Sep 27, 2011

BPO துறை - சில கேள்விகள்


”கார்பரேட் கனவுகள்” வாசித்துவிட்டு எப்போதாவது சிலர் நம்மை போனில் அழைத்துப் பேசுவார்கள். எம் துறை சார்ந்த கேள்விகள் அவர்களிடம் இருக்கும். 

சமீபத்தில் அன்பர் ஒருவர் ஈமெயில் மூலமாக சில கேள்விகளைக் கேட்டிருந்தார். நான் அவருக்குத் தந்த பதில்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இது உங்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

உங்களிடம் இது தொடர்பான மேலதிகத் தகவல்களோ, மாற்றுக் கருத்துக்களோ அல்லது வேறு கேள்விகளோ இருப்பின் இங்கேயே பின்னூட்டமாகவோ அல்லது rsgiri <at> gmail <dot> com என்ற ஈமெயிலுக்கோ எழுதவும்.

நன்றி: http://bpo.biz


அன்புள்ள நண்பருக்கு

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். என் பதில்கள் இங்கே

WHATS THE SCOPE OF BPO IN COMING FUTURE?

இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளைப் பொறுத்தவரையில், பி.பீ.ஓ’க்களின் வளர்ச்சி ஏறுமுகத்தினில்தான் இருக்கும். 
அதற்கு இரண்டு காரணங்கள்

1) யு.கே. , யு.எஸ். போன்ற நாடுகளின் கரன்சி மதிப்பு நம்மைவிட அதிகமாக இருக்கும்வரை அவர்கள் நம்மிடம் வேலை கொடுப்பது நிற்காது.

2) அடுத்த இருபது முதல் முப்பது வருடங்கள் வரை வேலைக்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மற்ற நாடுகளோடு ஒப்பிட்டால் உயர்வாக இருக்கும். உழைக்கும் வர்க்கம் அதிகமாக இருக்கும் திசையில் வேலை குவிவதில் வியப்பேதும் இல்லையே!

HOW INDIA COULD BE A GLOBAL LEADER IF NOT THE JOBS ARE OUTSOURCED?

என் புத்தகத்தில் சொன்னதைக் குறிப்பிடுகிறீர்கள். மேலே குறிப்பிட்ட பதிலையே இங்கேயும் துணைக்கு அழைக்கலாம். நம் கரன்சி மதிப்பு உயர்ந்தாலேயன்றி, இங்கே வரும் வேலைகள் நிற்காது. ஆக, நம் கரன்சியின் மதிப்பு உயரும் தருணம் நாம் வளர்ந்த நாடு என்ற அங்கீகாரம் பெற்ற தருணம்தானே? அதைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன்.

HOW ABOUT THE CRISIS SCENARIO AFFECT THE TOTAL IT INDUSTRY AND BPO AS WELL ?

ரெஸஷன் காலகட்டத்தில், பாதிப்பு விஷயத்தில் ஐ.டி. துறைக்கும் அவுட்சோர்சிங் துறைக்கும் சற்றே வித்தியாசம் உள்ளது. பொருளாதார மந்தநிலை நேரங்களில் அவுட்சோர்சிங் துறை வளர்ச்சி காணும் என்பதுதான் பொதுவான கணிப்பு. காரணம், வளர்ந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள், குறிப்பாக இந்த காலகட்டத்தில், தங்கள் செலவுகளைக் குறைக்கும் பொருட்டு நம் போன்ற நாடுகளை நாடுவது இயற்கைதானே?

Sep 23, 2011

சைபர் கிரைம் - 5

இது போல ஒரு ஈமெயில் உங்களுக்கு வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? நான் பொதுவாகக் கண்டுகொள்ளாமல் டெலிட் செய்வேன். அல்லது நேரம் இருந்தால் கரும சிரத்தையாக "ஃபிஷ்ஷிங் ஸ்காம்" மெயில் அது என மார்க்   செய்வேன்.
Hi 

We are shutting down some email accounts due to congestion in our database system and your account was chosen to be deleted. If you are still interested in using our email service please click reply and fill in the space below for verification purpose:- 
Full Name:
Account Pas-word:
Profession:
Birth Year:
Alternative Email:
Note: This email is only for Gmail users (Users should reply within 48 hours to avoid "Permanently Lockup" Account)
Thank you for using Gmail 
The Gmail Team 


உங்கள் பாஸ்வர்ட் எங்களுக்கு வேண்டும் அதை எங்களுக்கு அனுப்புங்கள் என்றோ அல்லது "இதை அப்க்ரேட் செய்கிறோம் அதை அப்க்ரேட் செய்கிறோம்" உங்கள் பாஸ்வர்டை ரீசெட் செய்யவும் என உங்களுக்கு மெயில் வந்தால்....


தயவு செய்து உஷாரய்யா உஷாரு! எந்த ஈமெயில் வலைத்தளமும் அல்லது எந்த வங்கியும் கூட இப்படி "உன் பாஸ்வேர்ட் எனக்குத் தா" எனக் கேட்பதில்லை.

சைபர் க்ரைம் குறித்த என் இதர பதிவுகள் இங்கே : 
.
.
.



Sep 21, 2011

புரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்


ஈமெயிலில் கிடைத்த டிப்ஸ்! உங்களுக்குப் பயனளிக்குமா பாருங்கள்!

1. மேசையை எப்போதும் களேபரமாக வைத்திருங்கள். ஐந்தாறு பைல்கள் திறந்து கிடக்க வேண்டும். நடுவில் பேனாவைத் திறந்து போட்டிருக்க வேண்டும். மேசையின் இழுப்பறைகள் பாதி திறந்திருக்க வேண்டும். சாவி தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

2. போனில் உரக்க பேசுங்கள். ‘ஐ சிம்ப்ளி கேன்னாட் டாலரேட் தட்’,டுமாரோ வில் பீ டூ லேட்’, என்கிற மாதிரி வாக்கியங்களை அழுத்தம் திருத்தமாக உச்சரியுங்கள். ஆங்காங்கே கொஞ்சம் ஹிந்தி, மலையாளம் கலந்து பேசுவது குணச்சித்திரத்தை மேம்படுத்தும். எதிராளியைக் காய்ச்சி வடிகட்டுற மாதிரி பேசுங்கள். இதைச் செய்கிற போது எதிர் முனையில் போன் வைக்கப் பட்டுவிட்டது என்பதை நிச்சயித்துக் கொண்டு செய்வது உடம்புக்கு நல்லது.

3. அலுவலகத்துக்குள் எப்போது நடந்தாலும் ஏதோ தீ விபத்து நடந்து விட்டது மாதிரி வேகமாக நடங்கள். நீங்கள் போவது காண்டீனுக்கு மசால் வடை சாப்பிடவோ கூட இருக்கலாம்.

4. மேற்சொன்ன தீ விபத்து நடைகளின் போது கையில் எப்போதும் ஒரு பைலோ, ரிஜிச்தரோ வைத்திருங்கள். அது காலி பைலாகவோ, அந்த ரிஜிஸ்தர் உங்கள் மகனின் மேப் டிராயிங் நோட்டாகவோ கூட இருக்கலாம்.

5. சாயந்திரம் ஐந்தரைக்குப் பிறகு உங்கள் பாசின் கேபினுக்கு முன்னால் குறுக்கும் நெடுக்கும் சும்மாவாவது நடங்கள்.

6. ஒரு வேளை அவர் ஏற்கனவே கிளம்பியிருந்தால் அவர் நம்பருக்கு போன் செய்து உப்புப் பெறாத விஷயம் எதற்காவது ஐடியா கேளுங்கள். ‘ஆர் யு ஸ்டில் இன் தி ஆபிஸ்?’ என்று கேட்க வையுங்கள். அதற்கு பதிலாக, ‘யுஷுவலா கிளம்பற நேரமே இன்னம் வரல்லை சார்’ என்கிற ரீதியில் பதில் சொல்லுங்கள்.

