால் நம் வேலை சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


இது கவிதை:

விரித்த என் பாயில்
மீதமிருந்த இடத்தில்
படுத்து ஒடுங்குகிறது குளிர்காலம்.
பூக்கள்
ஒரு புன்னகையின்
தொடக்கமா முடிவா
என்றுதான் நான் கேட்டேன்.
அது என்னைக் கட்டியிறுக்கி
காலோடு கால் பின்னிக் கொண்டது.
அடுப்பில் விறகு அணைந்திருக்கிறது
எழுப்பிவிடட்டுமா என்று கேட்டேன்.
கைகளையும் பின்னிக்கொண்டது.
இரவு தீர என்னோடு
உறங்கிக் கிடந்தது.
சூரியசாட்டையிலிருந்து
மஞ்சள் ரத்தம் பரவியபோது
ஒரு முத்தத்தை உடைக்கமுடியாமல்
இரண்டு உதடுகள் திணறின
காட்டுக்கு வெளியே

(உரிமை- ஆசிரியருக்கே!)


கவிதையை அவரவர் திறமைக்கேற்றார்போல வாசித்துக் கொள்ளலாம் என்று வா மணிகண்டன் சொல்லி விட்டார். இதை நாம் எப்படி வாசிப்பது என்று பார்ப்போம்.


குளிர்காலம் என்பது பெண்ணாக இருக்கலாம், ஆணாக இருக்கலாம், இல்லை ஆளுயரத்துக்கு வளர்ந்த ஒரு பூனைக்குட்டியாகக் கூட இருக்கலாம். அது பாயில் மிச்சமிருக்கிற இடத்தில் ஒடுங்கிப் படுத்துக் கொண்டிருக்கிறது, பாவம்.



நம் கவிஞர் சும்மா இருக்காமல் அதனிடம், "பூக்கள் ஒரு புன்னகையின் துவக்கமா முடிவா?" என்று வாயைக் கொடுக்கிறார். நியாயமான கேள்விதானே? காலையில் கொஞ்சம் அப்படி இப்படி வெளியே போனீர்களானால் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நம் நகரத்து சாலையோரங்களில் அங்கங்கே செடிகளில் பூக்களைப் பார்க்கலாம். "ஆஹா, பொழுது நன்றாக விடிந்தது. பூக்கள் மலர்ந்த முகத்தோடு அதை வரவேற்கின்றன, இது நல்ல நாள்தான்" என்று நீங்களும் பூக்களுக்கு குட் மார்னிங் சொல்லக் கூடும், உங்களுக்குக் காதலியோ மணம் மாறாத மனைவியோ இருந்தால் அந்தப் பூவை யாருக்கும் தெரியாமல் நீங்கள் உஷார் பண்ணவும் கூடும். ஆனால் அதே அந்தப் பூக்களின் மலர்ச்சி வெகு விரைவிலேயே வாடிப் போய் விடுமென்பதும் சிலபேருக்கு மட்டும் அந்த அதிகாலை வேளையிலும் நினைவுக்கு வரும்- "அச்சச்சோ!" என்று அதைப் பார்வையாலேயே வருடிக் கொடுத்து விட்டு தங்கள் வழியில் செல்கிற இவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது.



கவிதைக்கு வருவோம்- " "பூக்கள் ஒரு புன்னகையின் துவக்கமா முடிவா?"" என்று நம்மிடம் கேட்கப்பட்டிருந்தால், "நல்ல கேள்வி நன்றி கிருபா!," என்று சொல்லி விட்டு திரும்பிப் படுத்துக் கொண்டிருப்போம், அதைப் பேசி என்ன ஆகப் போகிறது?-. குளிர்காலம் அந்த மாதிரியான ஆள் இல்லை.



