சிறப்புப் பதிவர்: சு. வீரராகவன் < சிந்தா குலத்தின் வலைப்பூ >
இரவு ஜடாயு அவர்களின் உரை முடிந்து இரவு உணவு அருந்தியபின் நான் மிகவும் களைத்திருந்தேன். ஓய்வு தேவை என்று மூளை கதறினாலும், அடுத்த நாள் தொடரப் போகும் இரகு வம்சத்தையும் இலியட் காவியத்தைப் பற்றி இணையத்தில் படிக்கும் ஆவலும், அன்று நடந்தபோது எழுதியக் குறிப்புகளை சரிபார்க்கவும் பரபரத்துக் கொண்டிருந்தது மனசு. சிலர் நூலகத்திலேயே படுத்துக் கொள்ளலாம் என்றும் சிலர் குருகுலத்தின் அறைகளில் தங்கிக் கொள்ளலாம் என்றும் 18 பேருக்கு மூன்று காட்டேஜ்கள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொன்னார்கள். நூலகத்தில் இருப்பவர்கள் மேலும் சில மணி நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள் என்றும் நிகழ்ச்சிகள் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
குருகுல அறைகளில் இருப்பவர்கள் அறைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்கள். கட்டிலோ ஒருவர் சவுகரியமாக படுக்க மட்டுமே போதுமானதாக இருந்தது என்பதைக் காலையிலேயே கவனித்திருந்தேன். அதில் 3,4 பேர் தங்குவது என்றால்?
காட்டேஜ் ஒவ்வொன்றிலும் 6 பேர் தாராளமாக தங்கலாம் என்றிருந்தார்கள்.
உடனே ஓடிப் போய் வேனில் ஏறிக்கொண்டேன். என்ன ஒரு முட்டாள்தனம்? ஜெயமோகனோடும் நாஞ்சிலோடும் தேவ தேவனோடும் இரவுகளிலும், காலை நடையிலும் உரையாடும் பாக்கியத்தை இழந்து விட்டேன் என்பது பிறகே புரிந்தது.
காளிதாசரின் ரகு வம்சத்தைப் பற்றி இணையத்தில் இங்கே சுருக்கமாக ஆங்கிலத்தில் படித்து இன்புறலாம். தமிழில் இவ்வளவு சுருக்கமாக இணையத்தில் எனக்கு கிடைக்கவில்லை.
பைபிளில் புதிய ஏற்பாடு இவ்வாறு தொடங்குகிறது.
ஆதியிலே வார்த்தை இருந்தது.
அவ்வார்த்தை கடவுளோடு இருந்தது.
அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தது.
ஆதியிலே கடவுளோடு இருந்தது.
அவர் வழியாகவே அனைத்தும் உண்டாயின.
இதனுடன் காளிதாசரின் ரகுவம்சத்தில் ஆரம்ப வரிகளைப் பார்க்கலாம்.
வாக2ர்தா1விவ ஸம்ப்ரிக்தெள வாக2ர்தப்ரதி பத்தயே:
ஜக2த: பிதரெளவந்தே2 பார்வதீ பரமேஸ்வரெள
பதவுரை:
வாக2ர்தா1விவ = சொல்லின் பொருளைப் போல்
ஸம்ப்ரிக்தெள = ஒன்றோடொன்று இழைந்திருப்பது போன்று
ஜக2த: = உலகிற்கு
பிதரெள = தாயும் தந்தையுமாகிய
பார்வதீ பரமேஸ்வரெள = பார்வதி அம்மையையும், பரமசிவனையும் வாக2ர்தப்ரதி
பத்தயே: = வாக்கில் வெளிப்படும் பொருள்களின் அறிவுக்காக
வந்தே2 = வணங்குகிறேன்.
கருத்துரை:
சொல்லும் பொருளும் என இணைந்த
தொல்லுலகின் தாய் தந்தையரை, பார்வதி பரமேசுவரனை,
சொல்லையும் பொருளையும் அறிந்திட வேண்டிப் பணிகின்றேன்.
