Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Aug 1, 2016

உன்னுதும் என்னுது - 2



முன்குறிப்பு: இந்தப் பதிவை என் முந்தைய அச்சுப்பிச்சுக் கவிதையுடன் ஒப்பிட்டும் கொள்ளலாம்

ங்கள் ஊர் கணேஷ் திரையரங்கில் கபாலி திரைப்படம் வெளியான மூன்றாம் நாளான சென்ற ஞாயிறன்று படம் பார்க்க சீட்டு கிடைக்கிறதா எனப் பார்க்கலாம் என்று ஐந்து  பேர் நின்று கொண்டிருந்த அந்த வரிசையில் போய் நின்றேன். முதலாம்  நபர் சீட்டு வாங்கியவுடன் வெளியே நகரத் துவங்க அவரைத் தொடர்ந்து அவர் பின்னால் நின்ற மற்ற நால்வரும் வெளியே அவருடனேயே நகர்ந்தனர். ஒரே குடும்பம் போல. ரொம்பவும் கட்டுக்கோப்பாய் ராணுவ கதியில் வளர்ந்த குடும்பம் போல. எங்கும் கலைந்து நில்லாது வரிசை என்றால் வரிசையில் நின்றிருந்தார்கள்.

சௌராஷ்ட்ராவோ, கொங்கணியோ ஏதோவொரு மேற்கத்திய மொழியைப் பேசிக் கொண்டே அதே வரிசையில் வடம் பிடித்து வெளியே போனார்கள்.

”மதியம் ரெண்டரை மணிக்காட்சிக்கு மூணு சீட்டு கெடைக்குமாங்க?”

“ஜி1, ஜி2 எந்த ஸ்க்ரீன்ல வேணும்?”, டிக்கெட் கவுண்டர் அம்மணி கேட்டார்.

“என்னங்க வித்தியாசம்?”

“அது 250 ரூபா, இது 200 ரூபா”

“மூணும் சேர்த்தே அவ்வளோதான் விலையா?”, வேண்டுமென்றேதான் கேட்டேன் என்று நினைக்கிறேன்.

ஒரு கனத்த மௌனம்..... ஒரு வெறித்த பார்வை பார்த்தவாறே அம்மணி ஏனோ தன்  உதட்டை முப்பத்து மூன்று திசைகளிலும் சுழற்றினார்.

என் முதுகுக்குப் பின்னால் யாரேனும் நிற்கிறார்களா என எட்டிப் பார்த்தார் அம்மணி.

யாரும் இல்லை.

“நீங்க யார்னா வீட்ல கேக்கணும்னா கேட்டுட்டு வந்துடுங்க. ஒரு டிக்கெட் வெலதான் நான் சொன்னது”, என்று சிரிக்காமல் சொன்னார். உதட்டிற்குள்ளே வெடித்துச் சிரித்துக் கொண்டிருந்தார்.

”சரிங்க”, என்று அங்கிருந்து நகர்ந்தேன்.

கையில் எடுத்து வைத்திருந்த ஐநூறு ரூபாய் நோட்டை பர்ஸுக்குள் செருகிவிட்டு வண்டியை உதைத்தேன்.

“அண்ணா....”, பதினைந்து வருடம் முன் என்னைப் பார்த்தாற்போல் தோற்றம் கொண்ட ஒரு அம்மாஞ்சி அழைத்தான்.

“இது உங்க துட்டா பாருங்கண்ணா....”, நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினான். “இங்கதான் கீழ இருந்துது”.

என் பர்ஸில் ஒரு ஐநூறும் இரண்டு நூறுகளும் இருந்த நினைவு. திறந்து பார்த்தால் ஐநூறும், ஒரேவொரு நூறும் இருந்தன. காசை வெளியே எடுத்தபோதோ அல்லது உள்ளே செருகின போதோ வெளியே விழுந்திருக்குமோ? ஆனால் அது என் பணம்தான் என்றும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. வீட்டம்மணி ஏதும் செலவுக்கு நூறு ரூபாயை எடுத்திருக்கவும் கூடும். 

ஒன்றரை செகண்ட் யோசித்தவன், “தெரியலைம்மா. சரியாத் தெரியலைம்மா”, என்றேன்.

என்னையும் விட அப்பாவி போல அவன், “இப்போ இதை என்னண்னா பண்ணட்டும்?, என்றான்.

சுற்றிமுற்றிப் பார்த்தால் யாரும் காணோம். “நீயே வெச்சுக்கம்மா. வேறென்ன செய்ய?”, என்றேன். தயக்கமாகவே நின்றான்.

“அதோ அந்த அண்ணன் கிட்ட கேக்கறேன்” - பத்தடித் தொலைவில் ஒரு சுவரோரமாக நின்று யாருடனோ தொலைபேசிக் கொண்டிருந்த ஒரு நீலச்சட்டையனை நோக்கிப் போனான்.

மொபைலில் பேசிக்கொண்டே பையனை நிமிர்ந்து பார்த்த நீலச்சட்டை, விழிகள் விரித்து தலையை மேல்நோக்கி அசைத்து என்ன என்று கேட்டு, “இது உங்குள்தாண்ணா”, என்ற கேள்விக்கு எதிர்முனையுடன் பேசுவதை நிறுத்தாமல் ஆமாம் ஆமாம் என்ற வகையில் தலையாட்டி,  கையை நீட்டி “குடு குடு” என்னும் பாவனையில் விரல்களை உள்நோக்கிப் படபடத்து சைகை செய்து பணத்தை வாங்கிக் கொண்டு சட்டைப் பையில் செருகிக் கொண்டான்.

எதிர்முனையுடன் பேசுவதை இன்னமும் நிறுத்தாமல் பையனுக்கு ஒரு சலாம் போட்டு, “நீ போயிட்டு வா”, என்று சொல்லாமல் சொல்லி பையனை அனுப்பி வைத்தான்.

பையன் ஏதோ சாதித்துவிட்ட சந்தோஷத்தில் என்னை நோக்கி சிரித்துக் கொண்டே வந்தான். “குடுத்துட்டண்ணா.... அவர்துதானாம்”.

”சூப்பர் தம்பி. குட் பாய்”, என்று நான் சொல்லி முடிக்க அந்த சௌராஷ்ட்ரக் கொங்கணிக் குடும்பத்திலிருந்து இரண்டு பெண்மணிகள் வெளியே வந்து தலை குனிந்து தரையில் எதையோ தேடத் துவங்கினார்கள்.

“^&&^%$$%^& ஆட்டோ %$$^^^^$$ பர்ஸ் ஓபன்”, என்று அவர்கள் பேசியதில் இருந்து. இங்கேதான் ஆட்டோவிலிருந்து இறங்கியதும் பர்ஸைத் திறந்தேன்  என்று முதல் பெண்மணி சொல்லியது விளங்கியது.

பையனுக்கும் ஏதோ விளங்கியது. மௌனமாக என்னைப் பார்த்தான்.

“இப்போ என்னண்ணா பண்ணட்டும்?”, மறுபடி என்னையே கேட்டான்.

நான் முகம் திருப்பி நீலச்சட்டையைப் பார்த்தேன். அவன் இன்னமும் தொலைபேசிக் கொண்டே இருந்தான்.

“வீட்டுக்குப் போயிடு தம்பி”, என்றேன்.









