Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

May 5, 2011

வெய்யிலுக்கு ஏற்ற மோர்க்கஞ்சி


"ஹப்பாப்பா.... என்னா வெயிலு...என்னா வெயிலு...! போன வருஷத்தவிட மோசமால்ல இருக்கு!", இந்த வசனம் எல்லோர் வாய்களிலும் வருகிறது, எல்லோர் காதுகளிலும் கேட்கிறது. வெயிலை நாம் ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் அதன் கடுமையிலிருந்து நம்மை சில வழிமுறைகளில் காத்துக் கொள்ள முடியும். 

தமிழ் பேப்பர் கத்திரிக் குறிப்புகள் வெளியிட்டுள்ளது.

மங்கையர்மலர் இதழ் இந்தமுறை (மே இதழ்) கோடையை வெல்ல சில உணவு வகைகள், பானங்கள் தயாரிக்கும் வழிமுறைகள் அடங்கிய "கூல் சமையல் 64" என்ற இலவச இணைப்பு ஒன்றைத் தந்துள்ளது. கைவண்ணம்: சமையல் மகாராஜா செஃப் தாமு.

ஒரு சாம்பிள் இந்த மோர்க்கஞ்சி. செய்முறையைப் பாருங்கள். வீட்டில் குழந்தைகளைக் குளுமைப்படுத்த ஏற்றது.


மோர்க்கஞ்சி - தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி நொய் - 1 கைப்பிடி, மோர் - 3 கப்,
சாம்பார் வெங்காயம்- 3 (வெட்டியது), பச்சை மிளகாய் - 1 துண்டு, உப்பு -தேவைக்கு.
செய்முறை:
ஒரு அளவு நொய்க்கு இரண்டு அளவு தண்ணீர் என்கிற கணக்கில் நொய்யை நன்றாகக் குழைய வேக விடவும். வெந்த கஞ்சியில் கீறிய பச்சை மிளகாயை கசக்கிவிட்டு, உப்பு, வெட்டிய சாம்பார் வெங்காயம் சேர்த்து மோர் கலந்து குளிரவைத்துக் குடிக்கவும்.

குக்கும்பர் சாலட், ஆரஞ், மாங்கோ க்ரஷ் வகையறாக்களைத் தாண்டி இப்புத்தகத்தில் சுவாரசிய செய்முறைகள் ஜிஞ்சர்-ஹனி டிரிங்க், மோர் ஆகாரம், மேங்கோ - கோகனட் டிலைட், ராகி டிரிங்க்,பெரிய நெல்லி தயிர்ப்பச்சடி, ஃப்ரூட் லஸ்ஸி ஆகியவை.

மங்கையர் மலர் வாங்கி நீங்களும் தினம் ஒரு கூல் ரெசிபி வீட்டில் செய்து வீட்டைக் குளுமை செய்யுங்கள்.
.
.
.

May 26, 2010

அசோகா அல்வா செய்வது எப்படி?

அவசர இனிப்பு தயார் செய்ய வேண்டுமா? சிம்பிள் அண்ட் சூப்பராக இருக்கவும் வேண்டுமா? வாருங்கள் பாசிப்பருப்பு கொண்டு அசோகா அல்வா செய்யலாம்.

பாசிப்பருப்பு இதர வகையறாக்கள் போல அல்லாமல் வயிறு சம்பந்தமான தொந்தரவுகள் ஏதும் தராதது. எனவே இந்த அல்வாவை குழந்தைகளுக்கும் தாராளமாகத் தரலாம். கர்ப்பமாக இருக்கும் பெண்களைக் காணச் செல்லும்போது உங்கள் கையால் ஏதேனும் செய்து எடுத்துச் செல்ல வேண்டும் என விரும்புபவர் நீங்கள் என்றால், அசோகா அல்வா அதற்கு மிகவும் உகந்தது.



தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - ஒரு கப்
சர்க்கரை - இரண்டரை கப்
நெய் - இரண்டரை கப்
முந்திரி / ஏலக்காய் - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

பாசிப்பருப்பை லேசாக வறுக்கவும். பின்னர் தேவையான தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பை நன்றாகக் குழைய வேக வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை வேக வைத்த பாசிப்பருப்புக் கலவையில் கலந்து கிளறவும். கிளறும்போதே சிறுக சிறுக நெய் ஊற்றி அடி பிடிக்காத வண்ணம் கிளறிக் கொள்ளவும்.

நன்றாக சுருண்டு பாத்திரத்தில் ஒட்டாத பதத்தில் வரும்போது, ஏலக்காய், முந்திரி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். சுவையான அசோகா அல்வா தயார்.

அசோகா அல்வாவின் மிக எளிய செய்முறை இது. இதனுடன் கோதுமை மைதா சேர்த்து செய்பவர்களும் இருக்கிறார்கள். இணையத்தில் அந்த ரெசிபிக்களும் நிறையவே கிடைக்கின்றன. நான் சொல்லும் செய்முறை T20 அசோகா அல்வா.

