ராமநவமி'க்கு நரசிங்கபுரம் சென்றிருந்தபோது "கம்போசர் அண்ட் சிங்கர்", என்று சக பாகவத பெரியவர்களிடம் என்னை நடராஜ பாகவதர் அறிமுகம் செய்தார்.
இதென்ன வம்பாப் போச்சு என நினைத்து "அதெல்லாம் ஒண்ணுமில்லே மாமா, ஜஸ்ட் கொஞ்சம் ஸ்ருதியோட அங்கங்கே தாளம் பெசகி பாடுவேன் அவ்ளோதான். கொஞ்சம் நல்லாப் பாடற பாத்ரூம் சிங்கர்", இடுப்பிலிருந்த அங்கவஸ்திரத்தை இன்னமும் இறுக்கமாக்கிக் கொண்டு அடக்கவொடுக்கமாகப் பெரியவர்கள் முன்னிலையில் கூறிக்கொண்டேன்.
நடராஜ பாகவதர் என்னை அப்படி அறிமுகம் செய்து வைத்ததில் காரணம் இல்லாமல் இல்லை. கொஞ்சம் கொசுவத்தி சுழற்றி அது ஏன் என்று சொல்கிறேன், ஜாக்கிரதையாக என்னுடன் வாருங்கள்....
சரியாக நான்கு வருடங்களுக்கு முன் என் ஆஸ்திரேலிய மாமா தன் குடும்ப சகிதம் பாரத விஜயம் மேற்கொண்டிருந்தார். அவர் மகனும் மகளும் அங்கே ஆஸ்திரேலியாவில் "மார்கழிப் பூவே" புகழ் ஷோபா சேகர் அவர்களிடம் பல வருடங்களாக கர்நாடக சங்கீதம் கற்று வருகிறார்கள். அங்கேயே ஆஸ்திரேலிய அரங்கேற்றம் முடிந்துவிட்டிருந்தாலும் இந்த விஜயத்தில் கோவையில் ஒரு இந்திய அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு ஆகியிருந்தது. வரலாற்று நிகழ்வு என்பதால் இந்தியா முழுவதிலுமிருந்து சொந்தபந்தங்கள் நட்பு வட்டாரங்கள் என்று வண்டி கட்டிக்கொண்டு கோவை நோக்கி கும்பல் கும்பலாகப் படையெடுத்திருந்தோம்.
கோவையில் இறங்கினதும் அரங்கேற்ற அஜெண்டா என் கையில் தரப்பட்டது. அரங்கேற்றத்திற்கு கோவை கிருஷ்ணமூர்த்தி தலைமை என்றும் சிறப்பு விருந்தினராக நடராஜ பாகவதர் கலந்து கொள்ள இருக்கிறார் எனவும் சொல்லியது அஜெண்டா. நடராஜ பாகவதர் நாங்கள் நன்கு அறிந்த எங்கள் உறவினர். கோவை கிருஷ்ணமூர்த்தி அவர்களை இதுவரை நான் சந்தித்ததில்லை. அந்த அஜெண்டாவில் மிக முக்கியமாக அதன் தலைக்குமேலே என்பெயர் முதலில் இருந்தது. இதென்னடா வம்பு என அவசர அவசரமாகப் படித்தால், "கடவுள் வாழ்த்து - கிரி" என்றது அந்த அஜெண்டா. "நீ பாடறே அவ்ளோதான்", என அன்பாக மிரட்டல் உத்தரவு வந்தாயிற்று. என் அனுமதி கேட்காம நீங்க எப்படி இதெல்லாம் பண்ணலாம் என்றெல்லாம் கேட்க நேர அவகாசம் இல்லை. நமக்கு பந்தா பண்ணும் அவசியமும் இல்லை.
மறுநாள் காலையில் நிகழ்ச்சி. எனக்கு புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களும், ஆயர்பாடி மாளிகையும், குறையோன்றுமில்லையும் கொஞ்ச கொஞ்சம் தெரியும். ஆனால் ஒரு கர்நாடக சங்கீதக் கச்சேரிக்கு முன்னால் இந்தப் பாடல்கள் ஆப்ட் ஆக இருக்காதே. இரவு பதினொரு மணிவரை யோசித்தும் என்ன பாடுவது என ஒரு முடிவுக்கு வர இயலவில்லை.
