Nov 22, 2010

நலம் தரும் திங்கள் - உடல்நலனில் யோகா, தியானம் - 2



சென்ற வாரம் நம் உடல் நலனில் யோகா எவ்வாறு பங்கு வகிக்கிறது எனச் சுருக்கமாகப் பார்த்தோம்.

உண்மையாகப் பார்த்தோமென்றால் யோகா, தியானம் ஆகியவற்றைப் பற்றிப் படித்துக் கொண்டிருப்பதைவிட, உள்ளே நுழைந்து நீங்கள் அவற்றைத் தனதாக்கிக் கொண்டு தரிசிப்பது சாலச் சிறந்தது. அதன் மூலமே நீங்கள் அவற்றை உண்மையில் உணர இயலும்.

போன திங்கள்'ல பேசும்போது தியானம் பத்தி இந்த வாரம் சொல்றதா சொல்லிட்டு, படிக்கறதை நிறுத்துன்னு சொல்றது சரியா? எனக் கேட்கும் நண்பர்களுக்கு.... தியானம் பற்றி என் சிறு அறிவிற்குத் தெரிந்த தகவல்களை இங்கே பகிர்கிறேன், நான் உணர்ந்த சில விஷயங்களையும் சேர்த்து.

தியானம் என்றால்?


விழிப்புணர்வுடன் அல்லது விழித்த நிலையில் நீங்கள் உறக்கவயப்படும் நிலையையே தியானம் எனலாம்.

நித்திரையில் நீங்கள் உடல், மனம் இரண்டிற்கும் ஓய்வு தருகிறீர்கள். தியானத்திலும் கூட அதேதான் நடக்கிறது. தியானத்தில் உடல் முழுக்க முழுக்க ஓய்வு எடுக்கிறது. மனமும் கூட ஓய்வு எடுக்கிறது, ஆனால் ஒருவித விழிப்புணர்வுடன்.


எப்படி தியானம் செய்ய?

எப்படி தியானம் செய்வது என நாம் இக்கட்டுரை வாயிலாகப் பாடம் எடுக்க இயலாது. அது சாத்தியப்படும் விஷயமும் அல்ல. தியானம் செய்யப்படும் முறை பற்றி மட்டும் பார்க்கலாம்.

தியானத்தில் பல வகைகள் உள்ளன. எல்லா முறைகளுமே மனதை ஏதேனும் ஒரு விஷயம் நோக்கி ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளே.

சும்மா இருப்பதே சுகம்தானே எனத் தாயுமானவர் சொன்னதை சென்ற இரு வாரங்களுக்கு முன் "உடற்பயிற்சி" விஷயத்தில் பொருத்திப் பார்க்கலாகாது எனச் சொல்லியிருந்தோம். ஆனால் தியானம் என்று வரும்போது தாயுமானவர் வார்த்தைகளை நம் துணைக்கு அழைத்துக் கொள்வோம்.

"சும்மா இருப்பதே சுகம்" என்பது நிச்சயமாக தியானத்தில் இருப்பது சுகம் எனும் பொருளில் அந்த மகான் உதிர்த்த வார்த்தைகள். சும்மா இருப்பது என்றால் அப்படியே சும்மா இருப்பது. உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவும் கூட. சாத்தியமா உங்களுக்கு? எந்த ஒரு எண்ணமும் இடை புகாமல் நிச்சலனமாக உங்கள் மனதை வைத்திருக்க உங்களால் இயன்றால் நீங்கள் தியான வயப்பட்டு விட்டீர்கள் என்று பொருள்.

மீண்டும் சொல்கிறேன்... 

மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... 
தியானத்தையும் கூட நீங்கள் ஒரு குருவின் துணைக் கொண்டே கற்றுக் கொள்ளுங்கள். புத்தக தியானம், தொலைக்காட்சி தியானங்கள் மூலம் உங்களால் முழுமையாக தியானம் கற்க இயலாது.


தியானத்தின் பலன்கள்:

ஓய்வின் வாயிலாக நீங்கள் அளிக்கும் அமைதி உங்கள் உடலுக்கும் மனதிற்கும் ஒரு புத்துணர்ச்சிக் காரணியாக அமைகிறது. தொடர் பயிற்சியின் வாயிலாக உடல், மன நலன்களில் நீங்கள் முன்னேற்றம் காணலாம் *.

தியானம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. ஒரு முகப் பயிற்சியில் ஈடுபடும் மனமானது புத்திக் கூர்மைக்கு (intelligence) வழி வகுக்கிறது. 

கலைத்துப் போடப்பட்ட துணி மூட்டையில் ஒற்றைக் கைக்குட்டையைத் தேடுவது மிகக் கடினமான விஷயம். நம் மனம் எப்போதும் ஒரு துணிமூட்டை போலவே இருக்கிறது. தியானம் பழகிய மனது அழகாக அலமாரியில் அடுக்கி வைத்த துணிமணிகளாய் உங்கள் சிந்தனை அடுக்குகளை நேர்த்தி செய்யும் வல்லமை பெற்றது.

மனம் ஒழுங்குபட்டால் உடல் ஒழுங்குபடுகிறது.

