Showing posts with label நலம் தரும் திங்கள். Show all posts
Showing posts with label நலம் தரும் திங்கள். Show all posts

Dec 20, 2010

நலம் தரும் திங்கள் - தொப்புள்கொடி உறவு!


ஸ்டெம் செல் குறித்து சில தகவல்கள்

கடந்த ஏப்ரலில் ஷைலஜாவின் பிரசவ நேரத்தில் மருத்துவமனையின் காரிடார்களில் நகங்கடித்தபடி இங்குமங்கும் நான் உலாத்திக் கொண்டிருந்தேன். லேபர் அறைக்குள் ஷைலஜா சென்று ஐந்து நிமிடங்கள்தான் ஆகியிருந்தன.

"எக்ஸ்க்யூஸ்மி சார், மிஸ்டர் கிரி?", விற்பனைப்பெண்  தோற்றத்தில் ஒரு யுவதி. 

"நான் ஜீவன் ப்ளட் பேங்க்'ல இருந்து வர்றேன். ஸ்டெம்செல் சேமிப்பு வங்கி  மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்"

"சொல்லுங்க"

"இப்போ உங்க மனைவியின் பிரசவத்திற்கு பின்னால் நீங்க தூக்கி எறியப்போகும் நஞ்சுக்கொடியில் இருந்து ரத்த சாம்பிள் சேகரிக்க உங்க அனுமதி வேணும்"

இதுபற்றி மோகன் முன்னமே சொல்லியிருந்தான்.

"இதுக்கு ஏதேனும்...."

"இல்லை நீங்க இதுக்கு ஏதும் கட்டணம் தர அவசியம் இல்லை. நாங்க சேகரிப்பது எங்கள் ஆராய்ச்சிக்கு மற்றும் எங்களுக்காக சேமித்து வைக்க. உங்களுக்காக நாங்கள் இதை பாதுகாக்க பராமரிக்க வேணும்'னு நீங்க விரும்பினால் அதற்கு தனி கட்டணங்கள் உண்டு. அதுக்கு இப்போ அவசரம் இல்லை. எங்க எக்சிக்யூடிவ் ரெண்டு நாட்களுக்கு பிறகு உங்களை வந்து பார்ப்பார். அவர்கிட்ட நீங்க பேசிக்கோங்க. இப்போ உங்க அனுமதி மட்டும் வேணும்", என அந்தப் பெண் ஏதோ பேப்பரில் கையொப்பம் வாங்க கொண்டார். 

பிரசவ நேரத்தில் குழந்தை பிறந்ததும் குழந்தையை அன்னையிடம் இருந்து பிரிக்க அதன் தொப்புள் கொடி இரு முனைகளிலும் பாதுகாப்பான முறையில் கத்தரிக்கப்படுகிறது. அன்னையின் கருப்பைப் பகுதி மற்றும் குழந்தையின் தொப்புள் பகுதி என இரு முனைகளிலும் உணவு பகிர்விற்காக இணைப்புக் குழாயாக செயல்பட்ட அந்தக் குழாய்கள் இப்போது இரு முனைகளிலும் பாதுகாப்பாக சீலிடப்படுகிறது (முன்பெல்லாம்  முடி போடுவார்கள்). இடையில் இருக்கும் பகுதி எதற்கும் உபயோகம் இல்லாமல் குப்பைக் கூடைக்குச் செல்கிறது. அந்தப் பகுதியில் இருந்துதான் ரத்தம் சேகரிக்கப்படுவதாக அந்தப் பெண்மணி சொன்னார். 

அந்த ரத்தத்தை சேமித்து வைத்து மருத்துவத் துறையில் பயன்படுத்துகிறார்கள்.

அப்படி என்ன பயன்கள்? அது என்ன ஸ்டெம்செல்? 

பத்தே வார்த்தைகளில் இதன் பயனைச் சொல்லவேண்டுமென்றால் "எதிர்காலத்தில் உங்கள் குடும்பத்தினருக்கு சில சிக்கலான நோய் சிகிச்சைகளுக்கு இந்த ஸ்டெம்செல்  உதவலாம்"

இப்போது விரிவாய் இதுபற்றிப் பார்ப்போம்! வாருங்கள் சில அடிப்படைக் கேள்விகளில் இருந்து செல்வோம்.

ஸ்டெம் செல் என்றால்?

உடலின் எந்த ஒரு அணு /செல்லுக்கு, தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு, உடலின் 210 வித்தியாசமான அனுக்களாகவும் தேவையான தருணத்தில், தன்னை உருமாற்றிக்கொள்ளும் திறனும் இருக்கிறதோ அந்த செல்லையே ஸ்டெம் செல் என்கிறது உயிரியல்/அறிவியல்.
இது தமிழில் குறுத்தணுக்கள் அல்லது பலுக்கல் என்னும் கலைச்சொல்லால் அழைக்கப்படுகிறது! (தாவரங்களில் குருத்துக்களிலும், மனிதர்களின் வளரும் தன்மையுள்ள சில உடல் பாகங்களிலும் இருப்பவையாதலால் இப்பெயர்!)
நன்றி: மேலிருப்பான் <http://padmahari.wordpress.com>




தொப்புள் கொடியிலிருந்து எவ்வளவு ரத்தம் கிடைக்கும்?

ஏறத்தாழ ஐந்து டீ ஸ்பூன். கொஞ்சம் கூட வலிக்காது. சில நிமிடங்களில் எடுத்து விடுவார்கள்.

தொப்புள் கொடி ரத்தத்தின் சிறப்பு என்ன?

அது பிராண வாயுவை உடலுக்குக் கொண்டு செல்லும் சிவப்பு உயிரணுக்கள் மற்றும் நோயை எதிர்க்கக்கூடிய வெண் உயிரணுக்கள் என இரு வகை உயிரணுக்களையும் உற்பத்தி செய்யவல்லது. அதில் ஸ்டெம் செல் ( முதல்நிலை உயிரணு) இருக்கிறது. இதிலிருந்துதான் ப்ளட் செல்கள் (ரத்த உயிரணுக்கள்) உற்பத்தியாகின்றன.

