Jul 31, 2012

தியானவெளியில் மதயானை


தியானவெளியில் மதயானை



யாருமற்ற தனிமையோடு
பேசிக் கொண்டிருந்தேன்.
கூட்டுத் தியானம்
பழக வா 
என்றது தனிமை.

நிலவொளியும்
புகாததோர்
புலிக்குகை தேடித்
தஞ்சம் புகுந்தோம்.

எங்களிருவரிடையே
நான்கடி இடைவெளி
இருந்தது.


என் தியானத்தில்
மதம் பிடித்த யானை
தியான மேனியாய்
வந்தது. 

தனிமையின் 
தியானத்திற்குள்
என் கால்கள்
பரவினதைப்
பிடித்து வலித்த
என் கைகள் பறைந்தன.

மதம் பிடித்த 
யானையின் தியானத்தில்
தனிமையின்
கால்கள் ஊடாடினவாவென
வினவினேன்.

துதிக்கையால்
என் கழுத்தைப்
பற்றி சடாரெனத் 
தரையில் 
வீசியது யானை.

இருள் ஒளிர்ந்து
தனிமை நீங்கியது.


தொலைத்தல் பழகுதல்



வானூர்தி அலையும்
வானின்மீது
படபடத்து அலையும்
பேருந்துகள் இரண்டை
கடல்தேவதை ஒருத்தி 
தோளுக்கு ஒன்றாய்
சுமந்து நடந்தாள்.

களைப்பில் கொஞ்சம்
இளைப்பாற
பக்கம் பறந்த
ஊர்தியொன்றின் மேல்
பேருந்து ஒன்றை நிறுவச்
செய்கிறாள்.

பேருந்தைத் தொலைத்த
ஓட்டுனன் ஒருவன்
இந்நேரம்
அழுது அரற்றிக் 
கொண்டிருக்கலாம்.

மற்றொருவன்
இன்னும் 
பேருந்தினுள்தான்
இருக்கிறான்.


மிச்சமுள்ள மலர்கள்


மிச்சமுள்ள மலர்கள்
உண்ணப்படாமல் 
உதிர்ந்து போன
பருக்கைகள் போன்றன

அவற்றை பூக்காரம்மா
தொகுப்பதில்லை
விற்பதுமில்லை.
வீசிவிடவும் மனமில்லை
அவளுக்கு

ஆனால்
வேறு வழிகள் உள

எங்காவது அவற்றைப்
பயனுறச் செய்ய
உறுதி சொல்கிறாள்

மிச்சமானவைகளைக் கொண்டு
பெண்ணவள் தலையில்
அவை ஒற்றைப் பூவாகலாம்

அரசமரத்தடியாரின்
துதிக்கையில் அமரலாம்.

மல்லிகைச் சரத்தினிடை
ஒற்றைப் பூவாய்
ஓர் அழகு சேர்க்கலாம்

எனினும்
தனித்தனியே 
பிரிந்து போனவைகள்
முக்கூடலாய் அரசமரத்தடியில்
சந்திக்கும் நேரம் 
வாய்த்திடல் கொடிது

அதனினும் அவை
அழிந்தே ஒழியலாம்

Jul 30, 2012

ஆம்னிபஸ் - மற்றுமோர் 365

நன்றி:  http://www.scholastic.com

ஃபோட்டோ 365, பாசுரம் 365, Quotes 365 வரிசையில் நானும் நுழைகிறேன் என்று பாடுகிறேன் 365 ப்ராஜக்டை நாம் துவங்கிய விஷயம் தமிழ்கூறும் நல்லுலகம் ஆல்ரெடி அறிந்தது.

எப்படியோ அரைகுறையாக அந்த ப்ராஜக்டை நிறைவு செய்தாகிவிட்டது.

சும்மா இருக்கும் நேரத்தில் விட்டத்தைப் பார்த்துத் தலையைச் சொறிந்ததில் தோன்றிய ஐடியாதான் இந்த “அடுத்த” 365 ப்ராஜக்ட்.

புத்தகங்களுக்கான அறிமுகம், விமர்சனம் செய்யும் தளங்கள் ஏற்கெனவே இங்கு அழியாச் சுடர்கள், சிலிகன் ஷெல்ஃப் என  நிறைய உண்டு. அந்த வரிசையில் நாங்களும் எங்கள் பங்காக ”ஆம்னிபஸ்” தளத்தை துவங்குகிறோம்.

நாங்கள் படித்து ரசித்த நூல்கள் குறித்த பதிவாக இந்தத் தளம் இருக்கும். சிலசமயம் விரிவான விமர்சனமாக அமையும், பல நேரங்களில் ஜஸ்ட் ஒரு நூலைப் பற்றின அறிமுகப் பதிவாக இருக்கும்.

என்ன மாதிரியான புத்தகங்கள் பற்றி எழுதுவோம்?  எட்டுத்தொகையாகவும் இருக்கும், எக்ஸைலாகவும் இருக்கும். திருக்குறளாக இருக்கும், திருப்பூந்துருத்தியாகவும் இருக்கும். 

நண்பர் நட்பாஸ் இப்போதைக்குக் கை கோர்த்திருக்கிறார். இன்னமும் மூன்று நண்பர்கள் அவ்வப்போது எழுதுகிறேன் என்று உறுதி கொடுத்திருக்கிறார்கள்.

இந்தமுறை 365 நாள்கள் ப்ராஜக்டாக அல்லாமல் 365 புத்தகங்கள் பற்றிப் பேசும் தளமாக இந்தத் தளம் அமையும். குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் குறித்த பதிவுகள் ஒவ்வொரு வாரமும் இடம்பெறும்.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் புதிய ப்ராஜக்ட் துவங்குகிறது.

இணையதளம் இங்கே ==> ஆம்னிபஸ்

Jul 25, 2012

தில்லு முல்லு - ரீமேக்



பாலசந்தர் - ரஜினி கூட்டணியில் 80’களின் தொடக்கத்தில் வெளிவந்த தமிழின் தலைசிறந்த காமெடி திரைப்படங்களுள் ஒன்றான ”தில்லு முல்லு” படம் ரீமேக் செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன.

