Jul 13, 2011

உதகை காவிய முகாம் – முதல் பகுதி.

சிறப்புப் பதிவர்: சு. வீரராகவன் < சிந்தா குலத்தின் வலைப்பூ >


ஜெயமோகன் உதகையில் நிகழ்த்தவிருக்கும் காவிய முகாமுக்குச் செல்லப் போகிறேன் என்ற செய்தியை என் நண்பரொருவரிடம் நான் சொன்னபோது அவர், "இலியட், ரகுவம்சம், கம்ப ராமாயணம் போன்றவை மாபெரும் காவியங்கள். அவை நமக்கு அறிமுகமில்லாத, அலட்சியபடுத்தப்பட்டுள்ள படைப்புகளல்ல. அவற்றுக்கு நூற்றுக்கணக்கான உரைகள் இருக்கின்றன. இந்த காவியங்களைப் படித்து ரசிக்கக்கூடிய நுண்ணறிவுள்ள வாசகன் எளிதில் இந்த உரைகளைத் தேடி எடுத்து காவியங்களை அறிந்து கொண்டுவிட முடியும். தலை சிறந்த நூல்கள் பல இருக்கும்போது, நீ ஜெயமோகனும் நாஞ்சில்நாடனும்  பேசுவதைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய்?" என்று அலட்சியமாகக் கேட்டான். எனது இந்தக் கட்டுரையை நான் அவனுக்கு எழுதும் திறந்த மடலாகவே எழுதுகிறேன், அடுத்த முறை நான் உதகை செல்லும்போது அவனும் என்னுடன் வருவான் என்ற நம்பிக்கையில்.



கம்ப ராமாயணம் படிக்கப் படிக்க புதுப் புது பொருள் தரக்கூடியதே. கம்ப ராமாயணத்தை ஒரு சிலரைத் தவிர ஏனைய அனைவரும் பக்தி இலக்கியமாகவே பார்த்து இரசித்துள்ளனர். ஆனால் முழுக்க முழுக்க அழகியல் நோக்கில் கடவுள் மறுப்புக் கொள்கைகள் இல்லாமல் இது வரை நான் படித்ததில்லை. அது நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. அது தவிர ஒரே சமயத்தில் பலருடைய கண்ணோட்டத்தை ஒருங்கே காணும் அனுபவம் முகாமைத் தவிர வேறு எங்கும் கிட்டாது என்பது என் எண்ணம். இந்த என் நம்பிக்கை பொய்க்கவில்லை- உலகின் முதலாய மூன்று காவியங்களை எடுத்துக் கொண்டு காலப்பயணியில் பயணிக்கும் வாய்ப்பு இந்த முகாமில் எனக்குக் கிட்டியது.



இந்த மூன்று நாட்களும் நாங்கள் எடுத்துக் கொண்ட காவியங்களை மட்டுமே படித்து, சிந்தித்து, உரையாடி, தெளிந்து மகிழ்ந்தோம். உணவு இடைவெளியில் சாப்பிடும் போதும் நாங்கள் வீண் வெட்டி அரட்டையில் ஈடுபடாமல் விவாதித்துக் கொண்டே உணவு அருந்திய அனுபவம் அலாதியானது. அத்தகைய சூழலே எனக்கு இப்போதும் பிடித்தமானதாக இருக்கிறது. எந்த ஒரு தனி நபர் விமர்சனமோ, அரசியலோ, சச்சரவோ இல்லாமல் இந்த மூன்று நாட்களில் விவாதங்கள் செய்ய நேர்ந்தது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமே.