தொப்புள் கொடி ரத்தத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம்?

எதிர்காலத்தில் நீரிழிவு, முடக்கு வாதம் (ரூமாடோய்ட் ஆர்த்ரிடிஸ்) போன்ற நோய்களை குணப்படுத்த உதவும். அது மட்டுமல்ல, எதிர்காலத்தில் இந்த ரத்தத்தில் உள்ள முதல்நிலை உயிரணுக்களைக் கொண்டு கல்லீரல், சிறுநீரகம், அவ்வளவு ஏன் இதயத்தையே உற்பத்தி செய்ய முடியும் என்று நம்புகிறார்கள். இப்போதே பற்களை வளர்த்து விட்டார்கள்.

இப்போது எதற்குப் பயன்படுகிறது?

இரத்தப்புற்றுநோய் (லுகீமியா) வந்தவர்களது எலும்பு மஜ்ஜையை (போன் மேரோ) வேதிச் சிகிச்சை (கீமோதெரபி) மூலம் அழித்து விட்டு இரவல் வாங்கிய முதல்நிலை உயிரணுக்களை அங்கு இட்டு நிரப்புகிறார்கள். இது இரவல் கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக தொப்புள் கொடி ரத்தத்தைப் பயன்படுத்தலாம்.

என் மகனின் தொப்புள் கொடி ரத்தம் எதிர்காலத்தில் அவன் உயிரைக் காப்பாற்றுமா?

அது தேவைப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே. அப்படித் தேவைப்பட்டாலும் அது பயன்படுத்தப்படுவது உறுதியில்ல- எனக்குப் புற்று நோய் வரக் காரணமாக இருந்த முதல்நிலை உயிரணுக்கள் என் தொப்புள் கொடி ரத்தத்திலும் இருக்கலாமில்லையா? ஆனால் என் தொப்புள் கொடி ரத்தம் என் உடன் பிறந்தவர்கள், சுற்றம் மற்றும் நட்பு வட்டத்துக்குக் கை கொடுக்கலாம்.

ஸ்டெம்செல் என்னும் சொல் மருத்துவத்துறையில் ஆச்சர்யங்களையும், நம்பிக்கைகளையும், வரவேற்பினையும் மட்டுமே பெற்ற ஒரு சொல் அல்ல, சமீப காலமாக பல கருத்து மோதல்களையும் சர்ச்சைகளையும் கூட உள்ளடக்கிய சொல் இது.

இது பற்றி அறிவியற்பூர்வ தகவல்களைத் தர நான் ஒரு மருத்துவனல்ல. எனினும் என் அனுபவத்தில் அறிந்ததைச் சொன்னேன்  சற்றே பின்னணித் தகவல்களை இணைத்து.


தொடர்புடைய சுட்டிகள்-

அமெரிக்காவில் முதல்நிலை உயிரணு ஆய்வு (ஸ்டெம் செல் ரிசர்ச்)- http://www.physiciansforlife.org/content/view/215/38/
.
.
.

Nov 22, 2010

நலம் தரும் திங்கள் - உடல்நலனில் யோகா, தியானம் - 2



சென்ற வாரம் நம் உடல் நலனில் யோகா எவ்வாறு பங்கு வகிக்கிறது எனச் சுருக்கமாகப் பார்த்தோம்.

உண்மையாகப் பார்த்தோமென்றால் யோகா, தியானம் ஆகியவற்றைப் பற்றிப் படித்துக் கொண்டிருப்பதைவிட, உள்ளே நுழைந்து நீங்கள் அவற்றைத் தனதாக்கிக் கொண்டு தரிசிப்பது சாலச் சிறந்தது. அதன் மூலமே நீங்கள் அவற்றை உண்மையில் உணர இயலும்.

போன திங்கள்'ல பேசும்போது தியானம் பத்தி இந்த வாரம் சொல்றதா சொல்லிட்டு, படிக்கறதை நிறுத்துன்னு சொல்றது சரியா? எனக் கேட்கும் நண்பர்களுக்கு.... தியானம் பற்றி என் சிறு அறிவிற்குத் தெரிந்த தகவல்களை இங்கே பகிர்கிறேன், நான் உணர்ந்த சில விஷயங்களையும் சேர்த்து.

தியானம் என்றால்?


விழிப்புணர்வுடன் அல்லது விழித்த நிலையில் நீங்கள் உறக்கவயப்படும் நிலையையே தியானம் எனலாம்.

நித்திரையில் நீங்கள் உடல், மனம் இரண்டிற்கும் ஓய்வு தருகிறீர்கள். தியானத்திலும் கூட அதேதான் நடக்கிறது. தியானத்தில் உடல் முழுக்க முழுக்க ஓய்வு எடுக்கிறது. மனமும் கூட ஓய்வு எடுக்கிறது, ஆனால் ஒருவித விழிப்புணர்வுடன்.


எப்படி தியானம் செய்ய?

எப்படி தியானம் செய்வது என நாம் இக்கட்டுரை வாயிலாகப் பாடம் எடுக்க இயலாது. அது சாத்தியப்படும் விஷயமும் அல்ல. தியானம் செய்யப்படும் முறை பற்றி மட்டும் பார்க்கலாம்.

தியானத்தில் பல வகைகள் உள்ளன. எல்லா முறைகளுமே மனதை ஏதேனும் ஒரு விஷயம் நோக்கி ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளே.

சும்மா இருப்பதே சுகம்தானே எனத் தாயுமானவர் சொன்னதை சென்ற இரு வாரங்களுக்கு முன் "உடற்பயிற்சி" விஷயத்தில் பொருத்திப் பார்க்கலாகாது எனச் சொல்லியிருந்தோம். ஆனால் தியானம் என்று வரும்போது தாயுமானவர் வார்த்தைகளை நம் துணைக்கு அழைத்துக் கொள்வோம்.