”தமிழ்ப்படம்” புகழ் சிவா கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிய வருகின்றன.

நம் தில்லுமுல்லு படத்திற்கே ஒரிஜினல் வெர்ஷனான கோல்மால் (ஹிந்தி) படம் சமீபத்தில் அஜய் தேவ்கன் தயாரிப்பில் “போல் பச்சன்” என்ற பெயரில் வெளிவந்து சுமாரே சுமாராக நல்லபடியாக இப்போது ஓடிக் கொண்டிருந்தாலும் பழைய படத்தின் கதை வடிவத்தை நிறையவே மாற்றியிருக்கிறார்கள். 



நகரத்தில் சொத்துகளை இழக்கும் அபிஷேக் கிராமத்திற்கு தன் தங்கையுடன் குடிபெயர்கிறார். அங்கே தேங்காய் சீனிவாச முதலாளியாக அஜய்தேவ்கன் இருக்கிறார். வேலை வேண்டி இந்து-இஸ்லாமிய கதாபாத்திரங்களில் அஜய்தேவ்கனை மீசை வைத்தும் வைக்காமலும் ஏமாற்றுகிறார் அபிஷேக். பைப் பிடித்து மாடி ஏறி வந்து நடிக்கும் சௌக்கார் அம்மா கேரக்டரும் உண்டு. இவரின் தங்கையை அவர் காதலிக்க, அவர் தங்கையை இவர் காதலிக்க இறுதியில் வழக்கம் போல உண்மைகள் வெளிவந்து சுபம்.

இப்படிப்பட்ட உல்டா-புல்டா வேலைகளைச் செய்துதான் தமிழ் ரீமேக்கும் வெளி வருமா, இல்லை வந்தது வந்ததாய் வந்து சேருமா எனத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் ரீமேக் எடுத்து சொதப்புவதைக் காட்டிலும் நிஜ வெர்ஷனை ஏதேனும் டிஜிடலைஸ் வேலைகள் செய்து நம்மவர்கள் ரீ’ரிலீஸ் செய்யலாம் என்பதே என் கருத்து. அதுவே பிய்த்துக் கொண்டு ஓடும் என் உத்திரவாதம் தரலாம்.

”ரீமேக்கா? வேணாம்யா”, என்று ஓங்கிக் கத்த வேண்டும் போலிருக்கிறது.

படங்கள்: நன்றி - விக்கி

Jul 22, 2012

தி டார்க் நைட் ரைசஸ்

இங்க்லீஸ் படம், இன்செப்ஷன்/டார்க்நைட் போன்ற நல்ல படங்களை எடுத்த கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவரும் படம், சூப்பர்ஹீரோ பேட்மேன் படம் இது எனும் தகவல்கள் இந்தப்படம் பற்றி அனைவரும் அறிந்த விஷயம்.


நோலனுக்கு நம்மூரிலும் இருக்கும் இண்டெலெக்சுவல் ரசிகர்படையில் என்னையும் இணைத்துக் கொள்ள டார்க்நைட் (முந்தைய பார்ட்) படத்தை டிவியில் சிலப்பல முறைகளும், இன்ஸெப்ஷனை சங்கம் தியேட்டரிலும் (வசன மொழிபெயர்ப்பு உதவி: மோகன்) முன்னமே பார்த்து வைத்திருக்கிறேன். அந்த ரசிகர் படையின் நிரந்தர உறுப்பினர் ஆகும் ஒரு எண்ணத்தில் இன்று ”தி டார்க் நைட் ரைசஸ்” படத்தை தேவிபாலா திரையரங்கில் பார்த்துவரப் போயிருந்தேன்.

ரெண்டுவார காலமாகவே படம் வெளிவரும் தேதி அறிவிப்பு, நாளிதழ் விளம்பரங்கள், தியேட்டர் அறிவிப்புகள், இணைய தளங்களில்  மக்களின் எதிர்பார்ப்பு கலந்த பரபரப்பு ஸ்டேட்டஸ் மெசேஜ்கள், ட்விட்டரில் ஏக எதிர்பார்ப்பு என்று Dark Knight ஜுரம் கொஞ்சம் அதிகமாகவே ஓடிக் கொண்டிருந்தது.

ட்விட்டரில் #TDKR என்னும் HashTag தொடர்ந்து ட்ரெண்டில் இருந்து வருகிறது.

கடந்த புதனன்று அதிகாலை இந்தப் படத்திற்கான டிக்கெட்டுகளின் ஆன்லைன் விற்பனை துவங்கிய க்ஷணத்திலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்த்தன. அதிகாலை வேலை முடிந்து நான் வீடு வந்து சேர்ந்தபோது சத்யம், எஸ்கேப் அரங்குகளில் அடுத்த புதன் வரை டிக்கெட் இல்லை என்ற நிலை. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூவாய் தேவிபாலாவில் டிக்கெட் இருக்க அலுவலக நண்பர்கள் ஹரி மற்றும் நாகராஜனோடு படம் பார்க்க மூன்று டிக்கெட்டுகள் புக் செய்தேன்.

இருவருக்கும் ஃபோன் செய்து டிக்கெட் வாங்கிய சேதி சொல்ல, இருவரில் நாகராஜனுக்குதான் ரொம்பவும் எக்ஸைட்மெண்ட். “எ....ன்...ன....து....? நோ....ல....ன்....  ப....ட...த்...து...க்....கு   ச....ண்....டே   டி....க்....கெ....ட்  கி....டை...ச்....சி....ரு....ச்....சா?”

“உனக்கு ஏன்யா குரல் நடுங்குது?

“ரொம்ப சந்தோஷமா இருக்குய்யா. அயாம் வெரி ஹேப்பி”

“ரெண்டும் ஒண்ணுதான்யா”, என்றேன்.

மறுநாள் காலை நாகராஜனிடமிருந்து ஃபோன்கால். இப்பவும் குரலில் அதே நடுக்கம்.

