திருவனந்தபுர திவ்யதேசத்தில் கிடைத்த தங்க, வைர, வைடூர்யங்கள் பற்றின பேச்சு எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ஜெமோ தளத்தில் இதன் விரிவான பின்னணித் தகவல்கள் அடங்கிய மிகசுவாரசியமான பதிவு வெளியாகியுள்ளது. அதன் சில பத்திகள் இங்கே:
மறைந்த மன்னர் சித்திரைத் திருநாள் பாலராமவர்மா அவர்கள்,திருவனந்தபுரம் பத்மநாபசாமிகோயிலில் கருவறைக்கு முன்னால் உள்ள ஒற்றைக்கல் மண்டபம் என்ற முகமண்டபத்தைப் பொன்வேயவேண்டும் என்ற கனவைக்கொண்டிருந்தார். அதற்கான நிதியை அவரால் உருவாக்க முடியவில்லை. அவரது ஆசையை நிறைவேற்ற இப்போதைய மன்னர் உத்ராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா மகாராஜா முயன்றார். அப்போது அவருக்கு ஓர் ஆலோசனை சொல்லப்பட்டது. …..ஆலயத்தில் கருவறை அருகே நிரந்தரமாகப் பூட்டியே இருக்கும் ஆறு ரகசிய அறைகளில் சிலவற்றில் அனந்தபத்மனாபனுக்குச் சொந்தமான பொன் இருப்பதாகவும் அவற்றை எடுத்து உருக்கிப் பயன்படுத்தலாமென்றும்.
மார்த்தாண்டவர்மா அதற்காக 2007ல் முயன்றார். அப்போது அது செய்தியாக வெளியே தெரியவே அப்படி செய்ய மன்னருக்கு உரிமையில்லை என்று வழக்கறிஞர் டி.பி.சுரேந்திரன் தலைமையில் நீதிமன்றத்தை அணுகினார்கள். அனந்தபத்மநாபசாமிகோயிலின் பரம்பரை அறங்காவலர் மன்னர்தான். ஆனால் கோயில் அவருக்குச் சொந்தமானதல்ல. இந்திய அரசின் சொத்து அது. ஆகவே டெல்லி உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
2011ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஆலயத்தை அரசுடைமையாக்கவும், பொதுமக்கள், அரசு, நீதிமன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளின் முன்னிலையில் அந்த ரகசிய அறைகளைத் திறந்து பார்க்கவும் ஆணையிட்டது. அவ்வாறு திறந்தபோதுதான் உலக வரலாற்றின் மிகப்பெரிய நிதிக்குவைகளில் ஒன்று கிடைத்திருக்கிறது– இன்னும் ஓர் அறை திறக்கவேண்டியிருக்கிறது. புதியதாக ஓர் இரும்பறை தென்பட்டிருக்கிறது. ஒருவேளை உலகின் மிக அதிகமான நிதி சேகரிப்புள்ள ஆலயமாக திருவனந்தபுரம் ஆகக்கூடும்.
கவனிக்கவேண்டிய விஷயங்கள் இவை. பாலராமவர்மா மன்னருக்கும் சரி, இப்போதைய மன்னருக்கும் சரி இந்த பெரும்நிதிக்குவை பற்றி தெரியவில்லை. நகைகள் இருக்கலாமென ஓர் ஊகமிருந்திருக்கிறது, அவ்வளவே. மன்னர்குடும்பத்தில் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கண்டிப்பாகத் தெரிந்திருக்காது. எல்லாருக்குமே அதிர்ச்சிதான். [அய்யய்யோ கைவிட்டுப் போயிற்றே எனப் பலர் இரவுத்தூக்கத்தைத் தொலைக்கக்கூடும்.]