"சும்மா இருப்பதே சுகம்" என்பது நிச்சயமாக தியானத்தில் இருப்பது சுகம் எனும் பொருளில் அந்த மகான் உதிர்த்த வார்த்தைகள். சும்மா இருப்பது என்றால் அப்படியே சும்மா இருப்பது. உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவும் கூட. சாத்தியமா உங்களுக்கு? எந்த ஒரு எண்ணமும் இடை புகாமல் நிச்சலனமாக உங்கள் மனதை வைத்திருக்க உங்களால் இயன்றால் நீங்கள் தியான வயப்பட்டு விட்டீர்கள் என்று பொருள்.

மீண்டும் சொல்கிறேன்... 

மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... 
தியானத்தையும் கூட நீங்கள் ஒரு குருவின் துணைக் கொண்டே கற்றுக் கொள்ளுங்கள். புத்தக தியானம், தொலைக்காட்சி தியானங்கள் மூலம் உங்களால் முழுமையாக தியானம் கற்க இயலாது.


தியானத்தின் பலன்கள்:

ஓய்வின் வாயிலாக நீங்கள் அளிக்கும் அமைதி உங்கள் உடலுக்கும் மனதிற்கும் ஒரு புத்துணர்ச்சிக் காரணியாக அமைகிறது. தொடர் பயிற்சியின் வாயிலாக உடல், மன நலன்களில் நீங்கள் முன்னேற்றம் காணலாம் *.

தியானம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. ஒரு முகப் பயிற்சியில் ஈடுபடும் மனமானது புத்திக் கூர்மைக்கு (intelligence) வழி வகுக்கிறது. 

கலைத்துப் போடப்பட்ட துணி மூட்டையில் ஒற்றைக் கைக்குட்டையைத் தேடுவது மிகக் கடினமான விஷயம். நம் மனம் எப்போதும் ஒரு துணிமூட்டை போலவே இருக்கிறது. தியானம் பழகிய மனது அழகாக அலமாரியில் அடுக்கி வைத்த துணிமணிகளாய் உங்கள் சிந்தனை அடுக்குகளை நேர்த்தி செய்யும் வல்லமை பெற்றது.

மனம் ஒழுங்குபட்டால் உடல் ஒழுங்குபடுகிறது.

இப்படியாக தியானத்தின் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

* என் ஆசிரியர் சொன்னது:
தியானம் ஒரு கவிக்-பிக்ஸ் அல்ல, ஆனால் அது புத்தூர் கட்டு போல. உங்களுக்கு பொறுமை, நிதானம், விடா முயற்சி, தொடர் பயிற்சி இருந்தால் மட்டும்தான் அதன் நிஜப் பலன்களை நீங்கள் அடைய இயலும்.

தியானத்தின் போது நான் என்னவெல்லாம் உணர முடியும்?

சில வருடங்களுக்கு முன்... ஒரு தியானப் பயிற்சி வகுப்பில், பயிற்சி முடிந்ததும் நிகழ்ந்த கேள்வி பதில் பகுதியில்:

மாணவரின் கேள்வி: எனக்கு தியானம் பண்ணும்போது யானை மேலே உட்கார்ந்து பயணம் செய்யறாப்போல இருக்கு...

ஆசிரியர் பதில்: யானை மேலே உட்கார்ந்த மாதிரி தோணினா நல்லது. தோணலைன்னா ரொம்ப நல்லது.

இன்னொருவர் கேள்வி: எனக்கு ஆகாயத்துல பறக்கறாப்போல இருக்கு.

பதில்: ஆகாயத்துல பறக்கறாப்போல இருந்தா நல்லது. அப்படி பறக்கறாப்போல இல்லைன்னா ரொம்ப நல்லது.

கே: எனக்கு தூக்கம் வருது.

ப: தூக்கம் வந்தா நல்லது. வரலைன்னா ரொம்ப நல்லது.

இது கிண்டலுக்காக அந்த ஆசிரியர் தன் மாணவர்களுக்கு சொன்ன பதில்கள். இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் தியானத்தில்  ஒவ்வொருவரின் அனுபவமும், ஒவ்வொருமுறை அனுபவமும் வேறுபடும்.என்பதே.

உங்கள் அனுபவம் நோக்கிப் பயணம் செய்ய உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.




யோகா / தியானம் - எங்கே கற்கலாம்?


நான் பிராணயாமப் பயிற்சிகளையும் சூன்யத் தியானத்தையும் ஈஷா யோக மையம் மூலம் கற்றேன். மிகவும் ஆற்றல் வாய்ந்த பயிற்சிகள் அவை.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலைப் பயிற்சிகள் பற்றியும் மிகச் சிறந்த ஆற்றல் மிக்க பயிற்சிகள் எனக் கேட்டறிந்திருக்கிறேன்.

பாபா ராம்தேவ் அவர்களின் பயிற்சிப் பட்டறைகள் சர்வதேச அளவில் பிரபலமானவை.

மறைதிரு.வேதாத்ரி மகரிஷி அவர்களின் மனவளக் கலைப் பயிற்சிகள் மிக்க திறன் வாய்ந்தவை.

இவர்களிடம்தான் கற்கவேண்டும் என்று இல்லை. உங்கள் பகுதியில் யாரேனும் தேர்ந்த யோகா / தியானப் பயிற்சி ஆசிரியர்கள் இருந்தாலும் தேடித் பாருங்கள்.


தொடரின் முந்தைய பதிவுகள் 


.
.
.

Nov 15, 2010

நலம் தரும் திங்கள் - உடல்நலனில் யோகா, தியானம் - 1

இதய நலனில் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சென்ற வாரம் பார்த்தோம்.

இதய நலனில் யோகா மற்றும் தியானத்தின் பங்கைப் பற்றி இந்த வாரம் பார்க்கவிருப்பதாகவும் சொல்லியிருந்தோம். 