“ஓய், எமோஷனை கட் மாடுய்யா”

”இந்த நடுக்கம் அது இல்லை ஓய். எனக்கு திடீர் ஜுரம். மலேரியாவா இருக்கலாம்னு டாக்டர் சொல்றார். வீட்ல சினிமான்னு வாய் திறந்தா ஒரே மண்டகப்படி. நான் சினிமாவுக்கு வரலை. அந்த டிக்கெட்டை யாருக்குனா குடுத்துடுங்க”

”என்னக் கொடுமை சார்”, என்று நினைத்துக் கொண்டேன்.

வெள்ளி பிறக்குமுன்னே உலகெங்குமிருந்து படம் பற்றிய விமர்சனங்கள் வரத்துவங்கின. ”சூப்பர் ஹீரோ மூவி சூப்பர்” என்றே பெரும்பாலும் விமர்சனங்கள் இருந்தன. நோலனின் படம் என்றால் சோடை போகக் கூடியதா என்ன?

நாகராஜன் வராததால் அந்த மூன்றாவது டிக்கெட்டிற்கு எதிரே யார் பேரைப் போடுவது என்று வினோத், விஷால், மோகன், நந்தா என்று அலுவலகத்தில் ஒரு சுற்று எல்லோரிடமும் கேட்க ஒவ்வொருத்தரும் வரமாட்டேன் என்பதை ஒவ்வொரு விதத்தில் சொன்னார்கள்.

விஷாலுக்குப் பெண்கள் துணையின்றி படம் போகப் பிடிக்காது. அதிலும் சூப்பர் ஹீரோ படங்கள் ஆகவே ஆகாது. “ரொமான்ஸ் மூவின்னா சொல்லுங்க சார், வர்றேன்”, என்பவனிடம் நாம் என்ன பேச?

மோகன் சனிக்கிழமை இரவு காட்சி போகப் போவதாகச் சொன்னான்.

நந்தாவிற்குப் படம் போகும் வழக்கமே இல்லை. நான் கடைசியா தியேட்டர் போய் பாத்தது ”படையப்பா” படம் சார் என்று சிரிக்கிறார் மனிதர்.


வினோத், மணந்தால் மஹாதேவி கதையாக படம் பார்த்தால் சத்யம் தியேட்டர்தான் போவேன் என்று பிடிவாதம். யோவ்! அம்பத்தூர் ராக்கில படம் பாக்கற கிராக்கிதானே என்று கேட்டால், இது கிற்ஸ் நோலன் படம்யா என்று பதில் வருகிறது. தேவி’ன்னாலும் பரவால்லை, தேவிபாலா? நோ நோ’வாம்.


வெள்ளி மாலை சுடச்சுட படம் பார்த்துவிட்டு வந்த நம்ம ஓலைக்கணக்கர் நட்டு’விடம், ‘படம் எப்டி மேன் இருக்கு”, என்று சாட்டில் கேட்டேன். “அப்ஸல்யூட் ப்ரில்லியண்ட், க்ரேட்லி க்ராக்கிங் த்ரில்லர்” என்று இருபத்தியெட்டு ஆங்கில வார்த்தைகளில் அவர் பங்கிற்கு அவரும் சொன்னார்.


கடைசியில் படம் போக அந்த மூன்றாம் நபர் கிடைக்காமல் போக, நம்ம ஓலைக் கணக்கரிடமே, “யோவ், வர்றியா?” என்று கேட்டு ஒப்புக்கொள்ள வைத்தாயிற்று.


D'day ஞாயிறு பிறந்தது. இன்றைக்கு சமையல் என் முறை. படம் போகிறேன் என்று எந்தக் காரணமும் சொல்லித் தப்பிக்க முடியவில்லை. எலுமிச்சை சாதமும், தயிர்சாதமும் செய்து, அரிசி அப்பளம் பொறித்து அவசர அவசரமாகக் அள்ளிக் கொட்டிக் கொண்டு ஒன்றரை மணிக்குப் புறப்பட்டு இரண்டு மணிக்கு பல்லாவரம் வந்து சேர்ந்த ஹரியுடன் சேர்ந்து கொண்டேன். மூன்றரை மணிக்கு அண்ணா சாலையில் இருந்தாக வேண்டும்.


கடவுள் புண்ணியத்தில் போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி மூன்று மணிக்கு முன்னதாகவே எல்.ஐ.சி. நிறுத்தத்தில் இறங்கினோம். இறங்கிய இடத்தில் ஹிக்கின்போதம்ஸ். ஹரிக்கு உள்ளே போக வேண்டும் எனத் தோன்ற, உள்ளே போய் ரென் அண்ட் மார்ட்டின் ஆங்கில இலக்கணப் புத்தகத்தைப் பொறுக்கிக் கொண்டார்.  வெளியே வந்தால் இரண்டு நிமிட நடையில் தியேட்டர்.


வாசலில் நட்டு காத்திருக்க ஹரி,நடராஜ சகிதம் தேவிபாலாவில் மதியம் சரியான நேரத்திற்கு ஆஜராகி இருட்டில் சீட் தேடிச் சென்று அமர்ந்தேன். வினோத் தேவிபாலா வேண்டாம் என்று சொன்னதன் அர்த்தம் அமர்ந்ததும் புரிந்தது.


முன்னஞ்சீட்டு நபரின் தலை படத்தை மறைக்கிறது. நெருக்கடியான சீட்டுகள். தளத்திற்கு சமமான உயரத்தில் திரை. யார் நடைபாதையில் நடந்து சென்றாலும் அந்தக் காலத் திரையரங்குகளை நினைவுறுத்தும் வகையில் நடப்பவர்களின் நிழல் திரையில்.

படம் பார்க்கையில் இடையில் ஆர்டர் செய்த ஸ்னாக்ஸ் வந்தன. பட்டர் பாப்கார்ன் ஓஹோ சுவையில் இருந்தது.



ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய் ஐநூத்தி சொச்ச வார்த்தை எழுதி முடிச்சிட்டியே, படம் பத்தி எப்போ எழுதுவ’ன்னு யாராவது கேக்கறீங்களா?

அப்படி கேக்கறவங்க மட்டும் கொஞ்சம் பக்கத்துல வாங்க...

“பளார் பளார் பளார் பளார் பளார் பளார் பளார் பளார் ”


போங்கய்யா................

