Showing posts with label ரத்த தானம். Show all posts
Showing posts with label ரத்த தானம். Show all posts

Nov 1, 2010

நலம் தரும் திங்கள் - ரத்த தானமும் இதய நலமும்


ரத்த தானமும் இதய நலமும்
சிறப்புப் பதிவர்: நட்பாஸ்

ரத்த தானம் செய்தால் இதய நோய் வரும் வாய்ப்பு குறையுமா குறையாதா?



சென்ற பதிவில் "மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்று ரத்த தானம் செய்கிறவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு மூன்றுக்கு ஒரு பங்கு குறைகிறதாம்" என்று எழுதி இருந்தோம்.

இதற்கு சான்றாக ஒரு ஆய்வுக் கட்டுரையையும் சுட்டி இருந்தோம்>. 

இது தொடர்பாக திரு வரசித்தன் அவர்கள் சில கேள்விகளை எழுப்பினார். அதன் தொடர்ச்சியாகவே இந்தப் பதிவு.

சென்ற வாரம் என் சகோதரர் கோவையிலிருந்து என்னைத் அழைத்து "நீ சொல்கிற மாதிரி மூன்று மாதத்துக்கு ஒரு தடவை ரத்த தானம் செய்தால் போதுமா? டாக்டர்கள் ஏன் அதை சொல்ல மாட்டேன் என்கிறார்கள்? இதை சாப்பிடு அதை சாப்பிட்டு என்கிறார்கள், இல்லையென்றால் இத்தனை தூரம் ஓடு இவ்வளவு நேரம் நட என்று எவ்வளவு கண்டிஷன் போடுகிறார்கள்," என்றார்.

கொஞ்சம் குழப்பமாகதான் இருந்தது. மருத்துவர் ஒருவராய் அணுகி இது பற்றி கேட்ட போது...

"ரத்த தானம் செய்தால் இதயத்துக்கு நல்லதாக இருந்து விட்டே போகட்டும். ஆனால் அதை நம்பி நீங்கள் சிகரெட் பழக்கத்தை விடப் போவதில்லை, தண்ணியை நிறுத்தப் போவதில்லை, கண்ட கண்டதையும் தின்கிற பழக்கத்தையும் விடப் போவதில்லை, கையை காலை அசைத்து துரும்பைக்கூட கிள்ளிப் போடப் போவதில்லை என்றால் இது நல்ல செய்தியா கெட்ட செய்தியா சொல்லுங்கள்," என்று பதில் கேள்வி கேட்டார்.

"தப்பா இருக்கற மாதிரிதான் தெரியுது," இது என் பதில்.

"அதுதான்", என்ற அவர், "யாரெல்லாம் ரத்த தானம் செய்யத் தகுதி இருக்கிறவர்கள் என்று பாருங்கள்- ப்ளட் ப்ரெஷர் இருக்கக் கூடாது, டயபெடிஸ் இருக்கக் கூடாது, அனீமியா இருக்கக் கூடாது , டிபி, கல்லீரல் நோய் இருந்திருக்கக் கூடாது, எத்தனை கண்டிஷன்கள் இருக்கிறது தெரியுமா?" என்று கேட்டார்.

வீடு வந்ததும் கூகிள் செய்ததில், உண்மைதான்.. ஆரோக்கியமாக இல்லாத எவரும் ரத்த தானம் செய்ய முடியாது எனத் தெரிந்து கொள்ள முடிந்தது. உதாரணத்துக்கு இந்த பக்கத்தைப் படித்துப் பாருங்கள். யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம் யாரெல்லாம் செய்யலாகாது எனத் தெளிவுற சொல்லியிருக்கிறார்கள். <"">

"இவர்களுக்கெல்லாம் இதய நோய் வராததில் ஆச்சரியமென்ன?" என்று கேட்கிறார் டாக்டர். "நீங்கள் தருகிற ரத்தத்தை மருத்துவமனையில் எடுத்துக் கொள்கிறார்கள் என்றால் அவர்கள் நீங்கள் முழு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று ஏற்றுக் கொள்கிறார்கள் என்று பொருள்," என்பது அவர் பதில்.

