Showing posts with label நிமிஷக் கதைகள். Show all posts
Showing posts with label நிமிஷக் கதைகள். Show all posts

Apr 6, 2012

கலி - நிமிஷக்கதை


நன்றி: நட்பாஸ்
இது ஒரு அப்பட்டமான நிஜக்கதை! இந்தக் கதை லைவ்லி ப்ளாண்ட் தளத்தில் வந்தபோது டாக்டர்.வரசித்தன் இட்ட இந்தப் பின்னூட்டம், கதைக்கு.... இல்லையில்லை இந்த நிஜத்தின் அர்த்தத்திற்கு மேலும் வலு சேர்த்தது. சேர்த்த வலு குழப்பத்தில், சோர்வில் நம்மைத் தள்ளியது வேறு கதை.
சரி சரி, நீங்கள் கதையைப் படியுங்கள்.
ப்ரேக் அடித்து நின்றது பேருந்து. “க்ளோபல், தமிழ்நாடு எல்லாம் எறங்கு”, கண்டக்டர் கூவ…. அருகில் அமர்ந்திருந்த பெரியவர் இறங்குவதற்கு படிக்கட்டு வரை துணைசென்றவன் திரும்பி வந்து பார்த்தால் அமர்ந்திருந்த இருக்கை ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியிருந்தது.
அடுத்த நிறுத்தத்தில் ஒரு திருவிழாக் கூட்டம் பேருந்தை நிறைத்து இருக்கையைத் தவறவிட்டதன் பலனை உணரவைக்கத் துவங்கியது. அதற்கும் அடுத்த நிறுத்தத்தில் இன்னொரு புளி மூட்டைக் கும்பல் பேருந்துக்கு மேலும் பலம் சேர்க்க, சுற்றி நின்ற நாலுபேர் என்னை நெறித்துக் கொண்டிருந்தார்கள்.
“சார், கொஞ்சம் வழிவிடுங்க, ப்ளீஸ்! ஓரமா போய் நின்னுக்கறேன்”
“உன் பையை எடுத்து யார்ட்டனா குடு நைனா. அத்த குட்த்தாலே நாலு ஆளுக்கு எடங்கெடைக்கும்”
“ஒரு சோழிங்கநல்லூர் வாங்குங்க”, அழகிய இளமஞ்சள் கரம் என் பக்கம் நீண்டது.
“ஓரமாய்ப் போய் நின்னுக்கறேன்” திட்டத்தை அவசர அவசரமாகத் தள்ளிப் போட்டுவிட்டு நீட்டப்பட்ட நோட்டை வாங்க்கிக் கொண்டேன். நான் சரியாகப் பேருந்தின் மத்தியில் பிதுங்கிக் கொண்டிருந்தேன். இன்னொரு “பாஸ்” செய்தால்தான் சோழிங்கநல்லூரை வாங்குவது சாத்தியம்.
“கொஞ்சம் ஒரு சோழிங்கநல்லூர் வாங்குங்க”
“சார், கொஞ்சம் ஒரு சோழிங்கநல்லூர் வாங்குங்க”
“எக்ஸ்க்யூஸ்மி”
“??”
“ஒரு சோழிங்கநல்லூர்”
“கையே வெள்ள எட்க்க முட்லபா”
மகளிர் இருக்கைகள் இருந்த பக்கத்தில் கண்டக்டருக்கு மூன்று இருக்கை இடைவெளியில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணின் முகம் தெரிந்தது. அவள் என்னையே நிலைக்குத்திய பார்வை பார்க்க, “மேடம், ஒரு சோழிங்கநல்லூர் பாஸ் பண்ணுங்க”.
பதிலில்லை. ஆனால், அதே நிலைகுத்திய பார்வை. “கொஞ்சம், பாஸ் பண்ணுங்க ப்ளீஸ். ஒரு சோழிங்கநல்லூர்”. மீண்டும் அதே பதிலில்லாப் பதில். மீண்டும் வேண்டுதல், மீண்டும் கேளாமை. நான் சொல்வதை அப்பெண்மணியை கேட்க வைத்துவிட வேண்டும் என திடீர் உத்வேகப் பிடிவாதம் எனக்கு வந்தது. அவள் முகத்திற்கு நேரே பணத்தை நீட்டி, மேடம், மேடம் எனக் கத்தி, மேலும் ஒரு அரை டஜன் வித்தியாசமான முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டு, “என்னப் பொம்பளடா இவ”, என பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டேன்.
திடீரென ஒரு கை என் கையிலிருந்து பணத்தைப் பிடுங்கி ஓரிரு நிமிடங்களில் சோழிங்கநல்லூரை என் கையில் திணித்தது. இப்போதும் அப்பெண் என்பக்கம் அதே முறைத்தல் பார்வையை வீசிக்கொண்டிருந்தாள். இருபதுகளின் மத்தியில் மாநிறத்தில் மெல்லிசான களைகூடின வசீகர முகம். என்ன பிரச்னை உனக்கு என ஒரு அசட்டையாக வெறுப்புப் பார்வையை நான் பதிலுக்குத் தந்துவிட்டுத் திரும்பிக் கொண்டேன்.
சோழிங்கநல்லூர் ஜங்ஷனில் கொஞ்சம் கூட்டம் கரைந்து மூச்சு விட அனுமதித்தது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கவேண்டியதுதான். இப்போது அந்த முறைப்புப் பெண்மணியைத் திரும்பிப் பார்த்தேன். இது சினிமாவாக இருந்திருந்தால், என் அதிர்ச்சியை வெளிப்படுத்த அப்பேருந்து ‘சடன்’ ப்ரேக் அடித்து ”ஹ்ஹ்ஹ்ர்ர்ர்ர்ரீஈஈஈஈ”, என ஓலமிட்டு ஓசையுடன் நின்றிருக்கவேண்டும். அவள் நின்ற திருக்கோலம் இப்போதுதான் முழுசாய்த் தெரிந்தது. பச்சிளம் கைக்குழந்தை ஒன்றைக் கையில் ஏந்திக் கொண்டு நின்றிருந்தாள். தன் முகத்தால் அவள் மார்பை முட்டிக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை. சேலையை விலக்கிவிட்டு குழந்தையை உள்நுழைத்து விட்டாள் அவள்.
பிள்ளையைப் பெற்றவர்கள், பெறப்போகிறவர்கள், பெற்றுக் கொண்டிருக்கக்கூடாதவர்கள், பெற்றுக் கொள்ளக்கூடாதவர்கள் என அத்தனை வகைப் பெண்களும் அமர்ந்த திருக்கோலத்தில் அதைத் தரிசித்துக் கொண்டேயிருந்தார்கள்.
image credit : usefilm.com