என்ன செய்கிறது அது? பாய்ந்து வந்துக் கட்டியிறுக்கி கவிஞனின் காலோடு கால் பின்னிக் கொள்கிறது. ஏன் இப்படி செய்தது என்று கவிஞர் சொல்லவில்லை. பாவம், அவருக்கு மட்டும் குளிர்காலத்தின் மனசுக்குள் நுழைந்து அது என்ன நினைக்கிறது ஏது என்று அறிந்து கொள்ளக் கூடிய சக்தி இருக்கிறதா என்ன?



சும்மாக் கிடந்த குளிர் காலத்திடம் வாய் கொடுத்து மாட்டிக் கொண்டாரா, அதுவும் கிட்டே வந்து கட்டிப் பிடித்துக் கொண்டதா, கவிஞருக்கு இப்போதுதான் குளிர் தெரிகிறது போலிருக்கிறது, "அடுப்பில் விறகு அணைந்திருக்கிறது, எழுப்பி விடட்டுமா?" என்று கேட்கிறார்.



"என்னடா இவன், உயிருக்கே உலை வைத்து விடுவான் போலிருக்கிறதே!" என்று குளிர்காலம் பயந்து விட்டதோ என்னவோ, கவிஞரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது.



அப்புறம் என்ன, கவிஞரை இறுக அணைத்துக் கொண்டு அவரது உடலின் கணப்பில் குளிர்காலம் நன்றாகத் தூங்கிப் போய் விடுகிறது. கவிஞர் இரவெல்லாம் குளிர் தாங்காமல் விறைத்துப் போய் கிடந்த கோலம் கவிதையின் வாயிலாகக் காணக் கிடைக்கிறது- "இரவு தீர என்னோடு உறங்கிக் கிடந்தது" என்கிறார். இதைத் தொடர்ந்து, இரவு தீர யார் விழித்துக் கிடந்தது என்ற கேள்வி எழுவது நியாயம்தானே?



அப்புறம் பார்த்தால் ஒரு வழியாக சூரியன் சாட்டையாலடித்து இரவைத் தீர்த்துக் கட்டி விடுகிறான்- மஞ்சள் ரத்தம் வானெங்கும் பரவுகிறது. பார்க்கிறார் கவிஞர், எதையும் வாய் திறந்து பேச இயலாத ஊமையாக- "ஒரு முத்தத்தை உடைக்க முடியாமல் இரண்டு உதடுகள் திணறின" என்ற வரிகள், குளிர்காலம் இவரை வாயடைத்துப் போக வைத்து விட்டதை உணர்த்துகின்றன. முத்தமிடுவதைப் போல குவிந்து உறைந்து விட்ட உதடுகளில், குளிர்காலம் தன் முத்தத்தை இட்டு வைத்திருக்கிறது- சரிதானே சார் நான் இந்தக் கவிதையைப் படித்திருப்பது?



இந்த மாதிரி அர்த்தம் செய்துகொள்ளும் வாசகர்களாகிய நம்மையெல்லாம் பிரான்சிஸ் கிருபா அத்தனை கவிஞர்களின் சார்பாகவும், "போடாங்க!" என்று வழியனுப்பி வைக்கிறார்- "காட்டுக்கு வெளியே!" என்ற கடைசி வரியில்.



இதை எப்படி ஐயா அர்த்தம் பண்ணிக் கொள்வது?



இதற்கான ஒரு க்ளூ வா மணிகண்டனின் வேறொரு கவிதையில் கிடைக்கிறது-


பந்த‌ல் சலித்த‌‌
வெய்யிலில் பேசிக் கொண்டிருந்தோம்.
தீராத இரவுகள் பற்றி பேசினீர்க‌ள்
நெருங்க முடியாத வனம் குறித்துச் சொன்னீர்கள்
விடையில்லாத‌ புதிர்க‌ளை சிலாகித்தீர்க‌ள்.

பேச‌ எத்த‌னித்தேன்.

நொறுக்கினீர்கள்.