முடிந்தால், ‘கேசவன் வேறே இன்னைக்கு வரல்லையா, நாளைக்கு ஆடிட் இருக்கே… என்கிற மாதிரி யாரையாவது டிப்ளமேடிக்காக போட்டுக் கொடுங்கள்.

7. அடுத்த நாள் பாசுடன் பேசும் போது சம்பந்தமே இல்லாமல் ‘நேத்து கூட சாயந்திரம் ஆறரை மணி இருக்கும், வெப் இந்தியா ஆளுங்க போன் பண்ணாங்க’ என்கிற மாதிரி அப்டேஷன்கள் கொடுங்கள். ஆறரை, ஏழு என்கிற இடங்களில் இழுத்து இழுத்து பேசுங்கள்.

இதெல்லாம் செய்தும் புரமோஷன் வராமல் போனால்... இந்த டிப்ஸ்'கள் உங்கள் பாஸ்'சுக்கு முன்னமே ஃபார்வர்ட் ஆகிவிட்டது என்று அர்த்தம்.

Sep 19, 2011

400 நாட் அவுட்

இது நம் நானூறாவது பதிவு!

ப்ளாக் ஆரம்பிச்சு மூணு வருஷமாச்சு! இதுவொண்ணும் பெரிய சாதனை இல்லை. இருந்தாலும் சொல்லிக்கறாப்ல இருக்கே நம்பர்! அதனால இதைக் கொண்டாடும் விதமா போன வருஷம் இதே நேரம் நான் எழுதின சிறுகதை மீள் பதிவிடப்படுகிறது.

இனி நீங்களாச்சு நம்ம கதையாச்சு!



உன் வித்தையெல்லாம் தாடீ... (சிறுகதை)




"அசிஸ்டன்ட் டைரக்டர் ஆகறது இப்போ ரொம்ப கஷ்டம். அதுக்குன்னு வடபழனி, திருவல்லிக்கேணியில நாலு லட்சம் பேரு மேன்சன் எடுத்து தங்கி தவம் செஞ்சிட்டு இருக்காங்க. நீ மொதல்ல பாட்டு எழுதற வழி பாரு. இந்த டைரக்டர் ரொம்ப இல்லன்னாலும் கொஞ்சம் பிரபலம். நமக்கு ஒருவகைல வேண்டப்பட்டவரு. நான் சொன்னா ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பு இருக்கு. கதவை தட்டிப் பாப்போம்" என என்னை இங்கே அழைத்து வந்திருக்கிறான் மணி.

மணி எங்கள் ஊர்க்காரன். என்னைவிட இரண்டு பள்ளி வருடங்கள் பெரியவன். பள்ளி காலத்திலேயே நான் கவிதைகளில் புகுந்து விளையாடுவேன். பின்னர் கல்லூரியில் அது கொஞ்சம் மெருகேறி இன்று ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்ட அளவிற்கு இன்று எங்கள் ஊரில் நான் பிரபலம்.

சினிமாவில் என் எழுத்து, பாடல் ஒலிக்கவேண்டும் என்று என் சுற்றமும் நட்பும் வேண்டி விரும்பி சென்னையில் சினிமாவில் ஏதோவாக இருக்கும் மணி வசம் என்னை ஒப்படைத்து, கடந்த இரண்டு மாத காலமாக அங்கு இங்கென்று திரிந்து இப்போது இந்த டைரக்டர் வாசற்படியில் காத்திருக்கிறோம்.

"வணக்கம் சார்!"

என்னுடன் அமர்ந்திருந்த எல்லோரும் எழுந்து அவருக்கு மரியாதை சொன்னார்கள். நானும் சம்பிரதாயம் மாற்றும் எண்ணமில்லாது எழுந்து நின்று அவரை வணங்கினேன். எல்லோரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு எங்கள் வணக்கங்களை அறை மூலையிலிருந்த குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டு விடுவிடுவென படியேறிச் சென்றார்.  

இங்கு அமர்ந்திருந்த இந்த அரை மணிநேரத்தில் ஐம்பது முறை என்னை மேலும் கீழும் நோட்டமிட்ட அந்த குறுந்தாடிக்காரன், அவர் பின்னே சென்றவனைத் தட்டி அழைத்து, "டைரக்டர் மூடு இன்னைக்கி எப்படி?", எனக் கேட்க உதடு பிதுக்கி, தோள்களைக் குலுக்கி "ஒன்றும் சரியில்லை", என சைகையில் பதில் வந்தது.

என்னை அழைத்து வந்திருந்த மணி, "நீ ஒண்ணும் கவலைப்படாதே", என அவன் பங்கிற்கு தலையசைத்து சைகை செய்தான். இங்கே எல்லாம் சைகை மொழிதான் எனப் புரிந்தது.

மணியிடம் பேசியதில் அவன் இங்கு இருக்கும் பல சினிமா பிரபலங்களுக்கு "பணிவிடைகள்" பல செய்பவன் எனத் தெரிந்தது. யாரிடமும் அவனுக்கு பெரிய மரியாதை இல்லை, இருந்தாலும் எல்லோருக்கும் அவன் தேவை இருந்தது.

மாடியில் இருந்து டைரக்டரின் ஓங்கிய குரலில் ஏதேதோ கெட்ட வார்த்தை வசவுகள் கேட்ட வண்ணம் இருந்தன. எனக்கு சங்கடமாய் இருக்க, குறுந்தாடி அவ்வப்போது நமட்டுச் சிரிப்பு சிரித்தவண்ணம் இருந்தான். "இவங்க எல்லாம் இப்படித்தான்", மீண்டும் சைகை மொழியில் சொல்லிக் கண்ணடித்தான்.

சில மணிநேரக் காத்திருப்பிற்குப் பின் டைரக்டரை சந்திக்க மேலே சென்றோம். சுற்றி மூன்று துணைகள் அமர்ந்திருக்க. தரையோடிருந்த அந்த சின்ன ஸ்டூலில் ரொம்பவும் சாவகாசமாக அமர்ந்திருந்தார் டைரக்டர். 

"மணி உங்களைப் பத்தி போன்ல சொன்னாப்போல. சொல்லுங்க, உங்க லட்சியம் என்ன?"

திடீரென இன்டர்வியு போல என்னை நோக்கி வீசப்பட்ட எதிர்பார்த்திராத கேள்விக்கு பதிலளிக்கத் தடுமாறினேன்.

"சரி ஒண்ணும் பிரச்னை இல்லை, உங்களுக்கு என்ன ஊரு?", என மணியைப் பார்த்தார்.

"ராஜபாளையம் பக்கம் வாசுதேவநல்லூர் சார்", என்றேன் நான்.

"அட, நம்ம சூர்யா ஊரு. அவரு பழக்கமா உங்களுக்கு?", மீண்டும் மணியைப் பார்த்த கேள்வி. 

"இல்லை சார், பார்த்ததுண்டு பழக்கமில்லை", இது நான்.

"நமக்கு இங்க பழக்கமுண்டு சார்", நமட்டுச் சிரிப்பு சிரித்தான் மணி. மூன்று துணைகளும் ஏதோ புரிந்து விழுந்து விழுந்து சிரித்தன. 

"சரி, நீங்க எழுதின எதாவது கொண்டு வந்திருக்கீங்களா?" எனக் கை நீட்டினார். 

நான் கொடுத்ததைப் பார்த்தவிட்டு அதை பக்கத்திலிருந்த ஒரு துணையிடம் கொடுத்தவாறே, "நல்லா இருக்கு, இருந்தாலும் எனக்கு இது போல தளை தட்டாத கவிதை அவ்வளவு பரிச்சயம் இல்லை. அது இங்க நம்ம சினிமாவுக்குத் தேவையும் இல்லை. அது ஒண்ணும் பிரச்னை இல்லை, நீங்க வர்ற சனிக்கிழமை வடபழனி ராதா ரெகார்டிங்குக்கு வாங்க. யோவ் மணி, அழைச்சிட்டு வந்துடுய்யா", என்றுவிட்டு என்னைப் பார்த்து, "ஒண்ணும் பிரச்னை இல்லை பார்த்துக்கலாம்", உதடு விரித்து நீண்ட புன்னகை செய்து ஒரு வணக்கம் சொல்லி நீங்க இப்போ போகலாம் என்று சைகையால் சொன்னார்.