’சொல்லும் பொருளும் என இணைந்த’என்பதற்கு உதகை காவிய முகாமில் இரகுவம்சத்தின் இந்தப் பகுதியைப் படிக்கும்போது ” சொல்லையும் பொருளையும் பிரிக்க முடியாது. அது போல் இணைந்துள்ள சக்தியும் சிவமும்” என்று பொருள் கொண்டனர். ஜெயமோகன் சொல்லை பிரித்தால் பொருள் தராது. எனவே சொல்லாக சக்தியும் பொருளாக சிவமும் இணைந்திருப்பதாக விளக்கினார்.
என்னால் இதனை ஏற்க முடியவில்லை. குழப்பமாகவே இருந்தது. ஏனெனில் தமிழில் சொல் என்றால் பதம் எனப்படும். பதம் பகுபதம், பகாப் பதம் என இருவகைப்படும். பிரித்தாலும் பொருள் தராதது பகாப்பதம். பிரித்தாலும் பொருள் தரக் கூடியது பகுபதம். அது போல் சமஸ்கிருதத்தில் இருக்கிறதா என என் சிற்றறிவுக்குத் தெரியவில்லை.
பைபிள் வாசகத்தை மீண்டும் பார்ப்போம்.
ஆதியிலே வார்த்தை இருந்தது. வார்த்தை என்றால் என்ன?
1 In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.
2 He was with God in the beginning.
3 Through him all things were made; without him nothing was made that has been made.
என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் படுகிறது.
வார்த்தை வேறு இறைவன் வேறு என்றும் சொல்ல முடியாது.
வார்த்தையாக இறைவன் இருந்தான் என்றும் கூற முடியாது.
ஆதியில் வார்த்தை இறைவனோடுதான் இருந்தது என்றும் கூற முடியாது.
ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். அவனன்றி ஓரணுவும் அசையாது. அவனே அனைத்தையும் படைத்தான்.
இங்குதான் திருவள்ளுவரின் முதல் குறள் எனக்கு ஒரு புதிய பொருளைத் தந்தது.
இறைவன் முதலில் வார்த்தையை உருவாக்கி பின்னர் அதற்கானப் பொருளைப் படைத்திருக்கக் கூடும் எனில் வார்த்தைகளுக்கு முதலான அகர முதலான எழுத்துக்களுக்கும் இறைவனே முதலானவன் அல்லவா?
பழைய ஏற்பாட்டில் ஆதியாகமத்தில் குறிப்பிட்டது போல் பொருளைப் படைத்து விட்டு பிறகு அதற்குப் பெயரிட்டிருந்தால் அகர முதலான எழுத்துக்களுக்கு வடிவம் தரவே உலகைப் படைத்தான் இறைவன் என்கிறார் திருவள்ளுவர் என்று புரிந்து கொள்கிறேன்.
இனி காவிய முகாமிற்கு மீண்டும் செல்வோம்.