டாக்டர்.வரசித்தன் அவர்கள் சென்ற இடுகையில் அளித்த பின்னூட்டத்தில் "உடற்பயிற்சி இதயத்துக்கு மட்டுமல்ல பல நோய்களுக்கு மருந்தாகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார் (நன்றி டாக்டர்). இதனைக் கருத்தில் கொண்டும்; மேலும் நாம் இதயம் மற்றும் இதய நலன் பற்றி நிறைய பேசிவிட்டதாலும்; இதய வட்டம் தாண்டி இன்று பொதுவான உடல்நலம்  குறித்து விவாதிப்போம்.

எனவே, இன்றைய இடுகை உடல்நலனில் யோகா மற்றும் தியானத்தின் பங்கு என்று அமைகிறது.

யோகா என்றால்?

யோகா என்ற வார்த்தைக்கும் யோகாசனம் என்ற வார்த்தைக்கும் வித்தியாசம் பெரிதாக இல்லை என்றாலும், இரண்டும் வெவ்வேறு அர்த்தம் கொண்டவை. 

குழப்புகிறேனா?

யோகா என்ற வார்த்தை நம்மிடையே பொதுவாக உடலை வளைத்துச் செய்யும் ஒரு பயிற்சியைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உடலை வளைத்துச் செய்யப்படுவது யோகாசனம் எனக் குறிப்பிடப்பட வேண்டும். யோகாசனம் என்பது "யோகா" என்ற வாழ்க்கை முறையின் ஒரு அங்கம், அவ்வளவே. 

"யோகா" என்ற வார்த்தையின் நிஜ அர்த்தம் இரண்டு வார்த்தைகளில் விளக்கத் தக்கதல்ல. உள்ளப் பயிற்சி, உணவுப் பயிற்சி, தியானம், ஆசனம் எனப் பல்வேறு நிலைகளைக் கொண்டது யோகா. உங்கள் தற்போதைய வாழ்க்கை முறை, உடல்நலன், மன நலம் இவற்றில் இருந்து எந்தப் பயிற்சி உங்களை உண்மையாக ஒரு படி மேம்படுத்தி மேலே அழைத்துச் செல்கிறதோ அதை நீங்கள் யோகா என்றழைக்கலாம்.


"Yoga refers to traditional physical and mental disciplines that originated in India." எனக் குறிப்பிடுகிறது விக்கிபீடியா. "உளரீதியான மற்றும் உடல்ரீதியான ஒழுங்கு முறைகளைக் கொண்ட ஒரு பாரம்பரிய வாழ்க்கை முறை" எனப் பொருள் கொள்ளலாம்.

யோசித்துப் பாருங்கள்! உடலும் உள்ளமும் நீங்கள் சொல்வதைக் கேட்கும் பயிற்சி உங்கள் கைவசம் இருந்தால் உடல் நலன் உங்கள் கட்டுப்பாட்டில் கண்டிப்பாக இருக்கும் அல்லவா?

யோகாவின் பலன்கள்:

யோகா உங்கள் உடல் நலனுக்கு நேரிடை மருந்தாக அமைவதில்லை. யோகாவை உங்கள் வாழ்க்கை முறையில் நீங்கள் அழைத்து வந்தால்; மன அழுத்தம், டென்ஷன் ஆகியவற்றில் இருந்து முதல் படியிலேயே உங்களுக்கு விடுவிப்பைத் தருகிறது. உங்கள் உடல் நலனைப் பேண இது பெரும் உதவியாக இருக்கிறது. 

மன அழுத்தம், டென்ஷன் ஆகியவற்றில் இருந்து நீங்கள் விடுபடும்போது இயற்கையிலேயே ரத்த அழுத்தம், சுவாசப் பிரச்னைகள் ஆகியவற்றில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கிறது.

சில வகை ஆசனப் பயிற்சிகள் உங்கள் உடல் இயக்கத்தைச் சீராக்கி மூட்டு, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் உங்களுக்கு தீர்வு தருகிறது. உங்கள் உடல் எடையை ஒரு கட்டில் வைக்கிறது.

யோகாவின் ஒரு முக்கிய அங்கமான பிராணயாமம் என்பது பலவகை மூச்சுப் பயிற்சிகளை உள்ளடக்கியது. பிராணயாமப் பயிற்சியில் நீங்கள்  ஈடுபட்டால் அது சுவாசக் கோளாறுகள், சைனஸ், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஆகியவற்றுக்கு மருந்தாக அமைகிறது.

பிராணயாமம், யோகாசனம் ஆகியவற்றை நீங்கள் மேற்கொள்ளும்போது உங்கள் உணவு முறையில் தன்னாலே ஒரு ஒழுங்குமுறைக்கு நீங்கள் வரும் அவசியம் ஏற்படுகிறது. அது உங்கள் உடல்நலனைப் பேண ஒரு கூடுதல் காரணியாக அமைகிறது.



யார் கற்றுத் தருவார்கள்?

ஓகே சார், ரொம்ப தேங்க்ஸ்! உடனே கடைக்குப் போயி "யோகாசனம் செய்வது எப்படி", "மனசே அமைதி ப்ளீஸ்" இந்த புத்தகமெல்லாம் வாங்கி வந்து பயிற்சியை ஆரம்பிக்கிறேன் என்று கிளம்பிட்டீங்களா. உங்க ஆர்வத்துக்கு ஒரு சலாம். ஆனா கொஞ்சம் உட்காருங்க...!!

யோகா தியானம் போன்றவை கண்டிப்பாக ஒரு தேர்ந்த ஆசிரியரின் வாயிலாக மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டிய பயிற்சி முறைகள். புத்தகங்களோ, தொலைக்காட்சியோ கொண்டு நீங்கள் கற்றுக் கொண்டால் அவை முறையாகக் கற்றுக் கொண்டது ஆகாது. நீங்கள் கற்றுக் கொண்டது சரியா எனப் பரிசோதித்து நீங்கள் செய்யும் தவறுகளைத் திருத்தி உங்களை சரியான முறையில் ஆசன / சுவாசப் பயிற்சியில் ஈடுபடுத்த ஒரு பயிற்சி பெற்ற ஆசிரியர் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து எதனையும் தயவு செய்து வைத்துக் கொள்ளாதீர்கள்.