நான் ஏராளமான செமினார்களிலும், கான்பிரன்ஸ்களிலும் கலந்து கொண்டிருக்கிறேன். அவை அனைத்தையும்விட நூறு மடங்கு வித்தியாசமானது இந்த முகாம் என உறுதியாகச் சொல்வேன். ஏனெனில் அத்தகைய செமினார்களின் இடைவெளிகள் அபத்தமான வெட்டி அரட்டைகளில் கழியும். அவையே முக்கியமான விஷயங்கள் என்பது போல் சில்லறையான விசயங்களையும் மிகை உணர்ச்சியுடன் குறைபட்டுக்கொண்டு கடமையே என்று அரங்க விவாதங்களில் கலந்து கொள்வோம். இங்கு அப்படியில்லை. இலியட், ரகு வம்சம், கம்ப ராமாயணம் ஆகிய மூன்று காவியங்களும் நிறைந்த பேச்சுக்காற்று உதகையின் மூன்று நாட்களும் எங்களைச் சூழ்ந்திருந்தது.

இப்போது திரும்பிப் பார்த்தால், இலக்கிய வளர்ச்சியின் அழகியலில் ஏற்படும் மாற்றங்களை ஜெயமோகன் சுட்டிக் காட்டியபோதுதான் முகாமின் முக்கியமான பயன் எனக்குப் புரிந்தது. அதை ஒருவர் நேரடியாக எடுத்துச்சொன்னாலன்றி அதன் முக்கியத்துவத்தை நான் அறிந்திருக்க முடியாது.. முகாமில்கூட இந்த நோக்கத்தை முழுமையாக உணராமல் சிலர் கேள்விகள் எழுப்பியபோது ஜெயமோகன் மிக அழகாக, பொறுமையாக காவியங்களின் மொழியிலும் வடிவிலும் உணர்வு வெளிப்பாட்டிலும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மாற்றங்களை எடுத்துக் காட்டினார். இதை விளக்கும் வகையில் அவரது உரையாடலின் ஒரே ஒரு திரியை இங்கே முன்வைக்கிறேன்.

காவியங்கள் முதலில் எழுதப்படும்பொழுது ஒரு பெரும் தொகுப்பாகவே இருந்திருக்கின்றன. நினைவாற்றலுக்குத் துணையாய் இருக்க வேண்டிய தேவையே காவியங்களின் மொழியையும் வடிவமைப்பையும் தீர்மானித்திருக்கிறது. இதனை இலியட் காவியத்தில் காணலாம். 

காவிய காலத்தின் இரண்டாம் கட்டத்தில் அவை படித்த அறிஞர்களுக்காக எழுதப்படுகின்றன. இரகுவம்சமும், கம்ப ராமாயணமும் கவிதையை ரசிக்கும் நுண்ணுணர்வை வளர்த்துக் கொண்டவர்களுக்கானவை. அவற்றின் இயல்பென்பது மொழிச் செறிவே.

எதிரிகளை எண்ணி வருந்திய 
அவள் முகம் சட்டென்று மீண்டு
மூச்சுக் காற்று பட்டு தெளிந்த
கண்ணாடி போலானது"

இங்கே வர்ணனை ஓரளவு யதார்த்தமானதாகவே இருக்கிறது- உணர்வுகளை ஒரு காட்சியாக முன்னிலைப்படுத்தத் துணை செய்வது மட்டுமே கற்பனையின் நோக்கமாக இருக்கிறது.

அடுத்த ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த கம்பனின் காவியம் இவ்வாறு வர்ணிக்கிறது.

திடர் உடை குங்குமச் சேறும் சாந்தமும்
இடையிடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன
மிடை முலை குவடு ஒரீ மேகலை தடங்
கடலிடை புகுந்த கண் கழுழி ஆறு அரோ.

கருத்து: பெண்களின் கண்களில் நிறைந்து வழிந்த ஆறு அவர்கள் மார்பிலணிந்த குங்குமத்தையும் சந்தனத்தையும் சேறாக ஆக்கி அவர்கள் கழுத்தில் அணிந்த ஆரத்தை சுழற்றி அடித்துக் கொண்டு மார்பகங்களாகிய மலைகளைச் சுற்றிக் கொண்டு மேகலையாகிய கடலில் சென்று கலந்தது.

இந்த அழகியல் முற்றிலும் வேறானது. இங்கே கற்பனை கற்பனையின் அழகுக்காகவே ரசிக்கப்படுகிறது.

