இத்தனை நாட்களாக நான் நம் டிவிட்டர் நண்பர் என் சொக்கன் அவர்களின் கார்காலம்என்ற தொடர்கதையைப் படிப்பதை ஏன் தவிர்த்தேன் என்று வியப்பாக இருக்கிறது. ஒரு சமயம் அவருடன் அன்றாடம், நிமிடத்துக்கு நிமிடம் டிவிட்டரில் தொடர்பில் இருப்பதால் அவரை ஒரு இளையராஜா ரசிகராக, புத்தகங்களின் ஆராதகராக நினைக்கத் தோன்றுகிறதே தவிர, அவரை ஒரு இலக்கியவாதியாக என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இதை இப்போது படித்துக் கொண்டிருந்தால், சொக்கனும் இந்த வரிகளை ஒரு மெல்லிய புன்னகையோடு கடந்து செல்வார் என்று தோன்றுகிறது- அவருக்கு தான் ஒரு இலக்கியவாதி என்ற பாவனை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால் அப்படி அவர் தன்னை நினைத்துக் கொண்டால் அதில் தவறிருப்பதாகச் சொல்ல முடியாது. டிவிட்டரில் உள்ள ஒவ்வொருத்தரும் இலக்கியவாதிதான் என்பதைத் தவிர வேறு ஒரு வலுவான காரணமும் எனக்குத் தோன்றுகிறது. அதைச் சொன்னால் நீங்கள் எல்லாரும் என்னை அடிக்க வருவீர்கள்.
சொக்கனின் கார்காலம் படிக்கும்போது எனக்கு முதலில் வண்ணதாசனின் "போர்த்துக் கொள்ளுதல்" என்ற கதை நினைவுக்கு வந்தது. வண்ணதாசன் தன் கதையை ஏறத்தாழ முழுதும் சரசு என்ற பாத்திரத்தின் பார்வையில் எழுதியிருப்பார். வண்ணதாசனின் அவன் என்ற பெயர் சொல்லப்படாத பாத்திரம், சொக்கனின் கதையில் அரவிந்தனாகப் பேசுகிறதோ என்றுகூட நினைத்தேன். சரசு வெளிப்படுத்தும் உணர்வுகளைச் சொக்கனின் செல்வி தன்னுள் பொதித்து வைத்திருக்கிறாள். அவள் அரவிந்தனுக்கு அறிய முடியாத புதிராகவே இருக்கிறாள். ஆனால் சரசுவை அலட்சியப்படுத்தும், சரசுவின் உணர்வுகளில் அக்கறை காட்டாத அந்த அவன், அவனும் இதயம் உள்ளவன்தான். அவனால் தன் உணர்வுகளைப் பேச முடிந்திருந்தால் அவனும் அரவிந்தன் மாதிரி பேசியிருப்பானோ என்று தோன்றுகிறது.
போர்த்துக் கொள்ளுதலைப் படித்த காரணத்தால், எனக்கு கார்காலத்தில் அதன் எதிரொலிகளை நினைவு கூர்ந்து ரசிக்க முடிந்தது. வண்ணதாசனின் சிறுகதையில் வந்தவர்களின் வாழ்வின் மறுபக்கம் சொக்கனின் கார்காலத்தில் தென்படுவதாக நினைத்துக் கொண்டேன்.
எவ்வளவுதான் நேசம் மிகுந்தவர்களாக இருந்தாலும், உடலளவில் ஒன்றுகூட, மன அளவில் நிரந்தரமாய் இருக்கும் நிறைக்க முடியாத இடைவெளி எந்தவொரு தம்பதியராலும் நெருடலாகவே உணரப்படும் என்று நினைக்கிறேன். அதிலும் புதுமணத் தம்பதிகளுக்கு இந்த உணர்வு மனதை வருத்தும் தொடர்ந்த உறுத்தலாக இருக்கும் என்று தோன்றுகிறது. காதல் என்பது தன்வயமாக்கிக் கொள்ளுதல் என்று சொன்னால், இவர்களில் யாருக்கு வலுவான ஆளுமை இருக்கிறதோ அவர்கள் மற்றவரின் ஆளுமையை முழுமையாக தனதாக்கிக் கொள்ள நினைப்பார்கள், இல்லையா?
