Showing posts with label தியானம். Show all posts
Showing posts with label தியானம். Show all posts

Sep 21, 2012

கதம்பம் - 2



கடவுளுக்குக் காதைக் கொடு

சில வருஷங்கள் முன் ஒரு யோகா மையத்தில் சூன்ய தியானம் கற்றுக் கொள்ளப் போயிருந்தேன். நூற்று சொச்ச மாணவர்கள் தியானம் கற்க வந்திருந்தனர். தியானப் பயிற்றுவிப்பு முடிந்து, தீட்சை தந்தபின் தியானம் எதற்கு என்பது பற்றி குருநாதர் பேசத் துவங்கினார்.

கேள்வியை எங்களிடமே கேட்டு தியானத்தின் அவசியத்தி விளக்க முயன்றார் அவர். ”தியானம் எதற்காக செய்ய வேண்டும்?”, இது முதல் கேள்வி.

விதவித பதில்கள் வந்து குதித்தன. நோய் எதிர்ப்பு சக்தி, தீராத நோய்களில் இருந்து விடுதலை, மனநிம்மதி, மனக்குவிப்புத் திறன், செயல்திறன் அதிகரிப்பு என்று ஆளுக்கு ஒரு காரணம் அடுக்கினார்கள்.

”எல்லாம் சரியான பதில்களே. சரி, என் அடுத்த கேள்வி இது, கோயிலுக்குப் போனால் சாமியிடம் என்ன கேட்பீர்கள்?”

இந்தக் கேள்விக்கு இன்னும் நான்கு மடங்கு பதில்கள். ஆரோக்யம், மனநிம்மதி, படிப்பு, வேலை, பெண்ணுக்குக் கல்யாணம், பணம், குறைந்த வட்டியில் கடன், இத்யாதி, இத்யாதி.

“ஆக, கடவுளைப் பார்க்கப் போனால் அவரை விடுவதாயில்லை. இத்தைக் கொடு, அத்தைக் கொடு என்று ஒரே பிடுங்கல்தான். அப்படித்தானே?”

“................”

“கடவுளை என்றாவது உங்களிடம் பேச அனுமதித்திருக்கிறீர்களா?”, கேட்டாரே ஒரு கேள்வி?

“.................”

”அதற்காகத்தான் இந்த பதினைந்து நிமிட தியான நேரம் உங்களுக்கு. அந்த பதினைந்து நிமிடங்களாவது உங்கள் வாயை சாத்துங்கள். கடவுளை உங்களிடம் பேச அனுமதியுங்கள்”

நீலத்திமிங்கிலம்

Blue Whale எனப்படும் நீலத் திமிங்கிலத்தின் நாக்கின் எடை மட்டுமே ஒரு சராசரி யானையின் எடையைக் காட்டிலும் அதிகமாம்.


யம்மாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!


ததாஸ்து

குமரகுருவுடன் இந்த வாரமும் ராமாயண, மகாபாரத விவாதம் தொடர்ந்தது. ராமரைப் பற்றி ஏதோ கேட்கப் போக வழக்கம்போல நீண்டநெடிய வியாக்கியானம் தந்துவிட்டு குமரகுரு சடாரென்று மகாபாரதத்திற்குத் தாவினார்.

மகாபாரதப் போர் நேரம். குந்திதேவி கிருஷ்ணனைச் சந்திக்கிறாள். அவனிடம் கேட்கிறாள், “என் ஐந்து பிள்ளைகளையும் இந்தக் கொடும் சகோதரச் சண்டையில் இருந்து உயிருடன் காப்பாற்றிக் கொடுத்துவிடு கண்ணா”

“ததாஸ்து”, என்று விடுகிறான் கிருஷ்ணன். தட்ஸ் இட்!

கேள்வி கேட்ட தருணத்தில் தன் மூத்த மகனை, கர்ணனை மனதில் நினைக்கவில்லை குந்தி. ”என் பிள்ளைகளை” என்று கேட்டிருக்க வேண்டியதை குறிப்பாக என் ஐந்து பிள்ளைகளை என்று அவள் குறிப்பிட்டது தவறாய்ப் போனது. ஐந்து மகன்கள் மீண்டார்கள், கர்ணன் மாண்டான்.

