Showing posts with label இந்திய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட். Show all posts
Showing posts with label இந்திய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட். Show all posts

Feb 24, 2011

உலகக்கோப்பை - நச்சுன்னு நாலு



போட்டிகள் தொடங்கி ஐந்து நாட்கள் ஆகியிருக்கின்றன. பங்களாதேஷ், கென்யா, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, கனடா போன்ற முக்கியத்துவம் இல்லாத அணிகளுடன் பந்தயக் குதிரை அணிகள் பங்கு பெற்ற ஆட்டங்கள் முடிந்திருக்கின்றன. இதுவரை அதிர்ச்சி முடிவுகள் ஏதுமில்லை.


கடந்த இரண்டு நாட்களில் நடந்த போட்டிகளில் இங்கிலாந்து - நெதர்லாந்து போட்டி நல்ல சுவாரசியம் சேர்த்த போட்டி. பலம் வாய்ந்த இங்கிலாந்துக்கு எதிராக அனாயசமாக 292 ரன்களை நெதர்லாந்து குவித்தது அசத்தலாக இருந்தது. மயிரிழையில் இங்கிலாந்து தோல்வியைத் தவிர்த்தது. இந்திய அணிக்கு அடுத்த வாரம் நெதர்லாந்துடன் ஒரு போட்டி உள்ளது. இந்தியா எப்படி சமாளிக்கிறது எனப் பார்க்கவேண்டும்.

நான்னேஸ் என்ற வேகப் பந்து வீச்சாளரை நினைவிருக்கிறதா? ஐ.பி.எல். போட்டிகளில் டெல்லி டேர்டெவில் அணிக்கு பந்து வீசி அசத்தியவர். அவர் அடிப்படையில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்று இப்போது அந்த அணிக்கு ஆடத் தொடங்கியுள்ளார். டுவென்டி டுவென்டி போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியில் அவர் பந்து வீசுவதைப் பார்க்கலாம்.

"நான்னேஸ் கண்டி இருந்திருந்தான், இங்கிலாந்து பசங்க பல்லப் பேத்திருக்கலாம்", என நேற்று ரயிலில் ஒருவர் பேசுவதைக் கேட்டேன்.

  

நேற்றைய பாகிஸ்தான் - கென்யா போட்டியில் ஆஸ்திரேலிய, இலங்கை அணிகள் கொண்ட உத்தியை பாகிஸ்தான் அணியும் பயன்படுத்தியது. நிதானமாக ஆடத் தொடங்கி ஆட்டத்தின் பின்பாதியில் ரன் சேர்த்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சின்ன அணிகள் தரும் அதிர்ச்சி வைத்தியங்களிளிருந்து தப்பிப்பது எப்படி எனப் பாடம் எடுத்தார்கள். கென்யா வீரர்கள் பேட்டிங்கில் சென்னை போட்டியைப் போலவே சொதப்பியது "போங்கடா டேய், நீங்கள்லாம் எதுக்குடா ஆட வர்றீங்க?" எனக் கேட்கத் தோன்றியது.

நிஜமான போட்டி இன்றுதான் துவங்குகிறது எனலாம். இன்று தொடங்கி வரும்  ஞாயிறு வரை தொடர்ச்சியாக முக்கியத்துவம் வாய்ந்த எட்டு அணிகளும் பங்குபெறும் ஆட்டங்கள்.

தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் - இன்று
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து - நாளை
இலங்கை - பாகிஸ்தான் - சனிக்கிழமை
இந்தியா - இங்கிலாந்து - ஞாயிறு

இவற்றில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்க அணிகளின் ஆதிக்கம் இருக்கும் என நம்பலாம். சனி மற்றும் ஞாயிறு ஆட்டங்களில் நான்கு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்பதால் கொஞ்சம் கூடுதல் சுவாரசியத்தை எதிர்நோக்கலாம்.

பொறுத்திருந்து பார்ப்போம்! விரிவாக விவாதிப்போம்!

Feb 22, 2011

முதல் மூன்று நாட்கள்

மூன்று தினங்களையும் நான்கு ஆட்டங்களையும் கடந்திருக்கிறோம். எட்டு அணிகள், அவற்றில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசி அணிகளுக்கு எதிரில் ஆடிய நான்கு அணிகள் பந்தயத்தில் இல்லாதவை. எனினும் இத்தகைய அணிகள் திடீர் ஆச்சர்யம் ஏதேனும் தந்து பந்தயத்தில் முந்தும் குதிரைகளின் காலை வாரிவிடும் சாத்தியம் கொண்டவை. நல்லவேளையோ அல்லது கெட்டவேளையோ  இந்த மூன்று நாட்களில் அத்தகைய ஆச்சர்யங்கள் ஏதும் நிகழவில்லை.



