Showing posts with label நீதானே என் பொன் வசந்தம். Show all posts
Showing posts with label நீதானே என் பொன் வசந்தம். Show all posts

Sep 23, 2012

டியர் ராஜா சார்....

டியர் ராஜா சார்,

உங்க நீஎபொவ பாட்டு கேட்டுக்கிட்டே இருக்கேன். என்னோடு வா வா, காற்றைக் கொஞ்சம், முதல்முறை பார்த்த, சற்றுமுன்பு’ன்னு என் மனசுக்கு நெருக்கமான பாடல்கள் பத்தியெல்லாம் பத்தி பத்தியா சொல்லிக்கிட்டு சுத்தி வளைச்சி, நீட்டிமுழக்க விரும்பலை.

யுவன் தன் ம்யூசிக்’ல பாடும்போதே ஓடற வண்டியில இருந்து குதிக்கறவன் நான். உங்களுக்கு யுவன் பாடகரா இல்லையான்னு தெரியாதா? அவருக்கு எதுக்கு ரெண்டு பாட்டைத் தூக்கித் தந்தீங்க? காலத்தின் கட்டாயமா? அதுக்கு நீங்களும் அடிமையா? முடியலை சார்.

அடுத்து, உங்க குரலுக்குன்னு கோடானுகோடி ரசிகர்கள் இருக்காங்கன்றது இந்த உலகம் அறிஞ்ச விஷயம். ஆனா, வானம் மெல்ல மாதிரியான க்ளாஸ் ட்யூனை நீங்க பாட நினைச்சது ஏன்? எதுக்கு எட்டாத ரேஞ்ச் பத்தியெல்லாம் கவலைப்படாம அந்தப் பாட்டை நீங்க பாடிக் கெடுத்தீங்க. யெஸ், ஐ ரிப்பீட். எதுக்காக அந்தப் பாட்டை நீங்க பாடிக் கெடுத்தீங்க?

உங்க கொலைவெறி ரசிகர்கள் நீங்க படத்துக்கு ஒரு பாட்டு பாடியே ஆகணும்னு நெனைக்கறாங்க, நிஜம்தான். அதுக்கு நீங்களும் செவி சாய்க்கணும்னு நெனைச்சீங்கன்னா ”என்னைத் தாலாட்ட வருவாளா” பாட்டை கேஸட்ல எக்ஸ்ட்ராவா பாடினாப்ல, ”வானம் மெல்ல” பாட்டை ஹரிஹரனுக்கோ ஹரிசரணுக்கோ தந்துட்டு நீங்க எக்ஸ்ட்ராவா பாடி கேஸட்ல சேத்துருக்கலாம். 

எட்டு ட்யூன் போட்டுட்டு அதுல நாலு ட்யூனை மட்டும் என்னைக் கேக்க விடற நீங்க..... விதவிதமா விருந்து சமைச்சிட்டு அதைப் பாதிக்குப் பாதி தின்னவிடாம செஞ்சாப் போல எனக்குத் தோணுது.

இந்த காலத்தின் கட்டாயத்தின் பேர்லயும், கொலைவெறி ரசிகர்களுக்காகவும் செய்யப்படற காம்ப்ரமைஸ்கள் எனக்குப் பிடிக்கலை சார். என்னைப் போல லட்சக்கணக்கான ரசிகர்கள் இதே கருத்தோட இருப்பாங்கன்னு நான் வலுவா நம்பறேன்.

இப்பவும் ஒண்ணும் மோசமில்லை. நீஎபொவ படத்துல நாலே பாட்டுதான்னு நாங்க எங்களைச் சமாதானப்படுத்திக்கறோம், விடுங்க.

