Nov 26, 2011

மயக்கம் என்ன


என்னத்த எழுத எனப் புரியவில்லை!

ஃ போட்டோகிராபியில் பெரிதாய் சாதிக்க விழையும் கத்துக்குட்டி தனுஷ், இது ஆரம்பம். உலகமே பார்க்க சர்வதேச புகைப்படக்கலை விருது வாங்கும் வித்தகர் தனுஷ், இது கிளைமாக்ஸ். இரண்டுக்கும் இடையில் நடக்கும் வழக்கமான கதை, வழக்கத்திற்கு ரொம்பவே மாறான திரைக்கதையில்.... இதுதான் மயக்கம் என்ன.

படத்தின் குறைநிறைகளைச் சொல்ல விரும்பவில்லை. படம் டிபிக்கல் செல்வா'த்தனமாக இருக்கிறது. விரும்பி ரசிக்கிறேன்  என்பவர்கள் தைர்யமாகப் போகலாம். வேண்டாம் என்பவர்கள் வீட்டில் இருக்கலாம்.

Nov 24, 2011

இந்தா பிடி இன்னும் அறுபது - முன்னுரை



வரவிருக்கும் புத்தகத் திருவிழாவில் வரவிருக்கும் பேயோனின் 108 புத்தகங்களில் வரவிருக்கும் இந்தா பிடி இன்னும் ஐம்பது கவிதைத் தொகுப்பில் வரவிருக்கும் கவிதைகள் எப்படியிருக்கும் என்று யோசித்து யோசித்து என் வீட்டுச்சுவர்க் காரைகள் பேர்ந்ததுதான் மிச்சம்.

இதென்ன போச்சு! நாமும் இந்தத் தலைப்பைக் கொஞ்சம் வளைத்து அதே புத்தகவிழாவில் ஒரு புத்தகம் ரிலீஸிட்டால் போச்சு என்று ராத்திரி முழுக்கக் கண்விழிக்காமல் எழுதிய கவிதைகளின் ஊர்வலம் நம் தளத்தில் இனி வாரம் ஆறாக வெளிவரவிருக்கின்றன.

என் முந்தைய கவிதைகளை வாசிக்காதவர்கள் இந்தத் தளத்தின் ஆர்க்கைவில் எப்படியேனும் தேடிக் கண்டுபிடித்து அவற்றில் ஒன்றிரண்டை வாசித்து விட்டு மேலே தொடர்ந்தால் எங்கெங்கே அடிபட்டு அவஸ்தைப்பட நேரிடும் என்பதறிந்து கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் படிக்கும் பாக்கியம் பெறலாம்.

மேலும் இவையெல்லாம் உயர் ஹைக்கூ வகையைச் சேர்ந்தவை என்பதால் மூன்றாம் வரியில் சரேலென்ற ஒரு மாபெரும் திருப்பம் இருக்கும்.

ஒரு உதாரணம் இங்கே: 
அடிப்பாள் அணைப்பாள்
அவள் தான்
அம்மா
இங்கே இரண்டாம் வரியின் மத்தியில் ”அவள்” என்னும் வார்த்தையில் நீங்கள் பயணம் செய்கையில் நிறுத்தி நிதானமாகப் பயணத்தைத் தொடர்தல் நல்லது. அப்போதுதான் மூன்றாம் வரியின் சரேல் திருப்பமான “அம்மா” என்னும் ட்விஸ்ட் உங்களை விபத்திலிருந்து காக்கும்.

சரி! ஆரம் பிக்கலாமா?




Nov 22, 2011

என்னை யாரென்று எண்ணி எண்ணி!


”ஹலோ”

“ஹலோ”

“ஹலோ, சொல்லுங்க”

“ஹலோ”

“ம்ம்... சொல்லுங்க”

“அப்புறம், எப்படி இருக்கீங்க”

“நல்லா இருக்கேன், சொல்லுங்க”

“நான் எப்படி இருக்கேன்னு கேக்க மாட்டீங்களா?”

“சொல்லுங்க. எப்படி இருக்கீங்க?”

“நல்லாதான் இருக்கேன். யாருன்னு தெரியுதா?”

“தெரியலைங்க. உங்க நம்பர் என் மொபைல்ல இல்லை. ரெண்டு மூணு மொபைல் மாறினதுல சில நம்பர்ல்லாம் மிஸ் ஆகிடுச்சி”

“ஓ! அப்போ நாங்க எல்லாம் முக்கியமான ஃப்ரெண்ட்ஸ் இல்லையா?”

“யார் பேசறீங்க?”

”கொரல் தெரியலையா”

“தெரியலையே”

”என் நம்பரை எப்படி மிஸ் பண்ணலாம்”

“நீங்க யாருன்னே தெரியலையே”

“கொரல் நிஜமாவே தெரியலையா?”

“இல்லை தெரியலை”

“நான் உங்க ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு”

“ஓ!”

“மாதவரத்துலதானே இருக்கீங்க?”

“இல்லை, நான் மடிப்பாக்கம் வந்து வருஷமாச்சு”

“என் கொரல் நிஜமாவே தெரியலையா”

“டேய் முண்டகலப்ப! நான் சொல்றது புரியலை. தெரியலைடா எழவெடுத்த பன்னி”

“யேய்! என்னய்யா திட்டற? நான் பாலாஜி பேசறேன். ஆஃபீஸ் மாறினா மேனேஜர் கொரலை மறந்துடுவியா?”

“டேய்! பொறம்போக்கு யார் பேரை சொல்லி வெளையாடுற? பாலாஜி சார் கொரல் எனக்குத் தெரியாதா?”