Apr 27, 2010

பதிவர் பாஸ்கருக்கு ஒரு பச்சடிப் பதிவு



பாஸ்கரின் கடிதம்
என் அன்பிற்கும் அவதானத்திற்கும் உரிய நண்பர் கிரி அவர்களுக்கு,
அந்த நாள் இன்னும் நினைவிலிருக்கிறது. நவம்பர் 29 2009 என்று நினைக்கிறேன். அன்றுதான் முதல் முதலாக பொறி உருண்டை செய்வது எப்படி என்று படித்தேன். அதற்கடுத்த நாள் நடந்த நெஞ்சை குளிர்விக்கும் இனிய நிகழ்வுகளை என்னால் மறக்க முடியாது. என் மனைவி வேலைக்குக் கிளம்பிச் சென்றதும், நான் தாங்கள் தங்கள் தளத்தில் இடுகையிட்டிருந்த செய்வகையின்  துணையோடு பொறி உருண்டை செய்து வைத்து, அவள் வந்ததும் அவளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, அப்புறம் அவள் அந்த சந்தோஷத்தில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்த… இதற்கு மேல் சொல்ல முடியாது, சொன்னால் லீனா மணிமேகலைக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும்… பேர் ரிப்பேர் ஆகி விடும்.
 அரை கிலோ வெல்லம்). வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, அழுக்கு போக வடிகட்டி, பாகு பிடித்து, பொரி கலந்து, உருண்டை பிடித்து….. அப்புறம் என்ன… சாப்பிடுங்க… “
இதை விட  சுருக்கமாக இந்த இனிய சங்கதியை, ஒரே வரியில், நெஞ்சத்து அழுக்கை எல்லாம் வடிகட்டித் தாங்கள் சாரத்தை  மட்டும் தெளிவாக்கித் தந்திருக்கிற மாதிரி வேறு யாராலும் செய்திருக்க முடியாது.... (மேலும் வாசிக்க



பாஸ்கர்,
நெடுநாட்களுக்குப் பிறகு எழுதுகிறீர்கள். என் தாமத பதிலுக்குக் காரணம் என் தொடர்ச்சியான பயணங்கள். உங்கள் கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்? முதலில் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன், இது போலக் கேள்விகள் மூலம் துதிபாடி, பதில்கள் மூலம் அவற்றை வாங்கிக்கொள்ள நீங்கள் சாருவோ அல்லது நான் மற்ற யாருமோ அல்ல.

மேலும் இந்தக் கேள்வியில் உள்ளார்ந்து பொதிந்திருக்கும் ரகசிய அர்த்தமொன்றும் எனக்கு விளங்காமலில்லை. அந்த எழுத்தாளருக்கு இருக்கும் அதே அடையாளப் பிரச்சினைதான் எனக்கும். தமிழகத்தில் என்னைத் தெலுங்கன் என்கிறார்கள், ஆந்திரா சென்றாலோ அரவோடு (தமிழன்) என்கிறார்கள். வாய்கிழிய இத்தனை பேசும் உனக்கு வாய்க்கு ருசியாய் கோங்குரா ஊறுகாய் செய்யத் தெரியுமா எனக் கேட்டுள்ளீர்கள். 

எப்படியிருந்தாலும் என் தளத்தை நோக்கி வீசப்பட்ட கேள்வி இது என்பதால் என் பதில் இங்கே! 



கோங்குரா பச்சடி செய்முறை




தேவையான பொருட்கள்:
புளிச்ச கீரை - ஒரு கட்டு (இலைகளை மட்டும் தனியே எடுத்துக் கொள்ளவும்)


வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் - பத்து (அல்லது கூடக் குறைய...காரத் தேவைக்கு ஏற்றாற்போல்)
கொத்துமல்லி விதை  - இரண்டு டீ ஸ்பூன்
கடலைப்பருப்பு - இரண்டு டீ ஸ்பூன்
வெந்தயம் - அரை டீ ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
சமையல் எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:


1 ) வெறும் வாணலியில் வறுத்து அரைக்கும் பொருட்களை தனித்தனியே வறுத்து வைத்துக் கொள்ளவும்.


2 ) ஆய்ந்து வைத்த புளித்தக் கீரையை சிறிது எண்ணெய் ஊற்றி சுருள வதக்கி வைத்துக்கொள்ளவும்.


3 ) வறுத்து வைத்த பொருட்களை மிக்சியில் ஓரளவு பொடி செய்து கொண்டு, வதக்கி வைத்த கீரையையும் உப்பையும் அதில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.


4 ) வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய் இரண்டு, கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு அரைத்து வைத்த துவையலையும் அதன் மேலிட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.


5 ) ஆறியவுடன் தனியே ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.


சுவையான கோங்குரா பச்சடி தயார். இதை ஐந்து நாட்கள் வரை உபயோகிக்கலாம். இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம், சாதத்தில் பிசைந்து சாப்பிட தயிர் பச்சடி தொட்டுக்கொள்ள உகந்தது.


வெள்ளைப் பூண்டு எங்கள் வீட்டுப்படி ஏறுவதில்லை. வெங்காயம் ஒரு வேண்டாத விருந்தாளி. ஆகவே அவற்றை இந்த செய்முறையில் சேர்க்கவில்லை. உங்கள் தேவைக்கு ஏற்ப அவற்றையும் சேர்க்கலாம்.