ஒரு மகா காப்பியம் என்பது பண்டைய இதிகாசம் அல்லது புராணங்களை ஆதாரமாகக் கொண்டதாக இருத்தல் வேண்டும். இது சில அதிகாரங்களாகவோ, பகுதிகளாகவோ பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் அரசரை அல்லது வீர்ரைப் பற்றிய பிறப்பு, வீரம், உன்னத குணங்கள் முதலியன அடங்கி இருத்தல் அவசியம். கூடுமானவரை கீழ்க்கண்ட குறிப்புகள் அடங்கியும் இருக்க வேண்டும்; அதாவது:-
ஒரு நகரத்தைப் பற்றிய விளக்கம் (சருக்கம் 16)
கடலைப் பற்றி (சருக்கம் 13)
மலை, காலங்கள் பற்றி (சருக்கம் 4 மற்றும் 16)
தோட்டம் அல்லது நீரில் விளையாடல் (சருக்கம் 8 மற்றும் 16)
பானமருந்தல், காதல், விழாக்கள்; பிரிதல், இணைதல், காதலர் திருமணம் (சருக்கம் 8,12,7)
மகவு பிறத்தல் (சருக்கம் 3)
அவை விளக்கம் (சருக்கம் 8, 15)
தூது (சருக்கம் 5)
அரசன் (சருக்கம் 16,12,4)
போர்ச் செயலும் வெற்றியும் (சருக்கம் 2,7, 12) குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
காளிதாசர் இயற்றிய இந்த ரகுவம்சம் 19 சருக்கங்களோடு நிறுத்தப்பட்டதா அல்லது தொடர்ந்து இயற்றப்பட்டதா என்பது சந்தேகமே. ரகுவுடன் துவங்கி 28 வீர்ர்களை மட்டும் குறிப்பதாக இருக்கிறது. இதில், சிருங்காரம், வீரம், கருணை முதலிய குணங்கள் தகுந்த இடங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்நூலின் சுருக்கம் கீழ்க்கண்டவாறு:
திலீப மன்னன் வசிட்டரிடம் சென்று தனக்கு குழந்தை இல்லாமைக்கு காரணம் அறிதல்.
திலீபன் நந்தினீ என்னும் பசுவுக்கு சேவை செய்து குழந்தை உண்டாக வரம் பெறுதல்.
ரகுவின் பிறப்பும், குழந்தைப் பருவமும், இளமைப் பருவமும்.
ரகுவின் பட்டாபிஷேகம் மற்றும் திக்விஜயம்.
ரகுவின் மகன் அஜனின் பிறப்பு, விதர்ப்ப நாட்டு இளவரசி இந்துமதி சுயம்வரத்திற்கு போதல்
இளவரசி இந்துமதி அஜனை மணத்தல்.
அஜனுடைய திருமணம்; அவனை எதிர்த்த அரசர்களை வெல்லுதல்
தசரதனுடைய பிறப்பு மற்றும் இந்துமதி மரணம்.
தசரதன் வேட்டைக்குப் போய் ரிஷி சாபம் பெறுதல்.
மஹாவிஷ்ணு தசரதனுக்கு மகன்களாய் பிறத்தல்.
இராமர் சிவன் வில்லை ஒடித்து சீதையை மணத்தல், பரசுராமன் சந்திப்பு.
இராமரின் வனவாசம், சீதையை இராவணன் எடுத்துப் போதல், இராவண வதம்.
இராமர் புஷ்பக விமானத்தில் இலங்கையை விட்டு அயோத்தி அடைதல்.
சீதையை காட்டில் விட்டுவிடுகிறான் இலக்குவன். வான்மீகி முனிவர் ஆசிரமத்தில் சீதை அடைக்கலம்.
குச லவர்களின் பிறப்பு, இராமருடன் போர் புரிய எதிர்த்து நிற்றல், சீதை பூமியில் மறைதல்.
குசன் அயோத்தி அடைதல். அவன் குமுதவதியை மணத்தல்.
குசனின் மகன் அதிதிக்குப் பட்டமளித்தல், அதிதி அயோத்தியை ஆளுதல்.
அதிதியின் மகன் நிஷதன் முதலாக இருபத்தொரு அரசர்களைப் பற்றிய சுருக்கமான விளக்கம்.
அக்னி வர்ணனுடைய சிற்றின்ப வாழ்க்கை விளக்கம். அக்னி வர்ணன் நோய்வாய்ப்படுத்தல், அவனுடைய ராணி அரசை ஏற்றல்.
ரகுவம்சத்தைப் பற்றியும் இலியட் காவியத்தைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த கட்டுரையின் நோக்கம் அதுவல்ல. ஜெயமோகனின் வார்த்தைகளில் சொல்வதென்றால்ம் இலியட் காவியத்தை வீரகதைப் பாடல்களில் இருந்து காவியத்தை நோக்கி நகர்ந்த ஒரு வடிவம் என்று சொல்லலாம்.
