Nov 15, 2010

நலம் தரும் திங்கள் - உடல்நலனில் யோகா, தியானம் - 1

இதய நலனில் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சென்ற வாரம் பார்த்தோம்.

இதய நலனில் யோகா மற்றும் தியானத்தின் பங்கைப் பற்றி இந்த வாரம் பார்க்கவிருப்பதாகவும் சொல்லியிருந்தோம். 



டாக்டர்.வரசித்தன் அவர்கள் சென்ற இடுகையில் அளித்த பின்னூட்டத்தில் "உடற்பயிற்சி இதயத்துக்கு மட்டுமல்ல பல நோய்களுக்கு மருந்தாகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார் (நன்றி டாக்டர்). இதனைக் கருத்தில் கொண்டும்; மேலும் நாம் இதயம் மற்றும் இதய நலன் பற்றி நிறைய பேசிவிட்டதாலும்; இதய வட்டம் தாண்டி இன்று பொதுவான உடல்நலம்  குறித்து விவாதிப்போம்.

எனவே, இன்றைய இடுகை உடல்நலனில் யோகா மற்றும் தியானத்தின் பங்கு என்று அமைகிறது.

யோகா என்றால்?

யோகா என்ற வார்த்தைக்கும் யோகாசனம் என்ற வார்த்தைக்கும் வித்தியாசம் பெரிதாக இல்லை என்றாலும், இரண்டும் வெவ்வேறு அர்த்தம் கொண்டவை. 

குழப்புகிறேனா?

யோகா என்ற வார்த்தை நம்மிடையே பொதுவாக உடலை வளைத்துச் செய்யும் ஒரு பயிற்சியைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உடலை வளைத்துச் செய்யப்படுவது யோகாசனம் எனக் குறிப்பிடப்பட வேண்டும். யோகாசனம் என்பது "யோகா" என்ற வாழ்க்கை முறையின் ஒரு அங்கம், அவ்வளவே. 

"யோகா" என்ற வார்த்தையின் நிஜ அர்த்தம் இரண்டு வார்த்தைகளில் விளக்கத் தக்கதல்ல. உள்ளப் பயிற்சி, உணவுப் பயிற்சி, தியானம், ஆசனம் எனப் பல்வேறு நிலைகளைக் கொண்டது யோகா. உங்கள் தற்போதைய வாழ்க்கை முறை, உடல்நலன், மன நலம் இவற்றில் இருந்து எந்தப் பயிற்சி உங்களை உண்மையாக ஒரு படி மேம்படுத்தி மேலே அழைத்துச் செல்கிறதோ அதை நீங்கள் யோகா என்றழைக்கலாம்.


"Yoga refers to traditional physical and mental disciplines that originated in India." எனக் குறிப்பிடுகிறது விக்கிபீடியா. "உளரீதியான மற்றும் உடல்ரீதியான ஒழுங்கு முறைகளைக் கொண்ட ஒரு பாரம்பரிய வாழ்க்கை முறை" எனப் பொருள் கொள்ளலாம்.

யோசித்துப் பாருங்கள்! உடலும் உள்ளமும் நீங்கள் சொல்வதைக் கேட்கும் பயிற்சி உங்கள் கைவசம் இருந்தால் உடல் நலன் உங்கள் கட்டுப்பாட்டில் கண்டிப்பாக இருக்கும் அல்லவா?

யோகாவின் பலன்கள்:

யோகா உங்கள் உடல் நலனுக்கு நேரிடை மருந்தாக அமைவதில்லை. யோகாவை உங்கள் வாழ்க்கை முறையில் நீங்கள் அழைத்து வந்தால்; மன அழுத்தம், டென்ஷன் ஆகியவற்றில் இருந்து முதல் படியிலேயே உங்களுக்கு விடுவிப்பைத் தருகிறது. உங்கள் உடல் நலனைப் பேண இது பெரும் உதவியாக இருக்கிறது. 

மன அழுத்தம், டென்ஷன் ஆகியவற்றில் இருந்து நீங்கள் விடுபடும்போது இயற்கையிலேயே ரத்த அழுத்தம், சுவாசப் பிரச்னைகள் ஆகியவற்றில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கிறது.