May 7, 2012

கருப்பு நகரம்


வடசென்னை என்னை வளர்த்தது எனக் கூறிக் கொள்வதில் எனக்கு எப்போதும் ஒரு பெருமை, கர்வம் உண்டு. உலகின் உண்மையான மக்கள் வாழும் ஒருசில இடங்களில் வடசென்னைக்கு முதலிடம் உண்டு எனத் தீவிரமாக நம்புபவன் நான். வட சென்னையின் நினைவுகளை அசைபோட்டு சொல்வனம் இணைய இதழில் எழுதிய ஒரு பதிவு! சொல்வனத்திற்கு நன்றிகள்.
______________________________
“கவுறு அந்துக்கும் சார், தூக்காத தூக்காத! அதான் ஸ்டைக்கு இன்னும் முடிலல்ல, இன்னாத்துக்கு வண்டி எட்த்துன்னு வர?”, சில்லி மிட்-ஆனில் நின்றவன் திரும்பியும் திரும்பாமலும் சொல்லிய நேரத்தில் தன் கைக்கு எட்டிய கேட்சை அவன் தவறவிட்டான்.
ஏன், எதற்கு என்று என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் பெட்ரோலிய நிறுவனங்கள் பண்ணிய திட்டமிட்ட திடீர் ஸ்ட்ரைக்கினால் மூன்று நாளாய் எல்லா பெட்ரோல் பங்குகளும் மூடிக்கிடக்கின்றன. ”ஸ்ட்ரைக் முடிஞ்சிடுச்சி”, என்று யாரோ எங்கேயோ சொன்னாற்போல் காதுகளுக்கு இருக்கவே அந்த சனிக்கிழமை மதியத்தில் பெட்ரோல் டாங்கில் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்சநஞ்ச எண்ணெயை நம்பி வண்டியை எடுத்துவிட்டேன். மூலக்கடை வரை போனால் பெட்ரோலிட்டு வரலாம்.
மூலக்கடை?
மாதவரத்திற்கும் பெரம்பூருக்கும் இடையே மூலக்கடையை நீங்கள் கண்டறியலாம். சென்னை கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையின் முதல் கேட்-வே ரெட்ஹில்ஸ் என்றழைக்கப்படும் செங்குன்றம். அங்கே நுழைந்து நீங்கள் சென்னையினுள்ளே நுழைந்தால் டேங்கர் லாரிகள், சிமெண்ட் லாரிகள், அரிசி மூட்டைகள் சுமக்கும் லாரிகள் என்று விதவித சரக்கு லாரிகள் நீண்டு வடம் பிடிக்கும் சாலைகள் கொண்ட வடசென்னையின் நெருக்கடியான போக்குவரத்து நெரிசலின் ஒரு சாம்பிளை உங்களுக்குக் காட்டிவிட்டு பெரம்பூருக்கோ, மாதவரத்திற்கோ, வியாசர்பாடிக்கோ உங்களை வழியனுப்பி வைப்பது இந்த மூலக்கடை என்னும் இரண்டாவது கேட்-வே.
சென்னையை ஒரு ஸ்கேல் வைத்து ரெண்டாய்ப் பிரிக்கும் ஒரு கோடு உண்டென்றால் அது பூந்தமல்லி நெடுஞ்சாலைதான். அந்தப்பக்கம் உன்னுது இந்தப்பக்கம் என்னுது என்று இங்கேதான் வடசென்னையும் தென்சென்னையும் கொஞ்சமாய் மத்தியச் சென்னையை அங்கங்கே சிதற விட்டுவிட்டு பிரிந்து கிடக்கின்றன. இதில் வடசென்னை எப்போதும் தீண்டத்தகாத ஒரு பிரதேசம். மூலக்கடை, கொடுங்கையூர், மாதவரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, புளியந்தோப்பு, வியாசர்பாடி, சர்மாநகர், முல்லைநகர், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, எண்ணூர் மற்றும் இன்னபிற பகுதிகள்.
ஆப்பிரிக்கா முழுக்கவும் இருண்ட கண்டமாக இருப்பதாகவும், இந்தியாவின் சாலைகளில் புலிகள் ஓடுவதாகவும் உலக மக்களால் எப்படி நம்பப்படுகிறதோ, அதேபோல வடசென்னையில் வியர்வையில் நனைந்த எண்ணெய்த் தேகங்கொண்ட கரிய மனிதர்கள் மட்டுமே வசிப்பதாகவும், மடிப்பாக்கத்திலும் மந்தைவெளியிலும் இல்லாத குப்பைமேடுகள் எல்லாம் இங்கே மட்டுந்தான் இருப்பதாகவும் ஒட்டுமொத்த தென்சென்னையும் நம்பிக்கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கை சற்றும் வீணாகிவிடுதல் கூடாது என்னும் முனைப்பில் ஒவ்வொரு அரசாங்கமும் தன்னால் இயன்றவரை இந்த ஊரை உதாசீனம் செய்கிறது. அண்ணாநகர், புரசைவாக்கம், கீழ்பாக்கம் முதலான மத்தியப் பகுதிகளை தென்சென்னைக் கால்கள் தாண்டினதாய் சரித்திரம் இல்லை.
14thwashermanpet_476399eமாதவரம், மாதவரம் பால்பண்ணை, கொடுங்கையூர், தபால்பெட்டி, பொன்னியம்மன்மேடு, எருக்கஞ்சேரி வாழ் மக்கள் துணியெடுக்க, சினிமா பார்க்க, எக்ஸ்ரே எடுக்க, சாப்பாடு பார்சல் வாங்க மூலக்கடைக்குத்தான் வரவேண்டும்.உயர்தர சைவ உணவகம் என்ற பலகை தாங்கிய இரண்டு ஹோட்டல்களும், அரை டஜன் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளும், ஒரு டஜன் பழ வண்டிக்கடைகளும், இன்னமும் ஏழெட்டு டஜன் இதர கடைகளும், மூன்று தியேட்டர்களும் இங்கே உண்டு. இப்படிப்பட்ட புண்ணிய க்ஷேத்திரத்திற்குத்தான் பெட்ரோல் பங்க் தேடியொரு நீண்ட பயணம் புறப்பட்டிருந்தேன்.
ஒண்ணரை கிலோமீட்டர்தான் ஓடியிருந்த வண்டி அந்தோணி ஆஸ்பத்திரி வந்ததுமே விக்க ஆரம்பித்தது. சோக்கைப் போட்டு விடாமல் ஆக்ஸலேட்டரை முடிந்தமட்டும் முடுக்கியதில் ஷூ கம்பெனிவரை விரட்ட முடிந்தது. வேறு வழியில்லை முக்கால் தொலைவு வந்தாயிற்று இன்னும் கொஞ்சம் போனால் பெட்ரோல் கிடைத்துவிடும், உருட்டத் துவங்கினேன்.
மூலக்கடை ஜங்ஷனில் வழக்கமாக நடுரோட்டில் நிற்கும் பழக்கடைகளும், பூக்கடைகளும் ஓடாத வண்டிகள் தந்த இடத்தையும் சேர்த்து முழுரோட்டையும் ஆக்ரமித்துக் கிடந்தன. ”எங்கள் ஆண்டவனைக் கேள்வி கேட்ட மால்கம் ஸ்பீடே! மன்னிப்பு கேள்” என்ற அந்த பச்சைநிறத் தமிழ் பேனரை சச்சின் படிப்பாரா இல்லை மால்கம் ஸ்பீட் படிப்பாரா என்றெல்லாம் யோசிக்க விழையவில்லை ”பெட்ரோல் பெட்ரோல்” என்று மனனம் செய்து கொண்டிருந்த என் மனம். கிட்டத்தட்ட ஒண்ணரை கிலோமீட்டர் உருட்டலுக்குப் பின் மூலக்கடை பஸ் டிப்போ வரை சென்று சேர்ந்ததில் கயிறு பிடித்து இழுத்து மூடிக் கிடந்த பெட்ரோல் பங்கை தரிசனம் செய்ய நேர்ந்தது.
ஒரு தற்காலிக கிரிக்கெட் மைதானமாகிப் போயிருந்தது அந்த பங்க். ஏழெட்டு பயல்கள் செங்கல் வைத்து வேலிக்காத்தான் குச்சிகளை ஸ்டம்ப்களாக நிற்கவைத்து விளையாடிக் கொண்டிருந்தான்கள். முப்பதுக்கு அறுபது ஏரியாவையும் கிரிக்கெட் மைதானம் ஆக்கும் சாதுர்யம் நம்மை விட்டால் வேறு யாருக்குக் கைவரும்? வாங்க வந்த பொருளின் நினைவகன்று அவர்கள் ஆட்டத்தில் சற்றே திளைத்தேன். இருபதின் ஆரம்ப வயதுகளில் இருந்தனர் அங்கே அத்தனை பேரும். அத்தனையும் வடசென்னையின் டை’யில் வார்த்தெடுத்த அக்மார்க் முகங்கள். அவர்கள் பேச்சினூடே நான்கு வார்த்தைக்கு ஒரு வார்த்தை மற்றவனின் ஆத்தாளையோ அல்லது அம்மாளையோ அழைப்பது அவர்களின் வொகாப்லரிக்கு அங்கே அவசியமாயிருந்தது. பந்தை வீசுபவனும் மட்டையை வீசுபவனும் கூட முடிந்த இடைவெளிகளில் ஆ’வையும் அ’வையும் இங்கே அழைத்தார்கள். வீச்சு கனஜோராய் இருக்குமோ என்னவோ!
பத்து நிமிட ஆட்டத்தில் அங்கே என் காத்திருத்தல் யாருக்கும் ஒரு பொருட்டாய் தெரியவில்லை. கயிற்றை அகற்றி உள்நுழைய முற்பட்டேன்.