உக்கிரமான போர்ச்சித்தரிப்பே அதன் சிறப்பு. அதன் முதல் வரியே சொல்வது போல் அது அக்கிலிஸ் என்ற மாவீரனின் ஆண்மை, ஆணவம், கட்டுக் கடங்காத சினம் ஆகியவற்றின் விரிவான சித்தரிப்பு மட்டுமே.
காவிய காலகட்டத்தின் ஆரம்பத்தில் காவிய கர்த்தன் ஒரு பெரும் தொகுப்பாளனாகவே இருக்கிறான். அசாதாரணமான நினைவாற்றலே அவனுடைய முதன்மைத் தகுதியாக இருக்கிறது. ஹோமர் பார்வையிழந்தவர் என்பது இங்கு குறிப்பிட தக்கது. இரண்டாம் கட்டத்தில் காவிய கர்த்தன் பேர்றிஞனாக ஆகிறான். அறிஞர்களுக்காக எழுத ஆரம்பிக்கிறான். கம்பராமாயணமும், ரகுவம்சமும் கவிதையை சுவைக்கும் தகுதி கொண்டவர்களுக்கானவை. அவற்றின் அடிப்படை இயல்பென்பது செறிவே. இக்கட்டுரையின் முதல் பகுதியில் நான் குறிப்பிட்டதைப்போல் மூச்சுக்காற்றுபட்ட கண்ணாடி மங்கி தெளிவதைப் போல மனம் மயங்கி தெளிந்தாள் என்பது ஒரு நாட்டார் பாடலில் வர முடியாது. இது அருவமான ஒரு மன உணர்வை வர்ணிக்கும் முயற்சி. அதற்காக இங்கே கற்பனை ஒரு கருவியாக ஆகியிருக்கிறது. செவ்வியலாக்கத்தின் முதல் படி இதுவே.
இலியட்டில் செவ்வியல்தன்மை எங்கே உள்ளது? அதிலுள்ள புராணத் தன்மையே செவ்வியல் அம்சத்தை உருவாக்குகிறது.
உதாரணமாக, இதன் கதாநாயகனாகிய அக்கிலிஸின் பிறப்பு.
ஜுயூஸ் என்ற தலைமைத் தெய்வம் (இந்திரன்) பொஸைடன் என்ற கடல்தெய்வம் (வருணன்) ஆகியோர் தீட்டிஸ் என்ற கடல்தெய்வத்தினை காதலிக்கிறார்கள். ஆனால் அவளுக்கு பிறக்கும் குழந்தை தந்தையை விட வல்லமை கொண்டதாக இருக்கும் என்று இருப்பதால் பிலியூஸ் என்கிற மன்னனுக்கு மணம் செய்விக்கிறார்கள். அவளுக்கு பிறக்கும் மகனே அக்கிலிஸ். அவன் மாவீரன். ஆனால் மனிதனுக்கு பிறந்தவனாதலால் மரணம் உண்டு. எனவே அவன் அன்னை அவனை ஹயடிஸ் என்ற பாதாளத்துக்கு கொண்டு சென்று அங்கே ஓடு ஸ்டிக்ஸ் என்ற நதியின் நீரில் அக்கிலிஸின் குதிகாலை பிடித்து நீரில் முக்கி எடுக்கிறாள். ஆகவே அவன் குதிகால் மட்டும் மரணமுள்ளதாக ஆயிற்று. அதன் வழியாகவே அவன் கொல்லப்பட்டான்.
இந்த கதை இந்தியப் புராணங்களோடு பலவகைகளில் ஒத்து போவது ஆச்சரியமே.