“அதனால்தான் கடவுளிடம் எதுவும் கேட்கக் கூடாது என்பார்கள். உனக்கு என்ன வேண்டும் என்பது உன்னைவிட அவனுக்குத்தான் நன்றாகத் தெரியும். அதனால் நீயாகக் கேட்கத் தெரியாமல் கேட்டுவிட்டு பின்னர் அவனைக் குறை சொல்லாதே”  என்கிறார் குமரகுரு. 

சரியான பாய்ண்ட்தான், ரைட்?


இன்னொரு முட்டாள்


ராஜபக்‌ஷே ராட்சஷன் டெல்லி வந்திருக்கிறான். அதை எதிர்த்து இந்த வாரம் சேலத்தைச் சேர்ந்த இன்னொரு முட்டாள் தீக்குளித்து இறந்திருக்கிறான். 

இவர்களுக்கு நினைவேந்தல்களும், வீரவணக்கங்களும், துக்க விசாரிப்புகளும், தர்ணாக்கள், மாவீரன் பட்டங்கள் என்று எல்லா நாடகங்களும் நடக்கின்றன. இவை இன்னமும் நடக்கும். நடந்து கொண்டே இருக்கும்.

"ஏண்டா டேய்! உனக்கு அவன் மேல கோபமுன்னா நீ ஏண்டா சாவற? அது எப்படிடா வீரம் ஆகும்? அதுக்கு எந்த _______க்குடா வீர வணக்கம்”ன்னு ஒருவனும் கேட்பதில்லை.

இந்தத் தற்கொலைகளை மறைமுகமாகக் கொண்டாடுபவர்களைக் கழுவிலேற்றினாலே ஒழிய இந்த நாடகங்கள் முடியும் என்று தோன்றவில்லை.
.
.

Nov 22, 2010

நலம் தரும் திங்கள் - உடல்நலனில் யோகா, தியானம் - 2



சென்ற வாரம் நம் உடல் நலனில் யோகா எவ்வாறு பங்கு வகிக்கிறது எனச் சுருக்கமாகப் பார்த்தோம்.

உண்மையாகப் பார்த்தோமென்றால் யோகா, தியானம் ஆகியவற்றைப் பற்றிப் படித்துக் கொண்டிருப்பதைவிட, உள்ளே நுழைந்து நீங்கள் அவற்றைத் தனதாக்கிக் கொண்டு தரிசிப்பது சாலச் சிறந்தது. அதன் மூலமே நீங்கள் அவற்றை உண்மையில் உணர இயலும்.

போன திங்கள்'ல பேசும்போது தியானம் பத்தி இந்த வாரம் சொல்றதா சொல்லிட்டு, படிக்கறதை நிறுத்துன்னு சொல்றது சரியா? எனக் கேட்கும் நண்பர்களுக்கு.... தியானம் பற்றி என் சிறு அறிவிற்குத் தெரிந்த தகவல்களை இங்கே பகிர்கிறேன், நான் உணர்ந்த சில விஷயங்களையும் சேர்த்து.

தியானம் என்றால்?


விழிப்புணர்வுடன் அல்லது விழித்த நிலையில் நீங்கள் உறக்கவயப்படும் நிலையையே தியானம் எனலாம்.

நித்திரையில் நீங்கள் உடல், மனம் இரண்டிற்கும் ஓய்வு தருகிறீர்கள். தியானத்திலும் கூட அதேதான் நடக்கிறது. தியானத்தில் உடல் முழுக்க முழுக்க ஓய்வு எடுக்கிறது. மனமும் கூட ஓய்வு எடுக்கிறது, ஆனால் ஒருவித விழிப்புணர்வுடன்.


எப்படி தியானம் செய்ய?

எப்படி தியானம் செய்வது என நாம் இக்கட்டுரை வாயிலாகப் பாடம் எடுக்க இயலாது. அது சாத்தியப்படும் விஷயமும் அல்ல. தியானம் செய்யப்படும் முறை பற்றி மட்டும் பார்க்கலாம்.

தியானத்தில் பல வகைகள் உள்ளன. எல்லா முறைகளுமே மனதை ஏதேனும் ஒரு விஷயம் நோக்கி ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளே.