Apr 4, 2012

பார்வை - நிமிஷக்கதை


மேடவாக்கம் வந்து வலப்புறம் திரும்பி நின்றது T51 பேருந்து.
“மேடவாக்கம் வந்து பஸ்சு கெழக்கால திரும்பி நிக்கும். அதுக்கு ரெண்டு மூணு ஸ்டாப்பு தாண்டுனா வரும் தம்பி”, ஏதும் புலப்படாமலும் கூட ஜன்னலுக்கு வெளியே கண்கள் சுருக்கிப் பார்த்துக்கொண்டு சொன்னார் அந்தப் பெரியவர்.
சென்னை வந்து சேர்ந்த இந்த இருபது ஆண்டுகளில் முதன்முறையாக திசை சொல்லிப் பேசும் ஒருவரைப் பார்க்கிறான் அவன்.
இதற்கு மேல் சோழிங்கநல்லூர் வரை எந்தத் திருப்பமும் இல்லை. அங்கேயும் பேருந்து இடப்பக்கம்தான் திரும்பும். கிழக்கு என்றால்…. அது நமக்கு வங்காள விரிகுடா இருக்கும் திசை. இப்படியே நேரே போய் ஓ.எம்.ஆர். தாண்டி ஈ.சி.ஆர். இணைப்புசாலை கடந்தால் வங்காள விரிகுடா. நாம் இப்போது கடற்கரை நோக்கிய திசையில்தான் இருக்கிறோம். ஆக, இப்போது பேருந்து கிழக்கால் திரும்பி நின்றிருக்கிறது.  எல்லாவற்றையும் யோசித்துக் கணக்குப் போட்டு முடித்த பின் கிழக்குத் திசை புலப்பட்டது.
“நீங்க சொன்ன மேடவாக்கம் பஸ் ஸ்டாப் வந்துடுச்சிங்க, ஆனா எனக்கு தமிழ்நாடு ஆஸ்பத்திரி சரியாத் தெரியாது”, கடந்த ஒரு வருடமாக அந்தத் தடத்தில் பயணம் செய்தும் தமிழ்நாடு ஆஸ்பத்திரியைப் பார்த்ததில்லை அவன்.
‘இப்ப அந்த ஹாஸ்பிடலுக்கு குளோபல் ஹாஸ்பிடல்’னு பேர் சார். இங்கருந்து ரெண்டாவது ஸ்டாப்”, பின்சீட்டுக்காரன் சொன்னான்.
மேலும் ஒரு நிறுத்தம் கடந்ததும் பெரியவர் எழுந்துவிட்டார்.  வீராவேசம் வந்தவர் போல் ஏனோ கை வீசியவண்ணம் தட்டுத் தடுமாறி படிக்கட்டு அருகே சென்று நின்று கொண்டு “தமிழ்நாடு ஆஸ்பத்திரி வந்தா சொல்லுப்பா” யாரையும் பார்க்காமல் ஆனால் உத்தேசமாக எல்லோரையும் பார்த்தவாறு சொன்னார்.
”தோ, வர்ற ஸ்டாப்தான் பெர்சு. கீய வுய்ந்துறாம நில்லு”, முன்பக்கமிருந்து குரல் கேட்டது. அவன் எழுந்தான். ஆபீசுக்கு ஏற்கெனவே நேரமாகிவிட்டது, ஆனது ஆச்சு இன்று ஒரு நல்ல காரியம் செய்ததாக இருக்கட்டும் என, ”பெரியவரே, அவ்ளோ தூரம் உள்ள நடக்கணுமே. நா வேணா உங்களோடா ஆஸ்பத்திரி வரை வரட்டா?”
ப்ரேக் அடித்து நின்றது பேருந்து. “க்ளோபல், தமிழ்நாடு எல்லாம் எறங்கு”, கண்டக்டர் கூவ….
“வேணாம் கண்ணு. தொண எதுர்பாத்து நிக்குற வய்சில்ல எனுக்கு. போறுது தனியாத்தானே போவுணும்”, இறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டார்.
image credit – Antigua Daily Photo