மகாபாரதத்தில் பீமனை துரியோதனன் கை கால்களைக் கட்டி கங்கையில் போடுகிறான். கங்கையில் இருந்த ஒரு பிலம் வழியாக பாதாளம் சென்று நாகங்களின் தலைவன் வாசுகி கொடுக்கும் நாகவிஷத்தை அருந்தி ஆயிரம் யானை பலம் பெறுகிறான்.
அக்கிலிஸின் குதிகால் துரியோதனைனின் தொடையை நினைவூட்டுகிறது.
நாடகத் தன்மையின் உச்சமே சிறந்த கவிதை. கம்ப ராமாயணத்தில் நாம் உயர்தர நாடகத் தருணங்களை காண்கிறோம். இலியட்டிலும் பல உச்சகட்ட நாடகத் தருணங்கள் உள்ளன.
அக்கிலிஸுக்கும் அகமெம்னானுக்கும் உருவாகும் மோதல், அக்கிலிஸை அவன் தாய் உட்பட உள்ள தேவதைகள் சமதானப்படுத்துவது, நண்பன் கொலை செய்யப்படும்பொழுது அக்கிலிஸ் கொள்ளும் கோபாவேச வெறி எல்லாமே நாடகத்தன்மை மிக்க இடங்கள் என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார். குறிப்பாக பழிவாங்கும் போது ஹெக்டரை கொன்று அந்த சடலத்தை அக்கிலிஸ் அவமதிப்பதே நாடகத்தன்மையின் உச்சம். பிற்கால காவியங்களில் கதை நாயகன் அறத்தைக் காக்கவே வீரத்தை கைகொண்டிருப்பான். அர்ஜூனனும் ராமனும் அற நாயகர்கள். அக்கிலீஸ் வீரன் மட்டுமே. ஹெக்டரைக் கொன்ற பின் பதினொரு நாட்கள் சடலத்தை தன்னுடன் வைத்து இழிவு படுத்துகிறான். அதன் பின்னர் ஹெக்டரின் தந்தை அவனைக் காண வந்ததும், பிணத்தை தருமாறு மன்றாடியதும் சிறப்பான காட்சிகள். அக்கிலிஸ் ஒப்புக் கொண்டு சடலத்தை வண்டியில் வைத்துவிட்டு சாப்பிட அழைக்க ப்ரியம் அதை மறுக்கவில்லை. பதினொரு நாட்களாக சரியாக சாப்பிடாமல் உறங்காமல் இருந்த அந்த தந்தை பசியாறியபின் அக்கிலிஸை முழுமையாக பார்த்து அவன் அழகை வியக்க, அக்கிலிஸும் ப்ரியத்தின் உயரத்தையும் கம்பீரத்தையும் பார்த்து வியக்கிறான். இங்கேதான் ஒன்றை கவனிக்க வேண்டும்.
கொன்றவன் செத்தவனின் தந்தைக்கு ஆறுதல் சொல்வதும் இருவரும் சேர்ந்தே அருந்தும் விருந்துதான் இலியட்டின் உச்சம் எனக் கருதுகிறார் ஜெயமோகன். ஒரு எளிய வீர கதையை பெருங்காப்பியமாக்கும் இந்த இடத்தை ரசிக்க வேண்டுமென்றால் நீங்களும் இந்த மூன்று காப்பியங்களோடு காலப் பயணியில் பின்னோக்கி (முன்னோக்கி அல்ல) பயணிக்க வேண்டும்.
பிறகு ஞாயிறு காலை நாஞ்சில் நாடனோடு கலந்துரையாடல் இருந்தது. சனிக்கிழமை இரவு ஏற்பாடாகியிருந்த நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்த கதக்களி நிகழ்ச்சியால் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் காணொலிகளை ஜெயமோகனின் இணையத்தில் காணலாம்.