”இல்லைப்பா நான்தான் பேசறேன்”

“நான்தான்’னு சொல்ற பேமானி எல்லாம் பாலாஜி சார் ஆகிடுவானாடா பொறம்போக்கு?”

“இல்லைய்யா... நான் பாலாஜிதான்...”

“நிறுத்துடா நாரப்பயலே! என்ன வேணும் உனக்கு? போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணனுமாடா பன்னாடை?”

“ஆண்டவா!”

“ஆண்டவனா? அவனை ஏண்டா இழுக்கற வெண்ணவெட்டி. வைடா ஃபோனை !“



பி.கு 1: போன் மாற்றுவது, தொலைவது, நம்பர்கள் மிஸ் பண்ணுவது சகஜமான இந்தக் கலி காலத்தில் இனிமே எவனாவது ஃபோன் போட்டு பேர் சொல்லாம கலாட்டா பண்ணினா அவனுகளுக்கும் இதே கதிதான்.

பி.கு 2: அயாம் சாரி பாலாஜி சார், உங்களை கொஞ்சம் ஓவராத்தான் திட்டிட்டேன். ஆனா, இனிமே நீங்க யார்கிட்டயும் இப்படி வெளையாட மாட்டீங்கன்னு நம்பறேன்

பி.கு 3: இங்கே நான் கெட்ட வார்த்தைத் திட்டல்களை எடிட் செய்திருக்கிறேன்.

Nov 21, 2011

சுதந்திர போராட்ட தியாகி ஷெய்தி ராம்




1942 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 8 ந்தேதி அப்போதைய பம்பாயில் கூடிய, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் தேசத்தந்தை காந்தி அனல் பறக்க பேசுகிறார். "இனியும் பொறுக்கமுடியாது,உலகப்போரின் காரணமாக ஆங்கிலேயே அரசின் மீது கொண்டிருந்த பச்சதாபம் முடிந்துவிட்டது. இனி இந்த ஆங்கிலேயே அரசை எதிர்த்து போர்ப்பிரகடனம்தான்.'' "செய் அல்லது செத்துமடி''; "இந்த வெள்ளையர்கள் நம்மைவிட்டு போகும்வரை அவர்களுக்கு எந்தவிதத்திலும் ஒத்துழைப்பது இல்லை.இந்த ஒத்துழையாமை இயக்கத்தில் ஒவ்வொருவரும் போர் வீரர்கள் போல செயல்படவேண்டும்''.


காந்தியின் இந்த வெள்ளையரை வெளியேற்றும் அறைகூவல் போராட்டம் ,மக்களிடையே "வெள்ளையனே வெளியேறு' போராட்டமாக எழுச்சியுடன் வெடித்தது. நாடு முழுவதும் காங்.தலைவர்களும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் வடமாநிலத்தில் இருந்தால் 1300 கிலோமீட்டர் தாண்டி தென் மாநில சிறையில் அடைக்கப்பட்டனர்,தென் மாநிலத்தை சேர்ந்தவர் என்றால் வடமாநிலத்தில் அடைக்கப்பட்டனர்.



நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னெடுத்துச் செல்லப்பட்ட இந்த முக்கிய போராட்டத்தில் பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்றனர். ரயில்கள் மறிக்கப்பட்டது, பஸ்கள் நிறுத்தப்பட்டது, அரசு அலுவலகங்கள் முடக்கப்பட்டது, போரட்ட களத்தில் நின்ற பொதுமக்களில் ஒருவர்தான் இன்றைய ஜார்கண்ட் மாநிலம் கூடா மாவட்டத்தை சேர்ந்த ஷெய்தி ராம்.



வெள்ளையனே வெளியேறு கோஷத்துடன் போராட்ட களத்தில் இறங்கிய ராமை ஆவேசத்துடன் இருந்த போலீசும், ராணுவமும் தனது குண்டாந்தடிகளால் பந்தாடினர். குற்றுயிரும் குலைஉயிருமாக உடம்பெல்லாம் ரத்தம் வழிய வீழ்ந்து கிடந்தாலும், உதடுகள் மட்டும் வெள்ளையனை வெளியேறச் சொல்லும் கோஷமிட்டது. ராமைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்தும் அடித்து துவைத்தனர்,இனி ஆள் தாங்கமாட்டார் என்ற நிலையில் விடுதலை செய்தனர். வெளியே வந்தவர்,கொஞ்சம் தெம்பு வந்ததும் மீண்டும் போராட்ட களம் சென்றார், மீண்டும் கைதானார். மீண்டும் தடியடி தாங்கினார். மீண்டும் சிறை சென்றார்.



இப்படியே எவ்வளவு நாள்தான் போராடுவாய் என்ற கேள்விக்கு, " எங்கள் நாடு சுதந்திரமடையவேண்டும் ,அந்த உணர்வு இருக்கும்வரை போராடுவேன்'' என்று பதில் தந்து இருக்கிறார். "சரி இந்த உணர்வு எத்தனை நாள் இருக்கும்'' என்ற அடுத்த கேள்விக்கு ""உயிர் இருக்கும் வரை என் உணர்வு இருக்கும்'' இந்த முறை பதில் சற்று உரத்தே வந்தது



இப்படி பொங்கி வழிந்த தேசபக்தியோடும், தன் மணைவி ஷாம்னி தேவியோடு பல முறை போராட்டத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்கு சென்ற ராம், நாடு சுதந்திரமடைந்ததும் நாட்டிற்கான தனது கடைமை முடிந்தது என விவசாய தொழிலில் இறங்கினார். சுதந்திர போராட்ட வீரர்கள் பலரும் பெட்ரோல் பங்கு முதல் பென்ஷன் வரை வாங்கிக்கொண்டு வளமாகவும்,நலமாகவும் இருக்கிறார்கள்,நீங்கள் ஏன் இதற்கு முயற்சிக்க கூடாது என்ற போது,எதையும் எதிர்பார்த்து நான் என் நாட்டிற்காக போராடவில்லை,என் உழைப்பு என்னைக்காப்பாற்றும் என்பதே ராமின் பதிலாக இருந்தது