அன்புடன்,
உங்கள் ரசிகன்

Sep 5, 2012

நீதானே என் பொன் வசந்தம்

பகுஜன் சமாஜ் எம்.பி ஒருத்தரும் சமாஜ்வாதி எம்.பி ஒருத்தரும் நம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பார்லிமெண்டில் கட்டிப்புரளும் தனமாய் சண்டைபோடும் இதே பொன்வேளையில் அதற்கு சற்றும் சளைத்தது அல்ல எனும் தனமாய் ”டமில்”.......... ம்ம்ம்ம்ம்க்க்க்கும்....  மன்னிக்கவும் ”தமிழ்” இணையத்தில் ராஜாவின் தீவிர ரசிகர்களுக்கும் ராஜாவின் அ’ரசிகர்களுக்கும் இடையே குடுமிப்பிடி நடந்து கொண்டிருக்கிறது. 


கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஜீவா - சமந்தா நடித்த “நீதானே என் பொன்வசந்தம்” (சுருக்கமாக நீஎபொவ) படத்திற்கு இளையராஜா இசை. இது அரதப் பழைய சேதி.

இதோ இப்போது இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த க்ஷணத்தில் இரண்டாவது முறையாக நீஎபொவ பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். கேட்கக் கேட்க பாடல்கள் பற்றி என் மனதில் ஓடுவதை எழுதுகிறேன். இது என் இந்த க்ஷண சிந்தையோட்டம். அது காலம் மாற தானும் மாறலாம்.  ரசிக / அரசிகர் எவராயினும்.... போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் என்னைச் சேரட்டும். யாரும் என் குடும்பத்தை சந்திக்கு இழுக்க வேண்டாம்.

சாய்ந்து சாய்ந்து

யுவன் பாடினார் என்ற ஒரே காரணத்திற்காக புறந்தள்ள முடியாத பாடல். நல்ல மயக்கும் ட்யூன். அந்த ஆரம்ப கிடார் இசையும், இடையில் BGM'ல் வரும் பியானோவின் இனிமையும் நம்மை எங்கோ கொண்டு செல்கின்றன. யுவனுக்கு இழுத்த இழுப்பிற்குக் குரல் வரவில்லை என்பதறிந்தும் இத்தனை நல்ல ட்யூனை அவருக்கு இந்தப் பாடலை ராஜா தந்தது “காலத்தின் கட்டாயம்”, வேறென்ன சொல்ல.

நரேஷ் ஐயர் இந்தப் பாடலுக்கு apt’ஆக இருந்திருப்பாரோ?

காற்றைக் கொஞ்சம்

எப்படிப்பட்ட ட்யூனாக இருந்தாலும் அந்தப் பாடலைத் தூக்கி நிறுத்தும் திறன் எஸ்பிபி’க்கு அடுத்து ஒருத்தருக்கு உண்டு என்றால், என்னைப் பொருத்தமட்டில் அது “கார்த்திக்” தான். இப்படிப்பட்ட நல்ல ட்யூன் கிடைத்து விட்டால் சொல்லவும் வேண்டுமோ?

ஒரு துள்ளலான நல்ல மெலடி. யோசனை ஏதுமின்றி நம் மனதில் எளிதில் ஒட்டிக் கொள்கிறது பாடல். பெரிய குறை இல்லை என்றாலும் ரொம்பவே மெனக்கெடாத சாதாரண பாடல்வரிகள். (உம்: நேற்று இரவு கனவில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே :) )

முதன்முறை பார்த்த ஞாபகம்

இந்த ஆல்பத்தில் எனக்கு ரொம்ப பிடித்த பாடல். ட்யூனில் ராஜா கலக்கியிருக்கிறார் என்றால், ”மேரீ ஆவாஸ் சுனோ” புகழ் சுனிதி சௌஹான் பாடின விதத்தில் கிறக்குகிறார் நம்மை. தமிழ் தெரியாத ஒரு பெண்ணை ழ,ள,ல,ண,ன’களை அட்சரம் பிசகாமல் உச்சரிக்க வைக்க ராஜாவைத் தவிர வேறு எவனால் முடியும்.

ரொம்ப சிரமமான “ஹைநோட்” ட்யூன் எனக் கேட்கையில் புரிகிறது. அநாயசமாகப் பாடியிருக்கிறார் சுனிதி. 