Jul 16, 2012

தாஜ்மஹாலும் என் தாத்தா அமர்ந்த நாற்காலியும்



வரலாறு காணாத ஒரு வெயில்காலம் முடிவடைந்து கார்காலம் தொடங்கும் முகமாய் நகரத்தில் அறிகுறிகள் தெரிய, காய்ந்து கருவாடாய்க் கிடந்த தருமமிகு சென்னையில் நேற்று கொஞ்சமே கொஞ்சம் குளிரை உணர முடிந்தது. ஏனோ திடீரென சென்ற ஆண்டு ஜூலை-ஆகஸ்டு மாதங்களில் குர்கான் பயணத்தின் போது தாஜ்மஹால் சென்ற நினைவு வந்தது.

ஆபீஸில் குர்கான் செல்கிறேன் என்ற பேச்சு ஓடிக் கொண்டிருந்த சமயம். வெங்கட் கீர்த்தியின் டெஸ்கைக் கடந்தபோது,  “ஜி, டெல்லி போறீங்களாமே? அவசியம் தாஜ்மஹால் போய்ட்டு வாங்க ஜி”, என்றான். 


வடக்கத்தியர்கள் தெற்குப் பக்கம் வந்தால் பாலாஜி பக்வானைப் பார்க்காமல் போவதில்லை. தங்கள் பயணத் திட்டத்தில் இரு தினங்கள் திருமலை வேங்கடவனுக்கு ஒதுக்குகிறார்கள். அலுவல் விஷயமாக வந்து இறங்கியதும் தத்தம் அலுவல் தொடங்க ட்ராஃப்ட் ப்ளான் போடுமுன் பாலாஜியை தரிசிக்க ட்ராவல் ப்ளான் போடுவார்கள். ஊருக்குத் திரும்பும்போது மொட்டையடித்த தலையுடன் சென்றாக வேண்டும், கூடவே கையில் ஒரு டஜன் லட்டுகள்.

அதுபோல தெற்கத்தியர்கள் டில்லிப் பக்கம் சென்றால் தாஜ்மஹால் போகாமல் அந்தப் பயணம் நிறைவதில்லை. டில்லி போனேன் என்றாலே, “தாஜ்மஹால் பாத்தியா?”, என்பது பத்தில் எட்டு பேர் கேட்கும் கேள்வி. என்ன நாம் திரும்பி வருகையில் லட்டுக்கும் மொட்டைக்கும் பதிலாக வெள்ளைப் பளிங்கில்  (Marble) செய்த பொருட்கள் நம் பயணப்பையில் தஞ்சமடையும். நம் பணப்பைக்கு மொட்டை அடிக்கப்படும். 

“என்ன எளவுய்யா இருக்கு தாஜ்மஹால்’ல?”, என்று தொடங்கி, “நான் எதுக்கய்யா அங்க போகணும்?”, என்று வெ.கீர்த்தி வாயடைத்துப் போகுமளவுக்குக் கேள்விகளை அடுக்கி அவனுக்கு நான் தந்த சொற்பொழிவாற்றலை தன் வாழ்நாளில் மறக்கமாட்டான்.

தாஜ்மஹால் பற்றி எனக்கு எப்போதும் நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை. ஆஃப்டர் ஆல் அது ஒரு லூசுப்பயல் கட்டிய கல்லறை என்ற இளக்காரம் எப்போதும் மனதில் உண்டு. எனவே என் இரண்டு வார குர்கான் பயணத்தில் தாஜ்மஹால் பயணத் திட்டம் ஏதும் இல்லை. 

குர்கான் சென்று முதல் ஒருவார வேலைகள் முடிய, அந்த  வாரயிறுதி எட்டிப் பார்த்தது. எங்களை அங்கு வரவழைத்திருந்த வெள்ளைக்கார துரையம்மா நாளை சனிக்கிழமை தாஜ்மஹால்  செல்வோம் காலை ஆறரைக்குத் தயாராய் இருக்கவும் என்று ஆணையிட்டார். இல்லை வேணாம் என்ற என் கூக்குரல்கள் அவர் காதில் விழவில்லை. 

”ஆன் அவர் வே பேக் ஐ வில் டேக் யூ டு மதுரா ஆல்ஸோ. லார்ட் க்ரிஷ்னாஸ் பர்த் ப்ளேஸ்”, என்று தூண்டில் போட்டார்.

“நாம் மதுரா மாத்திரம் போகலாமே. தாஜ் வேண்டாமே”

“டோண்ட் யூ நோ தி வேல்யூ ஆஃப் தாஜ்?”

“யா, ஐ நோ”

“தென் யூ மஸ்ட் விஸிட் மேன்”

இப்படிப் பேசுபவரை என்ன சொல்லி மடக்க?


பிறகு என்னென்னத்தையோ செய்து துரையம்மாவையே வாரயிறுதியில் அலுவலகத்தில் உட்கார வைக்கும் சதித்திட்டங்கள் சிலவற்றைச் செயல்படுத்தி  எப்படியோ அந்த திட்டம் கேன்சல் ஆகிப்போக, "ஹப்பாடா” என்று பெருமூச்சு விட்டேன்.

எனினும் விதி வலியது என்பது ஊருக்குப் புறப்படும் நாளுக்கு முன் ஊர்ஜிதம் ஆனது. ஞாயிறன்று மதியம் சென்னைக்கு ஃப்ளைட். வெள்ளி இரவு அங்கு மக்களிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டு சனிக்கிழமையை எப்படி செலவு செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது,  “டுமாரோ மார்னிங், சிக்ஸ் தர்ட்டி, தாஜ்மஹால். நோ எக்ஸ்க்யூஸ்”, என்று துரையம்மா ஆணை வந்தது. இந்த முறை ஆணையை முறியடிக்க நாங்கள் ஏதும் சதித்திட்டம் தீட்ட வாய்ப்பு அமையவேயில்லை. 

”வெல், எனக்கு லேசா தொண்டை காந்துது. வயிறு வேற அப்செட்டா இருக்கு”, என்றேன்.

“ஐ வில் ப்ரிங் எ டாக்டர் ஃபார் திஸ் விசிட்”, என பதில் வந்தது.

