ரத்த தானமும் இதய நலமும்
சிறப்புப் பதிவர்: நட்பாஸ்
ரத்த தானம் செய்தால் இதய நோய் வரும் வாய்ப்பு குறையுமா குறையாதா?
சென்ற பதிவில் "மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்று ரத்த தானம் செய்கிறவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு மூன்றுக்கு ஒரு பங்கு குறைகிறதாம்" என் று எழுதி இருந்தோம்.
இதற்கு சான்றாக ஒரு ஆய்வுக் கட்டுரையையும் சுட்டி இருந்தோம்>.
இது தொடர்பாக திரு வரசித்தன் அவர்கள் சில கேள்வி களை எழுப்பினார். அதன் தொடர்ச்சியாகவே இந்தப் பதிவு.
சென்ற வாரம் என் சகோதரர் கோவையிலிருந்து என்னைத் அழைத்து "நீ சொல்கிற மாதிரி மூன்று மாதத்துக்கு ஒரு தடவை ரத்த தானம் செய்தால் போதுமா? டாக்டர்கள் ஏன் அதை சொல்ல மாட்டேன் என்கிறார்கள்? இதை சாப்பிடு அதை சாப்பிட்டு என்கிறார்கள், இல்லையென்றால் இத்தனை தூரம் ஓடு இவ்வளவு நேரம் நட என்று எவ்வளவு கண்டிஷன் போடுகிறார்கள்," என்றார்.
கொஞ்சம் குழப்பமாகதான் இருந்தது. மருத்துவர் ஒருவராய் அணுகி இது பற்றி கேட்ட போது...
"ரத்த தானம் செய்தால் இதயத்துக்கு நல்லதாக இருந்து விட்டே போகட்டும். ஆனால் அதை நம்பி நீங்கள் சிகரெட் பழக்கத்தை விடப் போவதில்லை, தண்ணியை நிறுத்தப் போவதில்லை, கண்ட கண்டதையும் தின்கிற பழக்கத்தையும் விடப் போவதில்லை, கையை காலை அசைத்து துரும்பைக்கூட கிள்ளிப் போடப் போவதில்லை என்றால் இது நல்ல செய்தியா கெட்ட செய்தியா சொல்லுங்கள்," என்று பதில் கேள்வி கேட்டார்.
"தப்பா இருக்கற மாதிரிதான் தெரியுது," இது என் பதில்.
"அதுதான்", என்ற அவர், "யாரெல்லாம் ரத்த தானம் செய்யத் தகுதி இருக்கிறவர்கள் என்று பாருங்கள்- ப்ளட் ப்ரெஷர் இருக்கக் கூடாது, டயபெடிஸ் இருக்கக் கூடாது, அனீமியா இருக்கக் கூடாது , டிபி, கல்லீரல் நோய் இருந்திருக்கக் கூடாது, எத்தனை கண்டிஷன்கள் இருக்கிறது தெரியுமா?" என்று கேட்டார்.
வீடு வந்ததும் கூகிள் செய்ததில், உண்மைதான்.. ஆரோக்கியமாக இல்லாத எவரும் ரத்த தானம் செய்ய முடியாது எனத் தெரிந்து கொள்ள முடிந்தது. உதாரணத்துக்கு இந்த பக்கத்தைப் படித்துப் பாருங்கள். யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம் யாரெல்லாம் செய்யலாகாது எனத் தெளிவுற சொல்லியிருக்கிறார்கள். <"">
"இவர்களுக்கெல்லாம் இதய நோய் வராததில் ஆச்சரியமென்ன?" என்று கேட்கிறார் டாக்டர். "நீங்கள் தருகிற ரத்தத்தை மருத்துவமனையில் எடுத்துக் கொள்கிறார்கள் என்றால் அவர்கள் நீங்கள் முழு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று ஏற்றுக் கொள்கிறார்கள் என்று பொருள்," என்பது அவர் பதில்.
"உண்மைதான் டாக்டர்! நான் ரத்த தானம் செய்கிறேன் என்றால் என் உடம்பு நல்ல கண்டிஷனில் இருக்கிறது என்று புரிகிறது," என்று சொல்லிவிட்டு வந்தேன்.
எல்லாரும் ரத்த தானம் செய்ய முடியாது. அதனால்தான் ரத்தம் கிடைப்பது கடினமாக இருக்கிறது. நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பது பெருமைப்படக் கூடிய விஷயம். அந்தப் பெருமையை ரத்த தானம் செய்வதன் மூலம் நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்கள் இல்லையா?