வானம் மெல்லக் கீழிறங்கி

சிம்ஃபனி’த்தனமாய்த் உள்ளே அழைக்கிறது ப்ரீலூட். ஆல்பத்தின் பெஸ்ட் மெலடி இதுதான். முதல் BGM ராஜாங்கம். கண்கள் மூடிக் கேட்டால் கிறக்கும் நோட். உருகிப்போகலாம்.

ஆகச்சிறந்த மெலடி ஆயினும் என் லிஸ்டில் மேலிடம் இந்தப் பாடலுக்குக் கொடுக்காத காரணம் இந்தப் பாடலையும் தேர்ந்த ஒரு பாடகரிடம் தந்திருக்கலாம் ராஜா என்பதுவே. அவருக்கு சில ரேஞ்ச்களைத் தொட முடியாதது தெளிவாய்த் தெரிகிறது. கார்த்திக் சரியாக இருந்திருப்பார்.

புடிக்கல மாமு

படத்தின் ஐட்டம் நம்பராக இது இருக்கக்கூடும். துள்ளலாக நன்றாகவே இருக்கிறது. இளைஞர்களின் டெம்பரரி தேசியகீதம் ஆகவேண்டிய பாடல் என மனதில் கொண்டு போடப்பட்ட பாடலாக இருக்கலாம். ஆனால் அந்த அளவு ரீச் இருக்குமா எனச் சொல்லமுடியவில்லை. எனினும், விஷுவலில் கெத்து காட்டினால் பாடல் சூப்பர் ஹிட் ஆகக்கூடும். 

என்னோடு வா வா

டிபிக்கல் ராஜா ட்யூன். சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஹெட்செட்டைக் காதில் மாட்டிக் கொண்டு நீங்கள் கேட்க வேண்டியதுதான். \உங்களைக் காற்றில் மிதக்க வைக்கும் பொறுப்பை ராஜாவும் கார்த்திக்கும் எடுத்துக் கொள்கிறார்கள்.  கேட்கக் கேட்க உடலெல்லாம் மின்சாரம் பரவுகிறது எனக்கு.

ராஜா ஈஸ் க்ரேட். கார்த்தில் ஈஸ் சூப்பர் சூப்பர் க்ரேட்.

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா

யுவன் பாடியிருக்கிறார். என்னைக் கேட்கவே விடவில்லை அவர். அதனால், அயாம் ஸாரி.

சற்று முன்பு பார்த்த

ரொம்பவே ஸ்லோவான ஒரு வெஸ்டர்னைஸ்ட் மெலடி. பாடியவர் பெயராக ரம்யா என்று புதுப்பெயரைப் பார்க்கிறேன். கேட்கக் கேட்கப் பிடிக்கலாம். இப்போதைக்கு நோ கமெண்ட்ஸ்.


ராஜாவின் தபேலா சத்தத்தை எதிர்பார்த்து எந்தப்பாடலிலும் காணாமல் ஏமாந்தேன். எல்லாப் பாடல்களும் மாடர்ன் ட்யூனில் ஒலிக்கின்றன.

நம்ம ஃபேவரிட் நா.முத்துக்குமார்’தான் அத்தனை பாடல்களையும் எழுதியிருக்கிறார். கேட்கக் கேட்கத்தான் வரிகளின் பின்னணி எனக்குப் புரியும். இப்போதைக்கு வரிகளில் புதிதாய் வித்தியாசமாய் எதையும் நான் கேட்கவில்லை.

கடைசியாக..... இன்றைய பாடல்களில் இருந்து எந்த வகையில் நீஎபொவ வித்யாசம்  காட்டுகிறது? ஒன்லி ஒன் சிம்பிள் திங். பாடல்களை முழுக்க முழுக்க ஆர்க்கெஸ்ட்ராவை கொண்டே சமைத்திருக்கிறார் ராஜா . கம்ப்யூட்டரின் துணை அங்கங்கே ஒப்பேற்றல்களுக்குத்தான் பயன்பட்டிருக்கிறது.

நீதானே என் பொன் வசந்தம் நல்ல இசை ரசிகர்களுக்கு ஒரு “கெத்து” ட்ரீட், சந்தேகமேயில்லை. 
Related Posts Plugin for WordPress, Blogger...