Apr 3, 2012

நிமிஷக்கதை - லச்சுமி


இந்தக் கதையை தன் தளத்தில் பதிப்பித்து கௌரவம் தந்த நட்பாஸ் அவர்களுக்கு நன்றி.
”ராகவன், செக் புக் எடுத்துக்கிட்டு ரூமுக்கு வாங்க”
தனக்கானத் தனி அறையில் பெரியதொரு மேஜையின் பின்னால் அமர்ந்திருந்தார் மேனேஜர். வலது இடது புறங்களில் ட்ரேக்களில் ஃபைல்கள் தேங்கிக் கிடந்தன.
”மன்த் எண்ட் வந்துடுச்சி. நெக்ஸ்ட் மன்த் பெட்டி எக்ஸ்பென்சஸுக்கு கேஷ் ட்ரா பண்ணி வெச்சுக்கலாமே”
“பண்ணிடலாம் சார்”
”ஆபீஸ் எக்ஸ்பென்சஸ் ஃபோர்காஸ்ட் போட்டீங்களா?”
“இந்த மாசம் எதும் மாற்றம் இல்லை சார். போன மாசம் போலவே ஒன் பாய்ண்ட் டூ வேணும். நம்ம கிட்ட க்ளோஸ் ஒரு ஃபைவ் தவுசண்ட் இருக்கும். எனிவே, ஸேஃபா ஒன் பாய்ண்ட் டூ ஃபைவ் எடுத்துக்கலாம்”
“ஓகே, செக் எழுதுங்க. சீனியர் நாளைக்கு ஊருக்குப் போறாரு. இன்னைக்கே பாத்து செக்ல ஸைன் வாங்கிடுங்க”
செக் எழுதி மேனேஜர் ஒப்பம் வாங்கிக் கொண்டு, மேனேஜர் பார்த்து முடித்த தனக்கான ஃபைல்களை அவர் மேஜையிலிருந்து அள்ளிக்கொண்டு தன் இருக்கைக்குத் திரும்பினான் ராகவன்.
“க்ரிஷ்ணா, கொஞ்சம் மேல வர்றியா?”
இருபது செகண்ட்களில் க்ரிஷ்ணன் எதிரில் ப்ரசன்னமானான்.
“என்னய்யா? படியேறி வருவியா? இல்ல காத்துல பறந்து வருவியா?”, வழக்கமான பதிலற்ற சிரிப்பு சிரித்தான் க்ரிஷ்ணன்.
“இந்தா செக்கு, சீனியர் கிட்ட ஸைன் வாங்கிக்கோ. ராபர்ட்டை அழைச்சிட்டு பேங்க் போயி, ஒண்ணேகால் லட்சம், ட்ரா பண்ணிட்டு வந்துடு. சீக்கிரம் போயிட்டு வந்துடு, நான் இன்னைக்கு நேரத்துக்குப் போலாம்னு பாக்கறேன்”
அரை மணியில் கேஷ் செஸ்டில் ஒண்ணேகால் லட்சம் தஞ்சம் புகுந்தது.
ஃபோன் அடித்தது.
“சொல்லு பத்து”
“என்னங்க, சின்னவனுக்கு ஏதோ ஸ்கூல்ல ஃபேன்சி ஷோ’வாம்”
ஃபேன்சி ட்ரஸ் காம்படிஷனா?”
“ஆமாமா, அதுதான். நாளைக்குள்ள ஒரு ஐநூறு ரூபா கட்டணுமாம். வரும்போது ட்ரா பண்ணிட்டு வந்துடுங்க”
“பேங்க்’ல நாப்பத்தி ரெண்டு ரூபாதான் இருக்கு பத்து. கைலயும் நூத்தம்பதைத் தாண்டாது. உன்கிட்ட ஏதும் இல்லையா?”
“அதான் போனவாரம் மொத்தமா இருந்ததெல்லாம் வழிச்சித்தானே எடுத்துத் தந்தேன்”
”ரெண்டு நாள் பொறுக்கச் சொல்லேன் அவனை. சம்பளம் வந்துடும்”
“அதெல்லாம் பேசிட்டேன். அவன் நாளைக்குன்னா நாளைக்குன்னு ஒத்தைக் கால்ல நிக்கறான்”
“சரி சரி. இரு யார்கிட்டயாவது கேட்டு வாங்கிட்டு வர்றேன். கட் பண்ணு”
நண்பர்கள் சீனு, மனோஜ், ரவி – மூன்று பேருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பினான். “ஐநூறு ரூபாய் கிடைக்குமா? நான்கு நாட்களில் திருப்பித் தருகிறேன்”
--------------0000000000----------------
இந்தக் கதைக்கு லைவ்லிப்ளானட் தளத்தில் வந்த சில சுவாரசிய பின்னூட்டங்கள் இங்கே
image credit:  business.rediff.com