வருடங்கள் உருண்டோடின. இப்போது ஷெய்தி ராமிற்கு வயது 99 அவரது மனனவி ஷாம்னி தேவிக்கு வயது 85. மனதில் தெம்பு இருந்தாலும் உடம்பில் தெம்பு இல்லாததால், வாழ்வாதரத்திற்காக சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான பென்ஷன் கேட்டு விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பங்கள் கேலியுடனும்,கிண்டலுடனும் நிராகரிக்கப்பட்டன



தமிழகத்தில் ஏழாயிரமாகவும், கர்நாடகா மாநிலத்தில் ஆறாயிராமாகவும், மகராஷ்ட்ரா மாநிலத்தில் ஐயாயிரமாகவும் குறைந்து கொண்டே போய் ஜார்கண்ட் மாநிலத்தில் மூவாயிரம்தான் "பென்ஷனாக' சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்குகிறார்கள். அந்த மூவாயிரத்தை கேட்டு நடையாய் நடந்தும், அரசு அலுவலகங்களில் கிடையாய் கிடந்தும் எதுவும் பலனில்லை.



எங்களை தியாகியாக கூட மதிக்கவேண்டாம், வயதானவர்களாக மதித்து முதியோர் பென்ஷனாவது வழங்குங்கள், மிச்சமுள்ள வாழ்க்கையை யாரிடமும் தஞ்சமடையாமல் மானத்தோடு வாழவழி காணுங்கள் என்றபோதும் அதற்கும் வழியில்லாமல் போனது. பொறுமை இழந்த இந்த சுதந்திர போராட்ட தம்பதிகள் கடந்த 05/11/11 ந்தேதி ராஞ்சியில் உள்ள கவர்னர் மாளிகை முன் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்



போதுமான ஆவணங்கள், சான்றுகளுடன் உண்ணாவிரதமிருந்த இந்த தியாகிகளை உடனடியாக கவர்னர் கூப்பிட்டு முறைப்படி நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். ஆனால்... ஆனால்... கவர்னர் மாளிகை வாசலை அசிங்கப்படுத்தும் இவர்களை அப்புறப்படுத்துங்கள் என்று வந்த உத்திரவை அடுத்து போலீசார் இவர்களை குண்டு கட்டாக அள்ளிச் சென்று விட்டனர்



அப்புறப்படுத்தும் இடத்தில் முன்பு குப்பைகூளங்கள் இருந்தது



இப்போது சுதந்திர போராட்ட தியாகிகள்


நன்றி: தினமலர் மற்றும் இந்த இணைப்பை பகிரச் சொன்ன ரகுபாஸ்கர்

Nov 20, 2011

இந்த வார புகைப்படம் - 5

தமிழ்நாடு இதழ்கள் பதிப்பாளர் சங்கத் துவக்கவிழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு சில மாதங்களுக்கு முன் கிடைத்தது. அங்கே சென்ற போதுதான் தமிழ்ச்சூழலில் வணிக மற்றும் இலக்கியப் பத்திரிக்கைகளைத் தாண்டி எத்தனை விதவிதமான துறைசார் இதழ்கள் (உ.ம்: விவசாயம், மோட்டார் வாகனம், நெசவு, கால்நடை வளர்ப்பு) வருகின்றன எனத் தெரிந்தது.

அங்கே அடித்த ஒரு “க்ளிக்”



Nov 19, 2011

வேலாயுதம் பார்த்த எஃபெக்டில்...


வேலாயுதம் பட பூஜை நேரத்தில் வெளியான ஸ்டில்களை வைத்து நானும் படத்தைக் கிண்டலடித்து இரண்டு பதிவுகள் எழுதினேன்.

ஆனால் படம் வந்தபின் மக்களிடம் நான் கண்ட ரெஸ்பான்ஸ் பார்த்து நானே, அடடா விஜய் நல்ல படம் ஒண்ணுல நடிச்சிருக்காரு போலருக்கே. இப்பிடி எழுதிட்டமே’ன்னு வருத்தப்பட்டேன். இந்த எண்ணமெல்லாம் படத்தை தியேட்டர்ல போயி தேடிப்பிடிச்சுப் பார்த்தேன் பாருங்க..... அதுவரைதான்.

ட்விட்டர் அன்பர் ஸ்வாமிநாதன் ( @schokkan ) படம் பார்த்தப்போ லைவா கதறிக் கதறி ட்விட்டர்ல ரெவியூ எழுதினார். அதையாவது நான் மனசுல பதிச்சிருக்கணும். அவர் சொன்னதை மறந்துட்டு நம்ம அன்பர் அர்ஜூன், “படம் சூப்பர்ண்ணே” ( @vedhalam ) அப்டின்னு சொன்னது காதுல ரீங்கரிச்சிட்டு இருந்தா நான் என்ன பண்ணுவேன்.