உங்களால் மட்டும்தான் உயிருக்குப் போராடுகிற ஒருத்தருக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்ற முடியும்- தன் தலைவனுக்காக கொளுத்திக் கொண்டு சாகத் தயாராக இருக்கிறவனாலும் கூட ஆத்திர அவசரத்தில் தன் தலைவனுக்கு ரத்தம் கொடுத்து அவன் உயிரைக் காப்பாற்ற முடியாது. பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயானாலும் சரி, அவள் தன் எலும்பையே உருக்கி பிள்ளையை வளர்த்தாலும் அவனுக்கு ஒரு அவசரமென்றால் அவள் உங்களிடம்தான் வந்தாக வேண்டும்.
ரத்தம் கொடுத்துதான் நீங்கள் உங்கள் உடல் நலம் காக்க வேண்டுமென்பதில்லை. உங்கள் ஆரோக்கியம் நீங்கள் தருகிற ரத்தம் மூலம் மற்றவர்களுக்குப் பரவுகிறது- அது உங்களால் மட்டும் தரப்படக் கூடிய கொடை.
ஆனால் இதய நலம் காக்க சிறந்த வழி உடல் உழைப்புதான். நல்ல பழக்கங்கள்தான்.
உதாரணத்துக்கு ஒரு செய்தியை மட்டும் இப்போதைக்கு பாருங்கள்- இருபத்து இரண்டு ஆண்டு கால ஆராய்ச்சியின் முடிவு இது. தினமும் வெவ்வேறு வகைகளில் குறைந்தது ஆயிரம் கிலோ கலோரிகளை செலவிடுபவர்கள் மற்றவர்களை விட இரு மடங்கு ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அதாவது, என்னைப் போன்றவர்களுக்கு இதய நோய் வருவதற்கான சாத்தியத்தில் பாதிதான் உடலுக்கு வேலை தருகிற உங்களுக்கு இருக்கிறது. புகைப் பிடிக்கும் பழக்கம், எடை கூடி இருத்தல், உயர் ரத்த அழுத்தம் இதை எல்லாம் கணக்கில் கொண்ட பின்னரே இந்த முடிவைத் தருகிறார்கள்.
அப்படியானால் உங்கள் உடலின் எடையைக் கட்டுக்குள் வைத்திருந்தால், ஆரோக்கியமான உணவு முறைகளைக் கடைபிடித்தால், புகை பிடிக்கும் பழக்கத்தைக் கை விட்டால், தினமும் உடற்பயிற்சி செய்தால் உங்கள் இதயம் எவ்வளவு நன்றாக இருக்கும்?
ஒரு சிறிய கணக்கு சொல்கிறேன் பாருங்கள்- இதய நோயால் இந்தியா 9.2 மில்லியன் ஆண்டுகளை இழக்கிறது என்கிறார் நம் பிரதமர். அதாவது 35லிருந்து 64 வயதுக்குட்பட்டவர்கள் இதய நோய் கண்டு சிகிச்சை எடுத்துக் கொள்வதில் அவர்களது உழைப்பு இந்த அளவுக்கு விரயமாகிறது-
இந்தியாவின் தேசிய உற்பத்தியில் 1.7 சதவிகிதம் வரை இதய நோய்களுக்கான சிகிச்சைக்கு செலவாகக்கூடும் என்கிறார்கள்-<>
நாம் அனைவரும் சேர்ந்து சம்பாதிப்பதில் ஏறத்தாழ இரண்டு சதவிகிதத் தொகையை இதய நோய் கண்ட ஒரு சில பேர் மட்டும் செலவிட வேண்டி வருகிறது. இதய நோய் எவ்வளவு காஸ்ட்லியான வியாதி என்று யோசித்துப் பாருங்கள்.
இதைத் தவிர்ப்பதற்கு உடற்பயிற்சி முதற்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையே சரியான தீர்வாகும். அவை குறித்து வரும் திங்கள் கவனிப்போம்.
.
.
.
6 comments:
சிறப்பாக பதிவு செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.
நீங்கள் செய்துள்ள திருத்தங்களுக்குக் கூடுதல் நன்றி.
இதயத்தைக்கவனிக்கும் பதிவு.சில நல்லெண்ணை விளம்பரங்களை விட இதயத்துக்கு நல்லஅவசியமான தகவல். நன்றி பாஸ்கிரி.
70கிலோ எடையுடைய 40 வயது 5 1/2 அடி உயர முள்ள சும்மா இருக்கிற ஆணுக்கு(பதிவு கூடப்போடாமல்) பெண்... தேவை என்று சொல்லவரவில்லை - அண்ணளவாக 1100 கிலோகலரி தினமும் தேவைப்படும்.