புறப்படுமுன், "சார், என்னோட லட்சியம் தரமான பாடல்களை தமிழ்ல கொடுக்கணும் சார், ஸ்டீரியோ டைப் பாடல்கள்ல இருந்து தமிழ் சினிமாவை மீட்கணும்", என்றேன். சொன்னது தவறோ என எனக்குத் தோன்றி மறையுமுன்....

"அப்போ நாங்க எல்லாம் தமிழ் சினிமாவை சீரழிக்கறோம், நீங்க வந்து எல்லாத்தையும் மாத்தப் போறீங்களா", ஒரு துணையிடமிருந்து எகத்தாளக் கேள்வி வந்தது.

"டேய்", என்று அந்தத் துணையை முறைத்து, "ஒண்ணும் பிரச்னை இல்லை, இருக்க வேண்டியதுதான். எல்லாரும் அப்படித்தான் வர்றாங்க. உங்களையும் உபயோகிச்சிக்க என்னோட இந்த ஸ்கிரிப்டுல இடம் இருக்கு. சனிக்கிழமை பாக்கலாம்", மீண்டும் உதடு விரித்த புன்னகை வணக்கம்.

பெர்முடாஸ் பனியனில் வந்திருந்தார் டைரக்டர்.

"இங்க பாருங்க தம்பி, சிச்சுவேஷன் இதுதான் இது ஒரு முதலிரவுப் பாட்டு. கொஞ்சம் பெப்பியா ஏதாவது யோசிங்க. மியூசிக் டைரக்டர் இன்னைக்கு வரலை. அவர் அசிஸ்டன்ட் கிட்ட டியூனைக் குடுத்து விட்டிருக்காரு, அவரோட உட்காருங்க", உத்தரவு தந்துவிட்டு உள்ளே மறைந்தார்.

என்னுடன் இரண்டு துணைகள் முகாமிட்டன. அந்த டியூனை புரிந்து கொள்ள எனக்கு மிகச் சிரமமாக இருந்தது. கொஞ்சம் நிறையவே நேரம் பிடித்தது.


"அத்தையின் மகளே மெத்தையில் நிலவே", என ஆரம்பித்து நான்கு வரிகள் எழுதினேன். அங்கங்கே தளை தட்டுகிறதா என சரி பார்த்துக் கொண்டேன். துணைகள் இரண்டும் என்னை கொஞ்சம் விசித்திரமாகப் பார்த்தன. அந்தப் பாடலின் வேகத்திற்கு என் வரிகள் பொருந்தியதாய்த் தெரியவில்லை.

"நல்லா இருக்கு சார் நல்லா இருக்கு, ஆனா இது கொஞ்சம் பெப்பி பாட்டு பாருங்க, நாம கொஞ்சம் வரிகளை இங்க அங்க மாத்தி முயற்சி பண்ணலாமே", ஒன்றாய்ச் சொல்லின டைரக்டர் துணையும், மியூசிக் டைரக்டர் துணையும்.

அத்தைப் பொண்ணு வாடி
மச்சான் என்னை நாடி
மெத்தை அது மேல
வித்தையெல்லாம் தாடீ...

இப்படிப் பாடலின் ஆரம்ப வரிகள் மாறிப்போக, இதை எழுதினது நான்தானா என நான் யோசித்து முடிக்குமுன் மேலும் இலைமறை காய் மறையாக நான் எழுதிய அனைத்தும் உடைத்துச் சொல்லப்பட்டன.

"சார், அங்கங்கே கொஞ்சம் பச்சை பச்சையாய் வருதே..." என நான் இழுக்க...,
"அட அதெல்லாம் யாருப்பா பார்க்கறாங்க, இப்போ எல்லாம் சத்தம் போதும் சார், சந்தம் பத்தியெல்லாம் யோசிக்காதீங்க. மொதல் பாட்டு அமைஞ்சி இருக்கு. கொஞ்சம் வளைச்சி நெளிச்சி எழுதுங்க. கொஞ்சம் பேரு வாங்கிட்டா அப்புறம் நீங்க சொல்றதுதான்", என்றது காத்திருந்த அடுத்த துணை.  சரிதான் என நினைத்துக் கொண்டேன்.

இரண்டு நாட்களில் மொத்தப் பாடலும் முடிவானது. மகேந்திரன் என்ற என் பெயர் தமிழ்மதி ஆனது. இரண்டு மாதங்களில் பாடல் வெளிவந்து, அடுத்த இரண்டு வாரங்களில் இந்தப் பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் எதுவும் நான் எதிர்பாராதது. படம் வெளிவரும் முன்னரே பாடல் எழுதிய என் பேட்டி இரண்டொரு பிரபல பத்திரிக்கைகளில் வந்தும் விட்டது.

ப்படி இப்படி ஒன்றரை வருடங்களை சென்னையில் ஓட்டியாயிற்று. என் பெயருக்குப் பின்னால் இப்போது ஐம்பது பாடல்கள் எழுதிய கவிஞன் என்ற தகுதி ஒட்டிக் கொண்டுள்ளது. தமிழ் சினிமா கூறும் நல்லுலகில் இன்று நானும் ஒரு பெயர் சொல்லும் பாடலாசிரியன். என்னிடமும் இப்போது இரண்டு துணைகள் ஒட்டிக் கொண்டுள்ளன.

டைரக்டர் அழைத்திருந்தார். அவர் அடுத்த படத்திற்கு எல்லாப் பாடல்களும் நானே எழுதுகிறேன்.

அன்று அமர்ந்திருந்த அதே நாற்காலியில் இன்றும் அமர்ந்திருக்கிறேன். அதே குறுந்தாடி இன்று எனக்கு வணக்கம் வைத்தது.

மேலிருந்து குரல் கேட்டது, 

"அப்புறம், சொல்லுங்க உங்க லட்சியம் என்ன?"

"சார், தரமான பாடல்களை தமிழ்ல கொடுக்கணும், ஸ்டீரியோ டைப் பாடல்கள்ல இருந்து தமிழ் சினிமாவை மீட்கணும் சார்"

சரிதான் என்று நினைத்துக் கொண்டேன். குறுந்தாடி இப்போது என்னைப் பார்த்து பலமாய்ச் சிரித்தது.
.

Sep 18, 2011

சண்டே ஸ்பெஷல் - நாளைய தொழில்நுட்பம்

சிறப்புப் பதிவர்: நட்பாஸ்

முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது பல நிறுவனங்கள் நம்மை கைபேசியில் அழைத்து பதிவு செய்யப்பட்ட சேதிகளைச் சொல்கின்றன. அவை இனிய பெண் குரல்களாக இருப்பது நம்மை மகிழ்வூட்டும் விஷயம்தான் என்றாலும், நம் வீட்டம்மாவைப் போலவே தனக்கு வேண்டிய விஷயத்தை மட்டும் அவை பேசுவது வருந்தத்தக்கது- நம்மால் அவற்றோடு பொருள் செறிந்த சம்பாஷனை நிகழ்த்த முடியாது, பேச்சுகிடையில் ஒரு வார்த்தை பேச முடியாது, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கின்றன என்பன கைபேசியிலாவது சொன்ன பேச்சு கேட்காமல் புரட்சி செய்வோம் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன- நான் இதுவரை இந்த இனிய பெண் குரல்களுக்கு செவி சாய்த்ததில்லை என்பதை மட்டுமல்ல, இவற்றின் கழுத்தை நெரித்து ஊமையாக்கியிருக்கிறேன் என்பதையும் இங்கு சொல்ல வேண்டும்.