"உண்மைதான் டாக்டர்! நான் ரத்த தானம் செய்கிறேன் என்றால் என் உடம்பு நல்ல கண்டிஷனில் இருக்கிறது என்று புரிகிறது," என்று சொல்லிவிட்டு வந்தேன்.

ல்லாரும் ரத்த தானம் செய்ய முடியாது. அதனால்தான் ரத்தம் கிடைப்பது கடினமாக இருக்கிறது. நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பது பெருமைப்படக் கூடிய விஷயம். அந்தப் பெருமையை ரத்த தானம் செய்வதன் மூலம் நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்கள் இல்லையா? 

உங்களால் மட்டும்தான் உயிருக்குப் போராடுகிற ஒருத்தருக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்ற முடியும்- தன் தலைவனுக்காக கொளுத்திக் கொண்டு சாகத் தயாராக இருக்கிறவனாலும் கூட ஆத்திர அவசரத்தில் தன் தலைவனுக்கு ரத்தம் கொடுத்து அவன் உயிரைக் காப்பாற்ற முடியாது. பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயானாலும் சரி, அவள் தன் எலும்பையே உருக்கி பிள்ளையை வளர்த்தாலும் அவனுக்கு ஒரு அவசரமென்றால் அவள் உங்களிடம்தான் வந்தாக வேண்டும். 

ரத்தம் கொடுத்துதான் நீங்கள் உங்கள் உடல் நலம் காக்க வேண்டுமென்பதில்லை. உங்கள் ஆரோக்கியம் நீங்கள் தருகிற ரத்தம் மூலம் மற்றவர்களுக்குப் பரவுகிறது- அது உங்களால் மட்டும் தரப்படக் கூடிய கொடை.

ஆனால் இதய நலம் காக்க சிறந்த வழி உடல் உழைப்புதான். நல்ல பழக்கங்கள்தான்.



உதாரணத்துக்கு ஒரு செய்தியை மட்டும் இப்போதைக்கு பாருங்கள்- இருபத்து இரண்டு ஆண்டு கால ஆராய்ச்சியின் முடிவு இது. தினமும் வெவ்வேறு வகைகளில் குறைந்தது ஆயிரம் கிலோ கலோரிகளை செலவிடுபவர்கள் மற்றவர்களை விட இரு மடங்கு ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அதாவது, என்னைப் போன்றவர்களுக்கு இதய நோய் வருவதற்கான சாத்தியத்தில் பாதிதான் உடலுக்கு வேலை தருகிற உங்களுக்கு இருக்கிறது. புகைப் பிடிக்கும் பழக்கம், எடை கூடி இருத்தல், உயர் ரத்த அழுத்தம் இதை எல்லாம் கணக்கில் கொண்ட பின்னரே இந்த முடிவைத் தருகிறார்கள்.

அப்படியானால் உங்கள் உடலின் எடையைக் கட்டுக்குள் வைத்திருந்தால், ஆரோக்கியமான உணவு முறைகளைக் கடைபிடித்தால், புகை பிடிக்கும் பழக்கத்தைக் கை விட்டால், தினமும் உடற்பயிற்சி செய்தால் உங்கள் இதயம் எவ்வளவு நன்றாக இருக்கும்?