இந்த படத்தை பார்க்க எனக்கு நாலுவாரமா தடை வந்துட்டே இருந்துச்சு. வேலாயுதம்தான் போகணும்னு நான் அடம் பிடிக்க இல்லை ஏழாம் அறிவு போறோம்னு மூணுவாரம் முன்ன நண்பர்கள் மாயஜால்’ல என்னைத் தரதரன்னு இழுத்துட்டு போனாங்க. அப்பவே நான் உஷாராகியிருக்கணும்.  கடைசியா நண்பர்கள் “தோ வெயிட் பண்ணுபா, ரெண்டே நிமிஷம் தேடினா கிடைக்கும் ஸிடி’யோட வர்றோம்”னு சொன்னப்பவும், அட ஸிடி’லல்லாம் பார்த்தா சரிவராது, பார்த்த எஃபெக்ட் இருக்காது. எனக்கு சினிமான்னா தியேட்டர்லதான் பாக்கணும், வாங்க தியேட்டருக்கே போலாம்னு சொன்னவன் நான்தான்.

மடிப்பாக்கம் குமரன் தியேட்டர்ல பதினஞ்சு பேருக்கு மேலே தலைகளைக் காணோம். OMR'ல இருக்கற ஏஜிஎஸ் தியேட்டர்ல இருபது டிக்கெட் வரலைன்னா ஷோ கேன்சல் பண்ணிடுவாங்களாம். அது போலயாச்சும் குமரன் தியேட்டர்காரங்க எதாவது பண்ணியிருக்கக் கூடாதா?

விஜய் ஒரு மொக்கை நடிகரா இருந்தா இதுபோல பொலம்பலுக்கெல்லாம் வேலையே இல்லை. அவர் பண்ற குசும்பு, டான்ஸ், அடிதடி மட்டும் போதும்னா நம்க்கு பழைய டிவிடிகள், யூட்யூப்’ல கெடைக்கற பழைய க்ளிப்பிங்ஸ் போதுமே? 

நண்பன், யோகன் படங்களாவது நம்மை ஏமாற்றாது என நம்புவோம். 

Nov 18, 2011

விலை உயர்வை என்ன பண்ணுவோம்?




ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, ஆதரவு, எதிர்ப்பு, அது, இது என்று எதற்குமே இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. நாமும் நம் கருத்தை இரண்டு பக்கங்களிலும் சுருங்க எழுதுவோமே என்று இந்தப் பதிவு. 

உங்களுக்கு எது தேவையோ எடுத்துக் கொள்ளவும். விவாத மேடைகளில் இந்தக் கருத்தைத் தாங்கள் உபயோகிக்கத் தேவையிருந்தால் மறக்காமல் பத்திக்கு ஐநூறு ரூபாய் மணியார்டர் செய்துவிடவும். 

விலை உயர்வை ஆதரிப்போருக்கு!

இது நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு. மின்சாரம், போக்குவரத்து, பால்வளம் ஆகிய துறைகள் நசுங்கிச் சின்னாபின்னம் ஆகுமுன் அம்மா அவர்கள் விவேகமாகச் செயற்பட்டு தன் பிள்ளைகளான நம்மையும் இந்தத் துறைகளைக் காக்கும் சிறுசுமைகளைத் தாங்கச் செய்துள்ளார்கள்.

முந்தைய அரசு வோட்டு வங்கியின்பால் பார்வை கொண்டு விலையை ஏற்றாமலேயே வைத்திருந்ததே இப்படிப்பட்ட இக்கட்டில் அதிமுக அரசு மக்களைத் தள்ளும் நிர்பந்தத்திற்குக் காரணம். காலத்தே அவர்கள் போதிய இடைவெளியில் விலை உயர்த்தாமல் செயற்பட்டது தவறு.

மத்திய அரசின் பாராமுகம் மற்றொருபக்கம் நிதிநெருக்கடிக்கு வழி வகுக்கிறது. மே.வங்கம் போன்ற மாநிலங்களுக்கு இருபதினாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிய மத்திய அரசு தேர்தலில் கண்ட தோல்வியை மனதினில் கொண்டு தமிழகத்தின் பக்கம் பாராமல் இருப்பதையும் இந்நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

மேலும், மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் நம் மாநிலத்தில் இந்த மூன்று பொருள்களுமே இப்போதும்கூட விலை குறைவே என்பதனையும் நாம் மறந்திடல் கூடாது.

விலை உயர்வை எதிர்ப்போருக்கு!

ஏற்கெனவே பெட்ரோல் விலை உயர்வு கழுத்தை நெரிக்கிறது. அதன் எதிரொலியாக அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள் விலை விண்ணைத் தாண்டி நிற்கும் வேளையில் இந்த பேருந்துக் கட்டண, மின்சார, பால் விலை உயர்வுகள் மக்களை எந்த விதத்தில் பாதிக்கும் என்பதனை அதிமுக அரசு சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை என்பது தெளிவாகிறது.

வரலாறு காணாத மழை இப்போதுதான் மாநிலத்தின் பெரும்பாலான மக்களைத் துயரில் தள்ளித் தத்தளிக்கச் செய்து கொண்டிருக்கும் நிலையில் , அவர்கள் கரையேற உதவாமல் நீருக்குள் அவர்களை முங்கடிக்கும் முயற்சியாகவே இந்த விலை உயர்வை நாம் காண்கிறோம்.

மின்சாரமே பாதி நேரங்களில் இல்லாத நிலையில் இந்த மின் கட்டண உயர்வு தேவையா என்பதையும் ஆளும் அரசு நினைத்துப் பார்க்கவேண்டும்.


நீ இன்னாபா சொல்ற என்பவர்க்கு...

1) வெளியூருக்கு ரயில்’லயும், உள்ளூரில் பைக்கையும் நம்புபவன் நான். பஸ் எல்லாம் லேதண்டி.

2) பச்சை பாக்கெட் பாலுலருந்து நீல பாக்கெட் பாலுக்கு மாறிடலாம்னு இருக்கேன்.