சும்மா இருப்பதே சுகம்தானே எனத் தாயுமானவர் சொன்னதை சென்ற இரு வாரங்களுக்கு முன் "உடற்பயிற்சி" விஷயத்தில் பொருத்திப் பார்க்கலாகாது எனச் சொல்லியிருந்தோம். ஆனால் தியானம் என்று வரும்போது தாயுமானவர் வார்த்தைகளை நம் துணைக்கு அழைத்துக் கொள்வோம்.

"சும்மா இருப்பதே சுகம்" என்பது நிச்சயமாக தியானத்தில் இருப்பது சுகம் எனும் பொருளில் அந்த மகான் உதிர்த்த வார்த்தைகள். சும்மா இருப்பது என்றால் அப்படியே சும்மா இருப்பது. உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவும் கூட. சாத்தியமா உங்களுக்கு? எந்த ஒரு எண்ணமும் இடை புகாமல் நிச்சலனமாக உங்கள் மனதை வைத்திருக்க உங்களால் இயன்றால் நீங்கள் தியான வயப்பட்டு விட்டீர்கள் என்று பொருள்.

மீண்டும் சொல்கிறேன்... 

மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... 
தியானத்தையும் கூட நீங்கள் ஒரு குருவின் துணைக் கொண்டே கற்றுக் கொள்ளுங்கள். புத்தக தியானம், தொலைக்காட்சி தியானங்கள் மூலம் உங்களால் முழுமையாக தியானம் கற்க இயலாது.


தியானத்தின் பலன்கள்:

ஓய்வின் வாயிலாக நீங்கள் அளிக்கும் அமைதி உங்கள் உடலுக்கும் மனதிற்கும் ஒரு புத்துணர்ச்சிக் காரணியாக அமைகிறது. தொடர் பயிற்சியின் வாயிலாக உடல், மன நலன்களில் நீங்கள் முன்னேற்றம் காணலாம் *.

தியானம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. ஒரு முகப் பயிற்சியில் ஈடுபடும் மனமானது புத்திக் கூர்மைக்கு (intelligence) வழி வகுக்கிறது. 

கலைத்துப் போடப்பட்ட துணி மூட்டையில் ஒற்றைக் கைக்குட்டையைத் தேடுவது மிகக் கடினமான விஷயம். நம் மனம் எப்போதும் ஒரு துணிமூட்டை போலவே இருக்கிறது. தியானம் பழகிய மனது அழகாக அலமாரியில் அடுக்கி வைத்த துணிமணிகளாய் உங்கள் சிந்தனை அடுக்குகளை நேர்த்தி செய்யும் வல்லமை பெற்றது.

மனம் ஒழுங்குபட்டால் உடல் ஒழுங்குபடுகிறது.

இப்படியாக தியானத்தின் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

* என் ஆசிரியர் சொன்னது:
தியானம் ஒரு கவிக்-பிக்ஸ் அல்ல, ஆனால் அது புத்தூர் கட்டு போல. உங்களுக்கு பொறுமை, நிதானம், விடா முயற்சி, தொடர் பயிற்சி இருந்தால் மட்டும்தான் அதன் நிஜப் பலன்களை நீங்கள் அடைய இயலும்.

தியானத்தின் போது நான் என்னவெல்லாம் உணர முடியும்?

சில வருடங்களுக்கு முன்... ஒரு தியானப் பயிற்சி வகுப்பில், பயிற்சி முடிந்ததும் நிகழ்ந்த கேள்வி பதில் பகுதியில்:

மாணவரின் கேள்வி: எனக்கு தியானம் பண்ணும்போது யானை மேலே உட்கார்ந்து பயணம் செய்யறாப்போல இருக்கு...

ஆசிரியர் பதில்: யானை மேலே உட்கார்ந்த மாதிரி தோணினா நல்லது. தோணலைன்னா ரொம்ப நல்லது.

இன்னொருவர் கேள்வி: எனக்கு ஆகாயத்துல பறக்கறாப்போல இருக்கு.

பதில்: ஆகாயத்துல பறக்கறாப்போல இருந்தா நல்லது. அப்படி பறக்கறாப்போல இல்லைன்னா ரொம்ப நல்லது.

கே: எனக்கு தூக்கம் வருது.

ப: தூக்கம் வந்தா நல்லது. வரலைன்னா ரொம்ப நல்லது.

