Apr 30, 2010

எம்.எஸ். - "காற்றினிலே வரும் கீதம்"



காற்றினிலே வரும் கீதம்:

கலையுலக சாம்ராஜ்யத்தில் சிறந்து விளங்கிய கல்கி அவர்கள், எம்.எஸ்.சுப்புலட்சுமி, இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் இவர்களின் சங்கமத்தில் வெளிவந்த இப்பாடலைப் பற்றி எழுத அடியேனுக்கு அத்தனை ஞானமில்லை. எனினும் இப்பாடல் குறித்த என் ரசனையை, வியப்பை இங்கு பதிவு செய்கிறேன்.


நெஞ்சினிலே...
நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்


ஆஹா....என்ன வரிகள். இந்தப் பாடலை எழுதிய கல்கி திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு அப்போதே தெரிந்திருக்கிறது. இந்தப் பாடல் காலங்களைக் கடந்து ஒலிக்கப்போகும் அற்புதப் பாடலென்று. கேட்கையில் நம் நினைவுகள் அனைத்தையும் மறக்கடித்து இப்பாடலில் அமிழ்த்தும் கீதம் அல்லவா இது.


எம்.எஸ். அவர்களால் எப்படி இசையுலகில் கொடிகட்டிப் பறக்க இயன்றது என்பதற்கு இந்த ஒரு பாடல் அழகான சான்று. 

காற்றினிலே........என அவர் பாடலைத் துவங்குகையிலேயே நமக்கு மூளையில் சுரப்பிகள் உசுப்பப்பட்டு ஒரு போதை கூடிய மயக்கம் நேர்கிறது. எழுத்தாளர் சுஜாதா அவர்கள் இருந்திருந்தால் இப்பாடலைக் கேட்கையில் நமக்கு நேரும் மயக்க நிலைக்கான அறிவியற்கூறு என்னவென்று சொல்லியிருப்பார்.

இந்தப் பாடல் சிந்துபைரவியா (ரி1 ஸ்வர ஓசை இப்பாடலில் இல்லை), நாட்டைபைரவியா (த2  ஓசையும் இல்லை) அல்லது ரதிபதிப்ரியாவா (ஆனால் முதல் வரியில் அதற்கான அடையாளங்கள் ஏதுமில்லை) என்னும் விவாதங்கள் காலகாலமாய் நிகழ்ந்து வருகின்றன. எப்படியாயினும் ராகத்தின் பெயர் குறித்த அவசியம் இசையை ரசிக்க நமக்குத் தேவைப்படுவதில்லை.


மூன்று வரிகளில் எழுதப்படும் ஹைக்கூ வடிவக் கவிதையை இருபது வரிகளில் சொல்கிறார் கல்கி. இந்த கீதம் வேறொன்றுமல்ல நம் வேணுகோபாலனின் வேய்ங்குழல் கீதம்தான் என்று பாடலின் கடைசி வரிகளில் மெலிதாய் அவிழ்கிறது முடிச்சு.

நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்

கண்கள் பனிக்கின்றன. உருகியோடிக் கொண்டேயிருக்கிறது நம் உள்ளம்!







No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...