அப்படியானால் இவை எப்போது வைத்துப் பூட்டப்பட்டன? மதிலகம் ஆவணங்கள் எனப்படும் அரச ஆணைக்குறிப்புகளின்படி 1789 ல் திப்புசுல்தான் திருவிதாங்கூர் மேல் படையெடுத்து வந்தபோது அவரிடமிருந்து ஆலயச் சொத்துக்களையும் திருவிதாங்கூர் அரசாங்க கஜானாவையும் காப்பாற்றிக்கொள்ளும்பொருட்டு இவை கட்டப்பட்டன……
…..ஆக, ராஜா கேசவதாசனுக்கும் தர்மராஜாவுக்கும் மட்டும் தெரிந்த ஒரு ரகசியம் இது. திவான் சிறையில் இருந்து இறந்தபோது இந்த ரகசியத்தைத் தன்னுடன் கொண்டு சென்றார். எதிர்கால சந்ததிகளுக்காக அந்தச் செல்வத்தை அவர் பாதுகாத்து விட்டுச்சென்றார் என்றே சொல்லலாம். அதுவே இப்போது திரும்ப வந்திருக்கிறது…
….இன்னொரு தகவல். 165 வருடம் முன்னர் அரசி கௌரி பார்வதிபாய் [சுவாதி திருநாள் மகாராஜாவின் அம்மா] காலகட்டத்தில்தான் கடைசியாக இது நிரந்தரமாக பூட்டப்பட்டது, அதற்கு முன்னர் அவ்வப்போது ரகசியமாக திறந்து பார்க்கப்பட்டிருக்கலாம் என்பதே உண்மை. மருமக்கள் வழி கொண்ட திருவிதாங்கூர் அரசகுலத்தில் தர்மராஜாவுக்குப்பின் அவரது மருமகள்களுக்கு மட்டும் தெரிந்திருந்த ரகசியத்தை அவர்கள் அதன் பின் வந்த ஆண்களிடம் சொல்லாமலே விட்டிருக்கலாம், அவை பிரிட்டிஷார் கைகளுக்குச் செல்லக்கூடாது என்பதற்காக.
திருவிதாங்கூர் மட்டுமல்ல இந்தியாவின் எல்லா அரசுகளும் வளமான அரசுகளாகவே இருந்திருக்கின்றன…… அவை…….பிரிட்டிஷாரால் இருநூறாண்டுக்காலம் கொள்ளையிடப்பட்டது. அதன் விளைவே இந்தியாவை சூறையாடிய மாபெரும் பஞ்சங்கள்…..
….திருவிதாங்கூர் மதுரை நாயக்கர் ஆட்சிக்கு கப்பம் கட்டிய சிற்றரசாகவே இருந்தது. அப்படியென்றால் மதுரையில் தஞ்சையில் இருந்த செல்வம் எப்படிப்பட்டதாக இருக்கும்! அவை எங்கே சென்றன! இருநூறாண்டுகளில் நாம் பிரிட்டிஷாருக்கு பறிகொடுத்த செல்வம் எவ்வளவு பெரிதாக இருக்கும்!
அந்தச்செல்வம் எப்படி வந்தது? திருவிதாங்கூர் எக்காலத்திலும் பிற நாடுகள் மேல் படை எடுத்ததில்லை…. …. ஆக இது முழுக்க முழுக்க திருவிதாங்கூருக்குள் இருந்த பணம் தான்….
....சிதம்பரம், அழகர்கோயில், மதுரை , திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் இதேபோல ரகசிய அறைகள் உண்டு என்ற பேச்சைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இனி இந்தக்கோயில்களை முழுக்க நம் அரசியல்வாதிகள் தோண்டி மல்லாத்திவிடுவார்கள். அங்கே என்ன இருந்தது என நாம் அறியப்போவதே இல்லை. அதைத்தடுக்கவும் கண்காணிக்கவும் நம்மிடையே எந்த மக்கள் அமைப்பும் இல்லை.
முழுக் கட்டுரையும் வாசிக்க... அனந்தபத்மநாபனின் களஞ்சியம்.
.
.
.
1 comment:
நல்ல பதிவு.
இது இன்னொரு கோணம்.
வாழ்த்துக்கள்.
Post a Comment