எழுத்தாளர் பேயோன் எழுதியுள்ள பைசைக்கிள் தீவ்ஸ் படம் குறித்த கட்டுரை வாசித்தேன். ஐந்து வருடங்கள் முன் அந்தப் படம் பார்த்து விதிர்விதிர்த்து நின்றவன் பேயோனின் கட்டுரையை வாசித்துப் படம் பற்றின பிற தரிசனங்களையும் பெற்றேன்.
குறிப்பாகக் கீழே நான் காப்பி பேஸ்ட்டியுள்ள பத்தி....!
பயிற்சி இல்லாமல் திருடுவதன் அசௌகரியத்தைச் சுட்டிக்காட்டும் இந்தக் காட்சியானது மகன் வளர்ந்து பெரியவனாவதற்கு முன்பாகவே தந்தை அவன் பார்வையில் சரிந்துவிடுவதையும் சேர்த்தே சுட்டிக்காட்டுகிறது. சைக்கிள் காணாமல் போகும் காட்சிக்குப் பிறகு முக்கியமான காட்சி இது. அண்டானியாவின் முற்றிய முகமுள்ள மகன் படம் நெடுகத் தந்தையுடன் அலைகிறான். நாயகனின் குடும்பச் சுமை அவனை விடாமல் துரத்துவதை மகன் மூலம் காட்டுகிறார் தேவிகா. திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு தந்தை அவமானப்படுவதைப் பார்த்து மனமுடைந்து அழுகிறான் மகன். வாழ்வாதாரத்தை இழந்தாலும் ஆதர்சமான தந்தையாகும் வாய்ப்பை இழந்தாலும் மகனின் பாசத்தை இழக்கவில்லை என்று நெகிழ்ச்சியோடு முடிகிறது சைக்கிள் தீஃப்.
படத்தின் முடிவு முகத்தில் அறைந்த ஒன்றாக அமைந்தாலும், பேயோன் சுட்டிக்காட்டும் இந்தப் பார்வை (angle) நான் தரிசனம் கொள்ளத் தவறினது.
ஆனால், பேயோனின் கட்டுரையில் எனக்கு விளங்காத ஒரு விஷயம், அவர் எதற்காக பை சைக்கிள் தீவ்ஸ் பட இயக்குனரின் பெயரைப் பத்து விதமாகக் குறிப்பிடுகிறார் என்பதுதான். கீழ்காணும் விதவிதமான பெயர்களில் இந்தக் கட்டுரை நெடூக அவர் இயக்குனரை அழைக்கிறார்.
விக்டோரியா தேசிகா
விக்டோரியோ டிசிகா
தெஸிகா
டிசிகா
டிஸிகோ
டிஸ்கோ
தேசிகா
தேவிகா
தேசிகன்.
டிசிகா
டேசிகா
படத்தின் பெயர் இப்படியெல்லாம் பேயோனால் அழைக்கப்படுகிறது.
தி பைசைக்கிள் தீஃப்
த பைசைக்கிள் ராபர்ஸ்
பைசைக்கிள் ராபரி
கட்டுரையில் மேலும் ஒரு பிழை: கதாநாயகனின் மனைவி நகைகளை அடகு வைத்து சைக்கிள் வாங்குவதாக பேயோனின் கட்டுரை சொல்கிறது. நான் நினைவறிந்த வகையில் குளிர்காலத்திற்கான கனத்த போர்வைகளை அவன் மனைவி எடுத்துத் தந்து அவற்றை கதாநாயகன் விற்பதே படத்தில் காட்டப்படும்.
உண்மையிலேயே அது சீரியஸ் கட்டுரைதானா அல்லது பேயோனின் வழக்கமான காமெடிக் கட்டுரை ஏதாவதா? நான் இங்கேயும் நிஜ தரிசனம் கொள்ளத் தவறிவிட்டேனா?
1 comment:
\\தி பைசைக்கிள் தீஃப்\\
படத்தின் சான்றிதழில் இப்படித்தான் வரும்.
Post a Comment