இந்திய அணி முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களின் ஆக்கிரமிப்பில் வெற்றி பெற்றது. சேவாகையும் அவருக்கு இணையாக ஆடிய விராத் கோலியையும் மறக்கலாகாது. 

2007 உலகக் கோப்பை தோல்விக்கு பங்களாதேஷ் அணியை இந்தியா பழி வாங்கியது" என எந்தத் தலைப்புச் செய்தியும் வராமல் போனது ஏமாற்றமளித்தது. முற்றிலும் சரணாகதி அடையாமல் ஒரு கண்ணியமான ஸ்கோரை எட்டும் விதம் நேர்த்தியான ஆட்டத்தை பங்களாதேஷ் அணியினர் தந்தனர். தமிம் இக்பாலும் ஷகீப் அல் ஹசன் இருவரின் அரை சதங்களும் பாராட்டிற்கு உரியவை. முனாப் படேல் சாய்த்த நான்கு விக்கெட்டுகள் அவருக்கு நல்ல கிரெடிட். விக்கெட் வேட்டையை அவர் தொடர பிரார்த்திப்போம்.


சென்னையில் பகல் ஆட்டமாக நடந்த நியூசி - கென்யா ஆட்டத்திற்கு டிக்கெட் வாங்கியிருந்தேன். சொந்த அலுவல்கள் காரணமாக சற்றே தாமதமாக பன்னிரண்டு மணிக்கே புறப்பட இயன்றது. சேப்பாக்கத்திலிருந்து நண்பன் அழைத்து "வரவேண்டாம், மேட்ச் முடியப் போகுது" என்றான். தொடர் தோல்விகளின் பிடியில் சிக்குண்டு கட்டுண்டு கிடக்கும் நியூசிலாந்து அணிக்கு 2003'ஆம் ஆண்டின் அரையிறுதி அணியான கென்யா கொஞ்சமேனும் நெருக்கடி தரும் என எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நியூசி அணி பவுலர்கள் சரிசமமாக கலக்கினர். மூன்று நான்கு என விக்கெட்டுகளை ஓரம், பென்னெட், சௌதீ மூவரும் வீழ்த்தியிருந்தனர். நியூசி அணி பவுலர்களின் கலக்களைத் தாண்டி கென்யா அணியினர் தாமே முன்வந்து சுருண்டனர் எனவும் சொல்லலாம். அதுவே நிஜம். 



இந்த நான்கு ஆட்டங்களில் குறிப்பிடத் தக்கவையாக இலங்கை - கனடா மற்றும் ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே ஆட்டங்களை சொல்லத் தோன்றுகிறது. சிறிய அணிகளுக்கு எதிரே ஆடினாலும் இலங்கை ஆகட்டும் அல்லது ஆஸ்திரேலியா ஆகட்டும் முதலில் பேட் செய்தபோது இருபத்தியைந்து ஓவர்களுக்கு எந்தவித பதட்டமும் இன்றி நிதானமாக ஆடி கணிசமான விக்கெட்டுகளை கையில் வைத்துக்கொண்டு ஆட்டத்தின் பின்பாதியை ரன் சேர்க்க பயன்படுத்திக் கொண்டனர். இது ஒரு விதத்தில் நல்ல உத்தி. இது போன்ற ஆட்டங்களில் பவுலர்களின் பங்கும் மகத்தானது என்பதை மறக்கக் கூடாது.



இப்போதைக்கு விவாதிக்க மேற்கொண்டு ஏதுமில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். ஆட்டம் சூடுபிடிக்கப் பிடிக்க நம் விமர்சனங்களும் சூடு பிடிக்கலாம்.

Image courtesy: cricinfo

Dec 25, 2010

ஒரு செஞ்சுரியனின் நிழலில்....


இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான இரண்டாம் டெஸ்ட் போட்டி நாளை பாக்சிங் டே மேட்ச் என அழைக்கப்பட்டு துவங்குகிறது. அதற்கு முன், முடிந்து போன முதல் போட்டியின் சில அம்சங்களைக் கவனிக்கும் அவசியம் நமக்கு ஏற்படுகிறது.


