May 23, 2011

தூஸ்ரா - மேடை நாடக விமர்சனம்

சிறப்புப் பதிவர்: லலிதா ராம்

நான் நாடகங்கள் அதிகம் கண்டிராதவன். நான் பார்த்த நாடகங்கள் அனேகமாய் எஸ்.வி.சேகரின் நகைச்சுவை நாடகங்கள்தான். நுணுக்கங்கள் உணர்ந்து எழுதப்படுவதே விமர்சனம். நாடக நுணுக்கங்களுக்கும் எனக்கும் ஸ்நானப்ராப்தியே இல்லாத நிலையில், இந்தக் கட்டுரையை ஓர் பார்வையாளனின் அனுபவ பகிர்வாகப் பார்ப்பதே சரியாக இருக்கும். 

தூஸ்ரா-வின் கதைக் களன் கிரிக்கெட். கிரிக்கெட்டே தன்னைப் பற்றிப் பேசுவதாக நாடகம் தொடங்குகிறது. கணேஷ் விஸ்வநாதனின் கிரிக்கெட் உலகப்பயணமே கதையாக்கப்பட்டிருக்கிறது. கமெண்ட்ரி காலத்தில் இருந்து கிரிக்கெட்டை ரசிப்பவர்கள் கதையுடன் சுலபமாக ஒன்றலாம். வசனம் ஆங்கிலத்தில் என்ற போதும், கேட்கும்போது அந்நியமாய் படவில்லை. காட்சியின் சூழலை உருவாக்க முன்னர் பதிவுசெய்த காட்சிகளை பின்னணியாக ப்ரொஜெகட்ரில் ஓடவிடுவதை இன்றுதான் முதலில் பார்த்தேன். சிறப்பாகச் செய்துள்ளனர். காட்சி மாறும் போது இடம்பெறும் இசையும் சிறப்பாக அமைந்துள்ளது. 
ஆனந்த் ராகவ்


முதல் காட்சி கணேஷின் தந்தையும், தாயும் பேசிக்கொள்வதில் தொடங்குகிறது. கணேஷின் தந்தையாக ஆனந்த் ராகவின் நடிப்பு ஏனோ எனக்கு சோ-வின் டயலாக் டெலிவரியை நினைவுறுத்தியது. ஆனந்தை எனக்கு எழுத்தாளராகத்தான் தெரியும். அவருக்குள் இருக்கும் நடிகரை இன்றுதான் அறிந்தேன். கிரிக்கெட் நுணுக்கங்களை விவரிக்கும் வசனங்களை அனுபவித்து எழுதியிருக்கிறார். அவர் பேச்சிலும் அது தெளிவாக வெளிப்பட்டது. கணேஷின் தாயார் பல நாடகங்களில் நாம் கண்டிருக்கக்கூடிய டிபிகல் தாயார். நகைச்சுவைக்காக சற்றே அதீதப் படுத்தப்பட்டாலும் நெருடலாக அமையாத பாத்திரம்.  ( உதாரணம்: “பௌலரை பேட்டிங் பண்ண சொல்றாங்க, ஆனால் பேட்ஸ்மனை பௌலிங் போடச் சொல்றதில்ல”). ஐ.பி.எல் போன்றதொரு லீகைத் தொடங்க, தொழிலதிபர்கள் கிரிக்கெட் வாரியத் தலைவருடன் பேசும் காட்சியில் தெரிந்த கச்சிதம் முதல் காட்சியிலும் இருந்திருக்கலாம். “கிரிக்கெட் விளையாடுவது ஹாக்கி, ஃபுட்பால் மாதிரி அல்ல. இதில் நுட்பமான திட்டங்கள் பல உண்டு.”, என்பது போன்ற அவசியமற்ற ஒப்பீட்டையும் தவிர்த்திருக்கலாம்.  



நாடகம் முழுவதும் நகைச்சுவை இழையால் நிரப்ப ஆசிரியர் முனைந்து முயன்றுள்ளார். நிறைய காட்சிகளில் வெற்றியும் பெற்றுள்ளார். குறிப்பாக பி.சி.சி.ஐ சேர்மனாக நடித்த அரசியல்வாதி வரும் போதெல்லாம் அரங்கில் சிரிப்பலை பரவியது. கிரிக்கெட் வாரியத்தை தோசைக்கடை அனாலஜியில் விளக்கிய இடமும், பங்களதேஷின் பெயரை மறந்து, ஞாபகம் வரவேண்டி அதைப் பற்றி விவரித்த விதமும் படு பிரமாதம். நிறைய பணத்தைப் பார்த்து, “நான் டெலிகாம் மினிஸ்டர் இல்லை”, போன்ற பஞ்ச் லயாக் இடங்களில் அவரது டைமிங் கச்சிதமாய் அமைந்திருந்தது. ஒரே குறை அந்தப் பாத்திரத்தை வடக்கிந்தியர் என்று கூறியிருப்பது.  ‘ராகவன்’ என்ற பெயரை உச்சரிப்பதில் தொடங்கி, அவர் பேசும் ஆங்கிலத்தில் வடக்கிந்தியத் தாக்கம் சுத்தமாக இல்லை. தென்னிந்திய அமைச்சர் என்று கூறியிருந்தாலும் காட்சிக்கு கேடு ஏதும் வந்திருக்காது என்றே தோன்றியது. 