இப்படியாக தியானத்தின் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

* என் ஆசிரியர் சொன்னது:
தியானம் ஒரு கவிக்-பிக்ஸ் அல்ல, ஆனால் அது புத்தூர் கட்டு போல. உங்களுக்கு பொறுமை, நிதானம், விடா முயற்சி, தொடர் பயிற்சி இருந்தால் மட்டும்தான் அதன் நிஜப் பலன்களை நீங்கள் அடைய இயலும்.

தியானத்தின் போது நான் என்னவெல்லாம் உணர முடியும்?

சில வருடங்களுக்கு முன்... ஒரு தியானப் பயிற்சி வகுப்பில், பயிற்சி முடிந்ததும் நிகழ்ந்த கேள்வி பதில் பகுதியில்:

மாணவரின் கேள்வி: எனக்கு தியானம் பண்ணும்போது யானை மேலே உட்கார்ந்து பயணம் செய்யறாப்போல இருக்கு...

ஆசிரியர் பதில்: யானை மேலே உட்கார்ந்த மாதிரி தோணினா நல்லது. தோணலைன்னா ரொம்ப நல்லது.

இன்னொருவர் கேள்வி: எனக்கு ஆகாயத்துல பறக்கறாப்போல இருக்கு.

பதில்: ஆகாயத்துல பறக்கறாப்போல இருந்தா நல்லது. அப்படி பறக்கறாப்போல இல்லைன்னா ரொம்ப நல்லது.

கே: எனக்கு தூக்கம் வருது.

ப: தூக்கம் வந்தா நல்லது. வரலைன்னா ரொம்ப நல்லது.

இது கிண்டலுக்காக அந்த ஆசிரியர் தன் மாணவர்களுக்கு சொன்ன பதில்கள். இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் தியானத்தில்  ஒவ்வொருவரின் அனுபவமும், ஒவ்வொருமுறை அனுபவமும் வேறுபடும்.என்பதே.

உங்கள் அனுபவம் நோக்கிப் பயணம் செய்ய உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.




யோகா / தியானம் - எங்கே கற்கலாம்?


நான் பிராணயாமப் பயிற்சிகளையும் சூன்யத் தியானத்தையும் ஈஷா யோக மையம் மூலம் கற்றேன். மிகவும் ஆற்றல் வாய்ந்த பயிற்சிகள் அவை.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலைப் பயிற்சிகள் பற்றியும் மிகச் சிறந்த ஆற்றல் மிக்க பயிற்சிகள் எனக் கேட்டறிந்திருக்கிறேன்.

பாபா ராம்தேவ் அவர்களின் பயிற்சிப் பட்டறைகள் சர்வதேச அளவில் பிரபலமானவை.

மறைதிரு.வேதாத்ரி மகரிஷி அவர்களின் மனவளக் கலைப் பயிற்சிகள் மிக்க திறன் வாய்ந்தவை.

இவர்களிடம்தான் கற்கவேண்டும் என்று இல்லை. உங்கள் பகுதியில் யாரேனும் தேர்ந்த யோகா / தியானப் பயிற்சி ஆசிரியர்கள் இருந்தாலும் தேடித் பாருங்கள்.


தொடரின் முந்தைய பதிவுகள் 


.
.
.

8 comments:

natbas said...

.ஜி நீங்களுமா ஜி?!

நன்றாக இருக்கிறது நன்றி.

Giri Ramasubramanian said...

//.ஜி நீங்களுமா ஜி?!?/

?? ஜி?

THOPPITHOPPI said...

பயனுள்ள பதிவு. மொக்கை பதிவுகள் ஒட்டு வாங்கும்போது இந்த மாதிரியான வாழ்க்கைக்கு தேவையான பதிவு ஓட்டு வாங்காதது வருத்தமே.தொடர்ந்து எழுதுங்க ஓட்டுக்களை கருத்தில் கொள்ள வேண்டாம்.

THOPPITHOPPI said...

தமிழ் 10, தமிழ் மனத்தில் இணைத்தால் இன்னும் கொஞ்சம்பேர் படிப்பாங்க

Giri Ramasubramanian said...

@ நட்பாஸ்
நீங்க இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லலை.

Giri Ramasubramanian said...

@ தொப்பி தொப்பி

ரொம்ப நன்றிங்க சார்! இது போன்ற ஊக்கங்கள் ஆயிரம் ஓட்டுகளுக்குச் சமம். தமிழ்மணத்தில் இணைக்கிறேன். தமிழ் 10௦ முயற்சிக்க வேணும்.

நிகழ்காலத்தில்... said...

//இது கிண்டலுக்காக அந்த ஆசிரியர் தன் மாணவர்களுக்கு சொன்ன பதில்கள்.//

இல்லை, இது ஒரு நிதர்சனமான உண்மை, நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிகளில் இதுவும் ஒன்று...

மற்றபடி தங்களின் கருத்துகள் நன்றாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள் அதற்கு என் வாழ்த்துகள்

natbas said...

நீங்க எப்ப குருஜி ஆனீங்க? அதுதான் நீங்களுமா ஜி மீன்ஸ்...

ஈஷா யோகா மாஸ்டர் ஆயிட்டீங்களே!

Related Posts Plugin for WordPress, Blogger...