செப்டம்பர் மாதத்தில் தூவானம், தூறல் மழை என்று சில்சில்லென இருந்தது சீரடி. தரிசனம் முடிந்து விடுதிக்குத் திரும்புகிறோம். ஆட்டோ வேறு எதற்கோ நிற்கவும் விடுதி வாசலிலேயே இறங்கிவிட்டேன். உள்ளே இருநூறு மீட்டர் தூரம் நடக்க வேண்டும். நான் இறங்கியதை கவனியாது ஆட்டோ உள்ளே செல்கிறது. சரி போகட்டும் என நான் தூறலை ரசித்தவாறு உள்ளே நடக்கிறேன்.
ஆட்டோவிலிருந்து என் மாமியாரின் குரல், "ஏமி சேஸ்தாடு ஆய்ன, வானல தடுசுகுனி, ஜுரம் பட்டுகோ போதுந்தி" (என்ன பண்றான் இந்த மனுஷன் மழைல நனைஞ்சுக்கிட்டு, ஜுரம் ஏதாவது வரப்போவுது). தனக்கு வந்த கட்டளையை புரிந்து கொண்டு ஆட்டோவினுள் ஏறும்படி என்னைப் பணிக்கிறார் என் மாமனார். வேண்டா வெறுப்பாய் மழையிடமிருந்து என்னை மறைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறுகிறேன்.
பின்னொரு நாளில்....அலுவலகத்தில் வீடு திரும்ப வண்டி (cab ) பிடிக்க வெளியே வருகிறோம். லேசான தூறல். மோகன் கால்களை பின்னோக்கி இழுக்கிறான். "ஏய், நான் பில்டிங் உள்ளே போயி, சுத்திக்கிட்டு வெளிய வர்றேன்பா, எனக்கு மழைல நனைஞ்சா ஜலதோஷம் பிடிக்கும். ஏற்கெனவே லேசா தொண்டை கட்டிட்டு இருக்கு".
மோகனுக்கு மூக்கு இருக்கிறதோ இல்லையோ வருடம் முன்னூறு நாள் ஜலதோஷம் இருக்கும். இதில் மழையில் நனைந்தால் என்ன காய்ந்தால் என்ன?. சிரிப்புதான் வருகிறது.
சினிமாவில் மட்டுமே கதாநாயகனும் கதாநாயகியும் மழையில் ஆசை தீர நனைகிறார்கள். மழையில் ஐஸ் கிரீம் உண்கிறார்கள். நிஜத்தில் மழையில் ரசித்து நனைபவர்கள் எல்லாம் கிறுக்கர்கள்.
மழை தூற ஆரம்பிக்கும் அந்த வினாடிகளில் சாலைகளை கவனியுங்கள். நூற்றில் தொண்ணூற்றொன்பது பேர் அலறியடித்தபடி நிழல் (!!) தேடி ஒதுங்குகிறார்கள். மீதமிருந்த ஒருவர் நிதானமாக ஒதுங்குவார், அதையும் கவனியுங்கள்.
"எனக்கு மழைல நனைறது ரொம்ப புடிக்கும்", என சில சின்னப் பெண்கள் சொல்லக் கேட்பேன். அவர்கள் கூட சின்னத் தூறலுக்கு ஓடி ஒதுங்கி விட்டு, "அடுத்த தடவை நனையறேனே", என்கிறார்கள். அப்புறம்தான் தெரிகிறது அவர்கள் சொன்னது ஒரு ஸ்டைல் டயலாக் என்று.
நம் ஊரில், நனைந்தவுடன் அனைவருக்கும் ஜலதோஷம் வந்து விடுகிறது. அடுத்தநாள் உடல் வலி வருமாம். நான்கு நாட்களுக்குக் காய்ச்சலும் சேர்ந்து கொள்கிறது. வரவில்லை என்றாலும், எப்பாடுபட்டாவது வரவழைத்து தன கூற்றை நிரூபிக்க சிலரால் முடிகிறது. "ஹச்சு..... அது ஒண்ணும் இல்ல, நேத்து கொஞ்சம் மழைல நனைஞ்சுட்டேன்.....ஹச்சு....."
நனைவதை வாடிக்கையாய்க் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒன்றும் வராது என்பேன் என் நண்பர்களுக்கு. "இவனுக்கு ஏதோ சரியில்லை", என்னும் பார்வை வரும். அல்லது அடுத்த முறை இந்தத் தலைப்பில் பேச்சு வராது அவர்களிடமிருந்து.
நீங்கள் நனையாமல் விட்டு விட்டுத்தான் வருணதேவன் வர மறுக்கிறான் என்றும் சொல்லிப் பார்ப்பேன். "ஒரு வேளை இவனுக்கு எதாவது பிரச்னையோ" எனப் புருவங்கள் உயரும்.
இன்னமும் யாருக்கும் பயம் விட்டபாடில்லை.
மழையில் நனைதல் பற்றிய இந்தப் பாடலைக் கேளுங்கள்....
மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கறுப்புக் கொடி காட்டி யாரும்
கதவடைக்க வேண்டாம்.
இது தேவதையின் பரிசு
யாரும் திரும்பிக்கொள்ள வேண்டாம்...
நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில்
ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழ வந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்.
மழையில் நனைய வருகிறீர்களா?
.
.
1 comment:
நல்ல பதிவு.
கவிதையெல்லாம் எழுதுகிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
Post a Comment