அதனால்தான் தினமும் கொட்டிக்கொள்ள நேரிடுகிறது
உடற்பயிற்சி கடின உடலுழைப்பு இப்படி அந்தச்சக்திச்செலவை மேலதிகமாக ஒரு ஆயிரம் கூட வைத்திருப்பவர்கள் இதயத்தைப்பற்றி கவலைப்படதேவையில்லை .
இண்டெனெட் அடியார்களுக்கு மவுசை பெரிதாகச்செய்து அதைக் காலால் கிளிக் பண்ணுவதுபோல வைக்கலாம் ....
பதிவில் தகவல் பிழைகள் இருந்தாலோ அல்லது சொல்ல வேண்டியது சொல்லாமல் விடப்பட்டாலோ எடுத்துக் கூறுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
ஏனென்றால் எங்களுக்குத் தெரிந்த ஒரே டாக்டர் நீங்கள்தானே! அதனால் நீங்கள்தான் எங்கள் வழிகாட்டியாக இருந்து உதவ வேண்டும் :)
நான் ஒவ்வொரு முறை ரத தானம் செய்ய முயலும் போதும் ஒரு தடை வந்து விடும்.
முதலில் ஒரு இடத்தில ஹீமோக்ளோபின் குறைவு அதனால் உங்களிடம் ரத்தம் எடுக்க இயலாது என்றார்கள்.
சில வருடம் கழித்து அலுவலகத்தில் ஒரு ரத்த தான முகாம் அமைத்து ரத்தம் பெறுவது தெரிந்து வேக வேகமாக சென்றேன்.
ஒரு form fill செய்யக் குடுத்தார்கள். எல்லாம் ஒத்து வந்தது. ஆனால் ஒரு கேள்வி 'நீகள் ஏதாவது வியாதிக்கு மருந்து உட்கொள்கிரீர்களா? பெரிதாக ஒன்றும் இல்லை. பொடுகுக்கு homeopathy எடுத்துக் கொள்கிறேன். என்றேன். அப்போ ரத்தம் குடுக்க முடியாது என்று பதில் வந்தது. அதுவும் இரண்டு நாளா சாப்பிடலை என்று சொல்லியும், என் ரத்தம் எடுத்துக் கொள்ளப் படவில்லை.
அப்புறம் ஒரு நண்பரின் உறவினருக்காக ரத்தம் குடுக்க ஒரு பட்டாளமே போனோம் அப்போல்லோவுக்கு. form தரப்பட்டது. பெரிதாக ஒரு தகவலும் கேட்கப் படவில்லை, நீங்கள் கடைசியாக எப்போ ரத்தம் கொடுத்தீர்கள் என்பது தவிர. ஒரே குழப்பம். இதுக்கு முன்னே ஒவ்வொரு இடத்திலும் பெரிய பட்டியலே குடுதார்களே என்று. கேட்டு விட்டேன். அதன் பின் ஹீமோக்ளோபின் டெஸ்ட் எடுத்து, பரவாயில்லை அனால் blood platelets போறாது என்று சொல்லி விட, என்னைத் தவிர எல்லோரும் கொடுத்தார்கள். இப்படியாக எனது ரத்த தானக் கதை வெற்றி பெறாமலேயே இருக்கிறது.
நட்பாஸ்
நேர்மையாகச்சொல்வதென்றால் மருத்துவவிஷயத்தில் துறைசார்ந்த ஒருவர்தான் ஒரு புதிய விஷயத்தை ஆராய்ந்து அறிவுரையாக எழுதலாம்.
ஆனால் மருத்துவத்தகவல்களை நம்பக்கூடிய அதிகார பூர்வமான சுகாதார அறிவூட்டல்தளங்களில் ஆங்கிலத்தில் வருவதை நேரடித் தமிழாக்கித்தருவது இன்றைய தேவை காரணம் தமிழில் இவை குறைவு.
அப்படிச்செய்வது சேவை.அதில் தவறுகள் வருவதானால் மொழி சம்பந்தமானதாக அல்லது சிறு புரிந்துணர்வுக்குறைபாடாக இருக்கும்.
பெரிய கருத்துக்குறைபாடு ஏற்பட வாய்ப்பில்லை.
இங்கு ’’மேலதிகமாக 1000 கலோரிகளை செலவிடுபவர் ’’(at least 1000 k c more per day) என்று வந்திருக்கவேண்டும்
இது கொஞ்சம் சிக்கலான வேலை:(
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
மிக்க நன்றி. இந்த மாதிரியானத் திருத்தம்தான் எங்களுக்குத் தேவை.
பாராட்டு கண்ணாடியைப் பார்க்கும்போதெல்லாம் கிடைக்கிறது. தெளிவு பெறத்தான் பாடுபட வேண்டியிருக்கிறது!
தயங்காமல் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
Post a Comment