ஆனால் இது எத்தனை நாட்களுக்கு என்று எனக்குக் கவலையாக இருக்கிறது. டிவிட்டரில் நீங்கள் ரவி சாஸ்திரி என்றோ கிரிக்கெட் என்றோ கீச்சிட்டால், உடனே தட் இஸ் நெய்தர் ஹியர் நார் தேர் என்றோ இட் இஸ் எ பிக்கி என்றோ ஒரு கீச்சு உங்களை நோக்கி ரவி சாஸ்திரி பாட்டிடமிருந்து வரக் கண்டிருப்பீர்கள். இப்போது இது போன்ற பாட்கள் பேசவும் துவங்கிவிட்டன. இவை பேசும் விஷயங்களைப் பார்த்தால், நாம் இந்த இனிய பெண் குரல்களின் சுண்டு விரல் அசைவுகளுக்கு அடிமையாகும் நாள் தொலைவில் இல்லை என்ற அச்சம் வருகிறது. நிஜ மனிதர்களின் குரலில் பேசும் இவை, நிஜ மனிதர்களின் சிந்தனை ஓட்டத்தை பிரதிபளிப்பனவாகவும் இருக்கின்றன. 

இப்படி இரு சாட்பாட்கள் ஒன்றையொன்று சந்தித்துக் கொண்டபோது அவை என்ன பேசின என்பதை அண்மையில் அறிய நேர்ந்தது. காணொளி பாருங்கள்:  

எப்போது எந்திரக் குரல்கள் உடல் வேண்டுமென்ற ஆசை உனக்கில்லையா என்றும் உனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்றும் பேசிக்கொள்ள துவங்கி விட்டனவோ, அப்போதே மனிதனை எந்திரன்கள் ஆளும் நாள் தொலைவில் இல்லை என்ற அலாரம் பெல் நமது மண்டைக்குள் உரக்க ஒலிக்க வேண்டும். ஆனால் பாருங்கள், நாம் இன்னும் உப்பு சப்பில்லாத விஷயங்களுக்கு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறோம். நிற்க.

இதுபோன்ற தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முன்னணியில் நிற்பது எம்ஐடியின் மீடியா லாப் என்ற ஒரு கட்டுரையில் படித்தேன். இருபத்தாறு ஆண்டுகளாக தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கும் இந்த மாறுபட்ட அமைப்பின் (இதன் தற்போதைய இயக்குனர் ஜோய்ச்சி ஈடோ கல்லூரிப் பட்டப் படிப்பையும் முடிக்காதவர்) ஆய்வுகள் நமக்கு எத்தகைய எதிர்காலத்தை சாத்தியமாக்கும் என்பதைப் பேசும் இந்தக் கட்டுரைதான் இந்த வார இணைய வாசிப்பில் நான் ரசித்துப் படித்த கட்டுரை.

அவற்றைப் பற்றி ஒவ்வொன்றை சிறு குறிப்புகள் தருகிறேன் பாருங்கள். 

நம் கைபேசி நம்மோடு எப்போதும் இருப்பது. அதைப் பேசவும், செய்திகள் பரிமாறிக் கொள்ளவும், இணையத்தை மேயவும் பயன்படுத்திக் கொள்கிறோம். நம்மில் சிலர் அதைக் கொண்டு செலவு செய்யவும் செய்கிறார்கள். எதிர்காலத்தில் நம் கைபேசிக்குத் தெரியாமல் நாம் எதையும் செய்யப்போவதில்லை என்ற நிலை வரப்போகிறது- நம் மன, உடல், மற்றும் நிதி ஆரோக்கியத்தைக் குறித்த தகவல் பெட்டகமாக இருக்கப்படக்கூடிய கைபேசி, பயனர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஒரு பணம் காய்ச்சி மரமாக இருக்கும்.

 பீஸோ எலக்ட்ரிக் சர்க்யூட்களைப் பற்றி நம்மில் பலருக்கு எதுவும் தெரியாது. நான் விசாரித்தவரை அது அசைவு மற்றும் அழுத்தத்த்தை மின்னாற்றலாய் மாற்றுகிறது. இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் நடக்கும்போது உங்கள் காலணிகள் பாதத்தின் அழுத்தத்தைக் கொண்டு மின்சாரத்தை உருவாக்கி சேமிக்கலாம்- நீங்கள் அமரும் நாற்காலிகள் உங்கள் எடையை மின்சாரமாய் சேமித்துத் தரலாம். எங்கெங்கு காணினும் சக்தியடா! என்று பாடினானே பாரதி, அந்த சக்தி கண்ணுக்குத் தெரியாமல் இனி இருக்காது- உங்களுக்கு சேவகம் செய்வதாக இருக்கும்.

எம்ஐடியின் எட் பாய்டன் என்ற விஞ்ஞானி, செடிகள், பாக்டீரியாக்கள் மற்றும் பாசிகளில் ஒளி உணர்திறன் கொண்ட செல்களை பிரெயின் செல்களாக மாற்றுகிறார். இது தவிர, ஆப்டோஜெனடிக்ஸ் என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு நம் மூளையில் உள்ள தேர்ந்தெடுத்த ந்யூரான்களை ஒளிரச் செய்து நம் மூளை எப்படி வேலை செய்கிறது என்பதை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். இதன் எதிர்கால சாத்தியங்கள் என்ன? உடலின் மற்ற இடங்களில் பலவற்றில் பழுதுபட்ட பாகங்களை செயற்கைக் கருவிகளைக் கொண்டு திருத்தியமைக்கிற மாதிரி, கண்ணுக்குள் கான்டாக்ட் லென்ஸ் இருப்பது போல், மூளையின் பழுதுபட்ட பாகங்களும் ரிப்பேர் செய்யப்படலாம்.

கைபேசி பாக்கட் மருத்துவராக மாறி வருவதை சென்ற பதிவில் பார்த்தோம்- மிங் செர் போ என்ற விஞ்ஞானி, கைபேசியின் புகைப்பட லென்ஸ் மூலம் நம் முகத்தில் இதய இயக்கம் சார்ந்த ரத்தக் குழாய்களின் நுண்ணிய மாற்றங்களைத் துல்லியமாய்ப் படம் பிடிக்கக்கூடிய தொழில் நுட்பத்தை வடிவமைத்திருக்கிறார். நம் உடல் உறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு முன்பே, நோய்க்குறிகளின் வளர்நிலையிலேயே அவற்றை கைபேசிகளைக் கொண்டு கண்காணித்து, அடையாளம் கண்டு தக்க சமயத்தில் தேவையான சிகிச்சை தர முடியும் என்று நம்புகிறார்கள் விஞ்ஞானிகள். நோய் நாடி என்று வள்ளுவர் ஏதோ சொல்லியிருப்பதாக நினைவு- எதிர்காலத்தில் நாம் நம் கைபேசிகளை அவ்வாறழைத்து கௌரவிக்கலாம்.

எம்ஐடி, ஸ்க்ராட்ச் என்ற ஒரு எளிய மென்பொருளை வடிவமைத்துள்ளனர். இதைப் பயன்படுத்தி சிறு குழந்தைகளும் கேம்கள், கதைகள், இசை, ஓவியங்கள் போன்ற கலை வடிவங்களை உருவாக்கலாம். குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த மென்பொருளைக் கொண்டு இதுவரை இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட கேம்கள் படைக்கப்பட்டுள்ளன. கோடுகளை மின் சர்க்யூட்களாக மாற்றும் தொழில்நுட்பத்தைக் கொண்டு ஓவியங்கள் ஒளிரத் துவங்கியுள்ளன. இது போன்ற தொழில்நுட்பங்கள் நம் கல்வி முறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்- இதுவரை அவர்களால் சாத்தியப்படாத விஷயங்கள் குழந்தைகளின் கைக்கெட்டும் தொலைவுக்கு வந்து விட்டன.