கார்காலத்தில் செல்விக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை- அவள் அரவிந்தனை உள்ளபடி ஏற்றுக் கொண்டு சூழலின் தேவைகளுக்கேற்ப தன் உணர்வுகளை நெகிழ்த்திக் கொள்கிறாள். ஆனால், அரவிந்தனுக்கு அவள் தன்னை முழுமையாக இப்படி ஒப்புக் கொடுத்ததும்கூட ஒரு குற்ற உணர்வையே தருகிறது- அவன் தனக்கும் செல்விக்கும் இடையில் ஒரு பெரிய பள்ளம் இருப்பதாக நினைக்கிறான்- செல்வியால் அதைக் கடக்க முடிகிறது, ஆனால் அரவிந்தன் எப்போதும் தான் எட்டியே நிற்பதாக உணர்கிறான். தன்னால் ஏன் அவளுடன் இயல்பாக நெருங்கியிருக்க முடியவில்லை, அவளது உணர்வுகளோடு ஒருமித்து உணர முடியவில்லை என்று மன உளைச்சலடைகிறான்- தன் இந்த விலகலுக்கு தனது பணம், பதவி மற்றும் தொழில் ஈடுபாடு இவையே காரணமாக இருக்குமோ என்றே சந்தேகப்படுகிறான்.
தொடர்கதை மிக மெதுவாக, பெரும்பாலும் அரவிந்தனின் மன ஓட்டத்தை ஒட்டியே சென்றாலும் அவனது உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார் சொக்கன். அரவிந்தனுடைய உணர்வுகளுக்கு நம்மால் இசைய முடியவில்லையென்றால், இந்தக்கதையை நம்மால் பத்து நிமிடத்துக்குமேல் படிக்க முடியாது என்று நினைக்கிறேன்.
வண்ணதாசனின் கதையின் சாயலில் சொக்கனின் கதை இருக்கிறது என்று சொல்வது சொக்கனுக்கு நாம் இழைக்கும் அநீதி- இருந்தபோதும், இதைச் சொன்னதற்கு வண்ணதாசன் ரசிகர்கள் என்னை அடிக்க வருவீர்கள் என்றால், அடுத்து நான் சொல்வதைக் கேட்டால் சொக்கனே அடிக்க வந்து விடுவார்.
காளிதாசனின் மேக சந்தேசம் நினைவிருக்கிறதா? ஒரு யக்ஷன், குபேரனின் பணியாள், ஏதோ ஒரு குற்றம் செய்த காரணத்தால் விரட்டி விடப்படுவான். அவன் பருவமழைகால மேகங்களை பிரிந்திருக்கும் தன் காதலிக்கு தூது அனுப்புவான்.
கார்காலம் தொடர்கதையில், ஒரு வகையில் பார்த்தால் அரவிந்தன் யாரோ ஒரு குபேரனுக்குப் பணியாளாக இருக்கிறான். அவன் செய்த குற்றம்? தன் தொழிலில் முனைப்பாக இருப்பது என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் ஒவ்வொரு வாரமும் பம்பாய், கல்கத்தா என்று தன் மனைவியை கண்ணீரும் கம்பலையுமாக விழுங்க முடியாத தொண்டை அடைப்புடன் பிரிந்து செல்கிறான்- தன் காதலையே வெளிப்படுத்தத் தெரியாதவன், பிரிவின் தவிப்பை மட்டும் சொல்லி விடுவானா என்ன?
காளிதாசனின் யக்ஷனுக்குத் தூது செல்ல மேகங்கள் கிடைத்தன, தன் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைத்தன. இங்கே, அரவிந்தன் மும்பையின் மழைக்கால அழுக்கு சாலைகளில், செல்வி இல்லாத போதுகளின் தன் பிரிவாற்றாமையை அவளிடம் சொல்லக்கூடிய வல்லமை பொருந்திய காதலின் மொழியை, ஒரு பரிசுப் பொருளில் காணத்தேடி அலைகிறான்- சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் உளைச்சல் தரும் பிரிவின் வேதனையை விவரிக்க வார்த்தைகள் கிடைக்காமல். காளிதாசனின் யக்ஷனுக்கு இருக்கிற கவித்துவ உணர்வுகள், சொக்கனின் அரவிந்தனுக்கு சரியான வாக்கியங்களாகக்கூட பிடிபடுவதில்லை.
கதை இதுவரை வந்திருக்கிறது- இனி என்ன நடக்கும் என்பதை வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.
.