மீன்க‌ளால் நிறைந்த‌
க‌ண்ணாடி தொட்டியொன்றை

- அந்திமழை, வா.மணிகண்டன் - கவிதைத் திருவிழா 58, மீன்களோடு நொறுங்கும் தொட்டி
(உரிமை- ஆசிரியருக்கே!)


இரவு, பகல். குளிர், வெயில். உறக்கம், விழிப்பு- உண்டோ இல்லையோ, வா மணிகண்டனின் இந்தக் கவிதையை பிரான்சிஸ் கிருபாவின் கவிதைக்கு எதிர்வினையாக வாசிக்கலாம், யார் கேட்க முடியும்? வாசகனுக்குதான் அந்த உரிமை இருக்கிறதே!


கவிஞன், என் கவிதை பூக்களைப் போல தன் பாட்டுக்குக் கிடக்கும், அதன் புன்னகையின் அடி முடி காண நினைக்கிற உன்னைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்று வாசகனிடம் சொல்லி தன் சுதந்திரத்தை நிலை நிறுத்திக் கொள்கிறான். வாசகனுக்கு வேறு வழி இல்லை- தனக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, ஏன் கவிஞனுக்கே பிடித்திருக்கிறதோ இல்லையோ, வாசகனும் தன் விருப்பப்படி கவிதையைப் பொருட்படுத்தும் சுதந்திரத்தைக் கை கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். கவிஞனுக்கு எது முழு சுதந்திரத்தைத் தருகிறதோ அதுவே கவிதை மீதான உரிமைகள் அனைத்தையும் பறித்து விடுகிறது என்பது வியப்பாக இருக்கிறது. அதே போல் வாசகனுக்கு தன் இஷ்டத்துக்கு கவிதையைப் படித்துக் கொள்ளும் முழு உரிமை இருந்தாலும் அந்த சுதந்திரம் அவனுக்கு அவ்வளவு திருப்தியானதாக இல்லை என்று நினைக்கிறேன்- கூடுமானவரை அவன் கவிஞன் என்ன சொல்ல வருகிறான் என்று தெரிந்து கொள்ளவே ஆசைப்படுகிறான்: இந்த சுதந்திரம் அவன் மேல் வலியத் திணிக்கப்பட்ட ஒன்று- நாடு கடத்தப்பட்டவனின் சுதந்திரத்தைப் போன்றது இது.



இந்த நவீன கவிதையில் என்ன ஒரு சங்கடம் என்றால், கவிதைகளிடமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு வாசகன் தான் என்ன அர்த்தம் செய்து கொண்டானோ, அதை அவன் தன்னோடே வைத்துக் கொள்ள வேண்டும். கவிஞனிடம் போய் அதை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி செய்தால் வா மணிகண்டன் சொல்கிற மாதிரிதான் நாமும் சொல்லிக் கொண்டு திரும்பி வர வேண்டும், "பேச‌ எத்த‌னித்தேன். நொறுக்கினீர்கள். மீன்க‌ளால் நிறைந்த‌ க‌ண்ணாடி தொட்டியொன்றை" என்று. நவீன கவிஞர்கள் தங்கள் கவிதைகள் நன்றாக இருக்கின்றன என்று பாராட்டப்படுவதை விரும்புகிற அளவுக்கு அதன் பொருள் சட்டகப்படுத்தப்படுவதை வரவேற்கிற மாதிரி தெரியவில்லை.



மொத்தத்தில் கவிதை தன் பாட்டுக்குக் கிடக்கிறது. அதன் பொருள் நம் உள்ளத்தில், "மீன்க‌ளால் நிறைந்த‌ க‌ண்ணாடி தொட்டி" போல் இருக்கிறது. இதை கொண்டு போய் அங்கே குத்திக் குடைந்து பொருத்திப் பார்க்க முனையாதீர்கள்- கவிதை உங்கள் நினைப்பை நொறுக்கி விடும். இந்த மாதிரியான கவிதைகள் எந்த அளவுக்கு கவிஞனாய் இல்லாத வாசகர்களுடன் நட்பு பாராட்டுகிறது என்பது கேள்விக்குரிய ஒன்றே. எது எப்படியிருந்தாலும் வாசகர்களுக்கு வேறு வழியில்லை, அவர்களாகவே முனைந்து அதை தங்களுக்கேற்ற வகையில் புரிந்து கொண்டு நிறைவடைய வேண்டியதுதான்.