முப்பரிமாண பிரிண்டர்களைப் பற்றி இன்னொரு நாள் பார்க்க வேண்டும். இயந்திரங்கள் உட்பொருட்களைக் கொண்டு கட்டிடம் சமைக்க வல்லனவாகிவிட்டன. எம்ஐடியின் ஸ்டீவன் கீட்டிங், உட்புறத்தில் சன்னத் துளைகளும் விளிம்புகளில் உறுதியாகவும் உள்ள பனை மரத்தை ஒத்த கான்க்ரீட் பில்லர்களை முப்பரிமாண பிரிண்டர்களைக் கொண்டு அச்சிட்டிருக்கிறார- இவை எடை குறைவாகவும் குறைந்த ஆற்றல் தேவை கொண்டவையாகவும் உள்ளன என்கிறார்கள். முழு கட்டிடத்தையும் இப்படி அச்சிடும் நாள் தொலைவில் இல்லை என்கிறார் இவர்: கட்டிடத் துறை என்றில்லை, அனைத்து உற்பத்தித் துறைகளிலும் இந்த முப்பரிமாண பிரிண்டர்கள் நுழைந்து மனிதர்களுக்கு தொழிற்சாலைகளின் கதவடைக்கும் நாளையும் நாம் பார்க்கப் போகிறோமோ என்னவோ.

மோட்டாரின் ஆற்றலில் இயங்கும் சுவர்களையும், வடிவம் மாறும் பர்னிச்சர்களையும் வடிவமைக்கும் தொழில்நுட்பம் வந்து விட்டது: நமது இல்லங்கள் தேவைக்குத் தகுந்த மாதிரி உருவம் மாறி, பயன்பாடும் மாறும்- உங்கள் படுக்கையறையின் மரச்சாமான்கள் சுவருக்குள் சென்று, அலுவலக மேசை நாற்காலிகள் வெளிவரும்: இடத்தேவை குறித்த நம் கண்ணோட்டம் நாம் நினைத்துப்பார்க்க முடியாதபடி மாறப் போகிறது. 

இதை எல்லாம் அந்தக் கட்டுரையில் படித்ததும் கர்ட் வோன்னகட் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது- நீண்ட நாட்களாகவே மனதை உறுத்திக் கொண்டிருந்த விஷயம்தான்- நூறாண்டுகள் கழித்து இன்றைய இலக்கியத்தை வாசிக்கும் விமரிசகர்கள், நாம் பாலியல் விழைவைப் பேசாத விக்டோரிய நாவல்களை எழுதியவர்களை விமரிசிப்பது போலவே தொழில் நுட்பத்தைப் பேசாத படைப்பாசிரியர்களையும் எடை போடுவார்கள், என்று சொல்கிறார் அவர்.

ஆமாம், காமம் நம் அகத்தை நிறைத்து நம் அன்றாட நடவடிக்கைகளை, நம் வாழ்வியல் தீர்வுகளை, தீர்மானிக்கும் அளவுக்கு தொழில் நுட்பக் கருவிகளும் நம் வாழ்வை நிறைத்திருக்கின்றன. மானுடத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு திருப்பு முனையாக அமைந்த இந்த தொழில் நுட்ப வளர்ச்சியையும், நம் வாழ்வில் அதன் பங்களிப்பையும் பேசும் இலக்கியவாதிகள் இன்று எத்தனை பேர் இருக்கிறார்கள்?

ஒருவர் மட்டுமே நினைவுக்கு வருகிறார். ஆனால் அவர் இலக்கியவாதி இல்லை என்று பெரும்பான்மை விமரிசகர்கள் கட்டம் கட்டி விட்டார்கள்: பார்ப்போம், காலத்தின் தீர்ப்பு வேறு மாதிரி இருக்கிறதா என்னவென்று. ஆங்கிலத்தில் மரங்களைக் கண்டு வனத்தைக் காணாதிருப்பது என்றேதோ சொல்வார்கள். இதுவும் அந்த கதையாக முடியுமோ என்னவோ!

Sep 17, 2011

இது பயணக்கட்டுரை அல்ல - 4

குர்கான்


புதுடெல்லி சென்றிருந்த இரண்டு வாரங்களும் நான் தங்கியிருந்தது புதுடெல்லியின் இரண்டு நவயுகக் கரங்களில் ஒன்றான குர்கானில் (Gurgaon).  நோய்டா (Noida) புதுடெல்லியின் மற்றொரு கரம். என்.ஸி.ஆர். என்று அழைக்கப்படும் நேஷனல் கேபிடல் ரீஜன் உருவாக்கத்தின்போது இவ்விரு பகுதிகளும் கிட்டத்தட்ட டெல்லியின் அங்கம் ஆயின.  டெல்லியைச் சுற்றியுள்ள ராஜஸ்தான், ஹரியானா, உத்திரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து பிழைப்புதேடி குவிந்த வண்ணம் இருந்த மக்களைக் கருத்தில் கொண்டு பதினைந்து வருடங்களுக்கு முன் டெல்லி விரிவாக்கத் திட்டத்தின் கீழ் உருவான பகுதிகள் இவை.

குர்கான் நகருக்கு அந்தப் பெயர் அமைந்ததற்கு இரு வேறு காரணங்கள் கேட்கக் கிடைத்தன. குர்கானின் சரியான உச்சரிப்பு குர்காவோ(ன்). ஹிந்தி பேசுபவர்கள் குட்காவோ(ங்) என்கிறார்கள். கூடு என்றால் ஹிந்தியில் வெல்லம். காவோ(ன்) என்றால் கிராமம். ஒரு காலத்தில் வெல்லச் சந்தைக்குப் பிரபலமான நகராக விளங்கியது குர்கான் என்பது முதலில் எனக்குக் கேட்கக் கிடைத்த காரணம். இரண்டாவது காரணம் சுவாரசியமானது. குரு துரோணாச்சாரியாரின் பூர்வீக கிராமமாக குர்கான் அறியப்படுகிறது. அதனால் குரு-காவோ(ன்) என்று பெயர் என்றும் சொல்கிறார்கள்.

குர்கான் நகரில் பொதுவாக மூன்று விஷயங்கள் மிகப்பிரபலம். ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள், விதவித வகைவகையான கார்கள், தெருவுக்குத் தெரு வியாபித்திருக்கும் ஷாப்பிங் மால்கள். நான்காவதாகத்தான் மனிதர்கள்.

குர்கான் நகரின் பாதியை DLF நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது போலும். எங்கு திரும்பினாலும் அந்த நிறுவனம் எழுப்பிய கட்டிடம் உங்கள் கண்ணுக்குப் புலப்படுகிறது. அவர்கள் எழுப்பிய கட்டிடங்களை நூற்றுக்கணக்கான ஐ.டி. நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து தங்கள் தொழிலைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. எங்கள் கிளையன்ட் அலுவலகமும் DLF 'ன் கட்டிடம் ஒன்றில்தான் அமைந்திருந்தது. குர்கானில் இது போன்ற கட்டிடங்களுக்கு ஏதேனும் எண் குறிப்பிட்டுத்தான் அடையாளம் சொல்கிறார்கள். பில்டிங் சிக்ஸ், பில்டிங் நைன் என்றே குறிப்பிட்டு அடையாளம் இடுகிறார்கள். ஆட்டோக்காரர்கள் கூட பில்டிங் நம்பர் குறிப்பிட்டால் கொண்டு விடுகிறார்கள்.

சென்னையில் எப்போதேனும் கடந்து செல்லும் ஆடி கார்களும், BMW வகைக் கார்களும் அங்கே சர்வசாதாரணமாக வளைய வருகின்றன. ஆகவே, சாதாரண ரகக் கார்கள் பற்றி சொல்லும் அவசியமற்றுப் போகிறது. விரிந்து பரந்த சாலைகளின் பயனில் வாரஇறுதிகளிலும்,வார நாட்களின் மதியப்பொழுதுகளிலும் அமைதியாகக் காணப்படுகிறது போக்குவரத்து. ஆனால், பெருகிவிட்ட கார்களின் எண்ணிக்கையால் வாரநாட்களின் காலைமாலை வேளைகளில் கடந்து செல்வதென்பது பெரும் சாதனைச்செயல் ஆகிவிடுகிறது. அதிலும் மழை நேரங்களில் டெல்லி, குர்கான் பகுதிகளில் பயணப்படுவது கொடுமையான தண்டனை அனுபவிப்பது போல.