சரி....நான் சொல்ல வந்ததை நான் சொல்லத் தொடங்குமுன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டு உதரணங்களைப் பாருங்கள்....

உ.ம். 1 :

1999'ஆம் வருடம் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் இயக்கத்தில் சங்கமம் திரைப்படம் வெளிவந்தது. வியாபார ரீதியாக படம் வெற்றி பெறாவிடினும் அந்தப்படத்தின் பாடல்கள் ஆண்டுகள் கடந்து இன்றும் பிரபலமானவை. அந்தப் படத்தின் பாடல்கள் எவை என நான்கு பேரிடம் கேட்டால் பதில் என்ன தெரியுமா?

"வராக நதிக்கரையோரம் - அதுதானே அருமையான பாட்டு அந்தப் படத்துலையே. ஷங்கர் மகாதேவன் அறிமுகப் பாட்டு இல்லையா அது? பட்டிதொட்டியெல்லாம் கலக்கி எடுத்துச்சி இல்லை அந்த பாட்டு."

"பிறகு?"

"அப்புறம் ரெண்டு மூணு பாட்டு சுமாரா இருக்கு.ஆனாலும் வராக நதிக்க்காயயோரம்தான் அருமை. தெரியுமில்ல?"

"கவிஞர் வைரமுத்து தேசிய விருது வாங்கின பாட்டு?"

"அது வராக நதிக்கரையோரம்"

"இல்லை! ஸ்ரீநிவாஸ், சுஜாதா பாடின முதல் முறை சொல்லிப்பார்த்தேன், கேட்டதில்லையா நீங்க?"

"அந்தப் படத்துல அப்படி ஒரு பாட்டு இருக்கா என்ன?"

ஒரு தேசிய விருது பெற்ற பாடல் பற்றின விபரத்தை எளிமையாக மறக்கடித்துவிட்டது அல்லது கவனிக்க அனுமதி மறுத்துவிட்டது அந்த "வராக நதிக்கரை".

Overshadowing!

உ.ம். 2:

2008'ஆம் வருடம் மும்பை தீவிரவாதத் தாக்குதல்களின் போது அத்தனை தொலைக்காட்சி சேனல்'களும் லைவ் அண்ட் எக்ஸ்க்ளூசிவ் என்று ஒரு மாத காலத்திற்கு அலறி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்க, இடையில் இறந்து போன ஒரு முன்னாள் பிரதமரின் மரணம் ஒரு வரிச் செய்தியாக மட்டுமே மக்களுக்குக் கிடைத்தது. தினசரிகள் போனால் போகிறதென்று இருபதாம் பக்கத்தின் ஈசானி மூலையில் ஒரு பத்தி செய்தி வரைந்தன.

அவர் வி.பி.சிங்

விகடன் போன்ற சில பத்திரிக்கைகள் மாத்திரம் "ஆக்கிரமிப்பது அவமானம் பின்வாங்குவது பெருமை" என அவரின் அமைதிப்படை வாபஸ் நிகழ்வின் பெருமையினை  நினைவுறுத்தி கட்டுரை வரைந்து அவருக்குப் புகழஞ்சலி செலுத்தின.

ஒரு முன்னாள் பிரதமரின் மரணத்தை அத்தனை எளிமையாக மறைத்து வைத்துவிட்டது ஒரு தீவிரவாதத் தாக்குதல் குறித்த செய்தியின் தொடர் ஒளிபரப்புகள்.

வராக நதிக்கரையும் தீவிரவாதத் தாக்குதல் குறித்த நேரிடைச் செய்திகளும் அதி முக்கியத்துவம் வாய்ந்தவைதான், யாரும் மறுக்கவில்லை. எனினும் இதர முக்கியப் படைப்புகளை / செய்திகளை அவை விழுங்கும் வண்ணம் இருப்பின்....?

மற்றும் ஒரு Overshadowing!

சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம்....

சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய - தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் டெஸ்டின் சில புள்ளி விபரங்களைப் பார்ப்போம்.