3) புதுவருஷ டிஸ்கவுண்ட் ஸேல்’ல கடனட்டை தேய்ச்சி ஏஸி வாங்கலாம்னு இருந்தேன். இப்போ ஏஸி இல்லாமலேயே அந்த கரண்ட் சார்ஜ் வர்ற வாய்ப்பு இருப்பதால அந்தத் திட்டத்தை கைவிட்டாச்சு.

ஆக, நான் புத்திசாலி. நீங்க?

படம் நன்றி: யாரோ ஒரு இணைய கனவான்

Nov 17, 2011

கைரேகையும் கைக்குட்டையும்

ந்த காலகட்டத்திற்கு சற்றும் ஒத்துவராத காதல்தோல்விப் பாடல் ஒன்று இடைச்செருகலாய் ஏழாம் அறிவு படத்தில் காணக்கிடைக்கும். சூர்யா ஸ்ருதிஹாசனைக் காதலிப்பதாய் சொல்ல, ”குப்பைல தூக்கிப் போடு உன் காதலை”, என்பார் ஸ்ருதிஹாசன். இந்தக் காட்சியைத் தொடர்ந்து இந்த “யம்மா யம்மா காதல் பொன்னம்மா” பாடல் வந்து குதிக்கிறது.

”காதல் ஒரு போதை மாத்திரை அதை போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை”, போன்ற வரிகள் அபத்தத்தின் உச்சகட்டம். ஆனால் இப்படிப்பட்ட ஒரு திராபை என நான் நினைக்கும் பாடலுக்கும் நாங்கள் படம் பார்த்தபோது பின்னணியில் தியேட்டரில் தொடர்ச்சியாக விசில் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. குறைந்தது அரைடஜன் விசில்கள் பாடல் தொடங்கி முடியும்வரை பாடலைத் தொடர்ந்துகொண்டே இருந்தன. அந்தப் பாடலோடு வாழ்க்கையின் தற்போதைய சூழல் ஒத்துப் போகும் கனவான்கள் யாரோ பாவம்.
__________________________




ங்கொன்றும் இங்கொன்றுமாக ஒளிந்து ஒளிர்ந்த விளக்குகளின் அரைகுறை வெளிச்சத்திற்கு நடுவே இரண்டு அல்லது மூன்று மேஜைகளில் மட்டும் தலைகள் தெரிந்தன. ஐஸ் பிடிக்கும் இடுக்கியும் கண்ணாடிக் கோப்பையும் மோதும் ஓசையும், எல்ஸிடி’யில் ஓடிக்கொண்டிருந்த மியூசிக் சேனலின் ஹிப்பித் தலையனின் பெண்மை கலந்த குரலும் வரவேற்றன. வாரயிறுதியைக் கொண்டாட்டமாய்த் தொடங்க பாருக்குப் போய் சுருதி ஏற்ற விரும்பி கிருஷ்ணா என்னையும் அழைத்து வந்திருந்தான். அவன் ஐந்து ரவுண்டுகள் முடிக்கும் வரை நான் மூன்று ரவுண்டுகள் கோகோ கோலாவை உள்ளே ஏற்றிக் கொண்டிருந்தேன்.

குடிக்கும் நண்பர்களுடன் குடிக்காத பார்ட்டிகள் போவதிலும் ஒரு எண்டர்டெயின்மெண்ட் உண்டு. அவர்களுக்கு எந்த நிலையில் சுருதி ஏறுகிறது என்பதில் தொடங்கி அவர்கள் செய்யும் அமர்க்களங்கள் ஒவ்வொன்றாக ரசிக்கலாம்.

முதலில் என்னை, “நீங்களும் சாப்புடுங்க”, என்று ஆரம்பித்து, “நானெல்லாம் சாப்டா நாடு தாங்காதுய்யா”, என்னும் வழக்கமான டயலாக் சொல்லி அவனை நான் அமர்த்த அடுத்து ஒரு நரித்தனமான சிரிப்பை சிரித்துக் கொண்டு என்னை சீண்ட ஆரம்பித்தான். “யோவ், நீ என்ன ஆபீஸ்ல பெரிய ஆள்ன்னா பெரிய இதுவா? ”, என்று என்னை ஏக வசன வம்பிழுப்பிற்கு இழுத்தான். தான் இத்தனை நாள் பேச நினைத்ததையெல்லாம் “போதைல இருக்கேன்”, என்னும் முகமூடியில் அவன் பேசியதாகத் தெரிந்தது.

இப்போது சுயபச்சாதாபத்திற்குத் தாவினான். முப்பதின் ஆரம்பத்தில் இருக்கும் கல்யாணமாகாத பையன் பேசும் விரக்தி வசனங்கள் எல்லாம் வந்து விழுந்தன. அதற்கும் அடுத்து, “ஒரு பொண்ணு ரொம்ப டிஸ்டர்ப் பண்றா கிரி”, என்றவனிடம், “அந்த பொண்ணுதானே”, என்று சமீபத்தில் அவன் ஆஃபீசில் ரெகுலராக நேரம் ஒதுக்கி தேடித்தேடிச் சென்று வழிசலாய் இவன் வழிந்து கொண்டிருக்கும் ஒருத்தியின் பெயர் சொல்லிக் கேட்டேன். யெஸ்! அவளேதான்!

“டேய்! அவளுக்கும் உனக்கும் கொறஞ்சது பத்து வயசு வித்யாசம் இருக்கும்”

“நோ கிரி, திஸ் ஈஸ் நாட் லவ்”

“அப்போ”

“ஐ டோண்ட் நோ”

“செக்ஸ்?”