அடுத்த திங்களில் தியானம் பற்றி பார்ப்போம். எங்கெல்லாம் கற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளது எனவும் அங்கே பார்க்கலாம்.





தொடரின் முந்தைய பதிவுகள் 



.
.

Nov 8, 2010

நலம் தரும் திங்கள் - உடற்பயிற்சியும் இதய நலமும்


சும்மா இருப்பது சுகமா?

சும்மா இருந்து  கலோரிகளை பத்திரப்படுத்தி வைப்பவர்களின் இதயத்தை விட, ஆயிரம் கலோரி அளவில் ஆற்றலை தினமும் செலவு செய்கிறவர்களின் இதயம் இரு மடங்கு நலமாக இருக்கிறது என்று சென்ற வார நலம் தரும் திங்களில் பார்த்தோம். இது குறித்து மேலும் பேசி நாம் இந்த விஷயத்தை உறுதி செய்து கொள்வோம்.

சும்மா இருப்பதே சுகம் என்று தாயுமானவர் சொன்னது உண்மையாக இருக்கலாமோ என்னவோ.ஆனால் ஒன்று- சும்மா இருப்பவர்கள் மற்றவர்களை விட விரைவில் கைலாசத்துக்கோ வைகுண்டத்துக்கோ அல்லது உங்கள் அபிமான இறைவன் இருக்கிற சொர்க்கத்துக்கோ தத்கல் கோட்டாவில் டிக்கட் வாங்கி விடுகிற அபாயம் இருக்கிறது என்பதையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

நமது இதயம் சுருங்கி விரிந்து ரத்தத்தை உடலெங்கும் அனுப்பி வைக்கிற ஒரு ஜங்ஷனாக இருக்கிறது என்பது நம்மில் கிட்டத்தட்ட அனைவரும் அறிந்தது. ரத்தத்தை உள்ளே கொண்டு வர ஒரு வகை குழாய்கள் (Venae cavae), வெளியே கொண்டு போக ஒரு வகை குழாய்கள் (Aortaஎன்று இருக்கின்றன.

உடற்பயிற்சியில் கவனம் செலுத்தாது இருக்கிறவர்களின் இதயத்தில் ரத்தத்தை உள்ளே கொண்டு வருகிற குழாய்களில் கொழுப்பு, கால்சியம், கொலஸ்டரால் போன்ற பலசரக்குகள் பலவும் படிந்து அதை அடைத்துக் கொள்கிறது. அவர்களுக்கு இதனால் இதய நோய் வரும் சாத்தியங்கள் அதிகரிக்கின்றன.

இந்த ரத்தக்குழாய்களை இக்கட்டு நேரத்தில் காக்க இணை ரத்தக்குழாய்கள் என சிலப்பல உள்ளன. அவற்றைக் குறித்து விளக்கி அவற்றின் செயல்பாடுகளைக் குறித்து மேலும் கூறிக் குழப்பாமல், உடற்பயிற்சியின் மூலம் ரத்தக் குழாய்களை, இதயத்தசைகளின் இயக்கத்தை எப்படி சீராக வைத்துக் கொள்ளலாம் எனப் பார்ப்போம்.

பயிற்சிகளின் பலன்கள்


ஒருவர் தொடர்ச்சியாக உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் இதயத் தசைகள் சுருங்கி விரிதல் சீராக நடைபெற்று ரத்தக் குழாய்களில் ஏற்படும் தங்கு தடைகளிலிருந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ள வழிவகை செய்து கொள்கிறார் எனலாம்.

உடற்பயிற்சியில் இரு வகைகள் இருக்கின்றன- சில வகை பயிற்சிகள் ரத்தத்தில் பிராணவாயுவுக்கான (ஆக்சிஜன்) தேவையைக் கூட்டுவதாக இருக்கின்றன. வேகமாக நடப்பது போன்றவை இத்தகைய பயிற்சிகள். இன்னொரு வகை பயிற்சிகள் தசைகளுக்கு வலுக்கூட்டுவதாக இருக்கின்றன. தோட்ட வேலை போன்றவை இத்தகைய பயிற்சிகள். நம் உடல் நலத்துக்கு இரண்டுமே அவசியமாக இருக்கின்றன.

சாதாரண எடையில் சாதாரண உடல் நலத்தில் இருக்கிறவர்கள் தினம் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்தாலே போதுமானது. சீரான உடற்பயிற்சி உங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக இருக்கிறது, ரத்தத்தில் கொலஸ்டராலின் அளவையும் குறைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நம் உடல் எடையையும் கட்டுக்குள் வைக்கிறது. 


இதய நலனில் உடல் எடை 

இதய நலனில் முக்கியப் பங்கு வகிப்பது நம் உடல் எடை. உடல் எடையைக் கண்காணித்து சரியாக பார்த்துக் கொள்கிறவர்களுக்கு அதிக எடை கொண்டவர்களை விட இதய சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வருவது குறைவு என்கின்றன ஆய்வுகள்.

தவறாத நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி ஆகியன உங்கள் எடையையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கண்டிப்பாக உதவுகின்றன.

பயிற்சியின் நேர அளவு?

பொதுவாக, வாரம் ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது இதயத்துக்கு நலம் தருவதாக இருக்கும். இது ஏறத்தாழ தினமும் இருபது நிமிடங்கள் பயிற்சி செய்தால் போதுமானது என்று  பொருட்படுகிறது, இல்லையா?

முன்னெச்சரிக்கை, பின்னெச்சரிக்கை என இரண்டு உள்ளன. நீங்கள் நலமோடு சீரான உடல்வாகோடு உள்ளபோதே முன்னெச்சரிக்கையாக நடை மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் இந்தப் பரிந்துரை. 