ஜெயமோகன் தன் உரையில் இவ்வாறு காவியங்களை அவற்றின் காலத்தோடு, அவற்றின் சமகாலத்திய நுண்ணுணர்வோடு பொருத்திப் படிக்க வேண்டும் என்று விரிவாக விளக்கமளித்தது எனக்கு ஒரு விலைமதிப்பில்லாத பாடம்.

இங்கு குறையாக நான் கருதியது ஒரே ஒரு விஷயம் மட்டுமே. அதை நான் ஜெயமோகனிடம் நேரடியாகவே சுட்டி காட்டினேன். உணவு சாப்பிட்ட தட்டுகளை கழுவுமிடத்தில் ஒரு கூடையில் போடாமல் வீசிச் சென்றனர். இது ஒரு அற்பமான குறைதான், ஆனால் பார்க்க நன்றாக இல்லாததால் இது என் மனதுக்கு உறுத்தலாக இருந்தது. இன்னொன்று. அமர்வுகளின் இடையே தாகமெடுத்தால் அரங்கை விட்டு வெளியே சென்றாக வேண்டிய நிலை. அமர்வுகள் நீண்டதாக இருந்ததால் தாகம் எடுத்தாலும் வெளியே செல்ல விருப்பமில்லாமல் கஷ்டப்பட்டேன். அடுத்த முறை கலந்து கொள்ளும்போது நீருக்காக சில முன்னேற்பாடுகளை நாம் சுயமாக செய்து கொள்ள வேண்டும் என்கிற முடிவோடு இருக்கிறேன்.

-----------------------------------------



வெள்ளி காலை 11.30 மணியளவில் முகாமின் முதல் நாள் முதல் அமர்வு தொடங்கியது. முகாமின் நோக்கம் தெளிவானது.



தமிழ் காவியங்களில் முதல் காவியமாக (தழுவலாக இருந்தாலும்) கம்ப ராமாயணத்தை மட்டுமே கூற இயலும். அதன் காலகட்டத்தில் ஒரு 700 வருடங்கள் பின்னோக்கிச் சென்றால் நமக்கு கிட்டுவது காளிதாசனின் ரகுவம்சம். அதிலிருந்து மேலும் 1000 வருடங்கள் பின்னோக்கிச் சென்றால் ஹோமரின் இலியட் பற்றி அறியலாம். 



எனவே மூன்று காவியங்களுக்கும் கால இடைவெளி சுமார் 1000 வருடங்கள் இருப்பதால் அழகியல் நோக்கில் பெரிய அளவில்  வேறுபாடுகள் இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டுதான் நாம் இந்த காவியங்களை படிக்க வேண்டும். வால்மீகிக்கும் கம்பருக்கும் இடையே கூட கால இடைவெளி உண்டு. கம்பன் அயோத்தியை கண்டதில்லை. இருந்தும் பாடல்களில் புவியியல் அமைப்பிற்கு முரண்படாது வர்ணிக்கும்போது நம் முன் அயோத்தியை சரியாகவே சித்தரிக்கிறான்.

முகாமின் முதல் நாள் முழுவதும் கம்ப ராமாயணமே எடுத்துக்கொள்ளப்பட்டது. முதல் அமர்வில் நாஞ்சில் நாடன் பால காண்டத்தில் 52 பாடல்களை எடுத்துக் கூறினார். ஒவ்வொரு பாடலையும் அவர் பாடியதும் ஜெயமோகன் ஒரு முறையும் அமர்வில் அமர்ந்துள்ள ஏனையோரில் ஒரிருவர் ஒரு முறை வாசித்ததும் அப்பாடலிலுள்ள அழகியல் கோட்பாடுகளை நாஞ்சில் விளக்கினார். பங்கேற்றோரில் சிலர் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பின்னர் அடுத்தப் பாடல் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அமர்வில் எடுத்துக் கொள்ளப்பட்ட பாடல்களையும் அதன் தொடர்பான எனது பார்வையையும் மட்டுமே இங்கு பதிகிறேன். விரிவான உரைகளின் ஒலிப் பதிவுகளை திரு.ஜெயமோகனின் இணையத்தில் கேட்கலாம். அதனை அந்தந்த பாடல் முடியும் வரை கேட்டு விட்டு பிறகு எனது பதிவுகளைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