“ம்ம்ம்ம் ஐ டோண்ட் தின்க் ஸோ. அதுவும் இல்லதான்”

“அப்போ உனக்கு எதுக்கு அந்த பொண்ணு பக்கம் இருந்து டிஸ்டர்பன்ஸ்”

“தெரியலையே”

“அவளுக்கு கல்யாண வயசுல ஒரு அக்கா இருக்கா. உனக்கு இப்பவே கல்யாணத்துக்கு லேட்”

“சொன்னனே கிரி எனக்கு கல்யாணம்லாம் வேணாம். ஜஸ்ட் அவகூட பேசிட்டு இருக்கப் புடிக்குது, அவ்ளோதான்”

”கீஞ்சுது கிருஷ்ணகிரி. கரெக்டா சொல்லு, டு யு வாண்ட் செக்ஸ் வித் ஹெர்”

”ஆக்சுவலி என் இண்டென்ஷன் அது இல்லை. பட், கிவன் எ சான்ஸ் ஐ மைட் நாட் ஸே நோ”

“போடாங்...!”

“நீங்களே கேள்வி கேட்டுட்டு நீங்களே போடாங்’னா எப்படி”

“அது சரி! இவ்ளோ தேடித்தேடி வழியறியே! அவளுக்கு ஒரு ஸ்பார்க்குமா அடிக்கலை?”

“அதெல்லாம் தெரியாது! ஆனா ரெண்டு மாசம் முன்னாடியே அவ எனக்கு ரக்‌ஷாபந்தனுக்கு ராக்கி கட்டிட்டா”

“அடங்கொய்யால....”

“அவ ரொம்ப உஷாரு! என்னை அண்ணா’ன்னுதான் கூப்பிடுவா”

“ங்________! அசிங்கமா பேசிடப் போறேண்டா”, எழுந்துவிட்டேன்.

“அதான் பேசிட்டீங்களே! ஒக்காருங்க”

காதலில் விழும் நூறில் தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் எப்போதுமே காதல் விஷயத்தில் எமோஷனலாகவும் இப்படிப்பட்ட மடத்தனத்துடனும்தான் இருக்கிறார்கள். எதையும் யோசிப்பதில்லை. நான் ஆண் நீ பெண் போதும் வா காதலிக்கலாம் என்பதுதான் மனோநிலை.

நான் பார்த்தவரையில் பெண்கள் சதுரங்கம் ஆடும் லாவகத்தோடு தெளிவான லாஜிகல் யோசனைகள் + மூவ்களுடன்தான் செயற்படுகிறார்கள்.

இது இப்படியேதான் இருக்கும். இந்த பாட்டைக் கேட்டுவிட்டு நீங்கள் அடுத்ததைப் படிக்கப் போங்களேன்!


Nov 16, 2011

அச்சரப்பாக்க பவன்கள்

சென்ற வாரயிறுதியில் வெளியூர் சென்றுவிட்டு சென்னை திரும்பும் வழியில் அச்சரப்பாக்கத்தில் இரவு உணவுக்கு வண்டியை நிறுத்த ஆயத்தமானோம். மதியம் ட்விட்டர் நண்பர் கோகுலின் “கணேஷ்பவனை மறந்திட்டா சென்னையே திரும்பாதே” என்ற ட்வீட்டுக் குரல் காதில் ஒலிக்க கணேஷ்பவனில் நிறுத்தவும் என்று டிரைவரிடம் சொல்லியும் அவர் ஏதோ பிடிவாதத்தில் கணபதி விலாஸ் (since 1963!!??) என்ற உணவகம் முன் வண்டியை  நிறுத்தினார். 

முன்னே பின்னே கணேஷ்பவன் பார்த்திராததால் சரி அதுதான் இதுபோல நாம்தான் பெயரைத் தவறாக மனதில் குறித்து வைத்தோம் போல என்றெண்ணி உள்ளே நுழைந்துவிட்டோம். இணைய உலகமே ஆஹா ஓஹோ எனக் கொண்டாடும் சுவையில் அங்கே கிடைத்த இட்லியும் இல்லை சட்னியும் இல்லை எனத் தெரிந்தபின் மாயவரத்தாருக்கு ஃபோன் அடித்து அது வேறு கடை என்றறிந்தோம். அடச்சே என்றானது.

இந்தக் குழப்பம் இப்படியிருக்க கணேஷ்பவன் என்ற பெயரில் அரைடஜன் உணவகங்கள் அச்சரப்பாக்கத்தில் உண்டாம். என்னக் கொடுமைடா! அப்படியென்றால் ஒரிஜினலை எப்படிக் கண்டறிவது என்றால்.... பழைய கடையில் “பழைய” என்ற போர்டு தொங்குமாம். சரிதான் என நினைத்துக் கொண்டேன்.

போனது போகட்டும்! இந்த விலைப்பட்டியலை ஒரு வரலாற்று ஆவணமாக இங்கே பதிந்து வைக்கிறேன். 2000 ஆண்டுகள் கழித்து என் தளத்தை தோண்டியெடுத்து வாசிப்போர் நவம்பர் 2011’ல் நம்மூரில் இட்லி விற்ற விலையைத் தெரிந்து வாய் பிளக்கட்டும்.


Nov 14, 2011

இந்த வார புகைப்படம் - 4




பள்ளிக்கரணையில் அமைந்திருக்கும் சதுப்புநிலக் காட்டு நீர்நிலைகளில் (Marsh Land) வேடந்தாங்கலுக்கு இணையாக வெளிநாட்டுப் பறவைகளைப் பார்க்கலாம். அங்கே வந்தமரும் பறவைகள் போகும் / வரும் வழியில் எங்கள் வீட்டருகில் (மடிப்பாக்கம்) மரங்களில் அமர்ந்து இளைப்பாறுவது உண்டு. அப்படி இளைப்பாறிய ஒரு ஒற்றைப் பறவையை நீங்கள் இங்கே பார்க்கலாம். இந்தப் படத்தின் zoom வெர்ஷன் கீழே!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.