கொழுப்பைக் கரைக்க நடக்கும் பின்னெச்சரிக்கைவாதியா நீங்கள்? உங்களுக்கான நடைப் பரிந்துரை இதோ: நடக்கத்தொடங்கி முதல் 5-10 நிமிடங்களுக்கு உடல் உடனடிச்சக்தி சேமிப்பான குளுக்கோசைப் பயன்படுத்தும். அதற்குமேல்தான் கொழுப்பில் கைவைக்கும். எனவே கொழுப்பு கரைய நீண்ட நேரம் நடக்க வேண்டும் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏதேனும் விதிவிலக்குகள்?


இப்பயிற்சிகளில் நடைப்பயிற்சியைப் பொறுத்தவரை ஏதும் விதிவிலக்குகள் இல்லை. இருபது நிமிட நடையில் தொடங்கி, படிப்படியாக நேரத்தை உயர்த்தி யார் வேண்டுமானாலும் தம்மால் இயன்ற நேரத்திற்கு நடை பழகலாம்.


ஆனால், உடற்பயிற்சி செய்கிறவர்கள் எடுத்த எடுப்பிலேயே அளவுக்கதிகமாக முனைவது ஆபத்தான வேலையாகப் போய் விடக் கூடும். எனவே, எளிய பயிற்சிகளில் தொடங்கி மெல்ல மெல்ல அவற்றைக் கடுமையானவையாக மாற்றிக் கொள்ளலாம்.


சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், உடற்பயிற்சி என்று இறங்குகையில் நீங்கள் முறையாக ஒரு ஆசிரியரின் துணை கொண்டு செயல்படுவதுதான் சரியான செயலாக இருக்கும். உங்கள் வயது, உடல் நிலை, ஆரோக்கியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்கள் எது சரி, எது சரியில்லை என உங்களுக்குப் பரிந்துரைப்பார்கள்.


"என்னய்யா! கொஞ்சம் இப்படி அப்படி கையை காலை ஆட்ட என்னை என்ன பெரிய பிசிகல் அட்வைசர் கிட்ட போக சொல்றியா?" என்பவர்களுக்கு.... ஆம் அதற்கென நிறைய ஜிம்கள் உள்ளன. தேவையற்ற ரிஸ்குகளை நீங்களாக எடுக்க வேண்டாம் என்பது நமது அறிவுரை.


அடுத்து:


அடுத்த திங்களில் இதய நலனில் யோகா மற்றும் தியானத்தின் பங்குகளைப் பற்றிப் பார்ப்போம்.




மேலும் தொடர்புடைய இந்தச் சுட்டிகள் உங்களுக்கு உதவக் கூடும் -


American  Heart  Association  


தொகுப்பில் உதவி: நட்பாஸ்
.
.
.

Nov 1, 2010

நலம் தரும் திங்கள் - ரத்த தானமும் இதய நலமும்


ரத்த தானமும் இதய நலமும்
சிறப்புப் பதிவர்: நட்பாஸ்

ரத்த தானம் செய்தால் இதய நோய் வரும் வாய்ப்பு குறையுமா குறையாதா?



சென்ற பதிவில் "மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்று ரத்த தானம் செய்கிறவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு மூன்றுக்கு ஒரு பங்கு குறைகிறதாம்" என்று எழுதி இருந்தோம்.

இதற்கு சான்றாக ஒரு ஆய்வுக் கட்டுரையையும் சுட்டி இருந்தோம்>. 

இது தொடர்பாக திரு வரசித்தன் அவர்கள் சில கேள்விகளை எழுப்பினார். அதன் தொடர்ச்சியாகவே இந்தப் பதிவு.

சென்ற வாரம் என் சகோதரர் கோவையிலிருந்து என்னைத் அழைத்து "நீ சொல்கிற மாதிரி மூன்று மாதத்துக்கு ஒரு தடவை ரத்த தானம் செய்தால் போதுமா? டாக்டர்கள் ஏன் அதை சொல்ல மாட்டேன் என்கிறார்கள்? இதை சாப்பிடு அதை சாப்பிட்டு என்கிறார்கள், இல்லையென்றால் இத்தனை தூரம் ஓடு இவ்வளவு நேரம் நட என்று எவ்வளவு கண்டிஷன் போடுகிறார்கள்," என்றார்.

கொஞ்சம் குழப்பமாகதான் இருந்தது. மருத்துவர் ஒருவராய் அணுகி இது பற்றி கேட்ட போது...

"ரத்த தானம் செய்தால் இதயத்துக்கு நல்லதாக இருந்து விட்டே போகட்டும். ஆனால் அதை நம்பி நீங்கள் சிகரெட் பழக்கத்தை விடப் போவதில்லை, தண்ணியை நிறுத்தப் போவதில்லை, கண்ட கண்டதையும் தின்கிற பழக்கத்தையும் விடப் போவதில்லை, கையை காலை அசைத்து துரும்பைக்கூட கிள்ளிப் போடப் போவதில்லை என்றால் இது நல்ல செய்தியா கெட்ட செய்தியா சொல்லுங்கள்," என்று பதில் கேள்வி கேட்டார்.

"தப்பா இருக்கற மாதிரிதான் தெரியுது," இது என் பதில்.

"அதுதான்", என்ற அவர், "யாரெல்லாம் ரத்த தானம் செய்யத் தகுதி இருக்கிறவர்கள் என்று பாருங்கள்- ப்ளட் ப்ரெஷர் இருக்கக் கூடாது, டயபெடிஸ் இருக்கக் கூடாது, அனீமியா இருக்கக் கூடாது , டிபி, கல்லீரல் நோய் இருந்திருக்கக் கூடாது, எத்தனை கண்டிஷன்கள் இருக்கிறது தெரியுமா?" என்று கேட்டார்.

வீடு வந்ததும் கூகிள் செய்ததில், உண்மைதான்.. ஆரோக்கியமாக இல்லாத எவரும் ரத்த தானம் செய்ய முடியாது எனத் தெரிந்து கொள்ள முடிந்தது. உதாரணத்துக்கு இந்த பக்கத்தைப் படித்துப் பாருங்கள். யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம் யாரெல்லாம் செய்யலாகாது எனத் தெளிவுற சொல்லியிருக்கிறார்கள். <"">

"இவர்களுக்கெல்லாம் இதய நோய் வராததில் ஆச்சரியமென்ன?" என்று கேட்கிறார் டாக்டர். "நீங்கள் தருகிற ரத்தத்தை மருத்துவமனையில் எடுத்துக் கொள்கிறார்கள் என்றால் அவர்கள் நீங்கள் முழு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று ஏற்றுக் கொள்கிறார்கள் என்று பொருள்," என்பது அவர் பதில்.