இது கிண்டலுக்காக அந்த ஆசிரியர் தன் மாணவர்களுக்கு சொன்ன பதில்கள். இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் தியானத்தில்  ஒவ்வொருவரின் அனுபவமும், ஒவ்வொருமுறை அனுபவமும் வேறுபடும்.என்பதே.

உங்கள் அனுபவம் நோக்கிப் பயணம் செய்ய உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.




யோகா / தியானம் - எங்கே கற்கலாம்?


நான் பிராணயாமப் பயிற்சிகளையும் சூன்யத் தியானத்தையும் ஈஷா யோக மையம் மூலம் கற்றேன். மிகவும் ஆற்றல் வாய்ந்த பயிற்சிகள் அவை.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலைப் பயிற்சிகள் பற்றியும் மிகச் சிறந்த ஆற்றல் மிக்க பயிற்சிகள் எனக் கேட்டறிந்திருக்கிறேன்.

பாபா ராம்தேவ் அவர்களின் பயிற்சிப் பட்டறைகள் சர்வதேச அளவில் பிரபலமானவை.

மறைதிரு.வேதாத்ரி மகரிஷி அவர்களின் மனவளக் கலைப் பயிற்சிகள் மிக்க திறன் வாய்ந்தவை.

இவர்களிடம்தான் கற்கவேண்டும் என்று இல்லை. உங்கள் பகுதியில் யாரேனும் தேர்ந்த யோகா / தியானப் பயிற்சி ஆசிரியர்கள் இருந்தாலும் தேடித் பாருங்கள்.


தொடரின் முந்தைய பதிவுகள் 


.
.
.

Nov 15, 2010

நலம் தரும் திங்கள் - உடல்நலனில் யோகா, தியானம் - 1

இதய நலனில் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சென்ற வாரம் பார்த்தோம்.

இதய நலனில் யோகா மற்றும் தியானத்தின் பங்கைப் பற்றி இந்த வாரம் பார்க்கவிருப்பதாகவும் சொல்லியிருந்தோம். 



டாக்டர்.வரசித்தன் அவர்கள் சென்ற இடுகையில் அளித்த பின்னூட்டத்தில் "உடற்பயிற்சி இதயத்துக்கு மட்டுமல்ல பல நோய்களுக்கு மருந்தாகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார் (நன்றி டாக்டர்). இதனைக் கருத்தில் கொண்டும்; மேலும் நாம் இதயம் மற்றும் இதய நலன் பற்றி நிறைய பேசிவிட்டதாலும்; இதய வட்டம் தாண்டி இன்று பொதுவான உடல்நலம்  குறித்து விவாதிப்போம்.

எனவே, இன்றைய இடுகை உடல்நலனில் யோகா மற்றும் தியானத்தின் பங்கு என்று அமைகிறது.

யோகா என்றால்?

யோகா என்ற வார்த்தைக்கும் யோகாசனம் என்ற வார்த்தைக்கும் வித்தியாசம் பெரிதாக இல்லை என்றாலும், இரண்டும் வெவ்வேறு அர்த்தம் கொண்டவை. 

குழப்புகிறேனா?

யோகா என்ற வார்த்தை நம்மிடையே பொதுவாக உடலை வளைத்துச் செய்யும் ஒரு பயிற்சியைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உடலை வளைத்துச் செய்யப்படுவது யோகாசனம் எனக் குறிப்பிடப்பட வேண்டும். யோகாசனம் என்பது "யோகா" என்ற வாழ்க்கை முறையின் ஒரு அங்கம், அவ்வளவே. 

"யோகா" என்ற வார்த்தையின் நிஜ அர்த்தம் இரண்டு வார்த்தைகளில் விளக்கத் தக்கதல்ல. உள்ளப் பயிற்சி, உணவுப் பயிற்சி, தியானம், ஆசனம் எனப் பல்வேறு நிலைகளைக் கொண்டது யோகா. உங்கள் தற்போதைய வாழ்க்கை முறை, உடல்நலன், மன நலம் இவற்றில் இருந்து எந்தப் பயிற்சி உங்களை உண்மையாக ஒரு படி மேம்படுத்தி மேலே அழைத்துச் செல்கிறதோ அதை நீங்கள் யோகா என்றழைக்கலாம்.