மேலும் இரண்டு மூன்று காரண அடுக்குகள் இந்தப்பக்கமும், அவற்றை முறியடிக்கும் பேட்ரியாட் ஏவுகணைகள் அந்தப்பக்கம் என விவாதம் நீள.....

சரி, போய்த் தொலைப்போம் என்று முடிவுக்கு வந்தேன்.

டில்லியிலிருந்து தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ரா சுமார் இருநூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சுமார் நான்கு மணிநேரப் பயணம். வாரயிறுதி என்றால் ஆக்ரா வழக்கத்திற்கு அதிகமாகக் களைகட்டும். அப்போது ஆக்ரா எல்லையிலிருந்து தாஜ்மஹாலை போக்குவரத்து நெரிசல் தாண்டி அடைய கூடுதலாக இரண்டு மணிநேரங்கள் தேவைப்படும்.  

நல்லதோர் மழையுடன் தொடங்கியது நாள். குர்கானிலிருந்து காலை ஆறு மணிக்கு முன்னதாகவே புறப்பட்டோம். நான், என் அலுவலகத் தோழர் பூவேந்தன், என் மேலாளர் அம்மணி மற்றும் துரையம்மா. வழிநெடூக மழை மெல்லத் தூறி, வேகமாய் அடித்து, வண்டியையே அசைத்து என விதவிதமாய் வித்தைகள் காட்டியது. எனினும் சாதுர்ய சாரதி துணையில் பயணத்திற்கு ஓர் தடையும் இல்லை. பதினோரு மணி சுமாருக்கு தாஜ்மஹால் இருந்த பகுதியை அடைந்தோம். 

ஊருக்குள் நுழையும்போதே தூரத்தில் தாஜ் தெரியும் என்று நினைத்திருந்தேன். அங்கே சென்ற பின்னர்தான் தெரிந்தது தாஜுக்கு எதிரே என்றால் எதிரே சென்று நின்றாலே ஒழிய தாஜ் தரிசனம் தருவதில்லை.


ஒரு கிலோமீட்டர் முன்னதாக எங்கள் சாரதி தாஜ்மஹாலுக்கு வழிகாட்ட “ரவி” என்ற கைட் ஒருத்தரை முன்னிருக்கையில் ஏற்றிக் கொண்டார். எங்கள் பயணத்திட்டத்தில் கைட் யாருக்கும் இடம் இல்லாததால் என்ன ஏது எனப் புரியாமல் துரையம்மாவும் மேலாளர் அம்மணியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டு கிசுகிசு ஆங்கிலத்தில் சாரதியைத் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

தாஜ்மஹால் பலத்த பாதுகாப்பு அடுக்குகளுக்குள் இருக்கிறது. பாதுகாப்பு என்றால் பலவகைப் பாதுகாப்புகள். தாக்குதல்களிலிருந்து காப்பதற்கு போலீஸ் பாதுகாப்பு பல்வகை வளையங்களில் செயல்படுகிறது. செக்கிங் என்றால் செக்கிங் அப்படி ஒரு செக்கிங். மேலும் தாஜ்மஹால் மாசுபடுவதைத் தவிர்க்கும் / தடுக்கும் வண்ணம் சுமார் ஒரு கி.மீ தொலைவுக்கு முன்னதாகவே நாம் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அதற்கு மேல் நடக்கவேண்டியதுதான். நடக்க இயலாதவர்க்கு சில பேட்டரி கார்கள் உள்ளன.

தன் தொழிலுக்கே உரித்தான ஒட்டுமொத்த எந்தூஸியாஸத்துடன் இருந்தான் ரவி. எனக்கு ஒரு ஐந்தாறு வயதுகள் சிறியவனாக இருப்பான். உடைந்த ஆங்கிலத்தில், ஆனால் வெகு சரளமாகப் பேசிக் கொண்டேயிருந்தான். அதில் நிறைய நிறைய தகவல்கள் சிதறி விழுகின்றன. எதை நம்பலாம் எதை நம்பக்கூடாது என்னும் உரிமையை நம்மிடமே விட்டுவிடுகிறான் என்பதால் ப்ரச்னையில்லை. 

குடை விற்பவர்களின் துரத்தல்களைப் புறக்கணித்தபடி மழையில் திளைத்து நனைந்தவாரே நடந்தோம். அரை கி.மீ. முன்னதாக நுழைவுக் கட்டண வசூல். இந்தியர்களுக்கு இருபது ரூபாய், வெளிநாட்டவர்க்கு எழுநூற்று ஐம்பது ரூபாய் (பதினைந்து டாலர் என்று நினைவு). 

இப்போது உள்ளே நுழையும்முன் /நுழைந்தபின் செய்யத்தக்கன, செய்யக்கூடாதன பற்றி வகுப்பு எடுத்தவாறு வந்தான் ”கைட்” ரவி.


அடுத்தடுத்த கட்ட பாதுகாப்பு சோதனைகள். உச்சந்தலை முடிமுதல் உள்ளங்கால் நகம் வரை அனைத்தையும் தொட்டுத் தடவி (ஆம் தொட்டுத் தடவி) சோதிக்கிறார்கள் :).

கடைசி சோதனை வாசலில் உடலை ஆட்டி அசைத்து ”இதா இங்க பாத்துக்கோ, அதா அங்க பாத்துக்கோ” என்று சோதனைக்கு உட்பட்டுவிட்டு உள் நுழைந்தோம்.

“வி ஹேவ் எண்டர்ட் தி மெயின் எண்ட்ரன்ஸ் சார், மேடம்! நவ் வி ஆர் கோயிங் டு ஸீ தி வேர்ல்ட் ஃபேமஸ் தாஜ்”, என்றான் ரவி



Jul 15, 2012

பொறியியல் கல்வி ==> வேலை



புற்றீசல் பொறியியல் கல்லூரிகளின் கல்லா களை கட்டும் நேரம் இது. இந்த பொறியியல் கல்லூரி சார்ந்த அக்கிரமங்களைப் பட்டியலிட்டுப் புலம்ப / அழ / வேதனைப்பட / கோபப்பட இந்தக் காலகட்டத்தில் காரணங்கள் ஆயிரம் உண்டு. ஆனால் அவையனைத்தும் ஜஸ்ட் காற்றோடு கரைந்து செல்பவை, தீர்வாக நாம் முன்னெடுத்து வைப்பது என்ன என்று நண்பர் செந்தில் கொண்ட சிந்தனைக்கு வடிவம் கொடுக்கும் முயற்சியே இந்தப் பதிவு. நண்பர் வேதாளம் அர்ஜூன் எழுதிய இந்தப் பதிவைப் படித்துவிட்டு உங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன் 


___________________________________________________

தேர்வு முடிந்திருந்த நேரம், கல்லூரிகளின் விளம்பரங்களைக் கண்டு கொதித்து மாணவர்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப் படுகிறார்கள், தமிழக பொறியியல் கல்லூரிகளின் அவலங்கள் என்ன என்பதையெல்லாம் ஒரு பதிவிட்டிருந்தேன். 