"உண்மைதான் டாக்டர்! நான் ரத்த தானம் செய்கிறேன் என்றால் என் உடம்பு நல்ல கண்டிஷனில் இருக்கிறது என்று புரிகிறது," என்று சொல்லிவிட்டு வந்தேன்.

ல்லாரும் ரத்த தானம் செய்ய முடியாது. அதனால்தான் ரத்தம் கிடைப்பது கடினமாக இருக்கிறது. நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பது பெருமைப்படக் கூடிய விஷயம். அந்தப் பெருமையை ரத்த தானம் செய்வதன் மூலம் நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்கள் இல்லையா? 

உங்களால் மட்டும்தான் உயிருக்குப் போராடுகிற ஒருத்தருக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்ற முடியும்- தன் தலைவனுக்காக கொளுத்திக் கொண்டு சாகத் தயாராக இருக்கிறவனாலும் கூட ஆத்திர அவசரத்தில் தன் தலைவனுக்கு ரத்தம் கொடுத்து அவன் உயிரைக் காப்பாற்ற முடியாது. பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயானாலும் சரி, அவள் தன் எலும்பையே உருக்கி பிள்ளையை வளர்த்தாலும் அவனுக்கு ஒரு அவசரமென்றால் அவள் உங்களிடம்தான் வந்தாக வேண்டும். 

ரத்தம் கொடுத்துதான் நீங்கள் உங்கள் உடல் நலம் காக்க வேண்டுமென்பதில்லை. உங்கள் ஆரோக்கியம் நீங்கள் தருகிற ரத்தம் மூலம் மற்றவர்களுக்குப் பரவுகிறது- அது உங்களால் மட்டும் தரப்படக் கூடிய கொடை.

ஆனால் இதய நலம் காக்க சிறந்த வழி உடல் உழைப்புதான். நல்ல பழக்கங்கள்தான்.



உதாரணத்துக்கு ஒரு செய்தியை மட்டும் இப்போதைக்கு பாருங்கள்- இருபத்து இரண்டு ஆண்டு கால ஆராய்ச்சியின் முடிவு இது. தினமும் வெவ்வேறு வகைகளில் குறைந்தது ஆயிரம் கிலோ கலோரிகளை செலவிடுபவர்கள் மற்றவர்களை விட இரு மடங்கு ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அதாவது, என்னைப் போன்றவர்களுக்கு இதய நோய் வருவதற்கான சாத்தியத்தில் பாதிதான் உடலுக்கு வேலை தருகிற உங்களுக்கு இருக்கிறது. புகைப் பிடிக்கும் பழக்கம், எடை கூடி இருத்தல், உயர் ரத்த அழுத்தம் இதை எல்லாம் கணக்கில் கொண்ட பின்னரே இந்த முடிவைத் தருகிறார்கள்.

அப்படியானால் உங்கள் உடலின் எடையைக் கட்டுக்குள் வைத்திருந்தால், ஆரோக்கியமான உணவு முறைகளைக் கடைபிடித்தால், புகை பிடிக்கும் பழக்கத்தைக் கை விட்டால், தினமும் உடற்பயிற்சி செய்தால் உங்கள் இதயம் எவ்வளவு நன்றாக இருக்கும்?

ஒரு சிறிய கணக்கு சொல்கிறேன் பாருங்கள்-  இதய நோயால் இந்தியா 9.2 மில்லியன் ஆண்டுகளை இழக்கிறது என்கிறார் நம் பிரதமர். அதாவது 35லிருந்து 64 வயதுக்குட்பட்டவர்கள் இதய நோய் கண்டு சிகிச்சை எடுத்துக் கொள்வதில் அவர்களது உழைப்பு இந்த அளவுக்கு விரயமாகிறது-

இந்தியாவின் தேசிய உற்பத்தியில் 1.7 சதவிகிதம் வரை இதய நோய்களுக்கான சிகிச்சைக்கு செலவாகக்கூடும் என்கிறார்கள்-<> 

நாம் அனைவரும் சேர்ந்து சம்பாதிப்பதில் ஏறத்தாழ இரண்டு சதவிகிதத் தொகையை இதய நோய் கண்ட ஒரு சில பேர் மட்டும் செலவிட வேண்டி வருகிறது. இதய நோய் எவ்வளவு காஸ்ட்லியான வியாதி என்று யோசித்துப் பாருங்கள்.

இதைத் தவிர்ப்பதற்கு உடற்பயிற்சி முதற்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையே சரியான தீர்வாகும். அவை குறித்து வரும் திங்கள் கவனிப்போம். 
.
.
.

Oct 25, 2010

நலம் தரும் திங்கள் - ரத்த தானம்!

நலம் தரும் திங்கள் - முன்னுரை வாசிக்க...


நலம் தரும் திங்கள் - ரத்த தானம்!

நாம் ரத்த தானம் செய்வதால் மற்றவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கே நமக்கும் ஒரு வகையில் உதவி செய்து கொள்கிறோம். ஒரு வகையில் என்ன, பற்பல வகைகளில் உதவி செய்து கொள்கிறோம்.


எப்படி என்கிறீர்களா? வாருங்கள்! ரத்த தானப் பலன்களையும், ரத்த தானம் குறித்த சில அடிப்படை விஷயங்களையும் பற்றி பார்ப்போம்.