அங்கே நான் பார்த்த வரையில் நாடார், செட்டியார் வகைக் கடைகளெல்லாம் இல்லை (அந்த ஊரில் சர்தார், சௌகார் என்று கொள்ளுங்களேன்). மக்கள் தெருமுனைக் கடைகளிலெல்லாம் ஏதும் வாங்குவதில்லையோ என்னவோ. என்ன வேண்டுமென்றாலும் ஷாப்பிங் மால்கள் நோக்கித்தான் நீங்கள் நடை நடக்க வேண்டும். அப்படியாகிவிட்டது வாழ்க்கை. அய்யனார் ஏஜென்சீஸ், மகாராஜா ஃபேன்சி ஸ்டோர் என்றெல்லாம் தேடலாகாது. ஆம்பியன்ஸ் மால், மெட்ரோ மால், சென்டர் மால் என எல்லாமுமே மால்கள்தான். உள்ளே போனால் என்ன வேண்டுமோ எல்லாம் கிடைக்கும், நான்கு மடங்கு விலையில். மக்கள் சந்தோஷமாக வாரம் ஒருமுறை அங்கே சென்று வேண்டியது, வேண்டாதது என எல்லாவற்றையும் அள்ளிப்போட்டுக் கொண்டு வந்துவிடுகிறார்கள். வார நாட்கள் அலுவலகத்திற்கு சென்றுவர மட்டுமே ஒதுக்கப்படுகிறது.

பழைய குர்கான் நகரை ஒரு பக்கம் விட்டுவைத்துவிட்டு சமீபத்தில் அசுர வேகத்தில் முன்னேறி வரும் தற்போதைய புதிய குர்கான் நகர் நம்மை சற்றே பயமுறுத்தத்தான் செய்கிறது. மெஷின் லைஃப் என்றால் என்ன என்பதை அங்கேதான் நேரிடையாக தரிசித்தேன். நம் கிராமங்களை ஒப்பிட்டு சென்னை வாழ்க்கையை இயந்திரத்தனமானது எனப் பேசுவதை இனி நிறுத்தித்தான் ஆகவேண்டும்.

சர்வதேச மார்க்கெட்டின் ஜாம்பவான் நிறுவனங்கள் அத்தனை பேரும் குர்கானில் கடை விரித்திருக்கிறார்கள். தெருவுக்குத் தெரு, சந்திற்குச் சந்து ஏதேனும் ஐ.டி. கம்பெனியோ, பி.பீ.ஓ. நிறுவனமோ அல்லது வேறு இந்திய நிறுவனம் ஒன்றின் நிர்வாக அலுவலகமோ அல்ட்ரா மாடர்ன் அலங்காரங்களுடன் மின்னுகிறது. இரவு நேரப் பயணங்களில் எண்பதுகளின் அமெரிக்க நகரங்களைப் படம் பிடித்த நம்மூர் சினிமாக்களை நினைவூட்டுகிறது குர்கான்.

அது இல்லை இது இல்லை, அது ஓவர் இது ஓவர், வாழ்க்கை எந்திரமயம், அப்படி இப்படி என என்ன குறைகளை குர்கான் மீது அள்ளித் தெளித்தாலும் ஒரு விஷயத்தில் குர்கானை இந்தியாவின் தலைசிறந்த நகர் எனலாம். அது வேலைவாய்ப்பு. ஊரில் இறங்கி நான்கு நாட்கள் அலைந்தீர்கள் என்றால் யாருக்கும் வேலை நிச்சயம். அப்படிப்பட்ட நிறுவனங்களும் வாய்ப்புகளும் நிறைந்த நகரமாகும். ஒரு பக்கம் இதை நிறை எனக் கூறினாலும் இன்னொருபுறம் நிறுவனங்கள் திறமைகளை தக்கவைத்துக் கொள்ள இங்கே படாதபாடு படுகின்றன. காரணம் வேலைவாய்ப்பு இங்கே அதிகம் என்பதால் பணித்தாவல்களும் எக்கச்சக்கம்.

குர்கான் பற்றி அவ்வளவுதான். இனி டெல்லி பற்றியும் ஆக்ரா பயணம் குறித்தும் பார்க்கலாம்.
.
.
.

Sep 15, 2011

100௦௦ ரூவாயும் கொஞ்சம் டியர்ஸும்!

எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது!




Sep 14, 2011

நிமிஷக் கதைகள்

நேற்று மதியம் அலுவலகம் போகுமுன் தெருமுனைக் கடையில் லிம்கா குடிக்க வண்டியை நிறுத்தினேன்.  அந்தக் கடைப் பையனை எப்போதும்  கவனித்திருக்கிறேன். ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பான். நாம் கேட்பதை இரண்டு முறைகள் திருப்பிச் சொன்னால்தான் கேட்டது கேட்டதாகக் கிடைக்கும். வாங்கின பொருட்களுக்கு விலை சரியாகப் போட்டிருக்கிறானா என சரிபார்த்துக் கொள்ளுதல் எப்போதும் நலம். நாற்பது ரூபாயை பதினாலு என்றும் சொல்வான். பத்து ரூபாயை ஐம்பத்தி நாலு என்றும் சொல்வான்.

நான் லிம்கா அருந்திக் கொண்டிருந்தபோது சொல்லிவைத்தாற்போல் அந்தப் பெரியவருக்கு இரண்டு கிலோ அரிசியை எழுபத்து நாலு என்றான். 

"ஒரு கிலோ எவ்ளோ தம்பி?"

"முப்பத்தி ஆறு"

"அப்போ ரெண்டு கிலோ?"

"ஓ! சாரி சார்! இந்தாங்க ரெண்டு ரூபா!"

கால்குலேட்டர், கம்ப்யூட்டர்கள் இல்லாமல் கணக்குப் போட்ட  பழங்கதைகள் பேசத் தொடங்கிவிட்டார் பெரியவர்.

பதினைந்து வருடங்களுக்கு முன் மூலக்கடை ஃ பாத்திமா ஸ்டோரில் பார்த்த கணக்கு என்ற நபர் நினைவிற்கு வந்தார். அங்கே அடித்த ஸ்பார்க்கில் எழுதியதுதான் "சிவலிங்கம் ஸ்டோர்ஸ்" என்ற இந்த நிமிஷக் கதை. 

நட்பாஸ் அவர்களின் லைவ்லி பிளானெட் தளத்தில், அவர் தந்த ஊக்கம் மற்றும் அனுமதி ஆகியவை துணை கொண்டு கடந்த சில வாரங்களாக நிமிஷக் கதைகள் எனப்படும் flash fiction வகைக் கதைகளை முயற்சித்து வருகிறேன். நான் எழுதும் நிமிஷக் கதைகளுக்குப் பெரிய மனது பண்ணி தன் தளத்தில் இடம் தரும் நட்பாஸ் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Flash fiction பற்றி விக்கி:  http://en.wikipedia.org/wiki/Flash_fiction
.
.
.

Sep 11, 2011

சண்டே ஸ்பெஷல் - பாக்கெட் டாக்டர்

(இந்த வார இணைய வாசிப்பில் பிடித்தது)
சிறப்புப் பதிவர்: நட்பாஸ்



ஒரு காலத்தில் அப்ளிகேஷன் என்றால் வேலை வாய்ப்புப் படிவம் என்று இருந்தது- அப்ளிகேஷனைப் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் தாடி வளரும் வேகத்தில் நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிற பட்டதாரிகளாக இருப்பார்கள். இப்போது ஸ்மார்ட் ஃபோன்கள் வந்து விட்ட நிலையில், எதற்கெடுத்தாலும் "இதுக்கு ஒரு அப்ளிகேஷன் இருக்கே!" என்று சொல்கிறார்கள். இன்றைய இளைஞர்களுக்கு அப்ளிகேஷன் என்பது வேலை கிடைக்குமா என்ற ஏக்க நினைவுகளைக் கிளரும் அசந்தர்ப்ப நினைவூட்டலாக இல்லை- அப்ளிகேஷன்கள் காரியத்தை முடித்துத் தருகிற கருவிகளாகி விட்டன. இணையமும் கைபெசியும் இருந்தால் போதும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று.இருக்கிறது இன்றைய நிலைமை. இது மருத்துவத் துறையில் எப்படிப்பட்ட மாற்றங்களை உருவாக்கி வருகிறது என்று அண்மையில் படித்தேன், ஒரே கணத்தில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து எதிர்காலத்துக்குள் அடியெடுத்து வைத்த உணர்வு வந்து விட்டது.