Sep 14, 2011

நிமிஷக் கதைகள்

நேற்று மதியம் அலுவலகம் போகுமுன் தெருமுனைக் கடையில் லிம்கா குடிக்க வண்டியை நிறுத்தினேன்.  அந்தக் கடைப் பையனை எப்போதும்  கவனித்திருக்கிறேன். ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பான். நாம் கேட்பதை இரண்டு முறைகள் திருப்பிச் சொன்னால்தான் கேட்டது கேட்டதாகக் கிடைக்கும். வாங்கின பொருட்களுக்கு விலை சரியாகப் போட்டிருக்கிறானா என சரிபார்த்துக் கொள்ளுதல் எப்போதும் நலம். நாற்பது ரூபாயை பதினாலு என்றும் சொல்வான். பத்து ரூபாயை ஐம்பத்தி நாலு என்றும் சொல்வான்.

நான் லிம்கா அருந்திக் கொண்டிருந்தபோது சொல்லிவைத்தாற்போல் அந்தப் பெரியவருக்கு இரண்டு கிலோ அரிசியை எழுபத்து நாலு என்றான். 

"ஒரு கிலோ எவ்ளோ தம்பி?"

"முப்பத்தி ஆறு"

"அப்போ ரெண்டு கிலோ?"

"ஓ! சாரி சார்! இந்தாங்க ரெண்டு ரூபா!"

கால்குலேட்டர், கம்ப்யூட்டர்கள் இல்லாமல் கணக்குப் போட்ட  பழங்கதைகள் பேசத் தொடங்கிவிட்டார் பெரியவர்.

பதினைந்து வருடங்களுக்கு முன் மூலக்கடை ஃ பாத்திமா ஸ்டோரில் பார்த்த கணக்கு என்ற நபர் நினைவிற்கு வந்தார். அங்கே அடித்த ஸ்பார்க்கில் எழுதியதுதான் "சிவலிங்கம் ஸ்டோர்ஸ்" என்ற இந்த நிமிஷக் கதை. 

நட்பாஸ் அவர்களின் லைவ்லி பிளானெட் தளத்தில், அவர் தந்த ஊக்கம் மற்றும் அனுமதி ஆகியவை துணை கொண்டு கடந்த சில வாரங்களாக நிமிஷக் கதைகள் எனப்படும் flash fiction வகைக் கதைகளை முயற்சித்து வருகிறேன். நான் எழுதும் நிமிஷக் கதைகளுக்குப் பெரிய மனது பண்ணி தன் தளத்தில் இடம் தரும் நட்பாஸ் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Flash fiction பற்றி விக்கி:  http://en.wikipedia.org/wiki/Flash_fiction
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...