"வக்ரதுண்ட மஹாகாய" பாடுங்க என என் கஸின் ஒருவன் சொல்ல, லேசாய்ப் பொறி தட்டியது. அங்கே இருந்த மற்ற கஸின்களுடன் கலந்து ஆலோசித்து எப்போதோ நான் பொழுதுபோகாத ஒரு வேளையில் போட்டு வைத்த ஒரு அம்மன் பாடல் டியூனுக்குள் அதே கஸின்கள் உதவியுடன் ஒரு விநாயகர் துதியைப் புனைந்து நுழைத்து ஒரு மணிநேரத்தில் சுமாரே சுமார் பக்காவாக ஒரு பாடல் தயார்.
மறுநாள் அப்பாடலை இரவல் வாங்கிய மெரூன் பைஜாமாவெல்லாம் அணிந்து நான் பந்தாவாக மேடைக்கு ஒரு ஓரமாய் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆளுயர மைக்கின் முன் நின்று வழக்கமான சுருதி, தாள பேதங்களுடன் பாடி முடிக்க, அந்த திருஷ்டிப் பரிகாரத்துடன் என் மாமன் மகளும் மகனும் பங்கேற்ற அந்த அரங்கேற்றம் இனிதே துவங்கியது.
என் சுயதம்பட்டம் முடிந்துவிட்டாலும், நான் கொசுவத்தி சுழற்றி இங்கே சொல்ல வந்தது என் கதையல்ல..... மேலே படியுங்கள்.
நிக் என்கிற Nicholas James Vujicic பற்றி நீங்கள் ஃபார்வர்ட் மெயில்கள் மூலம் நிறைய அறிந்திருக்கலாம் அல்லது நிக் எழுதிய "லைஃப் வித்தவுட் லிமிட்ஸ்" (Life Without Limits) புத்தகம் பற்றி குமுதத்தில் என்.சொக்கன் எழுதும் வெற்றிக்கு ஒரு புத்தகம் வாயிலாக அறிந்திருக்கலாம்.
அந்த அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய கோவை கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் நிக்'கிற்கும் ஏதும் வித்தியாசம் இல்லை. ஆம், தோற்றத்தில் நிக்'கை ஒத்தவர் கிருஷ்ணமூர்த்தி மாமா. இவரும் இரு கைகளும் இரு கால்களும் இல்லாமலேயே வாழ்க்கையில் வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டு நமக்கு இன்ஸ்பிரேஷனாக இயங்கிக் கொண்டிருப்பவர்.
அந்த அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய கோவை கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் நிக்'கிற்கும் ஏதும் வித்தியாசம் இல்லை. ஆம், தோற்றத்தில் நிக்'கை ஒத்தவர் கிருஷ்ணமூர்த்தி மாமா. இவரும் இரு கைகளும் இரு கால்களும் இல்லாமலேயே வாழ்க்கையில் வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டு நமக்கு இன்ஸ்பிரேஷனாக இயங்கிக் கொண்டிருப்பவர்.
கோவையைச் சேர்ந்த கிருஷ்ணமுர்த்தி அவர்கள், எங்கள் உறவினர் நடராஜ பாகவதரின் நெடுநாளைய நண்பர். அறுபத்தி ஐந்து வயதாகும் இவர் அருமையான கர்நாடக சங்கீதப் பாடகர். சங்கீதம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர். இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகள் ஏறி கச்சேரிகள் செய்திருப்பவர். சில வெளிநாடுகளிலும் இவர் மேடை ஏறியது உண்டு. மாநில அரசின் கலைமாமணி விருது பெற்ற பெருமை மிக்கவர்.
"நான் கடவுள்" படத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் கோவை கிருஷ்ணமூர்த்தி நடித்திருக்கிறார் என்பது உப தகவல்.
சென்ற வாரம் "விகடன் மேடை" பகுதியில் அப்துல் கலாம் அவர்கள் அளித்த கேள்வி பதில் பகுதியிலிருந்து....
"நான் கடவுள்" படத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் கோவை கிருஷ்ணமூர்த்தி நடித்திருக்கிறார் என்பது உப தகவல்.