“கவுறு அந்துக்கும் சார், தூக்காத தூக்காத! அதான் ஸ்டைக்கு இன்னும் முடிலல்ல, இன்னாத்துக்கு வண்டி எட்த்துன்னு வர?”, சில்லி மிட்-ஆனில் நின்றவன் திரும்பியும் திரும்பாமலும் சொல்லிய நேரத்தில் தன் கைக்கு எட்டிய கேட்சை அவன் தவறவிட்டான்.
“பொறம்போக்கு! அத்தப் புடிக்கத் தெர்ல்லியா உனுக்கு”, அத்தனை பேரிலும் அவன் ஒருவன் மட்டும்தான் பெட்ரோல் பங்க் சீருடை துறந்தவனாக இருந்தான். கேப்டனாயிருக்க வேண்டும், யாரைத் திட்டினான் எனத் தெரியவில்லை.
”ஸ்ட்ரைக் முடிஞ்சிடுச்சின்னு சொன்னாங்களே?”
”யாரு சொன்னா உன்னாண்ட முட்ஞ்சிர்ச்சின்னு? எவனா சும்மாங்காட்டியும் சொல்லிருப்பான்”, என்னைப் பார்த்துக் கொண்டே தன் ஏரியாவிற்குள் நுழைந்த பந்தை பிடித்து பவுலர் ஸ்டம்புக்கு விட்டெறிந்தான், “இப்டி புடிக்கணும் தெரிஞ்சிக்கோ”, சில்லி மிடானுக்கு இன்ஸ்டண்ட் பாடம் எடுத்தான்.
”சார், ஸ்டைக் முடியல. முட்ஞ்சதும் வாங்க சார். இன்னிக்காவது கொஞ்சம் வெளாடவுடுங்க”, கறாரான ஒரு குரல் டால்பி எஃபெக்டில் வலது மூலையிலிருந்து கேட்டது.
“யாரோ சொன்னாங்கண்ணா, அதுவா விஷயம்? ஒரு அரை லிட்டர் பெட்ரோல் போடு, வீடு வரியும் போயிருவேன்”.
“உனுக்கு தந்துடுவம்ப்பா. உன்னப்பாத்து வரிசகட்டி நிப்பானே லைனா. அல்லாருக்கும் எப்டி தரசொல்ற?”, மேலே பேசாமல் மறு உருட்டலைத் துவங்கினேன்.
“அன்னாண்ட எங்க போற? ரெட்டீல்ஸ் வரியும் எங்கயும் பெட்ரோல் கெடிக்காது”
“நான் வேணா பின்னாடி காம்பவுண்ட் பக்கம் வர்றேன். கொஞ்சம் பார்த்து குடேன் நைனா?”, அவன் பாஷையில் இறங்கிப் பார்த்தேன்.
“போ சார் போ சார்”, அதற்கு மேல் மரியாதை இல்லை. புறப்பட்டுவிட்டேன்.
கள்ளச்சந்தையில் பொருள் விற்பவர்களைக் கண்டாலே வெகுண்டு எழும் புரட்சிகர மனம் இப்போது சாலையில் யாரும் ப்ளாக்கில் பெட்ரோல் விற்கமாட்டார்களா என்று தேடியது. மறுபடி நாலரை கிலோமீட்டர் வண்டியை உருட்டிக் கொண்டே எப்படிப் போவதாம்? தெரிந்தவன் அறிந்தவன் எவனும் எதிரில் வரவில்லை, வந்தாலும் ஒரு இருநூறு மில்லி கடன் கேட்கலாம். நினைத்து அரை வினாடி கடக்கவில்லை பூமி என்கிற பூமிநாதன் எதிரில் திடீர்ப் பிரசன்னம் ஆனான்.
“ஹாய்! ஹவ் ஆர் யூ?”
“நீ எப்போடா இங்க்ளீஷ் தொரை ஆன?”
“போச்சு! அதைவிடு, பெட்ரோல் இருக்கா?”
“அதையேதான் நானும் கேக்கறேன். பெட்ரோல் இருக்கா?”
“சரி விடு! போயிட்டு வர்றேன்”
“வராதே போ”
பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒட்டி உறவாடி நட்பு வளர்த்துப் பழகிய இருவருக்கும் அங்கே பெட்ரோல் லேது என்றது பேச மறுபேச்சு இல்லை. இப்போதைக்குத் தேடல்தான் அவசியம்.
“பெட்ரோல் கெட்ச்சா ஃபோன் பண்றா”, என்றுவிட்டுப் போயேவிட்டான்.
giri
ரோட்டில் எல்லோரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். நானும் பார்த்தவர்களையெல்லாம் மதித்து மறுபார்வை பார்த்துக் கொண்டே வந்தேன். மீண்டும் பழக்கடைகளையும், சச்சின், மால்கம் ஸ்பீடுகளையும் கடந்து மூலக்கடை பேருந்து நிறுத்தத்தையும் தாண்டி ஆளரவமற்ற அந்த கேட்பாரற்ற சாலையில் நடந்து கொண்டிருந்தேன்.
“என்னண்ணா! பெட்ரோல் இல்லியா?”, என்றவனை நான் எல்லா சினிமாக்களிலும் பார்த்திருக்கிறேன். நீங்கள் கூட பார்த்திருப்பீர்கள். வாராமல் விட்ட கலைந்த ஹிப்பித்தலை, எண்ணெய் வடிந்த கரியமுகம், பான்பராக் பல், உருண்டு திரண்ட உருவம், எமதர்மனின் எருமை போல ஒரு மோட்டார்பைக். எல்லா விஜய் சினிமாக்களிலும் இவன் வில்லன் பக்கம் இருந்து கொண்டு தவறாமல் விஜய் கையால் அடிவாங்கிக் காற்றில் நாலெட்டு பல்டி அடித்துப் பறந்து விழுவான்.
“ஆமா சார்”
“என்னண்ணா சார்’ன்னுல்லாம் கூப்புடற? ரமேஷ் மச்சான்தான நீ?”
“இல்லைங்க. நீங்க வேற யாரையோ சொல்றீங்க”
”அப்டியா? அப்போ சாரிண்ணா”, அவசர அவசரமாக அவன் பேசியது மகாநதி படத்தில் துலுக்காணம் பேசுவதை நினைவுப்படுத்தியது.
“தட்ஸ் ஓகே. பரவால்லைங்க”
”பெட்ரோல் வேணுமா?”
எருமையைப் பார்த்தேன். அட பெரிய திமில் கொண்ட எருமை. “ட்ட்ட்டிங்” என உள்ளே மணியடித்தது எனக்கு. அடடா! இதுதான் நான் தேடிய பெட்ரோல் பங்க் போல.
”இருக்கா?”
“ஃபுல்லா இருக்குண்ணே! கொருக்குபேட்டைல நம்மாளுதான்! ஃபுல் டேங்க் ரொப்பினு வன்ட்டேன்”, நான் நம்பமாட்டேனோ என்று பொறுப்பாய் சாவிபோட்டு டேங்கைத் திறந்து காட்டினான். பெட்ரோல்! பெட்ரோல்! ஆ….. தகதகத்து த் தளும்பிக் கொண்டிருந்தது தங்கம் தங்கம்!
”ரைட்டு, நீ ரவி சாரோட மச்சான்தானே?”
“எந்த ரவியை சொல்றீங்க? நான் ரவியோட அக்கா பையன்”
“இல்ல, உங்கக்காவதான அம்பேத்கார் தெருல ரவிக்கு குட்த்துகுது?”
அவன் எதற்காக என்னை இத்தனை தூரம் தெரிந்தவன் போலக் காட்டிக் கொள்கிறான் என்று யோசித்ததில் அவன் கொடுக்கும் பெட்ரோலுக்குக் கேட்கப் போகும் தொகையுடன் அது தொடர்புடையதாக இருக்குமா என என்னை யோசிக்க வைத்தது.
“இல்லீங்க. அக்கா இந்த ஊர்ல இல்லை”
“சரி வுடு. பாட்டில் இருக்குதா?”
“எதுக்கு?”
“பெட்ரோல் புடிக்கணும்ல”
“ஆ ஆ… !”, வெய்யிலுக்கு வழித்துணையாய் வாங்கிய கோக்கக்கோலா பாட்டிலை உதறி உதறித் தந்தேன். அவன் வண்டியைச் சாய்த்து நிறுத்தி பக்கவாட்டு ட்யூபை பிடுங்கியெடுத்து பாட்டிலில் பெட்ரோல் பிடிக்கத் துவங்கினான். பெட்ரோல் பெட்ரோல் பெட்ரோல் பெட்ரோல்…. மனசு அடித்துக் கொண்டது. ஏதோ இன்ஸ்டண்ட் கவிதையெல்லாம் யோசித்தது மனது. தயாரான கவிதையை எடுத்து வெளியே வீச வார்த்தைகள் வந்து விழவில்லை.
பாதி பாட்டில் வந்தவுடன், “போதும் போதும்”, என நிறுத்தினேன். ஒரு லிட்டர் வெளிமார்கெட்டில் அப்போது நாற்பத்தி சொச்ச ரூபாய். இவன் லிட்டருக்கு இருநூறு சொன்னாலும் பாட்டிலில் பிடித்த கால் லிட்டருக்கு ஐம்பதைத் தந்துவிடலாம்.
“வாய்ங்க்கண்ணா பரவால்ல”
“இல்ல, போதும் போதும்”
பாட்டிலைக் கொடுத்துவிட்டு வண்டியில் ஏறியமர்ந்தான். என் வண்டியை சாய்த்துவிட்டு பர்ஸை வெளியே எடுத்தேன்.
“எவ்ளோ?”
“என்னது எவ்ளோ?”
“எவ்ளோ தரணும்”
“ன்னாத்துக்கு?”
“பெட்ரோல்?”
“ண்ணா… இன்னாண்ணா? உள்ள வைண்ணா துட்ட”
என்ன இவன் கிறுக்கனாக இருக்கிறான்?
“இல்லல்ல ப்ளீஸ் வாங்கிக்கோங்க ப்ரதர். இருக்கற பெட்ரோல் கிராக்கிக்கு.. ப்ளீஸ் வாங்கிக்கணும்”
“ண்ணோவ்… துட்டுக்கா குட்த்தாங்க?”
“ப்ளீஸ் ஓசிலல்லாம் வேணாம். காசு வாங்கிக்கோங்க, இந்தாங்க”
“நீ எதுனா குடுக்குணுன்னு நெனச்சியன்னா யார்னா இப்டி பெட்ரோல் இல்லாம வண்டிய உர்ட்டினு போசொல்லோ பெட்ரோல் ஃப்ரீயா குடு. துட்ட உள்ள வைண்ணா”, வண்டியை உதைத்துக் கிளப்பிக் கொண்டு போயேவிட்டான்.

