Jun 19, 2010

ராவணன் - என் பார்வை

Image Courtesy: http://movies.rediff.com

வழக்கம்போல ரொம்பவும் ரிஸ்க்கான ஒரு கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் மணி. ராவணன் நல்லவன், ராமன் (கிட்டத்தட்ட) நல்லவனில்லை எனும் "ராவண காவியம்" சொல்லியிருக்கிறார் இந்தமுறை.

இராமாயணத் தொடர்புகளைத் தாண்டிப் பார்த்தோம் என்றால் படத்தில் பேச பல விஷயங்கள் உண்டு. 


மக்களுக்கு நல்லவன், போலீசுக்குக் கெட்டவன் என்று ஒரு ரிபெல் கதாபாத்திரம் விக்ரமுக்கு. அம்பை, வி.கே.புர சுற்றுவட்டாரக் காடுகள் அவரது வாசஸ்தலம். விக்ரமை வேட்டையாட வருகிறார் எஸ்.பி. பிருத்விராஜ். 

தன் தங்கை முடிவிற்குக் காரணமான பிரித்விராஜின் மனைவி ஐஸ்வர்யா ராயைக் கடத்துகிறார் விக்ரம். பிரித்விராஜ் மனைவியைத் தேடுகிறார். காட்டிலே அந்தப் பதினான்கு (!!) நாட்களில் விக்ரமுக்கு ஐஸ் மேல் ஈர்ப்பு ஏற்பட, அது கொஞ்சம் கொஞ்சமாய் டெவலப் ஆக....அதன் பின் யார் யாருக்கு என்ன ஆச்சு, எப்படி போச்சு என்பதுதான் படம்.

மணியிடமிருந்து விக்ரமுக்கு இது டூ லேட் சான்ஸ். இருந்தால் என்ன? தந்த கதாபாத்திரத்தை பிரித்து மேய்ந்திருக்கிறார் விக்ரம். கார்த்திக், பிரபு, ரஞ்சிதா, வையாபுரி, இவர்களும் உண்டு படத்தில்.

ரொம்பவெல்லாம் சிக்கலாக்காமல், விக்ரமின் ஐஸ் மீதான இந்த விவகார ஈர்ப்பை ரொம்பவும் நீட்டி முழக்காமல், குறிப்பாய் அவர் விரகதாப உணர்வுகளை நுண்மையாகப் பதிவு செய்யாமல் படம் தந்திருப்பது ராவணனின் குறிப்பிடத்தக்க பிளஸ். "கோடு போட்டா" பாடல் தவிர்த்து மற்ற அனைத்துப் பாடல்களும் படத்துடன் பின்னிப் பிணைந்து வருவது நல்ல  திரைக்கதைக்குக் கிடைத்த வெற்றி.

ரஹ்மானின் பாடல்கள் அனைத்தும் இசைத்தட்டில் இருந்ததை  விடவும் திரையரங்குகளில் தனியே ஈர்க்கிறது. குறிப்பாக பாடகர் கார்த்திக் "உசுரே போகுதே" என்னும்போது நமக்குத் தலை சுழல்கிறது.


ஆரம்ப காலம் தொட்டு மணியின் படங்களில் கேமரா எப்போதுமே தனிக் கவனம் பெற்றிருக்கும். ராவணன் மட்டும் விதிவிலக்கா என்ன? முழுக்க முழுக்க அவுட்டோரில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு சந்தோஷ்சிவனின் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் ஒளிப்பதிவு மிகப்பெரிய பலம்.

சுஹாசினியின் வசனங்கள்  படத்தின் மற்றுமொரு பலம்.  (எய்யா இப்பிடி முந்திக்கிட்டீறேன்னு கேக்கணும், என்னக் கொல்லப் பெறந்த பெரிய ஆசாமி யாருன்னு இப்பல்லா புரிஞ்சுது, நான் SP கட்சிதான் ஆனா ஓட்டு உனக்குத்தான்).சிக்கலான சில இடங்களில் கூட நாசூக்காக அல்லது நுணுக்கமாக வசனம் கையாளப்பட்டுள்ளது.

அங்கே இங்கே குறைகளும் உண்டு. எனினும் படத்தின் பிளஸ்களுக்கு   எடை   அதிகம். வியாபார ரீதியாகப் பார்த்தால் இப்படம்...... அட அதை விடுங்க, அது எதுக்கு நமக்கு. அதை மணி சார் பார்த்துப்பார்.

பி.கு: இராமாயண ஒற்றுமைகளை இணைய உலகில் எல்லோரும் கவனித்து பிரித்து மேய்கிறார்கள். இந்த ஒரு ஒற்றுமையையும் மணி விட்டு வைக்கவில்லை. லக்ஷ்மணன் (ஹேமந்த்) சூர்ப்பனகை (ப்ரியாமணி)மூக்கைத் திருகுகிறார். அடடா...என்ன சொல்ல.
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...