சென்ற வாரம் "விகடன் மேடை" பகுதியில் அப்துல் கலாம் அவர்கள் அளித்த கேள்வி பதில் பகுதியிலிருந்து....
''உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வொன்றை எங்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா?''
''ஜனாதிபதியாக இருந்தபோது, ஒரு முறை நான் கோயம்புத்தூர் சென்றேன். இரவு 11 மணி அளவில் நான் பார்வையாளர்களைப் பார்த்தபோது, ஒருவர் வீல் சேரில் வந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு ஒரே ஆச்சர்யம். அவருக்கு இரண்டு கை களும் இல்லை, கால்களும் இல்லை. நான் அவரிடம், 'உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்கள் சார்... செய்கிறேன்’ என்றேன். கணீர் என்ற குரலில் அவர் சொன்னார், 'எனக்கு உங்களிடம் இருந்து ஒன்றும் வேண்டாம். நான் நன்றாகப் பாடு வேன். உங்கள் முன்பு பாடட்டுமா?’ என்று கேட்டார். 'பாடுங்கள்’ என்றேன். என்ன அருமையாகப் பாடினார் தெரியுமா? 'எந்தரோ மகானுபாவலு’ என்ற தியாகராஜ கீர்த்தனையை ஸ்ரீராகத்தில் பாடினார். அவர் பெயர் கோவை கிருஷ்ணமூர்த்தி. அவரை ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்துக் கௌரவித்து, அங்கும் பாடச் செய்தேன். அது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி!''
இப்படிப்பட்ட பெருமைமிக்கவர் முன்னிலையில் சுருதி பேதமோ அல்லது தாளப் பிசகோ.... ஏதோ ஒன்றுடன் பாடி முடித்த பெருமை மட்டுமே எனக்கு உண்டு.
.
.
.
7 comments:
அருமையான பதிவு. ஒரு இன்ஸ்பிரேஷனாக இருப்பவரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
மிகப் பிரமாதம் ஸார்!!!
வாழ்த்துகள்! அருமையான பதிவு.
@நட்பாஸ்
@ராமமூர்த்தி
@ச்சின்னப்பையன்
உங்கள் ஊக்கத்திற்கு நன்றிகள் கோடி!
அருமையான பதிவு
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களை நேராக சந்திக்கவும் அவரது முழு நேர கச்சேரியை கேட்க்கும் பாக்கியமும் எனக்கு அமைந்தது. நான் கேட்ட முதல் கர்நாடக இசை கச்சேரி அது. இன்று முதல் அதுவே எனது கடைசி நேரடி கச்சேரி கேட்க பெற்ற அனுபவமும்.
அவர் எங்கள் வீட்டுக்கு எதிரே அமைந்துள்ள கோவிலுக்கு அன்று பாட வந்திருந்தார். சிறுவனான எனக்கு மிகுந்த வியப்பாக இருந்தது அவரது உருவம். இவர் எப்படி உட்கார்ந்து பாடுவார்? உருன்டு விட மாட்டாரா என்றெல்லாம் என மனதில் கேள்விகள் எழுந்தன. சற்று நேரத்தில் அவர் பாட ஆரம்பித்தார். பெரிய இசை ஞானம் இல்லாவிட்டாலும் அந்த கச்சேரியை என்னால் ரசிக்க முடிந்தது. மிகவும் அருமையாகவும் ஜனரஞ்சகமாகவும் பாடினார். இன்றும் அவரது குரல் என் நினைவலைகளில் நீங்கமால் உள்ளது.
திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு மேல்நிலை பட்டதாரியும் ஆவார். அவர் தன் வாயால் பேனாவை பிடித்து எழுதி, தேர்வு பெற்று பட்டம் பெற்றார். He truly is an inspiration to one and all.
இவரைப் பற்றிக் படித்துளேன். இவர் முயற்சிக்கு முன்னால் நாம் ஏதுமற்றவர்கள். ஒரு ஒலி நாடாவும் வாங்கி இவர் குரலினிமையை அறிந்துள்ளேன்.
தங்கள் பதிவிலிட்ட காணொளிக்கு நன்றி!
Post a Comment