என் சக வலைப்பதிவர் பாஸ்கரின் தளத்தின்
சிறப்புப்பதிவர்கள் பக்கத்தில் நான் எழுதிய பதிவு இங்கு உங்கள் பார்வைக்கு!
________________________________________________________________________
(நண்பர் கிரி அண்மைக் காலமாகத்தான் வலையுலகில் தன் ஆக்கங்களை வெளிப்படுத்தத் துவங்கி இருக்கிறார். அவரது ஆண்டாள் என்ற பதிவு, எப்படி எழுத வேண்டும் என்பதற்கு எனக்கு நல்ல முன்னுதாரணமாக இருக்கிறது. அதே போல் காணாமல் போன காதல்…“: நான் விரும்பிப் படித்த பதிவு.
உண்மையைச் சொன்னால், நல்ல கற்பனை வளமும் மொழித் திறனும் அமையப் பெற்ற அவரது திறமை சிறந்த ஒரு கருப்பொருளுக்காகக் காத்திருக்கிறது என்று தோன்றுகிறது. அதற்கான பயிற்சி போல் தற்சமயம் சில பதிவுகளை செய்துக் கொண்டிருக்கிறார்…
இந்த ஒப்புக்கு சப்பாணி வலைதளத்தில் கொஞ்சம் மென்மையான பதிவைக் கண்டு ரசிக்கும் ஆசையில் அவரிடம் ஒரு சிறப்புப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டேன்:
தந்திருக்கிறார், படித்துப் பாருங்கள்) :-
இடம்: GRT கிராண்ட், தி,நகர்
நிகழ்ச்சி: Indiblogger.in ஏற்பாடு செய்திருந்த “Indi Blogger Meet”
ஒரு கேள்வி பதில் விவாதப் பகுதியில் Zee தமிழ் தொலைக்காட்சியின் திரு.பாலபாரதி அவர்களை நோக்கிய கேள்விகள்:
“Sir, do you think…
“ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம்…..எனக்கு ஆங்கிலம் புரியாது, நீங்க உங்க கேள்விகளை தமிழ்ல கேட்டீங்கன்னா நல்லா இருக்கும்”
நூற்று ஐம்பது பேர் கூடியிருந்த அந்த அரங்கில் பின் திசையிலிருந்து சில வட இந்திய சலசலப்பு எழுந்து அடங்கியது.
“அதாவது சார், இந்த changes பத்தி நீங்க என்ன சொல்ல வர்றீங்க”, அந்த மாடர்ன் யுவதியிடமிருந்து தடுமாற்றத்துடன் கூடிய தமிழ் வந்து விழுகிறது.
“இல்ல, நீங்க என்ன கேக்கறீங்கன்னு சரியா சொல்லுங்க”
அரங்கின் பின் வரிசைகளிலிருந்து, “changes…. மாற்றங்கள்…. மாற்றங்கள் பற்றி என்ன நினைக்கறீங்க”
“இத பாருங்க, இதையெல்லாம் தமிழ்ப் படுத்தணும்னு இல்லை. பஸ்ஸ பஸ்சுன்னே சொல்லலாம் பேருந்துன்னு சொல்ல அவசியம் இல்லை. ஆட்டோவை ஆட்டோன்னே சொல்லுங்க “தானி”ன்னு சொல்லுங்கன்னு நான் கேட்கலை”
மேலும் பத்துப் பதினைந்து நிமிடங்கள் தடுமாற்றமுடன் வந்த தமிழ்க் கேள்விகள், தமிழ் பதில்கள் எனச் சென்றது அந்தக் கூட்டம்.
இங்கே கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்த பாலபாரதி அவர்கள் சில விஷயங்களைப் புரிந்து கொள்ளவில்லை,
– அவர் பங்கேற்றது தமிழ் இலக்கியக் கூட்டம் ஏதுமில்லை. தமிழ் வலைப்பதிவர்களுக்கு மட்டுமேயான கூட்டமும் அல்ல, அது “Indibloggers Meet”.
– அங்கே கூடியிருந்த பதிவர்களில் முக்கால் பங்கு ஆங்கிலத்தில் எழுதுபவர்கள், இருபது சதம் பேர் தமிழ் அல்லாத பிற மொழி பேசுபவர்கள்.
– கேள்வி கேட்பவர்கள் அவர்களுக்கு இசைவான மொழியில் கேள்வி கேட்க அனுமதிப்பதே சபை நாகரீகம். அனுமதி மறுத்த தருணத்திலேயே தமிழ் பேசத் தெரியதவர்களுக்கான வாய்ப்பை நீங்கள் மறுக்கிறீர்கள்.
நம் மொழியை மட்டும் பேச நமக்கு அனுமதியுண்டு. ஆனால் அது எல்லா இடங்களிலும் செல்லாது. அவ்வாறு செய்தல் நம் மொழிப் பற்றினை வெளிக்காட்டுவதில்லை. நம் பிடிவாதத்தை மட்டுமே சபைகளில் பதிவு செய்கிறது. மேலும், நம் மொழி சார்ந்தவர்கள் குறித்த ஒரு பொதுக் கருத்தையும் அது விதைக்கிறது.
பாலபாரதி அவர்கள் தன்னை நோக்கி கேட்கப்பட்ட ஆங்கிலக் கேள்விகளையும், தன் தமிழ்ப் பதில்களையும் மொழிபெயர்க்க யாருடைய உதவியையேனும் நாடியிருக்கலாம். தமிழனுக்கு எங்கே போனாலும் எதற்கு “தனி மரியாதை ” கிடைக்கிறது என நினைக்கிறீர்கள், இவர் போன்றவர்களால்தான்…நிச்சயமாக!
ஜெயமோகனின் “
நயத்தக்கோர்” என்ற இந்தப் பதிவு இந்த நிகழ்வுடன் நேரிடைத் தொடர்பு கொள்ளவில்லை என்றாலும், நாம் செல்லும் இடத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என எளிமையாக விளக்குகிறது.
பாலபாரதி போன்றவர்கள் கருத்தில் கொள்வார்களா?