Dec 5, 2011

யு.எஸ். விசாவும் பின்னே ஞானும் - 2


B1 விசா விண்ணப்பிக்க இருப்பவர்கள் இந்தப் பதிவை படிப்பது நல்லது. படிக்காமல் இருப்பது ரொம்பவே நல்லது.

எதிர்வரும் காலத்தில் வேலை நிமித்தமாக அமெரிக்கா செல்ல B1 விசா தேவைப்பட்டாலும் படலாம் என்னும் நிலை அலுவலகத்தில் இருப்பதால், அலுவலக செலவில் B1 விசா ஒன்றை வாங்கி வைத்திருக்கிறேன். குறைந்தது இனி பத்து வருட காலங்களுக்கு இந்த B1 விசாவுக்கான இண்டர்வியூ கவலையில்லை.

கிட்டத்தட்ட கடந்த ஒரு மாதமாகவே இந்த பேப்பர் எங்கே, அந்த பேப்பர் எங்கே, அவர் அப்ரூவல் வேணும், இந்த இன்ஃபர்மேஷன் சேர்க்கணும் என்று ஒரு டஜன் விண்ணப்பங்கள், இரண்டு டஜன் அட்டாச்மெண்ட்டுகள், இதுக்கு வெயிட்டிங், அதுக்கு வெயிட்டிங் என காத்திருப்பு டென்ஷன்கள், இப்படி பேசணும், அப்படி பேசக்கூடாது என்ற அனுபவஸ்தர்களின் அறிவுரைகள்.ஆஆஹ்ஹ்ஹ்!

கடைசியில் இண்டர்வியூ என்னவோ வெறும் ஐம்பதே விநாடிகள்தான் நடந்தது. அதற்குத்தான் இத்தனை டென்ஷனும்.

யு.எஸ். விசாவைப் பொறுத்தவரை இவருக்கு அப்ரூவ் ஆகும் இவருக்கு ஆகாது என சொல்வதற்கில்லை. உங்களுக்கு நேரம் நன்றாயிருந்தால் ‘அப்ரூவ்’, இல்லையென்றால் ‘ரிஜக்ட்’ என்றவகையில்தான் இருக்கிறது.

என் கதையில், நான் ஒரு புராஜக்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விசாவிற்கு அப்ளை செய்யுமாறு என் அலுவலகத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டேன். பின்னர் அதே புராஜக்டில் நான் சேரமுடியாத நிலை ஏற்பட, இருந்தாலும் பரவாயில்லை ”அப்ளை பண்ணியது பண்ணியாச்சு விசா இண்டர்வியூ போய் வந்துவிடு, நாளபின்ன தேவைப்பட்டா உபயோகிச்சிக்கோ” என்று அலுவலகத்தில் கூறவே ஏதோ ஓசியில் கிடைத்த ஜாக்பாட் போலத்தான் இண்டர்வியூவிற்குப் போனேன்.

விசா கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எனக்குக் குறுகிய கால நஷ்டம் ஏதும் இல்லை. எனவே, ரொம்ப ஒன்றும் டென்ஷன் இல்லாமல் கிடைத்தால் கிடைக்கட்டும் இல்லையென்றாலும் கவலையில்லை என்ற நிலையில்தான் அந்தத் திங்கள்கிழமைக் காலைப் பொழுதில் அண்ணாமேம்பாலம் அருகே உள்ள அமெரிக்கத் தூதரக வாசலின் அந்த பிரஸித்தி பெற்ற வரிசையில் சென்று கலந்துகொண்டேன்.

நாம் டென்ஷனில்லாமல் அல்லது இருந்த டென்ஷனை வெளிக்காட்டாமல் இருந்தாலும், உடன் நிற்பவர்களைப் பார்த்தால் நமக்கும் டென்ஷன் தொற்றிக் கொள்ளும் போலத் தோன்றியது. Life is crazy என்று அந்த வரிசையில் நின்றபோது தெளிவாய்ப் புரிந்தது. ”அய்யா அமெரிக்க எஜமானரே தயவு செஞ்சு எனக்கு விசா அப்ரூவ் பண்ணிடு என் வாழ்க்கையே இந்த இண்டர்வியூலதான் இருக்கு. நீ அப்ரூவ் பண்ணிட்டா மவுண்ட்ரோடுலருந்து அவ்வை ஷன்முகம் ரோடு வழியா சுத்திக்கிட்டு கதீட்ரல் ரோடு பக்கமா வந்து ஒரு அங்கப்ரதிட்சணம் பண்ணிமுடிக்கறேன் என்பது போல கெஞ்சல் தொனிக்கும் முகத்தோடு பல முகங்கள் தென்பட்டன.  ”பாரத தேசமே! என்னை வுட்டுடு, நான் போயிடறேன்”, என்ற குரல்களும் எனக்குக் கேட்டாற்போல் இருந்தது.

அலுவலகத்தில் தந்த நான்கே நான்கு காகிதங்களையும் என் பாஸ்போர்ட்டையும் கையில் வைத்திருந்தவன், அங்கே நின்றவர்கள் பெட்டி பெட்டியாக வைத்திருந்த பேப்பர்கள், சர்டிஃபிகேட்டுகளைக் கண்டு நாம் ஏதும் கொண்டு வராமல் விட்டுவிட்டோமா என்று டென்ஷன் ஏற்றிக் கொண்டேன். பிறகுதான் அவை ஸ்டூடண்ட் விசா, ஹெச்1, எல்1 வகையறாக்களுக்கானவை எனப் புரிந்தது.

விண்ணப்பிக்கும் 100 பேரில் 57 பேருக்குத்தான் இப்போது யு.எஸ். B1 விசா கிடைக்கிறதாம். மீதம் 43% ரிஜக்‌ஷன் கேஸ்கள் என்று வரிசையில் நின்ற பெண் ஒருத்தி சொல்லி உடன் நின்றவர்களின் டென்ஷனை மேலும் ஏற்றிக் கொண்டிருந்தாள்.

தோளில் மயங்கித் தொங்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையை உதறி உதறித் தோளில் ஏற்றிவிட்டுக் கொண்டு ஒரு பெண்மணி அந்த சில்லென்ற காலையில் வரிசையின் கடைக்கோடிக்கு அனுப்பப்பட்டாள். ஏதோ ஒரு அகர்வால் ஒருத்தன் பெங்களூருவிலிருந்து நேற்று நள்ளிரவு தாமத விமானத்தில் வந்து த்ராபை ஹோட்டல் ரூமின் தூக்கமின்மையில் தவித்து ஆறரைக்கு எழுந்து “அம்மா ஊர்வலம்” (!!!) ஒன்றைக் கடந்து வதைப்பட்டு உதைப்பட்டு தூதரகம் வந்த கதையை நான் கேட்கமாட்டேன் என்று அடம் பிடித்தாலும் வலுக்கட்டாயமாக எனக்கு சொல்லிக் கொண்டிருந்தான்.

அங்கேயும் நம்மாட்களுக்கு வரிசையில் நிற்கும் பயிற்சியை தூதரக செக்யூரிட்டிகள் புன்னகைமாறா முகக்கடுப்போடு செய்து கொண்டிருந்தார்கள். நம்மூரில் பிரம்பால் அடித்தாலும் வரிசையில் நிற்கும் கலையை கற்றுக்கொள்ள அடம் பிடிப்பவர்கள் அமெரிக்கா சென்றால் எப்படி இருப்பார்கள் என்பதைப் பார்க்கவேனும் எனக்கு அமெரிக்கா செல்லும் கனவு இருக்கிறது.

செக்யூரிடி செக், பேப்பர் வெரிஃபிகேஷன், கைரேகை எடுக்கும் படலம் என ஒவ்வொன்றாய் முடித்து இண்டர்வியூ ஹாலுக்குப் போனேன். ஒரு வெள்ளைக்கார அம்மணிதான் கவுண்டரில் இருந்தார்: “குட் மார்னிங் சார்! ஹவ் ஆர் யூ டூயிங்!” என ஆரம்பித்தவர் மேற்கொண்டு கேட்ட கேள்விகள்...

நீங்கள் எதற்காக அமெரிக்கா போகிறீர்கள்?
இங்கே வேலை செய்யும் நிறுவனத்தில் எத்தனை வருடம் வேலை பார்க்கிறீர்கள்?
என்ன வேலை செய்கிறீர்கள்?
உங்கள் சம்பளம் என்ன?
எத்தனை நாள் அமெரிக்காவில் தங்க உத்தேசித்துள்ளீர்கள்?
உங்கள் க்ளையண்ட் யார்?
அவருடைய பிசினஸ் என்ன?
நான் உங்கள் விசாவை அப்ரூவ் செய்கிறேன் 

அவ்வளவேதான். இங்கே ஒவ்வொரு கேள்விக்குப் பின்னாலும் நிறைய அர்த்தங்கள் உண்டு. எல்லா கேள்விகளுக்கும் உள்ளே பொதிந்திருக்கும் ஒரு மறைமுகக் கேள்வி “அமெரிக்கா போகும் நீ அங்கேயே செட்டில் ஆகிவிடுவாயா? திரும்புவாயா?”, என்பதுதான்.  திரும்பிவிடும் எனத் தெரியும் கேஸ்களுக்கு அனுமதி உண்டு. தங்கும் முகமாய் ஒரு சின்ன சந்தேகம் வந்தாலும் ரிஜக்ட்தான்.