இந்த ஸ்மார்ட் ஃபோன்களுக்கான அப்ளிகேஷன்கள் பலவற்றில் ஸ்டெதாஸ்கோப் எக்ஸ்பர்ட் என்பது ஒன்று. இது ஒரு ஸ்டெதாஸ்கோப்பாகப் பயன்படக்கூடியது. இதயம் மற்றும் வயிற்றில் ஏற்படக்கூடிய ஒலிகளை, ஒரு விலையுயர்ந்த, நுட்பமான ஸ்டெதாஸ்கோப்புக்கு உரிய துல்லியத்துடன் இது பதிவு செய்து கொள்கிறது. அது தவிர, இதன் நூலகத்தில் வெவ்வேறு இதய நோய்களில் காணப்படும் அறுபது வகை இதயத்துடிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கம்போல் டப் டப் என்று துடிக்கவேண்டிய இதயம் ஹார்ட் அட்டாக் ஏற்படும்போது இதைவிட இருமடங்கு வேகமாக, நாலு கால் பாய்ச்சலில் ஓடுமாம். மருத்துவ மாணவர்கள் தங்கள் பயிற்சியில் நோயாளிகளின் இதயத்தில் நேரடியாக இந்த ஒலியைக் கேட்கும் வாய்ப்பு ஓரிரு முறைகள் கிடைத்தால் அதிகம். ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் இத்தகைய பிரத்யேக அப்ளிகேஷன்களின் துணையால் வெவ்வேறு நோய்க்குறிகளை இந்த மாணவர்கள் இனங்கண்டு மனதில் நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.

இந்த போன்களின் பயனர்கள் தங்கள் இதயத் துடிப்புகளை இத்தகைய அப்ளிகேஷன்களைப் பயன்படுத்திப் பதிவு செய்து வைத்துக் கொள்வது அடுத்த கட்டம், இல்லையா? அடுத்து, தங்கள் இதயம் ஏறுக்கு மாறாக எக்கு தப்பி அடித்துக் கொள்கிறது என்ற சந்தேகம் இருந்தால், அந்த சந்தேகத்தை இந்த ஒலிக் கோப்புடன் இணைத்து தங்கள் மருத்துவருக்கு அனுப்பலாம்- அவருக்கும் விஷயம் குன்சாக இருந்தால் தன் சந்தேகத்தைத் தெளிவித்துக் கொள்ள, பயனரின் இதயத் துடிப்பு அடங்கிய அந்த ஒலிக் கோப்பை ஒரு இதயநல மருத்துவருக்கு ஒரே கிளிக்கில் பார்வர்ட் செய்யலாம். இவை எல்லாம் இருந்த இடத்தில் இருந்தே நடக்கின்றன. இதய நோயாளிகளின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கவும் ஸ்மார்ட் ஃபோன்கள் எப்படி பயன்படுகின்றன பார்த்தீர்களா?

ஆய்வுக் கூடங்களில், சில சாங்கியங்களைத் தகுந்த வகையில் கடைபிடித்து அறிவியல் உண்மைகளை விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பார்கள் என்ற ஒரு மாந்த்ரீகக் கலை போன்ற தோற்றம் நம் மனதில் இருக்கிறது. எப்போது அறிவியல் நம் பாக்கெட்டில் உள்ள ஸ்மார்ட் ஃபோன்களில் அப்ப்ளிகேஷன்களாகக் குடியேறியதோ, அப்போதே அது தன் பிரமிப்பைக் களைந்து குழந்தை விளையாட்டாய்ப் போய் விடுகிறது. அமெரிக்காவில் UCLAவைச் சேர்ந்த Aydogan Ozgan என்ற பேராசிரியர் வடிவமைத்த விஷயத்தைப் பாருங்கள்.

அது லென்ஸ் இல்லாத ஒரு மைக்ரோஸ்கோப். அதன் எடை அறுபது கிராமுக்கும் குறைவு. அதை காமெரா ஃபோன்களோடு இணைத்துக் கொள்ளலாம். இந்த மைக்ரோஸ்கோப் பத்து டாலருக்கும் குறைவான விலையில் கொள்ளை மலிவு. இவை நிழல்களைக் கொண்டு டிஃப்ராக்ஷன் முறையில் ஒரு முப்பரிமாண புகைப்படத்தை உருவாக்குகின்றன.. நம் உடம்பில் உள்ள செல்கள் மற்றும் அதன் உள்ளிருக்கும் உபரிகள் ஒளியை அரைகுறையாகத் தம்முள் ஊடுருவிச் செல்ல அனுமதிக்கின்றன. எனவே, நம் ரத்தமோ எச்சிலோ, அதன் ஒரு துளியை இந்த ஸ்மார்ட் ஃபோனில் இணைக்கப்பட்டுள்ள மைக்ரோஸ்கோப்பால் படமெடுத்தால் அது நிழல்களை வைத்து அந்த செல்லை முப்பரிமாண புகைப்படமாகப் பதிவு செய்து கொள்கிறது. இந்தப் புகைப்படத்தை ஒரு லேப்புக்கு அனுப்ப எத்தனை கிளிக் தேவைப்படும்? நம் ஊரைப் போலவே டாக்டர் இருக்கிறாரோ இல்லையோ, உயர்தர நோய் காணும் உபகரணங்கள் கொண்ட சோதனைக் கூடங்கள் இருக்கின்றனவோ இல்லையோ, உலகெங்கும், எவ்வளவு ஏழைப்பட்ட கிராமமாக இருந்தாலும் எல்லாரிடமும் கைபேசி இருக்கிறது. நாள்பட நாள்பட ஸ்மார்ட்ஃபோன்களின் விலை குறைந்து வருகிற நிலையில், இந்தியாவாகட்டும் ஆப்பிரிக்காவாகட்டும், மருத்துவத்துறையில் இந்த அப்ளிகேஷன்களின் பயன்கள் எண்ணற்றவை.

உதாரணத்துக்கு மலேரியாவை, அல்லது டைபாய்டை எடுத்துக் கொள்ளுங்களேன். நமக்கு காய்ச்சல் இருந்தாலும் மருத்துவரிடம் செல்வது கஷாயங்களும் தெருவோர பார்மசிக்களும் தோற்றுப் போன பின்னர்தான், அப்புறமும்கூட நாம் அனைவரும் ரத்தத்தை உடனே சோதனை செய்து பார்த்து விடுவதில்லை. இந்த மாதிரி ஒரு அப்ளிகேஷன் உங்கள் போனில் இருந்தால், தலை வலிக்கத் துவங்கி வாந்தியெடுத்த மறு கணமே உங்கள் ஒரு துளி ரத்தத்தை படம் எடுத்து ஒரு கிளிக்கில் அதன் வழியில் அனுப்புவீர்களா மாட்டீர்களா? நம் பாக்கெட்டுக்குள் வந்து விட்டன லேப்பில் மட்டும் இருக்கக்கூடிய விலையுயர்ந்த உபகரணங்கள் அனைத்தும். இந்த பேராசிரியரின் அப்ளிகேஷன் கிளிக் செய்து லேப்புக்கு செல்லும் தேவையைக்கூட பெருமளவில் குறைக்கிறது. புகைப்படமெடுத்த மறு கணமே சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், மற்றும் பாக்டீரியா போன்ற கிருமிகளை அடையாளம் கண்டு எது எது எவ்வளவு இருக்கின்றன என்ற தகவலைத் தெரிவித்து விடுகின்றன. இந்த விபரத்தை உங்கள் மருத்துவருக்கு ஒரு குறுஞ்செய்தியாக அனுப்பினால் அவர் தன் பிரிஸ்கிரிப்ஷனை இன்னொரு குறுஞ்செய்தியாக அனுப்புவார். படிக்க எளிதாக இருக்கும் இந்த மருந்துப் பட்டியலை ஒரு பார்மசிக்கு எஸ்எம்எஸ் செய்தால் வீட்டுக்கு வந்துவிடலாம் உங்கள் மருந்துகள்!