52 பாடல்களிலும் எனது கருத்தைப் பதிவிடுவதானால் அது ஒரு தனி புத்தகமாகவே மாறிவிடும். எனவே ஒரு பாடலுக்கு மட்டும், எனது கருத்தை மட்டும், சொல்கிறேன்:

(பாடல் எண் வரிசை கம்பன் கழகப் பதிப்பில் உள்ளபடி.)

வரிசை எண் 1 பாடல் 1
பால காண்டம் : பாயிரம் கடவுள் வாழ்த்து.
குறிப்பு: 
பாலகாண்டம் 23 படலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பாயிரத்தை நூலாசிரியரே பாடவேண்டியதில்லை. பின்னர் சேர்க்கப்படலாம். இங்கு கம்பரே பாடியிருக்கிறார்.

ஓம் என்பது பிரணவ மந்திரம். அ, , ம என மூன்றும் சேர்ந்தது. 
படைத்தலைக் குறிக்கும்.
காத்தலைக் குறிக்கும்
அழித்தலைக் குறிக்கும்.
எனவே உ காத்தலைக் குறிப்பதால் பல கவிஞர்கள் தங்கள் படைப்புகளை உ கரத்தில் ஆரம்பித்துள்ளனர்.. நக்கீரர் உலகம் உவப்ப தலை கூடிஎன்றும், பெரிய புராணத்தில் சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்என்று தொடங்கியுள்ளனர். இங்கு கம்பரும் அவ்வாறே தொடங்குகிறார்

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்  - அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
(நீங்கலா = அழியாத ,அலகு = அளவு)

கருத்து: உலகமாகிய இயற்கையின் படைத்தல், அவ்வாறு படைத்தபின் நிலையாக நிறுத்தல் (காத்தல்), அழித்தல் ஆகிய செயல்களைச் செய்யும் அழியாத, அளவில்லாத விளையாட்டை உடைய இறைவனே தலைவன். அவனைச் சரணடைவோம்.

இப்பாடலில்  நான் கண்ட நயம்விளையாட்டு உடையார்என்கிற சொற்றொடர்.

ஆக்கல், நிலை பெறுதல், நீக்கல் முதலியவை செயல்கள். நம் குழந்தைகள் ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கும்போது அவர்களுக்கு விளையாட வேண்டும் என்ற எண்ணம் வந்தால் நாம் அவர்களைக் கோபிப்போம். உன் வேலையை முடித்துவிட்டு விளையாடு என்று சொல்வோம். அதே போல் நாம் ஒரு செயலை கவனமாக செய்து கொண்டிருக்கும்போது யாராவது நம்மிடம் விளையாடினால் இது என்ன இடையூறு என்ற சினம் ஏற்படுகிறது. இங்கோ, இறைவன் தன் செயலுக்கு இடையே  விளையாடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர் செயலாற்றுவதையே விளையாட்டாக பாவிப்பவராக இருக்கிறார். 

ஏனெனில் செயல்களைச் செய்வதானால் அவற்றை இடம், பொருள் மட்டுமன்றி காலம் கருதியும் செய்ய வேண்டும். விளையாட்டானால் கால அளவு கருதாமல் நாம் விளையாடிக் கொண்டே இருப்போம். இங்கு இறைவனும் கால அளவு கருதாமல் செயல்களைச் செய்பவனாக இருக்கிறான். எனவே அவனுக்குத் தன் செயல்களே விளையாட்டாக ஆகிறது.