மேலும் சில.....



Nov 11, 2011

பதினொன்று பதினொன்று பதினொன்று


இன்று 11/11/11 என்று தேதி அமைந்திருப்பது கண்டு உலகமே அல்லோலகல்லோலப் படுகிறது. அமிதாப் தாத்தா ஆகப்போகும் நாள் இது எனத் தெரிகிறது. ஆங்கில செய்தி சேனல்கள் வழக்கத்திற்கு அதிகமாகவே கூவிக் குவிக்கின்றன. ட்விட்டரில் மக்கள் இதை ட்ரெண்ட்ருகிறார்கள்.

111111’ஐ நினைவுறித்தி இதுவரை நூற்றிப் பதினோரு எஸ்ஸெமெஸ்ஸுகள் வந்திருக்கின்றன. இன்றைக்கு ஏதும் ஸ்பெஷலாக செய்யாவிட்டால் திகாருக்கு அனுப்பிவிடுவார்கள் போல.

ஆகவே, மறவாது இந்த பதினோரு செயல்களை நான் இன்றைய ஷெட்யூலில் வைத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொள்கிறேன்.

1) பொறுப்பாக படுக்கை மடித்து வைப்பது

2) லாகின் செய்து ட்விட்டர் முன் அமர்வது

3) திடீர் ஞானம் வந்து மறக்காமல் பல் விளக்குவது

4) காபி, பிஸ்கட்

5) காலைக் கடன்கள், 11/11/11’ஐ முன்னிட்டு ஸ்பெஷல் குளியல்

6) டிபன் (செய்தால் சாப்பிடுவது அல்லது செய்து சாப்பிடுவது)

7) அலுவலகம் போவது, முடிந்தால் வேலை செய்வது

8) லன்ச்

9) வீடு திரும்பல்

10) இன்றைய பாடலைப் பாடி, வலையேற்றி மறக்காமல் மக்களைக் கொல்வது

11) ட்விட்டர் ஸைன் ஆஃப் செய்துவிட்டு படுப்பது

இதற்குமேல் செய்ய என்ன?

Nov 10, 2011

108 சேவை

இன்று ஹிந்து நாளிதழில் வந்த செய்தி இது.



108 ஆம்புலன்ஸ் சேவை என்பது மக்களுக்கு உதவுவதற்காக சென்ற ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட ஒரு உன்னத சேவை. இந்த சேவையின் மூலம் நேரத்தில் இலவச ஆம்புலன்ஸ் கிடைக்கப்பெற்று உயிர் பிழைத்தவர்களை நான் அறிவேன்.

ஆனால் பாருங்கள் ஒரு நாளில் இவர்கள் பெறும் 25000 அழைப்புகளில் சுமார் 4000 அழைப்புகள்தான் உண்மையானவை. மற்ற 85% கிண்டல், கேலி, பொய்யான அழைப்புகள், குழந்தைகளின் விளையாட்டு அழைப்புகளாம்.

நம் வீட்டுக் குழந்தைகளுக்கு இவ்வாறு செய்யக் கூடாது என்று அறிவுருத்துவது இங்கே இந்த நேரத்தில் மிகவும் அவசியம் எனத் தெரிகிறது. குழந்தைகள் தெரிந்து செய்வதில்லை. எனவே, இந்த சேவையின் முக்கியத்துவம் குறித்த பாடத்தை ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு எடுப்பது அவசியம் ஆகிறது. குழந்தைகள் மட்டுமன்றி, நாமும் இத்தகைய செயல்களைச் செய்து இந்த உன்னத சேவைக்கு பங்கம் விளைவிக்காமல் இருப்பதும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

கடலூரிலிருந்து ஒரே எண்ணிலிருந்து ஒரு மனிதர் 1473 அழைப்புகளைச் செய்திருக்கிறாராம். மன அழுத்தம் கொண்ட நபர்கள் / குடிபோதையில் இருப்பவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் உணர மறுக்கும் ஒரு உண்மை என்னவென்றால், அவர்கள் வீட்டிலும் என்றேனும் எவருக்கேனும் அவசர மருத்துவ உதவி தேவைப்படலாம் என்பதுதான். 

இந்த விஷயத்தில் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு இதுகுறித்த தேவையான விழிப்புணர்வை வழங்குமாறு நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி: ஹிந்து நாளிதழ்

Nov 7, 2011

மைக்கேல் மதன காமராஜன்


நான் தயாரிக்கும் டாப் டென் பட்டியலில் தமிழின் தலைசிறந்த நகைச்சுவைப் படங்களின் டாப் இரண்டு இடங்களில் சூப்பர்ஸ்டாரின் “தில்லுமுல்லு” மற்றும் கமலின் “மைக்கேல் மதன காமராஜன்” படங்கள் உண்டு.