கிரிக்கெட் ரசிகராகத் தோன்றிவரின் நடிப்பே நாடகத்தின் சிறந்ததாக எனக்குப் பட்டது. புள்ளி விவரங்களை எடுத்து விடுவதாகட்டும், ரத்தத்தில் வரைந்ததை விவரிப்பதாகட்டும், ஹீரோ தோற்கும்போது பொங்கி எழும் காட்சியிலாகட்டும் அந்த இளைஞரின் நடிப்பு பாசாங்கற்று, பிரமாதமாய் வெளிப்பட்டது.  

நடுவில் ஒரு காட்சியில் கிர்மானி விடியோவில் பேசுகிறார். பார்வையாளர்களின் கவனத்தைக் கவர இது நல்ல உத்திதான் என்ற போதும், அந்தக் காட்சியில் ஏனோ ஏகப்பட்ட இரைச்சல். அவர் கேட்கும் கேள்விக்கு கதாநாயகனின் பதில் மிகமிகத் தட்டையாய் இருப்பது துரதிர்ஷ்டம்.  

அவுட் என்று தெரிந்தும் அம்பயர் கொடுக்காததால் தொடர்ந்து ஆடிய மகனோடு தந்தை விவாதிக்கும் காட்சியில் நிறைய கேவலுடன் ஆனந்த் ராகவ் பேசியிருக்கிறார். அந்தக் காலத்தில் அவுட் என்றால் அம்பயர் கொடுக்காவிட்டாலும் ப்ளேயர்கள் கிரீஸை விட்டுக் கிளம்பியது போலவும், இன்றைய ஆட்டக்காரர்கள்தான் ‘வேல்யூஸ்’ ஏதுமின்றி ஆடுவது போலவும் சித்தரிக்கப்பட்டிருப்பது சற்றே செயற்கையாக அமைந்திருந்தது. அன்றும், இன்றும், என்றும் மிக சொற்பமானவர்களே அவுட் ஆன அடுத்த நொடி அம்பயருக்கு காத்திருக்காமல் வெளியேறுவார்கள். இதற்காக தந்தை காட்சியின் முடிவில் உடைந்து அழுவது கொஞ்சம் அதீதமென்றால், தந்தை அழுவதைப் பார்த்து மகனும் அழுவது ரொம்ப அதீதம். இந்தக் காட்சியும், மகனுக்கு ஷூ வாங்க வேண்டி தன்னிடம் இருக்கும் ஒரே தங்கச் சங்கிலியை விற்பது போன்ற சம்பவங்களும் ஏனோ நான் சிறு வயதில் பார்த்த செவ்வாய்கிழமை தூர்தர்ஷன் நாடகங்களை ஞாபகப்படுத்தின. குடிக்கமாட்டேன் என்று தந்தையிடம் வாக்கு கொடுத்திருந்தவன், கடைசியில் ஒய்னை குடிப்பது போல காட்சியமைத்து, அவன் புக்கிகளிடம் விலை போவதை வசனமின்றி உணர்த்தியது போன்ற subtle காட்சிகளாகவே மற்ற காட்சிகளையும் அமைத்திருக்கலாம்.

கதாநாயகன் வரும் காட்சிகளில் முக்கால்வாசி நேரம் வேறு யாராவது பேசுகின்றனர். மௌனமாக இருக்கும் போதெல்லாம் ஹீரோவின் முகத்தில் ஒரு சங்கடப் புன்னகை தவழ்கிறது. தான் பேசாத போதும் காட்சியில் நடித்தாக வேண்டுமென்பதை அவர் உணரவேண்டும். தன் கேப்டன் குடித்துவிட்டுப் புலம்பும் போதும், அப்பா கோபப்படும் போதும்,  ரசிகன் உணர்ச்சிவசப்படும் போதும், புக்கி தன்னை விலை பேசும் போதும் ஒரே மாதிரியான பாவத்தை வெளிப்படுத்துகிறார்.  

தீவிர கிரிக்கெட் ரசிகனான எனக்கு, 1983-ல் ஸ்ரீகாந்த் அடித்த 38-ஐ 37 என்றது, இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் மாட்ச் கமெண்ட்ரிக்காக பாதி ராத்திரியில் விழித்தது (வெஸ்ட் இண்டீஸ் என்றால் சரியாக இருக்கும்), ஃபீல்டரை ஷார்ட் மிட் விக்கெட்டுக்கு போகச் சொல்லிய பின் ‘பீச்சே பீச்சே’ என்று டீப் மிட் விக்கெட் ஃபீல்டருக்குச் சொல்வது போல அணித் தலைவன் அர்ஜுன் காட்டிய பாவங்கள், போன்ற சில இடங்கள் நெருடலாக அமைந்தன. (இவை எல்லாம் nit-picking என்றறிவேன். ஆனந்த் ராகவ் மன்னிப்பாராக.) 


நன்றி: http://www.flickr.com/photos/shande/

மொத்தத்தில் நாடகம் சற்றே நீளமென்றாலும் அலுப்பு தட்டவில்லை. 2 மணி நேரத்தை 1.30 மணி நேரமாக்கி, கதாநாயகனின் நடிப்பையும் மேம்படுத்தினால் அடுத்த முறை நாடகம் அரங்கேறும் போது இன்னும் பல பாராட்டுகளைப் பெறும்.


_________________


லலிதா ராமின் வலைமனைகள்: கமகம் / கிரிக்கெட் தவிர

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...