சில வகை ஆசனப் பயிற்சிகள் உங்கள் உடல் இயக்கத்தைச் சீராக்கி மூட்டு, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் உங்களுக்கு தீர்வு தருகிறது. உங்கள் உடல் எடையை ஒரு கட்டில் வைக்கிறது.

யோகாவின் ஒரு முக்கிய அங்கமான பிராணயாமம் என்பது பலவகை மூச்சுப் பயிற்சிகளை உள்ளடக்கியது. பிராணயாமப் பயிற்சியில் நீங்கள்  ஈடுபட்டால் அது சுவாசக் கோளாறுகள், சைனஸ், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஆகியவற்றுக்கு மருந்தாக அமைகிறது.

பிராணயாமம், யோகாசனம் ஆகியவற்றை நீங்கள் மேற்கொள்ளும்போது உங்கள் உணவு முறையில் தன்னாலே ஒரு ஒழுங்குமுறைக்கு நீங்கள் வரும் அவசியம் ஏற்படுகிறது. அது உங்கள் உடல்நலனைப் பேண ஒரு கூடுதல் காரணியாக அமைகிறது.



யார் கற்றுத் தருவார்கள்?

ஓகே சார், ரொம்ப தேங்க்ஸ்! உடனே கடைக்குப் போயி "யோகாசனம் செய்வது எப்படி", "மனசே அமைதி ப்ளீஸ்" இந்த புத்தகமெல்லாம் வாங்கி வந்து பயிற்சியை ஆரம்பிக்கிறேன் என்று கிளம்பிட்டீங்களா. உங்க ஆர்வத்துக்கு ஒரு சலாம். ஆனா கொஞ்சம் உட்காருங்க...!!

யோகா தியானம் போன்றவை கண்டிப்பாக ஒரு தேர்ந்த ஆசிரியரின் வாயிலாக மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டிய பயிற்சி முறைகள். புத்தகங்களோ, தொலைக்காட்சியோ கொண்டு நீங்கள் கற்றுக் கொண்டால் அவை முறையாகக் கற்றுக் கொண்டது ஆகாது. நீங்கள் கற்றுக் கொண்டது சரியா எனப் பரிசோதித்து நீங்கள் செய்யும் தவறுகளைத் திருத்தி உங்களை சரியான முறையில் ஆசன / சுவாசப் பயிற்சியில் ஈடுபடுத்த ஒரு பயிற்சி பெற்ற ஆசிரியர் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து எதனையும் தயவு செய்து வைத்துக் கொள்ளாதீர்கள்.

அடுத்த திங்களில் தியானம் பற்றி பார்ப்போம். எங்கெல்லாம் கற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளது எனவும் அங்கே பார்க்கலாம்.





தொடரின் முந்தைய பதிவுகள் 



.
.

3 comments:

test said...

//யோகா உங்கள் உடல் நலனுக்கு நேரிடை மருந்தாக அமைவதில்லை. யோகாவை உங்கள் வாழ்க்கை முறையில் நீங்கள் அழைத்து வந்தால்; மன அழுத்தம், டென்ஷன் ஆகியவற்றில் இருந்து முதல் படியிலேயே உங்களுக்கு விடுவிப்பைத் தருகிறது//

that is the point!! :))

natbas said...

பயனுள்ள பதிவு, பகிர்வுக்கு நன்றி.

அடுத்தது தியானமா? தியானத்துக்கும் யோகாவுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளையும் சற்றே விளக்குங்களேன்....

Anonymous said...

நன்றி
முக்கியமான ஒரு விஷயம் பற்றிய நல்ல பதிவு!


ஆரோக்கியம் என்பதன் வரைவிலக்கணம்(WHO) உடல், உள சமூக நலம்-
Health is a state of complete physical, mental and social well-being and not merely the absence of disease or infirmity- என்பதாக இருக்கிறது.

எல்லாவற்றையும் ஒரு சேர தருகிற ஒன்று யோகா!

மன அழுத்தம் உறவுகளை பாதித்து இன்றைய பல சமூகச்சிக்கலுக்கு காரணாமாயிருக்கிறது.

இங்கெல்லாம் யோகாவின் பல கூறுகளை உள்வாங்கி சிகிச்சை முறைகளில் கையாளுகிறார்கள்.

பகிர்வுக்கு மிக்க நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...