"Yoga refers to traditional physical and mental disciplines that originated in India." எனக் குறிப்பிடுகிறது விக்கிபீடியா. "உளரீதியான மற்றும் உடல்ரீதியான ஒழுங்கு முறைகளைக் கொண்ட ஒரு பாரம்பரிய வாழ்க்கை முறை" எனப் பொருள் கொள்ளலாம்.

யோசித்துப் பாருங்கள்! உடலும் உள்ளமும் நீங்கள் சொல்வதைக் கேட்கும் பயிற்சி உங்கள் கைவசம் இருந்தால் உடல் நலன் உங்கள் கட்டுப்பாட்டில் கண்டிப்பாக இருக்கும் அல்லவா?

யோகாவின் பலன்கள்:

யோகா உங்கள் உடல் நலனுக்கு நேரிடை மருந்தாக அமைவதில்லை. யோகாவை உங்கள் வாழ்க்கை முறையில் நீங்கள் அழைத்து வந்தால்; மன அழுத்தம், டென்ஷன் ஆகியவற்றில் இருந்து முதல் படியிலேயே உங்களுக்கு விடுவிப்பைத் தருகிறது. உங்கள் உடல் நலனைப் பேண இது பெரும் உதவியாக இருக்கிறது. 

மன அழுத்தம், டென்ஷன் ஆகியவற்றில் இருந்து நீங்கள் விடுபடும்போது இயற்கையிலேயே ரத்த அழுத்தம், சுவாசப் பிரச்னைகள் ஆகியவற்றில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கிறது.

சில வகை ஆசனப் பயிற்சிகள் உங்கள் உடல் இயக்கத்தைச் சீராக்கி மூட்டு, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் உங்களுக்கு தீர்வு தருகிறது. உங்கள் உடல் எடையை ஒரு கட்டில் வைக்கிறது.

யோகாவின் ஒரு முக்கிய அங்கமான பிராணயாமம் என்பது பலவகை மூச்சுப் பயிற்சிகளை உள்ளடக்கியது. பிராணயாமப் பயிற்சியில் நீங்கள்  ஈடுபட்டால் அது சுவாசக் கோளாறுகள், சைனஸ், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஆகியவற்றுக்கு மருந்தாக அமைகிறது.

பிராணயாமம், யோகாசனம் ஆகியவற்றை நீங்கள் மேற்கொள்ளும்போது உங்கள் உணவு முறையில் தன்னாலே ஒரு ஒழுங்குமுறைக்கு நீங்கள் வரும் அவசியம் ஏற்படுகிறது. அது உங்கள் உடல்நலனைப் பேண ஒரு கூடுதல் காரணியாக அமைகிறது.



யார் கற்றுத் தருவார்கள்?

ஓகே சார், ரொம்ப தேங்க்ஸ்! உடனே கடைக்குப் போயி "யோகாசனம் செய்வது எப்படி", "மனசே அமைதி ப்ளீஸ்" இந்த புத்தகமெல்லாம் வாங்கி வந்து பயிற்சியை ஆரம்பிக்கிறேன் என்று கிளம்பிட்டீங்களா. உங்க ஆர்வத்துக்கு ஒரு சலாம். ஆனா கொஞ்சம் உட்காருங்க...!!

யோகா தியானம் போன்றவை கண்டிப்பாக ஒரு தேர்ந்த ஆசிரியரின் வாயிலாக மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டிய பயிற்சி முறைகள். புத்தகங்களோ, தொலைக்காட்சியோ கொண்டு நீங்கள் கற்றுக் கொண்டால் அவை முறையாகக் கற்றுக் கொண்டது ஆகாது. நீங்கள் கற்றுக் கொண்டது சரியா எனப் பரிசோதித்து நீங்கள் செய்யும் தவறுகளைத் திருத்தி உங்களை சரியான முறையில் ஆசன / சுவாசப் பயிற்சியில் ஈடுபடுத்த ஒரு பயிற்சி பெற்ற ஆசிரியர் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து எதனையும் தயவு செய்து வைத்துக் கொள்ளாதீர்கள்.

அடுத்த திங்களில் தியானம் பற்றி பார்ப்போம். எங்கெல்லாம் கற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளது எனவும் அங்கே பார்க்கலாம்.





தொடரின் முந்தைய பதிவுகள் 



.
.
Related Posts Plugin for WordPress, Blogger...