னக்கு ஒரு நண்பர் இருக்கிறார். கணக்கு பார்க்காமல் ஒரு பைசா செலவு பண்ண மாட்டார்.கணக்கு பண்ணிவிட்டு செலவு செய்வதற்கான தேவையே இல்லை என்று முடிவு பண்ணி விடுவார். ஆள் அந்த மாதிரி. கேரளாவில் ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் அகலக்கால் வைத்து விட்டார் போல- காலையில் ஒரு டீ, அப்புறம் கிளம்புவதற்கு முன் கொஞ்சம் கஞ்சி. பதினோரு மணி அளவில் நாள் தவறாமல் அவருக்கு என் செலவில் ஒரு டீ கிடைக்கும். அந்த டீ அவரது நாவடக்கத்துக்கு நான் கொடுக்கும் காணிக்கை. 

ஆனால் அவரிடம் ஒரு விசேஷம் என்னவென்றால் அடிக்கடி ரத்த தானம் செய்கிறார். ரொம்ப நாளாய்க் கேட்க வேண்டும் என்று நினைத்தேன், தொண்டையைத் தாண்டி நாக்கு வரை வந்து விட்டது கேள்வி. ஆனால் நாகரீகம் என்று ஒன்று இருக்கிறதில்லையா?

"நீங்கள் ஒவ்வொரு தடவையும் ரத்த தானம் செய்யும்போது எவ்வளவு காசு கிடைக்கும்?" என்று நான் கேட்க நினைத்த கேள்விக்கு அவரிடமிருந்து தானாகவே பதில் வந்தது ஒரு நாள். 

அன்று அவர் மிக சோகமாக இருந்தார். என்ன விஷயமென்று கேட்டேன்.

"எனக்கு அனீமியா இருக்காம், டாக்டர் சொன்னாங்க," என்றார்.

"நீங்க எதுக்காக சார், டாக்டர் கிட்ட போனீங்க? உடம்பு சரியில்லையோ?" என்று மேற்கொன்று விசாரித்தேன்.

"இல்லை பாஸ், ரத்தம் குடுக்கும்போது ஒரு வசதி என்னன்னா, அவங்களே நம்ம ரத்தத்தை நல்லா செக் பண்ணிடுவாங்க. ஆக்சுவல்லி நான் ரெகுலரா ப்ளட் டொனேட் பண்றதே அதுக்காகத்தான்!" என்றார் அவர்.

"அதுதானே பார்த்தேன்," என்று நான் சொல்லவில்லை. என்ன இருந்தாலும் அவர் என் நண்பர்.

ரத்த தானம் செய்பவர்களுக்கு அதனால் பலனில்லாமல் இல்லை,  அதை சொல்ல வந்தேன்.

ரத்த தானம் செய்வதன் பயன்கள்-

ரத்த தானம் செய்வது என்பது படுத்துக்கொண்டே செய்கிற வேலை. மிஞ்சிப் போனால் ஒரு மணி நேரம் செலவாகும். ஆனால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்று ரத்த தானம் செய்கிறவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு மூன்றுக்கு ஒரு பங்கு குறைகிறதாம். அதாவது எனக்கு இதய நோய் வரும் வாய்ப்பு தொண்ணூறு சதவிகிதம் இருக்கிறது என்று சொன்னால், ரத்த தானம் செய்கிற உங்களுக்கு முப்பது சதவிகிதம்தான் (சான்று- ரோட்டரி ரத்த வங்கி,CNN)


உடலில் புது ரத்தம் பாய்கிறது. அதாவது, ரத்த தானம் செய்த பின் புதிதாய் சிவப்பணுக்கள் உடலில் உற்பத்தி ஆகின்றன (விக்கிபீடியா)


முன் நான் சொன்ன மாதிரியான ரத்த சோதனைகள்- அனீமியா, ரத்த அழுத்தம், உடல் எடை, ஹெபாடிடிஸ் பி, ஹெபாடிடிஸ் சி, எய்ட்ஸ், பால்வினை வியாதிகள், மலேரியா- இவை உங்களுக்கு இருக்கின்றனவா என்று காசு வாங்காமலேயே சோதனை செய்து சொல்கிறார்கள். சொல்லுங்கள் நண்பர்களே, நீங்கள் ரத்த தானம் செய்யாதவர்களாய்  இருந்தால் சொல்லுங்கள், நீங்கள் கடைசியாக உங்கள் ரத்தத்தை சோதித்துக் கொண்டது எப்போது?


ரத்த தானம் குறித்து சில கேள்விகள்:

ரத்த தானம் செய்வதால் உடல் நலம் கெடுமா?
கெடாது.மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம். எந்த அபாயமும் இல்லை.

என் உடலில் இருந்து எவ்வளவு ரத்தம் எடுக்கலாம்?
ஏறத்தாழ பதினொன்றில் ஒரு பங்கு ரத்தத்தை எந்த ஆபத்தும் இல்லாமல் எடுக்கலாம். உங்கள் உடல் எடுத்த ரத்தம் அத்தனையையும் இரண்டு நாட்களிலேயே திரும்பச் சுரந்து விடும்.

ரத்த தானம் கொடுக்க எவ்வளவு நேரம் ஆகும்?
அதிகபட்சம் ஒரு மணி நேரம். ரத்த தானம் செய்து விட்டு நேராக வேலைக்குப் போய் விடலாம். அச்சப்படத் தேவை இல்லை.

ரத்த தானம் செய்யும் முன் நான் என்ன செய்ய வேண்டும்?
நன்றாகத் தூங்குங்கள். காலையில் நன்றாக சாப்பிடுங்கள். ஜூஸ், பால் முதலான நீராகாரங்களைத் தேவையான அளவு உட்கொள்ளுங்கள். ரத்த தானம் செய்த பின் இட்லி, பிஸ்கட், ஜூஸ் போன்ற எதையாவது லைட்டாக சாப்பிடுங்கள்.


மேலும் தகவல்கள், ரத்த தானம் செய்ய அல்லது  உங்களுக்குத் தேவையான ரத்த வகையினரை தேட இந்த தளத்தில் -  India Blood.

தகவல்/ தொகுப்பு உதவி: நட்பாஸ்
.
.
.

Related Posts Plugin for WordPress, Blogger...