தற்போது என் அனுபவத்தையும் இங்கே (சுருங்க) சொல்ல விழைகிறேன். என் பள்ளிப் பருவம் முழுவதும் தமிழ் வழிக் கல்வியில். கல்லூரியில் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் இருக்குமென சொன்னோர் சொல் கேட்டு பயத்துடன்தான் கல்லூரியில் அடி எடுத்து வைத்தேன். ராகிங் போன்ற கொடுமைகளை எல்லாம் நல்லவேளையாக சந்தித்திருக்கவில்லை. கல்லூரி சூழல் என்பது தாழ்வு மனப்பான்மையை மனதில் ஆழ விதைக்கும் ஒரு காரணியாக இருந்தது. ஆசிரியர்கள் முதல் நாள் முதலே பாடங்களை ஆரம்பிக்க, மனதில் படபடப்பு மிக அதிகமாகி அதுவே தொடர்ந்து நிலைத்தும் விட்டது. என் நண்பர்கள் சிலருக்கு இவ்வாறு இருக்கவில்லை. அவர்கள் எண்ணமெல்லாம் எப்படியாவது வேலை கிடைத்து விடும், கல்லூரி வாழ்வை “என்ஜாய்” செய்ய வேண்டும் என்பதாகத் தான் இருந்தது. பொறியியல் படிப்பென்றால் இன்னதென்ற ஒரு வழிகாட்டுதல் கிடைத்திருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை மாணவர்களின் மதிப்பெண்கள் தான் மிக முக்கியமாகப் பட்டது. முதலாம் வருடம், இரண்டாம் வருடமென வருடங்கள் உருண்டோட பயம் இன்னபிற எல்லாம் நீங்கி தினமும் கல்லூரி போக வேண்டும், வீட்டுக்கு வர வேண்டும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தேர்வு என ஒரு ஜென் நிலையை அடைந்து விட்டேன். மீண்டும் விழித்தது மூன்றாம் வருடக் கடைசியில் தான். 



அதுவும் எதற்காக, இன்னும் ஒரு வருடத்தில் படிப்பு முடிந்து விடும் என்பதற்காக இல்லை, கேம்பசில் செலக்ட் ஆக வேண்டும் என்ற ஒரு உயரிய லட்சியத்தில். கல்லூரியில் பொம்மலாட்டம் போல சில பல “மாக்” டெஸ்டுகளை வைத்து ஒப்பேற்றியது. கல்லூரியளவில் இதயெல்லாம் ஓடிக் கடக்கும் முதலாமவனாக இருந்து விட ஒரு செருக்கு உள்ளிட்டது, எப்படியும் வேலை கிடைத்து விடுமென. இப்பேராசை, நப்பாசை எல்லாம் தவிடு பொடியாகும்படி, நான்காம் வருடம் முழுவதும் போய் வந்த தேர்வுகள் எல்லாவற்றிலும் அடி! கிராமப்புற/தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கே உரித்தான “டெக்னிக்கல்” விஷயங்களில் பலமாக இருந்தும் ஆங்கிலமின்மை காரணமாக “முன்னணி நிறுவனங்களின் தேர்வுகள் அனைத்திலும் வெளியேற்றப் பட்டேன். அவர்கள் சொன்ன காரணம் “இம்ப்ரூவ் யுவர் கம்யூனிகேஷன். அடி மேல் அடி விழ, கல்லூரியும் ஊக்கமோ, அதனை எதிர்க்க வல்ல பயிற்சியோ குறைந்தபட்சம் கவுன்சிலிங் கூட கொடுக்கவில்லை. நம் வாழ்க்கை அவ்வளவுதான் கடைசியில் நானும் லெக்சரராகத் தான் போக வேண்டும் என்றெல்லாம் எண்ணி, கடைசி வரை போராடி எந்த ஒரு கம்பெனியிலும் வேலை கிடைக்காமல் கல்லூரியை விட்டு வெளியேறினேன். 



வெளியே வந்து வேலை தேடியதில் கன்சல்டன்சி போன்ற ஒரு கம்பெனி ஐம்பதனாயிரம் பணம் கட்டச் சொல்லி, ட்ரெய்னிங் தருவதாகவும் அதில் வைக்கப்படும் தேர்வுகளில் வெல்லும் பட்சத்தில் கம்பெனிகளுக்கு அனுப்பி வேலை வாங்கித் தருவதாகவும் சொல்ல பத்தாயிரத்தை மட்டும் கட்டி அங்கு சேர்ந்தேன். உண்மையில் கல்லூரிகள் செய்ய வேண்டியதை பத்தாயிரம் வாங்கிக் கொண்டு அவர்கள் செய்தார்கள். IT நிறுவனங்கள் எதிர்பார்ப்பது என்ன, அவர்களோடு எப்படி உரையாட வேண்டும் என்பதையெல்லாம் ஆறேழு மாதங்கள் சொல்லிக் கொடுத்தார்கள். உண்மையில் பயிற்றுவித்தார்கள். மேலும் அவர்கள் செய்த முக்கிய பணி, என்னுள் இருந்த பயம் என்னும் ஃபேக்டரை நீக்கியது தான். அந்த கம்பெனியின் தேர்வுகள் அனைத்திலும் வென்று விட, எங்களை இன்டர்வியூவிற்கு அனுப்பினர். அதிகபட்சம் பத்தாயிரம் மட்டுமே வழங்கும் கம்பெனிகளுக்கு எங்களை விற்றனர் என்று தான் சொல்ல வேண்டும். வீட்டு சூழ்நிலை, வங்கிக கடன் போன்ற பல இன்னல்களினால் நண்பர்கள் பலரும் அதை ஏற்றுக்கொள்ள நான் கொஞ்சம் பொறுத்திருப்பது என முடிவு செய்து வெளியிலும் வேலை தேட ஆரம்பித்தேன். அப்போது நண்பர் ஒருவர் மூலம் வந்த வாய்ப்பில் தற்போதுள்ள வேலை கிடைத்தது.