அந்த காலத்தில் புலவர்கள் அரசவைக்குப் போய் பாடுவார்கள் என்று கேள்வி. அரசன் அதற்குத் தக்க சன்மானம் தருவானாம். பொற்கிழி கிடைத்தால் புண்ணியம், புண்ணாக்கு கிடைத்தால்? "ஏன் ராஜா எனக்கு புண்ணாக்கைப் பரிசாகத் தந்தீர்கள்?" என்று அரசனைப் பார்த்து புலவன் கேட்க முடியுமா? "இதை வறுத்து சாப்பிட்டால் நன்றாக இருக்குமா இல்லை அவித்து சாப்பிட்டால் நன்றாக இருக்குமா?" என்ற கேள்விகளுடன் வீடு திரும்ப வேண்டியதுதான், இல்லையா?



இந்த காலத்தில் கவிஞர்கள்தான் அரசர்கள். நாம் அவர்களுடைய குடிகள்- கிடைத்ததை வைத்துக் கொண்டு வயிற்றுப்பாட்டைத் தேற்ற வேண்டிய நிலையில் சமகாலப் புலவர்களின் புரவலர்களாகிய வாசகர்கள் நாம் இருக்கிறோம்.



ஒருவாராக கவிதையில் எதை எதிர்பார்க்க வேண்டும், அதை எப்படி வாசிக்க வேண்டும் என்பதைத் தொட்டாகி விட்டது. கவிஞர்களை எப்படி அரசர்கள் என்று சொல்ல முடியும்? அவர்கள் எதை அரசாள்கிறார்கள்? நாம் அடுத்து இதைப் பார்க்க வேண்டும். அப்புறம், என் நண்பர் கேட்டாரே, சொல்வனத்தில் வெளியாகி இருக்கிற ஹரன் பிரசன்னாவின் "மூன்று கவிதைகள்" என்ற கவிதை குறித்து, அதையும் மறக்காமல் பார்க்க வேண்டும்.



இது ஹரன் பிரசன்னாவின் மூன்று கவிதைகளில் ஒன்று- நான் மேலே சொன்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு படித்துப் பாருங்கள், அப்படியொன்றும் சிக்கலான கவிதையாகத் தெரியவில்லை எனக்கு-


ஒளி

நீண்ட நேரம்
சூரியனை நோக்கி இருந்துவிட்டு
கொஞ்சம் ஒளியை
பைக்குள் போட்டுக்கொண்டு
உடல் அதிர நடந்தேன்
அந்தியில்
பச்சை இலைகள்
சூழ்ந்திருந்த தோட்டத்துள்
எனக்கு முன் சென்று
என்னை வரவேற்றது ஒளி
நீரில் மூழ்கினால்
என்னைச் சுற்றி
தங்க வெளிச்சம் பரப்பியது
என் பையிலிருந்த சூரியன்
இரவில் உறங்கும்போது
என் உடல் ஒளிர்ந்ததைக் கண்டேன்
மனமெங்கும் சூழ்ந்திருந்த
திசையறியா வேதனை
எங்கோ ஓட
உலகெங்கும்
வெளியெங்கும்
மனமெங்கும்
மின்னின
மறுநாள் காலை
ஒளியைத் திருப்பிக் கேட்க
வீட்டுக்குள் நுழைந்தது சூரியன்
நான் குளிரத் தொடங்கினேன்
என் வெளிச்சத்தில்
இன்னும் பிரகாசமாக சூரியன்

(உரிமை- ஆசிரியருக்கே!)





இதன் தொடர்ச்சியை வாசிக்க - இங்கே
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...