தீவிர கமல் விசிறியான ஒரு தமிழ் வலைப்பதிவாளன் மை.ம.கா.ரா. பற்றி எந்தப் பதிவும் எழுதாதது எப்படி என்பது ஆச்சர்யமே! இன்று கமல் பிறந்தநாளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே, கச்சிதமாய்ப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

காமேஸ்வரன் செய்யும் வெள்ளந்தி அதகளங்கள், சுப்ரமணிய ராஜுவின் கில்பான்ஸ் கலக்கல்கள், மதன் கேரக்டரின் மிடுக்கான நடிப்பு, மைக்கேலின் வில்லத்தனம் என்று எதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்தவாறு கூகுள் செய்ததில், படம் வெளிவந்த இந்த 20 வருடங்களில் இந்தப் படம் குறித்து தமிழ் வலையில் குறைந்தது இரண்டு டஜன் பதிவுகளாவது தேறுகிறது. டைட்டில் டு க்ளைமாக்ஸ் படத்தை அலசி ஆராய்ந்த இரண்டு பதிவுகளும் தென்படுகின்றன. படத்தின் எந்த காட்சியும் விட்டு வைக்கப்படவில்லை

நான் என்னத்தைத்தான் எழுத என யோசித்தால்.... எனக்கு இந்தக்காட்சியைத் தவிர்த்து வேறேதும் தோன்றவில்லை. கமலும் நாகேஷும் கலக்கும் இந்த லெஜெண்ட்ரி காட்சியை கொஞ்சம் ரசியுங்களேன்!

இந்தக் காட்சியின் படமாக்கலின் பின்னணியில் வார்த்தைக்கு வார்த்தை இருக்கும் மெனக்கெடல் ஒருமுறைக்குப் பலமுறை பார்க்கையில் புரிந்துகொள்ள முடிகிறது.

என் பார்வையில் இந்தப் படத்தின் டாப் க்ளாஸ் காட்சி இதுதான்!


நடிப்புலகச் சக்கரவர்த்திக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Nov 6, 2011

இந்த வார புகைப்படம் - 3

தஞ்சை பெரியகோயில் என் கேமராவில் சிறைப்பட்டபோது....


Nov 5, 2011

மௌனமே உன்னிடம்



பாடுகிறேன் ப்ராஜக்டைக் கையிலெடுத்ததும் முதல் சில தினங்கள் கையில் மொபைல் வைத்துக் கொண்டு ரொம்பவே கேஷுவலாகப் பாடிக்கொண்டிருந்தேன். பின் லோக்கலாக ஒரு இன்டர்நேஷனல் மைக் வாங்கி கம்ப்யூட்டரில் செருகி வைத்துக் கத்தத் தொடங்கினேன். நன்கு பழகின பாடல்களை நான்குவரி பாடி வலையேற்றிக் கொண்டிருந்தேன்.

வலையுலக அன்பர் ஒருத்தர் பர்சனலாகக் கொடுத்த அட்வைஸ்'கள் ப்ராஜக்ட்டில் கொஞ்சம் சீரியஸ்னஸ் கொள்ளச் செய்தது. இப்போது பழகிய பாடல் எனினும் தினமும் பாடுமுன் பாடலை ஒன்றுக்கு நான்குமுறை   கேட்டுவிட்டு நான்கிற்கு எட்டுமுறை ரிகர்சல் பார்த்துவிட்டுப் பாடத் துவங்கினேன். சிஸ்டத்தில் எப்போதோ சேமித்து வைத்திருந்த கரோக்கி'களைப் பீராய்ந்து எடுத்து அவற்றுடன் குரலை ஒட்டவைத்தது அடுத்த கட்டம்.

சில பாடல்களைப் பாடுவதற்குமுன் பத்துமுறை கேட்பதுண்டு. ஆனால்,  இந்தப் பாடலைக் கையிலெடுத்தபோது கிட்டத்தட்ட நூறுமுறை மறுபடி மறுபடி கேட்டிருப்பேன். காரணம் என் பாடுதலை நேர்த்தி செய்து கொள்வதற்காக அல்ல, இந்தப் பாடல் கொண்ட நேர்த்தியினை மீண்டும் மீண்டும் வியப்பதற்காக.


ஓர் ஆணின் மனதில் பூத்தக் காதலை ”யெஸ்! இது காதல்தான்!” என அவன்  தனக்குத்தானே உறுதிப்படுத்திக் கொள்ளும் ஒரு சூழலை இதைவிட அழகாக யாராலும் படமாக்கியிருக்க முடியாது. ராதாமோகன் அதை அநாயசமாகச் செய்திருக்கிறார். சூப்பர்ப் சார்!

வித்யாசாகர் ஒரு மெலடி கிங் என்பது நாம் சொல்லித் தெரிய அவசியம் இல்லை. தமிழ்த் திரையுலகம் அவர் திறமையை இன்னமும் கூட சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே சொல்வேன் நான். அவர் இசையில் வெளிவந்த டாப்.5 மெலடிகளில் இந்தப் பாடலுக்கு நிச்சயம் இடமுண்டு.

பாடலின் பெரிய ப்ள்ஸ் ஸ்ரீனிவாஸின் குரல். பாடலுக்கு உள்ளே கொண்டு சென்று நம்மை லயிக்க வைக்கும் தேனில் குழைத்த குரலில் மனிதர் என்னமாய் அசத்துகிறார்?

“சொல்லைக் கடந்த பெண்ணின் மௌனக் கூட்டுக்குள் பல கோடி கோடி பொருள் குடியிருக்கும்” என்ற வரிகள் வைரமுத்துவிற்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம், நமக்கு “ஆஹா! அடடா!”.

ஆனால், இத்தனை பேரையும் எடுத்து விழுங்கும் ஒரு நபர் இந்தப் பாடலில் இருக்கிறார், அவர் படத்தின் ஹீரோ பிரித்விராஜ். பாடலுக்கு முன்னதாக வரும் வசனங்களின் போது முதல் நாற்பது வினாடிகளைக் கவனியுங்கள். மனிதர் நடிப்பதேயில்லை, ஜஸ்ட் ஒரு நிலைத்த பார்வையை வைத்தே ஆயிரம் பாவங்களை (Bhaavam) அர்த்தங்களை வெளிப்படுத்துகிறார். க்ரேட் ப்ரித்வி!
Related Posts Plugin for WordPress, Blogger...