கோங்குரா குறித்த இன்னும் சில குறிப்புகள்:


Jan 3, 2010

தவலை அடை (தவலடை) பண்ணலாம் வாங்க!


சென்ற முறை செய்து பார்த்த பொரியுருண்டை போல அல்ல இந்த முறை. தவலடை நீங்கள் செய்தும் உண்டும் மகிழலாம். நான் கேரண்டி.

தேவையான பொருட்கள்: (சுமாராக 3 பேருக்கான செய்முறை)







அரிசி - ஒரு ஆழாக்கு
கடலைப் பருப்பு - கால் ஆழாக்கு
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய் துருவல்
தாளிக்க கடுகு, உளுந்து
உப்பு - தேவையான அளவு.

அரிசி, கடலைப்பருப்பு, மிளகாய் மூன்றையும் மிக்சியில் பொலபொலவென வெள்ளை ரவை அளவிற்கு அரைத்துக்கொள்ளவும். அரைக்குமுன் ஓரிரு டீ ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கொண்டால் பதம் நன்றாயிருக்கும்.

அரைத்த ரவையை, உப்புமா கிண்டுவது போல தயார் செய்து கொள்ள வேண்டும்.  கொஞ்சமாய் எண்ணெய் சேர்த்து தாளித்து, ரவையின் அளவிற்கு சரி பங்கு தண்ணீர் சேர்த்து (ஒரு ஆழாக்கு ரவைக்கு ஒரு கப் தண்ணீர் - 200 ml) கிளறிக்கொள்ளவும். உப்புமா போல இல்லாமல் இறுக்கமாக இருந்தால் நல்லது.

தவலை அடை தட்டும் முறை.

மாவு ஆறிய பின்னர், வாழை இலை அல்லது பாலிதீன் பேப்பரில் படத்தில் காணும் விதத்தில் தட்டிக் கொண்டு, தோசைக்கல் அல்லது வாணலியில் போட்டு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து இரண்டு புறமும் நன்றாக பொன்னிறமாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தவலை அடை தயார்....!!!

வெளிப்புறம் மொறுமொறுவெனவும் உட்புறம் நன்கு வெந்து soft ஆக பொலபொலவெனவும் இருந்தால் சுவை நன்றாக இருக்கும்.

Nov 29, 2009

பொரி உருண்டை பண்ணலாம் வாங்க...






கார்த்திகை தீபம் நெருங்கும் இந்நேரத்தில்.....,





பொரி உருண்டை -


நான் சொல்லும் ரொம்ப சிம்பிள் முறை (எப்போதோ மங்கையர் மலரில் படித்தது) :

ஒரு பொரிக்கு அரை வெல்லம் எடுத்துக் கொள்ளவும் (ஒரு லிட்டர் பொரிக்கு, அரை கிலோ வெல்லம்). வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, அழுக்கு போக வடிகட்டி, பாகு பிடித்து, பொரி கலந்து, உருண்டை பிடித்து..... அப்புறம் என்ன... சாப்பிடுங்க...

Not making sense...?? அப்போ சமையலறை.காம் சொல்லும் கீழ்கண்ட முறையில் முயற்சி செய்யவும்.



தேவையான பொருட்கள்

பொரி - 250 கிராம்குண்டு
வெல்லம் - 200 கிராம்
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)



செய்முறை
1. பொரியை வெறும் வாணலியில் போட்டு அடுப்பை குறைந்த தணலில் வைத்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
2. வெல்லத்தை நன்றாக உடைத்து 1/4 குவளை (டம்ளர்) அல்லது வெல்லம் மூழ்கும் வரை மட்டும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
3. பாகு லேசான கம்பி பதம் வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
4. இறக்கி வைத்த வெல்லப் பாகில் வறுத்த பொரியைப் போட்டு நன்றாக கிளறவும்.
5. வெல்லப்பாகு சூடு ஆறுவதற்குள் பொரி கலவையை தேவையான அளவு உருண்டையாக பிடிக்கவும்.
6. சூடு ஆறினால் உருண்டை பிடிக்க வராது. அப்படி சூடு ஆறிவிட்டால் மீண்டும் அடுப்பில் லேசான தணலில் வைத்து, லேசாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, மீண்டும் உருண்டை பிடிக்கலாம்.



குறிப்பு

1. பொரியை வறுக்கும் போது அடுப்பு தணலை வேகமாக வைத்தால் பொரி சுருங்கி கெட்டித்து விடும்.
2. பாகு காய்ச்சும் போது தண்ணீர் அதிகமாக சேர்க்கக் கூடாது. தண்ணீர் அதிகமானால் பொரி நமுத்து விடும்.
3. கம்பி பாகு என்பது சர்க்கரைப் பாகை ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலினால் எடுத்து விரலைப் பிரித்தால், இரு விரல்களுக்கிடையே ஒரு கம்பி போல் வரும்.
Related Posts Plugin for WordPress, Blogger...