மேலும், அங்கிருக்கும் வேலையை இங்கே கொண்டுவரச் செல்பவர்களுக்கு (அவுட்சோர்ஸிங்) விசா அனுமதி இல்லை. இருக்கும் வேலையில் சின்ன மாற்றங்கள் உள்ளன அதற்கான மீட்டிங்’கில் கலந்துகொள்ளப் போகிறேன் என சொல்லியே பெரும்பாலும் விசா அனுமதிகள் பெறப்படுகின்றன.

இங்கே பணிபுரியும் நிறுவனத்தில் நீங்கள் எத்தனை வருடம் வேலை செய்கிறீர்கள் என்பதுவும் ’அப்ரூவலுக்கு’ ஒரு காரணியாக அமையும். அதிக வருடங்கள் வேலை செய்பவர் என்றார் ‘திரும்பி வந்துவிடுவார்’ என்று அர்த்தம். சம்பளத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கிறது. அமெரிக்கா போய் இவரால் செலவு பண்ண முடியுமா என்பதையும் யோசிக்கிறார்கள்.

முடிந்தவரை அவர்கள் கேட்ட கேள்விக்கு மட்டும் சுருக்கமாக பதில் தருவது நல்லது. உப தகவல்கள், கூடுதல் தகவல்கள் தருவது அவசியம் இல்லை. அவ்வாறு செய்தல் உங்களுக்கு மேலும் எதிர்க்கேள்விகளைத் தருவித்து உங்களுக்கே வில்லனாக அமையும் வாய்ப்பு உண்டு.


கடைசியாக....

B1 இண்டர்வியூ செல்பவர்களுக்கு கடைசியாக அதிமுக்கியமான ஒரு மிகப் பெரிய அட்வைஸ்...... “இதுபோன்ற அட்வைஸ்கள் தரும் நபர்கள், பதிவுகள் பக்கம் போகாமல் இருத்தல் மிகவும் அவசியம்”

ஹிஹிஹி!






Dec 2, 2011

யு.எஸ். விசாவும் பின்னே ஞானும்



இடம்: வீனஸ் ஸ்டுடியோ, மடிப்பாக்கம்

ஸ்டுடியோ ரிசப்ஷனில்

”வாங்க சார்”

“பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ எடுக்கணும்”

“எடுத்துடலாம் சார், எத்தனை காப்பி வேணும்?”

“எப்படி சார்ஜ் பண்றீங்க”

“எட்டு காப்பி அறுபது ரூபா”

“எக்ஸ்ட்ரா காப்பி வேணும்னா?”

“எக்ஸ்ட்ரா எட்டு காப்பி போட்டுக்கோங்க. மொத்தம் பதினாறு காப்பி ஹண்ட்ரட் ருபீஸ்”

“ஓகே! ஸிடி’ல காப்பி பண்ணித் தருவீங்களா?”

“அதுக்கு ஒரு 30 ரூபா எக்ஸ்ட்ரா சார்”

“ஸிடி முப்பதா?”

“ஆமாங்க”

“சரி போடுங்க”

“ஒன் தர்ட்டி குடுங்க சார். பாஸ்போர்ட் சைஸ்தானே? கரெக்டா, என்ன சைஸ்ல வேணும் சார்”

“சாரிங்க! தப்பா சொல்லிட்டேன்! இது யு.எஸ். விசாவுக்கு 2x2 இன்ச் சைஸ்ல”

”ஓ! யு.எஸ். விசாவுக்கா? அதுக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ் ஆகும் சார்”

“எப்படி சார்ஜ் பண்றீங்க”

“அது ஆறு காப்பி ஒன் ஃபார்ட்டி ஆகும்”

“நூத்தி நாற்பதா”

“ஆமாம் சார்”

“சிக்ஸ் காப்பீஸ்”

“யெஸ்”

“அது என்னங்க! பத்து காப்பி கம்மியாத் தர்றீங்க, ஆனா நாப்பது ரூபா எக்ஸ்ட்ரா?”

“அது வொய்ட் பேக்-க்ரவுண்ட் வரணும் சார். கொஞ்சம் ஃபோட்டோஷாப் வொர்க் எல்லாம் இருக்கும்”

“அதுக்குன்னு இவ்ளோ அதிகமா வாங்குவீங்க. ஹண்ட்ரட்’க்கு எட்டுன்னா கூட பரவால்லை. இது ஜாஸ்தியா இருக்கே”

“இல்லை சார். இதான் நாங்க சார்ஜ் பண்றது”

”சரி போடுங்க”

“ஒன் நைன்ட்டி குடுங்க சார்”

“எப்படிங்க ஒன் நைன்ட்டி?”

“நூத்தி நாப்பது ப்ளஸ் ஸிடி’க்கு ஒரு ஃபிஃப்ட்டி”

“ஸிடி முப்பதுன்னுதானே சொன்னீங்க”

“இல்லை இதுக்கு அம்பது ரூபா சார்”

”இதென்னங்க புதுக்கதை? அதே ஸிடிதானே?”

”இல்லை இதுக்கு கொஞ்சம் வொர்க் ஜாஸ்திங்கறதால அப்படி எக்ஸ்ட்ரா சார்.”

“என்னங்க சொல்றீங்க. இது அதே ஸிடி’தானே”

“இல்லை சார், நாங்க இப்படித்தான் சார்ஜ் பண்றது”

“சரியாப்போச்சு. போடுங்க போடுங்க!”



உள்ளே ஸ்டுடியோவில்


பின்னணியில் திரைச்சீலை கச்சா முச்சாவென ஏதோ நிறத்தில் இருக்க, இதை எப்படி வெண்மையாக்குவார்கள் என்ற யோசனையில் நான் இருக்க...

”தலையை நேரா வைங்க சார், இங்க பாருங்க, ஏன் சார் லைட் ஷேட்’ல ஷர்ட் போட்டீங்க அதுவும் வொயிட்டாத் தெரியும். கொஞ்சம் இருங்க”

அந்தத் திரைச்சீலையை எப்படி வெண்மை ஆக்குவார்கள் என்று நான் மேலும் ஆழ்ந்து யோசித்த அந்தக் கணத்தில்...

“ஒரு நிமிஷம் சார்”, என்று விட்டு ஃபோட்டோ எடுக்க நின்ற அந்தப் பெண் பின்னே சென்று “சரேல் சரேல்” என்று ஏதோ சத்தம் தந்தாள், திரும்பிப் பார்த்தால் பின்னணியில் சுவரின் நிறம் பால் வெண்மையில் பளிச் என்று இருந்தது. அதுதான் ஃபோட்டோஷாப் வொர்க் போலிருக்கிறது.

(தொடரும்)

Nov 22, 2011

என்னை யாரென்று எண்ணி எண்ணி!


”ஹலோ”

“ஹலோ”

“ஹலோ, சொல்லுங்க”

“ஹலோ”

“ம்ம்... சொல்லுங்க”

“அப்புறம், எப்படி இருக்கீங்க”

“நல்லா இருக்கேன், சொல்லுங்க”

“நான் எப்படி இருக்கேன்னு கேக்க மாட்டீங்களா?”

“சொல்லுங்க. எப்படி இருக்கீங்க?”

“நல்லாதான் இருக்கேன். யாருன்னு தெரியுதா?”

“தெரியலைங்க. உங்க நம்பர் என் மொபைல்ல இல்லை. ரெண்டு மூணு மொபைல் மாறினதுல சில நம்பர்ல்லாம் மிஸ் ஆகிடுச்சி”

“ஓ! அப்போ நாங்க எல்லாம் முக்கியமான ஃப்ரெண்ட்ஸ் இல்லையா?”

“யார் பேசறீங்க?”

”கொரல் தெரியலையா”

“தெரியலையே”

”என் நம்பரை எப்படி மிஸ் பண்ணலாம்”

“நீங்க யாருன்னே தெரியலையே”

“கொரல் நிஜமாவே தெரியலையா?”

“இல்லை தெரியலை”

“நான் உங்க ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு”

“ஓ!”

“மாதவரத்துலதானே இருக்கீங்க?”

“இல்லை, நான் மடிப்பாக்கம் வந்து வருஷமாச்சு”

“என் கொரல் நிஜமாவே தெரியலையா”

“டேய் முண்டகலப்ப! நான் சொல்றது புரியலை. தெரியலைடா எழவெடுத்த பன்னி”

“யேய்! என்னய்யா திட்டற? நான் பாலாஜி பேசறேன். ஆஃபீஸ் மாறினா மேனேஜர் கொரலை மறந்துடுவியா?”

“டேய்! பொறம்போக்கு யார் பேரை சொல்லி வெளையாடுற? பாலாஜி சார் கொரல் எனக்குத் தெரியாதா?”

”இல்லைப்பா நான்தான் பேசறேன்”

“நான்தான்’னு சொல்ற பேமானி எல்லாம் பாலாஜி சார் ஆகிடுவானாடா பொறம்போக்கு?”