விளையாட்டில் துவக்கம், இடை, இறுதி என்ற மூன்று நிலைகள் உள்ளன. இறைவனின் படைத்தல், காத்தல், அழித்தலை இதனோடு ஒப்பிடலாம். விளையாட்டில் விதிகள் உண்டு. விதிகள் முறையாக கடைபிடிக்கப்படும்போதும், அவை மீறப்படும்போதும் விளையாட்டின் போக்கு மாறுகிறது. விளையாட்டுக்கு ஆற்றலும் தேவை. திறனும் தேவை. விளையாட்டின் நடுவரே விளையாட்டைக் கட்டுபடுத்துகிறார். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

கம்ப ராமாயணத்தின் பாயிரம் துவங்கி ஏனைய பாடல்கள் அனைத்தும் இவ்விதமான பல்வகை சிந்தனைகள் கிளைக்கக் காரணமான பொருட்செறிவு உடையதாக உள்ளன. நாஞ்சில் நாடனின் உரை கம்ப ராமாயணத்தின் காவியச் சுவையை அதன் சாரம் குறையாமல் எளிய மொழியில் எடுத்துத் தருவதாக இருந்தது.

மதியம் இரண்டாவது அமர்வில் ஜடாயு அயோத்தி காண்டத்தில் இருந்து 99 பாடல்களை எடுத்துக் கொண்டார்.

இச்சமயத்தில் ஒரு சந்தேகம் எழுப்பப்பட்டது. அதற்கான இரு பாடல்கள். இதுதான். அதை மட்டும் இங்கு விளக்குகிறேன்.

குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்றவெண் குடையும் இன்றி
இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக
மழைக்குன்றம் அனையாள் மெளலி கவித்தனன் வருமென்று என்று
தழைக்கின்ற உள்ளத் தன்னாள் முன் ஒரு தமியன் சென்றான். 1

புனைந்திலன் மெளலி; குஞ்சி மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்; என்கொல்?’ என்னும் ஐயத்தால் நளினம் பாதம்
வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும், குழைந்து வாழ்த்தி ‘ 
நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?’ என்றாள். 2

மகனுக்கு பட்டாபிஷேகம் நடக்கப் போகிறது என்றால் தாய் அருகில் இல்லாமலா முடி சூடுவார்கள்?

அப்போது கவரி வீசி வர, வெண் கொற்றக் குடையும் சூழ இராமன் வருவான் என்று எப்படி கோசலை எதிர்பார்த்தாள்?

இதைப் பற்றி அங்குள்ள அனைவரும் ஆலோசனை செய்தோம். உடனே பதில் கூற இயலவில்லை. நானும் பலவாறு யோசித்து பல நூல்களைப் புரட்டிப் படித்தேன். ஞானசுந்தரம் அவர்களுடைய ஆய்வுக் கட்டுரையிலிருந்தும், வி.வி.எஸ் அய்யர் அவர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளிலிருந்தும் ஒரு உண்மை புலனாகிறது.

வால்மீகி இராமன் காட்டிற்கு சென்ற ஆறாம் நாள் இரவுதான் தசரதன் உயிர் துறந்தான் என்கிறார். கம்பனோ சுமந்திரன் இரண்டாம் நாள் அயோத்தி திரும்பி செய்தி சொன்னதும் உயிர் துறந்தான் என்னும்போது நமக்கு அவன் மேல் இரக்க உணர்ச்சி மேலிடுகிறது. இவ்வாறு வால்மீகியிலிருந்து கம்பன் கால வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் இருவரும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட காலண்டரையே கடைப் பிடித்தார்கள் என்பது தெளிவாகிறது.

சூரியனை அடிப்படையாக கொண்ட காலண்டரில் மாதத்தில் இரண்டு அமாவாசைகளோ அல்லது இரண்டு பெளர்ணமிகளோ வரக்கூடும். ஆனால் சந்திர காலண்டரில் மாதத்தில் ஒரு அமாவாசையும் ஒரு பெளர்ணமியும் மட்டுமே இருக்கும். ஒரு அமாவாசைக்கும் அடுத்த அமாவாசைக்கும் உள்ள இடைவெளி 29.5305 நாட்கள். மேலும், வால்மீகி, கம்பன் இருவரும் திதிகளைக் குறிப்பிடும்போது ஒற்றுமை தெரிகிறது.