வேலை கிடைத்த பின்னர் தான் அதை விட நெருக்கடியே. இந்தச் சூழல் முற்றிலும் புதிதாய் இருந்தது. அதிலும் நானறிந்த “சுமார்” ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு சமாளிப்பதென்பது பேரும் விஷயமாகி விட்டது. பார்ப்பவர்கள் அனைவரும் அறிவுரைக்கத் தொடங்கினர். இந்த வேலையை விட்டு ஓடி விடலாமா என்றெல்லாம் கூட தோன்றியதுண்டு. நண்பர்கள் பலரின் அறிவுரை, வேண்டுகோள் காரணம் எப்படியும் சமாளித்து விடலாம் என்ற ஒரு நிலையை மனதிற்குள் பிரகடனப் படுத்திக் கொண்டு புரோக்ராம் எழுதத் தொடங்கி ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் முடிவடைந்து விட்டன.



வேலைக்கு சேர்ந்தது முதல் என்னை நன்கு அறிந்த நண்பர்கள் ஊக்கமளித்தும், சூழ்நிலைகளை விளக்கியும் என் நிலையை உணரச் செய்தனர். என் நிலை என் போன்றோருக்கு வரக்கூடாது என்பது பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் ஒரு நன்னாளில் தான் நண்பர் செந்தில் ஒரு சிந்தனையை முன்வைத்தார். என் போன்று, பொறியியல் முடித்து வேலையில்லாமல், IT கம்பெனிகளின் எதிர்பார்ப்புகள் என்னவென்று தெரியாமல் தேமே வென சும்மாதிருந்து சென்னை வந்து வேலை தேடி ஒரு கட்டத்தில் அலுத்துப் போய் ஐயாயிரத்தில் ஒரு டேட்டா என்ட்ரி வேலையைத் தேடி வீட்டை சார்ந்திருக்காதிருக்க முடிவு செய்யும் சிலருக்கு உதவலாம் என்ற சிந்தனையே அது. இந்த சிந்தனை வளர்ந்து நண்பர் @senthilchn ம் அதில் சேர்ந்து இவற்றைசெய்யலாம் என ஒரு பட்டியலிட்டோம்



- பொறியியல் முடித்தவர்களுக்கு IT கம்பெனிகளின் எதிர்பார்ப்புகளை விளக்கும் வகுப்புகளை எடுக்கலாம் என முடிவு செய்தோம்.

- முதலில் நண்பர்கள், அவர்களுக்கு தெரிந்தவர்கள் என 30 பேரை தெரிவு செய்து அவர்களுக்கு பயிற்சி கொடுக்க உத்தேசித்துள்ளோம்

- வேலை வாங்கித் தருவோம் என்ற உத்தரவாதத்தில் செய்வதல்ல எனினும் அதற்குத் தேவையான உதவிகளை செய்யலாம்

- எங்களுக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்ளப் போகிறோம்

- உதா. கம்யூனிகேஷன், ஆப்டிட்யூட் போன்றவற்றில் கம்பெனிகள் எதிர்பார்ப்பது என்ன என்பதை விளக்குவோம். 

- இதற்கு எந்த வித கட்டணமும் வசூலிக்கப் போவதில்லை

- ஆர்வமுள்ளவர்கள் பயிற்றுவிப்பாளர்களாகவும் எங்களோடு கைகோர்க்கலாம். ஒவ்வொரு ஐந்து Tutor களுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளோம்.
சிறுதுளி நிச்சயம் பெருவெள்ளம் ஆகுமென முயற்சியில் கை கோர்க்கிறோம்!

Jul 14, 2012

பழைய சோறு



ஜான் டேவிட்டை தமிழகம் இன்னமும் மறந்திருக்காது என நம்புகிறேன். கிட்டத்தட்ட ஒரு வருடம் முன் ஜான் டேவிட் சரணடைந்து மீண்டும் சிறை சென்ற போது நான்  எழுதிய பதிவு ஒன்று, அப்போது ஒரு வாரப் பத்திரிக்கைக்கு அனுப்பியது. இன்று வரை அந்த பத்திரிகையில் வராததால், இனியும் வராது என்ற நம்பிக்கையில் இங்கே பப்ளிஷுகிறேன் :))


ஜான் டேவிட்! பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தையே அலறடித்த பெயர். 

மருத்துவக் கல்லூரி மாணவனான ஜான் டேவிட் சக மாணவன் நாவரசுவைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றது, கடலூர் செஷன்ஸ் கோர்ட் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது, பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் அந்தத் தண்டனையை ரத்து செய்தது அனைத்தையும் வரலாறு சொல்லும். 

இப்போதைய பரபரப்பு: சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் மீண்டும் ஜான் டேவிட்டை இரட்டை ஆயுளில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தை ஓரிரு நாட்கள் பரபரப்புச் சூழல் தொற்றிக் கொண்டது. ஜான் டேவிட் தலைமறைவு, ஆஸ்திரேலியாவில் பாஸ்டராக இருக்கிறார் அப்படி இப்படியென ஊடகங்களில் செய்திகள் வந்தன. லேட்டஸ்டாக சென்னை வேளச்சேரியில் பீ.பி.ஓ. ஒன்றில் இத்தனை நாட்கள் பணிபுரிந்து கொண்டிருந்த ஜான் டேவிட் கடலூரில் சரணடைந்துள்ளார்.