“இல்லைய்யா... நான் பாலாஜிதான்...”

“நிறுத்துடா நாரப்பயலே! என்ன வேணும் உனக்கு? போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணனுமாடா பன்னாடை?”

“ஆண்டவா!”

“ஆண்டவனா? அவனை ஏண்டா இழுக்கற வெண்ணவெட்டி. வைடா ஃபோனை !“



பி.கு 1: போன் மாற்றுவது, தொலைவது, நம்பர்கள் மிஸ் பண்ணுவது சகஜமான இந்தக் கலி காலத்தில் இனிமே எவனாவது ஃபோன் போட்டு பேர் சொல்லாம கலாட்டா பண்ணினா அவனுகளுக்கும் இதே கதிதான்.

பி.கு 2: அயாம் சாரி பாலாஜி சார், உங்களை கொஞ்சம் ஓவராத்தான் திட்டிட்டேன். ஆனா, இனிமே நீங்க யார்கிட்டயும் இப்படி வெளையாட மாட்டீங்கன்னு நம்பறேன்

பி.கு 3: இங்கே நான் கெட்ட வார்த்தைத் திட்டல்களை எடிட் செய்திருக்கிறேன்.

Oct 25, 2011

தீபாவளி 1981

தருமபுரியில் ஒண்ணாம் கிளாஸில் படித்த பருவம். அன்று அந்த புத்தம்புதிய சிவப்பு நிற மேல்சட்டையை அணிந்து கொண்டிருந்தேன் நான். அதற்கான அதே நிறத்து அதே துணியினாலான கால்சட்டையும் கூட. துணியில் அங்கங்கே கருப்பு நிறத்தில் ஏதோ தீற்றல் தீற்றலாக இருந்தது.  இதுபோல் மெத்து மெத்தென்ற உடை நான் சமீபத்தில் அணிந்ததில்லை. ஏதோ திருப்பூர் பனியன் என்று பெயராம் அதற்கு. இப்போது முப்பது வருடம் ஆகியும்கூட இன்னமும் அந்த உடையிலிருந்து எழுந்த புத்தாடை மணம் என் நாசிக்கு நினைவிருக்கிறது. மூன்றாம் வகுப்பிலிருந்த அக்காவுக்கும் புதுசாக கருப்பு வெள்ளையில் ஜிகுஜிகுவென பாவாடை சட்டை. அண்ணனும் எங்களுடன் வந்தான். இரண்டு நாட்களில் தீபாவளி. பட்டாசு வாங்கப் போகிறோம். 

அப்பாவுக்கு போனஸ் வந்துவிட்டதாக வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். போனஸுக்கு மாக்ஸிமம் சீலிங் டீலிங் என்ற சங்கடங்கள் வந்தபின் இந்நாட்களிலெல்லாம் தீபாவளி போனஸுக்கு மக்கள் அந்த நாட்களைப் போல பெரிதாக சந்தோஷப்படுவதில்லை. 

நாங்கள் கடையுள் நுழைய அப்பாவின் அலுவலக நண்பர் தோத்தாத்ரி மாமா பெரிய பெரிய பைகளிலும், பெட்டிகளிலும் பட்டாசுகளை சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏற்றிக் கொண்டிருந்தார். வண்டி கொள்ளாமல் அடைத்துக் கொண்டிருந்தன பட்டாசுகள்.

“என்ன தோத்தாத்ரி! இந்த வருஷமும் ஃபுல் போனஸுக்கும் பட்டாசா?”

“ஆமாப்பா! நாளைக்கு ஆபீஸ்ல பாக்கலாம், நேரமாச்சு”. நின்ற இடத்தில் குதூகலத்தில் குதித்துக் கொண்டேயிருந்த பையனை ரிக்‌ஷாவில் உட்கார வைத்துவிட்டு ரிக்‌ஷாவை ஓட்ட நடையில் தொடர்ந்த மாமாவை இப்போதும் நினைவில் இருக்கிறது.

“அந்த மாமாவுக்கு அவங்க அப்பா சின்ன வயசுல தீபாவளிக்கு ஒரு மத்தாப்பு கூட வாங்கினது இல்லையாம். அதனால அவனுக்கு ஒரு வைராக்கியம். தன் பையனுக்கு வாங்கற போனஸ் பணம் முழுசுக்கும் வருஷா வருஷம் பட்டாசு வாங்கிடுவான். இந்த வருஷம் நானூறு ரூவாய்க்கு வாங்கியிருக்கான்”

அப்போதைய நானூறு ரூபாய்க்கு இப்போதைய கணக்கில் சுமாராக ஒரு பதினைந்தாயிரம் என மதிப்பு தரலாம் என நினைக்கிறேன். அப்போது நானூறு என்றால் எவ்வளவு என்றெல்லாம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.  எனக்கு அப்போது நூற்றுப் பத்து வரைதான் எண்ணத் தெரியும். நூற்றுப் பத்துதான் என் கணித அகராதியில் உலகின் மிகப் பெரிய எண். ஆக, என் கணித எல்லைக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு பெரிய மதிப்பிற்கு தோத்தாத்ரி மாமா பட்டாசு வாங்கியிருந்தார்.

“பா.... நானூறு ரூவாயா! நான் என்னவோ சின்னதா கடை போடப் போறாருன்னு நெனைச்சேன்”, என்றாள் அம்மா.

“அப்பா! நீ எத்தன ரூபாய்க்கு பட்டாசு வாங்கித் தருவ?”

“உங்க அப்பனுக்கு வைராக்கியம் எல்லாம் ஒண்ணுமில்லை. ஆறு பேருக்கும் ட்ரஸ் எடுத்தமில்ல? அதுலயே போனஸ் பணம் செலவாகிடுச்சு. பாத்து வாங்கித் தர்றேன் வாங்க”

“கடைல ரொம்ப ரஷ்ஷா இருக்கு நீங்க பாத்து வாங்கிட்டு வாங்க. நான் சின்னவனோட எதிர்ல நிக்கறேன்”, அம்மா என்னை வெளியே அழைத்து வந்து சாலை கடந்து கடை எதிரில் நின்று கொண்டாள்.

அண்ணனும் அக்காவும் இது வேணும் அது வேணும் என கையை உயர்த்தி உயர்த்தி எதையெதையோ அடுக்கிக் கொண்டிருந்தனர். போனமுறை வாங்கின பட்டாசுகளை விட இந்தமுறை அதிகம் போலத்தான் தெரிந்தது எனக்கு.

அக்கா திடீரென ”வீஈஈஈஈஈஈஈஈஈஈஈர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என சந்தோஷக் கூக்குரல் தந்துகொண்டு கடையிலிருந்து எங்களை நோக்கி ஓடிவந்தாள். “யேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ! அப்பா நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கியிருக்காரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ”, என்ற அவள் குரல் அந்த ஊருக்கே கேட்டிருக்கும்.  என் கணிதப் பெருவெண்ணிற்கு மிக அருகில் நூறு இருந்ததால் நானும் ரொம்பவே குதூகலமடைந்தேன். அந்த நூறு ரூபாய்ப் பட்டாசுகள் தந்த சந்தோஷ கணங்களை அதன் பின் வந்த எந்த தீபாவளியின் கணங்களும் தரவில்லை என்பேன் நான்.

 ”ரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ.....” என்று எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தவளை திடீரெனக் காணோம். “துளுப்” என்ற சத்தம் மட்டும் கேட்டது.

“ஏ யாருங்க இந்த பாப்பா? பாருங்க டிச்சில விழுந்துடுச்சி”, குரல் கொடுத்தவர் அத்தோடு நில்லாமல் உடனே அந்த சாக்கடையில் இறங்கி அக்காவை வெளியே ஏற்றிவிட்டார். ஆடை எது அக்கா ஏது எனப் புரியாமல் முழுக்க முழுக்க கருத்தம்மாவாக நின்றிருந்தாள் அக்கா. அப்பாவும் அண்ணனும் ஓடி வந்தார்கள். சாலையோரம் இருந்த அடி பம்ப்பில் அக்காவைக் குளிப்பாட்டினார்கள். 

வீடு திரும்பும்போதுதான் கவனித்தேன். அப்பா என்னைத் தூக்கிக் கொண்டு நடந்து வந்தார். அண்ணன் கைகள் பட்டாசுகள் சுமக்க, அக்கா கையில் அவள் அணிந்திருந்த ஈர உடைகள் இருந்தன. கொஞ்சம் இருட்டினூடே உற்றுப் பார்த்ததில் சிவப்பு நிறத்தில் திருப்பூர் பனியன் துணியில் கால்சட்டையும் மேல்சட்டையும் அவள் அணிந்திருந்தாள்.

Aug 16, 2011

ஸ்ருதி யு.கே.ஜி.


கிருஷ்ணாவின் டெஸ்க் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. அரை டஜன் பேர் அவனைச் சூழ்ந்திருந்தனர். மற்றவர்களும் அங்கே வந்து போய்க் கொண்டும், எட்டிப் பார்த்து "என்ன கெடைச்சிட்டாளா?", என்று கேட்டுவிட்டு, "இன்னும் இல்லை", என்ற பதிலுக்கு, "நோ வொரீஸ், நீங்க வேணா வீட்டுக்குப் போங்க", என்றும் சொல்லிய வண்ணம் இருந்தனர்.

