Jun 19, 2010

பெயரின்றி அமையாது உலகு

ஸஸரிரிக்கு மற்றுமோர் சிறப்புப் பதிவர். இந்த முறை எழுதுபவர் என்னை எழுதியவர் - என் அம்மா!
__________

சத்தியப்பிரியன் எழுதிய
"பெயரின்றி அமையாது உலகு" (சிறுகதை)
சிறப்புப் பதிவர்: ஆர்.சுசிலா



ஜூன் 2'ஆம் தேதியிட்ட விகடனில் வந்த இந்தச் சிறுகதை மனதைத் தொட்டது.

வயதானவர் ஒருவர் தன பெயரை யாராவது கூப்பிட மாட்டார்களா என ஏங்குகிறார். தான் பிறந்து வளர்ந்த ஊருக்கே வருகிறார். ஒவ்வொரு நண்பராகத் தேடுகிறார். ஒருவர் அமெரிக்காவில், ஒருவர் சந்தன மாலையுடன் போட்டோவில் எனப் பார்த்து மனம் நோகிறார்.

தன்னை யாராவது பேர் சொல்லிக் கூப்பிடமாட்டார்களா என அவர் எங்கும் ஏக்கம்தான் கதையின் கரு. 

கடைசியாக ஒரு வீட்டின்முன் நிற்கிறார். அவர் பள்ளித் தோழன் சுந்தரேசன் வீடு. பள்ளி நாட்களில் சுந்தரேசன் சேகரித்த அழகிய ஸ்டாம்புகளில் சுவிட்சர்லாந்த் ஸ்டாம்ப் இவர் கைக்கு வந்து விடுகிறது. இதை அறிந்த சுந்தரேசன் கோபம் கொண்டு உன்னை இனி பெயர் சொல்லியே கூப்பிடமாட்டேன் என சூளுரைக்கிறார். அந்த சுந்தரேசனைத்தான் பார்க்க வருகிறார்.

அவர் மகன் உள்ளே அழைத்துப் போகிறார். சுந்தரேசன் தொண்டையில் முற்றிய கான்சரால் பேச முடியாதவராக இவரைப் பார்க்கிறார். குழறியபடியே அவர் சொல்லும் அவர் வகுப்புத் தோழர்களின் பெயர்களை (அகர வரிசைப்படி) மகன் மொழி பெயர்க்கிறார். சற்றேறக்குறைய சுந்தரேசன் அனைவருடனும் தொடர்பு கொண்டு விட்டாராம். பெயர் சொல்லி அழைக்க முடியாத வண்ணம் அனைத்து நண்பர்களும் முதுமை காரணமாக இறந்து கொண்டேயிருக்க, அவருடைய தேடுதலில் அகப்படாமல் இருந்தது  'இந்தப் பெரியவரின்' பெயர் மட்டும்தானாம். 

உங்களை சந்தித்ததில் அப்பா மிகமிக மகிழ்ச்சி அடைகிறார் என மகன் மொழி பெயர்க்கிறார். முதுமையின் பெருமையே சக வயசாளியின் இருப்பை அறிவதுதான் என நம் கதாநாயகன் நெகிழ்கிறார்.

கான்செர் செல்கள் மூச்சுப் பாதையை அரித்து விட்டன. எதன் காரணமாக அவர் உயிருடன் இருக்கிறார் என்பது மருத்துவ அதிசயம் என மகன் கூற, அது என் பெயரை உச்சரிப்பதற்காகத்தான் என பெரியவர் கூறுகிறார். மகனுக்குப் புரியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து வந்தால், பேச்சுப் பயிற்சி  தருபவர் பயிற்சி கொடுத்த பின், அவர் பேசலாம் என மகன் கூறுகிறார்.

சுந்தரேசனோ முதலில் பற்றிய பெரியவரின் கையை விடவேயில்லை. இன்னமும் இறுகப் பற்றிக் கொள்கிறார்.

ஒரே கணம்தான், தன் சுவாசம் முழுவதையும் நிலைப்படுத்தி கான்சரால் வலிக்கும் தொண்டையைச் சரிப்படுத்து பலத்த முயற்சியுடன் சுந்தரேசன் வாயிலிருந்து கேட்பதற்கு ஏங்கிக் கொண்டிருந்த அவர் பெயர் பொங்கி வழிகிறது....

"சஹஸ்ர நாமம், டேய் சஹஸ்ர நாமம்"

பெயர் அங்கேயே உயிர் பெற்றது எனக் கதை முடிகிறது.

கதையின் கரு சாதாரண மனித ஆசையைப் பற்றியதாக இருந்தாலும், அதைச் சுற்றிய சிலந்திவலைப் பின்னல் போன்ற அழகிய சம்பவங்களும் அழகான நெஞ்சை நெகிழ வைக்கும் முடிவும் அற்புதம்.
.
.
.Image Courtesy : http://teriberi.files.wordpress.com

1 comment:

சத்தியப் பிரியன் said...

என் சிறுகதையைப் பாராட்டியதற்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...