இங்கே ஆச்சர்யம் தரும் விஷயம் ஒரு சர்வதேச பீ.பி.ஓ. ஒன்றில் ஜான் டேவிட் கடந்த ஐந்து வருடங்களாக ஜான் மாரிமுத்து என்ற பெயரில் இயங்கி வந்ததே. டேவிட் மாரிமுத்து என்ற தந்தையின் பெயரில் மாரிமுத்துவை மட்டும் பின் பெயராக்கிக் கொண்டு தன் கெட்டப்பை சற்றே மாற்றிக் கொண்டு செயல்பட்டிருக்கிறார் (கன்னத்தில் மச்சம் ஒட்டிக்கொண்டிருந்தாரோ?). பீ.பி.ஓ. என்பதால் ஆங்கிலப் புலமை மாத்திரம் போதும். அந்தத் தகுதி ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு தன் கல்விச் சான்றிதழ்கள் எவற்றையும் தான் பணி புரிந்த நிறுவனத்தில் கொடுக்காமல் ஜான் டேவிட் இத்தனை நாட்கள் அங்கே வேலை செய்து வந்ததாக சில செய்தித்தாள்கள் சொல்கின்றன. ஆனால் அது அப்படியே உண்மையாக இருக்க சாத்தியம் இல்லை.

ஒரு சர்வதேச நிறுவனம் இப்படிப் பொறுப்பில்லாமல் குற்றப் பின்னணி உள்ள ஒருவருக்கு எப்படி வேலை தந்தது? இப்படிச் செய்வது அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விஷயம் ஆகாதா? பீ.பி.ஓ'க்களில் எந்தக் கல்வித் தகுதி, முன் அனுபவம் கொண்டவர் என்றாலும் அல்லது இல்லாதவர் என்றாலும்; சுருங்கக் சொல்லின்  யார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் என்ற கருத்திற்கு இதுதான் அர்த்தமா என்று சிலர் வரிசையாக கேள்விகள் எழுப்புகிறார்கள்.

இது பற்றியெல்லாம் நாம் பேசும் முன் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் ஒன்று இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் ஜான் டேவிட் வழக்கு நிலுவையில் இருந்ததே தவிர,அங்கே தீர்ப்பு வழங்கும் வரை சட்டத்தின் பார்வையில் ஜான் டேவிட் உயர்நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என்று சான்றிதழ் வழங்கப்பட்ட ஒருவர். எனவே அவருக்கு எந்த ஒரு நிறுவனமும் தானே முன் வந்து வேலை கொடுப்பது  கூட சட்டப்படி சரியே.

சரி, இப்போது எப்படி ஜான் டேவிட் போலித் தகவல்கள் மூலம் வேலையில் நுழைந்திருக்கக் கூடும் எனப் பார்க்கலாம். பொதுவாக இதுபோன்ற MNC கம்பெனிகளில் சான்றிதழ்களைத் தராமல் வேலையில் அமர்தல் சாத்தியம் இல்லை. இங்கெல்லாம் உள்ளே நுழைதலில் நிறைய கெடுபிடிகள் இருக்கும். சாப்ட்வேர் ஆகட்டும், பீ.பி.ஓ'க்கள் ஆகட்டும்; உள்ளே நுழைகையில் ஒவ்வொரு ஊழியரின் பின்புலத்தை சரிபார்க்க என துணை நிறுவனங்களை அமர்த்திக் கொண்டிருப்பார்கள். ஒரு நபர் வேலையில் அமரும்போது ஒப்படைக்கும் கல்வித்தகுதி மற்றும் முன் அனுபவ  விபரங்களை சரிபார்ப்பதே அந்தத் துணை நிறுவனங்களின் வேலை. ஒரு தனிநபரின் விபரங்கள் எப்படி சரி பார்க்கப்படுகிறது என்பது அந்தந்த நிறுவனத்தின் திறமை.  கல்வித்தகுதி அந்தந்த சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடம் நேரில் சென்றோ அல்லது கடிதம் மூலமாகவோ பெறப்படுகிறது. வேலை முன்அனுபவ சரிபார்ப்புகளும் நேரில் அல்லது தொலைபேசி மூலம் செய்யப்படுகிறது.

இந்தவிதச் சரிபார்த்தல்களின் போது வேலையில் சேர்ந்த ஒருவர் தவறான தகவல் கொடுத்தார் எனத் தெரியவரும் பட்சத்தில், இந்த சர்வதேச நிறுவனங்கள் எப்படிப் பட்டவர்க்கும் தாட்சண்யம் காட்டுவது இல்லை. தவறான தகவல் எனத் தெரிந்தால் உடனடியாக "டெர்மினேஷன்" ஆர்டர்தான். இதிலிருந்து எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும் தப்பிக்க முடியாது.

இவை இப்படியிருக்க, தகுதி குறித்த எந்த ஆவணத்தையும் தராமல் வெறுமனே ஆங்கிலம் பேசிக்காட்டிவிட்டு ஜான் டேவிட் அங்கே நுழைந்தார் எனச் சொல்வது தவறு. இங்கே மாற்றுச் சாத்தியம் என்னவென்றால், ஜான் டேவிட் போலியான தகவல்களை உருவாக்கித் தந்துவிட்டு அவற்றை எப்பாடுபட்டாவது சரிபார்த்தல்களின் போது உண்மையைப் போல் தோன்றச் செய்திருக்கலாம்.

ஆக, ஜான் டேவிட் வேலை பார்த்த நிறுவனத்திகு பின்னணி சரி பார்த்தல்களில் ஈடுபட்ட நிறுவனம் இப்போது கையைப் பிசையத் துவங்கியிருக்கும். ஏனென்றால், சரிபார்ப்புகளில் எங்கோ ஏதோ ஓட்டை இருந்தது உறுதியாகிறது. ஜான் டேவிட் சிக்கிவிட்டார், பிரச்னையில்லை. இன்னமும் எத்தனை குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் இப்படி இந்தப் பின்னணியில் இயங்கி வருகிறார்களோ என்ற கேள்வி இப்போது எழுகிறது. மேற்கொண்டு நடவடிக்கைகள் என்ன இது போன்ற தவறுகள் எப்படித் திருத்திக் கொள்ளப்படும் என்பதை இந்த நிறுவனங்கள் இவ்வேளையில் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...