அதில் கதக்களி பற்றிய பல விசயங்கள் என்னை வியக்க வைத்தது. ஒவ்வொரு முறையும் ஆடுபவர் தன் திறனை வெளிப்படுத்த ஆடும் முறையை மாற்றிக் கொள்வார் என்பது பாராட்டக் கூடிய ஒரு புதிய செய்தி / அனுபவம். அதே போல் முத்திரை என்றால் விரல்களில் காட்டப்படும் ஒரு அசைவு என்று மட்டுமே எண்ணிக் கொண்டிருந்த எனக்கு, முத்திரைக்கு ஆரம்பம், நடு, இறுதி என செயல் வடிவில் காட்டிய கதக்களி ராஜீவ் அவர்களுக்கு எனது பாராட்டுகள். நமஸ்காரங்கள்.
இப்போது நாஞ்சிலாரின் விசயத்திற்கு வருகிறேன். நாஞ்சிலாரிடம் நான் முன்வைத்த கேள்வி உங்களை எழுதத் தூண்டிய(வர்) சூழ்நிலை / யார்?
பதிலை சுருக்கமாக சொல்கிறேன்: சாதாரணமாக பிழைப்புக்காக பம்பாய் சென்று நாள் முழுவதும் உழைத்து விட்டு மாலையில் இருப்பிடம் திரும்பும் ஒருவர் என்ன செய்வார்?
நண்பர்களோடு பொழுது போக்கலாம். வெட்டியாக தூங்கி ஓய்வெடுக்கலாம். வானொலி கேட்கலாம். உலாவி வரலாம். இறுதியாக புத்தகங்கள் படிக்கலாம். ஆர்வம் மிகுந்து எழுதிப் பார்க்கலாம். நாஞ்சிலாரும் அதனையே செய்தார்.
மேலும் ஜெயமோகனின் இணையத்தில் கேட்கவும் முடியும். இது நம்மைப் போன்ற ஆரம்ப எழுத்தாளர்களுக்கு / எழுத துடிப்பவர்களுக்கு மட்டுமல்ல. இளையத் தலைமுறைக்கும் செய்தி விடுப்பதாக உணர்கிறேன்.
பல விசயங்களை சொல்லாமல் விட்டிருக்கிறேன். அதில் சுவராசியம் இல்லையென்றோ எனது மறதி என்றோ கூறப் போவதில்லை. கட்டுரை நீளம் கருதியே வெட்டி விட்டு விட்டேன். இந்த இரு பகுதிகளில் உள்ள விசயங்கள் அடுத்த ஆண்டு மீண்டும் உதகைக்கு செல்லும் வரை எழுதக் கூடிய விசயங்களாக இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நன்றி.
6 comments:
மிக கவனமாக பங்கேற்பாளர் வீரராகவன் , சந்தித்ததில் மகிழ்ச்சி ,
மிக நல்ல தொகுப்பு .
மலைப்பான விசயங்களை மலையில் பேசி புரிந்து கொண்ட விசயங்களை
கிரி (மலை) அவர்களின் தளத்தில் வெளியிட்டதற்கு நன்றி.
திரு.வீரராகவன், மூன்று நாள் நிகழ்வுகளையும் செறிவாகத் தொகுத்து எழுதியதற்கு மிக்க நன்றி.
1. //என்னால் இதனை ஏற்க முடியவில்லை. குழப்பமாகவே இருந்தது. ஏனெனில் தமிழில் சொல் என்றால் பதம் எனப்படும். பதம் பகுபதம், பகாப் பதம் என இருவகைப்படும். பிரித்தாலும் பொருள் தராதது பகாப்பதம். பிரித்தாலும் பொருள் தரக் கூடியது பகுபதம்.//
நீங்கள் சொல்லைப் பகுத்து, பிரித்த பதத்தில் பொருள் இருக்கிறது என்கிறீர்கள். ஆனால் 'வாகர்த்தா விவ சம்ப்ரிக்தௌ...'என்னும் செய்யுளில் கூறப்படுவது சொல்லையும் பொருளையும் பிரிக்க முடியாதது போல -என்ற அர்த்தத்தில் வருகிறது. அதாவது, எந்தச் சொல்லும் அதன் வேர்ச்சொல்லும் எப்படி ஒரு பொருளை உணர்த்துவதில் இருந்து பிரிக்க முடியாதோ அப்படிப் பிரிக்கப்பட முடியாதது சிவமும் சக்தியும். 'சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்' (அபிராமி அந்தாதி, 28).