இது போல் இப்போதே ஃபூஜிட்சு நிறுவனம் உங்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதயத் துடிப்பு, எடை போன்ற விபரங்களைப் பதிவு செய்யும் இயந்திரங்களிடம் இருந்து தேவையான தகவல்களை ப்ளூடூத் வழியாக உங்கள் கைபேசிக்கே பெற்றுக் கொள்ளும் தொழில் நுட்பத்தை வடிவமைத்துள்ளது. மருத்துவ மற்றும் தொழில் நுட்ப வசதி அதிகம் இல்லாத டவரில்லா காடுகளில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம், நாளை உங்கள் உடல்நிலை குறித்த தகவல்களை கைபேசியிலேயே அலசி ஆராய்ந்து நோய் நாடி குணம் நாடி செய்தி அனுப்பும் அப்ளிகேஷன்களுக்கு வழியமைத்துத் தரலாம், இல்லையா? அந்த நாள் தொலைவில் இல்லை.

இப்போதே ஆப்பிளின் அப்ளிகேஷன் ஸ்டோரில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவம் சார்ந்த அப்ளிகேஷன்கள் பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சர்க்கரை மற்றும் எடையைக் கண்காணிக்கத் துணை செய்பவை. இவற்றின் பயன் மருத்துவத்துறைக்கு பெரிய அளவில் துணை செய்யும் என்று நம்புவதற்கிடமிருகிறது- ஒவ்வொரு கணமும் நோய்க்குறிகளைக் கண்காணிக்கவல்ல கருவிகளாக நம் கைபேசிகள் நமக்கும் நம் மருத்துவருக்கும் உதவி செய்யும்.

பாட்டு கேட்கவும் வீடியோ பார்க்கவும் நம் மொட்டைத் தலையை பேஸ்புக்கில் அப்லோடி நண்பர்களை அலற வைக்கவும் அவகாசப்பட்ட நேரத்தில் டிவிட்டரில் வலைபாயவும் நாம் பயன்படுத்தும் கைபேசிகளுக்கு இத்தகைய சாத்தியங்கள் இருக்கின்றன என்று நாம் நினைத்துப் பார்த்திருப்போமா? ஆனால் இதெல்லாம் பட்டிதொட்டியெங்கும் நடைமுறைக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நான் சொன்ன கட்டுரையைப் படிக்கும்போது நினைத்துக் கொண்டேன்.

Sep 8, 2011

பெண் ஏன் அடிமையானாள்?


நேற்று அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பெண்மணி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது பேச்சினூடே அவரவர் வீட்டு வம்புதும்புப் பரிமாறல்கள் நடந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் என்னென்ன வேலைகள் யார்யார் பகிர்ந்து செய்வார்கள் என்ற பேச்சும் வந்தது.

நம் வீட்டில் எல்லாமே ஷேரிங் பேசிஸ்தான். அதிலும் ”இந்த வேலை நீ செய்! அந்த வேலை நான் செய்வேன்!” என்னும் பாகுபாடுகள் எல்லாம் இல்லை. அந்தந்த நேரத்திற்குத் தகுந்தாற்போல் இருக்கின்ற வேலையை யாரேனும் ஒருவர் செய்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்பது நம் வீட்டு இஸ்டைல்.

இதைக் கேட்டதும் அந்தப் பெண்மணி துணுக்குற்றார்போல் ஆகிவிட்டார். ”என்னது, வீட்டு வேலையெல்லாம் உங்களை செய்ய சொல்லுவாங்களா உங்க வைஃப்? அவங்கதான் வேலைக்குப் போகலியே, அப்போ என்னதான் செய்வாங்க?”, கூட்டுக் குடும்பத்தில் வசிப்பவர் அவர். தனிக்குடித்தனத்தில் அதிலும் ஒண்ணரை வயசுக் குழந்தையுடன் இருக்கும் குடும்பத்தில் வேலைகளைப் பகிர்ந்து பண்ணும் அவசியத்தை அவருக்குச் சொன்னேன். இருந்தும் அவருக்குச் சமாதானம் இல்லை.

“அது எப்படிங்க வீட்டை க்ளீன் பண்ற வேலையெல்லாம் ஆம்பளைங்க கிட்ட குடுக்கறாங்க, தட்ஸ் நாட் ஃபேர்”, என்றார்.

“அதுல என்ன இருக்குங்க? சும்மா கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ற நேரத்தை வீட்டு வேலைல செலவு செய்தா என்ன?”

“அய்யய்ய.... நாங்கல்லாம் எங்க வீட்டு ஆம்பளைங்களுக்கு அந்த வேலையெல்லாம் தரமாட்டோம்”

“அப்போ உங்க வீட்டு ஆம்பளைங்க என்ன வேலைதான் செய்வாங்க”

“கடைவீதிக்கெல்லாம் எப்பயாவது போவாங்க. ஆனா நாங்க அவங்களுக்கு வீட்டு வேலையெல்லாம் வைக்க மாட்டோம்”

”இந்த காய்கறி நறுக்கித் தர்றது”

”சேச்சே...”

”காபி போடறது”

“அதுக்குத்தான் ஒருத்தருக்கு மூணு லேடீஸ் இருக்கோமே வீட்ல”

”ஆம்பளைங்களும் உங்க வீட்ல ரெண்டு பேரு இருக்காங்கதானே?”

”இருந்தாலும் அந்த சில்லறை வேலை அவங்களுக்கு ஏன்”

"கொஞ்சம் வீட்டுவேலை அப்பப்போ பார்த்தா உடம்புக்கு பிபீ, சுகர் வராதுன்னு சொல்லுவாங்க”

“அதுக்குதான் அறுவதாயிரம் குடுத்து வாக்கிங் மெஷின் (!!) வாங்கியிருக்கோமே (அடப்பாவிகளா!)”

“வாஷிங் மெஷின் போடறது?”

“வாஷிங் மெஷின் போடன்னு தனியா வேலைக்கு ஆள் இருக்கு (கொடுமைடா)”

“அவங்க சாப்பிட்ட தட்டையாவது கழுவி வைப்பாங்களா?”

“என்னது? அந்த வேலைகூட உங்க வீட்டம்மா பண்ணமாட்டாங்களா?”

இப்போது நான் யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். அடடா.... நம் வீட்டில்தான் நமக்கு அநீதி நிகழ்கிறதா? ஒருவேளை ஆண் ஏன் அடிமையானான் என்று இக்கட்டுரைத் தலைப்பை மாற்றவேண்டுமோ?
.
.
.

Sep 4, 2011

மங்காத்தா - இணையம் வழியே

Sep 2, 2011

புத்தக வெளியீடு - அழைப்பிதழ்!

செங்கை பதிப்பகத்தின் 59'வது வெளியீடான திருமதி.குமாரதேவி அவர்கள் எழுதிய "பூமி வசப்படுமே" நாவல் 03.09.2011 சனிக்கிழமை மாலை 05-30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை "ஸ்வாகத் ஹோட்டல் - மினி ஹாலில்" நடைபெற உள்ளது. 

திருமதி. குமாரதேவி அவர்கள் சார்பிலும் எங்கள் பதிப்பாளர் சார்பிலும் உங்களை இவ்விழாவிற்கு அழைக்கிறேன்.

புத்தகவிழா அழைப்பிதழ்:



புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: உடுமலை
.
.
.


Related Posts Plugin for WordPress, Blogger...