சினிமாவை சினிமாவாக விலகியிருந்து பாராமல் அதில் இருந்த சூட்சுமங்களை, உருவாக்கத்தின் பின்னணியில் இருக்கும் பல்துறை உழைப்புகளைப் பற்றி நான் புரிந்து கொள்ளத் தொடங்கியிருந்த என் பதினெட்டாம் வயது...
காதல் இளவரசனாகவும் முத்தக்கலை வித்தகனாகவும் கமலை எனக்குத் தெரியும். நாயகன், தேவர் மகன் என இரண்டு கனமான கதாபாத்திரங்களில் நடித்த நடிகனாகவும், மூன்றாம்பிறை, புஷ்பக் போன்ற படங்களில் வித்தியாச பாத்திரத்தில் நடித்த நடிகனாகவும் கமல் மீது எனக்கு கொஞ்சம் நல்ல அபிப்ராயம் ஏற்பட்டிருந்தது. மைக்கேல் மதன காமராஜனை நான் அப்போது பார்த்ததாய் நினைவில்லை...
கொளத்தூர் குமரனில் மகாநதி பார்க்கச் சென்றேன். என்னை அப்படியே உலுக்கிப் போட்டது அந்தப் படம். படம் தந்த பாதிப்பில் இருந்து நான் மீண்டு வர எனக்கு பத்து தினங்கள் பிடித்தது. இப்படிக் கூட படம் பண்ண முடியுமா என நான் ஆச்சர்ய வியப்பின் உச்சியில் இருந்தேன்.
தென் தமிழகத்தில் சீவல் பாக்டரி நடத்தி மகன், மகளுடன் சந்தோஷ வாழ்க்கை வாழும் விடோயர் கிருஷ்ணாவாக கமல். வில்லன் ஹனீபா ஆசை காட்டி இழுத்த இழுப்பிற்கு சென்னைப் பட்டினம் வந்து அவர் வாழ்க்கை சீரழியும் கதைதான் மகாநதி.
கட்டுமரக்காரன், பெரியமருது என சி' சென்டரை நோக்கிக் குறிவைத்து வந்து கொண்டிருந்த படங்களுக்கும்; காதலன், மே மாதம் போன்ற ஃபான்டசி படங்களுக்கும் இடையே மகாநதியை உள் நுழைத்த கமலும் சந்தானபாரதியும் மிகவும் தைர்யசாலிகள்.
எந்தப் படமும் ஒரு முறை பார்க்கவே யோசிக்கும் நான் மகாநதியை அதன் பாதிப்பிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ளக் கூடாது என்ற பிடிவாதத்தில் மூன்று முறை பார்த்தேன்.
நான் அதற்கு முன்னரும் சரி பின்னரும் சரி, பார்த்த படம் எதுவும் என்னை முழுமையாக அப்படியே உள் விழுங்கியதில்லை.ஆனால் மகாநதி என்னை முழுமையாக ஆக்கிரமித்தது. வில்லனாக நடித்த வி.எம்.சி.ஹனீபா'வை திரைக்குள் சென்று உதைக்கத் தோன்றியது. துலுக்கானத்தை கமல் புரட்டியெடுத்த காட்சியில் ஓ'வென ஆர்ப்பரித்தேன் நான்.
தான் பெரிய மனுஷியான செய்தி சொல்லி சிறையிலிருக்கும் கமலிடம் "மகாநதி" ஷோபனா காலில் விழும் காட்சியில் கமலுடன் சேர்ந்து நானும் அழுகிறேன்.
மகாநதியைக் கடந்தபின் சினிமா குறித்த என் பார்வை முற்றிலும் மாறிப்போனது.
அதன் பின் நடிப்பு, நவரசம், நகைச்சுவை என கமல் தந்த விதவித விருந்துகள் எதையும் நான் தவற விடவில்லை. நம்மவர், குருதிப்புனல், ஹே ராம், அவ்வை ஷண்முகி, அன்பே சிவம் என ஒவ்வொன்றாய் நான் என் வியப்புகளையும் சிலாகிப்புகளையும் எழுதி முடிக்க எனக்கு ஒரு புத்தகம் போதாது.
தமிழ் எழுத்துலகில் சுஜாதாவின் இடம் எப்படி யாராலும் ஈடு செய்து நிரப்ப இயலாத ஒன்றோ அதே போல் தமிழ் சினிமா உலகில் கமல் கொண்ட இடத்தை அவருக்கு முன்னரும் சரி பின்னரும் சரி யாரும் கொண்டதுமில்லை. கொள்ளப் போவதுமில்லை.
கமல் ஒரு ராட்சசன். தமிழ் சினிமா ராட்சசன். கமலை அடித்துத் தின்ன கமலால் மாத்திரமே முடியும். தான் கொண்ட பிடிவாதமும், விடா முயற்சியும், மூர்க்கத்தனமும், கர்வமும்தான் தனக்கு அழகு என முழுமையாக உணர்ந்த படைப்பாளன் கமல்.
இன்று ஐம்பத்தி ஆறாம் பிறந்த நாள் காணும் கமல் இன்னமும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு தமிழ்த் திரையியுலகில் இன்னமும் பலப்பல சாதனைகள் படைத்து வாழ வாழ்த்துகிறேன்.
.
.
.