ஒரு சிறிய கணக்கு சொல்கிறேன் பாருங்கள்-  இதய நோயால் இந்தியா 9.2 மில்லியன் ஆண்டுகளை இழக்கிறது என்கிறார் நம் பிரதமர். அதாவது 35லிருந்து 64 வயதுக்குட்பட்டவர்கள் இதய நோய் கண்டு சிகிச்சை எடுத்துக் கொள்வதில் அவர்களது உழைப்பு இந்த அளவுக்கு விரயமாகிறது-

இந்தியாவின் தேசிய உற்பத்தியில் 1.7 சதவிகிதம் வரை இதய நோய்களுக்கான சிகிச்சைக்கு செலவாகக்கூடும் என்கிறார்கள்-<> 

நாம் அனைவரும் சேர்ந்து சம்பாதிப்பதில் ஏறத்தாழ இரண்டு சதவிகிதத் தொகையை இதய நோய் கண்ட ஒரு சில பேர் மட்டும் செலவிட வேண்டி வருகிறது. இதய நோய் எவ்வளவு காஸ்ட்லியான வியாதி என்று யோசித்துப் பாருங்கள்.

இதைத் தவிர்ப்பதற்கு உடற்பயிற்சி முதற்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையே சரியான தீர்வாகும். அவை குறித்து வரும் திங்கள் கவனிப்போம். 
.
.
.

Oct 25, 2010

நலம் தரும் திங்கள் - ரத்த தானம்!

நலம் தரும் திங்கள் - முன்னுரை வாசிக்க...


நலம் தரும் திங்கள் - ரத்த தானம்!

நாம் ரத்த தானம் செய்வதால் மற்றவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கே நமக்கும் ஒரு வகையில் உதவி செய்து கொள்கிறோம். ஒரு வகையில் என்ன, பற்பல வகைகளில் உதவி செய்து கொள்கிறோம்.


எப்படி என்கிறீர்களா? வாருங்கள்! ரத்த தானப் பலன்களையும், ரத்த தானம் குறித்த சில அடிப்படை விஷயங்களையும் பற்றி பார்ப்போம்.

னக்கு ஒரு நண்பர் இருக்கிறார். கணக்கு பார்க்காமல் ஒரு பைசா செலவு பண்ண மாட்டார்.கணக்கு பண்ணிவிட்டு செலவு செய்வதற்கான தேவையே இல்லை என்று முடிவு பண்ணி விடுவார். ஆள் அந்த மாதிரி. கேரளாவில் ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் அகலக்கால் வைத்து விட்டார் போல- காலையில் ஒரு டீ, அப்புறம் கிளம்புவதற்கு முன் கொஞ்சம் கஞ்சி. பதினோரு மணி அளவில் நாள் தவறாமல் அவருக்கு என் செலவில் ஒரு டீ கிடைக்கும். அந்த டீ அவரது நாவடக்கத்துக்கு நான் கொடுக்கும் காணிக்கை. 

ஆனால் அவரிடம் ஒரு விசேஷம் என்னவென்றால் அடிக்கடி ரத்த தானம் செய்கிறார். ரொம்ப நாளாய்க் கேட்க வேண்டும் என்று நினைத்தேன், தொண்டையைத் தாண்டி நாக்கு வரை வந்து விட்டது கேள்வி. ஆனால் நாகரீகம் என்று ஒன்று இருக்கிறதில்லையா?

"நீங்கள் ஒவ்வொரு தடவையும் ரத்த தானம் செய்யும்போது எவ்வளவு காசு கிடைக்கும்?" என்று நான் கேட்க நினைத்த கேள்விக்கு அவரிடமிருந்து தானாகவே பதில் வந்தது ஒரு நாள். 

அன்று அவர் மிக சோகமாக இருந்தார். என்ன விஷயமென்று கேட்டேன்.

"எனக்கு அனீமியா இருக்காம், டாக்டர் சொன்னாங்க," என்றார்.

"நீங்க எதுக்காக சார், டாக்டர் கிட்ட போனீங்க? உடம்பு சரியில்லையோ?" என்று மேற்கொன்று விசாரித்தேன்.

"இல்லை பாஸ், ரத்தம் குடுக்கும்போது ஒரு வசதி என்னன்னா, அவங்களே நம்ம ரத்தத்தை நல்லா செக் பண்ணிடுவாங்க. ஆக்சுவல்லி நான் ரெகுலரா ப்ளட் டொனேட் பண்றதே அதுக்காகத்தான்!" என்றார் அவர்.