கான்-காலில் இருந்ததால் எனக்கு என்ன ஏதென்று புரியவில்லை. இந்தப்புற அல்லோலகல்லோலம் லண்டன் வரை கேட்கச் செய்ய, "வாட்ஸ் தி ப்ராப்ளம், ஸோ மச் நாய்ஸ் தேர்?" என மறுமுனையில் "லண்டன் துரை" மார்ட்டின் வினவ, "டோன்ட் நோ, நீட் டு செக்", என்றேன்.

இப்போது காதில் செல்போனைப் பொருத்திக் கொண்டு ஏதோ பதட்டமாகப் பேசினபடி ஃப்ளோரில் இங்குமங்கும் உலாத்திக் கொண்டிருந்தான் கிருஷ்ணா. ஏ.சி. குளிரை மீறி அவனுக்கு வியர்த்து ஒழுகிய வண்ணம் இருந்தது. மிகத் தீவிரமாக ஏதோ பிரச்னை எனப் புரிந்தது.

மார்ட்டினிடம் "பிறகு பேசுவோமே" என மன்னிப்பு கோரிக்கொண்டு கான்-காலை கட் செய்தேன். கிருஷ்ணா நடை பயின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தேன்.

என்னைவிட இரண்டு வயது பெரியவன் கிருஷ்ணா. வேலையில் இரண்டு லெவல்கள் சீனியரும் கூட. எனினும் நான் அவனைப் பெயர் சொல்லி அழைப்பதும் அவன் என்னை சார் என்று அழைப்பதும் விசித்திரம்.

நான் வந்ததைக் கவனித்து, பேசிக்கொண்டே ஒற்றைக் கண்மூடி கெஞ்சும் தோரணையில் ஒரு விரல் காட்டி "கொஞ்சம் வெயிட் பண்ணேன்" என்றான். "சரி, இரு நான் போன் பண்ணிப் பாத்துட்டு உனக்கு திரும்ப கூப்பிடறேன்", என்று போனை வைத்தான். மீண்டும் எனக்கு ஒரு நிமிஷம் என சைகை செய்துவிட்டு போனில் யாரையோ அழைத்தான்.

"ராஜி, கிருஷ்ணா பேசறேன். ஸ்ருதி அங்க வந்திருக்காளா? இல்லை, ஒரு மணிநேரமா அவளைக் காணலை. வீட்ல பத்மா பயப்பட்டுட்டு  இருக்கா. இல்லை, பக்கத்துலதான் எங்கயாவது வெளையாடிட்டு இருப்பா. எல்லா எடத்துலயும் தேடிட்டாளாம். காணலை. சரி அங்க வந்தா எனக்கு கூப்பிடு"

செல்போனைப் பையில் எறிந்துவிட்டு என் பக்கம் திரும்பினான்.

"சின்னவளை ஒரு மணிநேரமாக் காணலியாம் சார்"

"யாரு, ஸ்ருதி'யா? ஸ்கூல்லருந்து வந்த அப்புறமா?"

"ஆமாம், வந்து ட்ரெஸ் மாத்தி ஸ்நாக்ஸ் சாப்பிட்ட வரை இருந்திருக்கா. அப்புறம் காணலையாம்"

கிருஷ்ணாவுக்கு இரண்டு குழந்தைகள். பெரியவன் ஷ்ரவன் மூன்றாம் வகுப்பிலும், சின்னவள் ஸ்ருதி யு.கே.ஜி.யும் படிக்கிறார்கள். 

"வீட்டுக்குப் போலாமே. ?"

"ஆறு மணிக்கு கால் இருக்கு"

"நாசமாப் போச்சு வேலை, அதுவா முக்கியம்?   ஃபேமிலி கம்ஸ் ஃபர்ஸ்ட், நீ பொறப்படு"

"அது ஆவாது. முப்பது நிமிஷம் முடிச்சிட்டுப் போயிடறேன். காம்பவுண்ட் உள்ளேதான் எங்கயாவது இருப்பா. வாட்ச்மேன் இருக்கான், அவனைத் தாண்டி போகலை. வெளிய போக வாய்ப்பில்லை. நோ வொர்ரீஸ் தேங்க்ஸ்!"

"எமர்ஜன்சி'க்கு வீட்டுக்குப் போக முடியலைன்னா என்ன வேலை இது"

"சரி, இரு வீட்டுக்குப் பேசிடறேன். ஒரு நிமிஷம் உட்காரேன்"

அவன் அருகில் இருக்கையில்  அமர்ந்தேன். கைப்பேசியில் எண்ணை அழுத்தி, எதிர்முனையின் பதிலின்மையில் எரிச்சலாகி கைப்பேசியை சட்டைப்பையில்  கடாசி எறிந்தான். மீண்டும் பொறுமையிழந்தவனாக அருகிலிருந்த லேண்ட்லைன் தொலைபேசியைக் கையிலெடுத்து எண்கள் சுழற்றினான். இந்தமுறை எதிர்முனை பதில்தந்தது.

"என்னாச்சு, கெடைச்சாளா? "

"_______"

"எங்க இருந்தா?", குதித்து எழுந்து நின்றுவிட்டான்.

சுற்றியிருந்த அத்தனை இருக்கைகளும் பரபரப்பாக கிருஷ்ணா முகம் கவனித்தன.

"_______"

"குடு அவகிட்ட"

"_______"

"ஷ்ருதீ .......", விட்டால் அழுதுவிடுவான் போல குரல்.

ரவி எழுந்து கிருஷ்ணாவின் இருக்கையருகே வந்து சுட்டுவிரலை தொலைபேசியின் ஸ்பீக்கர் பட்டன் அருகே கொண்டு சென்று, "கிருஷ்ண, மே ஐ?", என்றான். கிருஷ்ணா தலையசைக்க...

"அப்பா.... சொல்லுப்பா"

"எங்க போன இவ்ளோ நேரம்? அம்மா உன்ன ரொம்ப தேடிண்டு இருந்தாளாமே"

"அப்பா, பக்கத்தாத்துல என் கிளாஸ்மேட்  அஸ்வத் இருக்கான் இல்லப்பா..."

"ஆமா இருக்கான். அவனோட எங்க போன"

"எங்கயும் போலப்பா, இங்கதான் நம்ம அபார்ட்மன்ட் ஸ்டோர்ரூம்ல லவ் பண்ற வெளையாட்டு வெளையாடிட்டு இருந்தோம்ப்பா"

கிருஷ்ணாவின் விரல்கள் அனிச்சையாய் ஸ்பீக்கரை ஆஃப் செய்தன.


Jul 15, 2011

ஆளே மாறிட்டியே?


"அப்போ நான் புறப்படறேன் அண்ணா"

"சரிம்மா ஜானகி. மகி பட்சணம் குடுத்தாளா?"

"வாங்கிக்கிட்டேன் அண்ணா"

"உமா  இருப்பா பாரு, தாம்பூலம் வாங்கிக்கிடு"

"வாங்கிட்டேன் அண்ணா"

"பார்வதி, ஒரு நிமிஷம் இங்கே வா"

"சொல்டா பலராமா"

 "இது யாருன்னு தெரியுதா?"

"யாரு?"

"நம்ம சின்னசேலம் ஜானகி"

"யாரு?"

"பூந்தோட்டம்...."

"அட.... அந்த ஜானகியா? அப்டியே ஆளே மாறிப் போயிட்ட"

"நீங்க?"

"நான் உங்க பூந்தோட்டம் வீட்டு பக்கத்துல இருந்தனே"

"ம்ம்ம்ம் எனக்கு சரியாத் தெரியலை. ஒரு வேளை எங்க அம்மாவுக்கு உங்களையெல்லாம் தெரிஞ்சிருக்கும்'னு நினைக்கறேன்"

"இல்லை, உங்க வீட்டுல எனக்கு உன்னைவிட்டா யாரையும் தெரியாது"

"அப்படியா...."

"ஆமா, ஆனா ரொம்பவும் மாறிட்ட நீ. ஆளு அடையாளமே தெரியலையே?"

"என்ன அப்படி பார்க்கறீங்க?"

" என்ன ஒரு மாற்றம். அடியோட மாறிட்டியே, அதைத்தான் பாக்கறேன். இப்போ என்ன வயசாச்சு உனக்கு?"

"அறுபத்தி மூணு முடிஞ்சுது"

"இது யாரு?"

"என் கடைசி பையன். இவ பேத்தி, பெரியவனோட பொண்ணு."

"ஆனாலும் ஆளே மாறிட்ட நீ. என்னால நம்பவே முடியலை"

"சரி வர்றேங்க! வர்றேன் அண்ணா"

"யாரும்மா அவங்க"

"தெரியலைடா, எனக்கு நியாபகம் இல்லை. எங்க சின்னசேலம் வீட்டு பக்கத்துல இருந்ததா சொல்றாங்க"

"அவங்க இத்தனை வருஷம் கோமா ஸ்டேஜ்'ல இருந்தாங்களா?"

"எதுக்கு கேக்கற?