2. பொருள் என்றும் இருந்து கொண்டிருப்பது, சொல் பிற்பாடு வந்தது (பிரணவவாதம், நித்ய சப்தவாதம் - http://www.jeyamohan.in/?p=7038). ஆகையால் நீங்கள் திருக்குறளுக்குக் கொடுக்கும் விளக்கமும் சரி என தோண்றவில்லை.
3. பீமன் நாக லோகம் போய் வரம் பெற்று வந்ததும், துரியோதனன் தொடைக்கும் சம்பந்தமில்லை. காந்தாரி தன் பார்வைத் திறனைப் பல்லாண்டுகளாகப் பயன்படுத்தாதனால் உண்டான சக்தியை துரியோதனன் போருக்குப் போகும் முன் தன் முன் நிர்வானமாக வரச் சொல்லி அவனைப் தன் கண்களால் பார்த்து அதன் சக்தியால் அவனை பலம் பொருந்தியவனாக ஆக்க எண்ணினாள். துரியோதனன், தாயே ஆனாலும் நிர்வானமாக முன்னல் நிற்கக் கூச்சப்பட்டு, அரையில் ஒரு சிறிய துணியை அணிந்து அவள் முன் சென்றான். காந்தாரி கண்ணைத் திறந்து பார்த்த போது தொடை மறைக்கப்பட்டிருந்ததால் அப்பகுதி மட்டும் அவனுக்கு பலம் குறைந்தது. அதனாலேயே கிருஷ்ணன் பீமனை துரியோதனன் தொடையில் தாக்குமாறு, தன் தொடையைத் தட்டி சைகை செய்தான். இதை வேண்டுமானால் அக்கிலிஸுடன் ஒப்பிடலாம்.
நன்றி.
பிரகாஷ் அவர்களுக்கு எனது நன்றி.
பொருளை உணர்த்துவதில் இருந்து பிரிக்க இயலாது என்பது மிகவும் சரியான விளக்கம். குழப்பம் தீர்ந்தது.
தாங்கள் குறிப்பிட்ட இரண்டாவது திருத்தம், கட்டுரையை இரண்டு பகுதிகளாக சுருக்க வேண்டி வந்ததால் ஏற்பட்ட குழப்பமே.
திரு.ஜெயமோகனின் இணையத்தில் விரிவாக உள்ளது.
பாதாளத்திற்கு செல்வது. சக்தி பெறுவது என்கிற கருத்து மட்டுமே
அக்கிலிஸுக்கும் பீமனுக்கும் உள்ள ஒற்றுமை.
அக்கிலிஸின் குதிகால் துரியோதனின் தொடையை நினைவூட்டுவதை திரு. ஜெயமோகன் அவர்கள் சுட்டி காட்டியதையே இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
இருவேறு கருத்துக்களின் சுருக்கமான குறிப்புகள் தங்களுக்கு ஏற்பட்ட குழப்பத்திற்காக வருந்துகிறேன்.
இவ்வாறு நேரிடாவண்ணம் திருத்திக் கொள்கிறேன்.
திருக்குறளின் கருத்தைப் பற்றிய தங்களின் விளக்கம் ஏற்புடையதே.
நலமாக இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் :) நீங்கள் இந்த பகுபதம் பகா பதம் பற்றி ,டாக்டர் குமார் பாபுவிடம் ஊட்டியை விட்டு இறங்கும் வரை உறையாடியது நினைவுக்கு வருகிறது
Post a Comment