"அதுதானே பார்த்தேன்," என்று நான் சொல்லவில்லை. என்ன இருந்தாலும் அவர் என் நண்பர்.

ரத்த தானம் செய்பவர்களுக்கு அதனால் பலனில்லாமல் இல்லை,  அதை சொல்ல வந்தேன்.

ரத்த தானம் செய்வதன் பயன்கள்-

ரத்த தானம் செய்வது என்பது படுத்துக்கொண்டே செய்கிற வேலை. மிஞ்சிப் போனால் ஒரு மணி நேரம் செலவாகும். ஆனால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்று ரத்த தானம் செய்கிறவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு மூன்றுக்கு ஒரு பங்கு குறைகிறதாம். அதாவது எனக்கு இதய நோய் வரும் வாய்ப்பு தொண்ணூறு சதவிகிதம் இருக்கிறது என்று சொன்னால், ரத்த தானம் செய்கிற உங்களுக்கு முப்பது சதவிகிதம்தான் (சான்று- ரோட்டரி ரத்த வங்கி,CNN)


உடலில் புது ரத்தம் பாய்கிறது. அதாவது, ரத்த தானம் செய்த பின் புதிதாய் சிவப்பணுக்கள் உடலில் உற்பத்தி ஆகின்றன (விக்கிபீடியா)


முன் நான் சொன்ன மாதிரியான ரத்த சோதனைகள்- அனீமியா, ரத்த அழுத்தம், உடல் எடை, ஹெபாடிடிஸ் பி, ஹெபாடிடிஸ் சி, எய்ட்ஸ், பால்வினை வியாதிகள், மலேரியா- இவை உங்களுக்கு இருக்கின்றனவா என்று காசு வாங்காமலேயே சோதனை செய்து சொல்கிறார்கள். சொல்லுங்கள் நண்பர்களே, நீங்கள் ரத்த தானம் செய்யாதவர்களாய்  இருந்தால் சொல்லுங்கள், நீங்கள் கடைசியாக உங்கள் ரத்தத்தை சோதித்துக் கொண்டது எப்போது?


ரத்த தானம் குறித்து சில கேள்விகள்:

ரத்த தானம் செய்வதால் உடல் நலம் கெடுமா?
கெடாது.மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம். எந்த அபாயமும் இல்லை.

என் உடலில் இருந்து எவ்வளவு ரத்தம் எடுக்கலாம்?
ஏறத்தாழ பதினொன்றில் ஒரு பங்கு ரத்தத்தை எந்த ஆபத்தும் இல்லாமல் எடுக்கலாம். உங்கள் உடல் எடுத்த ரத்தம் அத்தனையையும் இரண்டு நாட்களிலேயே திரும்பச் சுரந்து விடும்.

ரத்த தானம் கொடுக்க எவ்வளவு நேரம் ஆகும்?
அதிகபட்சம் ஒரு மணி நேரம். ரத்த தானம் செய்து விட்டு நேராக வேலைக்குப் போய் விடலாம். அச்சப்படத் தேவை இல்லை.

ரத்த தானம் செய்யும் முன் நான் என்ன செய்ய வேண்டும்?
நன்றாகத் தூங்குங்கள். காலையில் நன்றாக சாப்பிடுங்கள். ஜூஸ், பால் முதலான நீராகாரங்களைத் தேவையான அளவு உட்கொள்ளுங்கள். ரத்த தானம் செய்த பின் இட்லி, பிஸ்கட், ஜூஸ் போன்ற எதையாவது லைட்டாக சாப்பிடுங்கள்.


மேலும் தகவல்கள், ரத்த தானம் செய்ய அல்லது  உங்களுக்குத் தேவையான ரத்த வகையினரை தேட இந்த தளத்தில் -  India Blood.

தகவல்/ தொகுப்பு உதவி: நட்பாஸ்
.
.
.

Related Posts Plugin for WordPress, Blogger...