அதேபோல கோசலையும் முன்னாளிலிருந்து ராமனின் வருகை எதிர் நோக்கியிருக்கும்போது நேரக் குழப்பம் (இரவா / பகலா) அவளுக்கு ஏற்பட்டிருக்கலாம். எனவே முடிசூடி விட்டதான கனவில் அவள் ஆழ்ந்திருக்கும்போது இராமன் வரும்போது முடிசூடி விட்டு ஆசிர்வாதம் பெற வருவதான எதிர்பார்ப்பில் இருந்திருக்கக் கூடும். இவ்வாறு பல சிந்தனைகள். தசரதன் இறப்பைப் பொறுத்த வரை, காவியத்தின் அழகியல் கோட்பாட்டிற்கேற்ப கம்பன் காலத்தை குறுக்கியிருக்கக்] கூடும்.

Close reading என்று சொல்லப்படும் இத்தகைய நுணுக்கமான வாசிப்பு அனுபவம் எனக்குப் புதியதாக இருந்தது. ஜடாயுவின் உரை முடிவதற்குள் இரவு பத்து மணியை நெருங்கி விட்டதால் அடுத்த நாள் காலை தொடரலாம் என்று அன்றைய அமர்வு முடிந்தது. 

50க்கும் மேற்பட்டோர் வர விருப்பம் தெரிவித்திருந்ததால் குருகுலத்திலிருந்து சற்றுத் தொலைவில் நான்கு காட்டேஜ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு காட்டேஜும் ஆறு பேர் தாராளமாகத் தங்கும் அளவு விசாலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை கோவை அரங்கசாமி செய்திருந்தார். மூன்று வேளை உணவும் சிறப்பாக இருந்தது. (இதுவரை 50 முறைக்கு மேல் ஊட்டி போயிருக்கிறேன். ஓரிரு முறை சாம்பார் சாப்பிட்டு உடல் நலம் குன்றியதால் ஊட்டி சென்றாலே சாம்பாரை தவிர்த்த நான் குருகுலத்தில் வயிறார சாப்பிட்ட தவறால் மதிய அமர்வுகளில் தூக்கத்தைத் தவிர்க்க சிறிது போராட வேண்டியிருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!).

அடுத்த நாள் காலை ராமாயணம் முடிவுற்றது. பிறகு காளிதாசரின் ரகுவம்சம் பற்றிய அமர்வு தொடங்கியது. அதைப் பற்றியும் மூன்றாம் நாள் இலியட் காவியத்தைப் பற்றியும், இரண்டாம் நாள் இரவு கண்டு களித்த கதகளி நடனத்தில் நான் அறிந்து கொண்ட பல செய்திகளையும், மூன்றாம் நாள் நாஞ்சிலோடு கலந்துரையாடலில் நான் எழுப்பிய கேள்விகளைப் பற்றியும் இனி வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

ஒரே ஒரு விஷயம்.

நாஞ்சிலாரை சந்திக்கும்போது அவரிடம் அபத்தமாக ஏதும் கேட்டு அவரது நேரத்தை வீணாக்கக் கூடாது என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் அவரிடம் நான் அந்த அபத்தமான கேள்வியைக் கேட்கவும் செய்தேன்-

"இத்தனை காலமாக சிறுகதைகள் எழுதி வரும் தங்களுக்கு முதன்முதலில் படைக்க வேண்டும் என்று எண்ணத் தூண்டுகோலாக இருந்தவர்/ சூழ்நிலை எது என்று கூற முடியுமா?"

அதற்கு அவர் பொறுமையாக அழகாக கூறிய காரணம்... ப்ளீஸ் கொஞ்சம் காத்திருங்கள்.
.
.

2 comments:

R. Gopi said...

பகிர்விற்கு நன்றி.

நாஞ்சில் நாடனிடம் கேட்டது நல்ல கேள்விதான். எனக்கு அபத்தமாகப் படவில்லை.

Giri Ramasubramanian said...

நன்றி கோபி!

Related Posts Plugin for WordPress, Blogger...