இந்திய அணி இரண்டு இன்னிங்க்ஸ்'களிலும் சேர்த்து இந்தப் போட்டியில் இருபது விக்கெட்டுகளை இழந்து 595 ஓட்டங்களை எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா ஆடியது ஒரே இன்னிங்க்ஸ். இழந்தது மொத்தம் நான்கே விக்கெட்டுகள். ஆடியவர்கள் ஐந்தே பேர். ஆடிய ஐவரில் இருவர் அரை சதம், இரண்டு சதம் மற்றும் ஒரு இரட்டை சதம். ஒற்றை இலக்கத்திலோ அல்லது அரை சதத்திற்குக் குறைவாகவோ யாரும் ஆட்டமிழக்கவில்லை.

இத்தனை மோசமான தோல்வியிலும் இந்திய அணியின் சார்பில் மூன்று பேர் அரை சதம் கடந்தனர்.

இங்கே நான் சொன்னதெல்லாம் சாதாரண புள்ளி விவரங்கள். கொஞ்சம் முக்கியமான புள்ளி விவரங்களைப் பார்க்கலாமா?

மார்க்கேலும் ஸ்டெயினும் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து தலா ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். வெற்றிக்கு வித்திட்ட கனவான்கள்!


டெஸ்ட் கிரிக்கெட்டில் பதினோராயிரத்து அறுநூற்று ஐம்பது ரன்களை இதுவரை எடுத்திருக்கும் காலிஸ் அடித்த முதல் இரட்டை சதம் இது. முதல் இரட்டை சதத்திற்கு முன்னரே இத்தனை ரன்களைக் கடந்த ரன் மெஷின் காலிஸ் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

இரண்டாவது இன்னிங்க்சில் ஓரிருவரின் ஆட்டங்களும், சச்சின் - தோனியின் கூட்டணியில் வந்த நூற்று சொச்ச போராட்ட ரன்களும் கவனிக்கத்தக்கவை எனினும் இந்தியா அப்படியொன்றும் கண்ணியமான ஒரு தோல்வியை சந்திக்கவில்லை. ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் இருபத்தி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்கா இந்தியாவிற்கு அடித்தது சம்மட்டி அடி.

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் பிரயன் லாராவைக் கடந்து மூன்றாம் இடத்திற்கு முன்னேறினார் ராகுல் டிராவிட். இவருக்கு முன்னால் ரிக்கி பாண்டிங், அவருக்கு முன்னால் சொல்லத் தேவை இல்லாமல் நம் லிட்டில் மாஸ்டர்.

அது மட்டுமல்ல பன்னிரண்டாயிரம் ரன்களை எட்டியவர் என்ற பெருமையையும் பெற்றார் டிராவிட். எழுந்து நின்று கைதட்ட வேண்டாமா நாம்?

இத்தனை புள்ளி விவரங்களையும், முக்கிய நிகழ்வுகளையும், ஓரிரு சாதனைத் தருணங்களையும் நம்மைக் காணவிடாமல் நம் கண்ணை மறைக்கின்ற ஒரே செய்தி அந்த "ஐம்பதாவது சதம்".

சச்சினின் ஐம்பதாவது சதம் ஒரு செய்திதான். சாதாரண செய்தி அல்ல முக்கியச் செய்தி. முக்கியம் மற்றுமல்ல ஒரு மாபெரும், சிறந்த, உலக கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாம் கொண்டாடத்தக்க ஒரு நிகழ்வு. யாரேனும் மறுக்க இயலுமா?

சர்.பிராட்மேன் அவர்களுக்குப் பின் உலக கிரிக்கெட் அரங்கிற்குக் கிடைத்த மாபெரும் கிரிக்கெட் ஆட்டக்காரன் சச்சின். இதை நாம் சொல்லிக் கொள்ளவில்லை. உலக கிரிக்கெட் ஜாம்பவான்களும், கிரிக்கெட் ரசிகர்களும் சொல்லி மகிழ்கிறார்கள்.


எனினும், நான் இங்கே மேலே குறிப்பிட்ட அத்தனைத் தகவல்களையும் சச்சினின் ஐம்பதாவது சதம் என்ற மாபெரும் செய்தியின் நிழலில் மறைத்துவைத்து இரண்டு நாட்கள் அனைத்து ஊடகங்களும் கத்திக் கதறிக் கொண்டிருந்தன.

சச்சினின் சதம் ஒரு மாபெரும் கொண்டாடத்தக்க செய்தி. ஆனால் அது ஒன்று மட்டுமே செய்தியல்ல ஊடகங்களே.
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...