கடந்த நான்கு மாதங்களாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை (வாலாஜா சாலைக்கும் பாரதி சாலைக்கும் இடைப்பட்ட பகுதி) குத்திக் குதறிய நிலையில் இருக்கிறது. சாதாரண நேரத்தில் ஒரு வண்டி வந்தால் எதிரில் மறுவண்டி செல்ல படாதபாடு பட வேண்டியிருக்கிறது. அலுவலக நேரங்களைச் சொல்லவே வேண்டாம். பாதாள சாக்கடை அமைக்கிறார்களா இல்லை குடிநீர் வாரிய வேலையா எனப் புரியவில்லை. ஏதேதோ மாறிமாறி நடக்கிறது.
இந்த வார இறுதியில் (அநேகமாய் சனிக்கிழமை) முதல்வர் அவர்கள் இந்தச் சாலையை கடந்து சென்று சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
வழக்கம்போல் அலுவலகம் சென்று வீடு திரும்புகையில் வெள்ளியன்று இரவும் இந்தச் சாலையையே உபயோகித்தோம். அவசரச் சாலை போடும் முன்னேற்பாடுகள் ஆர்ப்பாட்டமாக நடக்கின்றன. அநேகமாக சனியன்று காலையில் சாலை தயாரானால் ஆச்சர்யம் இல்லை.
இத்தனை நாட்களாக இவ்வழியே குலுங்கிக் குலுங்கிப் பயணம் செய்து கொண்டிருந்த எனக்கு "நான் யார்?" என்ற சுய பச்சாதாபக் கேள்வி ஒன்று எழுந்தது. அடக்க மாட்டாமல் கையாலாகாத்தனத்துடன் கூடிய ஆத்திரமும் வந்தது.
மேலே நான் ஏதேனும் எழுதி வீட்டிற்கு ஆட்டோக்களை வரவழைத்துக் கொள்ளுமுன் இங்கேயே முடித்துக் கொள்கிறேன்.
வாழ்க ஜனநாயகம்.
.
.
.
.
.
.
.
.