"இல்லை, நீங்க சின்ன சேலத்துல இருந்தது அம்பத்தி அஞ்சு வருஷம் முன்னால. பத்து வயசு பொண்ணா பாத்த உங்களை இப்போ பாத்துட்டு அடியோட மாறிப் போயிட்டன்னு மறுபடி மறுபடி சொல்லிக்கிட்டு இருந்தாங்களே அதான் கேட்டேன்"

"ஹி ஹி ஹி..."

"தோ இருக்காளே என் அண்ணன் பொண்ணு, உங்க பேத்தி; இவளைக் காட்டி இதுதான் சின்ன சேலம் ஜானகி அப்படின்னு சொல்லியிருந்தா அவங்களுக்கு இத்தனை அதிர்ச்சி இருந்திருக்காதுன்னு நினைக்கறேன்"
.
.
.

Jun 30, 2011

பாட்டும் நானே பாவமும் நானே

நான் எந்தவிதத்திலும் 'யாரு'வைப் போலவும் இல்லை என்றாலும் தங்கமணி ஒரு விஷயத்தில் 'மிஸஸ்.யாரு'வைப் போல. நான் இசை, எழுத்து, இலக்கியம் (!!) என்று வாழும் நிலையில் அவர் மார்கழிக் கோலங்கள், சமையல் கலை, கிராஃப்ட் தொடர்பான புத்தகங்கள் மற்றும் டி.வி. நிகழ்ச்சிகளிடையே வாழ்பவர்.

கல்யாணமான நாள்தொட்டு எங்களிடையே பரஸ்பரம் பல மனக்குறைகள் உண்டு. அவர் போடும் கோலங்களை நான் ரசிப்பதில்லை, நான் எழுதும் எழுத்தை (!!) அவர் கண்டு கொள்வதில்லை என்பன போல. இவற்றில் என் பக்கமிருந்து மிக முக்கியமான ஒன்று நான் பாடும் பாடல்களுக்கு அவர் ஒருபோதும் செவிசாய்ப்பதில்லை என்பது.

இது சம்பந்தமான 'செவிசாய்க்கா' அனுபவங்களைச் சொல்லி போரடிப்பதைவிட என் மனக்குறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அனுபவத்தைச் சொல்லிவிடுகிறேன்.

கால்-டாக்சி'யில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். FM ரேடியோவில் வரிசையாக என் மனதிற்குப் பிடித்த நல்ல நல்ல மெலடி பாடல்களாக ஓடிக் கொண்டிருந்தன. வழக்கமான கெட்டப் பழக்கமாக, நான் கண்களை மூடிக்கொண்டு அந்தப் பாடல்களை கொஞ்சமே சத்தமாக பாடிக் கொண்டிருந்தேன். நான்கைந்து பாடல்கள் கடந்திருக்கும், இன்னமும் நான் பாடுதலைத் தொடர்ந்த வண்ணமே இருக்கிறேன். எனக்கே என் குரல் இன்று புதிதாய்த் தெரிகிறது. பிசிரு, சுருதி பேதமற்ற தெளிவான குரலா என் குரல்? ஆஹா, இனி சாதகங்களை முறைப்படுத்தி, தொடர்ந்து பயிற்சி செய்து குரல்வளத்தைத் தேற்ற வேண்டும் என எண்ணிக் கொள்கிறேன்.


அப்படியே அடுத்து ஒலித்த 'மிஸ்டர் ரோமியோ' படத்தின் மெல்லிசையே'வைப் பாடிக் கொண்டே திரும்பிப் பார்க்கிறேன்....


....பார்க்கிறேன்.....

....பார்க்கிறேன்.....

....பார்க்கிறேன்.....

குளமாக, ஏரியாக, ஆறாக, கடலாக.... என்ன வேண்டுமானால் 'prefix' போட்டுக் கொள்ளுங்கள். அப்படிக் கரகரவென தங்கமணியின் கண்களில் கண்ணீர் வழிகிறது.

"என்னம்மா, என்னாச்சு?"

"வந்துங்க.... நீங்க எவ்ளோ நல்லாப் பாடறீங்க! சினிமாவுல எல்லாம் என்ன பாடறாங்க? அவங்க பாடறது எல்லாம் உங்க பாட்டுக்கு ஈடாகுமா? நீங்க இவ்ளோ நல்லா பாடறதை இத்தனை நாள் கேட்காத செவிடா இருந்துட்டேனே. அதை நெனச்சேன், அழுகையா வந்துடுச்சி...."

.... எனச் சொல்வார் என எதிர்பார்த்தேன்....

... ஆனால்…

... ஆனால்…

... ஆனால்…

"ஒரே தூக்கம்ங்க! ஆஆவ்...! கொட்டாவியா கொட்டாவியா வருது. அதுல கண்ணுல தண்ணியாக் கொட்டுது"

அடுத்து சுதா ரகுநாதன் பங்கேற்கும் அரங்கிசை. முதலில் "குறையொன்றும் இல்லை" ராகம் - ராகமாலிகா, ஆதி தாளம்.

"குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா....
 குறையொன்றும் இல்லை கண்ணா.... ஆ.ஆ.ஆ.ஆ..."
.
.
.

May 6, 2010

பாஞ்ச் கா தஸ் கம் ஹைன்...


பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர்...

அப்போது எங்கள் அலுவகக சுற்றுலாவாக நேபாளத் தலைநகர் காத்மாண்டு சென்றுவிட்டு இந்திய எல்லை ரக்சாலில் (Raxaul) இருந்து பேருந்து மூலம் பீகார் தலைநகர் பாட்னாவிகுத் திரும்பினோம். இன்னும் சில நிமிடங்களில் சென்னைக்கு ரயில் ஏற வேண்டும். பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் ஓரிரண்டு கிலோமீட்டர் தொலைவு. 

பேருந்திலிருந்து இறங்குகையிலேயே எங்கள் மேலாளர் ஒரு கூக்குரலிட்டார், "ஏ மக்களே! ரயிலைப் புடிக்க நமக்கு அவகாசம் குறைச்சலா இருக்கு. எல்லாரும் இறங்கின உடனே சைக்கிள் ரிக்ஷா கிடைக்கும், ரெண்டு ரெண்டு பேரா ரயில் நிலையத்துக்கு போயிடுங்க".

நானும் டோமினிக்கும் இந்தப் பயணம் தொடங்கியதிலிருந்தே நெருக்கமாயிருந்தோம். காரணம், சென்றிருந்த முப்பத்து சொச்ச பேரில் என்னையும் அவனையும் சேர்த்து நான்கு பேர் மட்டுமே கல்யாணமாகாத கன்னிப்பையங்கள். எனக்கும் டோமினிக்கிற்கும் தங்கும் வசதி ஒன்றாய் செய்யப்பட்டிருந்தது.

நான் பேருந்திலிருந்து இறங்கியதும், பெட்டி பைகளை இறக்கும் அவசரத்தில் இருக்க, டோமினிக் சைக்கிள் ரிக்ஷாக்காரனிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தான். நான் அங்கே மறந்துவிட்டிருந்த ஒரு விஷயம், அவனுக்கு ஹிந்தி சுட்டுப்போட்டாலும் வராது என்பது. எனக்கு கொஞ்சம் சுட்டுப்போட வரும். 

"சரி வா மச்சி, பேசிட்டேன் போலாம்" என்றாம். ரிக்ஷா  ஏறி நான்கு மிதி மிதித்ததும் ரயில் நிலையம் வந்துவிட்டது. சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் எடுத்து, "தேகோ", என்று சொல்லி ரிக்க்ஷா பெரியவரிடம் தந்தான் டோமினிக்.

நான்கு எட்டு நடந்ததும் எனக்கு ஏதோ உறைக்க, "டேய், எப்டிடா பேரம் பேசின?", என்றேன்.

"இது என்னடா பெரிய விஷயம், அவன் பதினஞ்சு ரூபான்னு சொன்னான், நான் பத்து ரூபாய்க்கு வர்றியான்னேன் அவன் வந்தான்", என்றது பதில்.

"எப்படி சொன்னான்"

"நான் ரயில்வே ஸ்டேஷன்-னு சொன்னேன், அவன் "பாஞ்ச்" அப்டின்னான், நான் "நோ நோ, ஒன்லி டென்" அப்படின்னேன், அவன் சரின்னு வந்துட்டான்.", ஹிந்தியில் பேரம் பேசிய பெருமை அவன் முகத்தில் ஒளிர்ந்தது.

"பாஞ்ச்" அப்படின்னா தமிழ் பதினைஞ்சு இல்லடா, ஹிந்தியில அஞ்சு ரூபான்னு அர்த்தம், நீ அவன் கேட்டதுக்கு மேலே அஞ்சு ரூபாய் குடுத்துட்டே", என சொல்லவேண்டும் போலத்தான் இருந்தது. ஆனால் அவன் முகத்தில் ஒளிர்ந்த ஹிந்திப் பெருமிதம்...... அதை அங்கே உடனடியாக பொசுக்கென்று அணைக்க எனக்கு மனம் வரவில்லை. 

அந்த நேபாளப் பயணம் என் வாழ்வின் பொன் எழுத்துக்களில் பொறிக்கத்தக்க அனுபவங்களுடன் வாய்த்த ஒன்று. நேரம் கிடைக்கையில் அந்த அனுபவங்களை அசை போடுகிறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...