Jun 30, 2011

பாட்டும் நானே பாவமும் நானே

நான் எந்தவிதத்திலும் 'யாரு'வைப் போலவும் இல்லை என்றாலும் தங்கமணி ஒரு விஷயத்தில் 'மிஸஸ்.யாரு'வைப் போல. நான் இசை, எழுத்து, இலக்கியம் (!!) என்று வாழும் நிலையில் அவர் மார்கழிக் கோலங்கள், சமையல் கலை, கிராஃப்ட் தொடர்பான புத்தகங்கள் மற்றும் டி.வி. நிகழ்ச்சிகளிடையே வாழ்பவர்.

கல்யாணமான நாள்தொட்டு எங்களிடையே பரஸ்பரம் பல மனக்குறைகள் உண்டு. அவர் போடும் கோலங்களை நான் ரசிப்பதில்லை, நான் எழுதும் எழுத்தை (!!) அவர் கண்டு கொள்வதில்லை என்பன போல. இவற்றில் என் பக்கமிருந்து மிக முக்கியமான ஒன்று நான் பாடும் பாடல்களுக்கு அவர் ஒருபோதும் செவிசாய்ப்பதில்லை என்பது.

இது சம்பந்தமான 'செவிசாய்க்கா' அனுபவங்களைச் சொல்லி போரடிப்பதைவிட என் மனக்குறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அனுபவத்தைச் சொல்லிவிடுகிறேன்.

கால்-டாக்சி'யில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். FM ரேடியோவில் வரிசையாக என் மனதிற்குப் பிடித்த நல்ல நல்ல மெலடி பாடல்களாக ஓடிக் கொண்டிருந்தன. வழக்கமான கெட்டப் பழக்கமாக, நான் கண்களை மூடிக்கொண்டு அந்தப் பாடல்களை கொஞ்சமே சத்தமாக பாடிக் கொண்டிருந்தேன். நான்கைந்து பாடல்கள் கடந்திருக்கும், இன்னமும் நான் பாடுதலைத் தொடர்ந்த வண்ணமே இருக்கிறேன். எனக்கே என் குரல் இன்று புதிதாய்த் தெரிகிறது. பிசிரு, சுருதி பேதமற்ற தெளிவான குரலா என் குரல்? ஆஹா, இனி சாதகங்களை முறைப்படுத்தி, தொடர்ந்து பயிற்சி செய்து குரல்வளத்தைத் தேற்ற வேண்டும் என எண்ணிக் கொள்கிறேன்.


அப்படியே அடுத்து ஒலித்த 'மிஸ்டர் ரோமியோ' படத்தின் மெல்லிசையே'வைப் பாடிக் கொண்டே திரும்பிப் பார்க்கிறேன்....


....பார்க்கிறேன்.....

....பார்க்கிறேன்.....

....பார்க்கிறேன்.....

குளமாக, ஏரியாக, ஆறாக, கடலாக.... என்ன வேண்டுமானால் 'prefix' போட்டுக் கொள்ளுங்கள். அப்படிக் கரகரவென தங்கமணியின் கண்களில் கண்ணீர் வழிகிறது.

"என்னம்மா, என்னாச்சு?"

"வந்துங்க.... நீங்க எவ்ளோ நல்லாப் பாடறீங்க! சினிமாவுல எல்லாம் என்ன பாடறாங்க? அவங்க பாடறது எல்லாம் உங்க பாட்டுக்கு ஈடாகுமா? நீங்க இவ்ளோ நல்லா பாடறதை இத்தனை நாள் கேட்காத செவிடா இருந்துட்டேனே. அதை நெனச்சேன், அழுகையா வந்துடுச்சி...."

.... எனச் சொல்வார் என எதிர்பார்த்தேன்....

... ஆனால்…

... ஆனால்…

... ஆனால்…

"ஒரே தூக்கம்ங்க! ஆஆவ்...! கொட்டாவியா கொட்டாவியா வருது. அதுல கண்ணுல தண்ணியாக் கொட்டுது"

அடுத்து சுதா ரகுநாதன் பங்கேற்கும் அரங்கிசை. முதலில் "குறையொன்றும் இல்லை" ராகம் - ராகமாலிகா, ஆதி தாளம்.

"குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா....
 குறையொன்றும் இல்லை கண்ணா.... ஆ.ஆ.ஆ.ஆ..."
.
.
.

3 comments:

natbas said...

எனக்கே அழுகையாக வருகிறது. :)

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றாக பாடுங்கள்.
ரசிப்பார்கள்.
வாழ்த்துக்கள்.

அம்பாளடியாள் said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...